குமரன்
கட்டுரையின் துவக்கத்திலேயே நான் உங்களிடம் ஒன்றை சொல்லிவிட கடமைப்பட்டுள்ளேன். நீங்கள் எதிர்பார்க்கும் “வண்ணம்” இக்கட்டுரை இல்லாமல் போகலாம். என் மீது உங்களுக்கு கோபம் கூட தோன்றலாம். ஆனால், “ஜல்லிக்கட்டு எங்கள் வீரவிளையாட்டு அதற்குத் தடை என்பது தமிழ் இனத்தை வேரறுக்கும் சதி” என்றெல்லாம் கூட்டத்தில் கோவிந்தா போடாமல் சற்றே சிந்திப்பதும் தமிழ் இனத்திற்குரிய பண்பு என்பதால், அதன் வழி யோசித்ததில் விளைந்த எண்ணங்களே இந்தக் கட்டுரை!
கடந்த வாரம் மெரீனா கடற்கரையில் ஆயிரக்கணக்கானோர் ஜல்லிக்கட்டுக்கான தடை நீக்க வேண்டி கூடினர் என்றும் தமிழகம் எங்கும் வீர ஆடவரும் அணங்குகளும் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர் என்றும் ஊடகங்கள் அனைத்தும் உத்வேகம் கொண்டு பரபரப்புச்செய்திகள் வழங்கின.ஆஹா…தமிழினம் தழலென கொதித்தெழுந்த கோலத்தினை கண்டு சிலிர்த்தெழுந்த உடம்பினை சற்றே ஆசுவாசப்படுத்தி ஆற அமர யோசிக்கலாமா?
எனக்கு மாடுகளை பற்றிய அறிவு அதிகம். அதாவது பசு, காளை மற்றும் எருமை மாடுகளை அடையாளம் கண்டுகொள்ளும் அளவு பேரறிவு எனக்கு உண்டு. கண்ணாடியை கழற்றி விட்டோ தூரத்திலிருந்தோ பார்த்தால் முதலிரண்டு வகைகளை பிரித்தறிவதில் தடுமாற்றம் உண்டு என்பதையும் இங்கே செப்புவதில் பாதகம் ஒன்றும் இல்லை. சிரிக்க வேண்டாம். நான் மட்டுமல்ல அனேகமாக தொண்ணூறு சதவீத தமிழர்களின் “மாட்டறிவு” இவ்வளவுதான். இந்த மாட்டறிவுடன் சற்று ஏட்டறிவும் சேர்ந்தால், பண்டைய காலங்களில் ஜல்லிக்கட்டு அர்த்தமுள்ள விளையாட்டாக இருந்தது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். அது சரி, இன்றைய சூழலில் ஜல்லிக்கட்டை வைத்துக் கொள்வதில் அர்த்தமுள்ளதா? ஆராய்ந்து பார்க்கலாம் வாருங்கள்…போலித்தனங்கள் நிறைந்த நம்மை நாமே உரித்து பார்க்கலாம் வாருங்கள்.
பண்பாடு பாரம்பரியம் என்றெல்லாம் கதைக்கிறோமே, அதைப்பற்றி நம் விசாலமான அறிவை சற்று தோண்டிப்பார்க்கலாமா? நமக்கும் அதற்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா என்று சற்று நோண்டிப்பார்க்கலாமா? அரிசி என்றால் நாம் அறிந்தது பச்சரிசியும் புழுங்கலும் தான். அதை கூட இன்றைய தலைமுறை “ரா ரைஸ் பாயில்ட் ரைஸ்” என்று “லேபிள்” பார்த்து பல்லடுக்கு அங்காடிகளில் வாங்கும் அறிவுடைத்து. நஞ்சை, புஞ்சை என்றால் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? பாரம்பரிய நெல் ரகங்களில்ல் நாலு பெயராவது நமக்குத் தெரியுமா? சோனா மசூரி சுவை மிகுந்ததென்றும், பிரியாணிக்கு அருமையானது பாஸ்மதி என்றும் நாக்கின் வழி நடக்கிறோம் நாம். பண்பாடாம் பாரம்பரியமாம்…
“மால்”களில் “மதிப்பு கூட்டல்” செய்யப்பட்டு (அதாவது ஒரு ஸ்டைலாய் வண்டியை தள்ளியபடி, பாலிதீன் பைகளில் ஒட்டப்பட்டிருக்கும் விலை பற்றி யோசித்தால் நம் பவுசு குறைந்து விடுமோ என்றெண்ணி, டெபிட்,கிரெடிட் கார்டுகளை நீட்டுவதால் விளையும் நம் மதிப்புக் கூட்டல் என்னும் மாயையைச் சொன்னேன்) நாகரிகமாய் பவனி வந்து, பிளாட்பாரங்களில் ஐந்து ரூபாய் பொருளுக்கு ஒரு ரூபாய் பேரம் பேசும் நமக்கு, பண்பாடாம் பாரம்பரியமாம்.
மொழிதானே பண்பாட்டின் வேர்? அந்த வேருக்கு வெந்நீர் ஊற்றுவதை செவ்வனே செய்து வருகிறோமே நாம்…”எனக்கு தமிழ் பேச வரும். எழுதப்படிக்கத் தெரியாது” என்று வெட்கமில்லாமல் சொல்லும் தலைமுறைக்கு வந்து விட்டோமே…அது சரி. சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும். நம் மொழியறிவும் பற்றுமே கேள்விக்குறி இதில் அடுத்த தலைமுறையை குறைசொல்லி என்ன பயன். பத்து குறள் தொடர்ந்தாற்போல் அர்த்தத்துடன் சொல்ல நம்மால் இயலுமா? ஆனால் திருவள்ளுவருக்கு சிலை வைக்கா விட்டால் மட்டும் கோபம் பொத்துக் கொள்ளும். இலக்கியம் வாசிப்பதை விடுங்கள். பத்து இலக்கிய நூல்கள் பெயர்களாவது நமக்குத் தெரியுமா? ஆங்கிலம் எவ்வளவு அழகாக பேசுகிறோமோ அவ்வளவு அறிவாளி என்றெண்ணும் நமக்கு, பண்பாடாம் பாரம்பரியமாம்.
பக்கத்து கேரளாவில் ஓடும் ஆறுகளின் அருகே டிராக்டரோ லாரியோ பார்த்திருக்கிறீர்களா? ஒரு கைப்பிடி மணல் கூட அங்கு அள்ள முடியாது. ஆனால் நாமோ மணல் “விநியோயத்தில்” கொடி கட்டிப் பறக்கிறோம்…எந்த ஆறு எப்படி போனால் நமக்கென்ன…எந்த விவசாயி எப்படி மாண்டால் நமக்கென்ன. பாட்டில் பாட்டிலாய் தண்ணீர் வாங்கி குடிக்கக் பையில் காசிருக்கும் வரை எது எக்கேடு கெட்டால் நமக்கென்ன…பண்பாடாம் பாரம்பரியமாம்.
சோழர் காலத்திலேயே குடவோலை முறையில் தேர்தல் நடத்தும் பக்குவம் பெற்றவர்கள் நாம். ஆனால் நூறுக்கும் ஐநூறுக்கும் ஓட்டை விற்கும் அவலம் மிகுந்த இனமாய் இழிவடைந்தது எப்படி? பண்பாடாம் பாரம்பரியமாம்.
பண்டைய தமிழகத்தின் வணிக வரைபடத்தை பார்த்ததுண்டா நாம்? புல்லரிப்பு ஏற்படும். உலகின் சகல திசைகளிலும், கடல் வாணிகம் செய்துள்ளோம். அதனை அறிந்ததால் தான் உலகெங்கும் தமிழ் சார்ந்த சமூகம் பற்றிய வரலாறு இன்றும் போற்றப்படுகிறது. ஆனால் அப்பேர்ப்பட்ட இனம் இன்று இலவசத்திலும் நூறு நாள் வேலை திட்டத்திலும் அமிழ்ந்து கிடக்கும் அசிங்கம் அரங்கேறியது எப்படி? பண்பாடாம் பாரம்பரியமாம்.
நானூறு வயது கூட நிரம்பாத அமெரிக்கா, தனது நூறு வயது கட்டடங்களைக் கூட பாரம்பரிய சின்னங்களாக பாவித்து பாதுகாக்கிறது. ஆனால், ஆயிரம் வருடங்கள் கடந்த தொன்மை மீது கூட சிறுநீர் கழிக்கும் இனம் நாம். பண்பாடாம் பாரம்பரியமாம்.
கண்கள் சிவந்து விரிந்து, நான்கு வசனம் நாக்கு துருத்தி பேசினாலே இந்த இனத்துக்கு தலைமை தாங்க தான் தகுதியானவர் என்ற சிந்தனை பலருக்கு இங்கு வேரூன்றியது எப்படி? நாம் அனைவரும் அத்தனை அறிவற்றவர்கள் ஆனது எப்படி? பண்பாடாம் பாரம்பரியமாம்.
வரலாறு, கலை, சமூகம், மொழி, அரசியல், அறிவியல் என எதிலும் தெளிவின்றி, அக்கறையின்றி, பொறுப்பின்றி, அறிவின்றி உலகின் மூத்த குடியான ஒரு சமூகம் இப்படி சீரழிய முடியுமா என்று வியப்பும் அலுப்பும் தோன்றுகிறதே…நமக்கெல்லாம் பண்பாடு பாரம்பரியம் பற்றி பேச ஏதேனும் தகுதி உள்ளதா?
சரி சார்…என்னதான் சொல்ல வருகிறீர்கள் என்கிறீர்களா? நம் நாடு பல்வேறு சீரும் சிறப்புகளையும் கொண்டது. எந்த சிக்கலையும் தீர்க்காமல் வருடக்கணக்கில் இழுவையாய் இழுத்துக் கொண்டே போய் நிலுவையில் வைக்கும் கலை அச்சிறப்புகளில் ஒன்று. எனவே ஜல்லிக்கட்டுச் சிக்கல் எங்கும் போய்விடாது. அடுத்த வருடமும் அப்படியேதான் இருக்கும். சில அடிப்படை விஷயங்களையேனும் நம்மால் செயல்படுத்த இயலுமா என்று பார்ப்போம்.
விவசாயிகளிடம் நிலமில்லை. நிலமிருந்தாலும் நம்மண்ணுக்குரிய பாரம்பரிய விதையில்லை. விதையிருந்தாலும் நஞ்சில்லா உரமில்லை. உரமிருந்தாலும் பருவம் பொய்க்கா மழையில்லை. மழையிருந்தாலும் ஆறு உறிய மண்ணில்லை இத்தனை இல்லைகளால் விவசாயமே இங்கில்லை. இருக்கும் மாடுகளுக்குத் தண்ணீரும் தீனியும் போட இயலாமல் தவிக்கின்றனர் சிறுகுறு விவசாயிகள். இந்த லட்சணத்தில் ஜல்லிக்கட்டு மட்டும் நடத்தினால் யாருக்கு என்ன பயன்?
சாலைப்புழுதி நம் சட்டையோரத்தில் படிந்தாலே கவலையுடன் அலுவலகம் போய் வரும் “மெக்காலே” கல்வித்திட்டத்தில் கடைந்தேறி சுயசிந்தனை ஏதுமின்றி மாத சம்பளம் வாங்கும் நாம், நம் ஊதியத்தின் சிறு பகுதியை கொண்டு, நாமறிந்த ஒரு கிராமத்தில் ஒரு விவசாயியின் ஒரு நடவுக்கான தேவையையேனும் ஏற்கலாம். உடனே நம்மை நாமே வள்ளல் போல் எண்ணிக் கொள்ள வேண்டாம். இது நாம் அனைவரும் சேர்ந்து செய்த ஒரு கொலைக்கான பிராயச்சித்தம். கடந்த ஐம்பது ஆண்டுகளாய், “தேவை” என்ற பெயரில் நாம் ஆடிக்கொண்டிருக்கும் வறட்டு நாகரிக அட்டகாசங்கள் அனைத்தும் நிலமடந்தையயும் அதை தொழும் ஒரு பெருங்குடியையும் வேரோடு அழித்து விட்டது. இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் மீட்க முடியாத ஒரு மாபாதகத்தை மண் மீதும் மண் சார்ந்து வாழும் இனம் மீதும் நிகழ்த்தி இருக்கிறோம் நாம். அதற்கான பிரயாச்சித்தம்.
இடப்பற்றாக்குறை இருக்கும் வீடோ, மாட மாளிகையோ எது நம் இருப்பிடமாக இருப்பினும் ஒரு தொட்டியிலோ சிறுநிலப்பரப்பிலோ ஒரு காய்கறிச் செடியேனும் நட்டு வளர்த்துப் பார்ப்போம். விவசாயி படும்பாட்டின் ஒரு துளியேனும் நமக்கு விளங்கும். அதன் பின், கண்ணுக்கெட்டிய தொலைவு வரையிலும் வறண்டு கிடக்கும் விளைநிலங்களை பார்க்கையில் மனதில் பிசுபிசுப்பு தோன்றவில்லையெனில் நாம் தமிழராக மட்டுமில்லை, மனிதராக இருக்கவே லாயக்கற்றவர்கள்.
பல்லுயிர் ஓம்புதல் நமது பண்பாடு. உலகில் மனித நாகரிகம் துளிர்விடும் முன்னமே இத்தகையதொரு சிந்தனையை பாட்டில் வடித்த ஒரு இனத்தின் வழிவந்தவர்கள் என்று நாம் இன்று சொல்லிக் கொள்ள வெட்கப்பட வேண்டும். பல்லுயிரை விடுங்கள். முதலில் நம் பக்கத்தில் இருக்கும் சக மனிதர்களின் மேல் அன்பு காட்டிவதிலிருந்து நாம் எல்லாவற்றையுமே முதலில் இருந்து தொடங்க வேண்டியிருக்கிறது. ஏறு தழுவுதல் குறித்து வீறு கொள்வதையெல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்…
- “இன்குலாப்’பின் அக்கினிச் சிறகசைத்த பா(நா)ட்டுப் பறவை- கே.ஏ.ஜி!” (கே.ஏ.குணசேகரன்)
- யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் – 14
- காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் ‘செட்டிநாடும் செந்தமிழும்’ என்ற தலைப்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கம் (2017)
- கவிதை குறித்த பொது வெளி உரையாடல் 2017_02_24 ( வெள்ளிக்கிழமை)
- புறச்சூரிய அரங்கத்தின் வால்மீன்கள் ஓரிளம் பரிதியில் பாய்ந்து ஒளிர்ப்பதை ஹப்பிள் விண்ணோக்கி கண்டுபிடித்தது
- உமர் கயாம் ஈரடிப் பாக்கள்
- மொழிபெயர்ப்பாளர் என்.கல்யாண ராமன் அவர்களுக்கு விளக்கு விருது
- எச்.முஜீப் ரஹ்மான் “நான் ஏன் வஹாபி அல்ல?” என்ற நூல்
- கவிதை என்னும் கடவுச்சொல் – கவிஞர் தமிழ்மணவாளன் அவர்களின் “உயிர்த்தெழுதலின் கடவுச்சொல்”
- ஜல்லிக்கட்டும் நம் பண்பாடும்…
- தொடுவானம் 153. எம்.பி. பி. எஸ். இறுதி ஆண்டு
- மாமதயானை கவிதைகள்
- மொழிபெயர்ப்பு த்தளத்தில் திசைஎட்டும் நிகழ்த்தும் சாகசம்
- தோழிக் குரைத்த பத்து