சொல்லியும் சொல்லாமலும் – பாகம் ஒன்று

author
0 minutes, 0 seconds Read
This entry is part 6 of 19 in the series 30 அக்டோபர் 2016

ஆக்கம் – அழகர்சாமி சக்திவேல்

தவமுனி அகத்தியன் போன்றோர் கறந்த

தலைச்சங்கத்தின் தமிழ்ப்பால்

கடைசியில் கடல் நீர் அழுக்குப்பட்டுத் திரிந்து போனது.

இடைச்சங்கத் தமிழ்ப்பாலில் தயிர் எடுத்துக் கடைந்தனர்

தொல்காப்பியன் போன்றோர்..

கடைந்த வெண்ணையை..

உரியில் அவர் உரிய முறையில் சேர்க்காததால்

தொல்காப்பியம் தவிர.. இனிய பல இலக்கிய வெண்ணைத் துண்டுகள்

கால வெயிலில் கருகி உருகின

கடைச்சங்கப்பாலில் வெண்ணெய் எடுத்து

நெய் உருக்கினார் நக்கீரன் போன்றோர்.

கணிசமாய்த தேறிய தமிழ் இலக்கிய நெய்

கடைசியில் களப்பிரர் கைகளில் போனது.

நரிகளுக்கு நெய்யின் வாசனை தெரியவில்லை

பாளி மொழி பிராகிருத மொழி என்ற விளக்கெண்ணெய்கள் முன்

வீணாய்ப் போனது தமிழ் நெய்.

சங்கத்திற்கும் சங்கு ஊதப்பட்டது.

சங்கம் மட்டுமா மருவியது?

சமூகச் சிந்தனைகளும் அன்றோ மருவியது

பலபேர் கைமாறி கைமாறி வந்த சங்க இலக்கியத்தின்

அர்த்தங்களும் அன்றோ மாறியது

கழுதையை குதிரை என்று எழுதினான் ஒருவன்.

மயிலைக் குயில் என்று பொருள் சொன்னான் இன்னொருவன்.

காதலை வெறும் அன்பென்று பொருள் பெயர்த்தான் ஒருவன்.

பேதையைப் பெண் என்றான் ஒரு இடத்தில்

முட்டாள் என்று பொருள் தந்தான் இன்னொரு இடத்தில்

இடத்திற்கேற்ப நிறம் மாறிய பச்சோந்திகளால்..

உண்மை இலக்கியம் உருமாறித் திருமாறியது.

அந்தோ…யானையின் காலிடை எறும்பாய்…

ஆண் வர்க்கத்தின் அதிகார இலக்கியச் சிந்தனைக்குள்

ஓரின அர்த்தங்கள் யாவும் நசுங்கிப் போயின.

பின்னே வந்த..

ஆறுமுக நாவலர், தாமோதரம்பிள்ளை, சாமிநாத ஐயர் எனப் பல

பண்பாட்டாளர்கள் தொகுத்த சங்க இலக்கியங்களுக்குள்

சொல்லியும் சொல்லாமலும் இருந்த

ஓரின உறவின் சிந்தனைகள் ஒரேயடியாக மறைக்கப்பட்டது.

ஓரினம் என்று உண்டு என்பதே

இந்த பாட்டன்களுக்கும் பூட்டன்களுக்கும் புரியவில்லை.

ஆண் என்றால் அவன் பெண்ணில்தான் காமுறவேண்டும் என்ற

வெள்ளையர் வகுத்த விதியில்

ஓரின இலக்கியங்கள் வீதியில் எறியப்பட்டன.

பெண் பெண்மீது கொண்ட காமம் நகைச்சுவை ஆனது. .

ஆண் ஆணில் காமுற்றால் அது அசிங்கமானது…

எனச் சொல்லியும் சொல்லாமலும்

சில ஓரின சரித்திரங்கள்.

ஓரின மனிதர்கள் இலக்கியங்களில் அக்றிணை ஆனார்கள்.

சிவனின் விஷ்ணுமீதான காதலில் தெய்வச் சாயம் பூசப்பட்டது.

பார்வதியின் தூமையைக் குடித்து மாலினி கணேசனைப் பெற்ற கதை

தூமை போலவே ஒழுகி அழிந்தது.

புத பகவான் சந்திரத் தோன்றல் இலனோடு

நடத்திய ஈரினச் சேர்க்கை எனச்

சொல்லியும் சொல்லாமலும்

சில ஓரினப புராணங்கள்.

ஆக்கம் – அழகர்சாமி சக்திவேல்

 

Series Navigationசொல்லியும் சொல்லாமலும் – பாகம் மூன்றுமனிதம் உயிர்த்த பெரு மழை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *