தெலுங்கில் : ஒல்கா
தமிழாக்கம் : கௌரி கிருபானந்தன்
tkgowri@gmail.com
ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணிக்கு மோகன் வந்து சாந்தாவை தன் வீட்டுக்கு அழைத்து வந்தான். சாந்தாவுக்கு வாசல் கேட் அருகிலேயே ஷோபா எதிரே வந்தாள். “சாந்தா! நன்றாக இருக்கிறாயா?” என்று கையைப் பற்றிக்கொண்டாள்.
“நீ எப்படி இருக்கிறாய்?” என்று கேட்டுக்கொண்டே ஷோபாவை தலை முதல் கால்வரையிலும் பார்த்தாள் சாந்தா.
ஷோபா மிகவும் மாறி விட்டிருந்தாள். உடல் பெருத்து, மேனியின் நிறம் குறைந்திருந்தது. கண்களுக்குக் கீழே கரு வளையங்கள். ஷோபாவின் சிரிப்பு ஏன் இப்படி இருக்கிறது? உதடுகளில் ஒட்ட வைத்தது போல் இருக்கிறதே?
சாந்தா வியப்புடன் உள்ளே நடந்தாள்.
மோகன் “உட்காருங்கள் உட்காருங்கள்” என்று விழுந்து விழுந்து உபசரித்துக் கொண்டிருதான்.
“ஷோபா! சீக்கிரம் காபி கொண்டு வா” என்று ஆணையிட்டுக் கொண்டிருந்தான்.
சாந்தா உட்கார்ந்து கொண்டு அறையின் நாலாப்பக்கமும் பரிசீலிப்பது போல் பார்த்தாள். கொஞ்சம் மூச்சு விட்டுக்கொள்வதற்குள் ஷோபா காபி கொண்டு வந்தாள். மோகன், சாந்தா ஆளுக்கொரு கோப்பையை எடுத்துக் கொண்டார்கள். ஷோபா ட்ரேயைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தாள்.
“நீயும் எடுத்துக்கொள்” என்றாள் சாந்தா.
“நான் சற்றுமுன்தான் குடித்தேன்.” திரும்பவும் உதடுகளில் ஒட்டவைத்த சிரிப்பு.
“நாங்களும் இப்பொழுதுதான் எங்கள் வீட்டில் காபி குடித்துவிட்டுக் கிளம்பினோம். கால் மணி நேரம்தான் ஆகியிருக்கும்.”
“எனக்கு அத்தனை முறை குடித்து பழக்கம் இல்லை” என்றாள் ஷோபா.
“உட்கார்ந்துகொள்.”
“அப்புறம் உட்கார்ந்து கொள்கிறேன். உள்ளே அடுப்பில் பாயசம் வைத்திருக்கிறேன். தீய்ந்து விடுமோ என்னவோ. நீங்கள் இருவரும் பேசிக்கொண்டிருங்கள். அரைமணியில் வேலைமுடிந்து விடும்.” கோப்பைகளை ட்ரேயில் வைத்து, உள்ளே எடுத்துப் போனாள்.
“அவளுக்கு வேலையில் சுறுசுறுப்பு பத்தாது. பத்து மணிக்கெல்லாம் சமையலை முடித்துவிடு. உன் சிநேகிதியுடன் பேசிக் கொண்டிருக்கலாம் என்று நேற்று இரவே சொன்னன். காலையில் ஐந்து மணிக்கே எழுந்துவிட்டாள். சமையல் மட்டும் இன்னும் முடிந்தபாடு இல்லை. மதியம் ஒரு மணி வரையில் அந்த வேலை நீண்டுகொண்டே போகும்.” மோகன் சொல்லிக் கொண்டிருந்தான். சாந்தா எழுந்து சமையல் அறைக்குள் சென்றாள்.
ஷோபா ஏலக்காயைப் பொடித்து பாயாசத்தில் போட்டுக் கொண்டிருந்தாள்.
“இந்த பரபரப்பெல்லாம் எதற்கு? இப்போ இந்த பாயசம் எல்லாம் தேவையா?”
“உனக்காகத்தான். நீ என்னுடைய சிநேகிதி என்றும், எங்கள் வீட்டுக்கு வரப் போகிறாய் என்று சொன்னது முதல் அவருக்கு ஒரே பரபரப்பு. பாயசம் இருக்கட்டும். மற்றதை அங்கே பார்.”
கிண்ணங்களில் எடுத்து வைத்திருந்த கறி, கூட்டு, சாம்பார், கலவை சாதம், தயிர்பச்சடி. வடை எல்லாவற்றையும் காண்பித்தாள்.
“நீ இப்பொழுது என் கணவரின் மேலதிகாரி இல்லையா? என்று சிரித்தாள்.
“இதெல்லாம் இன்று காலையில் செய்தாயா?”
“நல்லா இருக்கிறதே? என்றைக்கோ செய்து வைத்தால் நீ சாப்பிடுவாயா?”
“எதுக்கு ஷோபா? சாந்தாவுக்கு இவை எதுவும் தேவை இல்லை. நன்றாக கடிந்துகொண்டு, கேட்டுக்கு வெளியே தள்ளிவிட்டால் போதும் என்று வீட்டுக்காரரிடம் சொல்லாமல் போனாயா?”
“சாந்தா! இன்னும் நீ அதை எல்லாம் நினைவு வைத்திருக்கிறாயா?”
“நீ மறந்து விட்டாயா?”
“எப்படி மறப்பேன்? வேத மந்திரங்களைப் போல் அவை என் வாழ்க்கையை வழி நடத்திக் கொண்டிருக்கும் போது.
“ஷோபா!”
சாந்தாவுக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை.
“சரிவிடு. அப்புறம் பேசிக் கொள்ளலாம். நீ இப்போ பெரிய அதிகாரி. மேலும் அவருக்கு பாஸ் ஆக இருப்பவள். உனக்காக இதையெல்லாம் செய்யாமல் எப்படி முடியும்? போய் ஹாலில் உட்கார்ந்து அவருடன் பேசிக்கொண்டிரு. சாப்பாடு ஆன பிறகு நாம் பேசுவோம்.” ஷோபா சாந்தாவை சமையல் அறையிலிருந்து வெளியில் அனுப்பினாள்.
ஹாலில் மோகன் சாந்தாவை ரம்பம் போட்டான். ஒரே அறுவை! தான் பார்த்து வரும் வேலை எவ்வளவு சிறப்பானது என்றும், மற்றவர்கள் எல்லோரும் வேலை செய்யாமல் எப்படி பொழுதை போக்குகிறார்கள் என்றும் விடாமல் சொல்லிக் கொண்டே போனான்.
ஷோபா எப்பொழுது சாப்பிட கூப்பிடுவாள் என்று எதிர்பார்த்துக் கொண்டே அந்த அறுவையை சகித்துக் கொண்டாள்.
ஷோபா உணவு மேஜை மீது இருவருக்கு மட்டுமே தட்டு வைத்தாள்.
“அதென்னது? மூன்று பேரும் சேர்ந்து சாப்பிடுவோம்” என்றாள் சாந்த.
“பரிமாற யாரும் இல்லை என்றால் எப்படி? மேலும் அது மரியாதை இல்லை” என்றான் மோகன்.
“அப்படி என்றால் நாங்கள் இருவரும் சாப்பிடுகிறோம். நீங்கள் பரிமாறுங்கள்” என்றாள் சாந்தா சீரியஸ் ஆக.
சாந்தா ஏதோ ஜோக் செய்து விட்டது போல் பெரிதாக சிரித்துவிட்டு தட்டை முன்னால் இழுத்துக் கொண்டான்.
சாந்தா எழுந்து நின்றுகொண்டு, “முதலில் நீங்க சாப்பிடுங்கள். நாங்கள் இருவரும் அப்புறமாக சாப்பிடுகிறோம்” என்றாள்.
“அடடா! நீங்க ஏன் எழுந்து கொண்டீங்க? ஆகட்டும் மூன்று பேரும் சாப்பிடுவோம். ஷோபா! நீயும் தட்டை வைத்துக்கொள்” என்றான் மோகன்.
சாந்தாவுக்கு மோகனுடன் சேர்ந்து சாப்பிட வேண்டுமென்று தோன்றவில்லை. ‘ஷோபா கஷ்டப்பட்டு சமைத்து பரிமாறினால் வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு அவளையே அவமானப் படுத்துவானா? அவள் வேண்டுமானால் இவனுக்கு மதிப்பு தருவாளோ என்னவோ? நான் மட்டும் மதிக்கவே மாட்டேன்.’ மனதில் நினைத்துகொண்டாள் கோபமாய்.
“பரவாயில்லை. நீங்க முன்னால் சாப்பிடுங்கள். நாங்கள் இருவரும் பேசிக்கொண்டே சாப்பிடுகிறோம்” என்று சொல்லிவிட்டு ஹாலில் உட்கார்ந்துகொண்டாள்.
என்ன செய்வது என்று தெரியாமல் மோகன் ஷோபாவைக் கடிந்து கொண்டான். “உனக்குக் கொஞ்சம்கூட மூளையில்லை. உட்காரச் சொன்னால் உடனே உட்கார வேண்டியதுதானே. பித்து பிடித்தாற்போல் அப்படி நிற்பானேன்?” மளமளவென்று நாலு வாய் அள்ளி போட்டுக்கொண்டான்.
ஷோபாவும், சாந்தாவும் சாவகாசமாக உட்கார்ந்து சாபிட்டார்கள். ஷோபாவின் சமையலை வாய் நிறைய பாராட்டிக்கொண்டே வயிறு நிரம்ப சாப்பிட்டாள் சாந்தா.
அவர்கள் சாப்பிட்டு முடிக்கும் வரையில் ஷோபா சாந்தாவிடம் ஏதாவது மரியாதை குறைவாக நடந்துகொண்டு விடப்போகிறாளே என்று குறுக்கும் நெடுக்குமாக அங்கேயே நடந்து கொண்டிருந்தான்.
சாப்பாடு ஆன பிறகு ஷோபாவும் சாந்தாவும் படுக்கை அறைக்குள் சென்றார்கள்.
“உன்னைப் பார்த்தால் ரொம்ப பொறாமையாக இருக்கிறது.” சாந்தாவை அன்பு தந்தும்ப பார்த்துக்கொண்டே சொன்னாள் ஷோபா.
“அவ்வளவு பொறாமைப்பட வேண்டிய அவசியம் இல்லை. நீ நினைக்கும் அளவுக்கு நான் சந்தோஷமாக இல்லை” என்றாள் சாந்தா கட்டில் மீது சாய்ந்து கொண்டே.
“ஏன்? எப்படி வாழ வேண்டும் நீ என்று நினைத்தாயோ அப்படித்தானே இருக்கிறாய்?”
“ஆமாம். வாழ்ந்து வருகிறேன். ஆனால் ஏதோ அதிருப்தி, கவலை. வேலைக்குப் போவது மட்டும்தானா வாழ்க்கை என்று தொன்றுகிறது. திருமணம் செய்து கொண்டிருந்தாலும் நன்றாக இருந்திருக்கும் என்று சில சமயம் தோன்றும்.”
“வேண்டாம். அந்தக் காரியத்தை மட்டும் செய்யாதே. திருமணம் செய்துகொள்ள வேண்டாம்” சாந்தா எங்கே கல்யாணம் செய்து கொண்டு விடுவாளோ என்பதுபோல் அவசர அவசரமாக சொன்னாள் ஷோபா.
“நீ சந்தோஷமாக இல்லையா ஷோபா?” சாந்தா கேட்டாள்.
“சந்தோஷமா? அப்படி என்றால் என்ன? சாந்தா! இருபது வயது வரை என்னைப்பற்றி நான் என்ன நினைத்துக் கொண்டேனோ, என்னைப் பற்றி நீங்கள் எல்லோரும் என்ன நினைத்துக் கொண்டீர்களோ அவை எல்லாம் உண்மையாக இல்லாமல் போய் விட்டன. அந்த நாட்களில் நீங்கள் என்னைப் பற்றி என்ன நினைத்து வந்தீங்க? நான் மிகவும் புத்திசாலி என்றும், எந்த வேலையையும் சுறுசுறுப்பாக செய்வேன் என்றும், எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் உடனே தீர்வு கண்டு பிடித்து விடுவேன் என்றும், எப்படிப் பட்டவர்களாக இருந்தாலும் என் பேச்சால் சமாதானப்படுத்தி விடுவேன் என்றும் நீங்கள் எல்லோரும் சொல்லி வந்தீங்க. நானும் அப்படித்தான் நினைத்து வந்தேன். என்மீது எனக்கு ரொம்ப நம்பிக்கை இருந்து வந்தது. இன்று அந்த நான் எஞ்சியிருக்கவில்லை. வடிகட்டின முட்டாள் நான். சுறுசுறுப்பு பத்தாது. எனக்கு பேசத் தெரியாது. யாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியாது. குழந்தைகளை வளர்க்கத் தெரியாது.” ஷோபாவின் விழிகளில் நீர் சுழன்றது.
சாந்தா ஷோபாவின் தோளில் கையைப் பதித்தாள். “அழாதே ஷோபா!”
“என்னை சொல்ல விடு. பன்னிரண்டு ஆண்டுகளாக இந்த வார்த்தைகளை பகிர்ந்து கொள்வதற்குக் கூட யாரும் இல்லை. உனக்குப் புரியும் என்பதால் சொல்கிறேன். உள்ள விஷயத்தை சொல்லட்டுமா? அவர் வடிகட்டின முட்டாள். ஒன்றும் தெரியாது. பட்டிக்காட்டு ஆசாமி. அவரைவிட நான் புத்திசாலி என்று முதலிலேயே கண்டுபிடித்து விட்டார். அடிக்கடி என்னைத் தாழ்த்திப் பேசுவதுடன், என்னைவிட தான் உயர்ந்தவன் என்று நிரூபித்துக் கொள்வதையே லட்சியமாக வைத்துக் கொண்டார். அந்த விஷயம் தெரியாமல் நான் அவரை மாற்றுவதற்கு முயற்சி செய்தேன். தெரிந்த பிறகு இனி செய்வதற்கு ஒன்றுமில்லை என்று வாயை மூடி கொண்டு விட்டேன்.. எப்படி எல்லாம் அதிகாரம் செய்வார் தெரியுமா?”
“நீ இப்படி பேசுவாய் என்றும், உன் வாழ்க்கை இப்படி இருக்கும் என்று நான் கொஞ்சம் கூட நினைக்கவில்லை. கணவர், குழந்தைகளுடன் நீ சந்தோஷமாக இருப்பாய் என்று நினைத்தேன்.” சாந்தாவின் குரலில் கவலை வெளிப்பட்டது.
“சந்தோஷம்! அது ஒன்றுதான் குறைச்சல்! குழந்தைகள் குட்டிப் பிசாசுகள். அவர்கள் முன்னால் என்னை குறைத்து பேசுவது அவருடைய பொழுதுபோக்கு. மூன்று பேரும் சேர்ந்து என்னை ஒரு புழுவுக்கு சமமாக மதிப்பார்கள். அன்று நீ என்னை திருமணம் எதுக்கு செய்து கொண்டாய் என்று அழுத போது எனக்குக் கோபம் வந்தது. ஆனால உன் அழுகைக்குப் பின்னால் என்மீது உனக்கு எவ்வளவு பிரியம் இருக்கிறது என்று அப்புறமாய் புரிந்தது.”
“இப்போது என்ன செய்யப் போகிறாய்?”
“என்ன செய்ய முடியும்? படிப்பை நாசமாக்கி விட்டேன். இப்போ என்ன வேலை கிடைத்து விடும்? இப்படியே வாழ் வேண்டியதுதான். எனக்கு இப்பொழுது உன்னைப் போல் நிம்மதியாக வேலை பார்த்துக்கொண்டு தனியாய் வாழ் வேண்டுமென்று இருந்தாலும் அது எப்படி சாத்தியம்?”
“ஏன் முடியாது? எனக்கு என் வாழ்க்கை நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் வாழ்நாள் முழுவதும் இந்த வேலை மட்டும்தான் என்றால் சலிப்பு வருகிறது. மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியவில்லை. வேலையிலும் பிரச்சனைகள் இல்லை என்று சொல்ல முடியாது. மேலதிகாரி என்பதால் மதிப்பது போல் நடிப்பார்கள். எனக்குப் பின்னால் ஏதேதோ பேசுவார்கள். எனக்குத் திருமணம் ஆகவில்லை என்றும், நான் நல்லவள் இல்லை என்றும், நிறைய பேருடன் சுற்றிக் கொண்டிருக்கிறேன் என்றும். நான் இதையெல்லாம் பொருட்படுத்தவில்லை என்றாலும் இது போன்ற சூழ்நிலையில் வாழ வேண்டும் என்றால் சலிப்பாக இருக்கிறது.”
“என் கணவருக்கு உன்னிடம் ரொம்ப அட்மிரேஷன். உன்னுடைய புத்திசாலித்தனத்தை பற்றி அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார்.”
“உன் புத்திசாலித்தனத்திற்கு முன்னால் நான் எந்த மூலைக்கு? நீ பாடம் சொல்லித் தரவில்லை என்றால் நான் பரீட்சையில் பாஸாகி இருக்க மாட்டேன். கல்லூரியில் என்னுடன் சேர்த்து மற்ற பெண்களின் விருப்பம் என்னவென்று உனக்குத் தெரியாதா? ஷோபாவைப் போல் இருக்கவேண்டும்! எல்லோரும் அப்படித்தான் நினைத்து வந்தார்கள். நான் மட்டும் எப்படியாவது ஏதாவது ஒரு விஷயத்தில் உன்னை விட ஒரு படி முன்னால் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். நீ மட்டும் இல்லாமல் போனால் நான் தான் முதல் இடம். ஆனால் நீ இருந்தால் உனக்குப் பிறகு தான் எல்லோரும்.”
“அந்த நாட்களை நினைவுப் படுத்தாதே சாந்தா! அதையெல்லாம் நினைத்து எத்தனை இரவுகளை தூக்கமில்லாமல் கழித்தேன் என்று உனக்குத் தெரியாது.”
“ஆனால் ஷோபா! நீ இப்படி மாறியது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. நீ எப்போதும் உன்னைப் பற்றி யோசித்தது இல்லை. உன் பெற்றோர்கள் என்ன சொன்னாலும் அதன்படி நடந்து கொண்டாய். அதற்காக ஒருநாளும் வருத்தப்பட்டதில்லை. அவர்களுக்காக எத்தனையோ விஷயங்களில் சந்தோஷமாக சமாதானம் செய்து கொண்டாய். விரும்பித்தான் திருமணம் செய்து கொண்டாய். இப்பொழுது எதற்காக அமைதில்லாமல் இருக்கிறாய்? உன் பெற்றோர்கள் ஆட்சி செலுத்தியது போலவே உன் கணவர் உன்னை அதிகாரம் பண்ணுகிறார். எதற்காக இப்போ உன்னால சமாதானம் ஆக முடியவில்லை?”
“உண்மைதான். என் பெற்றோர்கள் சொன்னபடி கேட்க வேண்டுமென்று எத்தனையோ விஷயங்களில் நான் விட்டுக்கொடுத்தேன். அப்போது நான் வருத்தப்படவில்லை. ஏன் என்றால் என்னுடைய அம்மா உண்மையிலயே என்மீது அன்பு செலுத்தினாள். அந்த அன்பு எந்த அளவுக்கு என் வாழ்க்கைக்கு உதவும் என்று நான் யோசிக்காமல் போனது என்னுடைய தவறுதான். ஆனால் அவளுடைய அன்பு பொய் இல்லை. அவள் என்னை நேசித்தாள். பாசம் செலுத்தினாள். என்னை பலவிதமான வேலைகளை செய்யக்கூடாது என்று சொல்வதில் என்னுடைய நலன்தான் பொதிந்து இருந்தது. தனக்குத் தெரிந்த வரையில் அதுதான் எனக்கு நன்மை. தனக்கு இருந்த அனுபவத்தில் என்னுடைய வாழ்க்கையை நல்லபடியாக அமைத்துத் தர வேண்டும் என்று நினைத்தாள். தன்னுடைய அனுபவம் எனக்கு உதவி செய்யாது என்று அவளுக்கு தெரியாது. எனக்கும் தெரிந்திருக்கவில்லை. அதனால் அம்மா சொன்னதுபோல் செய்வதில் எனக்கு எந்த கஷ்டமும் இருக்கவில்லை,
திருமணம் செய்துகொண்டு, என் புத்திசாலித்தனத்துடன் குடும்பத்தை சுவர்க்கமாக மாற்றிக்கொண்டு, கணவனின் ஒப்புதலுடன் மேற்கொண்டு படிக்கலாம் என்று நினைத்திருந்தேன். கணவன், குழந்தைகளின் அன்பு இன்னும் உயர்வானவை என்று நினைத்தேன். வீட்டிலும், வெளியிலும் கூட யாரும் சுட்டிக்காட்ட முடியாத அளவுக்கு உயர்வானவள் என்று பெயர் வாங்க நினைத்தேன். அது எவ்வளவு பேராசை என்று இப்போது புரிந்து விட்டது. வீட்டிலும், வெளியிலும் எல்லா இடத்திலேயும் பெண்ணுக்கு அவமானங்கள்! அவற்றிலிருந்து தப்பித்துக்கொள்ள நினைத்தாலும் முடியாது. என் தாய் தன்னுடைய அஞ்ஞானத்தினால், அன்பு என்ற பெயரில் என்னை அவமானம் செய்தாள்.
இங்கே இவனுக்கு என் மீது காதல் இல்லை. அதிகாரம் பண்ணுவதைத் தவிர அவனுக்கு எதுவும் தெரியாது. அவன் பண்ணும் அவமானங்களுக்கு எந்த முக்காடும் இருக்காது. அதன் அவசியமும் இல்லை. இத்தனை வெளிப்படையாக தென்பட்டால் தவிர எனக்குப் புரியவில்லை. அப்படி இருக்கிறது என் மூளை. நீ கூட என்னை புத்திசாலி என்று சொல்வதைக் கேட்கும் போது சிரிப்புதான் வருகிறது. நான் வெறும் மக்கு.”
ஷோபாவின் கணக்ளிளிருது கண்ணீர் உதிர்ந்த போது சாந்தாவுக்கு எப்படியோ இருந்தது.
“அவமானங்களிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியாது என்று சொன்னாய். அது உண்மை இல்லை ஷோபா. நாம் போராட வேண்டும். அந்த அவமானங்களிலிருந்து வெளியேறுவதற்கு கோபத்துடன் பிடிவாதத்துடன் முயற்சி செய்ய வேண்டும். அப்படி போராடுவது நன்றாக இருக்கும். அந்த சந்தோஷத்தின் அனுபவம் எப்படி இருக்கும் என்று உனக்கு தெரியாது. நீ ஒருநாளும் போராடியதே இல்லை. இப்பொழுதாவது உனக்கு வேண்டியது எதுவோ அதற்காக முயற்சி செய்.”
“இப்பொழுது எனக்கு என்ன வேண்டுமென்று கூட எனக்குத் தெரியாது.” இயலாமையுடன் சொன்னாள் ஷோபா.
“தெரிந்துகொள். தெரிந்துகொள்ள முயற்சி செய். இப்பொழுது நானும் அந்த முயற்சியில்தான் இருக்கிறேன். எனக்கு இன்னும் வேறு ஏதோ வேண்டும். நான் இன்னும் எதையோ செய்ய வேண்டும்.”
“ஷோபா! வேலைக்காரி வந்து விட்டாள்.” மோகன் பெரிதாக குரல் கொடுத்தான்.
“அம்மாடி! மணி ஐந்தாகி விட்டதா?”
சாந்தாவும் மணியைப் பார்த்துக்கொண்டு பரபரப்புடன் எழுந்து கொண்டாள்.
“ஷோபா! நாளை மாலை நீ என் வீட்டுக்கு வாயேன். நீ மட்டும் தனியாக” போகும் போது கேட்டாள்.
“எதுக்கு?” ஷோபா சிரித்தாள். இந்த முறை ஷோபாவின் சிரிப்பு கொஞ்சம் நன்றாக இருப்பது போல் தோன்றியது சாந்தாவுக்கு.
“சும்மாதான். எத்தனை வருடங்களுக்குப் பிறகு சந்திக்கிறோம். அடுத்த ஞாயிறு வரை காத்திருக்கணும் என்று தோன்றவில்லை. நாளை மாலையில் நானே வந்து வீட்டுக்கு அழைத்துப் போகிறேன். சரிதானே.”
ஷோபா சந்தோஷத்துடன் ஒப்புக்கொண்டாள்.
*****
“என்ன சொல்கிறாள் உன் சினேகிதி?”
மோகனின் கேள்விக்கு பதில் சொல்ல ஷோபாவுக்கு பிடிக்கவில்லை. மோகன் கேட்கும் தோரணை அவளுக்கு என்றுமே பிடித்தது இல்லை. ஏதோ ஒரு ஏளனம், குத்தல் பொதிந்து இருக்கும், அவன் கேட்கும் ஒவ்வொரு கேள்வியிலும். சமையல் ஆகிவிட்டதா போன்ற கேள்விகளைக் கூட அவனுக்கு சாதரணமாக கேட்கத் தெரியாது. சாதரணமாக கேட்பது என்றால் அது மனைவியை மதிப்பது போல் ஆகி விடும் என்று அவன் நினைக்கிறான் போலும்.
“என்ன பதிலையே காணும்? காது செவிடாகி விட்டதா?”
“என்ன சொல்லப் போகிறாள்? கல்லூரி நாட்களைப் பற்றி பேசிக் கொண்டோம். நாளைக்கு என்னை அவள் வீட்டுக்கு அழைத்துப் போவதாகச் சொன்னாள்.”
“எதுக்கு? இன்றைக்குதானே சந்தித்து இருக்கீங்க. அவளுடன் ரொம்பவும் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம்.”
“அதென்னது? அவள் மிகவும் புத்திசாலி என்று நீங்கதானே சொன்னீங்க? நட்பு வளர்த்துக் கொண்டால் என்ன தவறு?”
“புத்திசாலிதான், இல்லை என்று சொல்லவில்லை. திருமணம் ஆகவில்லை. யாரையும் பொருட்படுத்தத் மாட்டாள், ஏதோ தொடுப்பு இருக்கு என்று பேசிக்கொள்வார்கள். நமக்குத் தெரியாது. இருந்தாலும் அவளுடன் ரொம்பவும் ஈஷிக்கொண்டு இருப்பானேன்? நம்முடைய எல்லையில் நாம் இருக்கணும்.”
ஷோபா அருவருப்புடன், கோபத்துடன் பேசாமல் படுத்துக்கொண்டாள்.
மோகன் இப்படி சொன்னான் என்று ஷோபா சொன்னபோது சாந்தா கோபத்தால் நடுங்கிவிட்டாள்.
“திருமணம் ஆகாத பெண்கள் புத்திசாலியாக இருந்தால், அது அவர்களுக்குப் பயன்பட்டால் அவள் புத்திசாலி என்பார்கள். ஆனால் அவளை நம்ப மாட்டார்கள். சந்தேகத்துடன் பார்ப்பார்கள். திருமணம் ஆன பெண்ணிடம் புத்திசாலித்தனம் இருந்தால் முடிந்த வரையில் அதனை அடக்கி வைக்க வேண்டும் என்று பார்ப்பார்கள். திருமணம் ஆன பெண்கூட புத்திசாலியாக கண்டுகொள்ளப்படுகிறாள்… அங்காங்கே.
ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் நினைவில் வைத்துக் கொள். அவளுக்குக் கிடைத்த அங்கீகாரத்தை விட நூறு மடங்கு புத்திசாலித்தனம் அவளுக்கு இருக்கும். அந்த திறமையை அடக்கி வைப்பது சாத்தியம் இல்லாமல், மொதலுக்கே மோசம் வரக்கூடும் என்ற பயத்தில் சிறிய அளவில் அவளுக்கு வாய்ப்பு கொடுப்பார்கள். அதற்கே பூரித்துப் போய் அந்த இடத்திலேயே நிலைத்து நின்று விடுவார்கள் பெண்கள். பெண்ணின் சக்தியில், திறமையில் பாதிக்கு மேல் சமுதாயத்துடன், வீட்டில் இருப்பவர்களுடன் போராடுவதற்கே சரியாக இருக்கிறது.”
சாந்தாவின் கோபத்தை ஷோபாதான் சமாதானப் படுத்தினாள். ஷோபாவுக்கு சாந்தாவின் வீடு ரொம்பவும் பிடித்து விட்டது. இருவரும் சேர்ந்து பல விஷயங்களைப் பேசிக் கொண்டார்கள். ஒருவர் வாழ்க்கையை அடுத்தவர் புரிந்து கொண்டார்கள்.
”என்ன செய்ய வேண்டும்? நாம் என்ன செய்ய வேண்டும்?” இதே கேள்வியை தவிப்புடன் பலமுறை கேட்டுக்கொண்டார்கள். பதில் கிடைக்கும் வரையில் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டுமென்று முடிவு செய்தார்கள்.
******
மூன்று மாதங்களாக சாந்தாவின் நட்புடன் புதிய உற்சாகத்தை, தெம்பை கூட்டிக் கொண்டாள் ஷோபா. இருவருமாக பேசிக்கொண்டு, ஷோபா சட்டம் படித்தால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்தார்கள்.
மோகனிடம் சொல்லாமலேயே அந்த முடிவை எடுத்து விட்டாள் ஷோபா. கடந்த பத்து ஆண்டுகளில் தான் மேற்கொண்டு படிக்க விரும்புவதாக ஷோபா சொல்வதும், மோகன் அதற்கு பலமாக எதிர்ப்பு தெரிவிப்பதும் பல முறை நடந்துவிட்டது. இந்த முறை அவனை சம்மதிக்க வைக்க வேண்டும் என்ற முயற்சியை கைவிட்டாள். அன்று யூனிவர்சிடிக்கு போய் பீசு கட்டிவிட்டு வர வேண்டுமென்று முடிவு செய்தார்கள்.
“நான் ஆபீசுக்குப் போய் ஒரு மணி நேரம் வேலை பார்த்துவிட்டு வருகிறேன். நீ பதினோரு மணிக்கெல்லாம் தயாராக இரு” என்றாள் சாந்தா.
“குழந்தைகள் மூன்று மணிக்கு வந்து விடுவார்கள். நீ கூடிய சீக்கிரம் வந்து விடு” என்றாள் ஷோபா. எவ்வளவு சீக்கிரமாக வர வேண்டும் என்று நினைத்தாலும் சாந்தாவால் முடியவில்லை. லீவ் போட்டிருந்தாலும் நன்றாக இருந்திருக்கும் என்று நினைத்துக்கொண்டே வேலையைச் செய்ய வேண்டியதாயிற்று.
பண்ணிரெண்டரை மணிக்கு அலுவலகத்தை விட்டுக் கிளம்பியவள் ஆட்டோவை எடுத்துக்கொண்டு வந்து விட்டாள். ஷோபா வாசலிலேயே காத்திருந்தாள். ஆட்டோவில் சாந்தா வருவதைப் பார்த்துவிட்டு அவசரமாய் வீட்டை பூட்டி விட்டு வந்தாள்.
சாந்தா தாமதத்திற்கான காரணத்தைச் சொல்லி கொண்டிருந்தாள். மூன்றுமணிக்குள் வீட்டுக்கு வந்து சேரவில்லை என்றால் குழந்தைகள் செய்யும் ரகளையைப் பற்றி, அவர்களின் பசியைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தாள் ஷோபா.
ஆட்டோ திடீரென்று நின்றது. இரண்டுபேரும் வெளியே எட்டிப் பாத்தார்கள். அவர்களுடைய ஆட்டோ மட்டுமே இல்லை. சாலை இருபக்கமும் ட்ராபிக் நின்று விட்டிருந்தது. சாலையின் நடுவில் பெரிய ஊர்வலம் போய்க் கொண்டிருந்தது. எல்லாம் பெண்கள்தான்.
“பெண்களின்மீது கொடுமைகள் நசிக்க வேண்டும்.
வரதட்சிணை கொலைகள் நிற்க வேண்டும்.
தற்கொலைகள் எல்லாம் கொலைகள்தான், கணவன் என்றால் வாழ்நாள் முழுவதும் எதிரியா?
அடிமைக்கும் பெண்ணுக்கும் வித்தியாசம் இல்லாத நிலைமை!
இனிமேலும் நீடிக்கக் கூடாது. பீடி தொழிலாளர்களின் விருப்பங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். நியாமான கூலி தரப்பட வேண்டும்.
வானத்தில் பாதி எங்களுக்குச் சொந்தம். சமுதாயத்தில் சம உரிமை பெண்களுக்கு!”
இதுபோன்ற முழக்கங்களுடன் ஊர்வலம் முன்னேறிக் கொண்டிருந்தது. ஊர்வலத்தில் பெரும்பாலும் பெண் தொழிலாளர்கள்தான் இருந்தார்கள்.
“மாலை நான்கு மணிக்கு நடக்கவிருக்கும் கூட்டத்திற்கு பெண்கள் எல்லோரும் கட்டாயம் வாருங்கள்.” என்ற அட்டைகளை பிடித்துக்கொண்டு நடந்து கொண்டிருந்தார்கள்.
சாந்தா தன்னையும் அறியாமல் ஷோபாவின் கையை பற்றிக் கொண்டாள். ஷோபா அந்தக் கையை மேலும் அழுத்தமாக பிடித்தாள். அந்த ஊர்வலத்தின் உற்சாகம் காற்று வழியாய் அலையாய் அவர்களுடைய மூச்சுக்காற்றில் கலந்து அற்புதமான உணர்வை ஏற்படுத்தியது. மெதுவாக டிராபிக் நகர்ந்தது.
யூனிவர்சிட்டியில் வேலை முடிவதற்கு மூன்று மணி ஆகிவிட்டது.
“கூட்டத்திற்குப் போகலாமா?” எங்கே ஷோபா வரமாட்டேன் என்று சொல்லி விடுவாளோ என்று பயந்துகொண்டே கேட்டாள் சாந்தா.
கூட்டதிற்குப் போகணுமா வேண்டாமா என்ற கேள்விக்கே இடமில்லாமல், வேண்டாமே என்ற வார்த்தையை தவிறிப்போய்கூட சொல்லாமல், அந்த எண்ணம் கூட வரவிடாமல் கூட்டத்திற்கு போக வேண்டும் போல் இருந்தது சாந்தாவுக்கு.
சாந்த அந்த கேள்வியை கேட்காமல் போய் விடுவாளோ என்று பயந்துவிட்டாற்போல், “போகலாம். கட்டாயம் போகலாம்” என்றாள் ஷோபா. சாந்தா நிம்மதியாக சிரித்தாள்.
“பின்னே குழந்தைகள்?” சாந்தாவால் கேட்காமல் இருக்க முடியவில்லை.
“எப்படியாவது சமாளித்துக் கொள்வார்கள். ஐந்துமணிக்கு அவர் வந்து விடுவார்.”
“சாவி உன்னிடம் இருக்கிறது போல் இருக்கே.”
“பூட்டை உடைத்துக் கொள்வார். நீ சும்மாயிரு.” சலித்துக் கொண்டாள் ஷோபா.
அவர்கள் போகும் போது கூட்டம் தொடங்கி விட்டது. யாரோ ஒரு பெண் மைக்கின் முன்னால் வந்து, “இப்போ பீடி தொழிலாளி சீதா பேசுவாள்” என்று சொன்னாள்.
சீதா எழுந்து மைக் அருகில் வந்தாள்.
“பீடி தொழிலாளர்கள் மூன்று மாதங்களாக வேலை நிறுத்தம் செய்து வருகிறோம். நாங்கள் எதற்காக வேலை நிறுத்தம் செய்கிறோம் என்றும், வேலை நிறுத்தம் செய்தால் வீட்டில் எங்கள் நிலைமை என்னவென்றும் சொல்லத்தான் நான் இந்த கூட்டத்திற்கு வந்தேன். ஒரு நாளுக்கு ஆயிரம் பீடிக்கள் தயாரித்தால் ஒன்பது ரூபாய் கொடுப்பார் முதலாளி. நாங்கள் பதினைந்து ரூபாய் தரச்சொல்லி கேட்கிறோம். நாங்கள் வீட்டிலேயே உட்கார்ந்து வேலையைச் செய்வோம். இது ஒரு வேலை என்பது போல் கணக்கில் வராது. வேலைக்கு போகிறவர்களுக்கு, பேக்டரியில் வேலை பார்ப்பவர்களுக்கு இருக்கும் எந்த சலுகைகளும் எங்களுக்கு இருக்காது. அவை எங்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதால், நாங்கள் குறிப்பிட்ட கம்பெனியில் வேலை செய்வது போல் அடையாள அட்டைகளை தரச்சொல்லி கேட்டோம். இதில் அநியாயம் என்ன இருக்கிறது? அட்டைகளை ஏன் தரக் கூடாது? பெண்கள் எல்லோரும் சேர்ந்து வேலை நிறுத்தம் செய்தால் எல்லோருக்கும் இளக்காரமாக இருக்கிறது. வாய்க்கு வந்தபடி எங்களை கீழ்த்தரமாக பேசுகிறார்கள். ரவுடீக்களை எங்கள்மீது ஏவுகிறார்கள். நாங்கள் நல்லவர்கள் இல்லை என்று பிரச்சாரம் செய்கிறார்கள். நாங்கள் யூனியன் வைக்கக் கூடாதாம். பெண்களுக்கு யூனியன் எதற்கு என்று கேட்கிறார்கள். பெண்கள் வேலை செய்ய வில்லையா? வேலை செய்பவர்களுக்கு யூனியன் இருக்காதா?
பீடி தயாரிக்கும் வேலையை நாங்கள் எதற்காக செய்கிறோம்? வீட்டில் சாப்பிட்டு நிம்மதியாக உட்கார்ந்து இருக்க முடியாதா? வீட்டில் சமையல் செய்து, துணிகளைத் தோய்த்து, குழந்தைகளை கவனித்து வீட்டு வேலைகளை எல்லாம் செய்து முடித்த பிறகும் நாங்கள் ஏன் பீடி தயாரிக்கும் வேலையில் ஈடுபடுகிறோம்? இது மற்றவர்களுக்கு புரியாவிட்டாலும், எங்கள் வீட்டு ஆண்களுக்குப் புரிய வேண்டும் இல்லையா? அவர்களுக்கும் புரியவில்லை. அவர்களுடைய வருமானத்தை குடித்து கும்மாளமடித்து செலவழித்து விடுவதால், பட்டினி இருக்க முடியாமல், குழந்தைகளை பட்டினி போட முடியாமல் பீடி தயாரிப்பவர்கள் இருக்கிறார்கள். ஆண்கள் சல்லிக்காசு சாம்பாதிக்கா விட்டாலும் பீடி தயாரித்து குடும்பத்தை நடத்தி வரும் பெண்கள் இருக்கிறார்கள்.
ஆண்கள் தனியாக கஷ்டப்படுவதைப் பார்த்து சகித்துக்கொள்ள முடியாமல், அவர்களுடைய கஷ்டத்தில் பங்கு பெறவேண்டும் என்ற எண்ணுபவர்கள் இருக்கிறார்கள். ஏதாவது ஒரு செலவுக்கு, மருந்து, மாத்திரை வாங்குவதற்கு உதவும் என்று வேலை செய்து வருகிறோம். ஆனால் இன்று நாங்கள் வேலை நிறுத்தத்தை மேற்கொண்டால் எங்கள் குடும்பத்தில் இருப்பவர்களே தடை போடுகிறார்கள்.
என்னுடைய விஷயத்தையே எடுத்துக்கொள்ளுங்கள். என் வீட்டுக்காரனுக்கு யூனியன் என்றால் ஆகாது. வேண்டுமானால் வீட்டில் உட்கார்ந்துகொண்டு பீடி தயாரித்துக்கொள். ஆனால் வீட்டு வாசற்படியைத் தாண்டக் கூடாது என்று தடை போட்டான். சிலநாள் அவனுக்குத் தெரியாமல் யூனியன் வேலைகளை செய்தேன். தெரிந்த பிறகு அடித்து துன்புறுத்தினான். ஆனாலும் நான் சும்மா இருக்கவில்லை. வீட்டை விட்டு வெளியே தள்ளினான். திரும்பவும் வீட்டுக்குள் நுழைந்தேன். தினமும் வசவுகளும் உதையும் தான். இப்போது நீ பீடி தயாரிக்கவே கூடாது என்கிறான். நான் ஏன் சும்மா இருக்க வேண்டும்? எனக்கு வந்த வேலையை நான் ஏன் செய்யாமல் இருக்க வேண்டும்? என் வேலையின் மீது அவனுடைய அதிகாரம் என்ன? எனக்கு இரண்டு முதலாளிகளா? எந்த முதலாளியின் அதிகாரத்தையும் நான் எதற்காக சகித்துக் கொள்ள வேண்டும்?
நீங்கள் எல்லோரும் கைகளைத் தட்டுவது கேட்கிறது. நான் நன்றாக பேசுவேன் என்று எங்கள் யூனியனில் எல்லோரும் சொல்லுவார்கள். இங்கே உங்கள் எல்லோரிடம் முதலாளியிடம் போராடுங்கள் என்று சொன்ன நான், எதிர்த்து நில்லுங்கள் என்று சொன்ன நான், வீட்டுக்கு போன பிறகு கணவனிடம் அடியும் உதையும் வாங்க வேண்டும். இதுதான் நம்முடைய நிலைமை. இதையும் நாம் எதிர்த்து நிற்க வேண்டும். நாம் எல்லோரும் சேர்ந்து நம்மீது அதிகாரம் செய்பவர்களை எதிர்த்து போராடவேண்டும்.”
அவள் பிரசங்கம் இதே ரீதியில் போய்க் கொண்டிருந்தது. அங்கே இருந்த பெண்களின் மனதில் ஏதோ சஞ்சலனம். என்ன இந்த வாழ்க்கை? வீட்டிலும் வெளியிலும் சுரண்டல்களுக்கும், அவமானங்களுக்கும் ஆளாக வேண்டியதுதானா? எப்போதைக்கப்போது எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு சமாதானமாக போக வேண்டியதுதானா?
எதற்காக சமாதானமாக போக வேண்டும்? அதனால் கிடைத்தது என்ன? போராடுவதால் இழக்கப் போவது என்ன?
இழப்பதற்கு பெண்களுக்கு என்ன இருக்கிறது?
சொத்தா, மதிப்பா, அன்பா, காதலா எது இருக்கிறது?
கணவனுக்கோ, தந்தைக்கோ, மகனுக்கோ அடங்கி இருக்கும் வரையில் எல்லாம் இருப்பது போலவே இருக்கும்.
அடங்கி இருக்கக் கூடாது என்று நினைத்த அடுத்த கணமே எல்லாம் போய் விடும். உயிரைக் கொடுத்து வளர்த்த குழந்தைகளின் மீதுகூட உரிமை இருக்காது.
என்ன இருக்கிறது இழப்பதற்கு!
அவமானங்கள் போய் விடும், வசவுகளும், உதைகளும், மறுப்புகளும் போய் விடும்.
சாந்தா, ஷோபா புது விதமான உத்வேகத்துடன் நிரம்பி இருந்தார்கள். கூட்டம் முடிந்த பின்பும் அங்கிருந்து நகர வேண்டுமென்று அவர்களுக்குத் தோன்றவில்லை.
“ஷோபா! நான் என்ன செய்ய வேண்டுமென்று எனக்குத் தெரிந்துவிட்டது. என்னுடைய அதிருப்தியின் காரணமும் புரிந்துவிட்டது. என் ஒருத்திக்காக நான் போராட்டம் செய்வது முக்கியம் இல்லை. பெண்கள் எல்லோருக்காகவும் சமுதாயத்துடன் போராட வேண்டும். எல்லோரும் சேர்ந்து எல்லோருடைய கௌரவத்திற்காக போராட வேண்டும்.”
சாந்தாவின் கண்களில் புதிய ஒளி! புதிய லட்சியத்தை கண்டுபிடித்துவிட்ட திருப்தி.
‘நான் கூட எனக்காக போராட்டத்தை தொடங்க வேண்டும்.” நினைத்துக் கொண்டாள் ஷோபா.
இருவரும் வெளியில் வந்தார்கள். சாந்தா மணியைப் பார்த்தாள். இரவு ஒன்பது ஆகிவிட்டது.
“மோகன் ரகளை செய்வானோ என்னவோ? மிகவும் தாமதமாகி விட்டது. என்ன செய்யப் போகிறாய்?” கவலையுடன் கேட்டாள் சாந்தா.
“ரகளை செய்ய வேண்டியது நான். தாமதமானது என்னுடைய வாழ்க்கை! நான் உடனே போராட்டத்தைத் தொடங்க வேண்டும். இனி தாமதம் செய்ய மாட்டேன். எது எப்படி போனாலும் தாமதம் செய்யமாட்டேன். நான் என்ன செய்ய வேண்டுமோ எனக்குப் புரிந்து விட்டது.”
சாந்தா சந்தோஷத்துடன் ஷோபாவை அணைத்துக்கொண்டாள். அவர்களுடைய உற்சாகத்தைப் பார்த்து அன்று இரவு சீக்கிரமாக விடிய நினைப்பது போல் கருத்த வானத்தில் மின்னல்கள் மின்னின.
(முற்றும் )
- காலநிலையும் அரசியலும்
- யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் – 12
- நாசாவின் காஸ்ஸினி விண்ணுளவி முதன்முதல் சனிக்கோளின் சுற்று வளையத்தை ஊடுருவி ஆய்வு செய்கிறது.
- சரியும் தராசுகள்
- ரிஷி((லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- இரு கோடுகள் (நான்காம் பாகம்) -நிறைவுப் பகுதி
- பூமிக்கு ஆபத்து? (அதிர்ச்சி தகவல்)
- கடன் அட்டை, ஏடிம் அட்டை ஹேக்கிங்
- அறிவியல் கதை – எனக்கு ஒரு மகன் பிறந்தான்
- கனவு : இலக்கிய நிகழ்வு
- பாரதியாரின் நவீனத்துவம்
- வெண்ணிற ஆடை
- சோ – மானுடத்தின் பன்முகம்
- தொடுவானம் 148. கலகலப்பான கிராமம்
- உமர் கயாம் ஈரடிப் பாக்கள் -2 & 3
- திரும்பிப்பார்க்கின்றேன் படைப்பாளிகளை ஊக்குவித்த தி.க. சிவசங்கரன்
- இயக்குனர் மிஷ்கின் நடத்தும் ஒருநாள் பயிற்சிப் பட்டறை. 18-12-2016