அதிகாரத்தின் நுண்பரிமாணங்கள் – 2.

This entry is part 2 of 19 in the series 30 அக்டோபர் 2016

lathapp

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 

அன்புத் தோழீ

 

(*அன்பு, தோழி என்ற சொற்களின் மெய்யர்த்தங்கள் அளவில் நீ என் விளிக்கு நியாயம் சேர்ப்பவளாயில்லாமலிருக்கலாம். இருந்தும், நாம் உழைக்கும் வர்க்கத்தவர்கள் என்ற உறவின் உரிமையில் அப்படி விளிக்கலாம்தானே….)

 

அவனை அமரச் சொல்லேன்

 

(*அவன் என்பது இங்கே அவமரியாதைச் சொல்லல்ல –

அன்பின் பரிவதிர்வுக் குறிப்புச்சொல்).

 

ஒரு புத்தனைப் போன்ற சலனமற்ற முகத்துடன்

கால்கடுக்க நின்றுகொண்டிருக்கிறானே….

அவனை அமரச் சொல்லேன்.

 

நாள் முழுக்க இப்படித்தான் நிற்கவைக்கப்போகிறாயா

மேஜையின் விளிம்பில் தன் இடுப்பை சற்றே சாய்த்தபடி அவன் நின்றுகொண்டிருக்கும் விதம்

கால அளவையும்

அவன் கால்களின் வலியையும்

கணக்கிட்டுக்காட்டிவிடுகிறது.

அவனை அமரச் சொல்லேன் தோழீ….

 

அந்தக் கணினிக்குள் அத்தனை மும்முரமாய் நீ பார்த்துக்கொண்டிருப்பது

மெய்யா பாவனையா தெரியவில்லை.

இதற்குமுன் ஏதோவொரு நாளில் உங்களிருவருக்கும் ஏற்பட்ட சச்சரவுக்கு இப்படித் தீர்வு தேடிக்கொள்கிறாயோ….

வேண்டாம் இந்த வன்மம்

விட்டுவிடு தோழீ….

அவனை அமரச் சொல்லேன்….

 

அவமானத்தில் அவன் கண்களுக்குள் நீர் குத்திக்கொண்டிருக்கக்கூடும்.

பலவீனமா யுணரும் நாள்களில் இதுவுமொன்றோ என்னவோ

வலி என் கண்களுக்குள் கால்மாற்றிக்கொள்கிறது.

மிகவும் வலிக்கிறது தோழீ….

அவனை அமரச் சொல்லேன்.

 

இந்த மதிப்பழிப்பின் வடிகாலாய்

அவன் இல்லந்த் திரும்பி மனைவியை அடிக்கலாம்;

மக்கட்செல்வங்களை அடிக்கலாம்;

மதுக்கடைக்குச் சென்று முட்டக் குடித்து

நட்டநடுச் சாலையில் கதிகெட்டுக் கிடக்கலாம்;

இருசக்கரவாகனங்களின் கீழ்

சிதறிப்போகலாம்….

பதறுகிறது மனம் –

அவனை அமரச் சொல்லேன் தோழீ…

 

என் இருக்கையை விட்டு எழுந்து

அவனை அமரச் செய்யத் துடிக்கும் மனதை

அடக்கிக்கொள்கிறேன்.

அப்படிச் செய்தால் உன் அதிகாரத்திற்கு

அடிபணிய மறுப்பவனாய்

கூடுதலாய் இன்னும் கொஞ்சம் அவன் நிற்கவைக்கப்படுவானோ என்ற பீதி பரவி

என் சமத்துவ, சகோதரத்துவ, சுதந்திர வேட்கையையெல்லாம் முடக்கி

என்னை செத்த எலியாக அசைவற்று அமர்ந்திருக்கச் செய்கிறது.

 

என்னால் அவனை ஏறெடுத்துப் பார்க்க இயலவில்லை.

அவனை அமரச் சொல்லேன் தோழீ….

 

நீயும் நானும் அவனும் உழைக்கும்வர்க்கம்தானே

பூமிக்கு அடியிலுள்ள தட்டுகளே நிலைபெயர்ந்துவருகின்றன

என்பதை நீயறிவாயா?

நல்லவள்தான் நீ.

நான் சொல்ல வருவதை உன்னால் உள்வாங்கிக்கொள்ள முடிந்தால்

எத்தனை நன்றாயிருக்கும்…

 

அவன் கால்களில் உன்னைப் பொருத்திப்பாரேன் ஒரு கணம்

அந்த மதிப்பழிப்பின் ரணம் வழியே பெருகும் வலி

சீழ்கோர்த்துக்கொண்டு

சின்னாபின்னமாக்கிவிடும் மனதை.

 

உன் மேலதிகாரியிடம் நீ இதுபோல்

மண்டியிடாதகுறையாய் நின்றிருப்பாய்தானே…..

இன்னுமா அவனை நிற்கவைக்கப்போகிறாய்?

அவனை அமரச் சொல் தோழி…

 

உயிர்வாழப்போவது இன்னும் எத்தனை நாளோ….

உயர்ந்தவர் தாழ்ந்தவர்  என்பதெல்லாம் எத்தனை

அபத்தமான பிரமைகள்….

அவனை அமரச் சொல் தோழி…

 

(இன்னும் நீ அவனை அமரச் சொல்லவில்லை.

இனி பொறுக்கலாகாது என நான் அவனைப் பார்த்து

எழுந்து நின்று இன்னொரு நாற்காலிக்கு நகர்ந்துகொண்டு

அருகிருக்கும் நாற்காளியைச் சுட்டிக்காட்டி அமரும்படி செய்கை செய்ய அவன் தலையசைப்பு ’ பரவாயில்லை, வேண்டாம்’ என்று பதிலளிக்கிறது.)

 

மித மிஞ்சிய மன அயர்வுடன் எழுந்துகொண்ட பின்

இன்றுவரை நான் போகுமிடமெல்லாம்

கால்கடுக்க நிற்கும் அவன் கால்கள்

கூடவே வருகின்றன.

 

(அருங்கவிதை யில்லை யிவ் வரிகள் என்று தெரிந்தாலும்

அவன் அங்கே அப்படி ஆணியடித்த நிலையில் நின்றிருக்கக் கண்ட நினைவு நெஞ்சடைக்கிறது இன்னமும்…

நோஞ்சான் கவிதையாவது எழுதித்தான்

நிவாரணம் தேடிக்கொண்டாகவேண்டும்…..)

 

 

Series Navigation“முள்வேலிக்குப் பின்னால் “ – 6 நேர்ஸ் சாந்திசுசீலா பெரியம்மா
author

ரிஷி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *