திருவல்லவாழ் சென்ற (மடலூறும் நாயகி)

author
0 minutes, 0 seconds Read
This entry is part 16 of 18 in the series 12 பெப்ருவரி 2017

எஸ். ஜயலக்ஷ்மி.

மலைநாட்டுத் திருப்பதிகளுள் ஒன்றான திருவல்லவாழ், திருவல்லா என்றழைக்கப் படுகிறது.இங்கு இயற்கை எழில் கொஞ்சி விளையாடுகிறது. திருவல்லாவில்

பொன்திகழ் புன்னை மகிழ் புது மாதவி மீதணவித்
தென்றல் மணங்கமழும்
அவ்வூரில்

பச்சிலை நீள் கமுகும் பலவும் தெங்கும் வாழைகளும்
மச்சணி மாடங்கள் மீதணவும்

மலைநாடு என்றாலும் வயல்களும் நிறைந்த ஊர்

ஆடுறு தீங்கரும்பும் விளை செந்நெலுமாகி எங்கும்
மாடுறு பூந்தடஞ் சேர் வயல் சூழ்ந்த ஊர்

இத்தலத்தில் வீற்றிருக்கும் கோலப்பிரானை அடைய பராங்குச நாயகி விரும்புகிறாள் அங்கு செல்லவும் தயாராகிறாள். ஆனால் தோழிகள் தடுத்து, இது சரியில்லை. அவசரப்பட வேண்டாம் என்று அறிவுரை சொல்கிறார்கள்.
ஆனால் நாயகியோ தோழிகள் சொல் வதை ஒரு பொருளாகவே நினைக்கவில்லை., “தோழிகளே! திரு வல்லவாயில் உள்ள சோலையும், அங்கிருந்து புறப்படும் தென்ற லும், மலரிலுள்ள தேனைக் குடித்துப் பாடும் வண்டுகளின் ரீங்கார மும், ஊரிலுள்ள ஆரவாரமும் என்னை வா வா என்று அழைக்கின் றன. அதனால் நான் திருவல்லா செல்லப்போகிறேன்.

திருவல்லவாழ் உறையும்
கோனாரை அடியேன் அடி கூடுவது என்று கொலோ?

என்று தன் எண்ணத்தை வெளியிடுகிறாள்.

தலைவியின் உறுதி

இதைக்கேட்ட தோழிகள், “இருந்தாலும் உனக்கு இவ்வளவு அவசரமும், தவிப்பும் தகாது” என்று சொல்ல நாயகியோ, “நீங்கள் இப்படி என்னைத் தடுக்கத் தடுக்க நான் மேலும் மேலும் நொந்து மெலிந்து கொண்டே போகிறேனே இது உங்களுக் குத் தெரியவில்லையா? நானோ எம்பெருமானைக் கண்டு அவன் அடித்துகளை என் தலையில் எப்போது சூடுவேன் என்று தவிக்கி றேன். திருவல்லவாழ் திருத்தலத்திலே வேதஒலி கடல் போல் முழங்கும். அந்த ஒலி முழக்கமும் அங்கிருந்து எழும்பும் ஓமப் புகையும் எனக்கு இனிமை பயக்கும். அதனால் நான் திருவல்லவாழ் செல்லவேண்டும் அங்கு சென்று.

கழல்வளை பூரிப்ப நாம் கண்டு கைதொழக் கூடும் கொலோ?

நல்லருள் நம்பெருமான் நாராயணன் நாமங்களே
தொல்லருள் நல்வினையால் சொலக்கூடுங்கொல்?

என்று தோழிமர்களை வினவுகிறாள்.

நாயகியின் சலிப்பு.

பெருமானைக் காணவேண்டும், அவனை அடைய வேண்டும் என்ற தவிப்பு நாயகிக்கு அதிகமாகவே, பறவைகளையும், வண்டுகளையும் தூதாக விடுத்துப் பார்த்தாள். ஆனால் அவை ஒன்றும் தெரிவிக்காமல் இருந்து விடவே, பெருமான் தன் வேண்டுகோளை நிராகரித்து, தன்னை வெறுத்து ஒதுக்குவதாக நினைத்தாள். அவனுடைய வெறுப்புக்கும், புறக்கணிப்புக்கும் ஆளான பின் அவனுக்கு வேண்டதவை தனக்கும் வேண்டுமோ? என்று தன்னையே கேட்டுக் கொள்கிறாள்.

மாறாளன் கவராத மனிமாமை குறை இலமே

என் அழகும் என் இளமையும், என் நிறமும் எனக்கு எந்தப் பயனை யும் தரவில்லையே என்று வருந்துகிறாள். சரி, இந்த அழகும் நிறமும் எப்படியோ போகட்டும். என் அடக்கத்தால் என்ன பயன்? பாம்பணை யில் பள்ளி கொள்பவன் என் அடக்கத்தை மதிக்கவில்லையே. என்

அடக்கத்தைப் புரிந்து கொண்டு அவனாகவே வந்து என் கரம் பற்று வான் என்று களிப்போடிருந்தேன். அடக்கமாக இருந்து என்ன பிர யோசனம்? அவன் தான் என் அறிவையோ. என் ஒளியையோ விரும்பியதாகவும் தோன்றவில்லை. அவனுக்கு வேண்டாதவை எனக்கும் வேண்டாம்
மணி நீல
வளர் ஒளியான் கவராத வரிவளையால் குறையிலமே
விரிபுகழான் கவராத மேகலையால் குறையிலமே

என்று சலித்துக் கொள்கிறாள். பெருமான் பிராட்டியை திருமார்பில் தரித்திருக்கிறான். கங்காதரனான சிவனுக்கும் தன் உடம்பில் ஒரு பாதியைக் கொடுத்து சங்கரநாராயணனாக விளங்குகிறான். அவ னையே நினைத்து உருகும் எனக்கும் ஒரு இடம் தரக் கூடாதா
என்று தோன்றுகிறது இவளுக்கு.

தடம்புலை சடைமுடியன் தனி ஒரு கூறு
அமர்ந்து உறையும்
உடம்புடையான் கவராத உயிரினால் குறையிலமே

அப்பெருமான் விரும்பாத உயிரும் உடலும் இருந்து தான் என்ன பயன்? என்று விரக்தியில் பேசுகிறாள்.

நாயகியின் முடிவு

பெருமானின் பிரிவைப் பொறுக்க முடிய வில்லை. அவன் வந்து கூட்டிச் செல்வான் என்றும் தோன்றவில்லை. அவன் விரும்பாத பொருட்கள் மேல் இவளுக்கும் விருப்பமில்லை. அவற்றை ஒதுக்க நினைக்கிறாள். இந்த நிலையில் வழக்கத்தில் இல்லாதது என்றாலும் முயன்று பார்த்தால் என்ன என்று எண்ணு கிறாள். மடலூர்ந்தால் என்ன? என்று எண்ணிப் பார்க்கிறாள்.

மடலூர்தல்

தலைவியைப் பிரிந்த தலைவன் பிரிவாற்றாமையால் அவள் உருவத்தை ஒரு படமாக எழுதி அதைப் பார்த்துக் கொண்டே பனங்கருக்கால் செய்த மடலைக் குதிரையாகக் கொண்டு உணவும், உறக்கமும் இல்லாமல் தலைமயிரை விரித்துக் கொண்டு பித்தனைப்போல் திரிவான். இதைக் கண்ட ஊர்ப் பெரிய வர்கள் அப்பெண்ணை அழைத்து வந்து அவனிடம் ஒப்படைப்பார்கள். ஆடவர் மடல் ஊர்வது தான் தமிழ் நெறி. ஆனால் நம்மாழ்வாரும், திருமங்கையாழ்வாரும் பெண் பாவனையில் மடலூரப் போவதாகப் பாசுரம் பாடியிருக்கிறார்கள். தலைவனைப் பிரிந்த ஆற்றாமை தாங்காமல் மடலூர்ந்தாவது அவனை அடைய வேண்டும் என்ற தவிப்பை உணர்த்தவே அவ்வாறு பாடியிருக்கிறார்கள்.

நாயகியின் துணிவு.

ஆசை வெட்கமறியாது என்ற முது மொழிக்கிணங்க பராங்குச நாயகிக்குப் பெருமானிடம் ஆசை மிகுந்து விட்டதால் சம்பிரதாயங்களையும் மீறி மடலூறத் துணிந்து விடுகிறாள். இவளுக்கு ஊரைப் பற்றியோ, தாய் தந்தையரைப் பற்றியோ கவலையில்லை. அவள் சொல்வதைக் கேட்போமா?

என் செய்யும் ஊரவர் கவ்வை? தோழீ! இனி நம்மை
என் செய்யத் தாமரைக் கண்ணன் என்னை
நிறை கொண்டான்
முன் செய்ய மாமை இழந்து மேனி மெலிவெய்தி
என் செய்ய வாயும் கருங்கண்ணும் பயப்பூர்ந்ததுவே

(கவ்வை—பழிச்சொல்) ( பயப்பு—-நிறம் வேறுபாடு அடைதல்)

என்று துணிச்சலுடன் பேசுகிறாள். தோழீ! செவ்வாயன் என்னை நிறை கொண்டு விட்டான். அதனால் எந்த நிலையிலும் அவனைப் பற்றிய பேச்சுக்களைத் தவிர வேறொன்றும் பேசுவதில்லை. குறள னாக வந்து மூவடி மண் கேட்டு நெடியவனாகி நின்று உலகை அளந்தவன் கடியனோ, கொடியவனோ, உலகுக்கு எப்படிப் பட்டவ னாக இருந்தாலும் சரி, என் நெஞ்சம் அவனை ஒரு பொழுதும் மறக்காது. அவன் தான் என் நெஞ்சைக் கொள்ளை கொண்டு விட்டானே!
துவாரகா நாதனான அவன் வலையில் அகப்பட்ட நான் மீள முடியாமல் தவிக்கிறேன். அதனால் அன்னை என்ன செய்தாலும் பரவாயில்லை. ஊரார் என்ன சொன்னாலும் கவலையில்லை. என்னை இனிமேல் தேட வேண்டாம். என்மேலுள்ள ஆசையை விட்டு விடுங்கள்

அன்னை என் செய்யில் என்? ஊர் என் சொல்லில் என்?
தோழிமீர்!
என்னை உமக்கு ஆசையில்லை, அகப்பட்டேன்
முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி
மன்னன் மணி வண்ணன் வாசுதேவன் வலையுளே
(அகப்பட்டேன்)

என்று எல்லோரையும் தன்னை மறக்கும் படி கேட்டுக் கொள்கிறாள்.

பொங்கி எழும் நாயகி

இந்தத் தாய்மார்கள் வெட்கமடையும் படி, அவனைக் கண்ணாரக் கண்டு, வாயாரப்பாடி, தலையால் வணங்க விரும்பும் நாயகி கோலப்பிரானைச் சென்று சேர்வது எப்பொழுது என்று ஏங்குகிறாள். பொறுத்தது போதும் இனி பொங்கி எழுவேன் என்று தீர்மானம் செய்த நாயகி, ”தோழீ! என் நாணத்தை யும், நிறையையும் கவர்ந்து என் நெஞ்சையும் உடன் அழைத்துக் கொண்டு சென்ற உள்ளம் கவர் கள்வனைப் பற்றி உலகறியப் பழி சொல்வேன். இவ்வளவும் செய்து விட்டு என்னைக் கைவிட்டு விட்டான், என்று ஊர் உலகறியக் குற்ற சாட்டுவேன். என்னைக் கைவிட்டு விட்டான் என்று கூவி மடல் ஊர்வேன்”

நாணும் நிறையும் கவர்ந்து என்னை நன்நெஞ்சம்
கூவிக்கொண்டு
சேணுயர் வானத்திருக்கும் தேவபிரான் தன்னை
ஆணை என் தோழி! உலகு தோறு அலர்தூற்றி ஆம்
கோணைகள் செய்து குதிரியாய் மடல் ஊர்துமே

[அலர்—பழிச்சொல், குதிரி—அடங்காத பெண். குதிரி—பெண்களுக்குச் செல்வமான நாணத்தையும் நிறையையும் இட்டு வைக்கும் செப்பு.
அதாவது சரீரம். குதிரி—குதிரையை உடையவள். அதாவது பனைமடலைக் குதிரையாகச் செய்து எடுத்துக் கொள்வர்.]

அடக்க ஒடுக்கத்தைக் கைவிட்ட இந்த நாயகி, நான் தெருக்கள் தோறும் மடல் ஊரப் போகிறேன். நாட்டார் கள் குறை கூறினாலும், அயல் பெண்கள் பழிச்சொல் கூறினாலும் அதனைப் பொருட் படுத்தமாட்டேன். உலகமே கலங்கும் படி மடல் ஊர்வேன். அப்படி மடல் ஊர்ந்தாவது சக்ரதாரியான எம்பெருமான் சூடிய திருத்துழாய் மலரைப் பெற்றுச் சூடிக் கொள்வேன்

யாமடல் ஊர்ந்தும் எம் ஆழி அங்கைப் பிரானிடைத்
தூமடல் தண்ணந்துழாய்மலர் கொண்டு சூடுவோம்.
யாமடம் இன்றித் தெருவு தோறு அயல் தையலார்
நாமடங்காப் பழி தூற்றி நாடும் இரைக்கவே.

என்று சவால் விடுகிறாள் நாயகி.

பராங்குச நாயகி இந்த அளவு தீர்மான மாகச் சொன்னாலும் மடல் ஊர்ந்ததாகத் தெரியவில்லை. ஒரு வேளை நாயகியின் திட சங்கல்பத்தைப் புரிந்து கொண்ட பெருமான் அவளைத் தடுத்தாட்கொண்டிருக்கலாம் எப்படியிருந்தாலும் பராங்குச நாயகி யின் காதலின் தீவிரமும் மன உறுதியும் நம்மை வியக்க வைக்கிறது.

===========================================================================

Series Navigationதொடுவானம் 157. பிரியாவிடை உரைமொழிபெயர்ப்பாளர் என்.கல்யாண ராமன் அவர்களுக்கு விளக்கு விருது – விழா இக்ஸ்சா மையம் – 25/2/2017 – 530 மணிக்கு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *