நெகிழன்
1)
சிமினி விளக்கை அணைத்ததும்
நானும் என் அறையும்
இருளின் வயிற்றுக்குள்
கிடந்தோம்.
ஆம் மக்களே
அது எங்களை விழுங்கிவிட்டது.
இதோ..பாருங்கள்
எனது தண்டச்சோறு அறை
எப்போதும்போல
உணர்ச்சியற்ற ஜடமாய் கிடக்கிறது.
நானோ
தப்பிச்செல்ல முனைகிறேன்.
விழிகளில் விளக்கெண்ணெய் ஊற்றியதுபோல
பாதை தேடுகிறேன்
இருளோ
என்னை குருடனாக்கி
அறையதிர குலுங்கிச் சிரிக்கிறது.
2)
நண்பனே
கடும் தாகமென்றேன்
ஒரு சொம்பு நீரளித்தாய்.
அண்ணாந்து
ஒவ்வொரு மிடறாக…
ஆஹா என்னே ருசி.
உண்மையில் நீரைவிடவும்
சுவை மிகுதியான ஒன்று
இப் பிரபஞ்சத்தில் இல்லவேயில்லை.
நண்பனே
உனது பின்புறம்
நிலைக்கண்ணாடியில்
உன் வலது கை தெரிகிறதே..
அதிலொரு பளபளக்கும்
கத்தியும்.
இன்னும் எத்தனை யுகம்
சாணை பிடித்துப் பிடித்து
மறைத்து மறைத்து வைத்திருப்பாய்.
உண்மையில்
உனை பாராட்டியே ஆகவேண்டும்
ஏனெனில்
அவ்வளவு எளிதல்ல
ஒரு கத்தியை குண்டூசியாக்குவதென்பது.
3)
மீன்களும்
தலைப்பிரட்டைகளும்
வானுக்குள்
வசிக்கின்றன என்றேன்.
ஒருவர் முட்டாளென்றார்
மற்றுமொருவர்
பைத்தியமென்றார்.
அதோ ஆற்றின்
அந்த படித்துறையில் நின்று
உற்று நோக்குங்கள்.
சாய்ந்தாடும் வானுள்
அலைந்து திரியும்
மீன்களும் தலைப்பிரட்டைகளும்.
4)
கடல் உவர்ப்பு.
எப்போதும் என் விருப்பத்துக்குரியதாக
கடல் இல்லை.
ஆயினும் அன்று
அவளுக்காக சென்றேன்.
அவள் கடல் பார்த்து நின்றாள்
எனக்கு பின்புறம் கடல் கத்திக்கொண்டிருந்தது.
அச்சமயம் எனக்கோ
அள்ளிப் பருகவேண்டும்போல் இருந்தது
எத்தனை அழகான கடல்
அவள் அணிந்திருந்த கூலிங் கிளாசில்.
5)
பலநூறு எறும்புகள் அணிவகுத்து
என்னுடலை மேய்ந்தன.
ஸ்பரிசமெங்கிலும்
சற்று வீங்கி காட்சியளித்த
நெற்றிப் பொட்டளவு தடுப்புகளை
கணக்கிட்டு மெதுவாக இமைகள் சாத்திய தருணம்
வயது முதிர்ந்த எறும்பொன்று
என் இமைக்கதவை சுண்டி எழுப்பிக் கேட்டது
உன்னுடலில் இத்தனை வட்டக் கல்லறைகள் உள்ளனவே.
ஆம் இவை தங்களது
இனங்களின் இடுகாடு.
6)
இரயில் பயணத்தில் இசைத்த
என் விருப்பத்திற்குரிய
இசைக் கீற்றுகளுள் மூழ்கி
இருக்கையில்
அரை மயக்க நிலையில் கிடந்தேன்
ஒரு துணிப் பை போல.
அவ்வப்போது
சுண்டல்,முறுக்கு,சிப்ஸ்
விற்பன்னர்களின் குரல்கள்
கோரஸாய் ஒலித்தன.
பாடல்களை நிறுத்தி
எட்டிப் பார்த்தேன்
யன்னல் கம்பியைப் பற்றி
தொங்கித் தொடர்ந்தன
தண்டவாளத்தில் அறுந்த சிலரது குரல்கள்.
7)
அவனொரு தையல்காரன்.
கேசம் நிலத்தை உரச
ரவிக்கைத் தைக்க வந்த மாது
தன் இமைகளை ஒருமுறை
சாத்தித் திறந்தாள்.
அப்போதவள் கண்களில் மின்னின
இரு கருப்புப் பொத்தான்கள்
8)
வயலில் விளைந்த
சோளத் தட்டுகள்
மூங்கில்களாயின.
அடுக்களையில் சிதறிய
பெருங் கடுகுகள்
வெடிகுண்டுகளாக.
வாதனா மரம் உதிர்த்த
ஒற்றைச் செவ்விலை
ஒரு பசுவின் துண்டிக்கப்பட்ட நாவாக.
இப்படியாக ஒவ்வொன்றும்
வெவ்வேறாகிப் போன நாளொன்றில்
நான் ஏதும் பேசாதிருந்தேன்
அப்போது இரண்டு பருத்தி முளைத்திருந்தன
என் நாசித் துவாரங்களில்.
9)
கிறுக்குப் பெண்ணொருத்தி
ஒரு குண்டானில்
கடல் நீரை மொண்டு வந்தாள்.
எதற்கென்றேன்.
குழம்பு வைக்க என்றாள்.
குழம்பிப்போய்
அவள் எரிதழலில் அமர்த்தியிருந்த
சட்டியை எட்டிப்பார்த்தேன்
அப்பப்பா..
ஒரு கடலே பொங்கியது.
– நெகிழன்
- வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! – அத்தியாயம் 10
- இரா. காமராசு கவிதைகள் — சில சிந்தனைகள் ‘ கணவனான போதும்… ‘ தொகுப்பை முன் வைத்து …
- செவ்விலக்கியங்களில் சுற்றுச்சூழல் பதிவுகள்
- எங்களை ஏன் கேட்பதில்லை?
- கம்பன் கழகத்தின் அடுத்து கருத்தரங்கம் இணையக் கோவையாக வெளியாக உள்ளது.
- வாத்தியார் சாமி
- கவிதைகள்
- கண்கள் மாற்றும்…!
- மொழிவது சுகம் ஏப்ரல் 30 2017 அ. இயற்கை தரிசனம் : அம்மா ; ஆ. பிரான்சு அதிபர் தேர்தல்
- உமர் கயாம் ஈரடிப் பாக்கள்
- எட்டு தோட்டாக்கள் – விமர்சனம்
- திருப்பூர் மத்திய அரிமா சங்கம் அரிமா குறும்பட விருது, அரிமா சக்தி விருது ( பெண் எழுத்தாளர்களுக்கான விருது ) வழங்கும் விழா
- பெங்களூர் பல்துறை ஆராய்ச்சிப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர்.பாலகிருஷ்ண பிசுபட்டி அறிவிப்பு
- பிரான்ஸ், ஜப்பான் நாடுகள் செவ்வாய்க் கோளின் துணைக்கோள் ஃபோபாஸை ஆராயத் திட்டமிடுகின்றன.