சோம.அழகு
(புதுமைப்பித்தனின் ‘நாரத ராமாயணம்’ என்னும் அங்கத நாடகத்தைப் பின்பற்றி ‘அனுமன் மகாபாரதம்’ என ஒன்று எழுதத் தோன்றியது. இரண்டுமே கண்டிப்பாய் பக்தி நாடகங்களன்று. அக்காப்பியங்களின் கதாபாத்திரங்களைப் பின்புலமாகக் கொண்டு கற்பனையைக் குழைத்து அந்தந்தக் காலங்களின் அரசியல் வரலாறு அங்கத நடையில் சித்தரிக்கப்படுகிறது.)
புதுமைப்பித்தனின் நாரத ராமாயணத்தின் கதைச் சுருக்கம் : [ நாரதர் கூற்றாகவே அமைந்திருக்கிறது]
அயோத்தியில் , வசிஷ்டன் கவித்த மௌலியை ஸ்ரீராமபிரான் தன் தலையிலிருந்து கீழே விழாமல் வெகுகாலமாகக் காத்து வந்தார். அப்போது கோசல நாட்டை நான்கு பாகங்களாகப் பிரித்து, வடக்கே அயோத்தியிலிருந்து மேற்கே கடற்கரை வரை தமக்கு எடுத்துக் கொண்டு, கிழக்குப் பாகத்தைப் பரதனுக்கும், தென்மேற்குப் பாகத்தை சத்ருக்கனுக்கும், மீதியான பாகத்தை லட்சுமணனுக்கும் கொடுத்துவிட்டார்.
ராமருக்கும் அனுமாருக்கும் பொழுது நகர்வேனா என்றது. லவ குமாரனுக்கு சாஸ்திரங்களில் மறைந்து கிடக்கும் சடங்குகள் நடத்துவது, பட்டாபிஷேகம், திருமணம் செய்விப்பது எனப் பலவாறாகப் பொழுதைப் போக்க முயன்று கொண்டிருந்தனர். தனது நான்கு பிள்ளைகளுக்கும் தந்தையின் விருப்பபடி குகன், விபீஷணன், சுக்ரீவன், பரதன் என்று பெயரிட்டான் லவன்.
மூத்த குமாரனான குகன் தோட்டங்களையும் வயல்களையும் கவனித்துக் கொண்டான். விபீஷணன் தனது பாட்டனாருடைய சரித்திரங்களைக் கற்பதிலும் ராம-சீதை விக்கிரகங்களைப் பூஜிப்பதிலும் அதிக நாட்டம் கொண்டிருந்தான். லவ மகாரஜனைக் கூற்றுவன் அழைத்துச் சென்ற பின், குகனும் விபீஷணனும் முடிசூடிக்கொள்ள மறுத்ததை அடுத்து, சுக்ரீவனைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்து சிம்மாசனத்தில் கட்டி வைத்துப் பட்டங்கட்டினான். பரதன் தனது பாட்டனார் வீரச்செயல்கள் புரிந்த க்ஷேத்திரங்களைக் காணச் சென்றுவிட்டான்.
திடீரென்று சண்டமாருதம் போல் இமயமலை மேற்குக் கணவாய்களின் வழியாகக் காந்தார தேசத்து அரசன் முசலிவாஹனன் படையெடுத்து வந்து அயோத்தியை முற்றுகையிட்டான். முசலிவாஹனனுக்குப் பிறகு பப்பரசேனன், அகங்காரசேனன் ஆகியோர் ஆட்சி செய்தனர். ஜம்புத் தீபத்தின் மேற்கே, சப்த சமுத்திரங்களுக்கு அப்பால் இருக்கும் வெள்ளிமா தீவகத்தில் இருந்து ஒரு பெரியவர், பப்பரசேனன் காலத்திலே பரத கண்டத்தின் அயோத்தி நகருக்கு வந்து சேர்ந்தார். போவன்னா.ரானா.கல்லப்ப செட்டியார், தானா.சுப்புச்செட்டியார், பானா.ரஞ்சித செட்டியார், காளையப்ப செட்டியார் ஆகியோர் தங்கள் பட்சணக் கடையை அயோத்தியில் விரித்தனர். வியாபாரத்தையும் கடவுளையும் போட்டுக் குழப்பிக் கொண்டதால் கல்லப்ப செட்டியாரும் சுப்புச் செட்டியாரும் பெருத்த நஷ்டத்துடன் கடைகளைப் பூட்டிக்கொண்டு ஓடவேண்டியதாயிற்று. காளையப்பச் செட்டியாரின் மகனுக்கு வியாபாரத்தில் எக்கச்சக்க லாபத்திற்குப் பிறகு, ஊருக்குச் செல்ல ஆசை வந்தது. இதனால் அயோத்தியைத் தனது சொந்த தேச அரசனுக்கு விற்று காசாக்கிக் கொண்டு ஊருக்குச் சென்றுவிட்டான். வெள்ளையூர் அரசர்கள் தங்கள் பிரதிநிதிகளான வெள்ளியம்பலத் தம்பிரான்களைக் கொண்டு ஆண்டு வந்தார். ராமபிரானின் பேரன் பரதன் அயோத்தி நகரின் முக்கிய தெருக்களில் உப்பைக் கொட்டி நெருப்பை வைத்தார். இளைய பரதன் அயோத்தியின் ஒவ்வொரு மூலையிலும் சென்று வெள்ளியம்பலத் தம்பிரான்கள் கண்முன்……….
- இத்துடன் கிரந்தம் முடிவடையாமல் நின்று விடுகிறது.
1
4 வது ஜன்ம தினச் சருக்கத்திற்கும் 5 வது முசலிவாஹனச் சருக்கத்திற்கும் இடையில் விடுபட்ட சில சருக்கங்கள் :
பாற்கடலில் ஆதிகுஷன் மெத்தையின் மீது சயனத்தில் இருக்கும் விஷ்ணுவிற்கு, லட்சுமி அரைத் தூக்கத்தில் கால் அமுக்கி விட்டுக் கொண்டிருந்தாள். ஒரு கையால் விஷ்ணுவின் கால்களைப் பிடித்து விட்டுக்கொண்டே மறுகையால் அனிச்சத்தினும் மென்மையான தனது பாதங்களைக் குத்திக் கிழித்து சீழ்பிடிக்க வைத்த முட்களையும் சிறு சிறு கற்களையும் அகற்றிக் கொண்டிருந்தாள். வலியில் உயிர் போய்விடும் போல இருந்தது லட்சுமிக்கு. விஷ்ணுவின் மீது கோபம் பிரமாதமாய் பிரவாகமெடுத்து வந்த போதும் சென்ற பிறவியின் தாக்கம் மீதமிருந்தபடியால் அதற்கே உரிய வரையறையின்படி, எவ்விதச் சலனமும் இன்றி இருந்தாள். அயோத்தியில் தனது பேரப்பிள்ளைகள், ‘என்ன செய்கிறார்கள் ? எவ்வாறு இருக்கிறார்கள் ? ’ என கனவின் வழியே கண்காணித்துக் கொண்டிருந்தார் விஷ்ணு. வலி பொறுக்க முடியாமல் சில நொடிகளில் கண்கள் சொருகித் தூங்கிப் போனாள் லட்சுமி. கால் தசைகள் இறுகுவதை உணர்ந்த விஷ்ணு தனது மலரினும் மெல்லிய இமைகளைத் திறந்து லட்சுமியைப் பார்த்தார்.
“ இப்போதுதான் ராம அவதாரம் முடிந்து பூமியில் இருந்து வந்தோம். ஒரு நாளும் கண் அயராதவள் இப்படித் தூங்குகிறாளே ! ” –விஷ்ணுவின் மன ஓட்டத்தைப் புரிந்து கொண்ட ஆதிசேஷன் பின் வருமாறு கூறியது :
“ கரிய திண்தோள் மணிவண்ணா ! சீதைப் பிராட்டியாக லட்சுமி தேவி பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்லவே……. தங்களுடனான பதினான்கு வருட வனவாசம் போக , முடிசூடிய பின்னும் அலைமகளைத் தன்னந்தனியாக வனத்தில் அலைய வைத்துப் பரிதவிக்க விட்டீர் ! நடந்து நடந்தே சோர்ந்திருப்பார் தேவி ……. பாவம் ”
“ ஒன்றும் அறியாதவன் போலவே பேசுகிறாயே ? நீயும் உடன் இருந்தாய் தானே ? மக்கட் பழிக்கு ஆளாவது நல்ல அரசனுக்கு அழகல்லவே ? ”
“ பரந்தாமா ! நான்முகனின் படைப்பில் இரட்டை நாக்கு எனக்கு மட்டுமே. எனவே தாங்கள் மழுப்பி நழுவாதீர்கள். நமது அரண்மனை *புத்துணர்ச்சி பானத் தயாரிப்பாளர், ஒளிப்பேழைகளின் பொறுப்பாளர், பணியாள் – இவர்களில் யாரை அரசராக்கி இருந்தாலும் மக்கள் ஒன்றும் வெகுண்டு எழுந்து விடப்போவதில்லை. இவர்களுக்காகப் போய் சீதா பிராட்டியைக் கானகம் அனுப்பித் தங்கள் தரத்தைத் தாழ்த்திக் கொண்டீர்களே ! சீதாபிராட்டிக்காகத் தாங்கள் சிம்மாசனத்தை எட்டி உதைத்திருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பேன். நல்லதொரு தலைவனைப் பெற இம்மக்களுக்குத் தகுதியில்லை என்கிறேன் நான் ”
[*புத்துணர்ச்சி பானம் – தேநீராக இருக்குமோ ?]
“ அப்படிச் சொல்லாதே ஆதிசேஷா ! நான் பூலோகத்தை விட்டு இங்கு வந்தபின் எனக்கு நாடு முழுக்க எத்தனை கோயில்கள் ? எத்தனை வழிபாடுகள் ? மக்கள் என்னைக் கொண்டாடுகிறார்கள் ”
“ தங்களுக்கு மட்டுமல்ல…… ‘ராவணேசுவரன்’ என்று ராவணனுக்கும்தான் ஆங்காங்கே கோயில்கள் கட்டப்பட்டு வழிபாடு நடக்கிறது. எண்ணிக்கை சொற்பம்தான் என்றாலும் கூட……” – ஆதிசேஷன். விஷ்ணு பதில் சொல்லத் தெரியாமல் ஆதிசேஷனை அமைதிப்படுத்தும் நோக்கில் சற்று எரிச்சலுடன் பார்த்தார். சட்டென அமைதியான ஆதிசேஷன் சிறிது நேரங்கழித்து மீண்டும் தொடர்ந்தது.
“பூலோகவாசிகளுக்கு மன்னிப்பதைக் காட்டிலும் ஓர் உயரிய குணம் உண்டு – மறதி. எவ்வளவு கொடூர கொடுங்கோலனாயினும் அவன் இறந்த மறுநொடி அப்பழுக்கற்ற தெய்வத்திற்கு சமானமாக்கப்பட்டு துதிக்கப் பெறுவான். அத்தனை நாள் அவன் மீதிருந்த வெறுப்பையும் கோபத்தையும் மறக்கடித்து எல்லோர் மனதிலும் இரக்கத்தை ஊற்றெடுக்க வைக்கும் ஆற்றலை சாவுக்குக் கற்பித்திருக்கிறார்கள் மனிதர்கள். ஓர் உன்னத (!) உயிரை இழந்த துயரம் தாளாமல் அவனை உயர்த்திப் பிடித்து வரலாற்றையே புரட்டிப் போடும் வல்லமை பெற்ற அறிவார்ந்த மக்களைக் கொண்ட தேசத்தில் போய்…….” என ஆதிசேஷன் இழுக்க, லட்சுமிதேவி தூக்கத்திலும் நமட்டுச்
சிரிப்பு சிரித்து விஷ்ணுவின் மானத்தை வாங்கினாள். விஷ்ணுவிற்கோ வெட்கம் பிடுங்கித் தின்றது. படுக்கப் போட்ட மத்தளமாக இருபுறமும் இடி வாங்கிக் கொண்டிருந்த விஷ்ணுவின் மரியாதை காற்றோடு காற்றாகக் கரைந்து கொண்டிருந்தது.
அச்சமயம் தேவேந்திரன் புடைசூழ விஷ்ணுவைக் காண வந்தான். பணிவிற்கே பணிவைக் கற்றுக் கொடுக்கும் வண்ணம் சிரம் தாழ்த்தி முதுகு வளைத்து வணங்கி, வந்த காரியத்தைக் கூற ஆரம்பித்தான்.
“ பிரபோ ! தங்களது அடுத்த அவதாரத்திற்கான நேரம் வந்துவிட்…….”
“ இப்போதுதானே என்னை அயோத்தியிலிருந்து வம்படியாக அழைத்து வந்தீர்கள். நான் வந்து ஐந்து நிமிடம் கூட கண்ணயரவில்லை. அதற்குள் அடுத்த அவதாரமா ? ”
“ இங்கு தங்களது ஒரு நொடி என்பது பூமியில்…….”
“ ம்ம்….சரி….சரி…..பாடம் எடுக்காதே…..போகிறேன். ஆனால் இம்முறை எனக்கு சில நிபந்தனைகள் உண்டு. அரண்மனையில் இல்லாமல் சாதாரண மனிதனாக வாழ விரும்புகிறேன். ஒழுக்கசீலனாக வாழ்ந்து சலித்து விட்டது. கூப்பிட்டால் ஓடிவரும் பணியாட்கள் வேண்டாம் ; இளவரசன் என தலைக்கு மேல் தூக்கி வைத்துக் கொஞ்சித் தீர்க்கும் கூட்டம் வேண்டாம் ; கூழைக்கும்பிடுகள் வேண்டாம். இந்த அவதாரத்தில்……”
சட்டென விழித்த லட்சுமி விஷ்ணுவை இடைமறித்து, “ அவதாரமா ? இம்முறை என்னால் வனவாசம் எல்லாம் செல்ல முடியாது. பிறப்பிலிருந்து இறப்பு வரை அரண்மனையில்தான் இருப்பேன். இதற்கு உடன்பட்டால் மேற்கொண்டு பேசுங்கள் ” எனக் கறாராகச் சொன்னாள் லட்சுமி.
தேவேந்திரனுக்குத் தலை கிறுகிறுத்தது. இருவரும் எதிரெதிர் மூலைக்கு இழுக்கிறார்களே ! “ உத்தரவு தேவி ! தங்கள் பேச்சுக்கு மறுபேச்சு ஏது ? ” – குழைந்தான் தேவேந்திரன். தனக்கு நெற்றிக்கண் இல்லாததை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார் விஷ்ணு. அவரது கடுஞ்சினத்தை உணர்ந்தவனாய், “ பிரபோ ! தாங்கள் பிறக்கப் போவது அரச குலம் எனினும், தாங்கள் விரும்பும் குறும்புத்தனம் மிகுந்த குழந்தைப் பருவம் தங்களுக்குக் கிட்டுமாறு பார்த்துக் கொள்கிறோம். முடிசூடும் வயது வந்தபின் தாங்கள் அரண்மனை வாழ்க்கையை ஏற்றுக்கொண்டால் போதும் ” என்று சலுகை அளித்தான் தேவேந்திரன்.
“ இந்திரா ! இந்த அவதாரத்தின் நோக்கத்தை நான் சாமானியனாகவே இருந்து வெற்றிகரமாக நிறைவேற்றுவேன். விட்டுவிடேன் ” – கிட்டத்தட்ட கெஞ்சினார் விஷ்ணு.
“ அதற்கில்லை நாராயணா ! நீங்கள் மக்களோடு மக்களாகக் கரைந்து போனால் பின்னால் வரப் போகும் விபீஷண குல மடையர்கள் தங்களது அடுத்த அவதாரத்தை மதிக்க மாட்டார்கள். அரச குல ராம அவதாரமே முன்னிலைப்படுத்தப்படும். தாமதமாகத்தான் இந்த வியாபார உத்தியை உணர்ந்தோம். முன்பே தெரிந்திருந்தால் தங்களது அனைத்து அவதாரங்களுக்கும் அதே போன்ற விளம்பரப் பதாகைகளைப் பயன் படுத்தி இருக்கலாம். எனவே, வேண்டுமட்டும் விளையாடிவிட்டு சிறுபிராயத்திற்குப் பிறகு தாங்கள் அரசராவதுதான் பிரபலமாவதற்குச் சரியாக இருக்கும் ”
விஷ்ணுவின் குழப்பமான மனநிலையைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாத லட்சுமிதேவி, “ நான் தயார். என்னைக் கரம் பிடிக்கும் வரை சுவாமி எப்படி இருந்தாலும் எனக்குக் கவலையில்லை. நான் பூமியில் ஜனிக்க வேண்டிய நேரத்தை மட்டும் குறித்துத் தாருங்கள். அப்புறம்……இம்முறையும் பூமாதேவியை எப்படியாவது கதைக்குள் கொண்டு வரப் பாருங்கள். அவள் இல்லாமல் எனக்குப் பொழுது போகாது ” என்று படபடத்தாள்.
“ இவளுக்கென்ன ? அரண்மனையில் சொகுசாகப் பிறந்து வளர்ந்து எனக்காகக் காத்திருப்பதைத் தவிர வேறென்ன வேலை ? என் பாடுதான் திண்டாட்டம். சென்ற பிறவியைப் போல, பல கற்களையும் செடி கொடி மரங்களையும் அடையாளம் கண்டு சாப விமோசனம் வழங்க வேண்டும். கொடிய அசுரர்கள் பலரை இளம்பிராயத்திலேயே வதை செய்து பயிற்சி எடுக்க வேண்டும். போதாக்குறைக்கு மாறுவேடத்தில் வேறு வந்து தொலைவார்கள். புஜபல பராக்கிரமசாலியாகவும் பல அற்புதங்களை நிகழ்த்துபவனாகவும் என்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும்…..ப்ச்….” – மனதினுள் இவ்வாறாக அலுத்துக் கொண்டே சம்மதம் தந்தார் விஷ்ணு.
“ பிரபோ ! என்னை மறந்து விட்டீர்களே ! ” நினைவூட்டியது ஆதிசேஷன்.
“ வழக்கம்போல் நீ எனது தம்…..வேண்டாம் ! பூலோகத்திலிருந்து வந்த பிறகு நன்றாகப் பேசக் கற்றுக் கொண்டுவிட்டாய். இளையவனாக இருந்து நீ எனக்கு அறிவுரை சொன்னால் நன்றாக இருக்காது. ஆகையால் இம்முறை நீ எனக்கு மூத்த சகோதரனாவாயாக ! “
ஆதிசேஷனுக்கு மகிழ்ச்சியில் தலை வால் புரியவில்லை.
இதன் பிறகு உள்ள முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும் வியாசரின் எழுத்தாணிக்கு விட்டுவிடுகிறேன். அவருடைய கவனம் ஈர்க்காத சில :
- சென்ற பிறவியில் தாயும் சேயுமாக அன்பில் திளைத்த தம்மை இப்பிறவியில் எக்கச்சக்கமாகக் கோர்த்து விட்டதற்காய் இந்திரனை வாய் வலிக்கத் திட்டித் தீர்த்தார்கள் லட்சுமியும் பூமாதேவியும். வாய் வலிந்து கேட்டதற்காய்த் தன்னைத் தானே நொந்து கொண்டாள் லட்சுமி. “சரி விடு. நல்லெண்ணத்தில் கேட்ட உன்மீது தவறில்லை. இந்திரனுக்கு உடல் முழுக்கக் கண்களைத் தந்த கௌதமர், அவன் சிரசினுள் ஐராவதத்தின் கண் அளவிற்காவது மூளையைத் தந்திருக்கலாம் ” என்றவாறு பூமாதேவி லட்சுமியை சமாதானப்படுத்தினாள்.
- திரௌபதியின் வருகைக்குப் பிறகு ஒரு நாள் குடிலில் யாரும் இல்லாத போது கட்டிலில் ஓய்வு எடுத்தவாறே பொருமிக் கொண்டிருந்தாள் குந்தி தேவி. “ காட்டில் அலைந்து திரிந்த களைப்பிலும் வேலை சுவாரஸ்யத்திலும் அடுப்பு ஊதிக் கொண்டே திரும்பிப் பார்க்காமல், ‘பெற்ற பரிசிலைச் சமமாகப் பங்கிடுக’ என நான் சொன்ன வார்த்தையைப் பிடித்துக் கொண்டு என் பிராணனை வாங்கும் இப்புத்திரர்களை என்ன செய்ய? நான் என்ன கடுந்தவம் புரிந்து பல சக்திகளைக் கொண்டிருக்கும் மகரிஷியா ? சொன்ன சொல்லின் மடமையை உணர்ந்து திரும்பப் பெறத் தயாராய் இருந்தேனே ! கிராதகர்களா…! ‘பெண்களும் பலதார மணம் புரியும் வழக்கம் எங்கள் சமூகத்தில் தற்காலத்தில் இருக்கிறது. லெமூரியர்களின் சமூகப் பக்குவம் எங்களுக்கு வர வருடங்களாகும்’ என்று உண்மையை விளம்ப வேண்டியதுதானே ? இவர்களுக்குப் பழி சுமக்க வலிக்கிறதென்று என்னைப் பலிகிடா ஆக்குவதா ? ” – மனம் போன போக்கில் வைது தீர்த்து மனபாரத்தைக் குறைக்க முனைந்தாள் குந்தி தேவி.
- “ ஒவ்வொரு பெண்ணும் தனக்கு இழைக்கப்படும் அநீதியிலிருந்து தப்பிக்க, நீ அடுத்து எப்போது பழம் நறுக்குவாய் ? எப்போது விரலை வெட்டிக் கொள்வாய் ? என தனது சேலை நுனியைக் கிழித்து உனக்கு உபகாரம் செய்யக் காத்திருக்க வேண்டுமோ ? அப்படியெனில் நீ ஒரு நிமிடத்திற்கு 1000 பழங்கள் நறுக்கி குறைந்த பட்சம் 500 முறையாவது வெட்டுப்பட வேண்டும். ஒரு நாளைக்கு எவ்வளவு என்று நீயே கணக்கு போட்டுக் கொள் ” – திரௌபதி பொரிந்து தள்ள, வெட்கித் தலை குனிந்தார் கிருஷ்ணர்.
- தாம் அம்போவென விடப்பட்ட கோபத்தில் குசன் வம்சாவளியினர், போரில் கௌரவர்களோடு கைகோர்த்துத் தமது பாட்டனாரை எதிர்த்துப் போரிட்டு விண்ணுலகம் சேர்ந்தார்கள்.
- அனுமனைத் தனது சகோதரனாக அறிந்து கொண்ட பீமன் மிகவும் பிரியமாகத் தன்னுடன் வருமாறு அழைத்தான். அனுமன் இயலாமையால் மறுத்துவிட பீமனோ விடாது சமாதானப்படுத்தி சம்மதிக்க வைப்பதிலேயே குறியாய் இருந்தான். “ ராம சேவகரே ! தங்களது பிரபு மீண்டும் இம்மண்ணில் பிறந்தருளியிருக்கிறார், இம்முறை முகுந்தனாக…….அன்னாருக்கு உங்களது வணக்கத்தைத் தெரிவிக்கவாது வரலாமே ! ” என்று கேட்டுக் கொண்டதற்கு , அனுமன் “ அறிவேன் பீமா ! இந்த நலிந்து போன உடலை வைத்துக் கொண்டு அவருக்கு சேவை செய்ய இயலும் என்று எனக்குத் தோன்றவில்லை. உன்னிடம் விளையாட்டு காட்ட எனது மொத்தத் திராணியையும் சிரமப்பட்டு வாலுக்குக் கொண்டு செல்வதற்குள் படாத பாடு பட்டுவிட்டேன். இந்தக் குச்சிக் கைகளால் தூக்க முடியாத எனது கதாயுதத்தைப் பல ஆண்டுகளுக்கு முன்பே தானம் செய்துவிட்டேன். எனவே போரிலும் பிரபுவிற்குப் பயன்பட மாட்டேன். மேலும் ருக்மணிதேவியைக் காண சற்று பயமாக இருக்கிறது. சென்ற பிறவியில் அசோகவனத்தில் பார்த்தபோது கூறியதைப் போல பார்த்ததும் உணர்ச்சிப்பெருக்கில் மறுபடியும் ஏதாவது திருவாய் மலர்ந்தருளிவிட்டால் என் பாடு திண்டாட்டம்தான்”. இவ்வாறாகச் சிறிது நேரம் இருவரும் அளவளாவிய பின் பீமன் பணிந்து வணங்கி விடைபெற்றுக்கொண்டான்.
- “ வயிற்றிலிருந்த சிசுவிற்குப் பாதி சொல்லிய உனக்கு அவன் வளர்ந்த பின் மீதியைச் சொல்லித் தர வலித்ததா…..இல்லை, மனம் ஒப்பவில்லையா ? இப்படி அநியாயமாக அவனைக் கொன்று விட்டாயே….” – அழுது கொண்டே கிருஷ்ணரைப் போட்டுப் புரட்டி எடுத்தாள் சுபத்ரா.
- ‘விபீஷண யுக்தி’யைப் பல ஆண்டுகளாகத் தேடி வந்த விபீஷண வம்சத்தினர் குருசேத்திரப் போரின் போது அது நிச்சயமாய் யுயூத்சுவிடம்தான் இருக்க வேண்டும் என நம்பினார்கள். அக்கிரந்தத்தை மீட்கும் பொருட்டு, வலிந்து சென்று அவனது பேத்தியைத் தனது மகனுக்குத் தாரை வார்த்துத் தரும்படி கேட்டார் விபீஷணாலி வழி வந்தவர். அவர்கள் நம்பிக்கை வீண் போகவில்லை. கிரந்தம் கைக்கு வந்ததும் ஆனந்தக் கூத்தாடினர். மேலும், தீவினையச்சம், வெஃகாமை ஆகியவற்றைத் துறக்கும் கலையை இன்னும் விளக்கி ‘விபீஷண யுக்தி’யில் இடைச்செருகல்களாக்கினர்.
– சோம.அழகு
- வேண்டாமே அது
- பிரான்சு நிஜமும் நிழலும் – II (கலை, இலக்கியம்) பதினேழாம் நூற்றாண்டு
- அனுமன் மகாபாரதம் – 1
- உமர் கயாம் ஈரடிப் பாக்கள்
- நவஜோதி ஜோகரட்னம் தொகுத்திருக்கும் மகரந்தச்சிதறல்
- மணல்
- மாத்தா ஹரி நாவல் பிரெஞ்சு மொழியில்
- வள்ளுவர் சொல்லும் காமசூத்திரம் (11) அதிகாரம் 119: பசப்புறு பருவரல்
- தற்காலத் தமிழ்ப் பெயர்ச் சொற்கள்
- வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! (ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்) 9.
- நாசா விண்வெளி ஆய்வகம் அண்டக்கோள்கள் ஆராய 10 சதுர விண்சிமிழ்களை ஏவத் திட்டமிட்டுள்ளது
- தற்கால மொழிப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு
- 2ஆம் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு
- “எழிலரசி கிளியோபாத்ரா ” தாரிணி பதிப்பக வெளியீடாய்
- சினிமா விமர்சனம் – பயிற்சிப்பட்டறை.
- இலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம், கடலூர்
- ஊர்மிளைகளின் உலகங்கள்[இலக்குமிகுமாரன் ஞானதிரவியத்தின் “தீயரும்பு” சிறுகதைத்தொகுப்பை முன்வைத்து]
- மரணம்