இன்றும் வாழும் இன்குலாப்

author
0 minutes, 2 seconds Read
This entry is part 6 of 14 in the series 26 பெப்ருவரி 2017

 

”இன்குலாப்” என்றாலே புரட்சி என்று பொருள்; அப்படியே தான் புகுந்த எல்லாத்துறைகளிலும் புரட்சி செய்து வாழ்ந்து மறைந்தவர்தாம் கவிஞர் இன்குலாப். இலக்கியத்துறையில் புகும் எவரும் முதலில் எழுதுவது கவிதைகள்தாம்; அதுவும் காதல் கவிதைகள்தாம்; இதற்கும் இன்குலாப் ஒரு விதிவிலக்கு. அவர் எழுதிய கவிதைகளை எல்லாம் நெருப்புத் துண்டங்கள், சமுகத்தீமைகளை அழிக்க வந்த சூட்டுக்கோல்கள் என்று துணிந்து சொல்லலாம். அவருக்கு அரசின் எந்தவித ஒரு தனிப்பட்ட அங்கீகாரமும் கிடைக்கவில்லை.

அதைப்பற்றி அவர் கவலைப்படவும் இல்லை. காற்று எதையேனும் எதிர்பார்த்தா வீசுகிறது? மழை எதையேனும் எதிர்பார்த்தா பொழிகிறது? அதுபோல்தான் கவிஞரும். உதாரணத்திற்குப் பாரதியை இன்குலாப் நினைத்துக் கொள்கிறார். கட்சியிலோ, தன் இனத்திலோ, சொந்த ஊரிலோ எந்தவித அங்கீகாரமும் பெறாத பாரதி மறைந்த பிறகுதான் அவருக்குப் புகழாரமும், சொற்சாமரங்களும் வீசப்படுகின்றன.

இன்குலாப் அதை இப்படி எழுதுகிறார். உலகம் எப்பொழுது வாழ்த்தும் என வினா விடுத்து விடை கூறுகிறார்.

”வாழ்ந்து பிணமானால் உன் போன்றோரை

பிணமாக வாழ்ந்தால் என் போன்றோரை”

என்று பாரதியிடம் கூறுகிறார். வாழ்தல், பிணம் என்னும் இரு சொற்களினால் மிகப்பெரிய சிந்தனைகளையே தோற்றுவிக்கிறார்.

பெருமாள் கோயிகளில் மார்கழி மாதப் பஜனை முடிந்ததும் எல்லாருக்கும் கொடுக்கும் சுண்டல் போல அவருக்கும் ’கலைமாமணி’ வழங்கப்பட்டது. தன் கவிதைக்குக் கொடுக்கும் மரியாதை என்றும் தன் கருத்துகளுக்குக் கிடைக்கும் அடையாளம் என்றும் அவர் ஏற்றுக்கொண்டார். ஆனால் அந்தப் பட்டம் அவரின் மனச்சாட்சியை ஒரு கட்டத்தில் உறுத்தத் தொடங்கியது. இங்கிருந்து சுமார் முப்பது கி.மீ தொலைவில் என் இனம் அழிகிறது. நடுவில் ஒரு கடல்தான்; ஆனால் இங்குள்ள தமிழரின் அரசு அதைத் துடைக்க சுட்டு விரலைக் கூட அசைக்கவில்லை; அப்படிப்பட்ட ஓர் அரசாங்கம் அளித்த விருதை நான் சுமக்க வேண்டுமா எனும் எண்ணம் அவருள் எழுந்தது. விருதென்றாலே வாய்பிளக்கும், விருது பெற எல்லாவகையிலும் முயலும் ஒரு சில எழுத்தாளர்களில் இன்குலாப் வேறுபட்டிருந்தார். அவர் உடனே தன் நெஞ்சத்தின் ஆணைக்கேற்ப 2006-இல் ‘கலைமாமணி’ விருதை அரசிற்கே திருப்பி அளித்தார்.

அவருக்கு    ஒரே ஆசான் அவருடைய மனச்சாட்சியே; இன்குலாப் மனத்தில் தோன்றிய வண்னம் வாழ்ந்தார். அதற்குத் தடையாக இருக்கும் எல்லாவற்றையும் உதறித் தள்ளினார். அவர் தொடக்க காலத்தில் 60-களில் இருந்த எல்லா இளைஞர்கள் போலவும் திராவிட முன்னேற்றக் கழக ஆதரவாளராகத்தான் இருந்தார். ஆனால் 1968-இல் நிகழ்ந்த கீழவெண்மணிப் படுகொலை அவரது தடத்தையே மாற்றி அமைத்தது. அது இன்குலாப் மனத்தில் ஆறாத வடுவாக அமைந்தது.

அப்போதுதான் தலித் மக்களின் தேசியகீதமான ‘மனுசங்கடா; நாங்க மனுசங்கடா” என்னும் அவரது கவிதை தோன்றியது. பேராசிரியர் கே.ஏ.குணசேகரன் அக்கவிதையை இசையமைத்துத் தமிழ் நாட்டு மேடைகளில் எல்லாம் முரசொலித்தது குறிப்பிடத்தக்கது.  அவர் தொழிலாளர்தம் துயர் நீங்க வழி காணும் மார்க்சியத்தைச் சார ஆரம்பித்தார். அதேபோல இன்குலாபின் தொடக்ககாலக் கவிதைகளில் ‘வானம்பாடி’க் கவிஞர்களின் சாயலைக் காணலாம். பின்னால் அவரின் குரலானது சற்று வேறுபட்டுத்தான் ஒலித்தது. ஆனாலும் ஒரு சில கவிதைகள் மெய்ப்பொருளைக் காணவும் முயன்றன. “முதல் நொடி என்று ஒரு கவிதை.

எல்லாவற்றுக்கும் ஒரு தொடக்கம் இருக்கும். ஆனால் அதையே நினைத்துக்கொண்டிருந்தால் வாழ்வின் பாதை மாறிவிடும். சில நேரங்களில் தொடக்கம் வகுக்கும் பாதை நம் குறிக்கோளையும் மாற்றக்கூடியது. எனவே அதை மறந்து நம் வினையை நாம் தொடர்ந்து செய்ய வேண்டும். தொடக்கம் சரியாக இல்லாவிடிலும் அதைச் சீர்திருத்தி சிறந்த வேறொன்றைத் தேர்ந்தெடுக்க முதல் நொடியை மறதியின் வாயில் தள்ள வேண்டும்.

”உயிர்ப்பின் முதல் நொடியை

உணர முயல்கிறேன் மீண்டும்

 

பொருளில் உணர்வு தோன்றிய கணம்

ஓடுவரா முட்டையின் முதல் அசைவு

வித்தின் மண் தேடும் ஆதி விழைவு

 

நரைத்து ஒரு முடி உதிர்ந்த சமயம்

உணர்ந்தேன்

அது

என் மறதியின் முதல் நொடி”

உலகில் பிறக்கும் எந்த உயிரும் ஏதோ ஒரு பயன்பாடு கருதியே தோன்றுகிறது. ஆனால் பிறவியின் அருமையை அது மறந்து விடுகிறது. வெந்ததைத் தின்று விதி வந்தால் மாள்வோம் என்று வாழத் தொடங்குகிறது. விழிப்பு வரும்போதுதான் உயிர்ப்பின் முதல் நொடியை அறிகிறது. தான் இத்தனை நாள் மறந்ததையும் அறிகிறது என்றும் இக்கவிதை புதிய வாசலைத் திறந்து வைக்கிறது.

இன்குலாப் ஒரு சாதாரண ஏழ்மைக் குடும்பத்தில் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பிறந்தார். அவரின் இயற்பெயர் கே.எஸ்.சாகுலமீது என்பதாகும். அவரின் தந்தை ஒரு சித்த மருத்துவர். இன்குலாப் தன் புகுமுக வகுப்பை மன்னர் துரைசிங்கம் நினைவுக்கல்லூரியில் படித்து முடித்தார். அங்குதான் அவருக்குக் கவிஞர் மீராவின் தொடர்பு ஏற்பட்டது.

மதுரைத் தியாகராசர் கல்லூரியில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்த அவர் புதுக்கல்லூரியில் ஆசிரியப் பணியை ஏற்றார். அந்தக் கல்லூரியின் நிருவாகத்திற்கு எதிராக இன்குலாப் நடத்திய போராட்டங்கள் அனைவரும் அறிந்ததாகும்.

”சூரியனைச் சுமப்பவர்கள்” என்னும் இன்குலாபின் கவிதைத்தொகுப்பு மிக முக்கியமான ஒன்றாகும். துடி, மீட்சி, குரல்கள், அவ்வை, மணிமேகலை ஆகிய நாடகங்களையும் அவர் எழுதி உள்ளார். சிற்பி இலக்கிய விருது, கவிஞர் வைரமுத்து விருது ஆகிய விருதுகள் அவரைத் தேடி வந்தன.

இன்குலாப் ஒரு மனித நேயக் கவிஞர். மனித உரிமையானது எங்கு நசுக்கப்பட்டாலும் அங்கு வந்து குரல் கொடுப்பவர். சமயம், சாதி, இனம் எல்லாமும் கடந்து மானுடம் பாட வந்தவர் அவர். எந்தச் சுவரும், எந்த அடையாளக்குறிகளும் மனிதரைப் பிரிக்கக்கூடாதெனும் கொள்கை உடையவர் அவர். அதனால்தான் இப்படி எழுதுகிறார்.

”சமயம் கடந்து மானுடம் கூடும்

சுவரில்லாத சமவெளி தோறும்

குறிகளில்லாத முகங்களில் விழிப்பேன்

மனிதம் என்றொரு பாடலை இசைப்பேன்”

புதுமைப் பித்தன் ‘பொன்னகரம்’ சிறுகதையை கற்பு, கற்பு என்று கதைக்கிறீர்களே பாருங்கள் இதுதானய்யா கற்பு என எண்ணும்படி ஓர் எள்ளலாக முடித்திருப்பார். “என் பெயர் மருதாயி” எனும் இன்குலாபின் கவிதையைப் பாடிக்கும்போது அதுதான் நினைவுக்கு வந்தது. சாதாரணமான ஓர் ஏழைப் பெண்ணின் நிலை அது. வாழமுடியாத வாழமுடியாத இவ்வுலகில் அவள் தன் பண்பாட்டை விமர்சிக்கிறாள். யார் சுய விமர்சனம் செய்கிறார்களோ அவர்களது நேர்மையைச் சந்தேகிக்க முடியாது. அவர்களில் ஒருவர்தாம் இன்குலாப் என்பதற்கு இக்கவிதையே சான்றாகும்.

“அய்யா! ஆன்ற தமிழ்ச் சான்றோரே!

உங்கள் பண்பாட்டை நீங்கள் பிடித்த

காலகாலமாய் நானும் நடக்கின்றேன்

கற்புத் தோன்றிய அன்றைக்கே

நானும் தோன்றி விட்டேன்

தாய்மொழி–=தமிழ்

பெயர்—–மருதாயி

தொழில்—பரத்தை

இளம் பருவத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தொடங்கியதிலிருந்து தன் வாழ்வையே போராட்டத்தில் கழித்தவர்தாம் இன்குலாப். சமூகத் தீமைகள் தொடரும்வரை, மனிதநேயம் காயப்படுத்துவது நிற்காதவரை, ஒடுக்கப்பட்டோரின் அவலங்கள் தீராதவரை, பெண்ணினத்திற்குக் கேடுகள் நிகழும்வரை இன்குலாபின் நினைவும் அவரது கவிதைகளும் போராடிக்கொண்டுதான் இருக்கும். அதனால்தான் இன்குலாப் இன்றும் என்றும் வாழ்வார் எனத் துணிந்து கூறலாம்.

===========================================================================================

Series Navigationதொடுவானம் 159. இனி நான் மருத்துவன்!பாப விமோசனம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *