இரு கோடுகள் (மூன்றாம் பாகம்)

This entry is part 1 of 22 in the series 4 டிசம்பர் 2016

 

தெலுங்கில் : ஒல்கா

தமிழாக்கம் : கௌரி கிருபானந்தன்

tkgowri@gmail.com

மறுநாள் காலையில் எவ்வளவுதான் கட்டுபடுத்திக்கொள்ள முயன்றாலும் சாந்தாவால் முடியவில்லை. வேண்டாம் வேண்டாம் என்று நினைத்துக் கொண்டே ராம்குமார் தங்கி இருந்த அறைக்குச் சென்றாள்.

அறைக் கதவு திறந்து தான் இருந்தது. அவன் கட்டிலில் படுத்தபடி புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தான்.

சாந்தாவைக் கண்டதும் அவனுக்கு அளவுகடந்த ஆச்சரியம்! மூன்று ஆண்டுகளாய் அறிமுகம் இருந்த போதும், கடந்த ஒரு வருடமாய் நட்பு கொஞ்சம் வளர்ந்து இருந்தாலும் அவன் சாந்தாவை தன்னுடைய அறைக்கு வீட்டுக்கு வரச்சொன்னது இல்லை. சாந்தா அவனை தன்னுடைய வீட்டுக்கு அழைத்தது இல்லை. அந்த பேச்சே வரவில்லை. இப்பொழுது திடீரென்று சாந்தா வந்துதும் ராம்குமாருக்கு ஒரு நிமிடம் குழப்பமாக இருந்தது.

சட்டென்று மீண்டவனாய், “வாங்க… வாங்க” என்று பரபரத்தான்.

“என்ன படிக்கிறீங்க?” என்றாள் சாந்தா உட்கார்ந்துகொண்டே.

“இதோ வந்து விடுகிறேன். இன்னும் பல் கூட விளக்கவில்லை.” அவசரமாய் பாத்ரூம் பக்கம் ஓடினான்.

“ஒன்பது மணி ஆகி விட்டது. இதுவரையில் என்ன செய்து கிட்டு இருந்தீங்க?”

“இதோ.. இந்த நாவலைப் படித்துக் கொண்டிருந்தேன். ரொம்ப நன்றாக இருக்கிறது. நேரம் போனதே தெரியவில்லை.”

“என்ன நாவல் அது?” ஆர்வம் இல்லாமலேயே கேட்டாள் சாந்தா. அவள் இன்னும் மனதில் ஏற்பட்ட கொந்தளிப்பை அடக்கும் முயற்சியில் இருந்தாள்.

“வாட் ஈஸ் டு பி டன்! எளிமையாக சொல்ல வேண்டும் ‘என்றால் என்ன செய்ய வேண்டும்?’ ரஷியன் நாவல்.”

“அவ்வளவு சிறந்த புத்தகமா? எதைப் பற்றி?”

“காதலைப் பற்றி, திருமணத்தைப் பற்றி. இந்த நாவலில் நேரா என்ற பெண்ணுக்கு வீடு ஒரு சிறைச்சாலை போல் தோன்றுகிறது. கொஞ்சம் கூட சுதந்திரம் இருக்காது. அவளுக்கு அது நரகம். பெற்றோர்கள் யமனின் தூதர்கள். எப்படியாவது அந்த நரகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று நினைக்கிறாள்.

அவள் தம்பிக்கு பாடம் சொல்லிக்கொடுக்க வந்த ஆசிரியருடன் அறிமுகம் ஆகிறது. அவர்கூட பெண்களின் சுதந்திரத்தைப் பற்றி யோசிப்பவர் என்பதால் அவ்விருவருக்கும் இடையே நட்பு ஏற்படுகிறது. நேராவை அந்த நரகத்திலிருந்து விடுவிப்பதற்கு அவளை திருமணம் செய்து கொள்வதாக அவர் சொல்கிறார். சுதந்திரம் நிறைந்த அந்த வாழ்க்கையைப் பற்றி நேரா எத்தனையோ கனவுகளை காண்கிறாள். திருமணம் ஆன பிறகு தம் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டுமென்று சொல்கிறாள். அவரவரின் அறைகளில் அவரவர்கள் இருக்க வேண்டும். முன் அனுமதி பெறாமல் ஒருத்தர் மற்றவரின் அறைக்குள் நுழையக் கூடாது. அவரவர்களின் வேலலையை அவரவர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒருவரின் வாழ்க்கை அவருக்கு எஞ்சியிருக்க வேண்டும். இதுபோன்ற நவீன பாணியில் யோசனை செய்கிறாள் நேரா. அது போலவே வாழ்க்கிறார்கள். ஒரு கூட்டுறவு நிறுவனத்தைத் தொடங்கி அதனை நடத்தி வருகிறாள். அதில் கிடைக்கும் லாபத்தை அங்கு  வேலை செய்பவர்களுக்கு பகிர்ந்துத் தருகிறாள். நாட்கள் செல்லச்செல்ல நேராவுக்கு ஒரு விஷயம் புரிகிறது. ஆசிரியர் மீது தனக்கு இருப்பது நன்றிதானே தவிர காதல் இல்லை என்றும், அவருடைய நண்பனை தான் காதலிப்பதாகவும் உணருகிறாள். இந்த விஷயத்தை கணவனிடம் சொல்வதா? அவருக்கு வேதனை தருவதா என்று குழம்புகிறாள் நேரா. இறுதியில் கணவருக்குக் கடிதம் எழுதுகிறாள். காதலுக்கும், நட்புக்கு இடையே நலிந்து போகிறாள் அவள். விஷயத்தை புரிந்து கொண்ட ஆசிரியர் அங்கிருந்து போய் விடுகிறார். நேராவுடன் தனக்கு எந்த பந்தமும் இல்லாமல் செய்கிறார். நேரா காதலனுடன் சேருகிறாள்.” நிறுத்தினான் ராம்குமார்.

“பிறகு?” சாந்தா கதையில் ஆழ்ந்து விட்டாள்.

“பிறகு நீங்க வந்து விட்டீங்க. இரவிலிருந்து விடாமல் படித்து வருகிறேன்.”

“அவரவர்களின் அறையில் அவரவர்கள்! கணவன் மனைவி எப்போது பார்த்தாலும் ஒருவரின் கண்ணில் மற்றவர்கள் பட்டுக் கொண்டிருக்காமல் அவரவர்களின் அறையில்! எவ்வளவு நன்றாக இருக்கிறது இந்த யோசனை?” என்றாள் சாந்தா.

“நீங்க கல்யாணம் பண்ணிக் கொள்பவனிடம் இந்த நிபந்தனையை போடுங்கள்.”

“அந்த நிபந்தைனையைப் போட்டால் எனக்கு கல்யாணமே ஆகாது. ஆகாவிட்டாலும் சந்தோஷம்தான். எனக்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று இல்லை.” சிரித்தாள் சாந்தா. “அந்த நிபந்தனைக்கு ஒப்புக்கொள்ளும் ஆண் மகன் இந்த பூமியில் பிறந்து இருக்க மாட்டான் என்பது என் நம்பிக்கை.”

“பிறந்து வளர்ந்து உங்கள் எதிரிலேயே உட்கார்ந்து இருக்கிறான் என்று வையுங்கள். என்ன செய்வீங்க?”

ராம்குமார் உரிமையுடன் சாந்தாவின் கையைப் பற்றிக் கொண்டான். சாந்தாவுக்கு உடல் முழுவதும் சிலிர்த்தது. பதற்றமடைந்து அவன் முகத்தைப் பார்த்தாள்.

“சாந்தா! உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். உங்கள் எண்ணங்கள் எனக்குப் பிடிக்கும். நாம் இந்த விஷயத்தைப் பற்றி ஏன் பேசக்கூடாது? குறைந்தபட்சம் யோசிக்கவாவது செய்யலாம் இல்லையா?”

சாந்தா எதுவும் பேசாமல் உட்கார்ந்திருந்தாள். வியப்பிலிருந்து மீள முடியாமல் திக்குமுக்காடிக் கொண்டிருந்தாள்.

“உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் பேச வேண்டியது இல்லை.”

சாந்தா மெதுவாக சமாளித்துக் கொண்டாள். “எனக்கு ரொம்ப வியப்பாக இருக்கிறது. என்ன பேசுவது என்று தெரியவில்லை. நான் இங்கே எதற்காக, எப்படி வந்தேன் என்று உங்களுக்குத் தெரியாது.”

“எதற்காக வந்தீங்க?

“ஷோபாவுக்கு திருமணம் ஆகி விட்டது.”

“தெரியும். நீங்கதான் சொல்லி இருக்கீங்க.”

“கணவன் முத்தமிடும் போது பயமாக இருக்கும் என்று அவள் சொன்னாள்.”

“ஊம்” ராம்குமார் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

“இரவு முழுவதும் எனக்கு தூக்கம் வரவில்லை. முத்தமிட்டால் பயம் தவிர வேறு எதுவும் இருக்காதா என்று யோசித்துக் கொண்டு இருக்கும் போது நீங்கள் நினைவுக்கு வந்தீங்க. எவ்வளவுதான் முயன்றாலும் உங்களுடைய நினைப்பை என்னால் உதறித் தள்ள முடியவில்லை. இங்கே வராமல் என்னால் இருக்க முடியவில்லை.”

சாந்தா எதிரே இருந்த காலெண்டரை பார்த்துக் கொண்டே சொல்லிக் கொண்டிருந்தாள்.

சாந்தாவின் பக்கத்தில் உட்கார்ந்து இருந்த ராம்குமார் சற்று குனிந்து சாந்தாவின் இதழ்கள் மீது முத்தம் பதித்தான். சாந்தாவுக்கு தலையை சுற்றிக் கொண்டு வந்தது. நாற்காலியை அழுத்தமாக பற்றி இருந்த அவள் கைகள் ராம்குமாரின் தலையை எப்படி பிடித்துக்கொண்டதோ அவளுக்குத் தெரியாது. அவனிடமிருந்து எப்படி விடுபட்டாளோ, அந்த அறையிலிருந்து எப்படி வெளியில் வந்தாளோ, ரிக்ஷாக்காரனிடம் வழியை எப்படிச் சொன்னாளோ, ஷோபாவின் வீட்டுக்கு எப்படிப் போனாளோ அவளுக்கு எதுவுமே தெரிந்திருக்கவில்லை.

ஷோபா ஏதேதோ பேசிக் கொண்டிருந்த போது மௌனமாக கேட்டுக்கொண்டிருந்தாள்.

“இரு. அவரை அழைத்து உனக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன்.” அறைக்குள் இருந்த கணவனை கூப்பிட போன போது சாந்தா தடுத்து நிறுத்தினாள். “உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும். இப்படி வா” என்று வெளியே இழுத்து வந்தாள். கொல்லையில் இருந்த கொய்யா மரத்தின் அடியில் இருவரும் உட்கார்ந்து இருந்தார்கள்.

“என்ன நடந்தது? என்னவோ போல் இருக்கிறாயே?” ஷோபா கேட்டாள்.

“ஷோபா! முத்தமிட்டால் நன்றாக இருக்கும். ரொம்ப நன்றாக இருக்கும்.”

ஷோபா அதிர்ந்து போய் விட்டாள். “என்ன? என்ன சொல்கிறாய் நீ?”

“ராம்குமாரிடம் போனேன். அவன் என்னை முத்தமிட்டான்.”

“ஸ்டுபிட்! அவனுடைய அறைக்குப் போனாயா? எவ்வளவு தைரியம் உனக்கு?  கொஞ்சமாவது புத்தி இருக்கிறதா?”

“ராம்குமார் என்னை காதலிக்கிறான்.”

“கிழித்தான்! காதலாவது கத்தரிக்காயாவது! நீ வெறும் முட்டாள் என்று கண்டுபிடித்து விட்டான். அம்மாடி! அவனுடைய அறைக்கு போனாயா? எவ்வளவு துணிச்சல் உனக்கு? வேறு ஏதாவது நடந்திருந்தால்?” ஷோபா மார்பில் அடித்துக் கொண்டாள்.

“ஷோபா! நிறுத்து உன் ரகளையை. நான் வேண்டுமென்றுதான் போனேன். பயப்பட வேண்டியது என்னைப் பற்றி இல்லை, உன்னைப்பற்றி. உன் கணவர் உன்னை முத்தமிடும் போது பயமாக இருப்பது, எரிச்சல் அடைவது நல்ல லட்சணங்கள் இல்லை. காதல் இருந்தால் அப்படி இருக்காது. அவருக்கு உன் மீது அதிகாரம் இருக்கிறதே தவிர காதல் இல்லை. அந்த அதிகாரத்தை நீ ஏற்றுக்கொண்டாயே தவிர காதலிக்கவில்லை. அதனால்தான் அப்படி இருக்கிறது உனக்கு.”

ஷோபா மிரண்டு போனவளாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ஷோபா! கல்யாணம் செய்துகொண்டு பெரிய தவறு செய்துவிட்டாய். வாழ்க்கையில் திருத்திக்கொள்ள முடியாத தவறு. இனி உன் வாழ்க்கை உனக்கு இருக்காது. உன் முகம் உனக்கு இருக்காது. உன் அறை உனக்கு இருக்காது. உனக்கு நீயே எஞ்சியிருக்க மாட்டாய். அடியே ஷோபா! உன் புத்திசாலித்தனம் எதற்கும் பயன்படாது. உன் நல்ல குணத்திற்கு மதிப்பு இருக்காது. உன் அழகு மலிந்துபோய் விடும். ஐயோ ஷோபா! இந்தக் கல்யாணத்தை ஏன் பண்ணிக் கொண்டாய்?”

சாந்தா அழத் தொடங்கினாள். ஷோபா சாந்தாவைப் பற்றி எழுப்பி நிற்க வைத்தாள்.

“பைத்தியம் பிடித்துவிட்டதா உனக்கு? குடித்து விட்டு வந்தாயா? உனக்கு கல்யாணம் ஆகவில்லை என்று கவலைப் பட்டுக்கொண்டு வேற்று ஆண்களைக் கொண்டு முத்தமிட வைத்துக் கொண்டு, எனக்குக் கல்யாணம் ஆகி விட்டதென்று அழுகிறாயா? இவ்வளவு தீசல் இருக்கிறதா உன் மனதில்? எங்க அம்மா அப்பா பார்த்தால் வேண்டாத ரகளை! இங்கிருந்து போய் விடு.”

சாந்தாவை ஏறக்குறைய இழுத்துக்கொண்டு போய் கேட்டுக்கு வெளியில் தள்ளிவிட்டு உள்ளே ஓடினாள் ஷோபா.

****

அதற்குப் பிறகு ஷோபாவை பார்க்கவே இல்லை. ஷோபா கடிதம் எழுதவில்லை. சாந்தா ஓரிரண்டு கடிதங்கள் எழுதினாலும் அவற்றுக்கு பதில் வரவில்லை.

ஷோபா தன்னுடன் நட்பை முறிந்துக் கொண்டு விட்டாள் என்று முடிவு செய்து கொண்டாள் சாந்தா. திரும்பவும் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு ஷோபாவை பார்க்கப் போகிறாள். ஷோபாவுடன் திரும்பவும் நட்பு தொடருமா?

ஷோபா இப்போது எப்படி இருப்பாள்? இரண்டு மகன்கள்! மனைவியாக தாயாக ரொம்ப சந்தோஷமாக இருப்பாளாய் இருக்கும். கிடைத்த வாழ்க்கையில் சந்தோஷமாக இருப்பது எப்படி என்று ஷோபாவுக்குத் தெரியும். தன்னைப் போல் வேண்டாத பிரச்சனைகளை வரவழைத்துக் கொள்ள மாட்டாள். தனக்கு இப்போது எந்தக் குறையும் இல்லை.

நல்ல வேலை. தனக்கு மிகவும் ஆர்வம் இருந்த இயற்பியலில் தான் நினைத்த பட்டங்களை பெற்று விட்டாள். திருப்தி கிடைக்கும் வரையில் படித்தாள்.

அந்தப் படிப்பிற்காக ராம்குமாரைக் கூட துறந்து விட்டாள். சாந்தாவுக்கு சிரிப்பு வந்தது.

ரொம்ப நல்லவன் என்று நினைத்திருந்த ராம்குமாரையும் ஆணாதிக்கம் விட்டு வைக்கவில்லை. தன்னை மேற்கொண்டு படிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டான்.

எவ்வளவு தைரியம்? அவனுக்காக படிப்பை நிறுத்தி விடுவாள் என்று எப்படி நினைத்தான்? தனக்குக் கிடைத்த வாய்ப்பை அவனுக்காக விட்டு விடுவாள் என்று எப்படி நினைத்தான்? சாந்தாவுக்கு ராம்குமாருடன் சச்சரவு நடந்த நாள் நினைவுக்கு வந்தது.

ராம்குமாருக்கு எம்.எஸ்.ஸி.யில் சீட் கிடைக்கவில்லை. பி.எட். முடித்து டீச்சராக உள்ளூரிலேயே வேலையைத் தேடிக் கொண்டான். சாந்தாவும் எம்.எஸ்.ஸி. முடித்த பிறகு படிப்பை நிறுத்திவிட்டு வேலையைத் தேடிக்கொண்டு தன்னைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது அவனுடைய உத்தேசம்.

சாந்தா அமெரிக்காவில் ரிசெர்ச் செய்ய நினைக்கிறாள் என்றும், அமெரிக்காவில் மேற்படிப்பு படிப்பதற்காக பரீட்சைகளை எழுதப் போகிறாள் என்று தெரிந்தது முதல் அவனுடைய போக்கு மாறிவிட்டது. சாந்தா பரீட்சையை எழுதி விட்டு ராம்குமாரைப் பார்க்கச் சென்றாள்.

ராம்குமார் சாந்தாவைப் பார்த்து சிரிக்கவும் இல்லை.

“ஹைதராபாத்லிருந்து உனக்காக என்ன வாங்கி வந்தேன் என்று சொல் பார்க்கலாம்.” உற்சாகத்துடன் சொன்னாள் சாந்தா.

“நீ என்ன வாங்கி வந்தாலும் அது எனக்கு தேவையில்லை. நான் வாங்கிக்கொள்ள மாட்டேன்” என்றான் கடுமை நிறைந்த குரலில்.

சாந்தாவுக்கு விஷயம் புரிந்துவிட்டது. “நாம் இந்த விஷயத்தைப் பற்றி தெளிவாகப் பேசிக்கொள்வது நல்லது என்று நினைக்கிறேன்” என்றாள் தீவிரமாக.

“ஆமாம். நானும் அதைத்தான் சொல்கிறேன். நீ அமெரிக்காவுக்கு போய் மேற்கொண்டு படிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. நீ அமெரிக்கா போவதாக இருந்தால் நம் திருமணம் நடக்காது.”

சாந்தா எதுவும் பேசவில்லை.

“உனக்கு என்னைவிட அமெரிக்கா போவதுதான் முக்கியமா? நம்முடைய வாழ்க்கையைவிட நீ சம்பாதிக்கப் போகும் பட்டங்கள்தான் அதிகமா? எனக்காக அமெரிக்கா போவதை விட்டுக்கொடுக்க மாட்டாயா?” ஆவேசத்துடன் கேட்டான் ராம்குமார்.

“”உன் சிறப்பு என்னவோ, நம் இருவருக்கும் இடையில் என்ன எஞ்சியிருக்கிறதோ எனக்குப் புரியவில்லை” என்றாள் சாந்தா.

“அப்படி என்றால் உன் உத்தேசம்தான் என்ன? உன் பார்வையில் எனக்கு எந்த சிறப்பும் இல்லையா? அவ்வளவு வேலையற்றவனாக போய் விட்டேனா?”

“நம்முடைய காதலுக்கும் நம் திருமணத்திற்கும் நீ நிபந்தனைகளை விதித்தப் பிறகு என் கண்ணோட்டத்தில் உனக்கு எந்த சிறப்பும் இல்லை. என் வளர்ச்சிக்கு நீ தடை சொல்கிறாய் என்றால் உனக்கு என்மீது காதல் இருப்பதாக அர்த்தமா? உனக்கு பயம்! அமெரிக்காவுக்கு போய்விட்டு திரும்பப் போகும் என்னைக் கண்டால் பயம்! உன்னைவிட நான் அதிகமாக முன்னேறி விடுவேன். உனக்கு தாழ்வு மனப்பான்மை! நான் அங்கே போனால் எப்படி இருப்பேனோ என்று உனக்கு சந்தேகம்! அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்த பிறகு உன்னை மறுத்து விடுவேனோ என்ற அவநம்பிக்கை! உன் மனதில் இத்தனை கல்மிஷங்கள் இருக்கும் போது இன்னும் காதலாவது?”

“இதெல்லாம் உண்மையாக நடக்காது என்று என்ன நிச்சயம்? எனக்கு அதுபோன்ற சந்தேகங்கள் வருவதில் என்ன தவறு இருக்கிறது?” ரோஷத்துடன் கேட்டான் ராம்குமார்.

“தவறு எதுவும் இல்லை ராம்குமார். அந்த சந்தேகங்கள் எல்லாம் உண்மையாவதற்கு நூற்றுக்கு நூறு சதவீதம் வாய்ப்பு இருக்கிறது. உன்னைவிட நான் உயர்நிலையில் இருப்பேன். இரண்டு நபர்கள் சமநிலையில் இல்லாத போது ஒருவர் மற்றவரை தாழ்வாக மதிக்காமல் இருப்பது நடக்காது. நான் உன்னை மதிப்புக் குறைவாக நடத்தக் கூடும். இப்பொழுது ஆண்கள் எல்லோரும் பெண்களை தாழ்வாக நடத்துவதை பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்.

அமெரிக்காவில் என் விருப்பம் போல் இருப்பேன். நீ என் நண்பனாக இருக்கும் போது முத்தமிட்டால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் வந்ததுமே உன் அறைக்கு வரவில்லையா? அப்பொழுது முதல் உன்னிடம் நெருங்கிப் பழகவில்லையா? அங்கேயும் எனக்கு வேண்டுமென்று தோன்றினால் யாருடனாவது நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வேனோ என்னவோ! கட்டாயம் செய்வேனாய் இருக்கும். அமெரிக்காவில் உன்னைவிட எல்லா விதத்திலும் உயர்நிலையில் இருப்பவன் கிடைத்தால் உனக்கு குட் பை சொல்லுவேனோ என்னவோ. ஏன் சொல்லக் கூடாது? சொல்!

என்னுடைய காதலுக்கு நீ நிபந்தனை போடுகிறாயா? நான் அமெரிக்காவுக்குப் போய் வந்தால் என்னைத் திருமணம் செய்து கொள்ள மாட்டாயா? நானும் ஒரு நிபந்தனை போட்கிறேன். நீ அமெரிக்கா போய் வந்தால்தான் உன்னைக் கல்யாணம் செய்துகொள்வேன்.“ கடினமான குரலில் உரக்க சிரித்தாள் சாந்தா.

“உனக்கு பைத்தியம் பிடித்து விட்டது.” பற்களைக் கடித்துக்கொண்டே சொன்னான் ராம்குமார்.

“ஆமாம். எனக்குப் பைத்தியம் பிடித்து விட்டது. அவ்வப்பொழுது எனக்கு பைத்தியம் பிடித்துக்கொண்டுதான் இருக்கிறது. பெண்களை தம் இஷ்டம் வந்தது போல் ஆட்டுவிக்க முடியும் என்று நினைக்கும் ஆண்களைப் பார்த்தால், ஆண்களைக் கண்டு பயந்து நடுங்கியபடி அவர்களுடைய ஆணைகளுக்குப் பணிந்து போகும் பெண்களைக் கண்டால் எனக்குப் பைத்தியம் பிடித்து விடும். என் பைத்தியம் விஷயம் இதுநாள் வரையில் உனக்குத் தெரியாமல் போனதற்கு, உனக்குத் தெரியவில்லை என்ற விஷயத்தை நான் உணராமல் போனதற்கு எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது.”

சாந்தா எழுந்து செருப்பு அணிந்து கொள்ளும்போது ராம்குமார் வந்து சாந்தாவின் கையைப் பற்றிக் கொண்டான்.

“சாந்தா! கோபத்தை விட்டுவிட்டு நிதானமாக யோசித்துப் பார். நடைமுறையைப் பற்றி யோசி. உனக்கே புரியும்.”

“நிதானம், அமைதி, நடைமுறை இந்த வார்த்தைகளை என்னிடம் சொல்லாதே. அந்த வார்த்தைகளுக்கும் எனக்கும் நேர் விரோதம். இனி நான் யோசிக்க வேண்டியது எதுவும் இல்லை. என் வீட்டில் நான் எவ்வளவு போராட்டம் நடத்தி வருகிறேன் என்று உனக்குத் தெரியாதா? அம்மா, அப்பா, அண்ணன் எல்லோரும் எப்படியாவது என்னைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று பார்க்கிறார்கள். அவர்களுடன் போராடுவதில் நீ எனக்கு உதவி செய்வதை விட்டுவிட்டு, திரும்பவும் இன்னொரு போராட்டத்தை உருவாக்குகிறாய். உனக்கு வெட்கமாக இல்லையா? என்னை விட முன்னேறி விடாதே என்று என்னிடம் பிச்சைக் கேட்பதற்கு உனக்கு வெட்கமாக இல்லையா? சீ… உன்னைப் பார்த்தால் எனக்கு அருவருப்பாக இருக்கிறது.” சாந்தா வேகமாக வெளியில் வந்தாள்.

அன்று ராம்குமார் பேசியதை நினைத்துப் பார்க்கும் போது சாந்தாவுக்கு இன்றும் கோபம் வந்தது. திருமணத்திற்காக படிப்பை விட்டுவிடுவாள் என்று எப்படி நினைத்தான்? தன்னை அவ்வளவு மலிவாக எப்படி எடைபோட்டான்? இப்பொழுதுகூட அவனை நினைத்தால் ஆத்திரம் பற்றிக்கொண்டு வரும்.

தனக்கு விருப்பம் இருக்கும் வரையில் படித்தாள். தனக்குப் பிடித்த வேலைதான் செய்து வருகிறாள்.

ஆனாலு ஏதோ வெறுமை! காரணம் என்ன? இன்னும் என்ன வேண்டும்? சாந்தா கட்டிலை விட்டு எழுந்து கொண்டு வீடு முழுவதும் நடை பயின்றாள்.

இந்த வாழ்க்கை தானாக விரும்பி உருவாக்கிக் கொண்டதுதான். தனக்கு இன்று ஒரு வீடு இருக்கிறது. அந்த வீட்டில் எல்லாமே அவள் விருப்பம் போல் தான் நடக்கும். எந்த ஆண்மகனுக்கும் அடிபணியாமல்தான் வாழ்ந்து வருகிறாள். ஆனாலும் ஏதோ அதிருப்தி… அமைதியின்மை… தனிமை!

தனக்கு திருமணமும், குழந்தைகளும் வேண்டுமா?

எத்தனை யோசித்தாலும் அவை வேண்டுமென்று தோன்றவில்லை. குழந்தைகளை பெற்று வளர்க்கும் பொறுமை தனக்கு இல்லை. விருப்பமும் இல்லை. ஆனால் வேலை மட்டுமே தனக்கு திருப்தியைத் தருவதில்லை. இன்னும் ஏதோ வேண்டும். சுற்றிலும் மனிதர்கள் இருக்க வேண்டும். இயந்திரகதியில் வேலைக்குப் போவதும், சக ஊழியர்களுடைய  சகவாசமும் போதவில்லை.

ஷோபாவுக்கு இதுபோன்ற அதிருப்தி எதுவும் இருக்காது. அதிருப்தி அடையும் சுபாவம் அல்ல அவளுடையது. தன்னுடைய சுபாவம்தான் மாறுபட்டது. நாளைக்கு ஷோபா தன்னைப் பார்த்ததும் நிறைவாகச் சிரிப்பாள். பத்து வருடங்களுக்கு முன்னால் பேசிய பேச்சுகளை நினைவுபடுத்திக்க் கொண்டு சிரிப்பாள்.

”என் வாழ்க்கை மிகவும் நன்றாக இருக்கிறது. என் வீட்டுக்காரர் ரொம்ப நல்லவர். நான் இல்லை என்றால் ஒரு நாள் கூட அவரால் இருக்க முடியாது. என் குழந்தைகள் எவ்வளவு புத்திசாலிகள் தெரியுமா? அவர்களை விட்டு என்னால் ஒரு நாள் கூட இருக்க முடியாது. அம்மா… அம்மா என்று சுற்றிச்சுற்றி வந்துகொண்டே இருப்பார்கள்.”

என்று ஷோபா சொல்லும் போது தான் சோர்வுடன் சிரிப்பாள். பின்னே என்ன செய்ய முடியும்? பொய்த்தான் சொல்ல முடியுமா?

“பெரிய வேலை எனக்கு. அதன் மூலமாக கிடைத்த ஹோதாவில் திருப்தியாக இருக்கிறேன். என் வீட்டில் என் விருப்பம்போல் நிம்மதியாக இருக்கிறேன். எனக்கு வாழ்க்கையில் இனி வேண்டியது எதுவுமே இல்லை” என்று சொன்னால்!

தன்னுடைய அதிருப்தியை, வெறுமையை எல்லாம் மறைத்து வைத்தால்? ஆனால ஷோபாவுடன் நட்பு கொண்ட நாட்களில் ஒருநாள் கூட மூடி மறைத்து பேசியதில்லை. ஷோபாவும் அப்படித்தான். ஒருவர் பேச்சு மற்றவருக்குப் பிடிக்காவிட்டாலும் தாம் என்ன நினைத்தோமோ அதைத்தான் சொன்னார்கள். பின்னாளில் வந்த வாழ்க்கையில் மேலோட்டமான நட்புகள், எதிராளிக்கும் தனக்கு சந்தோஷம் தரக்கூடிய பேச்சுகளும் பழக்கமாகி விட்டன. ஷோபாவிடம் நட்பு இருந்த நாட்களில் அவை எதுவும் இருக்கவில்லை. இப்பொழுது திரும்பவும் தொடங்க வேண்டுமா? நாளை ஷோபாவை பார்க்காமல் தவிர்க்க முடியாதா?

சாந்தாவுக்கு ஷோபாவை பார்க்க வேண்டுமென்று எவ்வளவு தவிப்பாக இருந்ததோ, சந்திக்க வேண்டாம் என்றும் அவ்வளவு தீவிரமாக இருந்தது.

Series Navigationதா(து)ம்பை விட்டுவிட்டு வாலைப்பிடிக்கலாமா?
author

கௌரி கிருபானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *