மெரிடியனுக்கு அப்பால்

author
0 minutes, 1 second Read
This entry is part 13 of 17 in the series 13 நவம்பர் 2016

என்.துளசி அண்ணாமலை

“அதோ…மலை உச்சியில் தெரிகிறது பாருங்கள், ஒரு உயரமான கட்டிடம்! அதுதான் கிரீன்விட்ச் மெரிடியன் கட்டிடம்!”
அரசு காட்டிய திசையில் பார்வையை ஓடவிட்டான் சுந்தர். அவனோடு வந்திருந்த மற்ற நண்பர்களும் வியப்போடு பார்த்தனர்.
அடிவாரத்திலிருந்து பார்க்கும்போது மிகப் பிரம்மாண்டமாகத் தோற்றமளித்தது அந்தக் கட்டிடம். வாய்விட்டு வர்ணிக்க இயலாத பரந்த மைதானம். கொஞ்சங் கொஞ்சமாக உயர்ந்து கொண்டே போய், மலையில் முடிந்திருந்தது. மைதானத்திற்குக் கரை கட்டினாற்போல வானளாவிய உயர்ந்த மரங்கள். ஒவ்வொன்றும் வயதான யானையின் உடலைப் போன்று பருத்த தண்டுப் பகுதிகளையும், பேராசையுடன் நீண்ட கிளைகளையும், பால்வண்ணப் பச்சை இலைகளையும், வெள்ளையும் ஊதாவும் கலந்த பெரிய பூக்களையும் கொண்டிருந்தன.
காலை பதினொரு மணிக்கே வெய்யில் தாங்க முடியவில்லை. அந்த வெய்யிலில் குளிக்க வேண்டியே குடும்பம் குடும்பமாக ஆணும் பெண்ணும் குழந்தைகளும் இளம் வாலிபர்களும் வஞ்சிகளும் கும்பல் கும்பலாய் அந்த மைதானத்தை ஆக்கிரமித்திருந்தனர்.
ஆங்காங்கே குச்சிஐஸ் விற்பணையாளர்கள் மும்முரமாக விற்பனையில் ஈடுபட்டிருந்தனர்.
ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா கண்டங்களில் இருந்து வந்திருந்த பெரும்பாலான சுற்றுப்பயணிகளும் வெளிநாட்டுத் தொழிலாளர்களும் மேலாடைகளைப் பற்றிக் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை.
எல்லாரும் அந்தக் கோடை வெய்யிலைச் செல்லமாகக் குறை சொல்லிக்கொண்டு, குளிர்பானங்களைச் சுவைத்தவாறே கோடைக் குளியலை சுகமாக அனுபவித்துக் கொண்டிருந்தனர். ஆண்கள் திறந்த மேனியுடன் கதிரவக் கதிர்களில் குளித்துக் கொண்டிருந்தனர்.
திடீரென்று சுந்தர் வியப்புடன் கூவினான்!
“அரசு! அங்கே பார்! எத்தனை பெரிய ரோஜாக்கள்! என்னென்ன வர்ணங்கள்! ரோஜாக்களில் இத்தனை நிறங்களா? இவ்வளவு பெரிய பூக்களா? வாவ்!”
“ஆனால் அத்தனையும் வாசமில்லாப் பூக்கள்! சில பண்பாடில்லா மனிதர்களைப் போல….”
சொன்ன வேகத்திலேயே நாக்கைக் கடித்துக் கொண்டான் அரசு.
நண்பர்கள் வினோதமாக அவனைப் பார்த்தார்கள்.
“ஏன் அப்படிச் சொன்னாய்? யார் பண்பாடு குறைந்து போனார்கள்?” என்று வினவினான் சந்திரன்.
“அதானே? என்ன அரசு, நீ எதையோ சொல்ல வருகிறாய்? என்ன அது?” பாதி கண்டிப்பும் மீதி கேலியுமாகக் கேட்டான் இராகவன்.
“நான் நினைக்கிறேன், நம்ம அரசு ஏதோ காதல் பிரச்னையில் சிக்கிக் கொண்டிருக்கிறான் என்று! என்ன, நான் சரியாகச் சொன்னேனா, அரசு?” முத்து முகத்தைக் குழந்தைத்தனமாக வைத்துக் கொண்டு கேட்க, அரசு சங்கடத்தில் நெளிந்தான்.
“அட சும்மா இரப்பா!” என்று சிணுங்கியவன், “அதோ தெரிகிறது பாருங்கள், கிரீன்விட்ச் பல்கலைக்கழகம்! நாட்டின் பழமையான பல்கலைக்கழகங்களில் இதுவும் ஒன்று! அதன் மறுபக்கத்தில்தான் ஞாயிறு சந்தை இருக்கின்றது. நம் நாட்டில் கோலாலம்பூரின் ஸ்ரீபெட்டாலிங் போல! அல்லது மஸ்ஜிட் இந்தியா போலவும் சொல்லலாம். பல்வேறு நாடுகளில் இருந்து வந்துள்ள மக்களின் உடைகள், நகைகள், வீட்டுக்குத் தேவையான பண்டம், பாத்திரங்கள், உணவு வகைகள், காய்கறிகள், பழவகைகள், மதுவகைகள், அழகு சாதனங்கள் என எல்லாமே இங்கு தாராளமாகக் கிடைக்கும். அதோ பாருங்கள், தேம்ஸ் நதிக்கரை! தமிழ் நாட்டின் காவிரி போல, இங்கே ஒரு தேம்ஸ் நதி. கரையை ஒட்டி நீண்டு தெரிகிறதே……அதுதான் தேம்ஸ் கட்டிடம்…..அப்புறம் அங்கே பாருங்கள்….கறுப்பு நிறத்தில் ஒரு மரக்கப்பல். அதுதான் முதன்முதலில் தேயிலையை ஏற்றிக் கொண்டு கடல் பயணமாகப் புறப்பட்ட……” என விவரித்துக் கொண்டே போனவனைக் கையமர்த்தினான் சுந்தர்.
“கொஞ்சம் மூச்சு விட்டுக் கொள்ளப்பா! நீ எதையோ சொல்ல வந்து மறைக்கிறாய்! வா, முதலில் மெரிடியன் கட்டிடத்தைப் போய்ப் பார்த்துவிட்டு வரலாம். உலக வரைபடத்தை இரண்டாகப் பிரிக்கும் மெரிடியன் கோடு அங்குதானே இருக்கின்றது!”
“அதில் என்ன அதிசயம் இருக்கின்றது?” இது இராகவனின் கேள்வி.

“அதானே, சொல்லப்பா” முத்து சுந்தரையும் அரசுவையும் ஒருசேரப் பார்த்தான்.
“அதிசயந்தான்! அந்த பிரம்மாண்டமான கட்டிடத்தின் பிரம்மாண்டமான கூடத்தின் நடுவில், ஒரு நீண்ட கோடு இருக்கின்றது. அதன் பெயர்தான் மெரிடியன் கோடு. கோட்டுக்கு அந்தப் பக்கம் சென்றால் கடிகாரம் ஒருமணி நேரத்தைக் குறைத்துக் காட்டும். இந்தப்பக்கம் வந்து நின்றால் நேரம் கூடுதலாகத் தெரியும். அது ஒரு அதிசயம் தானே?” என்றான் சுந்தர்.
“ஆமாம், ஒரு அதிசயம் போல…..” அரசு தனக்குள் முனகிக் கொண்டான். ஏனோ அவனிடம் உற்சாகம் குறைந்து விட்டது. காலையில் வீட்டைவிட்டுப் புறப்பட்டபோது இருந்த மகிழ்ச்சியும் துள்ளலும் இப்போது போன இடம் தெரியவில்லை.
“சுந்தர், நீங்கள் எல்லோரும் போய்ப்பார்த்து விட்டு வாருங்கள். எனக்கு மிகவும் சோர்வாக இருகின்றது. அதோ… அந்த மரத்தடியில் நான் காத்திருக்கிறேன்.” என்றவன், மேற்கொண்டு அவர்களுடைய பதிலுக்கும் நிற்காமல் விலகி நடந்தான். நண்பர்களும் மேற்கொண்டு வாதிடாமல், மலை உச்சியை நோக்கி நடந்தனர்.
அன்றிரவு உணவை முடித்த கையோடு, கூடத்தில் வந்து அமர்ந்தனர் நண்பர்கள். சமையலறையைச் சுத்தம் செய்தபின்னர், “விளக்குகளை அணைத்து விட்டு வந்தான் அரசு.
தொலைக்காட்சியைப் புறக்கணித்துவிட்டு, தரையில் அமர்ந்திருந்த நண்பர்களை வியப்புடன் பார்த்தான் அரசு.
“வா அரசு! இப்படி உட்கார். இன்றைக்கு உன் சமையலில் உப்புசப்பே இல்லை. என்ன ஆச்சு? நாங்களும் மலேசியாவில் இருந்து வந்து ஒரு மாதமாகிவிட்டது. இந்த ஒரு மாதத்தில் உன்னோடு நெருங்கிப் பழகியும், உன் மனதுக்குள் ஒரு சோகத்தை மறைத்து வைத்திருப்பது இன்றைக்குத்தான் தெரிந்தது!”
சுந்தர் ஆதரவாக நண்பனின் தோளைத் தொட்டான். எல்லாரும் தன்னையே அனுதாபத்துடன் பார்ப்பதாகப் பட்டது. எதையோ சொல்ல வாயெடுத்தவனைத் தடுத்தான் இராகவன்.
அவனுடைய கையில் ஒரு புகைப்படம் இருந்தது. அரசு அதை கண்டதும், துடிதுடித்துப் போய், அதைப் பறிக்க முயன்றான் அவனுடைய அங்கமெல்லாம் பதறியது.
“ஆகா….முதலில் இது யார் என்று சொல்லு. பிறகு தருகிறேன்!” என்றவாறே புகைப்படத்தை மறைத்தான் இராகவன்.
ஒரு கணம், தாயை தேடும் குழவி போல, நண்பர்களை ஏக்கத்துடன் பார்த்தவன், பின் மௌனமாகத் தலையைக் குனிந்து கொண்டான்.
“அரசு! நாம் நாலுபேரும் ஆரம்பப்பள்ளியிலிருந்து கல்லூரி வரையிலும் ஒன்றாகத்தான் படித்தோம், வளர்ந்தோம். நம்மிடையே ஒளிவுமறைவு எதற்கு? உன் குடும்ப சூழ்நிலையைக் கருதி நீ லண்டனுக்கு வேலைக்கு வந்து விட்டாய். ஆனாலும் நம்முடைய நட்பில் இடைவெளி வந்துவிடுமா, என்ன? உன்னுடைய சோகத்தை எங்களோடு பகிர்ந்துகொள். சொல்லு! என்ன நடந்தது? யார் இந்தப்பெண்?…மேசையின்மேல் வைக்கவேண்டிய புகைப்படத்தை இழுப்பறைக்குள் போட்டு வைத்திருக்கின்றாய்! ஏன்? என்ன காரணம்?”
“நான் நினைக்கிறேன், இந்தப் பெண் நம்ம அரசுவின் காதலி என்று. இருவருக்குள்ளும் ஊடல்! அதனால் கடந்த ஒரு மாதமாக அவளோடு பேசாமல் இருக்கின்றான். ஏனென்றால், நாம் தான் கடந்த ஒரு மாதமாக இவனோடு அட்டைபோல ஒட்டிக்கொண்டு இருக்கின்றோமே?”
சந்திரன் இவ்வாறு சொன்னதும், “சொல்லு அரசு! நாங்களே பேசிக்கொண்டு இருக்கின்றோம்….நீ எதுவுமே பேசாமல் இருந்தால் எப்படி?” என வினவினான் சுந்தர்.
நண்பர்களின் நச்சரிப்பில் மௌனத்தைக் கலைத்தான் அரசு.
“இந்த நாட்டுக்கு வேலைக்கு வந்த புதிதில், மெரிடியன் கட்டிடத்தைப் பார்க்க, வாராவாரம் தவறாது போவேன். நான் மட்டுமல்ல, இந்த நாட்டுக்கு வரும் அன்னியத் தொழிலாளர்கள் பலரும் வருவார்கள். எங்களைப் பொறுத்தவரை, மெரிடியன் வளாகம் என்பது நட்பை வளர்க்கும் ஒரு பிரபலமான இடம். அது மட்டுமல்ல, சந்தையில் கிடைக்கும் பலவகையான உணவுவகைகளைச் சுவைக்கவும் நல்ல இடம். புதிய நண்பர்களை அறிமுகம் செய்து கொள்வோம். அப்படி அறிமுகமானவள் தான் ராதா. தமிழ்நாட்டு வம்சாவளிப் பெண். நல்ல அழகி. பண்பாடு தவறாதவள். அவளுடைய பெற்றோர் இந்த நாட்டில் நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்கள். அம்மா புவனேஸ்வரி இலண்டன் தமிழ்ச்சங்கத்தில் பணியாற்றுகிறார். அப்பா தேவன், சுற்றுலா வாரியத்தில் நல்ல பதவியில் இருக்கின்றார். ராதாவுக்கு ஒரு அக்காவும் அண்ணனும் இருக்கின்றார்கள். ராதாவும் பத்திரிக்கைத் துறையில் பட்டம் வாங்கியிருக்கின்றாள். வாழ்நாள் சாதனையாக ஏதாவது செய்யவேண்டும் என்ற இலட்சியத்தோடு வலம் வந்த அவளை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மனம் விட்டுப் பேசினோம், பழகினோம். ‘அவளின்றி நானில்லை, நானின்றி அவளில்லை!’ என்ற அளவுக்கு ஒருவர்மீது ஒருவர் உயிராக இருந்தோம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்……….காதலர் தினத்திற்கு இரண்டு நாட்கள் இருக்கும், ’நம் காதலைப்பற்றி வீட்டில் தெரியப்படுத்தி நல்ல செய்தியோடு வருகிறேன். காதலர் தினத்தன்று, காலை பதினொருமணிக்கு கிரீன்விட்ச் மெரிடியன் கட்டிட வாசலில் காத்திரு!’ என்று சொல்லிவிட்டுப் பிரிந்தாள். நானும் ரோஜாப் பூங்கொத்தோடு அவள் கூறியவாறே காலை பத்து மணிக்கெல்லாம் அங்கே போய் காத்திருந்தேன். காதல் ஜோடிகளின் அனுதாபப் பார்வையை வாங்கிக் கொண்டு, சாயுங்காலம் வரை பையித்தியக்காரன் போலக் காத்துக் கிடந்தேன். அவள் வரவேயில்லை. அதோடு அவளுடைய உலாப்பேசியும் பதில் பேசாமல் ஊமையாகிவிட்டது. ஒவ்வொரு வார விடுமுறையிலும், கிரீன்விட்ச் கட்டிடத்திற்குப் போய்க் காத்திருந்து விட்டு வருவதுதான் மிச்சம். ஒவ்வொரு கணமும் அவளை மறக்க முடியாமல், அவளை நினைந்து நினைந்து நெஞ்சம் வெந்துபோய் நிற்கிறேன். அதே சமயம், என்னை இப்படிப் புறக்கணித்து விட்டு எங்கோ போய் ஒளிந்து கொண்டு கண்ணாமூச்சி காட்டும் அவள்மீது கோபமும் எழுகின்றது. இந்த நாட்டின் கலாச்சாரச் சீரழிவில் அவளும் சிக்கிக் கரைந்துபோனாளோ என்ற வேதையும் என்னைத் துன்புறுத்துகின்றது…..”
அரசு மேற்கொண்டு பேசமுடியாமல் குரல் குழறியது. வேதனையின் தாக்கத்தினாலும் வெறுப்பின் உச்சக்கட்டத்திலும் முகமெல்லாம் பொடிபொடியாக வியர்த்தது. மனக்கொந்தளிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல், கீழ் உதட்டைப் பற்களால் கவ்விக் கடித்துக் கட்டுப்படுத்த முயன்றான்.
அவன் எத்தகைய துன்பச் சுமையைச் சுமந்து கொண்டு, ஒன்றுமே நடவாதது போன்று கடந்த ஒரு மாதமாக அவர்களோடு முகமலர்ச்சியுடன் பழகி வந்துள்ளான்.
நண்பர்கள் அவனை நெருங்கி ஆதரவாகக் கைகளைப் பிடித்துக் கொண்டனர்.
“அரசு!, ராதாவின் தந்தை பணிபுரியும் இடம் தான் உனக்குத் தெரியுமே! அங்கே போய்க் கேட்டிருக்கலாமே?”
“ம்..போனேன். அவள் வராமல் போன காதலர் தினத்திலிருந்து ஒரு வாரம் கழித்து, பொறுமை கடந்து இலண்டன் தமிழ்ச்சங்கத்துக்குப் போனேன். அங்கே ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. ராதாவின் அம்மா, புவனேஸ்வரி என்ற பெயரில் அங்கே யாருமே இல்லை. அடுத்து, ராதா குறிப்பிட்ட சுற்றுலாத்துறை அலுவலகத்துக்குச் சென்று விசாரித்தேன். அங்கேயும் ‘தேவன்’ என்ற பெயரில் யாரும் பணியில் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். எனக்கு மேற்கொண்டு என்ன செய்வது என்றே புரியவில்லை. இன்றுவரை குழப்பத்திலும் தவிப்பிலும்தான் அல்லாடிக் கொண்டிருக்கிறேன். மூன்றாம் பிறைபோல வந்தது தெரியாமல் என்னை விட்டுப் போய்விட்டாள். அவளைச் சுமந்த இதயம், வேறு யாரையும் ஏற்கமறுக்கின்றது. எதையுமே சிந்திக்க முடியவில்லை. அவள் ஏன் என்னைப் புறக்கணித்தாள் என்ற கேள்வி ஒவ்வொரு கணமும் என் நெஞ்சைக் குடைந்து கொண்டிருக்கின்றது. அவள் என்னை ஏமாற்றி விட்டாளோ என்ற எண்ணம் என் நாடி நரம்புகளில் எல்லாம் புகுந்தோடி, என்னைப் பலவீனப்படுத்திக் கொண்டிருக்கின்றது. எங்கே எனக்குப் பையித்தியம் பிடித்து விடுமோ என்று பயப்படுகின்றேன்! இந்த சூழ்நிலையில், நீங்கள் நால்வரும் என்னோடு இருப்பது எனக்கு எவ்வளவு பெரிய ஆறுதலாக இருக்கின்றது, தெரியுமா?”
அரசுவால் மேற்கொண்டு பேசமுடியாமல், குலுங்கி அழுதான். நண்பர்கள் சொன்ன ஆறுதல் எதுவுமே அவனைச் சமாதானப்படுத்த முடியவில்லை.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. அதிகாலையிலேயே தூக்கம் கலைந்து விட்டது சுந்தருக்கு. கண்விழித்ததுமே அரசுவின் காதல்கதைதான் நினைவில் வந்து தேங்கியது. கட்டிலினின்றும் எழாமலேயே, நெஞ்சின்மீது கைகளைக் கட்டிக்கொண்ட நிலையில் யோசித்தான்.
‘ஏதாவது செய்யவேண்டுமே! மலேசியாவுக்குத் திரும்பும் முன் அரசுவுக்கு ஏதாவது செய்யவேண்டும்! எப்படி, எங்கே தொடங்குவது? ராதாவுக்கு என்ன ஆகியிருக்கும்? ஒருவேளை தமிழ்நாட்டுக்குப் போயிருப்பாளோ? ஏதாவது ஒரு சின்ன தகவல் தெரிந்தாலும் போதுமே! எங்கிருந்து ஆரம்பிப்பது?’
“ஏய் சுந்தர், என்னப்பா ஒரே யோசனையாய் இருக்கின்றாய்? இப்போது மணி என்ன தெரியுமா? அதிகாலை ஐந்துமணி! உனக்கு அதற்குள்ளேயே தூக்கம் கலைந்து விட்டதா?”
இராகவனின் குரல் கேட்டுத் திரும்பிப் படுத்தான் சுந்தர்.
“ம்…எல்லாம் நம்ம அரசுவைப் பற்றித்தான். நாம் ஏதாவது செய்யவேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் எங்கிருந்து ஆரம்பிப்பது என்றுதான் தெரியவில்லை.”
“ஏன்? கிரீன்விட்ச் மெரிடியனில் இருந்தே ஆரம்பிக்கலாமே? தொடக்கமும் முடிவும் அங்குதானே நடந்தது?”
திடுக்கிட்ட சுந்தர், சட்டென்று எழுந்து, கட்டிலின் மீதே சப்பனமிட்டு அமர்ந்தான்.
“நீ என்ன சொல்ல வருகின்றாய்?” என்று படபடத்தான் சுந்தர். அவனுக்கும் ஏதோ புரிந்தது போல் இருந்தது.
“நம்ம அரசு சொன்னதைத் திரும்பவும் நினைவு கூர்ந்து பாரேன். அன்றைய நாள் ‘காதலர் தினம்’ அந்த நாளில் ஏதோ ஒரு சம்பவம் நடந்திருக்கின்றது. அதுவும் ராதா சம்பந்தப்பட்டதாக இருக்கவேண்டும்… ராதா நிச்சயமாக ஒரு நல்ல பெண்ணாகத்தான் இருக்கவேண்டும். அவள் தன் தாய், தந்தையரைப் பற்றிப் பொய் சொல்லி இருக்கமாட்டாள். அவர்களுக்கோ, ராதாவுக்கோ அல்லது உடன் பிறந்தவர்களுக்கோ எதுவோ துன்பமாக நடந்திருக்கின்றது! அல்லது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கலாம். அதனால்தான் அவளுடைய பெற்றோர் வேலை செய்த இடங்களில் அப்படிப்பட்ட நபர்களே இல்லை என்று சொல்லி இருக்கிறார்கள். என்னுடைய எழுத்தாளன் மனது இப்படி நினைக்கின்றது. நீ என்ன சொல்கிறாய்?”
இராகவன் அனந்த சயனத்தில் இருந்தவாறே சுந்தரைக் கேட்டான்.
சட்டென்று ஏதோ புரிந்தாற் போல சுந்தர் துள்ளி எழுந்தான்.
“நீ சொல்வது சரியாக இருக்கலாம். இன்றைக்கு நம்முடைய பயணம் எங்கே?”
“காலை பதினொரு மணிக்கு ‘தமிழ் மாணவனின்’ கல்லறைக்குப் போகப்போகின்றோம். இரவு இலண்டன் தமிழ்ச்சங்கத்தில் மலேசியா, சிங்கப்பூர், பர்மா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்த மூத்த தமிழ்க்குடியினரைச் சந்திக்கப் போகின்றோம்!”
“சரி, அதற்குள் நான் இணைய தளத்துக்குள் போய் ஒரு அலசல் செய்துவிட்டு வந்துவிடுகின்றேனே!”
சுந்தர் கட்டிலினின்று எழுந்து சென்று தன்னுடைய மடிக்கணிணியை உயிர்ப்பித்தான்.
****************************************************************************************************
‘கல்லறை’ என்றதும், மிகச் சாதாரணமாக எண்ணி வந்தவர்களுக்குப் பெரும் பிரமிப்பு காத்திருந்தது. அங்கு செல்வதற்கு அரசு ஒரு மாதத்திற்கு முன்பே சம்பந்தப்பட்ட இலாகாவில் முன் அனுமதி வாங்கியதும்கூட அவர்களுக்கு மிகையாகவே பட்டது.
ஆனால் கல்லறை வளாகத்தை நெருங்கும்போதுதான் தெரிந்தது, அது பல மைல்களில் அடங்கிய நினைவிடம் என்று! ஆங்காங்கே மக்கள் கைகளில் பூங்கொத்துக்களுடன் நடமாடிக் கொண்டிருந்தனர்.
‘ஆயிரக் கணக்கான கல்லறைகளில் நாம் தேடிவந்த கல்லறையை எப்படிக் கண்டுபிடிப்பது?’ இராகவன் தனக்குள் கேட்டுக் கொண்டான். ஆனால் அரசு அந்த சிரமத்தை வைக்காமல், பாதுகாவலரின் அறையிலிருந்து தகுந்த வழிகாட்டிக் கையேட்டுடன் வந்தான்.
“இந்த நாட்டுக்கு வேலைக்கு வந்து இத்தனை வருடங்களாகிவிட்டன. ஆனால், எனக்கே இன்றுதான் இங்குவர வாய்ப்பு கிடைத்துள்ளது” என்று நாணத்துடன் கூறியவாறு நண்பர்களை அழைத்துக் கொண்டு நடந்தான்.
தொலைவில் அவர்கள் சென்று அடையவேண்டிய கல்லறை இருந்தது. அதை நெருங்கியபோது, இவர்களைப் போன்றே சில தமிழன்பர்கள் அங்கே நின்றிருந்தனர். அருகில் வந்ததும், நட்புடன் புன்னகை செய்தனர். அவர்களில் ஒருவர் வியப்புடன் கூறினார்.
“நான் இங்கு வந்து நேரில் பார்க்கும்வரை நம்பவே இல்லை.”
அவருடைய விரல் நீட்டிய திசையைப் பார்த்தனர்.
நீளமான சலவைக்கல் கல்லறையின் தலைப்பகுதியில், “மறைதிரு ஜி.யூ.போப்” என்றும், அதன் கீழ் “இங்கே தாழ்மையுள்ள ஒரு தமிழ்மாணவன் உறங்குகிறான்” என்றும் பொறிக்கப்பட்டிருந்தன.
“இந்த நாட்டில் பிறந்து, வளர்ந்து, சமயத்தைப் போதிப்பதற்காக தமிழ் நாட்டுக்கு வந்தவர், தமிழ்மொழியின்பால் ஏற்பட்ட காதலினால் தமிழ்மொழியையும் இலக்கியத்தையும் விரும்பிக் கற்றார். திருக்குறளை ஆழ்ந்து கற்றார். தான் இறந்தபிறகு, தன்னுடைய கல்லறையின்மீது இந்த வாசகத்தை எழுதவேண்டிய ஏற்பாட்டைச் செய்துள்ளார். நமக்குக்கூட இப்படிப்பட்டதொரு தமிழ்க்காதலோ, பற்றோ இருக்குமா? சந்தேகந்தான்!”
வந்திருந்தவர்களில் ஒருவர் இவ்வாறு உரைக்க, மற்றவர்கள் வியந்து போயினர்.
“மொழிப்பற்றும் இனப்பற்றும் ஒவ்வொரு மனிதனின் இரத்தத்திலும் உணர்வுகளிலும் ஊறிவரவேண்டும். வற்புறுத்தியோ, வலுக்கட்டாயமாக வலியுறுத்தியோ வருவதல்ல. ஒரு சம்பவம் தெரியுமா? இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, காதலர் தினத்தன்று ஐந்து தமிழ் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து ஒரு காதல் ஜோடியைத் தாக்கியிருக்கின்றனர். அந்தக் காதலர்களும் தமிழர்கள்தாம். தற்செயலாக அந்த வழியே வந்த ஒரு தமிழ்ப்பெண் அவர்களை எதிர்த்து, அந்தக் காதலர்களைத் தப்ப வைத்திருக்கிறாள். ஆத்திரப்பட்ட அந்த ஐந்து இளைஞர்களும் அவளைத் தாக்கியிருக்கிறார்கள். தாக்குதல் என்றால் சாதாரணத் தாக்குதல் அல்ல. அன்று அந்தப் பெண் ஏதோ ஒரு முக்கியமான நிகழ்ச்சிக்காக, தமிழ்ப்பாரம்பரியமாக சேலை அணிந்து வந்திருக்கின்றாள். அவர்கள் அவளுடைய சேலையைப் பறித்து வீசியிருக்கின்றார்கள். பாவம் அந்தப் பெண். வேறு வழியில்லாமல், கையில் அகப்பட்ட பீர் டின்னை நசுக்கி, அவர்களைக் காயப்படுத்தி இருக்கிறாள். அந்த இளைஞர்கள் ஆவேசப்பட்டு, அந்த டின்னைப் பிடுங்கி, அவளுடைய முகம், கைகால், கழுத்து, உடம்பு என்று குத்திப் பிறாண்டி, குற்றுயிரும் குலை உயிருமாக அருகில் இருந்த சாக்கடையில் வீசிவிட்டுப் போய்விட்டார்கள். அவள் நினைத்திருந்தால், நமக்கென்ன என்று ஒதுங்கிப் போயிருக்கலாமே! அந்த இளைஞர்களும்கூட, ‘நம் இனப்பெண்ணாயிற்றே’ என்று உணர்ந்து, மனிதாபிமானத்தோடு நடந்திருக்கலாம்…..பச்…”
“அப்புறம்…அந்தப் பெண்ணுக்கு என்னவாயிற்று?” இராகவன் பதைதைப்புடன் கேட்டான். அரசு, என்ன பதில் வருமோ என்ற பயத்தினால் வாயடைத்துப் போயிருந்தான். அவர்கள் சொல்லப்போகும் பதிலை செவிமடுக்க நெஞ்சில் வலுவில்லை.
“தெரியவில்லை….சம்பவம் மெரிடியன் கட்டிடத்திற்கு மறுபக்கத்தில் நடந்திருக்கின்றது. விவரம் தெரிந்து ஆம்புலன்ஸ் வரவே வெகு நேரமாயிற்று. ஒருவேளை அவள் இறந்து போயிருக்கலாம்…. ஏனென்றால், கழுத்திலும் ஆழமான காயம் ஏற்பட்டிருந்தது. அவள் பிழைத்திருந்தால் ஆச்சர்யம்தான்.”
சுந்தர் அதற்குமேல் அங்கு நிற்காமல் நண்பர்களை அழைத்துக் கொண்டு கல்லறை வளாகத்தைவிட்டு வெளியே வந்தான். எல்லோருக்குமே இதயம் கனத்துப் போயிருந்தது. யாருமே கலகலப்பிலாமல் பேசிக்கொள்ளவுமில்லை.
அன்றைய பொழுது சுரத்தில்லாமலேயே கழிந்தது.
அரசுவுக்கு மட்டும் மன அமைதி சுத்தமாகக் காணாமல் போயிற்று.
‘கடவுளே! பாதிக்கப்பட்ட அந்தப்பெண் ராதாவாக இருக்கக்கூடாது! அது யாரோ? என்னுடைய ராதா எங்கோ பாதுகாப்பாக இருப்பாள். இருக்கவேண்டும்.’ என்று இதயம் இறைவனை இறைஞ்சியது.
——————————————————————————————————————
மூன்று நாட்கள் கடந்த காலை நேரம். வெலிங்டன் புற நகர்ப்பகுதியின் ஒரு பண்ணை பங்களாவின் முன் காரை நிறுத்தினான் அரசு.
“இதுதான் நீ சொன்ன இடம். இங்கே யார் இருக்கின்றார்கள், சுந்தர்? உனக்கு எப்படி அறிமுகம் ஆனார்கள்?” குழப்பத்தோடு நண்பனை வினவினான்.
மற்றவர்களும் புரியாமல் சுந்தரைப் பார்த்தனர்.
“சொல்கிறேன், வாருங்கள்!”
காரிலிருந்து இறங்கியதுமே சில்லென்ற குளிர்காற்று தாராளமாக முகத்தை மோதியது.
காரை விட்டு இறங்கிய சுந்தர், சுற்றிலும் பார்த்தான். அமைதியான இடம். இரட்டை மாடி பங்களா. வெண்பூச்சில் மிக அழகாகவும் அமைதியாகவும் அமைந்திருந்தது. பங்களாவுக்குப் பின்புறம் பரந்து கிடந்தது செழுமையான பூந்தோட்டம். கண்ணுக்கும் மனதுக்கும் பார்க்க நிறைவாக அமைந்திருந்தது.
கார் சத்தத்தைக் கேட்டு பங்களாவுக்குள் இருந்து பணியாள் ஒருவர் வந்து அவர்களை வரவேற்றார்.
“நீங்கள் தானே தொலைபேசியில் பேசியது? உங்களுடைய பெயர்?”
சுந்தர் தன்னை அறிமுகம் செய்து கொண்டான். பின்னர் தன் நண்பர்களையும் அறிமுகம் செய்து வைத்தான். பணியாள் அவர்கள் அனைவரையும் கூடத்தில் அமரவைத்து விட்டு, உட்பக்கமாக விரைந்தார். தணல் அடுப்பில் இருந்து விறகோ, நெருப்போ இல்லாமலேயே அந்த இடம் கதகதப்பாக இருந்தது. தற்போது எல்லாமே மின்சார மயமாகி விட்டதல்லவா?
கூடத்தில் தணல் அடுப்புக்கு மேலே இருந்த பரிசுகளும், நினைவுச் சின்னங்களும், ஐம்பூன்னால் செய்த தஞ்சாவூர் நினைவுக் கேடயங்களும் மனதையும் கண்களையும் கவர்ந்து இழுத்தது.
சுவர்களில் இருந்த இயற்கை வண்ண ஓவியங்கள் அத்தனையும் தமிழ்நாட்டின் பாரம்பரியத்தைப் பறைசாற்றின.
பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்த வயதான மனிதர் வந்தார்.
வெள்ளை நிற வேட்டியும் மேற்சட்டையும் அணிந்திருந்தார். பரந்து கிடந்த நெற்றி, அவர் நன்கு படித்தவர் என்று கட்டியங்கூறியது. அவரைப் பார்த்ததும் சுந்தர் எழுந்து நின்று வணக்கம் சொன்னான். மற்றவர்களும் அவனைப் பின்பற்றினர்.
அவர்களை அமரச் சொன்னார் பெரியவர்.
“அங்கிள்! காலையில் உங்களிடம் தொலைபேசியில் சொன்னேனே….அரசு! அது இவர்தான்…” சுந்தர் அரசுவை முன்னிறுத்தினான். அவனைப் பார்த்த பெரியவர், சில கணங்களுக்கு அவன் முகத்தை ஊன்றிப் பார்த்தார். பின்னர் மனந்தெளிந்தவராக அரசுவின் கையைப் பற்றி, பங்களாவின் பின் பக்கமிருந்த பூந்தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார்.
அங்கே…..செர்ரிமர நிழலில் அமைந்திருந்த ஊஞ்சலில் அமர்ந்திருந்த உருவம் அவனைத் திரும்பிப் பார்த்தது! அந்த உருவத்தை உற்றுப் பார்த்த அரசுவின் இதயம் ஒரு கணம் துடிக்க மறந்தது!
“ராதா…..!” என்று கூவியவன், ஓடிச் சென்று அவளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.
அவள் முகத்திலிருந்த தழும்புகளோ, கலைந்த கூந்தலோ, விகாரமான முகமோ ஊசிமுனையளவேனும் அவனைப் பாதிக்கவில்லை. ஆறாகப் பெருகிய கண்ணீரும் நிற்கவில்லை.
“என் கண்ணே! நீ கிடைத்து விட்டாய்! அது போதும்! இனி உன்னை விட்டுப் பிரியமாட்டேன் பிரியவேமாட்டேன்!”
அவன் விசும்பி விசும்பி அழுதான். ஆனால் அது ஆனந்தக் கண்ணீரன்றோ!
அவன் வெளிப்படுத்திய வார்த்தைகள் ராதாவுக்கு மட்டுமல்ல, அவளுடைய பெற்றோர்களுக்கும் மனச்சாந்தியையும் நிம்மதியையும் அளித்தது. அவர்களைத் தொடர்ந்து வந்த நண்பர்களின் மகிழ்ச்சிக்கும் சொல்லவும் வேண்டுமோ?!
****************************************************************
“சுந்தர், நல்ல காரியம் செய்தாய். ஆனால், அரசுவாலேயே கடந்த இரண்டு வருடமாகக் கண்டு பிடிக்க முடியவில்லை. நீ எப்படி ராதாவைக் கண்டு பிடித்தாய்?”
இராகவன் வியப்பைக் கட்டுப்படுத்த இயலாமல் கேட்டான்.
“மூன்று நாட்களுக்கு முன் நீ சொன்னாய் தெரியுமா, தொடக்கமும் முடிவும் கிரீன்விட்ச் மெரிடியனிலிருந்து ஆரம்பித்தது என்று? அங்குதான் தொடங்கினேன். ராதாவுக்கு ஏதோ நடந்திருக்கவேண்டும், அவள் பெற்றோருக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் சொன்னாய். நான் ஒரு பத்திரிக்கை நிருபர். என் வேலையே எனக்குப் பேருதவியாக இருந்தது. இணைய தளத்திற்குப் போய் இரண்டு வருடங்களுக்கு முன்பு, காதலர் தினத்தன்று கிரீன்விட்ச் மெரிடியன் வளாகத்தில் நடைபெற்ற அபாயகரமான சம்பவங்களைப் பற்றித் தெரிந்து கொண்டேன். ராதாவின் அப்பா வேலை செய்த இடத்திலும், என்னுடைய நிருபர் பதவியை வைத்தே விபரம் அறிந்தேன். அந்த துயரமான சம்பவத்திலிருந்து ராதாவைக் காப்பாற்றவும், குடும்பத்துக்கு வரவிருக்கும் அபாயத்திலிருந்து மீளவும், அரசாங்க உதவியோடு ராதாவின் குடும்பம் தன்னுடைய அடிப்படையான அடையாளத்தையே மாற்றிக் கொள்ளவேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டது. எல்லோருடைய பெயர்களும் மாறிவிட்டன. தொழில் மாறி விட்டது. இப்போது இது கதிரவன் குடும்பம். ராதாவின் பெயர் இப்போது அமுதினி. அதனால்தான் அரசுவாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.”
“எது எப்படியோ! ராதாவின் விகாரமான தோற்றத்தைப் பார்த்து, அரசு பின்வாங்காமல், அவளை முழுமனதாக ஏற்றுக் கொண்டானே! அவனைக் கண்டிப்பாக நாம் பாராட்டத்தான் வேண்டும்!”
“ஆமாம், ஆமாம்! அவனை மட்டுமல்ல, அநியாயத்தை எதிர்த்து நின்று போராடி, இன்று தன் அழகையே இழந்து நிற்கும் ராதாவையும் நாம் கண்டிப்பாகப் பாராட்டத்தான் வேண்டும்!”
மனம் நிறைந்த மகிழ்ச்சி வெள்ளம் அங்கே பெருகியது.
**************************************************************************
எழுத்து:
என்.துளசி அண்ணாமலை

sree.thaaraa@gmail.com

Series Navigationமரத்துடன் மனங்கள்வேலூர் சத்துவாச்சாரி ஸ்ரீபுற்றுமகரிஷி சித்த மருத்துவ மையத்தின் இலக்கிய அணி சார்பில் திருமுருக கிருபானந்த வாரியார் நினைவு நாள் கூட்டம்.
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *