வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! – 4

This entry is part 1 of 17 in the series 19 மார்ச் 2017

ஜோதிர்லதா கிரிஜா
(ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்)

4..
தலை குனிந்தபடி வெட்கத்துடன் உட்கார்ந்துகொண்டிருக்கும் பிரகாஷைக் கிஷன் தாஸ் சில நொடிகள் போல் ஆழமாய்ப் பார்த்துவிட்டு, “அப்படியா விஷயம்? குட்டு வெளிப்பட்டுவிட்டது!” என்கிறார் கேலியாக. அவரது குரலில் அதிருப்தியும் தொனிக்கிறது.
தலையை உயர்த்தி அவரைத் துணிச்சலுடன் ஏறிட்டுப் பார்க்கும் பிரகாஷ், “உங்கள் குரலில் ஏனிந்தக் கிண்டல்? ஒரு பெணணை விரும்புவது பெருங்குற்றமா என்ன?” என்று எரிச்சலை அடக்கிக்கொண்டு கேட்கிறான்.
“சேச்சே! நான் அப்படி நினைப்பேனா? ஒரு நண்பனைப் போல் மகனை நடத்தி வந்திருக்கும் என்னிடம் என் மகன் தான் ஒரு பெண்ணை விரும்புவதைச் சொல்லாமல் மறைத்து வந்திருக்கிறானே என்கிற வியப்பிலும் ஆதங்கத்திலும்தான் அப்படிச் சொன்னேன்…யார் அந்தப் பெண்? அவள் அப்பா யார்? எல்லாவற்றையும் சொல்லு.”
பிரகாஷ் கிஷன் தாசின் கண்களைப் பார்த்தவாறு சொல்லுகிறான்: “அவளுடைய தந்தை ஒரு பணக்காரரும் அல்லர், உங்களைப் போல் ஒரு தொழிலதிபரும் அல்லர். அவர்கள் நடுத்தரக் குடும்பத்தினர். அவள் ஒரு பட்டதாரி. அவளும் அழகிதான். நீங்கள் சொன்னது போல் நல்ல உயரமும் நிறமும் மூக்கும் விழியுமான பெண். நல்ல பெண்ணும் கூட…”
சுரணையற்ற குரலில், “எத்தனை நாளாக அவளுடன் உனக்குப் பழக்கம்?” என்று அவர் கேட்கிறார்.
“மிக அண்மையில்தான் நான் அவளைச் சந்தித்தேன்… எனது அமெரிக்கப் பயணத்தின் போது…”
“அமெரிக்காவுக்கு உன்னுடன் பயணித்த இரண்டு பெண்களில் ஒருத்தியா?” – அவர் குரலில் அதிர்ச்சி தெரிகிறது.
“ஆமாம். மதராஸ் பெண். அவள் பெயர் சுமதி.”
”நீ எதனால் மதராஸ் வழியாகத் திரும்பினாய் என்பது இப்போது புரிகிறது. நீ அவள் பெற்றோரைச் சந்தித்தாய்தானே?”
“ஆமாம், அப்பா. என்னை மன்னியுங்கள். உங்களுடன் தொலைபேசியபோது இதையெல்லாம் அந்த மற்றொரு பெண் சுந்தரியின் முன்னிலையில் வெளிப்படையாய்ப் பேசக் கூச்சமா யிருந்தது….”
“ஆனால் அந்தப் பெண்ணின் முன்னிலையில் அந்த மற்றொரு பெண்ணுடன் காதலில் விழ மட்டும் கூச்சமா யில்லையாக்கும்!” என்று கேட்டுவிட்டுக் கிஷன் தாஸ் வலுவில் சிரிப்பை வரவழைத்துக்கொண்டு அவனைக் கேலி செய்வது போல் சிரிக்கிறார். அந்தச் சிரிப்பில் உயிரே இல்லை.
“ஆனால் இங்கு வந்த பிறகும் உடனேயே நீ இந்த விஷயத்தை எனக்குச் சொல்லவில்லை!” என்று குற்றஞ்சாட்டும் குரலில் அவர் தொடர்கிறார்.
“உடனேயே அது பற்றிப் பேச எனக்குக் கூச்சமாக இருந்தது. …. நீங்கள் என் கல்யாணப் பேச்சை எடுத்ததால் சொல்லும்படி ஆயிற்று.”
“பரவாயில்லை. இப்போது எல்லா விவரங்களையும் சொல்லு. அந்தப் பெண், அவளுடைய பெற்றோர் பற்றிய விவரங்களை….”
“அவர்கள் நம்மைப் போல் கிறிஸ்தவர்கள் அல்லர். ஹிந்து பிராமணர்கள்.”
வெளிப்படையாக அதிர்ந்து, “என்னது! ஹிந்து பிராமணர்களா! நீ எப்படி ஒரு ஹிந்துவை – அதிலும் ஒரு பிராமணப் பெண்ணை – விரும்பலாம்?”
“என்ன கேள்வி கேட்கிறீர்கள், அப்பா? ஒரு பெண்ணின் ஜாதி, மதம் ஆகியவற்றைத் தெரிந்துகொண்ட பிறகா காதல் வரும்? உங்கள் தரத்துக்கும் தகுதிக்கும் இது விந்தையான கேள்வியாய் ஒலிக்கிறது!”
“என்ன தகுதியையும் தரத்தையும் என்னிடம் கண்டாய் நீ?”
“மிகவும் போற்றத் தகுந்த தரமும் தகுதியும்தான்! இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் நீங்கள் ஒரு திருமண விழாவுக்குத் தலைமை தாங்கினீர்கள். மணமகள் ஒரு முஸ்லிம், மணமகனோ ஒரு ஹிந்து. அவர்களை நீங்கள் வானளாவப் புகழ்ந்தீர்கள்! இந்தியச் சமுதாயத்தில் உள்ள ஜாதி-மத வேற்றுமைகளை இது போன்ற கலப்பு மணங்கள் காலப் போக்கில் களையும் என்று சொல்லுகிற அளவுக்கு அவர்களை மெச்சினீர்கள். இல்லையா?”
அசடு வழியும் முக மாற்றத்தை ஒரு செயற்கைப் புன்னகையால் சமாளித்தபடி,“மெச்சினேன்தான்! ஆனால் அதற்கு என்ன? சமுதாயத்தில் உள்ள அந்தஸ்து மிக்க தொழிலதிபன் நான். சமூக சேவகனும் கூட. நான் வேறு எப்படிப் பேசி யிருக்க முடியும்?” என்று கிஷன் தாஸ் வினவுகிறார்.
பிரகாஷ், கேலி ததும்பும் குரலில், “அப்படியானால், நீங்கள் ஒரு வேஷதாரி. போலி மனிதர். கைதட்டல் வாங்குவதற்காக உண்மையில் நீங்கள் ஏற்காதவற்றைப் பேசுபவர்!” என்கிறான் கடுப்பாக.
“அதுதான் உலக நியதி! இல்லாவிடில் உன்னால் இந்த உலகத்தில் நற்பெயர் சம்பாதிக்க முடியாது. புகழ் பெற முடியாது. சமுதாயத் தொண்டைப் பொறுத்த வரை, நான் உண்மையாகவே ஒரு தொண்டன். அதில் நான் வேஷதாரி யல்லேன். சமுதாயத்துக்காகச் சேவை செய்யும் நிறுவனங்களுக்கு நான் ஏராளமாய்ப் பொருளுதவிகள் செய்துவருபவன். அதனால்தான் அவ்வமைப்புகள் நடத்தும் கலப்புத் திருமணங்களுக்குத் தலைமை வகிக்க என்னைக் கூப்பிடுகிறார்கள்!”
“உங்களுடைய இரட்டை வேஷம் பற்றிய வெட்கமோ குற்ற உணர்வோ உங்களுக்குத் துளியும் இல்லை!” என்று பிரகாஷ் உரத்த குரலில் அறிவிக்கிறான்.
“நான் இரட்டை வேஷதாரி யல்லேன். இது போன்ற கலப்புத் திருமணங்களால் பின்னாளில் பிரச்சினைகள் முளைக்கும் என்பதாலேயே உன் காதலை ஏற்க நான் தயங்குகிறேன், பிரகாஷ்! சுமதியின் பெற்றோர்கள் இதற்குச் சம்மதிப்பார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை!” – கடைசி வாக்கியத்தைச் சொல்லும் போது அவர் முகத்தில் நம்பிக்கையான புன்னகை மலர்கிறது.
“ஓ! அப்படி ஊகிப்பதில் உங்களுக்கு மகிழ்ச்சி என்று தோன்றுகிறது!”
“ஆக, அவர்கள் இதை ஆதரிக்கவில்லை! அப்படித்தானே?”
“அவர்கள் நடுத்தரக் குடும்பத்துப் பிராமணர்கள்! அவர்கள் ஆதரிக்காவிட்டால் அதில் வியப்படைய ஏதுமில்லை. ஆனால், பெரிய சமுதாயச் சேவகர் என்று பீற்றிக்கொள்ளும் நீங்கள் – பரந்த மனப்பான்மை கொண்டவர் என்பதாய்ப் பிறரை நம்பவைக்கும் நீங்கள் – எனது தேர்வால் அதிர்ந்து போயிருக்கிறீர்கள்! அது கேலிக்குரியதில்லையா?”
கிஷன் தாஸ் சிரித்துவிட்டுச் சொல்லுகிறார்: “பிரகாஷ்! இது எனது எச்சரிக்கை மட்டுமே! அந்தப் பெண்ணை நீ மணந்து கொள்ளுவதில் எனக்கு மறுப்பேதும் இல்லை. மத வேற்றுமையின் விளைவாய்ப் பின்னொரு நாளில் உங்களுக்குள் சண்டை-பூசல்கள் தோன்றக்கூடும் என்று அஞ்சுகிறேன். உங்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் எந்த மதத்தைப் பின்பற்ற வேண்டும் என்பதில் உங்களுக்குள் சண்டை வரக்கூடாது. பிரச்சினைகள் என்று நான் குறிப்பிட்டது முக்கியமாய் இதைத்தான். உன்னுடைய மகிழ்ச்சிதான் என்னுடைய மகிழ்ச்சி, பிரகாஷ்!”
இவ்வாறு கூறிவிட்டு உடனே எழுந்துகொள்ளும் கிஷன் தாஸ் பிரகாஷின் தோள்கள் மீது தன்னிரு கைகளையும் பதித்தவாறு அவனை அன்புடன் நோக்குகிறார். பிரகாஷும் உடனேயே எழுந்து கொள்ளுகிறான். தன் தந்தையை அவன் நன்றியுடன் ஏறிட்டுப் பார்க்கிறான். அவன் கண்களும் சற்றே கலங்குகின்றன.
கிஷன் தாசை அணைத்தபடி, பிரகாஷ், “சாரி, அப்பா. என்னை மன்னியுங்கள்!” என்கிறான்.
அவனைத் தாமும் இறுக அணைத்துக்கொள்ளும் கிஷன் தாஸ், “வேண்டாம் , வேண்டாம், பிரகாஷ்! நாம் இருவரும் எப்போதுமே “சாரி” சொல்லக் கூடாது. உட்கார். மற்ற விவரங்களை யெல்லாம் சொல்லு. அந்தப் பெண், அவள் குடும்பத்தினர் எல்லாவற்றையும் பற்றி… அவள் வேலை பார்க்கிறவளா?” என்றவாறு உட்காருகிறார். பிரகாஷும் உட்காருகிறான்.
சற்றே தயங்கிய பின், பிரகாஷ், “ஆமாம், அப்பா! அவள் ஒரு வேலையில் இருக்கிறாள்,” என்கிறான்.
“எங்கே?”
பிரகாஷ் சில நொடிகள் கழித்து, “ஒரு தனியார் தொழிலகத்தில்,” என்கிறான்.
“எந்தத் தொழிலகத்தில்?”
“சாரி…நான் கேட்கவில்லை.”
கிஷன் தாஸ், வியப்புடன், “என்னது! கேட்கவில்லையா?” என்கிறார்.
“ஆமாம், அப்பா. எதில் என்று கேட்கத் தோன்றவில்லை.”
“உங்கள் கல்யாணத்துக்குப் பிறகு அவள் வேலைக்குப் போகக் கூடாது. இந்தியாவின் மிகப் பெரிய தொழிலதிபரின் மருமகள் வேலை செய்து சம்பாதிக்கலாமா? என்ன சொல்லுகிறாய்?”
“நானும் அப்படித்தான் நினைக்கிறேன். ஆனால் அவள் என்ன நினைக்கிறாள் என்பது தெரியாது.”
“நீ எடுத்துச் சொல்லு அவளுக்கு.”
“அதெப்படி இப்போதே பேசுவது? பிறகு பார்ப்போம்.”
“நீ சொல்லுவதும் சரிதான். ‘ஆணாதிக்கம்’ பற்றிய கட்டுரையை எழுதியவன் ஆயிற்றே! அதனால் நீ ஜாக்கிரதையாகத்தான் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், நீ ஒரு வேஷதாரி என்று அவள் உன்னைக் கணிக்கக்கூடும் – சற்று முன் நீ என்னைப் பற்றிச் சொன்னது போல!” என்று சொல்லிவிட்டு அவர் சிரிக்கிறார்.
“சாரி, அப்பா!”
“நாம் ஒருவர்க்கொருவர் ‘சாரி’ சொல்லக் கூடாது என்று சொன்னேனே! அது இருக்கட்டும், அவளுடைய அப்பா என்ன செய்கிறார்?”
“அவர் ஃபேபர் அண்ட் சன்ஸ் எனும் ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்காயராக இருக்கிறார்.”
“அவர் எங்கே பணி புரிகிறார் என்று கேட்டுத் தெரிந்துகொண்டாய்! ஆனால் அவள் வேலை செய்வது எங்கே என்று கேட்கவில்லை. விந்தைதான்!”
“நான் அவரைக் கேட்கவில்லை, அப்பா. அவர் தாமாகவே அதைச் சொன்னார்.”
“அப்புறம்?.. மேலும் என்ன நடந்தது? நீ ஒரு கிறிஸ்தவன் என்பதை அவர்கள் எப்படி எடுத்துக்கொண்டார்கள்?”
“அவர் அதிர்ச்சி யடைந்தார். அவர் மனைவி அதிர்ந்து போனதோடு ஆத்திரமும் கொண்டார்.”
சிரிக்கும் கிஷன் தாஸ், “பின்னே? அது இயற்கைதானே? ஒரு ஹிந்து பிராமணப் பெண்மணியிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்? … சரி. அவர்களுடனான உன் உரையாடலின் முழு விவரத்தையும் சொல்லு.”
”அமெரிக்காவிலிருந்து கிளம்புவதற்கு முன்பாகவே சுமதி தன் தோழி சுந்தரியை மட்டுமல்லாமல் இன்னோர் இளைஞனையும் விருந்தினராக அழைத்து வரப் போவதாய் அவள் அப்பாவுக்குத் தொலைபேசித் தகவல் சொல்லிவிட்டாள். தங்கள் வீட்டில் சில மணி நேரம் தங்கிவிட்டு அவ்விளைஞன் வந்த அன்றே தில்லிக்கும், தன் தோழி ஹைதராபத்துக்கும் புறப்பட்டுவிடுவார்கள் என்றும் அவருக்கு அவள் சொல்லிவிட்டாள். அவள் அப்பாவும் சரி என்று சொல்லிவிட்டார். சுமதியின் அப்பாவும் அம்மாவும் முதலில் என்னை அன்பாக வரவேற்றார்கள். காலைச் சிற்றுண்டிக்குப் பிறகு நான் சுமதியின் அப்பா மிஸ்டர் ஜெயராமனிடம் நான் சுமதியை மணக்கவிரும்புவதாய்ச் சொன்னேன். அதற்கு அவரது பதில் வேடிக்கையாக இருந்தது.”
அப்போது நகுல் அறைக்கதவைத் தட்டிவிட்டு உள்ளே வருகிறார். ஒரு ஜாடியில் எலுமிச்சைச் சாறும் இரண்டு கண்ணாடிக் கோப்பைகளும் எடுத்து வரும் அவர் அவற்றை மேஜை மீது வைத்துவிட்டுக் கதவைச் சாத்திக்கொண்டு போகிறார். இருவரும் எலுமிச்சைச் சாற்றை உறிஞ்சிக் குடிக்கிறார்கள்.
“வேடிக்கையான பதிலா? அப்படி என்னதான் சொன்னார் அவர்?”
“சுமதியை முதலில் கேட்டுவிட்டுச் சொல்லுவதாய்க் கூறினார். அவளைக் கேட்காமல் இருந்திருப்பேனா என்று அவர் சிந்திக்கவில்லை.” – இவ்வாறு சொல்லிவிட்டுப் பிரகாஷ் சிரிக்கும் சிரிப்பில் கிஷன் தாசும் கலந்து கொள்ளுகிறார்.
“அப்புறம்?”
“அதன் பிறகு சுமதியை ஏற்கெனெவே நான் கேட்டுவிட்டதையும் அவள் சம்மதித்திருப்பதையும் அவரிடம் சொன்னேன். அதன் பின் நான் என்ன ஜாதி என்று அவர் கேட்டார். நான் கிறிஸ்தவன் என்று சொன்னதும் அவர் சில நொடிகளுக்கு அப்படியே வாய் பிளந்து பேச்சற்றுப் போனார். அதன் பின், தம் மனைவி ஒருபோதும் அதற்குச் சம்மதிக்க மாட்டாள் என்று தெரிவித்தார். எனினும், தம்மைப் பொறுத்தவரையில் சுமதியின் மகிழ்ச்சியே வேறு எதை விடவும் தமக்கு அதிக முக்கியம் என்றும் அவர் கூறினார்.”
“ஒரு வேளை தம் மனைவி அதற்கு உடன்பட மாட்டாள் என்பதால் வசதியாக ஒதுங்கிக்கொண்டு பழியை அவள் மீது சுமத்துகிறாரோ என்னவோ! பரந்த மனப்போக்கு உள்ளவராய்த் தம்மைக் காட்டிக்கொள்ளும் முயற்சியாக இருக்கலாம் – எல்லா மனிதர்களையும் போல! என்னையும் சேர்த்து! நீ இப்போது நினைக்கிறாய் அல்லவா – நீங்கள் மட்டும் என்ன வாழ்ந்தீர்கள் என்று! … உன் எண்ண ஓட்டத்தை நான் படிக்கிறேன், பிரகாஷ்!….” என்று கூறிச் சிரித்த பின், “ஜெயராமின் மனைவி என்ன சொன்னாள்?” என்று கிஷன் தாஸ் வினவுகிறார்.
“அவர் அடுக்களையில் இருந்தார். ஆனால் ஜெயராமன் அவர்களைக் கூப்பிடார். அவர் வந்தார். ‘இந்தப் பிள்ளை சுமதியைக் கல்யாணம் செய்துகொள்ள விரும்புகிறார்’ என்று அவரிடம் தெரிவித்தார். அந்த அம்மாள் உடனே மலர்ந்து சிரித்தார். அடுத்த நொடியில், நான் கிறிஸ்தவன் என்று அவர் சொன்னதும், அவரது முகம் சுருங்கிப் போனது. ‘என்னது! கிறிஸ்தவனா! நான் ஒரு போதும் இதற்குச் சம்மதிக்க மாட்டேன்…’ என்று கூறிவிட்டு அவர் சுமதியைக் கூவி அழைத்தார். இரண்டு பெண்களுமே உடனே ஒருசேர வந்தார்கள். அந்த அம்மாளின் பெயர் ஜானகி. அவர்கள் வந்ததும், அவர் சுமதியைப் பார்த்துக் கத்தினார், ‘என்னடி இது! இவன் என்னமோ உன்னைக் கல்யாணம் செய்து கொள்ள விரும்புகிறானாமே? எங்கள் எதிரிலேயே முடியாது என்று சொல்லிவிட்டு இவனை உடனே அனுப்பிவை!’ என்று. ஆனால் சுமதியோ அழுத்தந்திருத்தமாய் என்னைத் தவிர வேறு யாரையும் கல்யாணம் செய்துகொள்ள முடியாது என்று திட்டவட்டமாய் அறிவித்தாள். அவள் அம்மா உடனே பெருங்குரலெடுத்து அழத் தொடங்கிவிட்டார். நானும் அந்தப் பெண் சுந்தரியும் அவரைச் சமாதானப்படுத்த எவ்வளவோ முயன்றோம். முடியவில்லை. இது போன்ற கலப்பு மணங்கள் இப்போதெல்லாம் நிறைய எண்ணிக்கையில் நடப்பதைப் பற்றியும் அந்தப் பெண் அவருக்கு எடுத்துச் சொன்னாள். ஆனால் அவர் கேட்பதாக இல்லை. அவள் சொன்னதைக் கேட்கவே பிடிக்காமல் தன்னிரு காதுகளையும் பொத்திக்கொண்டாள். என்னைப் பார்த்து, ‘வெளியே போ!’ என்றும் கத்தினாள். நான் எழுந்து நின்றேன். ஆனால் ஜெயராமன் என் தோள் பற்றி என்னை உட்கார வைத்தார். தம் மனைவியின் பண்பாடற்ற கூச்சலுக்காக என்னிடம் மன்னிப்பும் கேட்டார்…”
“சுமதி என்ன சொன்னாள்?”
“சுமதியின் முகம் வாடி வதங்கிப் போய்விட்டது. தன் அம்மாவின் கடுஞ்சொற்களுக்காக அவளும் என்னிடம் மன்னிப்புக் கேட்டாள். ‘அம்மா! உங்கள் அனுமதி கிடைத்த பிறகுதான் நான் இவரை மணந்து கொள்ளுவேன். அதுவரை காத்திருப்பேன்’ என்றாள். அதற்கு அந்த அம்மாள், ‘அது என்றும் உனக்குக் கிடைக்காது. நீ கன்னிப் பெண்ணாகவே இருக்க வேன்டியதுதான்!’ என்றாள்!”
“பிரகாஷ்! நீங்கள் இருவரும் பிடிவாதமாய்க் காத்துக்கொன்டிருந்தால் அவள் கடைசியில் இரங்கித்தானாக வேண்டும்!”
“பார்க்கலாம்.”
“இதற்கு இடையில் நீங்கள் இருவரும் கடிதப் போக்குவரத்தின் மூலம் தொடர்பில் இருக்க வேண்டும்.”
“நன்றி, அப்பா.”
“எல்லாம் நல்லபடியாகவே நடக்கும். அது சரி, நம் குடும்பத்தைப் பற்றி ஜெயராமன் கேட்டாரா?”
பிரகாஷ் சிரித்துவிட்டுச் சொல்லுகிறான்: “கேட்காமல் இருப்பாரா? கேட்டார். மிகவும் சிறு வயதிலேயே நான் தாயை இழந்துவிட்டதையும் சித்தி என்பதாய் ஒருத்தி வந்து என்னைக் கொடுமைப் படுத்தினால் என்ன செய்வது எனும் பயத்தால் எனக்காக நீங்கள் மறுமணம் செய்துகொள்ளாமல் இருந்துவிட்டீர்கள் என்பதையும் சொன்னேன்…”
“நான் ஒரு தொழிலதிபர் என்பதையும் நாம் பெரும் பணக்காரர்கள் என்பதையும் சொன்னாயா?”
“சொன்னேன். ஆனால் நம் செல்வநிலை பற்றி நான் பெருமை யடித்துக்கொள்ளவில்லை. எனினும் நமக்கு நாடு முழுவதிலும் பல தொழிற்சாலைகள் உள்ளன என்பதைப் பற்றிப் பீற்றிக்கொள்ளாத தொனியில் தெரிவித்தேன். உங்கள் பெயரை நான் உச்சரித்த மறு கணமே அவர் கண்கள் விரிய எழுந்து நின்றுவிட்டார், அப்பா!” – இவ்வாறு சொல்லிவிட்டு அவன் வாயகலப் புன்னகை புரிகிறான்.
கிஷன் தாஸ் பெருமையாய் வாய்விட்டுச் சிரிக்கிறார். “அவருக்குப் பெரிய அதிர்ச்சி ஏற்பட்டிருந்திருக்குமே!” என்கிறார்.
“பின்னே? என்னை மிகுந்த பிரமிப்புடன் பார்த்தார். சில கணங்களுக்கு வாயெழாமல் நின்றுகொண்டிருந்தார். பிறகு, தன் வியப்பிலிருந்து ஓரளவு விடுபட்டு, ‘தில்லியில் உள்ள கோடீசுவரர் மிஸ்டர் கிஷன் தாஸ் அவர்களின் ஒரே மகனா நீங்கள்?” என்றார். நான், ‘ஆமாம். நீங்கள் உட்காருங்கள்!’ என்று கூறிய பின் அவர் உட்கார்ந்தார்.”
மிகுந்த பெருமையுடன் புன்சிரிப்புக் கொண்டவாறு, கிஷன் தாஸ், தம் கைகளை மார்பின் குறுக்கே கட்டியபடி தம் தலையை மேலுங்கீழுமாய் ஆட்டிக்கொண்டு, “அப்புறம்?” என்கிறார்.
“அதன் பின், ‘மிஸ்டர் பிரகாஷ்! உண்மையைச் சொல்ல வேண்டுமானால், எனக்கு அச்சமாக இருக்கிறது. நீங்கள் எங்கே? நாங்கள் எங்கே? இது சரிப்பட்டு வராது! உங்கள் அப்பா இதற்கு ஒருபோதும் ஒப்ப மாட்டார். இது நிச்சயம். நாங்கள் வெறும் ஆண்டிகள்…’ என்றார்.” – பிரகாஷ் புன்சிரிப்புடன் மேற்கொண்டு பேசாமல் இருக்கிறான்.
“அதற்கு நீ என்ன சொன்னாய்?” என்று கிஷன் தாஸ் ஆவலுடன் வினவுகிறார்.
“என் அப்பாவைப் பற்றி உங்களுக்குத் தெரியாது. அவர் மிகவும் பரந்த மனப்பானமை கொண்டவராக்கும்! தவிர, நான் அவருக்கு ஒரே மகன் என்பதாலும், அவர் என் விருப்பத்துக்கு ஒருபோதும் குறுக்கே நிற்க மாட்டார்’ என்றேன். அவரைப் போலவே நானும் அழுத்தந்திருத்தமாய்ப் பேசினேன்!”
இன்னும் அதிக மலர்ச்சியுடன் புன்னகை புரிந்தபடியே, “நன்றி, நன்றி!” என்கிறார் கிஷன் தாஸ்.
“எதற்கு நன்றி யெல்லாம் சொல்லுகிறீர்களாம்? நீங்கள் சொன்னது போல் நாம் சாரியோ நன்றியோ சொல்ல வேன்டியதில்லைதானே?”
“சரி. நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். கொஞ்சம் படுத்து ஓய்வு எடுக்கிறேன்,” எனும் கிஷன் தாஸ் படுக்கிறார்.
பிரகாஷும் எழுந்துகொள்ளுகிறான். பிறகு தன் அறைக்குப் போகிறான்.

jothigirija@live.com

Series Navigationவெள்ளி விழா கண்ட தமிழ் திரைப்படங்கள்
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *