தொடுவானம் 158.சிதைந்த காதல்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 2 of 9 in the series 19 பெப்ருவரி 2017
        

மீண்டும் நீண்ட விடுமுறை.

இந்த முறை தாம்பரம் சென்று சில நாட்கள் கழித்துவிட்டு சிதம்பரம் செல்ல முடிவு செய்தேன். திருவள்ளுவர் பேருந்து மூலம் சென்னை சென்றேன். மின்சார இரயில் மூலம் தாம்பரம் சென்றேன்.

என்னைக் கண்ட அத்தை வீட்டினர் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி. விடுதி, படிப்பு, தனிமை, தேர்வு என்று இருந்துவிட்டு வந்த எனக்கு அது மாற்றத்தையே உண்டுபண்ணியது. வழக்கம்போல் அத்தை மகள் நேசமணி விழுந்து விழுந்து கவனித்தாள். அவள் பாவம். என்னை வைத்து நிறைய மனக்கோட்டை கட்டியிருந்தாள். நான் அதை  ஊக்குவிக்கவில்லை என்பது உண்மை. நான் யார் மீது அன்பு செலுத்தினாலும் இறுதியில் திருமணம் என்று வரும்போது அப்பாவின் முடிவுதான் எடுபடும் என்பது எனக்குத் தெரியும். இல்லையேல் அவருடைய எதிர்ப்பையே எதிர்நோக்க நேரிடும்.

அப்பாவின் முடிவை மாற்ற இயலாது என்று தெரிந்திருந்தும் எதற்காக லாதாவுடனும் வெரோனிக்காவுடனும்  தொடர்பு வைத்துக்கொள்ளவேண்டும்? லதா பற்றி அப்பாவுக்குத் தெரியும். எங்களுக்குள் இப்போது தொடர்பு இல்லை என்று நம்பினார். அது ஓரளவு உண்மைதான். அவளிடமிருந்து கடிதங்கள் முன்புபோல் வருவதில்லை. அப்படியே வந்தாலும் நானும் அவ்வளவு ஆர்வமாக பதில் எழுதுவதில்லை. அதற்கு தொலைவும் பிரிவும் முக்கிய காரணமாக இருக்கலாம். ஏனோ தெரியவில்லை வெரோனிக்காவும் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை. அவள் கல்லூரியில்தான் இன்னும் எம்.எஸ். சி. பயின்று வருகிறாள். இந்த வருடத்துடன் அதையும் முடித்துவிடுவாள்  அவளுக்கு திருமண வயதுதான். வீட்டில் என்ன ஏற்பாடு செய்துள்ளார்களோ தெரியவில்லை. அவளும் அது பற்றி ஏதும் எழுதவில்லை. இங்கும் பிரிவும் தொலைவும் காரணமாக இருக்கலாம்.கடிதம் எழுதுவதுதான் ஒரே தொடர்பு. தொலைபேசி மூலம் பேசிக்கொண்டிருக்க முடியாது.

தாம்பரம் வந்துள்ளதால் இந்த முறை வெரோனிக்காவைச் சந்திக்கலாம். அவளுடைய உண்மையான நிலையை அறிந்து கொள்ளலாம்.

          அன்று மாலை இரயில்வே காலணியிலுள்ள அவளுடைய இல்லம் சென்றேன். அவள் வீட்டில்தான் இருந்தாள். பெற்றோர் என்னை வரவேற்றனர். தேர்வு பற்றி விசாரித்தனர்.இப்போதுதான் இறுதியாண்டு தேர்வுகள் முடிந்துள்ளதாகக் கூறினேன். தேர்ச்சி பெற்றதும் என்ன செய்வேன் என்று கேட்டனர். நான் கட்டாய பயிற்சி மருத்துவனாக ஒரு வருடம் கழிக்கவேண்டும் என்றேன். அது முடிந்தபின் சிங்கப்பூருக்கு திரும்பிவிடுவேனா என்றும் கேட்டார்கள்.  நான் அது பற்றி இப்போது கூற இயலாது என்றேன்.  வெரோனிக்கா அப்போது காப்பி கொண்டு வந்து தந்தாள்.
          புன்னைகைத்தவண்ணம் , ” நலமா? ” என்று மட்டும் கேட்டாள்.
          ” நலம். நீ நலமா? எம்.எஸ்.சி. தேர்வுகள் முடிந்ததா? ” அவளைப் பார்த்து கேட்டேன்.
          ” எனக்கும் இப்போதுதான் முடிந்தன. ” அவள் பதில் சொன்னாள்.
          அவளைக் காண முன்பு இருந்த ஆர்வம் இல்லாதவள் போன்று காட்சி தந்தாள். ஏதோ நடந்துள்ளது போன்றிருந்தது. அவளுடன் பழகிய எனக்குத் தெரியாதா அவளை பற்றி? அது என்னவாக இருக்கும் என்று அறிந்துகொள்ள ஆவல் பிறந்தது. அதை இங்கே அவளுடைய பெற்றோரின் முன்னிலையில் கேட்கலாகாது. வெளியில் சென்றால்தான் நல்லது. குறிப்பறிந்து எங்களை ஹாலில் விட்டுவிட்டு அவர்கள் வெளியேறினார்கள்’
          ” வெளியில் செல்வோமா? ” நான் அவளைப் பார்த்துக்  கேட்டேன்.
          ” சரி. நான்கூட உங்களிடம் நிறைய பேசவேண்டும். ” என்றாள்.
” கொஞ்சம் பொறுங்கள் ” என்று சொல்லியவாறு பக்கத்து அறையினுள் நுழைந்தாள். சற்று நேரத்தில் உடை மாற்றிக்கொண்டு வந்தாள். சிவப்பு நிற சேலையில் அவள் அழகாக இருந்தாள். வெளியில் அவளைப் பார்ப்பவர்கள் இன்னொரு முறையும் திரும்பிப் பார்ப்பார்கள். அவ்வளவு அழகு!
          தாம்பரம் தொடர்வண்டி நிலையத்திலிருந்து மின்சார இரயில்  மூலம் பூங்கா வரை சென்றோம். அங்கிருந்து வாடகை ஊர்தி மூலம் மெரினா சென்றோம்.அது எங்களுக்கு வழக்கமான இடம்தான். பயன்படாத அந்த பழைய படகு அங்கேயே மணலில் பதிந்திருந்தது. அது அனாதை படகு போலும்.அதன் அருகில் மணல் பரப்பில் அமர்ந்தோம்.
          கொஞ்ச நேரம் அமைதி. கடல் அலைகளின் இரைச்சல் ஓலமிடுவது போன்றிருந்தது. முன்பெல்லாம் அது ஆரவாரத்துடன் பாடுவது போன்றிருக்கும். மனநிலைக்கு ஏற்றவாறு அதன் ஓசை மாறும் போலும்.
          ” ஏன் இந்த முறை என்னவோபோலிருக்கிறாய்? ” நான் அமைதியைக் கலைத்தேன்.
          ” என்னவோ போலென்றால் எப்படி? “
          ” ஏதோ சோகத்தில் உள்ளது போன்று. “
          ” ஆமாம். சோகம் இல்லாமல் வேறு எப்படி? “
          ” எதற்கு இந்த சோகம்? என்ன ஆனது? “
          ” ஒண்ணும் தெரியாததுபோல் கேட்கிறீரே? உண்மையில் தெரியவில்லை? “
          ” தெரியும். அதனால்தான் கேட்டேன். “
          ” என்ன தெரியுது? சொல்லுங்கள் கேட்கிறேன். “
          ” கடிதம் போடவில்லை என்ற கோபம்தானே ? “
          ” அதற்குதான் காரணம் சொல்வீர்களே? படிப்பு. அதனால் நேரமில்லை என்று.”
          ” அதுதான் தெரியுதே? பின்பு எதற்கு கோபம்? “
          ” இதை என்னை நம்பச் சொல்கிறீரா? மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. உங்களுக்கு மனம் இல்லை.”
          ” எனக்குதான் மனம் இல்லை. உன் மனம் என்ன ஆச்சு? நீ மட்டும் எழுதினாயா? “
          ” எனக்கு வேறு பிரச்னை. “
          ” அது என்ன? அதையாவது எழுதியிருக்கலாமே? “
          ” உங்களுக்குத்தான் என் நினைவே இல்லையே? எழுதி என்ன ஆகப்போகிறது? “
          ” சரி. இப்படி பேசவேண்டாம். நம் இருவர் மீதும் குறை உள்ளது. அதற்கு சந்தர்ப்ப சூழ்நிலையும், பிரிவும்,  தொலைவும், படிப்பும்  காரணம். வேறு என்ன காரணம்? “
          ” சரி. உங்களுக்கு இறுதித் தேர்வும் முடிந்துவிட்டது. இன்னும் ஒரு வருடம் பயிற்சி மருத்துவராக வேலூரில் இருக்கவேண்டும். அதன் பின்பு உங்கள் திட்டம் என்ன? “
          ” நான் எங்களுடைய திருச்சபை மருத்துவமனையில் இரண்டு வருடங்கள் பணியாற்ற வேண்டும்.”
          ” எந்த ஊரில்? “
          ” அதை இப்போது கூற இயலாது. திருச்சபைக்குச் சொந்தமான மூன்று மருத்துவமனைகள் உள்ளன. திருச்சியில், திருப்பத்தூரில், கோவையில். அவர்கள் என்னை எங்கு வேண்டுமானாலும் அனுப்புவார்கள். “
          ” உங்கள் அப்பா எப்போது சிங்கப்பூரிலிருந்து திரும்புவார்? “
          ” அநேகமாக அடுத்த வருடம். “
          ” வந்ததும் உங்கள் திருமணம் பற்றி பேசுவாரா? “
          ” எனக்குத் தெரியாது.ஆமாம். ஏன் இதுபற்றி இப்போது கேட்கிறாய்? “
          ” சொன்னால் கோபித்துக்கொள்ளமாட்டீரே ? “
          ” இல்லை. சும்மா சொல்லு. “
          ” எனக்கு திருமண வயதாம். அதனால் எனக்கு திருமண ஏற்பாடு நடக்கிறது எங்கள் வீட்டில். “
          நான் அது கேட்டு அதிர்ச்சி அடையவில்லை. அனால் மெளனம் சாதித்தேன். அவள் சொல்வதிலும் நியாயம் உள்ளது. அவள் பெண். திருமண வயதைக் கடந்துபோக பெற்றோர் விரும்பமாட்டார்கள்.
          ” அப்படியா? உன் பெற்றோர் என்னதான் சொல்கிறார்கள்? “
          ” இந்த வருடம் எனக்கு கல்யாணமாம். “
          ”  மாப்பிள்ளை ? “
          “பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். “
          ” அதற்கு நீ என்ன சொன்னாய்? “
          ” ஒண்ணும் பதில் சொல்லலை. எனக்கு அதில் விருப்பமில்லை.”
          ” ஏன்? “
          ” நான் சரி என்றோ வேண்டாம் என்றோ கூறவில்லை.”
          ” அப்படியென்றால் என்ன பொருள்? “
          ” என் கையில் ஒன்றுமில்லை என்பது. “
          ” புரியும்படி சொல். “
          ” மெளனம் சம்மதத்தின் அறிகுறிதானே? “
          அவளைப் பார்த்தேன்.தலைகுனிந்திருந்தாள்.
          “அப்படியெனில் நீ வேறொருவரை மணந்துகொள்ள முடிவு செய்துவிட்டாயா? “
          ” எனக்கு வேறு வழி தெரியவில்லை. “
         ” அப்படியானால் நம் காதல்? ‘
          ” அதை நம்மால் காப்பாற்ற முடியவில்லையே?”
         ” நீ சொல்வதும் உண்மைதான். நீ முன்பே சொல்லியுள்ளாய். மருத்துவக் கல்லூரிக்குச் சென்றுவிட்டால் நாமும் பிரியவேண்டிவரும் என்று. அது உண்மையானது. அதுவும் மருத்துவப் படிப்பு முடியும் தறுவாயில். தொலைவும், படிப்பும் நம் காதலுக்கு தடையாகிப்போனது. அதனால் அது நம்மை இந்த நிலைக்குக் கொண்டுவந்துவிட்டது. இனி நாம் நிரந்தரமாகப் பிரியும் வேளையும் வந்துள்ளது. “
          ” என்ன செய்வது? கவலையாகத்தான் உள்ளது. உங்களையும் உங்களுடைய இலக்கியத்தையும் நான் காதலித்தேன்.அது கைகூடாமல் போய்விட்டது. ஆனால் நான் எங்கிருந்தாலும் உங்களையும் உங்கள் இலக்கியத்தையும் மறவேன். ஏனென்றால் இதுவே என் முதல் காதல்.” அவள் கண்கலங்குவது தெரிந்தது.
          நான் அது எனக்கு முதல் காதல் என்று பொய் சொல்லவில்லை.
          ” நீ எங்கிருந்தாலும் நன்றாக இருக்க நான் இறைவனிடம் பிரார்த்திப்பேன். இந்தக் கல்லூரி காதலை நான் எங்கிருந்தாலும் மறவேன்.” அவளின் கன்னத்தில் வழிந்தோடிய கண்ணீரைத் துடைத்து விட்டேன்.
          ” ஆம். இது மறக்கமுடியாத முதல் காதல் அனுபவம். நீங்கள் எழுதிவரும் நாட்குறிப்பில் இதையும் மறக்காமல் பதிவு செய்யவும். பின்நாளில் உங்களுடைய சுய சரிதை எழுதும்போது நம் காதலை மறக்காமல் எழுதவும். அந்த வகையிலாவது நம் காதல் அழியா காவியமாக வாழட்டும். ” உருக்கத்துடன் கூறினாள்.
          ” நிச்சயமாக இதை எழுதுவேன். நான் என்னுடைய வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் அனைத்தையும் பதிவு செய்துதான் வருகிறேன். இது நிச்சயமாக அதில் இடம் பெறும். ” சோகத்துடன் சொன்னேன்.
         இது ஒரு சோகக் காதல் கதைதான். எதிரே வங்கக் கடல் சோக கீதத்தையே  .ஒலித்தது. வானமும் இருட்டியது.
          ” சரி. இருட்டிவிட்டது. நாம் வீடு திரும்புவோமா? ஒரு வேளை இதுவே நமக்கு கடைசி சந்திப்பாகவும் இருக்கலாம். நாம் உள்ளத்தால் ஒன்றுபட்டவர்களாகவே பிரிந்து செல்வோம். ” நான் கரம் நீட்டி அவளை தூக்கி விட்டேன். அவள் எழுந்து நின்று என்னை உற்று நோக்கினாள். நெருங்கி வந்தாள். இருவரும் இறுக அணைத்துக்கொண்டோம்.
          மின்சார இரயில் பயணம் வரை என்னுடைய கரத்தைப் பற்றியபடியேதான் அமர்ந்திருந்தாள். அந்த இரயிலின் ஓட்டமும் எங்களுடைய மனவோட்டத்தை ஒத்திருந்தது!
          வெரோனிக்காவை அவளுடைய வீட்டில் விட்டுவிட்டு விடைபெற்றேன்.அது சோக மயமானது.வீதியின் திருப்பம்வரை அவள் வீட்டின் வாசலில் நின்று எனக்கு விடைகொடுத்தாள்
          அத்தை வீட்டில் இரண்டு நாட்கள் தங்கினேன்.
          அப்போது பள்ளி விடுமுறை. என்னுடன் அத்தையும் நேசமணியும் ஊர் வருவதாகச் சொன்னார்கள். அது எனக்கு நல்லதாகப் பட்டது. நான் சரி என்றேன்.
          அத்தை எங்கள் ஊரில் அனைவருக்கும் செல்லப் பிள்ளை. பெயர் ரூத் குணமணி. தெம்மூரில் எங்கள் வீட்டில் பிறந்து வளர்ந்தவர். அப்பாவும் பெரியப்பாவும் அவருடைய அண்ணன்கள்.இரண்டு அண்ணன்களின் செல்ல தங்கை அவர். மாயவரம் போர்டிங்கில் அவர் கல்வி கற்ற பின் தரங்கம்பாடியில் ஆசிரியர் பயிற்சி பெற்றவர். திருவெண்காடு என்னும் ஊரில் பால் மாமாவுக்கு அத்தையை மணமுடித்துத் தந்தனர். அப்பாதான் அப்போது மணமகளாக அத்தையை திருவெண்காடு வரை கூண்டு வண்டியில் ஏற்றிச் சென்றாராம். அத்தையின் திருமணத்தின்போது நான் அம்மாவின் வயிற்றில் இருந்தேனாம்.மாமா அப்போது சென்னை கிறிஸ்துவக் கல்லூரில் இயற்பியல் பிரிவில் உதவியாளராக பணியில் இருந்துள்ளார். திருமணத்துக்குப் பிறகு அத்தைக்கும் தாம்பரத்தில் உள்ள கத்தோலிக்க ஆரம்பப் பள்ளியில் ஆசிரியை வேலை வாங்கிக் கொடுத்தாராம். கல்லூரி ஊழியருக்கு தரப்பட்டுள்ள வீட்டில் அப்போதே குடிபுகுந்து விட்டனர்.அதுதான் தாம்பரத்தில் உள்ள அத்தை வீடு.அது கான்கிரீட் வீடு. கழிவறை, சமையல் அறை, வாசல், தோட்டம்,குழாய் நீர், மின்சாரம் ஆகிய அனைத்து வசதிகளும் இருந்தன.
          அத்தை ஊருக்கு வந்துவிட்டால் வீடு கலகலப்பாக இருக்கும். உறவினர்கள் அனைவரும் அன்றாடம் வந்து போவார்கள்.அத்தையும் அவர்களின் வீடுகளுக்குச் சென்று வருவார். அவர் எல்லாருக்கும் எப்படி செல்லப்பிள்ளையாக இந்த ஊரில் வளர்த்துள்ளார் என்பதை அது பிரதிபலிக்கும்.
          கல்வியறிவு குறைவான அந்தக் காலத்திலேயே எங்கள் கிராமத்திலிருந்து படித்து ஒரு பயிற்சி பெற்ற ஆசிரியையான பெருமை அத்தையைச் சேரும். அக்காலத்தில் கிராமத்துப் பெண்கள் பள்ளி சென்று படிப்பது என்பது அபூர்வமாக கருதப்பட்டது.
          அந்த முன்னேற்றத்திற்குக் காரணகர்த்தா எங்கள் தாத்தாதான். கிராமச் சூழலில் இருந்துகொண்டே தம்முடைய மூன்று பிள்ளைகளையும் ஆசிரியர்களாக உருவாக்கியுள்ளார். ஆம். அத்தையைப்போல் அப்பாவும், பெரியப்பாவும் தமிழ் ஆசிரியர்கள்தான். இதனால் நான் தமிழ் ஆசிரியர் குடும்பததைச் சேர்ந்தவன் என்பதில் பெருமிதம் கொள்வதுண்டு.
( தொடுவானம் தொடரும் )
Series Navigationபுனித ஜார்ஜ் கோட்டையும், மன்னார்குடி மங்காத்தாவும்.கோடிட்ட இடங்கள்….
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *