ஆதிவாசி
“தமிழ்நாட்டுக்கு உள்ளேதான் வேலை தேட வேண்டிய நிலை இப்போது இருக்கிறது. மற்ற மாநிலங்களில் பெரும்பாலும் ஹிந்தி பேசுகிறார்கள். எனவே, ஹிந்தி கற்றுக்கொள்வதன் மூலமாக தமிழர்களுக்கு மற்ற மாநிலங்களில் வேலை கிடைக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது. எனவே, ஹிந்தியைக் கட்டாயமாகக் கற்றுங்கொள்ளுங்கள், என் தமிழர்களே.”
இதைச் சொன்னவர் யார் ?
“ஆங்கிலம் போலவே, ஹிந்தியும் அம்மொழி பேசாதவர்களுக்கு ஒரு அயல் மொழிதான். இந்தியாவின் அதிகாரபூர்வ மொழியாக ஹிந்தியை அறிவிக்கும் அரசியலமைப்பின் பகுதி XVIIஐ அப்படியே நெம்பியெடுத்து அரேபியக் கடலில் தூக்கிப் போடுங்கள்.”
இதைச் சொன்னவர் யார் ?
இரண்டையும் சொன்னவர் ஒருவரே. :)
சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் !
1938ல் தமிழ்நாட்டுப் பள்ளிகளில் ஹிந்தி படிப்பதைக் கட்டாயமாக்கிய அதே இராஜாஜிதான், ஹிந்திக்கு எதிராக “இந்தியா முழுவதுமான” ஒரு போராட்டத்தைத் திருச்சிராப்பள்ளியில் 1965ல் ஆரம்பித்தார்.
இந்த எதிர்முனை மாற்றத்துக்கு என்ன காரணம் ?
தேவை இல்லாதபோது எதையும் மக்கள் பயன்படுத்த மாட்டார்கள். மக்கள் பயன்படுத்தாத எதுவும் அழிந்து போகும். மூளைக்கும் சரி. மொழிக்கும் சரி – இந்தப் பொதுவிதி பொருந்தும்.
மனிதரின் அடிப்படைத் தேவை பொருளாதாரமே. பொருளாதாரம் தரும் மொழிகள் உயிருடன் இருக்கும். மற்றவை மெல்ல கெடும்.
1938ல் தமிழர்கள் மற்ற மாநிலங்களுக்குச் சென்று பொருளாதாரத்தில் வெற்றிக் கொடி நாட்ட ஹிந்தியை ஆதரித்தார் இராஜாஜி.
இது தமிழ்நாட்டுக்கு உள்ளே அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தமிழைப் பயன்படுத்திக் கொள்வதைத் தடுக்காது.
தமிழ்நாட்டுக்கு வெளியே ஹிந்தியை வைத்து வேலை வாய்ப்பு; தமிழ்நாட்டுக்கு உள்ளே தமிழை வைத்து வாழ்க்கை என்று இருந்திருக்கும்.
ஆனால், 1956ல் ஹிந்தியை அரசு மொழியாக ஆக்கும் முயற்சி வெற்றி பெற்று இருந்தால் மாநில மொழியைப் பயன்படுத்தும் அவசியம் இல்லாது போகும் சூழல் உண்டாகி இருக்கும்.
ஏனெனில், இந்தியாவானது ஒரு ஸோஷியலிஸ டெமாக்ரஸியாக நேருவினால் ஆக்கப்பட்ட காலம் 1956 – 1965கள். அந்த இந்தியாவில், அரசு நிறுவனங்கள் தவிர வேறு பெரிய நிறுவனங்கள் இல்லை. பொருளாதார வளர்ச்சி அரசு நிறுவனங்களை அண்டியே இருந்தது.
கொட்டாம்பட்டியில் இருக்கும் குமார், அதே ஊரில் இருக்கும் தனது நிலத்தைப் பதிவு செய்ய, சேலத்தில் இருக்கும் பஞ்சாயத்து போர்டுக்குச் சென்று ஹிந்தியில் மனு எழுதி, ஹிந்தியில் பட்டாக்கள் எழுத வேண்டிய நிலைக்கு இந்த நேருவியச் சட்டம் கொண்டு போயிருக்கும்.
இந்த நிலையை நீங்கள் கற்பனை செய்து பார்க்க வேண்டியதில்லை. உங்கள் கண் முன்னாலேயே இதற்கான ஒரு மிகப் பொருத்தமான உதாரணம் நடைமுறையில் இக்காலத்திலும் உள்ளது.
நம் தமிழ் டிவி சேனல்களில் அதிகாலையிலும் நள்ளிரவிலும் நடக்கும் கிறுத்துவ எழுப்புதல் நிகழ்ச்சிகளைப் பார்த்து வருகிறீர்கள். தமிழர்கள் இரண்டு பேர் டிவியில் கத்துவார்கள். அதைத் தமிழ்ச் சேனல்கள் ஒளிபரப்பும். ஒளிபரப்புவதைப் பார்ப்பதும் தமிழர்கள்தான். ஆனால், ….
கத்துகிறவர்களில் ஒருவர் ஆங்கிலத்தில் கத்துவார். அவரும் தமிழர். அவருடன் இருக்கும் இன்னொரு தமிழர், ஆங்கிலத்தில் இருக்கும் கத்தலைத் தமிழில் மொழிபெயர்த்துக் கத்துவார். இந்த ஆங்கில-தமிழ்க் கத்தல்களைக் கேட்பவரும் தமிழரே. இவர்கள் அனைவருமே தமிழ் எழுதப் படிக்கப் பேசத் தெரிந்த தமிழர்தாம். இடையில் சம்பந்தம் இல்லாத ஆங்கிலம் ஏன் ?
இதைப் போன்றதொரு ஆங்கிலத் திணிப்பு, தமிழ் இழிவு வேறு ஏதும் உண்டா ?
ஆனால், தமிழகத்தில் ஒருவர்கூட இந்த ஆங்கிலத் திணிப்பை, தமிழ் அழிப்பை எதிர்த்ததில்லை. காலனியப் பிரச்சாரத்தின் வலு அத்தகையது.
இராஜாஜி 1956ல் ஹிந்தித் திணிப்பை எதிர்த்து இருக்காவிட்டால் ஹிந்தியும் இப்படித்தான் ஆகி இருக்கும். தமிழன் குமாருக்கு, அவனுடைய கொட்டாம்பட்டி பற்றி ஹிந்தியில் ஒரு அரசு ஊழியர் சொல்ல வேண்டிய நிலை உருவாகி இருக்கலாம்.
இரண்டு தமிழ் தெரிந்த தமிழர்கள், தமிழைப் பயன்படுத்தாமல் ஹிந்தியில் அவர்கள் வீட்டுப் பிரச்சினையைப் பேசிக் கொண்டு இருப்பார்கள். ஜெபக் கூட்டத்து ஆங்கிலம் போல.
பொருளாதாரத்துக்குப் பயன்படாத தமிழ் அழிந்திருக்கும்.
இதையே, இராஜகோபாலாச்சாரியார் மிகக் கடுமையாக எதிர்த்தார்.
காலனியத்தை ஆதரித்தவர்களான ஜஸ்டிஸ் பார்ட்டியினர், இனவாதி ஈவெரா, அலங்காரப் பேச்சு அண்ணா போன்றோரின் ஹிந்தி எதிர்ப்பில் இருந்து காலனியத்தை எதிர்த்த இராஜாஜியின் ஹிந்தி எதிர்ப்பு முற்றிலும் வேறுபட்டது.
இந்தத் தீராவிட இயக்கத்தார் 1938லும் ஹிந்தியை எதிர்த்தார்கள் – மற்ற இந்தியரோடு தமிழன் இணைந்து விடக்கூடாது என்பதற்காக.
1965லும் ஹிந்தியை எதிர்த்தார்கள் – மற்ற இந்தியர்கள் தமிழனோடு இணைந்து விடக் கூடாது என்பதற்காக.
அதாவது, தமிழரை மற்ற இந்தியரிடம் இருந்து பிரிக்கவே தீராவிடத்தார் ஆங்கிலேயர் காலத்தில் இருந்து போராடி வருகிறார்கள்.
தமிழரை, அவர்களுடைய தாய்மொழியை வளர்க்கும் பாதுகாக்கும் உத்தரவாதத்துடன், மற்ற இந்தியரோடு ஹிந்தியில் இணைவதற்காக இராஜகோபாலாச்சாரியார் போராடினார். தமிழர் மட்டுமல்லாது, பிற மாநிலத்தவரின் மொழி பாதுகாப்புக்காகவும் அவர் போராடினார்.
தீராவிடத்தாரோ தமிழரைத் தனிமைப்படுத்தி, ஆழாக்குக்குள் வடக்கு தெற்கு அரசியல் நடத்துகிறார்.
(தெளிவுபடுத்தி விடுகிறேன். தீராவிடம் = திராவிட இயக்கங்கள் + தமிழ்த் தேசிய இயக்கங்கள்)
தீராவிடத்தார் மட்டும் ஏன் தமிழரைத் தனிமைப்படுத்த முயல்கிறார்கள் ?
1938ல் இராஜாஜி கொண்டு வந்த ஹிந்தி கற்கும் வாய்ப்பை எதிர்த்து முதன் முதலில் உண்ணாவிரதம் (?) இருந்தார் ஒருவர்.
அவருடைய பெயர்: ஸ்டாலின் ஜெகதீசன்[1]
1956ல் இராஜாஜி நடத்திய “அகில இந்திய” ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பு மாநாட்டில் ஒருவர் இவ்வாறு பேசினார்: “இன்றைய இந்தப் புதிய ஹிந்தியானது மதவெறியின் அடையாளம்; இது மதத்தின் அடையாளம்”.
அவருடைய பெயர்: ஃப்ராங்க் அந்தோணி[2]
ஃப்ராங்க் அந்தோணி எனும் ஆங்க்லோ இந்தியர் எதிர்க்கும் மத அடையாளம் என்ன என்பதை புத்திக்கூர்மையுள்ள உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை. ஒரு மதத்தின் அடையாளம், மதவெறியின் அடையாளமாகத் தமிழ்நாட்டில் இந்த மொழி விஷயத்தில் இதுவரை ஆகவில்லை. ஆனால், இனவாத ஈவெரா வழி வந்த தீராவிடர்கள் சொல்லி வருகின்றனர் – “ஹிந்தியைத் திணிப்பதன் மூலம் இந்து மதத்தைத் திணிக்கிறார்கள்”.
உண்மையில் ஹிந்தியை தமிழ்நாட்டில் எதிர்த்ததில் சைவ சமய ஆதீனங்களின் பங்கு அதிகம். உண்மை அங்கனம் இருக்க, ஹிந்தியை திணிப்பது இந்து மதத்தைத் திணிப்பது என்று பேசுவது, இந்து மதத்தில் இருந்து தமிழர்களின் இலக்கியத்தையும் வரலாற்றையும் பிரித்து அழிக்கும் ஒரு கிறுத்துவ முயற்சியே.
நிச்சயமாக ஹிந்தியானது ஒரு மத அடையாளமாக இருந்ததில்லை தமிழகத்தில்.
பஞ்சாபில் இருந்தது.
அங்கிருந்த சீக்கியர்கள் பஞ்சாபிய மொழி அடிப்படையில் தனி மாநிலம் கேட்டனர். அப்படிச் செய்தால் ஹரியானாவிடம் இருந்து பிரிந்து சீக்கிய மதத்தினர் அதிகமாக இருக்கும் மாநிலமாக பஞ்சாப் ஆகிவிடும்.
மத அடிப்படையில் பாரதத்தின் பெரும்பகுதிகளை பாகிஸ்தானாகவும், (தற்போதைய) பங்களாதேசமாகவும் முகமதியருக்கு வெட்டுக் கொடுத்து இரத்தம் உறையாத காலத்தில், இக்கோரிக்கை நேருவுக்கு அச்சத்தை உண்டாக்கியது. பஞ்சாப் மத அடிப்படையில் தனி நாடாகிவிடும் என்று அவர் அஞ்சினார்.
பஞ்சாபிய மொழி அதிகம் பேசும் இடங்களில் இருக்கும் ஹிந்தி பேசுவோர்களிடம், இந்த நேருவிய அச்சத்தை, நேருவின் காங்கிரஸ் கட்சி பரப்பியது. அச்சத்தின் காரணமாக, மொழி அடிப்படையில் மாநிலம் பிரிவதை அங்கு ஹிந்தி பேசியவர் எதிர்த்தனர். நேருவிய காங்கிரஸ் இந்த எதிர்ப்புக்கு அமைப்புபூர்வ ஆதரவுகளைத் தந்தனர்.
அந்த பஞ்சாபிய பிரதேசங்களில் ஹிந்தி பேசுபவர்களாக இருந்தவர்கள் இந்துக்களே. இதன் காரணமாக, ஹிந்தி கற்கும் வாய்ப்புக்கு ஒரு மத அடையாளமும் ஏற்பட்டது.
இதனை சீக்கியர்களுக்கும், இந்துக்களுக்குமான பிரச்சினையாக கருத்துப் பரப்பல்கள் செய்தனர் இந்திய விரோதிகள். இங்கனம் மொழியோடு மதத்தை இணைக்கும் வெறுப்புப் பிரச்சாரம் காலிஸ்தான் இயக்கத்தில் முடிந்தது.
தமிழகத்திலோ ஹிந்தித் திணிப்பை (ஹிந்தியை அல்ல, திணிப்பை) எதிர்த்து நிற்பது இந்து மதமே. ஆனால், இதனை மறைத்து, மொழிப் பிரச்சினையை மதப் பிரச்சினையாகத் திரித்துத் திணிக்கின்றனர் தீராவிடர்கள்.
காலிஸ்தான் போன்ற ஒரு பிரித்தாளும் பயங்கரவாத இயக்கத்தை, தமிழகத்தில் உருவாக்கவே இன்றும் ஹிந்தி எதிர்ப்பு ஒரு கருவியாகப் பயன்பட்டு வருகிறது.
ஒன்று தெளிவு.
தமிழ்நாட்டில் தமிழர்கள் முன்னேறவேண்டும், மற்ற இந்தியர்களுக்குத் தமிழர்கள் தலைவர்களாகி, மற்ற இந்தியரையும் முன்னேற்ற வேண்டும் என நினைக்கின்றனர் தேசிய வாதத் தமிழர்கள்.
இவர்களை எதிர்ப்பவரோ, தமிழர்கள் தமிழ்நாட்டைத் தாண்டிவிடாமல், ஆங்கிலேய அடிமைகளாக, இந்தியாவில் இருந்து பிரிந்து தனிநாடாக இருக்க வேண்டும் என நினைக்கும் தீராவிடவாத டமிளர்கள்.
ஒருவர் எதிர்க்கும் ஹிந்தித் திணிப்பு மற்றவரிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டது; மட்டுமல்ல, முற்றிலும் எதிரானதும்கூட.
இக்காலத்துக்கான தீர்வு
நேருவிய ஸோஷியலிஸத்தில் இருந்து உலகமய பொருளாதாரக் காலத்துக்கு வந்துவிட்டதால், நாம் நேருவிய ஸோஷியலிஸ காலத் தீர்வுகளை முன்னிறுத்துவது இந்த 21ம் நூற்றாண்டிலும், விரைந்து வரப்போகும் 22ம் நூற்றாண்டிலும் உதவாது.
ஹிந்தியையும், தமிழையும் எங்கே பயன்படுத்துவது என்பது குறித்து, இதில் ஒரு தேசியவாதத் தமிழனாக, தீர்வுகளை முன் வைக்கிறேன்:
- தமிழ்நாட்டில் தமிழர்கள் மத்திய, மாநில அரசு அமைப்புகளோடு தொடர்புகொள்ள, அவரவர் வாழ்க்கையை நடத்தத் தமிழையே பயன்படுத்த வேண்டும்.
உதாரணமாக, தமிழக நீதிமன்றங்களில் தமிழே பயன்படுத்தப்பட வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் தேவைகளுக்காக, எல்லா வழக்குகளும், எல்லா தொடர்புகளும் ஹிந்தியில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். உச்ச நீதி மன்ற வழக்கு விவரங்கள், தமிழ் உட்பட, அனைத்து மாநில மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட வேண்டும். உடனுக்குடன்.
- மாநில அரசு அமைப்புகள் மற்ற மாநில, மத்திய அரசமைப்புகளோடு தொடர்புகொள்ள, அவரவர் பணிகளை நடத்திக் கொள்ள ஹிந்தியையே பயன்படுத்த வேண்டும்.
- மத்திய அரசு செய்ய வேண்டியவை:
3.A. உலகச் சந்தையில் அதிகம் புழங்கும் மொழிகளில் இந்தியர் தொழில் நுணுக்கங்கள் (technology) கற்க, தொழில்கள் (business) கற்க வழி செய்ய வேண்டும். ஆரம்பநிலை பள்ளிகளில் இருந்தே.
3.B. சந்தைப் பொருளாதாரத்தில் ஆங்கிலம் மட்டுமல்லாது, மற்ற மொழிகளிலும் இந்தியரின் தொழில்கள் நடக்கச் சந்தைகளை உருவாக்க உதவிகள் தரவேண்டும்.
3.C. உலகமயமாகும் சூழலில், உலகமயப் பொருளாதாரம் கொண்ட ஐரோப்பிய, முகமதிய, அமெரிக்க, ஆசிய நாடுகளோடு உறவுகொள்ள வேண்டி உள்ளது. இந்த நாடுகளின் மொழிகளில் டெக்னாலஜிகள் மற்றும் தொழில்கள் இந்தியா முழுவதும் கற்பிக்கப்பட வேண்டும். அதாவது ஆங்கிலம் மட்டுமல்லாது ஃப்ரெஞ்ச், அரபி, ஜப்பான், கொரிய, சிங்கள, நேபாள், ஸ்பானிஷ் போன்ற மொழிகளில்.
சந்தையில் தொழில் வாய்ப்பு அடிப்படையில், இந்த மொழிகளை மத்திய அரசானது தேர்ந்தெடுத்துக் கல்வி தர வேண்டும். ஆரம்பநிலை பள்ளிகளில் இருந்தே.
3.D. மக்கள் அவரவருக்குத் தேவையான உலக மொழியில் தொழில்களும், தொழில்நுணுக்கங்களும் கற்றுக் கொள்ளலாம்.
பாண்டிச்சேரி போன்ற மாநிலங்களில் ஃப்ரெஞ்ச் பாடமொழியாக இருப்பதையும், அது ஃப்ரான்ஸுடன் தொழில் தொடர்புகளைக் கொள்ள உதவுவதையும் கவனியுங்கள்.
- மாநில அரசுகள் செய்ய வேண்டியவை:
4.A. மற்ற மாநிலங்களோடு தொழில்கள் நடத்தத் தாராளவாத சுதேசிச் சந்தைகளை உருவாக்க வேண்டும்.
உதாரணமாக, தமிழ் மட்டுமல்லாது மற்ற மாநில மொழிகளிலும் தொழில்கள் நடக்கத் தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும்.
4.B. இந்த சுதேசிச் சந்தையில் அதிகம் புழங்கும் மொழிகளில் தமிழர் கல்விகற்க வழி செய்ய வேண்டும். ஆரம்பநிலை பள்ளிகளில் இருந்தே.
4.C. தமிழர் தமிழரோடு செய்யும் தொழில்களை ஊக்குவிக்க வேண்டும். இந்த உள்ளூர் தொழில்களுக்குத் தாராளவாதப் பொருளாதார முறையை கொணர வேண்டும்.
4.D. உலகில் எங்கெல்லாம் மிகச் சிறந்த அறிவு மூலங்கள் இருக்கின்றனவோ, அவற்றை அவரவர் மாநில மொழிக்கு உடனுக்குடன் கொண்டு வரவேண்டும். தமிழக அரசு தமிழுக்குக் கொண்டு வரவேண்டும். அப்படியே ஒவ்வொரு மாநிலங்களும்.
4.E. மாநிலங்களின் சுதேசியப் பொருளாதாரத்தை லாபகரமானதாக ஆக்க வேண்டும். உதாரணமாக, தமிழகத்தில், தமிழர்கள் தமிழர்களுடன் செய்யும் தொழில்களை ஊக்குவித்து, மொழிபெயர்த்த அறிவுச் செல்வங்கள் மூலம் மேம்படுத்தி, சுதேசியப் பொருளாதாரத்தையும் வேலை வாய்ப்புகளையும் அதிகரிக்க வேண்டும்.
4.F. ஒவ்வொரு மாநில அரசும் பிராந்திய மொழியில் டெக்னாலஜியையும் தொழில்களையும் கற்பிக்க வேண்டும். ஆரம்பநிலை பள்ளிகளில் இருந்தே.
4.G. ஒவ்வொரு மாநில அரசும் மற்ற மாநிலத்து மொழிகளிலும் டெக்னாலஜியையும் தொழில்களையும் கற்பிக்க வேண்டும். ஆரம்பநிலை பள்ளிகளில் இருந்தே.
- இந்தக் கல்வி வாய்ப்புகளில், மாணவரும் பெற்றோரும் அவரவருடைய தேர்வை அவர்களே தேர்வு செய்துகொள்ளட்டும்.
இம்முறையினால் ஒரு மொழியில் தொழில்நுணுக்கமும், தொழிலும் கற்றவருக்குப் பிறமொழி கற்க வேண்டிய கட்டாயம் இல்லை.
பிறமொழியினருடன் தொழில் செய்ய விரும்புபவருக்கு அவசியமற்ற மொழி கற்க வேண்டிய கட்டாயமும் இல்லை. உதாரணமாக, ஸ்பெயின் நாட்டோடு தொழில் செய்யும் தமிழருக்கு ஆங்கிலம் கற்க வேண்டிய அவசியம் இல்லை. ஸ்பானீஷ் மொழி கற்பதே போதுமானது.
இத்தீர்வால், உலகமெங்கும் தமிழருக்கு (இந்தியருக்கும்) வாய்ப்புகள் திறக்கும்.
மொழிபெயர்த்தல் துறையில் வேலை வாய்ப்புகள் பலமடங்கு அதிகரிக்கும்.
மொழிபெயர்ப்பாளர்கள் அதிகமாக அதிகமாக மொழிப் பிரச்சினைகளும் இந்தியாவில் அழிந்து அழிந்து போகும்.
அவ்வகையில் தமிழர்கள் மட்டுமல்லாது இந்தியர்கள் ஒவ்வொருவரும் குறைந்தது மூன்று மொழி அறிந்தவர்களாக இருப்பர்.
பக்தி இலக்கியம் படைத்த தமிழர்கள் தமிழையும் வளர்ப்பர். திரைகடலோடிய தமிழர் தமிழரையும் வளர்ப்பர்.
சுருக்கமாகச் சொல்கிறேன்: பலமொழிக் கல்விமுறை வேண்டும்.[3]
[1] தாளமுத்து, நடராசன் போன்ற ஹிந்துக்கள், இனவாதி ஈவெரா மற்றும் அலங்காரப் பேச்சு அண்ணாவின் கருத்துப்பரப்பல்களால் கவரப்பட்டு, தங்களுடைய நலிவு உற்ற உடல்நிலையையும் பொருட்படுத்தாமல், ஹிந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் கலந்துகொண்டார்கள். உடல் நலிவு காரணமாக சிறையில் இறந்தார்கள். ஆனால், இரவில் நிறைய சாப்பிட்டுவிட்டு பகலில் உண்ணாவிரதம் இருப்பதாகச் சொல்லிக் கொண்ட ஸ்டாலின் ஜெகதீசனுக்கே அதிகக் குரல் கொடுத்தார் அண்ணா. 10 வாரங்கள் உண்ணாவிரதம் (?) இருந்த ஸ்டாலின் ஜெகதீசனுக்கே அதிக முக்கியத்துவம் தந்தார். “இன்று ஜகதீசன் இறந்தால் அவரிடத்தை நிரப்ப நான் பத்து பேருடன் அமருவேன். அவர் இறந்தால் நீங்களும் இறக்கத் தயாராகுங்கள்” என முழக்கமிட்டார். இந்தி எதிர்ப்பு நிகழ்ச்சிகளில் ஸ்டாலின் ஜெகதீசனுடைய் படமே பிரதானமாக முன்னிறுத்தப்பட்டது. அவரை தியாகியாக்கி, ஹிந்தி எதிர்ப்புக்கு ஆதரவான படைப்புகள், அவரது படத்துடன் ஹிந்தி எதிர்ப்புக்கு ஆதரவான செய்தித் தாள்களிலும், இதழ்களிலும் வெளியாகின. (படிக்க: விடுதலை, 31 மே 1938, தலையங்கம்.) இராப்பட்சணம் செய்த ஸ்டாலின் ஜெகதீசன், உடலை விட்ட தாளமுத்து மற்றும் நடராசனுக்கு இணையான தியாகியாக ஆக்கப்பட்டார்.
[2] படிக்க: Language Conflict and National Development: Group Politics and National Language Policy in India, by Jyotirindra Das Gupta
[3] பன்மையே இந்துத்துவம். இந்துத்துவமே இந்தியத்துவம்.
- வேண்டாமே அது
- பிரான்சு நிஜமும் நிழலும் – II (கலை, இலக்கியம்) பதினேழாம் நூற்றாண்டு
- அனுமன் மகாபாரதம் – 1
- உமர் கயாம் ஈரடிப் பாக்கள்
- நவஜோதி ஜோகரட்னம் தொகுத்திருக்கும் மகரந்தச்சிதறல்
- மணல்
- மாத்தா ஹரி நாவல் பிரெஞ்சு மொழியில்
- வள்ளுவர் சொல்லும் காமசூத்திரம் (11) அதிகாரம் 119: பசப்புறு பருவரல்
- தற்காலத் தமிழ்ப் பெயர்ச் சொற்கள்
- வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! (ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்) 9.
- நாசா விண்வெளி ஆய்வகம் அண்டக்கோள்கள் ஆராய 10 சதுர விண்சிமிழ்களை ஏவத் திட்டமிட்டுள்ளது
- தற்கால மொழிப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு
- 2ஆம் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு
- “எழிலரசி கிளியோபாத்ரா ” தாரிணி பதிப்பக வெளியீடாய்
- சினிமா விமர்சனம் – பயிற்சிப்பட்டறை.
- இலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம், கடலூர்
- ஊர்மிளைகளின் உலகங்கள்[இலக்குமிகுமாரன் ஞானதிரவியத்தின் “தீயரும்பு” சிறுகதைத்தொகுப்பை முன்வைத்து]
- மரணம்