ஜல்லிக்கட்டுப் போராட்டம் தேச விரோத அமைப்புகளால் கடத்தப்பட்ட ஜல்லிக்கட்டுப் போராட்டம்

author
1
0 minutes, 31 seconds Read
This entry is part 1 of 14 in the series 5 பெப்ருவரி 2017

 

தமிழ்செல்வன்

 

 ஜல்லிக்கட்டுப் போராட்டம்.

 

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான செய்திகளும் பிரச்சாரங்களும் சமூக வலைதளங்களில் தீயாகப் பரவத்தொடங்கின. இந்தப்பிரச்சாரம் தமிழகம் முழுவதும் மாணவர்களையும் எட்டியது. ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாச்சாரப் பாரம்பரியம் என்பதாக, தமிழ் மொழி பேசும் அனைவரின் பண்பாடாக, முன் நிறுத்தப்பட்டது. இந்தப் பிரச்சாரம் இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே ஒரு பெரெழுச்சியை ஏற்படுத்தியது. சென்னையில் மெரினா கடற்கரை, மதுரையில் தமுக்கம் மைதானம், கோவையில் வ.உ.சி பூங்கா என்று தமிழகத்தின் அனைத்து முக்கியமான நகரங்களிலும், இளைஞர்களும் மாணவர்களும் ஜல்லிக்கட்டு வேண்டி ஜனவரி 17-ம் தேதி முதல் போராட்டங்களும் ஆர்பாட்டங்களும் நடத்தத் தொடங்கினர்.

 

 

எந்தவிதமான வன்முறையும், கலாட்டாக்களும், போக்குவரத்துத் தடைகளும் இல்லாமல் அமைதியான முறையில் ஜல்லிக்கட்டு ஆதரவு கோஷங்களை மட்டுமே பயன்படுத்தி போராட்டம் நடைபெற்றதால், அரசும் காவல்துறையும் அவற்றைத் தடை செய்யாமல் இருந்தனர். போராட்டக்காரர்களும் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்து நல்ல முறையில் நடந்துகொண்டனர். போராட்டத்தில் மாணவர்களின் எண்ணிக்கையும், இளைஞர்களின் எண்ணிக்கையும் கூடத் தொடங்கியது. கல்லூரி நிர்வாகங்களும், பெற்றோர்களும் கூடப் போராட்டத்திற்கு ஆதரவளித்தனர்.

 

 

போராட்டத்தின் எழுச்சியைக் கண்ட மாநில அரசு, ஜல்லிக்கட்டுத் தடையை நீக்குவதற்கான வழிகளை ஆலோசனை செய்ய ஆரம்பித்தது. மத்திய பா.ஜ.க. அரசு கடந்த ஆண்டே மாநில அரசின் முன் வைத்த யோசனையான அவசரச்சட்ட மசோதா இயற்றலாம் என்கிற யோசனையைக் கவனத்தில் கொண்டு, மாநில முதல்வர் திரு.ஓ.பன்னீர் செல்வம் தில்லி சென்று பிரதமரைச் சந்தித்தார். பிரதமரும் மாநில அரசுக்கு முழு உதவியையும் ஒத்துழைப்பையும் தருவதாக உறுதியளித்தார். இதனை அடுத்து, முதல்வர் தில்லியேலேயே தங்கி அவசரச்சட்டத்துக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

yzbsgECYynifkky-800x450-noPad

 

இதனிடையே மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனும் ஜல்லிக்கட்டுப் பேரவையைச் சேர்ந்த மற்றும் சிலரை உள்துறை அமைச்சர், சட்டத்துறை அமைச்சர், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஆகியோரிடம் அழைத்துச் சென்று சந்தித்து, தேவையான நவடிக்கைகளை எடுத்தார். மாநில அரசின் அவசரச் சட்ட மசோதாவுக்கு உடனடியாக மத்திய அரசின் பரிந்துரை அளிக்கப்படும் என்கிற உறுதி மொழியையும் பெற்றுத்தந்தார்.

 

 

மத்திய அரசு, தமிழக அரசின் அவசரச் சட்ட மசோதா நிறைவேறும்வரை எந்தத் தீர்ப்பும் வழங்க வேண்டாம் என உச்ச நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டது. உச்ச நீதிமன்றமும் சம்மதித்து, வழக்கின் இறுதி விசாரணையை 31-ம் தேதிக்குத் தள்ளி வைத்தது.

 

 

போராட்டத்தில் தேச விரோத சக்திகள் ஊடுருவல்

 

 

மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எழுச்சி மிக்கப் போராட்டத்தினையும் அதற்கு அரசும் காவல்துறையும் ஒத்துழைப்பு நல்கியதையும் கண்ட தேச விரோத அமைப்புகளும் எதிர்கட்சிகளும் அந்தப் போராட்டத்தைத் தங்களுடைய நோக்கங்களுக்குப் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்து, இரண்டாவது நாள் முடிவிலேயே போராட்டக் களங்களில் ஊடுருவத் தொடங்கின. அரசியல் அனுபவம் அற்ற மாணவர்கள் அவ்வமைப்புகள் தங்களுக்கு ஆதரவாக வருவதாக நினைத்து அனுமதித்தனர். ஆரம்பத்தில் அரசியல்வாதிகள், திரையுலகப் பிரபலங்கள் ஆகியோருக்கு அனுமதி மறுத்த போராட்டக்காரர்கள் பின்னர் அவர்களும் களத்தில் இறங்குவதைத் தடுக்க முடியாமல் இருந்தனர்.

Chennai protests - Jallikattu-10

 

அரசியல் கட்சித் தலைவர்களை அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினாலும், அந்தக் கட்சிக்காரர்கள் மாணவர்கள் என்கிற போர்வையில் களத்தில் ஊடுருவுவதைத் தடுக்க முடியவில்லை. தமிழகமெங்கும் உள்ளப் போராட்டக்களங்களில் தேச விரோத, பிரிவினைவாத, தீவிரவாத, பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஊடுருவியதால், போராட்டம் திசை திரும்பத் தொடங்கியது. உண்மையான போராளிகளுக்குச் சரியாக வழிகாட்டும் விதமாகத் தலைமை இல்லாததும் இதற்குக் காரணம்.

 

 

ஜல்லிக்கட்டு ஆதரவு, தமிழர் கலாச்சாரம் என்கிற பெயர்களில், மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகவும், முதல்வர் பிரதமர் ஆகியோருக்கு எதிராகத் தனிபட்ட முறையிலும், தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராகவும், பிரிவினைவாதத்துக்கு ஆதரவாகவும் கோஷங்களும், அருவருக்கத்தக்க ஆடல் பாடல்களும் நடத்தப்பட்டன. அந்த மாதிரியான கோஷங்களும் படங்களும் கொண்ட பதாகைகளும் ஆங்காங்கே வைக்கப்பட்டன. சிறிய பதாகைகளைக் கைகளில் தாங்கியவாறு போராட்டக்களங்களில் பலர் தென்பட்டனர்.

Chennai protests - Jallikattu-9

 

ஆரம்பத்தில் மாணவர்கள் தானாகவே எழுச்சியுடன் கூடியதாக நம்பப்பட்டாலும், அந்தக் கூடலுக்குப் பின்னே சில சக்திகள் இயங்கியிருக்கும் வாய்ப்புள்ளது என்று சில அரசியல் பார்வையாளர்கள் கருத்துத் தெரிவித்தனர். ஒரு பக்கம் WhatsApp, Facebook போன்ற சமூக வலைதளங்கள் பயன்படுத்தப்பட்டாலும், மறுபக்கம் சிறுபான்மையினக் கல்வி நிறுவனங்கள் தாங்களாகவே முன்வந்து போராட்டத்திற்கு மாணவர்களை அனுப்பியதாகவும் தெரியவந்துள்ளது.

 

 

பொதுவாகவே, ஊடகங்கள் அனைத்தும் ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்கு ஆதரவாகவே நடந்துகொண்டாலும், NEWS 7 என்கிற குறிப்பிட்ட தொலைக்காட்சி நிறுவனம் போராட்டக்காரர்களிடம் பெரும் ஆதரவைப் பெற்றது தனியாகத் தெரிந்தது. அதற்குப் பின்னே ஒரு அரசியல் கணக்கு இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

Chennai protests - Jallikattu-8

 

போராட்டத்தில் ஊடுருவிய தேசவிரோத அமைப்புகளும் அவற்றின் நோக்கங்களும்

 

மாணவர்களின் எழுச்சி மிக்கப் போராட்டத்தில் பின்வரும் தேசவிரோத அமைப்புகள் ஊடுருவியிருந்தன:

 

மக்கள் கலை இலக்கிய கழகம் / இந்திய மாணவர் பேரவை / இந்திய ஜனநாயக இளைஞர் பேரவை போன்ற நக்ஸலைட்டு கம்யூனிஸ வாதம் பேசும் அமைப்புகள் ஊடுருவிக் கலந்து கொண்டன. இவ்வமைப்புகள் எப்போதுமே அரசு நிறுவனத்திற்கு எதிரானவை என்பது வரலாற்று உண்மை. மத்திய அரசின் கருப்புப்பண, கள்ளநோட்டு, லஞ்சம் ஒழிப்பு நடவடிக்கைகள் காரணமாக, கம்யூனிஸத்தீவிரவாத இயக்கங்களான நக்ஸல் மற்றும் மாவோயிஸ்டு அமைப்புகள் எந்தவிதமான தேச விரோத நடவடிக்கைகளிலும் இயங்க முடியாமல் கிட்டத்தட்ட ஸ்தம்பிக்கும் நிலைக்கு வந்துள்ளன. கடந்த இரண்டு மாதங்களாகவே இவை மத்திய அரசுக்கு எதிராக நாடெங்கும் சட்ட ஒழுங்குப் பிரச்சனையை ஏற்படுத்த முயன்று வருகின்றன. அதற்குத் தமிழக அளவில் ஜல்லிக்கட்டுப் பிரச்சனையை பயன்படுத்தியுள்ளன. பொதுவாக மத்திய அரசுக்கு எதிராகவும், குறிப்பாக பிரதமருக்கு எதிராகவும் அருவருக்கத்தக்க கோஷங்களையும், பதாகைகளையும், ஆடல்பாடல்களையும் பயன்படுத்தியுள்ளனர். கோவன் போன்ற பாடகர்கள் பிரதமருக்கு எதிராகப் போராட்டக் களத்தில் பாடிய பாடல் யூ டியூப் தளத்தில்பரப்பப்பட்டது. ( https://www.youtube.com/watch?v=PD3rpJg-6qw )

 

Chennai protests - Jallikattu-5

புரட்சிகர இளைஞர் முன்னணி / புரட்சிகர மாணவர் முன்னணி போன்றவை நக்ஸல் தீவிரவாத அமைப்புகள். ஒருங்கிணைந்த இந்தியா என்கிற கருத்துக்கு எதிராகவும் மத்திய அரசுக்கு எதிராகவும் பிரதமர் மோடிக்கு எதிராகவும் இயங்குபவர்கள். இவர்கள் திருச்சி நகரில், பிரதமர் மோடியின் உருவத்தைப் பாடையில் கட்டி, ஒப்பாரி வைத்தவாறே ஊர்வலம் வந்தனர். சென்னை மெரினா கடற்கரைப் போராட்டத்திலும், அவரைப் புதைத்து வைத்தது போலச் செய்தும் அவருக்கு எதிராக அருவருக்கத்தக்க கோஷங்களை எழுப்பியும், பதாகைகளைத் தாங்கியும் செயல்பட்டனர்.

 

 

மே 17 இயக்கம். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமைப்பு. இதைத் திருமுருகன் காந்தி என்பவர் நடத்திக்கொண்டிருக்கிறார். இவர்களுடைய நோக்கம், இந்திய-இலங்கை நட்புறவை அழித்து, இலங்கையிலிருந்து ஈழத்தைப் பிரிக்கவேண்டும் என்பதே. எனவே இந்திய இலங்கை அரசுகளுக்கு எதிராகவே எப்போதும் இயங்கிவருபவர்கள். மேலும் தமிழ்நாட்டை இந்தியாவிலிருந்து தனியாகப் பிரித்தெடுக்கவேண்டும் என்கிற நோக்கமும் கொண்டவர்கள். ஜல்லிக்கட்டுப் போராட்டக்களத்தில் ஊடுருவிய இவர்கள் தமிழ் ஈழம், தனித்தமிழ் நாடு போன்ற கோஷங்களையும், பிரதமருக்கும் இந்திய அரசுக்கும் எதிரான கோஷங்களையும், போட்டதோடு மட்டுமல்லாமல், பதாகைகளையும் ஏந்திப் போராடினர். சமுக வலைதளங்களில் தனித்தமிழ்நாடு கோரி, தனித்தமிழ் கொடி பறக்க விடவேண்டும் என்று பிரச்சாரம் செய்தனர். குடியரசு தின விழாவை நடக்க விடமாட்டோம் என்றும் பேசினர்.

Chennai protests - Jallikattu-4

நாம் தமிழர் கட்சி. இது நடிகர் சீமானால் நடத்தப்படும் அரசியல் கட்சி. தமிழ் ஈழத்திற்கு ஆதரவாகத் தொடங்கிய இக்கட்சியினர், இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புகளுடனும், கம்யூனிசத் தீவிரவாத அமைப்புகளுடன் நட்புறவு கொண்டுள்ளவர்கள். தமிழ் ஈழத்துடன், தமிழ் பிரிவினைவாதத்தையும், தமிழ் தீவிரவாதத்தையும் முன்வைக்கும் கட்சி இது. இந்தக் கட்சி உறுப்பினர்கள் மாணவர் போராட்டம் ஆரம்பவாதற்கு முன்பிருந்தே தமிழகத்தின் முக்கிய நகரங்களில் மோட்டார் சைக்கிள் பேரணி போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். மாணவர் போராட்டத்தை மத்திய அரசுக்கும், இந்திய இறையாண்மைக்கும் எதிராகத் திசை திருப்பியதில் இவர்களுக்கும் பங்கு உண்டு.

 

 

தமிழ்நாடு தௌஹீத் ஜமாத், சோஷியல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியா (SDPI) பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா (PFI) போன்ற இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புகள். இவர்கள் போராட்டக் களத்தில் ஊடுருவிய விதம் சற்று வித்தியாசமானது. இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புகள் சமூக நல்லிணக்கத்துக்கும், சமூக சேவைக்கும் அர்ப்பணிப்பு கொண்டவர்களாகத் தம்மை அடையாளப்படுத்திக்கொள்வதில் வல்லவர்கள்.  ரத்த தானம், மருத்துவச் சேவை ஊர்திகள் (Ambulance), அன்னதானம், சட்ட உதவி போன்ற சேவைகளின் போர்வையில் மக்களைக் கவர்ந்து மதமாற்றுபவர்கள். அவ்வாறு மதம் மாற்றியவர்களைத் தீவிரவாதத்திலும் ஈடுபடுத்துபவர்கள்.

Chennai protests - Jallikattu-12

தமிழகத்தின் மாணவர் போராட்டக்களங்களில் உணவு மற்றும் குடிநீர் போன்ற அத்தியாவசியத் தேவைகளை வழங்கும் விதமாக இவர்கள் ஊடுருவினர். பசியிலும் தாகத்திலும் போராட்டக்களத்தில் தவித்தவர்களுக்கு இவர்கள் ஆக்கிப்போட்ட சோறும் குடிநீரும் தேவாமிருதமாக இருந்தன. அந்த மாணவர்கள் எந்தக் காளை மாட்டைத் தெய்வமாக எண்ணி அதன் பாரம்பரியத்துக்காகப் போராடினார்களோ, அதே மாட்டைக் கொன்று இந்த இயக்கத்தினர் மாட்டுப் பிரியாணி சமைத்துப் போட்டதைச் சாப்பிட்டனர்.

 

இதே இயக்கத்தினர் பசுவதைத்தடைச் சட்டத்திற்கு எதிராக மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டங்களை நாடெங்கும் நடத்தியவர்கள். நாடெங்கும் பயங்கரவாதச் சம்பவங்களிலும், ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களைக் கொல்வதிலும் ஈடுபட்டதற்காக மாநிலப் போலிசாராலும், தேசியப் புலனாய்வு அமைப்புகளாலும் கைதுசெய்யப்பட்டுச் சிறையில் இருக்கிறார்கள். கள்ளக்கடத்தல், பாகிஸ்தானிலிருந்து அனுப்பப்படும் கள்ள நோட்டுகளைப் பரப்புதல், ஹவாலா பரிவர்த்தனையில் ஈடுபடுதல் போன்ற அனைத்துவிதமான தேச விரோதச் செயல்களிலும் ஈடுபடுபவர்கள்.

 

700 ஆண்டுகால இஸ்லாமியப் படையெடுப்பகளால் சாதிக்க முடியாததைப் பயங்கரவாதத்தினால் சாதிக்கவேண்டும் என்று முனைப்புடன் செயல்படுபவர்கள். உலகளாவிய இஸ்லாமியப் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு கொண்டு இயங்குபவர்கள். கருப்புப்பண, கள்ளப்பண ஒழிப்பு நடவடிக்கையால் பெரிதும் பாதிக்கப்பட்டதால், இவர்களும் மத்திய அரசுக்கு எதிராகவும், பிரதமருக்கு எதிராகவும், ஹிந்து அமைப்புகளுக்கு எதிராகவும் கோஷங்கள் போட்டும், பதாகைகள் ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டு அதனைத் திசை திருப்பியவர்கள். உலகை மிரட்டிய பயங்கரவாதி ஒசாமா பின் லாடன், தமிழகத்தை மிரட்டிய பயங்கரவாதி பழனி பாபா போன்றவர்களின் உருவத்தைத் தாங்கிப் போராட்டத்தில் கலந்தனர். போராட்டத்தை முடிக்காமல் நீட்டித்துக் குடியரசு தின விழா நடைபெறாமல் செய்து, அதைக் குலைத்து, பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடவும் திட்டமிட்டிருக்க வாய்ப்பிருந்ததை மறுக்க முடியாது. அதை மெய்ப்பிக்கும் வகையில், குடியரசு தினத்திற்கு முதல்நாள், மதுரையில் இரண்டு திவிரவாதிகள் பைப் வெடிகுண்டுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவன் ஹிந்துவாக இருந்து மதம் மாறியவன் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சமூக வலைதளங்கள் மூலம் தங்கள் சமூகத்தவர்களிடம், ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை இந்தியாவிற்கு எதிராக எப்படிப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பிரச்சாரம் செய்து அவ்வாறே நடத்தியவர்கள். ( https://www.pgurus.com/jallikattu-anti-nationals-not-budge/ )

 

விடுதலை சிறுத்தைகள் கட்சி. ஹரிஜன மக்களுக்குப் போரடுவதாகச் சொல்லிக்கொள்ளும் கட்சியான இது, ஜல்லிகட்டு நிகழ்ச்சியை ஆதிக்க சாதியினரின் அராஜகம் என்று எதிர்க்கும் கட்சி. ஆயினும் மத்திய அரசுக்கு எதிராக இயங்கவும், ஜிகாதி அமைப்புகளுக்கு உதவவும், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டது.

 

ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராக இயங்கி வரும் இயக்கமாகும் திராவிடர் கழகம். இதுவும் ஜல்லிக்கட்டுக்கு எதிரான கொள்கை உடைய அமைப்பு தான். ஆயினும், மத்திய அரசு, பா.ஜ.கட்சி மற்றும் பிரதமர் மோடி ஆகியோருக்கு எதிராகப் போராட்டத்தைத் திசை திருப்ப வேண்டும் என்கிற நோக்கத்தோடும், ஜிகாதி அமைப்புகள் மற்றும் கிறிஸ்தவப் பின்னணி கொண்ட என்.ஜி.ஓக்கள் ஆகியவற்றுக்கு உதவவேண்டும் என்கிற நோக்கத்தோடும் இப்போராட்டத்தில் ஊடுருவிக் கலந்து கொண்டனர் இவ்வமைப்பினர்.

 

அன்னிய நிதியில் இயங்கிவரும் என்.ஜி.ஓக்கள். அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் நிதியுதவியால் இந்தியாவில் சட்டத்திற்குப் புறம்பாகச் சேவை என்கிற பெயரில் பெரிதும் மதமாற்றத்தில் ஈடுபட்டு வரும் இந்த என்.ஜி.ஓக்களும் இந்தப் போராட்டத்தை மத்திய அரசுக்கு எதிராகப் பயன்படுத்திக்கொண்டன. மத்தியில் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு பதவியேற்றதும், அன்னிய நிதியில் இயங்கிவரும் என்.ஜி.ஓக்களை உள்துறை அமைச்சகம் கண்காணிப்பின் கீழ் கொண்டுவந்தது. அன்னியச் செல்வாணிக் கணக்கை முறையாகச் சமர்ப்பிக்காத, மதமாற்றத்தில் ஈடுபடும், தேச விரோத என்.ஜி.ஓக்களின் அனுமதியை ரத்து செய்தது அரசு. பல்லாயிரக்கணக்கான என்.ஜி.ஓக்கள் இந்த நடவடிக்கையால் செயலிழந்து போயின. ஆகவே, இவைகளும் போராட்டத்தில் கலந்து மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டத்தைத் திசை திருப்பின. பின்புலத்தில் இருந்து இவைகளை இயக்கும் கிறிஸ்தவ சர்ச்சுகளும் தங்களாலான உதவிகளைச் செய்தன.

(   https://www.pgurus.com/church-ngos-behind-occupy-marina-agitation/ )

 

தமிழகத்தின் பிரதான கட்சிக்களுள் ஒன்றானதும், முக்கியமான எதிர்கட்சியானதுமான திராவிட முன்னேற்றக் கழகம் தனது கட்சித் தொண்டர்களை ஜல்லிக்கட்டு ஆதரவு என்கிற பெயரில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக ஏவிவிட்டது. அவர்களும் மாணவர்களுடன் போராட்டத்தில் ஊடுருவிக் கலந்து அரசுக்கு எதிராகப் போராட்டத்தைத் திசை திருப்ப முயன்றனர். ஜல்லிக்கட்டுத் தடைக்கு முக்கிய காரணமாக இருந்த கட்சியாக இருந்ததாலும், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அரசில் அங்கம் வகித்ததாலும், அவ்வுண்மையை மக்களின் நினைவிலிருந்து அகற்றி, தற்போதைய மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தோடு செயல்பட்டது தி.மு.க.

 

ஆளும் கட்சியைக் கைப்பற்றிய மன்னார்குடி மாஃபியா. மன்னார்குடி மாஃபியா என்று ஊடகங்களால் அழைக்கப்படும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியாக அறியப்பட்ட சசிகலா குடும்பத்தினரின் சூத்திரதாரியாகச் செயல்படும் நடராஜன் அவர்கள், ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் பின்னணியில் செயல்பட்ட முக்கிய சக்தியாக அரசியல் பார்வையாளர்கள் ருகதுகிறார்கள். கட்சியைக் கைப்பற்றினாலும், ஆட்சியைக் கைப்பற்ற முடியாத சூழலில், முதல்வர் பன்னீர் செல்வம் அவர்களை எப்படியாவது பதவியிலிருந்து கீழிறக்கிவிட வேண்டும் என்கிற முனைப்புடன் செயல்பட்டதாகத் தெரியவருகிறது.

 

மத்திய அரசின் ஆலோசனைகளின்படி, கவர்னரின் உதவியுடன் ஆட்சி புரிந்து வரும் முதல்வர், வார்தா புயல் நிவாரணத்திலும் நன்றாகச் செயல்பட்டு மக்களிடம் நற்பெயர் பெற்றார். மேலும் ஜல்லிக்கட்டு விஷயத்திலும் மாணவர்கள் போரட்டத்தை அனுமதித்ததோடு மட்டுமல்லாமல், மத்திய அரசுடன் இணைந்து விரைவாகச் செயல்பட்டு அவசரச் சட்டத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஜனாதிபதியின் ஒப்புதலையும் பெறத் தீவிரமாக முயன்றதால் அவருடைய முயற்சியைத் தோல்வி அடையச் செய்யும் நோக்கத்தோடு இவர்கள் செயல்பட்டதாகவும் தெரியவருகின்றது.

Chennai protests - Jallikattu-2

இந்தக் குடும்பத்துடன் ‘நியூஸ்-7’ தொலைக்காட்சி நிறுவனத்தின் நிர்வாகமும் நெருங்கிய நட்புறவு கொண்டுள்ளதால், போராட்ட களத்தில் பணம் தண்ணீராகச் செலவழிக்கப்பட்டதாகத் தெரிகின்றது. மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக எவ்வளவு தூரம் போராட்டத்தைத் தூண்டிவிட முடியுமோ அவ்வளவு தூரம் அந்தத் தொலைக்காட்சி நிறுவனம் செயல்பட்டது. உதாரணத்துக்குச் சொல்லவேண்டுமானால், அவசரச்சட்டத்துக்கு எதிராக மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் விலங்குகள் நல அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது என்று பொய்ச்செய்தியை வெளியிட்டது இந்தத் தொலைக்காட்சி. இவர்கள் கூட்டணி தனக்கு எதிராகச் செயல்படுவதை முதல்வர் பிரதமரிடத்தில் தெரிவித்துள்ளார் என்று தினமலர் பெரிய அளவில் செய்தியை வெளியிட்டது. (http://www.dinamalar.com/news_detail.asp?id=1694963 )

 

வன்முறையும் கலவரமும்

 

அவசரச் சட்டம் நிறைவேற்றுவதாக வாக்குறுதி கொடுக்கப்பட்டவுடனேயே ஜல்லிக்கட்டுப் பேரவையினர் மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி கூறி போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். பத்திரிகையாளர் சந்திப்பின் வழியாக, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களையும்போராட்டத்தை முடித்துக்கொண்டு கலைந்து செல்லுமாறு கேட்டுகொண்டனர். அதன்படி ஜல்லிக்கட்டுக்காக மட்டுமே போராட்டத்தில் ஈடுபட்ட பெரும்பான்மையான மாணவர்கள் கலைந்து சென்றனர்.

 

மாநில மத்திய அரசுகள் வாக்களித்தபடி 21-ம் தேதி துவங்கிய சட்டமன்றத்தில் அவசரச் சட்ட மசோதா சட்டமாக நிறைவேற்றப்பட்டது.

Dinamalar Report on Modi-OPS meet for Jallikattu

ஆனால் மேலே குறிப்பிடப்பட்டுள்ள தேச விரோத அமைப்பைச் சேர்ந்தவர்களும் அவர்களுடன் சேர்ந்துகொண்ட மாணவர்களும் மட்டும் போராட்டத்தைக் கைவிடாமல் இருந்தனர். நிரந்தர தீர்வு வேண்டும் என்கிற கோரிக்கையின் பேரிலும் பீட்டா (PETA) அமைப்பை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையுடனும், களத்திலிருந்து கலைந்து செல்லாமல் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவசரச் சட்ட மசோதா சட்டமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்பட்டுவிட்டதால், அதுவும் நிரந்தரத் தீர்வே என்று காவல்துறை அதிகாரிகள் எவ்வளவோ முறை தெளிவாகக் கூறிய பின்னும் அவர்கள் கலைந்து செல்லவில்லை. சென்னை மெரினா கடற்கரையோரத்தில் உள்ள குப்பங்களில் பெரும்பான்மையானவர் கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்யப்பட்டவர்கள். சாந்தோம், பட்டினப்பாக்கம், அடையாறு திருவான்மியூர் போன்ற பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ சர்ச்சுகள் போராட்டக்காரர்களுக்கு என்.ஜி.ஓக்கள் மூலம் உதவியதாகத் தெரியவந்துள்ளது. ஒரு வீட்டிற்குச் சமையல் செய்ய 20,000 ரூபாயும் போராட்டத்தில் கலந்து கொள்ள நபர் ஒருவருக்கு 500 ரூபாயும் வழங்கப்பட்டதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்திக்கட்டுரை வெளியிட்டுள்ளது. ( http://timesofindia.indiatimes.com/city/chennai/kuppam-residents-were-given-money-told-to-join-protests/articleshow/56786695.cms)

 

இதனிடையே மாநிலத்தின் பல இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்தாமல் போராட்டத்தைத் தொடர்ந்தனர். அங்கு ஜல்லிக்கட்டு நடத்தச் சென்ற முதல்வர் மதுரையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டார்.

Chennai protests - Jallikattu-2

தாங்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக மாநில மத்திய அரசுகள் போர்க்கால அடிப்படையில் பிரச்சனைக்குத் தீர்வு கண்டுவிட்டதை ஏற்க முடியாத மனநிலையில் இருந்த அவ்வமைப்புகள், அரசுக்குக் எதிராகக் கடுமையான வன்முறையில் இறங்க ஆரம்பித்தன. போராட்டத்தை நீட்டி, குடியரசு தினக் கொண்டாட்டத்தையும் சீர்குலைக்கத் திட்டமிட்ட அவ்வமைப்புகளுக்குப் போராட்டம் முடிவு பெற்றுப் பிரச்சனைக்கும் தீர்வு காணப்பட்டதை ஜீரணிக்க முடியவில்லை.

 

எனவே, காவல் நிலையங்களுக்குத் தீ வைத்தல், காவலர்களைத் தாக்குதல், பெண் கவலர்களை மானபங்கப்படுத்துதல், போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்தல், கார்கள், பேருந்துகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றுக்குத் தீ வைத்தல், கஷ்மீர் பிரிவினைவாதிகள் செய்வது போல ஆங்காங்கே கல்வீச்சில் ஈடுபடுதல், பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தல், என்று சென்னை மாநகரம் முழுவதும் பயங்கரவான வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டன. தமிழகத்தின் மற்ற நகரங்களிலும் ஆங்காங்கே வன்முறையில் இறங்கின. இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி, ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்காடு மன்றங்களில் சட்டப்படி வழக்குத்தொடர்ந்த பிராணிகள் நல ஆர்வலர்கள் மீதும் தாக்குதல்கள் நடத்த முயன்றனர் சில தீய சக்திகள்.

 

சென்னையிலும், மற்ற இடங்களிலும் வன்முறையை இரும்புக்கரம் கொண்டு அடக்கியது காவல்துறை. எந்தவிதமான அத்து மீறல்களும் இன்றி, உண்மையான போராட்டக்காரர்கள் மற்றும் மாணவர்கள் மீது பலத்தைப் பிரயோகிக்காமல், தங்களை மிகவும் கட்டுப்படுத்திக்கொண்டு, சமூக விரோத தேச விரோத அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது மட்டுமே பலத்தைப் பிரயோகித்தது காவல்துறை. பல நகரங்களில் பலரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தது.

 

வெளிச்சத்துக்கு வந்த தேசத்துரோகிகள்

 

ஒரு வார காலம் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் மூலம் மேற்கூறப்பட்ட தேச விரோத, சமூக விரோத, பிரிவினைவாத, பயங்கரவாத அமைப்புகளின் சுயரூபங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. சமூக வலைதளங்களில் பரவும் வீடியோக் காட்சிகளும் புகைப்படங்களும் மட்டுமல்லாமல், காவல்துறையினரின் வீடியோக்காட்சிகளிலும் இவர்களின் அராஜகங்களும் வன்முறைகளும் பதிவாகியுள்ளன. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு உண்மையான கட்சிகளும் அமைப்புகளும் எவை என்பதும், தேச விரோத சமூக விரோத கட்சிகளும் அமைப்புகளும் எவை என்பதும் தெளிவாகத் தெரியவந்துள்ளன. இதையே காவல்துறை உயர் அதிகாரிகள் பத்திரிகையாளர் கூட்டத்தில் தெரிவித்தனர். முதல்வரும் சட்டமன்றத்தில் தெரிவித்தார். (http://timesofindia.indiatimes.com/city/chennai/anti-nationals-anti-socials-hijacked-jallikattu-stir-o-panneerselvam/articleshow/56822214.cms )

Chennai riots - Jallikattu

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அமைப்புகளும் அவற்றின் உறுப்பினர்களும் தலைவர்களும் ஈடுபட்ட தேச விரோத செயல்பாடுகள் அனைத்திற்கும் ஆதாரங்கள் காவல்துறையிடமும், புலனாய்வுத் துறையிடமும் உள்ளன. மத்திய மாநில அரசுகள் உடனடியாக அவ்வமைப்புகள் மீது நடவடிக்கை எடுத்து, அவற்றைத் தடை செய்ய வேண்டும். அப்போதுதான் தமிழகத்தில் அமைதி நிலைநாட்டப்படும். இல்லையென்றால் தமிழகமும் காஷ்மீரைப் போன்று நிரந்தர வன்முறைக்களமாக ஆகிவிடக்கூடும்.

 

பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கும் மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. ஜல்லிக்கட்டுப் போராட்டம் கொடுத்த அனுபவத்தைப் பயன்படுத்தி, தேசப்பற்று மிக்க கட்சிகளுக்கும் அமைப்புகளுக்கும் ஆதரவளித்து, தேச விரோத சமூக விரோத அமைப்புகளையும் கட்சிகளையும் புறக்கணித்து, தமிழகத்தின் வளர்ச்சிக்கும் இந்தியாவின் முன்னேற்றத்துக்கும் பாடுபட வேண்டும்.

 

(முற்றும்)

Series Navigationஜல்லிக்கட்டுப் போராட்டம்   ஜல்லிக்கட்டுப் பாரம்பரியமும் நீதிமன்ற வழக்குகளும்
author

Similar Posts

Comments

  1. Avatar
    C M Amrtheswaran says:

    விலாவாரியாகத் தொகுக்கப் பட்ட உண்மை செய்திகள். மிகை இல்லாமல் சரியாகப் பொறிக்கப் பட்ட தொகுப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *