யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் – 12

author
0 minutes, 40 seconds Read
This entry is part 2 of 17 in the series 11 டிசம்பர் 2016

பி.ஆர்.ஹரன்

 

மத்திய அரசில் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சராகப் பதவி வகித்து பணிபுரிந்து வரும் திருமதி மேனகா காந்தி அவர்கள் மிகவும் ஆர்வமும் ஈடுபாடும் கொண்ட பிராணிகள் நல ஆர்வலர் என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தி. கோவில்கள், சர்க்கஸ்கள் மற்றும் தனியார் வசம் உள்ள சிறைப்படுத்தப்பட்ட யானைகளின் பிரச்சனைகளை அவர் மிகவும் கூர்ந்து கவனித்து வருகிறார். இந்திய விலங்குகள் நலவாரியத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர் என்பதோடு மட்டுமல்லாமல், தானும் “விலங்குகளுக்கான மக்கள்” (PFA – People For Animals) என்கிற அமைப்பையும் நடத்தி வருகிறார்.

 

கேரள மாநிலக் கோவில்களில், குறிப்பாகக் குருவாயூர் கோவில் மற்றும் திருச்சூர் பூரம் திருவிழா ஆகியவற்றில் சிறைப்படுத்தப்பட்ட யானைகள் படும் துன்பத்தைப் பற்றி “Gods in Shackles” என்கிற ஆவணப்படம் தயாரித்து வெளியிட்ட கனடா நாட்டு பத்திரிகையாளர் சங்கீதா ஐயர் தில்லியில் தன் ஆவணப்படத்தை வெளியிட்டபோது மேனகா காந்தியைச் சந்தித்து அவரிடம் கோவில் யானைகள் பற்றிப் பேசியுள்ளார். ஆவணப்படம் மேனகா காந்தி முன்னிலையில்தான் தில்லியில் திரையிடப்பட்டது. இந்த ஆவணப்படம் சமீபத்தில் கோவாவில் நடந்த இந்திய சர்வதேச திரைப்பட விழாவிலும் (IFFI – International Film Festival of India)  திரையிடப்பட்டது.

 

அதே போல கோவில் யானைகள் நலன் வேண்டி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கும் WRRC அமைப்பின் தலைவர் சுபர்னா கங்கூலியும் மேனகா காந்தியுடன் தொடர்பில் உள்ளார்.

 

மேனகா காந்தி வனத்துறை அமைச்சருக்குக் கடிதம்

%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a9

இந்நிலையில், மேனகா காந்தி மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் அனில் மாதவ் தவே அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளர். அதில் பின்வரும் முக்கிய விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளார்:

 

  • கோவில் திருவிழாக்களிலும் சுற்றுலாத் தலங்களிலும் நூற்றுக்கணக்கான யானைகள் காட்சிக்கு நிறுத்தப்படுகின்றன. அந்தக் காட்சிகள் மத்திய மிருகக்காட்சி சாலை ஆணையத்தினால் (Central Zoo Authority) அங்கீகரிக்கப்படுவதில்லை. இது, சம்பந்தப்பட்ட சட்டங்களை மீறும் செயலாகும். மத்திய மிருகக்காட்சி சாலை ஆணையமும் இந்த சட்ட மீறலைக் கண்டுகொள்வதில்லை.

 

  • வன உயிரினப் பாதுகாப்புச் சட்டம் 1972-ன் 42-வது பிரிவின்படியும், 1973-ன் வன உயிரினங்கள் இருப்புப்பட்டியல் அறிவிப்பு விதிகளின் படியும், யானைகளுக்கான உரிமைச் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். ஆனால் கோவில்களிலும், சுற்றுலாத் தலங்களிலும் பயன்படுத்தப்படும் பெரும்பாலான சிறைப்படுத்தப்பட்ட யானைகளுக்கு உரிமைச் சன்றிதழ் இருப்பதில்லை.

 

  • திருவிழாக்களிலும் சுற்றுலாத்தலங்களிலும் பயன்படுத்தப்படும் யானைகள் நீண்ட தூரம் சுடும் வெய்யிலில் நடத்தி அழைத்துவரப்படுகின்றன. அவற்றுக்குச் சரியான உணவும் குடிநீரும் கொடுக்கப்படுவதில்லை. வயதான, கண்கள் குருடாகிப்போன யானைகளைக் கூட பயன்படுத்துகிறார்கள்.

 

  • ஆகவே, மத்திய மிருகக்காட்சி சாலை ஆணையத்தினால் அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் மட்டும்தான் யானைகள் காட்சிக்குப் பயன்படுத்தப்படவேண்டும். ஏற்கனவே பயன்படுத்தப்படும் இடங்களில், ஆணையத்தின் “மிருகக்காட்சி சாலை விதிகள்-2009”-இல் சொல்லப்பட்டுள்ளபடி, அனைத்து வசதிகளும் குறிப்பிட்ட காலத்திற்குள் செய்யப்பட வேண்டும்.

 

  • அவ்வாறு செய்யப்படாத பட்சத்தில், தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

 

மேனகா காந்தியின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளபடி, மத்திய மிருகக்காட்சிசாலை ஆணையத்தின் விதிகள் மற்றும் வழிகாட்டுதல்கள்படி வசதிகள் செய்துதரவேண்டும் என்றால், இயற்கையான சூழல், குளிக்க மற்றும் சேற்றில் மணல்களில் விளையாட இடம், தேவையான அளவு சத்தான உணவுகள், காய்கறிகள், பழங்கள், பொதுமக்களின் தொல்லைகள் அற்ற நிலை, விலங்குநல மருத்துவர், பராமரிப்பாளர், விவரமான பாகன்கள், விலங்கியல் மற்றும் தாவரவியல் வல்லுனர்கள், கல்வி அலுவலர்கள் ஆகிய வசதிகளும் அலுவலர்களும் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

 

இவ்வாறு மேனகா காந்தி தன் கடிதத்தில் அளித்துள்ள பரிந்துரைகளை, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் வல்லுனர் குழு விவாதித்து ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிகின்றது. அமைச்சரின் ஒப்புதலும் கிடைத்துவிட்டால், கோவில்கள் தங்கள் வசம் உள்ள யானைகளுக்கு மேற்கண்ட வசதிகளை ஏற்பாடு செய்வதோடு மட்டுமல்லாமல், சம்பந்தப்பட்ட சட்டவிதிகளையும் வழிகாட்டுதல்களையும் பின்பற்றவேண்டியதும் அவசியமாகும்.

(http://indiatoday.intoday.in/story/maneka-gandhi-kerala-temple-elephants-zoo-guruvayoor-temple-central-zoo-authority/1/821212.html )

 

கோவில்களில் யானைகளின் தற்போதைய நிலை

 %e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a9

இந்தக் கட்டுரைத் தொடரின் சென்ற பகுதிகளில், கோவில்களில் பராமரிக்கப்படும் யானைகளின் நிலையை விரிவாகவே பார்த்தோம். தமிழகம், கேரளம், மஹாராஷ்டிரம், கர்நாடகம் போன்று சிறைப்படுத்தப்பட்ட யானைகள் உள்ள மாநிலங்களில் கோவில் நிர்வாகங்கள் தேவையான முறையான பராமரிப்புகளை யானைகளுக்கு வழங்கவில்லை என்பது நிதர்சனமாகவே தெரிந்தது.

 

யானைகளைப் பயன்படுத்தும் எந்தக் கோவிலிலும் இயற்கையான சுற்றுச்சூழல் இல்லை. கிட்டத்தட்ட 60 யானைகளைக் கொண்டிருக்கும் குருவாயூர் கோவில் மட்டும் புன்னத்தூர் என்கிற இடத்தில் இயற்கை சூழல் நிறைந்த காப்பகம் ஒன்றை நடத்தி வருகிறது. அங்கும் யானைகள் பலவிதமாகச் சித்திரவதை செய்யப்படுவதாக புகார்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன. இரும்புச் சங்கிலிகளால் பிணைக்கப்படுவது முதல் தேவையான உணவும் குடிநீரும் மருத்துவ வசதிகளும் அளிக்கப்படாதது வரை, பலவிதமான குறைகள் கோவில் நிர்வாகங்கள் மீது சுமத்தப்படுகின்றன.

 

தமிழகத்தைப் பொறுத்தவரை, திருக்கடையூர் கோவில் அபிராமி, ராமேஸ்வரம் கோவில் பவானி, திருச்செந்தூர் கோவில் குமரன், கூடல் அழகர் கோவில் மதுரவல்லி, தஞ்சாவூர் கோவில் வெள்ளையம்மாள், விருதுநகர் கோவில் சுலோச்சனா, என்று வரிசையாகக் கோவில் யானைகள் இறந்துவருவதைப் பார்க்கிறோம். இருக்கின்ற யானைகளுக்கும் முறையான வசதிகள் இல்லை என்பதையும் பார்த்து வருகிறோம்.

 

மேலும் சிறைப்படுத்தப்பட்ட யானைகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதும் கேரள மாநிலத்தில் தான். யானைகள் அதிகமாக இறப்பதும் அங்குதான். கேரளாவில் மட்டும் 2012 முதல் 2014 வரை 156 யானைகளும், 2015-ல் 53 யானைகளும் இறந்துள்ளதாக ஒரு ஆய்வு கூறுகிறது.

 

(http://english.manoramaonline.com/in-depth/iffi-2016-goa-film-festival/iffi-2016-news/gods-in-shackles-sparks-angst-over-cruelties-against-elephants.html )

 

இம்மாதிரியான இறப்புகளாலும், நிர்வாகக் குறைகளாலும் அதிர்ச்சியடைந்த விலங்குகள் நல ஆர்வலர்களும் அமைப்புகளும் யானைகளின் நலன்வேண்டி நீதிமன்றங்களை அணுகத் தொடங்கியுள்ளார்கள். கோவில் நிர்வாகங்களின் குறைபாடுகள் மட்டுமல்லாமல், வனத்துறை மற்றும் அறநிலையத்துறைகளில் நிலவும் ஊழல்களும் சேர்ந்து அவர்களை நீதிமன்றத்தின் படிகளில் ஏறவைத்துள்ளன. இந்திய அரசின் அங்கீகாரம் பெற்ற AWBI மற்றும் AWBI  அமைப்பின் அங்கீகாரம் பெற்ற WRRC, CUPA, PFA போன்ற அமைப்புகளும் உயர் நீதிமன்றங்களிலும், உச்ச நீதிமன்றத்திலும் பல வழக்குகள் போட்டு துன்பம் அனுபவித்துக்கொண்டிருக்கும் யானைகளை மீட்டு புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்புகின்றனர்.

 

திருவிடைமருதூர் கோமதி

%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a9

திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான திருவிடைமருதூர் மஹாலிங்கஸ்வாமி கோவிலின் யானை கோமதியின் நிலை பற்றி சென்ற பகுதிகளில் பார்த்தோம். 2009-ம் வருடத்திலிருந்து நரகத் துவாரம் போன்ற ஒரு இடத்தில் அடைக்கப்பட்டிருந்தது கோமதி. அதைப் பராமரிக்க முடியவில்லை என்றும் அதைத் தங்களிடமிருந்து எடுத்துக்கொள்ளலாம் என்றும் ஏற்கனவே திருவாவடுதுறை ஆதீனமடம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அறநிலையத்துறை மற்றும் வனத்துறைக்குக் கடிதம் எழுதியும், பயனில்லை.

 

வனத்துறை யானையைப் பெற்றுக்கொண்டு அதைப்பராமரிக்க மாதம் 3 லக்ஷம் வீதம் வருடத்திற்கு 36 லக்ஷம் ரூபாய் கேட்டது. ஆதீனமடம் அவ்வளவு நிதிவசதி இல்லையென்று சொல்லி, அந்த நரகச் சூழலிலேயே கோமதியை வைத்திருந்தது. கோமதியைக் கவனித்துக்கொள்ளும் பாகன்களும் அதைச் சரியாகக் கவனிக்காமல் சித்திரவதை செய்துவந்தனர். பின்னர் உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இந்திய விலங்குகள் நலவாரியம் எடுத்த நடவடிக்கையினால் பெங்களூருவைச் சேர்ந்த WRRC அமைப்பு கோமதியை மாதம் 70,000 ரூபாய் செலவில் எடுத்துக்கொள்ள முன்வந்தது. அந்த அமைப்பின் மனுவையும், மடத்து நிர்வாகத்தின் மனுவையும், இந்திய விலங்குகள் நலவாரியத்தின் அறிக்கையையும் கவனத்தில் எடுத்துக்கொண்ட உயர் நீதிமன்றம், மஹாலிங்கஸ்வாமி கோவில் யானை கோமதியை WRRC அமைப்பே தன்னுடைய புனர்வாழ்வு மையத்துக்குக் கொண்டு செல்லலாம் என்று கடந்த அக்டோபர் மாதம் உத்தரவிட்டது. பராமரிப்பிற்கான மாதாந்திர செலவான ரூபாய் 70,000 பணத்தை அறநிலையத்துறையோ அல்லது வனத்துறையோ WRRC அமைப்புக்கு அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டது.

 

ஆனால், இதுநாள் வரையில் கோமதியைப் பற்றிக் கவலைப்படாமல் பாராமுகமாய் இருந்த அறநிலையத்துறை திடீரென்று அதன் மேல் அக்கறை கொண்டு, மறுசீராய்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. அதில், குறிப்பிட்ட கோவில் யானையை சம்பந்தப்பட்ட கோவிலின் வருமானத்தை வைத்துத்தான் பராமரித்து வருவதாகவும், மஹாலிங்கஸ்வாமி கோவிலில் தேவையான வருமானம் இல்லாதது தான் கோமதியின் நிலைக்குக் காரணம் என்றும் குறிப்பிட்டது. மேலும், சேலம் ஏற்காடு மலை அடிவாரத்தில் இயற்கை சூழலுடன் கூடிய இடம் இருப்பதாகவும், சேலம் சுகவனேஸ்வரர் கோவில் யானை ராஜேஸ்வரியுடன் கோமதியையும் அதே இடத்தில் வைத்துப் பராமரிப்பதாகவும் அந்த மனுவில் கூறியிருந்தது அறநிலையத்துறை.

 

மனுவை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், இந்திய விலங்குகள் நலவாரியம் சேலம் மற்றும் ஏற்காடு அடிவாரம் சென்று அங்கிருக்கும் வசதிகளைப் பார்த்துவிட்டு, ஏற்கனவே காச நோயினால் அவதிப்பட்டுத் தற்போது சிகிச்சை பெற்றுவரும் ராஜேஸ்வரி யானையின் நிலையையும் கண்டுவிட்டு ஒரு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில், சேலத்தில் தேவையான வசதிகள் இருந்தால்தான் கோமதியை அங்கே அனுப்பலாம். வசதிகள் இல்லாத பட்சத்தில், இந்த நீதிமன்றம் முதலில் கொடுத்த உத்தரவின்படி WRRC அமைப்பே கோமதியைப் பராமரிக்கலாம் என்றும் உத்தரவிட்டுள்ளது. (High Court Order dated 18.11.2016 on WP No:34522 of 2016)

 

கோமதியின் விஷயத்தில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால் கோவில் நிர்வாகமும் அரசு இயந்திரங்களும் எவ்வளவு அக்கறையின்றி நடந்துகொண்டுள்ளன என்பதுதான். கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கும் மேலாக கடும் துன்பங்களை அனுபவித்து வந்துள்ளது கோமதி. ஆனால் கோவில் நிர்வாகமும், வனத்துறையும், அறநிலையத்துறையும் பண விஷயத்தைப் பற்றியே அக்கறைகொண்டிருந்தனவே தவிர கோமதியின் நலனைப் பற்றித் துளியும் கண்டுகொள்ளவில்லை.

 

கடைசியில் விலங்குகள் நல அமைப்பினர் கோமதியின் நிலையைக்கண்டறிந்து நடவடிக்கை எடுத்த பிறகுதான், அரசும் நிர்வாகமும் தாங்கள் ஏதோ அக்கறை கொண்டுள்ளது போல நாடகம் ஆடுகின்றனர். நீதிமன்றத்திலும் முரண்பாடான மனுக்களைத் தாக்கல் செய்து மேலும் காலதாமதம் செய்து வருகின்றனர்.

 

திருவிடைமருதூர் கோவிலுக்கு வருவதற்கு முன்னால் கோமதி சங்கரன் கோவிலில் இருந்தது. அப்போது அதைப் பார்த்துக்கொண்டிருந்த பாகன் கோமதியின் மீது அக்கறை கொண்டு அதை நன்றாகப் பராமரித்து வந்தவர். அவர் தற்போது கோமதியின் நிலை கண்டு மிகவும் வருந்தித் தன் வருத்தத்தையும் தெரிவித்துள்ளார். திருவிடைமருதூர் கோவிலில் கோமதியின் கதி இப்படி ஆகும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்று தன் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

 

உயர்நீதிமன்றத்தில் அடுத்த விசாரணையின்போது கோமதிக்கு நல்ல செய்தி கிடைக்க மஹாலிங்கஸ்வாமி தான் அருள் புரியவேண்டும்.

 

ஸ்ரீரங்கம் ஆண்டாள்

%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a9

கடந்த நவராத்திரித் திருவிழா சமயத்தில் ஸ்ரீரங்கம் கோவிலில் யானை ஆண்டாளை ஒரு காலைத் தூக்கி மூன்று கால்களால் நொண்டி அடிக்கச் செய்ததற்காக உயர் நீதிமன்றம் அறநிலையத்துறைக்கு விளக்கம் தரச்சொல்லி நோட்டீஸ் அனுப்பியது என்று சென்ற பகுதியில் பார்த்தோம்.

 

கோமதி விஷயத்தில் அறநிலையத்துறை மறுசீராய்வு மனு அளித்து அது நவம்பர் மாத விசாரணையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ஆண்டாளின் நிலை குறித்தும் நீதிபதிகள் விசாரித்தனர். அப்போது அறநிலையத்துறைக்காக வாதிட்ட அரசு வழக்கறிஞர், யானை ஆண்டாள் யாருடைய உந்துதலும் இன்றித் தானாகவே நொண்டி அடித்ததாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதைச் சுட்டிக் காட்டியுள்ளார். அதைக்கேட்ட நீதிபதிகள் பெரிதாகச் சிரித்துள்ளனர். “நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று தெரிந்துதான் சொல்கிறீர்களா?” என்று கேட்டுள்ளனர். பிறகு இந்த மாதிரியான யானைகளைக் கஷ்டப்படுத்தும், கோவில் பாரம்பரியத்துக்குச் சம்பந்தமில்லாத சம்பிரதாயங்கள் இனி எந்தக் கோவில் நிகழ்ச்சிகளிலும் கூடாது என்று கண்டித்துக் கூறியுள்ளனர் நீதிபதிகள்.  அதை அரசு வழக்கறிஞரும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

(High Court Order dated 18.11.2016 on WP No: 28793 of 2013) 

 

மாவட்ட அளவிலான யானைகள் நலக் குழுக்கள்

%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a9

தமிழ்நாடு வனத்துறையின் சார்பாக வாதிட்ட வழக்கறிஞர் மாநில அளவிலான யானைகள் நலக்குழும், மாவட்ட அளவிலான யானைகள் நலக்குழுக்களும் தமிழக அரசின் ஆணைப்படி (G.O. Ms. No: 118 dated 17.10.2016) அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும் யானைகளின் உடலில் பொறுத்தப்பட்டுள்ள ‘மைக்ரோ சிப்’ (MICRO CHIP) என்கிற கண்காணிப்புக் கருவிகளைக் கண்காணிக்கக்கூடிய ‘ஸ்கேனர்’ கருவிகள் கோயம்புத்தூர் வன விலங்குகள் நல மருத்துவ அதிகாரி, முதுமலை வனவிலங்குகள் அறுவை சிகிச்சை துணை மருத்துவர் மற்றும் அறிஞர் அண்ணா விலங்குகள் காப்பகம் மருத்துவ அதிகாரி ஆகிய மூவரிடம் உள்ளது என்றும் வனத்துறையின் வழக்கறிஞர் தெளிவு படுத்தினார். அதையும் தன்னுடைய குறிப்புகளில் ஏற்றிக்கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு, சம்பந்தப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்ததது.  (High Court Order dated 18.11.2016 on WP No: 28793 of 2013) 

 

 

இந்திய வன உயிரினங்கள் பாதுகாப்புச் சட்டம் (1972) (Indian Wildlife Protection Act-1972) மட்டுமல்லாமல், பிராணிகள் வதைத் தடுப்புச் சட்டம் 1960 (Prevention of Cruelty to Animals Act 1960), ஒவ்வொரு மாநிலத்திலும் அறிவிக்கப்பட்டுள்ள சிறைப்படுத்தப்பட்ட யானைகள் பராமரிப்பு விதிகள் (Captive Elephants – Management and Maintenance Rules), ஆகியவற்றை ஒழுங்காகக் கடைப்பிடித்து, கோவில் திருவிழாக்களை வியாபாரமயமாக ஆக்காமல் இருந்திருந்தால் கோவில் யானைகளுக்கு தற்போதைய நிலை வந்திருக்காது. ஆனால், கோவில் நிர்வாகங்களும், அறநிலையத்துறையும், வனத்துறையும் சட்டப்படியும் விதிகளின் படியும் முறையாக நடந்துகொள்ளாததால்,  நூற்றுக்கணக்கான யானைகள் இறந்துபோனது மட்டுமல்லாமல், மேலும் நூற்றுக்கணக்கான யானைகள் பெரும் துன்பத்தில் நரகவேதனை அனுபவித்துகொண்டிருக்கின்றன.

 

இதன் காரணமாகத்தான் விலங்குகள் நல அமைப்புகளும், ஆர்வலர்களும் நீதிமன்றத்தின் கதவுகளைத்தட்டி யானைகள் நலனுக்காகத் தங்களால் ஆன நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மத்திய அமைச்சர் மேனகா காந்தி வனத்துறை அமைச்சர் அனில் மாதவ் தவே அவர்களுக்கு எழுதியுள்ள கடித்தத்தையும் இந்தப் பின்னணியில் தான் நாம் பார்க்க வேண்டும். மேனகா காந்தியின் பரிந்துரைகள் வனத்துறை அமைச்சகத்தின் வல்லுனர் குழுவினால் ஏற்கப்பட்டுள்ளன. மேற்கொண்டு இவ்விஷயத்தில் என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

(தொடரும்)  

 

 

Series Navigationகாலநிலையும் அரசியலும்நாசாவின் காஸ்ஸினி விண்ணுளவி முதன்முதல் சனிக்கோளின் சுற்று வளையத்தை ஊடுருவி ஆய்வு செய்கிறது.
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *