சமூகப்பிரக்ஞையாள சாம்ராட்

This entry is part 3 of 19 in the series 20 நவம்பர் 2016

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

q

வல்லவருக்கு வல்லவராய் நல்லவருக்கு நல்லவராய்
எல்லாவிடங்களுக்கும் போக குறுக்குவழி தெரிந்தவர் அவர்;
(ஆனாலும் கால்கள் கடுக்கின்றனவென்றே சதா புலம்பிக்கொண்டிருப்பார்
அது அவர் சொல்லிமுடியாச்சொந்தக்கதை சோகக்கதைகளில் ஒன்று)
குறுக்குவழியில் சென்று சேமித்த நேரத்தை
ஆனானப்பட்ட மேதைகளைப் பழிப்பதில் செலவழிப்பார்.
நாடு கெட்டுப்போச்சு என்பார்
நாடென்பதை வாலாட்டும் நாயாக பாவிப்பார்.
குரலற்றவர்களின் குரல் நான் என்பார்
’அறிவற்றவர்களின் அறிவுநான்’ என்ற அகங்காரம் தொனிக்க.
தானா ரீனா வந்தால் தங்கம் கொட்டும் என்பார்
(இவருடைய கஜானாவில் சேர்ந்தால் கசக்கவா செய்யும்?)
யானையை ஓணான் என்பார், இல்லையென்பாரை
கேனப்பயல் என்று கரித்துக்கொட்டுவார்.
சகவுயுர்களுக்காய் உச்சுக்கொட்டிக்கொண்டிருப்பதிலேயே
உய்வடைந்துவிடும் இவர்தம் சமத்துவம் சகோதரத்துவம்
சமூகப்பிரக்ஞை சகமனிதநேயமெல்லாம்.
(வாய்வலிக்காதா என்ன?)
நாலே நாலு ஆங்கில வார்த்தைகளில்
நாற்பதாயிரம் காதுகளில் பூ சுற்ற முடியும் இவரால்!
”இல்லாமை இல்லாத நிலைவேண்டும்
அதற்கு இன்றிருக்கும் ஆட்சிபோய்
நல்(என்று நான் சொல்லும்)லாட்சி மலரவேண்டும்;
நானறிவேன் எது உங்களுக்கு நல்லது என்று
சொல்வதைக் கேளுங்கள்;
வழிமொழியுங்கள் என்னை
சொந்தமாய் யோசித்து மாற்றுக்கருத்துரைத்தாலோ
காறித்துப்பப்படும் உம்மீதும், எச்சரிக்கிறேன்;
மீறிப் பேசினாலோ, எழுதினாலோ
நாறிப்போய்விடுவாய் ”என்று சொல்லாமல் சொல்லும்
நேசக்காரர் அவர்.
இரண்டு கைகளில் பத்துவிரல்கள் இருந்தால்
பெரிய எழுத்தாளராகிவிடுவாரா என்ன என்று
நூறு தரமான படைப்புகளைத் தந்தவர்க் கெதிராய்
வேறு வேறு கோணங்களில் வாதாடக்கூடியவர்.
(”வாஹ், வாஹ்” சொல்ல வாய்களுக்கா பஞ்சம்?)
வீணாப்போனவன் என்பார், ஆணவக்காரன் என்பார்;
வெட்கங்கெட்டவன் என்பார்; கெட்டவார்த்தைகளில்
(ஆங்கிலம் அல்லது ப்ரெஞ்சு மொழியில்)
வசைபாடி முடித்து
எதிர்கருத்தைச் சொல்வதிலும்
நயத்தக்க நாகரிகம் வேண்டுமென
வலியுறுத்தத் தவறமாட்டார்.
கேள் மன்னிப்புகேள், என்று மீண்டும் மீண்டும்
அச்சுறுத்தும் குரலில் கோருவார்.
அஞ்சியல்லாமல் நெஞ்சுணர்ந்துசொல்லிவிட்டாலோ
ஆள் தொடைநடுங்கி, என்னமாய் பயந்துவிட்டார்,
என்று இகழ்ச்சிமிகக் கூறுவார்
மச்சுவீடுக் கூட்டங்களில்.
குந்துமணியளவுகூட இல்லாமலேயே
கோபுரங்களையெல்லாம் கேவலம்பேச
ஒரு துணிச்சல் வேண்டுமில்லையா?
காசநோய்க்காரருக்கு கமர்கட் கொடுத்து
அதை ஸெல்ஃபி எடுத்து
கச்சிதமாய் தன் ஆறு முகநூல் பக்கங்களில்
பதிவேற்றிவிடுவார்.
மெச்சத்தகுந்தவர்
மோதிரக்கைகளை வலிந்து பிடித்திழுக்காத குறையாய்
தன் தலையை செல்லமாய் குட்டச் செய்வதிலும்
அப்பாவிகளின் தலையதிர நச்சென்று குட்டி
தன்னை மோதிரக்கையராக்கிக்கொள்வதிலும்.
அதிகாரபீடங்களுக்கு முன் அரை உயரமாய் மடங்கித் தழைந்தவண்ணமே
தன்மானத்தாரகையாய் பறையறிவிக்கும் பாங்கைப்
பேச வார்த்தையில்லை!
சுருக்கமாய்
பொறுப்புத்துறப்புக்காரர்
என்றால்
பொல்லாப்புதான்.
அதற்காய் சொல்லாமலிருக்கமுடியுமா என்ன?

Series Navigationபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பெருநிறை விண்மீன்கள் பேரொளி வெடிப்புடன் பிறக்கின்றன.இரைந்து கிடக்கும் பாதைகள்
author

ரிஷி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *