|
முனைவர் சு.மாதவன் தமிழாய்வுத் துறை
உதவிப் பேராசிரியர் மா.மன்னர் கல்லூரி (தன்னாட்சி)
செம்மொழி இளம் தமிழறிஞர் புதுக்கோட்டை – 622 001.
யுஜிசி ஆராய்ச்சி விருதாளர் பேச : 9751330855, 04322 221515
மின் அஞ்சல்: semmozhi200269@gmail.com semmozhi_200369@yahoo.com
நாள் : 14.01-2017
“இன்குலாப்’பின் அக்கினிச் சிறகசைத்த பா(நா)ட்டுப் பறவை- கே.ஏ.ஜி!” (கே.ஏ.குணசேகரன்)
தமிழில் இதுவரை இசைக்கப்பட்ட விழிப்புணர்வுப் புரட்சிப் பாடல்களிலேயே சிறந்த பாடல் மானுட விடுதலையின் மனங்களைத் திறந்த பாடல் ; ஒருவரின் விரலிலும் இன்னொருவர் குரலிலுமாகப் பிறந்த பாடல் ஒன்று. இன்னும் அப் பாடலின் தேவையும் வேட்கையும் வற்றிப் போய்விடவில்லை. அப்படிப்பட்ட ஒரே பாடலால் உலகறியப்பட்ட இருவரும் இன்று நம்மோடு இல்லை.
ஒருவரை 2016 புத்தாண்டு எடுத்துக்கொண்டது. இன்னொருவரையும் 2017 புத்தாண்டு எடுத்துக்கொண்டுவிட்டது. 2016 ல் கே.ஏ.ஜி ; 2017 இல் இன்குலாப். இருவரும் சொல்லுக்குள் கந்தகத்தைச் சுமந்து தந்தவர்கள் .
ஒரே ஒரு பாடலால் உலகையே உலுக்க முடியும் என்பதை நிகழ்த்திக்காட்டியது அந்தப் பாடல். அந்தப்பாடல் இந்தப் பாடல்தான்:
“மனுஷங்கடா நாங்க மனுஷங்கடா
ஒன்னப் போல அவனப் போல
எட்டுச் சாணு ஒசரமுள்ள
மனுஷங்கடா நாங்க மனுஷங்கடா”
தமிழகத்தின் புரட்சி மேடைகளில் தொடங்கி சிர்திருத்த மேடைகளில் தொடர்ந்து விழிப்புணர்வு மேடைகள் வரை பயணம் செய்த இந்தப் பாடலின் விரல் இந்த ஆண்டு (2017) ஜனவரி 1 அன்று பறிபோய்விட்டது.
* 17-01-2017 –கே.ஏ.ஜி யின் முதலாமாண்டு நினைவுநாள்
இந்தப் பாடலின் குரல் கடந்த ஆண்டு இதே நாளில் (2017ஜனவரி 17) அடங்கிப் போய்விட்டது. அந்தக்குரலுக்கு இன்று முதலாம் ஆண்டு நினைவு நாள்.
அந்தக் குரல் தந்த பாடல் இது மட்டுமா? ஒன்றா இரண்டா ஒரு நூறு பாடல்களால் அடித்தட்டு மக்களின் கலகக் குரலை அந்தக் கந்தகக்குரல் வழியாகத் தமிழுலகே கேட்டது.
“பாவாடை சட்டை கிழிஞ்சு போச்சுதே”
“ஆக்காட்டி ஆக்காட்டி எங்கெங்கே முட்டையிட்டே!
எங்கெங்கே முட்டையிட்டே!”
“ஆடும் வயித்துக்கு மேய்ஞ்சிருக்கு – பசு
மாடும் வயித்துக்கு மேய்ஞ்சிருக்கு”
என்றவாறான பாடல்களின் முதலடியை எடுத்துப் பாடத்தொடங்கினாலே அடுத்த அடியை முணுமுணுக்க வைக்கும் ஆற்றல் மக்கள் கலைஞன் கே.ஏ.ஜி – யின் குரலுக்கு உண்டு.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடிக்கு அருகிலுள்ள மாரந்தை எனும் சின்னஞ்சிறிய கிராமத்தில் கரு. அழகன் வாத்தியாருக்கும் பாக்கியவதி அம்மாவுக்கும் 2.5.1955 அன்று பிறந்த கே.ஏ.ஜி, மதுரை காமராசர் பல்கலைக்கழத்தில் முனைவர் பட்டம் பெற்று அங்கேயே தமிழ் விரிவுரையாளராகத் தன் வாழ்வைத் தொடங்கி அதன் பின்னர் தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியராய் …. புதுவைப் பல்கலைக்கழகத்தின் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைப் பள்ளியின் துறைத்தலைவராய்… கலைப்புல முதன்மையராய் …. சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராய் உயர்ந்து, தன் கடின உழைப்பாலும் புதியன படைக்கும் ஆற்றலாலும் ஒவ்வொரு நிலையிலும் முத்திரை பதித்தவர்.
தமிழின் முதல் தலித் தன்வரலாற்று நூலான ‘வடு’ உட்பட 34 நூல்கள், 100 க்கு மேற்பட்ட ஆய்வுக்கட்டு கரைகள், 150க்கும் மேற்பட்ட நூல் அணிந்துரைகள், 5 இசை நாடாக்கள்,15 நாடகங்கள், 10 திரைப்படங்கள் என்று தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் பவனிவந்த மக்கள் இசைக்கலைஞன் கே.ஏ.ஜி.
எடுத்துக்கொண்ட ஒவ்வொரு துறைக்கும் காலந்தோறும் நினைவில் நிற்கும் சிந்தனை ஒளியைக் கொடுத்தவர். அன்பின் குழைவென்றால் அது கே.ஏ.ஜி-தான் எனும் வண்ணம் ஒவ்வொருவரிடமும் வாஞ்சையாய் வாழ்ந்தவர்; வாஞ்சையால் வாழ்ந்தவர்.
மனிதர்கள் மீதான அவரது வாஞ்சையும் கலைகள் மீதான அவரது பாசமும் ஆய்வுமீதான அவரது நேசமும் அமுதசுரபிக்கு நிகரானவை. அந்த மனிதர் தான எடுத்துக்கொண்ட ஒவ்வொரு பணிகளிலும் அந்தப் பணிகளுக்கே உரிய இணையாற்றல் பெற்ற மனிதர்களை அடையாளங்கண்டு இணைத்துக்கொண்டு அடையாளப்படுத்தினார். அப்படி அவரால் பொதுவெளியில அறிமுகமாகி இன்றும் சுடர்விடும் கலைத்தாரகைகள் பலருண்டு. கொல்லங்குடி கருப்பாயி, மாரியம்மாள், சின்னப்பொண்ணு, கோட்டைச்சாமி, ‘ஆக்காட்டி’ ஆறுமுகம் கே.ஏ. சத்தியபாலன் ஆகியோர் அவர்களுள் சிலர். இவர்கள் கிராமியப்பாடல் துறைக்கு கே.ஏ.ஜி – யால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள்.
அதேபோல், நாடகத்துறை, கல்வித்துறை, ஆய்வுத்துறை என ஒவ்வொரு துறைக்கும் அவரால் வந்த வரவுகள் நல்வரவுகளாகத் தமிழுலகம் கொண்டாடக் கூடியவர்களாகவே திகழ்கிறார்கள்.
கலைத்திறன் மிக்கோரை அறிமுகப்படுத்தியது போலவே, தனது சொந்த ஆளுமை யாற்றலால் தன்னையே அறிமுகப்படுத்திக்கொண்டவர் கே.ஏ.ஜி.
கருவோடு திருவான கலைத்துறையில் அவர் நிகழ்த்திய சாதனைகளுக்காக தமிழ்நாடு அரசும் புதுவை அரசும் வழங்கிய கலைமாமணி விருதுகள், அமெரிக்கத் தமிழ் அமைப்பு ஒன்று வழங்கிய நாட்டுப்புற அரங்கக் கலை ஆளுமை விருது உள்ளிட்ட பல விருதுகளை அவர் பெற்றிருந்தார்.
20 பேருக்கு முனைவர் பட்ட ஆய்வு வழிகாட்டியாக விளங்கிய அவர், தனக்கு இயல்பான – தனக்கே உரித்தான – தனித்தன்மை வாய்ந்த நாட்டுப்புறப் பாடல் துறைக்கும் நாடகத் துறைக்கும் மறக்கவியலாத / மறைக்கவியலாத பங்களிப்புகளைச் செய்துவந்தார். சுமார் 30 ஆண்டுகளாக மேலே கண்ட இரு துறைகளில் மட்டுமே தடம் பதித்துவந்த இவர்,2010 வாக்கில் யாரும் எதிர்பாரா வண்ணம் – ஏன் அவரே எதிர்பாரா வண்ணம் – புதியதோர் அவதாரமெடுத்தார். அதுதான் 21 ஆம் நூற்றாண்டின் தமிழ்ச் செவ்விலக்கிய உரையாசிரியர் என்னும் புத்தம் புதிய அவதாரம். அவ்வாறு அவர் அவதாரம் எடுத்ததற்குக் காரணங்களும் உள்ளன. அதன் விளைவு :
- பதிற்றுப் பத்து மூலமும் ஆராய்ச்சிப் புத்துரையும் (கலையியல் மற்றும் சமூகவியல் நோக்கில்),
உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2010,357 பக்.
- பட்டினப் பாலை மூலமும் ஆராய்ச்சிப் புத்துரையும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட்., சென்னை. 2015,196 பக்.
கே.ஏ.ஜி க்கு முந்தைய பதிற்றுப்பத்து, பட்டினப்பாலை உரையாசிரியர்கள் அத்தனை பேரையும் விஞ்சிய பொருள்காண் ஆளுமையுடையவராய்க் கே.ஏ.ஜி திகழ்கிறார். 20, 21 ஆம் நூற்றாண்டுகளில் உரையெழுதிய உரையாசிரியர்கள் இதுவரை காணாத நோக்கில் கண்டு அவர்கள் எழுதாத வண்ணம் எழுதி விளக்காத எண்ணம் விளக்கி முற்றிலும் புதிய வெளிச்சம் தரும் உரைகளாக இவரது உரைகள் இலங்குகின்றன.
ஒரு பௌத்த. சமண ஆய்வாளரான எனக்கு வியப்பைத் தருவன அவ்வுரைகள். முந்தைய பௌத்த, சமண ஆய்வாளர்களும் கண்டு சொல்லாதனவற்றை ஆராய்ந்து நிறுவும் வல்லமையை கே.ஏ.ஜி – யின் உரைகள் பெற்றிருக்கின்றன. அவரது உரைகளைப் படிப்போர் அந் நூல்களில் அணிந்துரை, வாழ்த்துரை, ஆய்வுரை என எழுதியுள்ள அறிஞர்கள் க.ப.அறவாணன், கி. நாச்சிமுத்து, க.இராமசாமி, சோ.ந.கந்தசாமி, இ.சுந்தர மூர்த்தி, இரா. கண்ணன் என எல்லோரும் எழுதியிருப்பதை அப்படியே வழிமொழிவர்.
இந்தவகையில், நானும் பலரும் கேட்டுக்கொண்டபடி சங்க இலக்கியப் பனுவல்கள் அத்தனைக்கும் உரையெழுதியிருக்க வேண்டிய கே.ஏ.ஜி நிறைவாக – இறுதியாக – பட்டினப் பாலை எனும் பாலைத்திணைக்கு உரையெழுதிவிட்டுப் பிரிந்துவிட்டாரே என்று நெஞ்சம் துணிக்குறுகின்றது. யாரேனும் இதை நிறைவேற்ற வேண்டும்…
அடித்தட்டு மக்கள் நோக்கு, அருந்தமிழ்க் கலையியல் நோக்கு, அடியுறை மெய்யியல் நோக்கு என்ற மூவகை நோக்குநெறிகளில் உரையமைத்துப் புதிய ஆய்வுரைத் தடத்தை அமைத்துத் தந்துவிட்டுத்தான் போயுள்ளார் என்பதால் அவர் ஒரு பாடல் பறவை மட்டுமல்ல ; புதியன நாட்டும் பறவையும் ஆவார் என்பதே அவர் வரலாறு உலகுக்குச் சொல்லும் செய்தியாகும். இங்கு ‘இன்குலாப்’ எனும் பெயர் கவிஞரை மட்டும் குறிக்கவில்லை. கே.ஏ.ஜி- யின் உரைநெறியையும் குறிக்கிறது என்பது தொடக்கமும் நிறைவுமாக அமைந்திருக்கிறது.
நிறையன்புடன்,
(சு.மாதவன்)
நிறுவனர் – தலைவர்
செம்மொழிச் சிந்தனையாளர் பேரவை
புதுக்கோட்டை.
- “இன்குலாப்’பின் அக்கினிச் சிறகசைத்த பா(நா)ட்டுப் பறவை- கே.ஏ.ஜி!” (கே.ஏ.குணசேகரன்)
- யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் – 14
- காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் ‘செட்டிநாடும் செந்தமிழும்’ என்ற தலைப்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கம் (2017)
- கவிதை குறித்த பொது வெளி உரையாடல் 2017_02_24 ( வெள்ளிக்கிழமை)
- புறச்சூரிய அரங்கத்தின் வால்மீன்கள் ஓரிளம் பரிதியில் பாய்ந்து ஒளிர்ப்பதை ஹப்பிள் விண்ணோக்கி கண்டுபிடித்தது
- உமர் கயாம் ஈரடிப் பாக்கள்
- மொழிபெயர்ப்பாளர் என்.கல்யாண ராமன் அவர்களுக்கு விளக்கு விருது
- எச்.முஜீப் ரஹ்மான் “நான் ஏன் வஹாபி அல்ல?” என்ற நூல்
- கவிதை என்னும் கடவுச்சொல் – கவிஞர் தமிழ்மணவாளன் அவர்களின் “உயிர்த்தெழுதலின் கடவுச்சொல்”
- ஜல்லிக்கட்டும் நம் பண்பாடும்…
- தொடுவானம் 153. எம்.பி. பி. எஸ். இறுதி ஆண்டு
- மாமதயானை கவிதைகள்
- மொழிபெயர்ப்பு த்தளத்தில் திசைஎட்டும் நிகழ்த்தும் சாகசம்
- தோழிக் குரைத்த பத்து