பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் தலைமையில் சப்தஸ்வரம் கோபால் குழுவினரின் இன்னிசை மழையில் நகைச்சுவையுடன் ஒரு கோலாகலக் கொண்டாட்டம்.
18 பிப்ரவரி 2017- ஹாங்காங் நாம் சொங்கில் உள்ள ஸர் எல்லீஸ் கதுரி வளாகத்தில் 600 க்கும் மேற்பட்ட தமிழ்ப் பார்வையாளர்களுடன் பிற தென்னிந்திய மொழிகளான தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட அன்பர்கள் கலந்துகொண்ட , கிட்டத்தட்ட 6 மணி நேரம் நடந்த விழாவினை இனிய மாலைப் பொழுதில் அனுபவித்து மகிழ்ந்தனர்.
தலைமை உரையை 50 ஆவது ஆண்டின் தலைவர் திரு.முஜிபுர் ரஹ்மான் நல்க, அன்று அங்கு கூடியிருந்த முன்னால் தலைவர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுப்பரிசு வழங்கிய பின் 50 ஆண்டு கால முக்கிய நிகழ்ச்சிகளைத் தொகுத்த வீடியோ திரையிடப்பட்டது.
தமிழ்த் திரைப்படங்களைத் திரையிட என ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு, கிரிக்கெட் போட்டிகள், உறுப்பினர்களின் உல்லாசப் பயணம் என விரிந்து, பின் ஹாங்காங்கிற்கு வருகை தந்த தலைவர்கள் மற்றும் கலைஞர்களை கௌரவித்ததை நினைவு கூர்ந்தது. ஹாங்காங்கில் திரு.கிரேஸி மோகன் மற்றும் திரு.ஒய் ஜி மகேந்திரன் நிகழ்த்திய நாடகங்கள், உள்ளூர் அன்பர்கள் மேடை ஏற்றிய நாடகங்கள், திரையிடப்பட்ட குறும்படங்கள் இவற்றின் காட்சிகள் காணப்பட்டன. வருடந்தோறும் நடக்கும் அரும்புகள் (குழந்தைகளுக்கான பிரத்யேக நிகழ்ச்சி), மகளிர் மட்டும், இறகுப்பந்துப் போட்டியின் படங்கள் இடம் பெற்றன. கடந்த வருடத்தில் திரையிடப்பட்ட திரைப்படங்களின் காட்சிகளும் இணைக்கப்பட்டன. ஐல்லிக்கட்டுற்கு ஆதரவு தெரிவித்து இந்திய தூதரகத்தில் 100 க்கும் மேற்பட்டோர் சென்று மனு கொடுத்த நிகழ்ச்சியும் காட்டப்பட்டது.
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ஹாங்காங் மற்றும் மக்காவ் இந்தியத் தூதுவர் திரு. புனித் அகர்வால் அவர்கள் 50 ஆண்டுகளாக வெற்றியுடன் நடைபோடும் கழகத்தையும் தமிழ் மக்களையும் வாழ்த்தினார். நிகழ்ச்சிக்கு நிதி உதவி அளித்தவர்களுக்கு கழகத்தின் சார்பாக நினைவுப்பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யுனெஸ்கோ நிறுவனத்தின் தலைவர் திரு.வீரேந்துர பட்னகர் தமிழின் பழமையையும், தமிழர் போன்றி வரும் பண்பாட்டையும் புகழ்ந்து பேசினார்.
பொன்விழா ஆண்டை ஒட்டி ஹாங்காங்கில் செயல் பட்டு வரும் காது கேளாதோர் (Silence) தொண்டு நிறுவனத்திற்கும், சென்னையிலும் மதுரையிலும் கண் பார்வையற்றோர் பள்ளி மற்றும் மேற்படிப்பு வசதிக்கு உதவி வழங்கும் (Help the Blind Foundation) நிறுவனத்திற்கும் தலா 5000 ஹாங்காங் டாலர் (இந்திய ரூபாயில் 43000) நன்கொடை வழங்கப்பட்டன.
பொன்விழா நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்ற பேராசிரியர் திரு.சாலமன் பாப்பையா விழா சிறப்பு மலரை வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்தினார். ஹாங்காங் வாழ் தமிழ் மக்களின் சமய சாதி வேறுபாடு அற்ற ஒற்றுமையைப் பெரிதும் உளமாரப் பாராட்டினார். சந்தோசமான மன நிலையில் வாழ வேண்டியது அவசியம் என நகைச்சுவையுடன் இனிய தமிழில் சொற்பொழிவாற்றினார்.
தற்சமயம் உள்ள செயற்குழு உறுப்பினர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுக் கேடயம் மூத்த தலைவர்களால் வழங்கப்பட்டது.
தொடர்ந்து சப்தஸ்வரம் கோபால் மற்றும் அவரது இசைக்குழுவினருடன் சேர்ந்து திரைப் பின்னணிப் பாடகர்கள் திருமதி.சுர்முகி, திருமதி.அனிதா, திரு.அனந்து மற்றம் திரு.வேல்முருகனின் இன்னிசை மழையில் கூட்டத்தில் இருந்த அனைவரும் ஐக்கியமாயினர்.
நேயர் விருப்பத்திற்கேற்ப பழைய புதிய இதமான பாடல்களும், குத்துப்பாட்டு கிராமியப்பாடல்களும் பாடப்பட்டன. நேயர்கள் தாளமிட்டும், ஆரவாரித்தும், நடனம் புரிந்தும் பாடகர்களை உற்சாகப்படுத்தினர். அமுதவாணனின் நகைச்சுவையும் நடனமும் மேலும் மெருகூட்டின.
நீண்ட வருடங்கள் கழக நிகழ்ச்சிகள் சிறப்புடன் நடைபெற எப்பொழுதும் பங்களிக்கும் திரு. முஜிபுர் ரஹ்மான், திரு.ராம், திரு.அருண், திரு.சாமிநாதன், திரு.பத்மநாபன், திரு. சுந்தர் அவர்களுக்கு சிறப்பு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.
செயலாளர் திரு.குமரன் பொன் விழா இதழின் விளம்பரதாரர்களுக்கும், வந்திருந்த அனைவருக்கும் நன்றி உரை தெரிவித்தார்.
திரு.ராம் எழுதிய நெய்தல் பாடலைப் பாடி இசைக்குழுவினர் அனைவரையும் ஆச்சரியப்பட வைக்க இசை மாலை முடிவு பெற்றது.
பார்வையாளர்கள் அனைவருக்கும் விழா சிறப்பு இதழும், நினைவுப்பொருளும் இரவு உணவுப் பொட்டலமும் வழங்கப்பட்டன.
செவிக்கும் வயிற்றுக்கும் நிறைவான நிகழ்ச்சியாக சிறப்புடன் நடைபெற்றது நெய்தல்.
- இந்திரனின் நெய்தல் திணை
- ஆத்ம கீதங்கள் –23 மாறியது மேலும் மாறும் ..!
- மிதிலாவிலாஸ்-8
- பிரபஞ்ச உருவாக்கத்தில் பேபி ஒளிமந்தைக் கொத்துக்கள் வடிப்பில் கரும்பிண்டத்தின் பங்கு
- தொடுவானம் 62. நேர்காணல்
- மிதவை மனிதர்கள்
- வைரமணிக் கதைகள் – 10 ஓட்டங்களும் இலக்குகளும்
- ‘சார்த்தானின் மைந்தன்’
- தமிழ் ஸ்டுடியோவின் புதிய முன்னெடுப்பு – படச்சுருள் (அச்சிதழ்)
- வெட்டிப்பய
- நூல் மதிப்புரை – சாந்தாதத் அவர்களின் “வாழ்க்கைக் காடு”
- படிக்கலாம் வாங்க… “ வகுப்பறை வாழ்விற்கானப் பந்தயமா..” ஆயிஷா நடராசனின் “ இது யாருடைய வகுப்பறை “ : நூல்
- அவநம்பிக்கையின் மேல் நம்பிக்கை
- ஹாங்காங் தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தின் ” நெய்தல்” ( கடலும் கடல் சூழ்ந்த நிலமும்)- பொன் விழா நிகழ்ச்சி