தொடுவானம் 170. அப்பா வந்துவிட்டார்.

This entry is part 2 of 15 in the series 21 மே 2017

டாக்டர் ஜி. ஜான்சன்

170. அப்பா வந்துவிட்டார்.

நான் பயிற்சி மருத்துவம் முடித்துவிட்டேன். இனி நான் ஒரு மருத்துவன். என்னுடைய பெயருக்குப் பின்னால் எம்.பி.பி.எஸ். என்று போட்டுக்கொள்ளலாம். என்னுடைய மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை. அதோடு இன்னொரு மகிழ்ச்சியான செய்தியும் காத்திருந்தது. அப்பா சிங்கப்பூரிலிருந்து நிரந்தரமாக ஊர் திரும்புகிறார்!
நான் படித்து முடித்து பயிற்சி மருத்துவமும் முடிக்கும்வரை அவர் பணியில் இருந்துள்ளார். சரியாக நான் முடித்தபின்பு அவரும் ஓய்வு பெற்றுவிட்டார். உண்மையில் இது ஓர் ஆச்சரியம்தான்! இனிமேல் அவர் எனக்கு பணம் அனுப்பத் தேவையில்லை. அவரும் தனிமையில் சிங்கப்பூரில் இருக்க வேண்டியதில்லை. சிங்கப்பூரில் அவர் முப்பது வருடங்கள் இருந்துவிட்டார். அது போதுமானது. தமது இரண்டு மகன்களையும் அவர் எண்ணியபடியே பட்டதாரிகளாக ஆக்கிவிட்டார். அவருடைய தியாக வாழ்க்கையின் மாபெரும் சாதனை அது!
இனி நான் வேலூரில் இருக்கவேண்டிய தேவையில்லை.நான் 1965 – ல் வேலூர் வந்தேன். ஆறரை ஆண்டுகள் மருத்துவம் பயின்று, ஒரு வருடம் பயிற்சி பெற்று 1972- இல் வெளியேறுகிறேன்.ஒரு வகையில் நான் வேலூர் வாசியாகவே மாறியிருந்தேன். வேலூர் நகரையும் அதன் கோட்டையையும், மருத்துவக் கல்லூரி வளாகத்தையும் விடுதியையும், சி.எம்.சி. மருத்துவமனையையும் விட்டுச் செல்வது கவலையாகத்தான் இருந்தது.
நான் பெட்டி படுக்கையுடன் வாடகை ஊர்தியில் வேலூர் கண்டோமெண்ட் தொடர் வண்டி நிலையம் சென்றேன். என்னை வழியனுப்ப வகுப்பு மாணவர்கள் யாரும் இல்லை. பயிற்சி மருத்துவத்தின்போதே நாங்கள் பிரிந்துபோனோம். பலர் வீடு திரும்பிவிட்டனர்.
வேலூரை விட்டு புகைவண்டி கிளம்பியபோது மனதில் இருந்த பாரம் அப்பாவின் வருகையை எண்ணியபோது குறைந்தது. அப்போது அப்பா என்னிடம் கொடூரமாக நடந்துகொண்டதுபோல் இனிமேல் இருக்கமாட்டார் என்ற நம்பிக்கைப் பிறந்தது. நான் இப்போது பள்ளி பயிலும் மாணவன் இல்லை. ஒரு மருத்துவன்.
ஊர் சென்று அப்பாவை வரவேற்கத் தயாரானேன். முன்பே பெரியப்பா குடும்பத்துடன் ஊர் திரும்பிவிட்டார். தாத்தா பாட்டி இருவரும் காலமாகிவிட்டனர். அவர்களின் இறுதி மரியாதையில் பெரியப்பா கலந்துகொண்டது பெரிய ஆறுதலாகும். நானும் விடுப்பு எடுத்து வந்து கலந்துகொண்டேன். அப்பாதான் பெற்றோரை கடைசி காலத்தில் பார்க்கமுடியாமல் போனார். இப்பொது அவர்கள் இருவரும் மறைந்தபின்புதான் வருகிறார்.
நல்ல வேளையாக அவருக்கு ஆறுதல் சொல்ல அவருடைய அண்ணன் ( பெரியப்பா ) உள்ளார். பெரியப்பா குடும்பத்துடன் ஊர் திரும்பினாலும் அவருடைய மூத்த மகன் ஜான் அண்ணனை மலேசியாவிலேயே விட்டுவிட்டு வந்தார். அவரும் ரேச்சல் ராணி அண்ணியும் ஜோகூர் பாருவில் வசிக்கிறார்கள். ஜான் அண்ணன் அங்கு அரசு பணியில் உள்ளார்.
நான் இங்கிருக்கும்போது அப்பா வருகிறார். நான் சிங்கப்பூர் சென்றால் எனக்குத் தங்க ஒரு வீடு வைத்துள்ளாரா என்பது தெரியவில்லை. அங்கு அப்பா ஒரு வீடு வாங்கியிருந்தார். அதை என்ன செய்தார் என்பது அவர் வந்தபின்தான் தெரியும்.
என் பெட்டி படுக்கையை ஊர் கொண்டுசெல்ல பால்பிள்ளை சிதம்பரம் இரயிலடிக்கு வந்திருந்தான். அது விடியல் காலை. போகும் வழியில் சூடாக தேநீர் அருந்திவிட்டு பிரயாணத்தைத் தொடர்ந்தோம். வயல் வெளிகளில் இன்னும் பனி படர்ந்திருந்தது.
அப்பாவின் வருகைக்காக வீட்டை தயார் செய்தோம். சுவர்களுக்கு சுண்ணாம்பு பூசினோம். வீட்டு வாசலில் பந்தல் போட்டோம். இவற்றை பால்பிள்ளையின் மேற்பார்வையில்தான் நடந்தது. இதுபோன்ற வேலைகளில் அவன் கெட்டிக்காரன்.
தாத்தா இருந்தபோதே வீதி ஓரத்தில் இன்னொரு மனை வாங்கி தன்னுடைய இரு மகன்களுக்கு கல் வீடு கட்ட அஸ்திவாரம் போட்டிருந்தார். பெரியப்பா அங்கேயே ஒரு வீடு கட்டி வசிக்கிறார். அவருடன் தனமணி பெரியம்மாளும்,தம்பிகள் டேவிட், நெல்சன் உள்ளனர்.
நாங்கள் இருக்கும் வீடும் மனையும் தோட்டமும் அப்பாவுக்குத்தான் சொந்தமாகும். அவர் வந்ததும் அப்படித்தான் பாகப் பிரிவினை செய்துகொள்வார்கள்.கிராமத்தில் குடியிருக்கும் மனையும் நிலங்களும்தான் நிரந்தரமான சொத்துகள்.
இதுவரை நிலங்கள் அனைத்தையும் அம்மாதான் பார்த்துக்கொண்டிருந்தார். அப்பா வந்தபின் நிலங்களையும் பெரியப்பாவும் அப்பாவும் பிரித்துக்கொள்வார்கள். அத்தைக்கும் ஒரு காணி தருவார்கள்.
அப்பா வரப்போவது தெம்மூர் முழுதும் தெரிந்துவிட்டது. அனைவரும் அவரைக் காண ஆவலுடன் காத்திருந்தனர். அண்ணனும் அண்ணியும் விடுப்பு எடுத்துக்கொண்டு தரங்கம்பாடியிலிருந்து வந்துவிட்ட்னர்.
அப்பா ஸ்டேட் ஆஃப் மெட்ராஸ் கப்பலில் வருகிறார். தாம்பரத்திலிருந்து அத்தையும் மாமாவும் அவரை அழைத்து வந்து வீட்டில் தங்கவைத்து பின்பு தொடர்வண்டியில் அனுப்பி வைப்பார்கள்.
அப்பா வரும் நாள் அன்று அதிகாலையிலேயே அண்ணன் மதியழகனுடன் கூண்டு வண்டியில் சிதம்பரம் சென்றுவிட்டார். நான் வீட்டில் காத்திருந்தேன்.தங்கைகள் கலைமகள், கலைசுந்தரி இருவரும் அப்பாவைக் காணும் ஆவலில் உற்சாகமாக இருந்தனர். அவர்கள் இருவரும் அப்பாவை அண்ணனின் திருமணத்தின்போது சிறுபிள்ளைகளாக இருந்தபோது பார்த்தவர்கள். அப்பாவின் அன்பு தெரியாமலேயே வளர்ந்தவர்கள். அவர்களைப் பார்த்து அப்பாவும் மகிழ்வார்.
அண்ணன் ,நான் , கலைமகள்,கலைசுந்தரி ஆகிய நால்வருமே அப்பாவைப் பார்க்க ஒவ்வொரு வகையில் ஆர்வம் கொண்டிருந்தோம்.என்னைத் தவிர மற்ற மூவரும் அப்பாவுடன் அதிக நாட்கள் இருந்ததில்லை. அண்ணனின் திருமணத்தின்போது ஒரு மாதம் அவர்கள் உடன் இருந்ததுதான்.அவருடன் இருந்த பத்து வருட அனுபவம் எனக்குதான் உள்ளது. அது மறக்கமுடியாத சோக அனுபவம் எனலாம். கடந்த ஒன்பது வருடங்கள் நான் அவரைப் பிரிந்திருந்து, இப்போது மீண்டும் அவருடன் இருக்கப்போகிறேன்.
நான் தற்போது ஓர் இளம் எம்.பி.பி.எஸ். பட்டதாரி. எங்கு வேலைக்குச் செல்வேன் என்பது தெரியவில்லை. உடன் சிங்கப்பூர் செல்வதுதான் உகந்தது. அங்கு சென்று சிங்கப்பூர் மருத்துவக் கழகத்தில் பதிவு பெற்றபின்பு அரசு மருத்துவமனையில் வேலை செய்யலாம். அனால் இந்த நேரம் பார்த்து அப்பா திரும்பிவிட்டார். சிங்கப்பூரில் நண்பர்களின் தொடர்பு இருந்தது. லதாவிடமிருந்து சில மதங்களாகக் கடிதங்கள் வரவில்லை. ஒருவேளை வீடு மாறி போய்விட்டாளோ என்பதும் தெரியவில்லை. அங்கு சென்றால் நண்பர்களின் உதவியைத்தான் நாடவேண்டும். அவர்களும் எந்த நிலையில் உள்ளனர் என்பதும் தெரியவில்லை. ஜெயப்பிரகாசம் மட்டும் அவ்வப்போது கடிதங்கள் எழுதி வந்தான். அவன் தொடர்பு மட்டுமே இருந்தது. அவன் உதவியுடன் சிங்கப்பூர் சென்று வேலையில் அமரலாம்.
அப்பா இப்போதுதான் ஊர் திரும்புகிறார்.நாங்கள் அனைவரும் குடும்பமாக இப்போதுதான் ஒன்றாக வாழப்போகிறோம்.இந்த நேரம் பார்த்து நான் சிங்கப்பூர் சென்றால் நான் மட்டும் தனியாகவே அங்கு வாழவேண்டிவரும். அது ஒரு குறைதானே.
அதற்கு மாறாக நான் கொஞ்ச காலம் இங்கேயே இருந்து பின்பு சிங்கப்பூர் செல்லலாம்.இதுவும் உகந்ததாகவே தோன்றியது. அதற்கு ஒரு வழியும் உள்ளது.
நான் மருத்துவக் கல்லூரியில் சேர தமிழ் சுவிஷேச லுத்தரன் திருச்சபையில் பரிந்துரை செய்திருந்தது. அதற்கு பதிலாக நான் படித்து முடித்தபின்பு திருச்சபை மருத்துவமனையில் இரண்டு வருடங்கள் பணிபுரிய சம்மதம் தெரிவித்திருந்தேன். அதோடு கல்விக் கடனாக இரண்டாயிரம் ரூபாய் பெற்றிருந்தேன். அதற்கும் இரண்டு வருடங்கள் பணிபுரியவேண்டும். அதன்பின்பு சிங்கப்பூர் செல்லலாம்.இதுபோன்று திருச்சபையின் உதவியுடன் வேலூரில் மருத்துவம் பயில்வதின் நோக்கம் படித்து முடிந்தபின்பு திருச்சபையின் மருத்துவமனைகளில் பணி புரியவேண்டும் என்பதே. பெரும்பாலானவர்கள் இதைக் கடைப்பிடித்து அவ்வாறு சேவை புரிகின்றனர். இந்தியாவில் உள்ள திருச்சபை மருத்துவமனைகளில் வேலூர் பட்டதாரி மருத்துவர்கள்தான் அதிகமாக உள்ளனர். ஒரு சிலர் மட்டும் திருச்சபையின் உதவியோடு மருத்துவம் பயின்றவிட்டு திருச்சபையை மறந்துவிட்டு வேறு நாடுகளுக்குச் சென்றுவிடுகின்றனர். குறிப்பாக வேலூரில் பயின்றவர்களுக்கு அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் நல்ல வரவேற்பு இருந்தது. அங்கு செல்லவேண்டுமெனில் E C F M G என்னும் தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெறவேண்டும். அது சற்று கடிமானது. என்னுடைய வகுப்பு மாணவ மாணவிகளில் சிலர் அதை எழுத தயார் செய்துகொண்டிருந்தனர்.நான் அதில் நாட்டம் கொள்ளவில்லை.
திருச்சபையின் உதவியுடன் நான் மருத்துவம் பயின்றுள்ளேன். அதன் பயனை கொஞ்ச நாட்களாவது திருச்சபைக்கே அர்ப்பணிப்பதே நல்லது என்று எண்ணினேன். பேராயர் டீல் எனக்கு மருத்துவம் பயில பரிந்துரைச் செய்ததை நான் மறக்கவில்லை. அதை வைத்துதான் என்னை வேலூரில் நேர்முகத் தேர்வுக்கும் அழைத்திருந்தனர். நான் நுழைவுத் தேர்வில் தேர்ச்சியுற்றதும் அதற்கு கை கொடுத்தது.அதன்பின்பு நேர்முகத் தேர்வில் நன்றாகச் செய்ததால் மருத்துவம் பயில வாய்ப்பு கிட்டியது. அதோடு அப்பா பணம் அனுப்பாத சில மாதங்களுக்கு திருச்சபைதான் இரண்டாயிரம் ரூபாய் தந்து உதவியது. அப்போதெல்லாம் அது பெரிய தொகையாகும். ஆதலால் நான் சொன்ன வாக்கைக் காப்பாற்றும் விதத்தில் திருச்சபை மருத்துவமனையில் நான்கு வருடங்கள் பணிபுரிய முடிவு செய்தேன். இதற்கு அண்ணனும் அப்பாவும் சம்மதிப்பார்கள் என்று நம்பினேன். ஆரம்பத்திலேயே நாம் கடவுளை மறந்துவிட்டால் பின்னாளில் அது ஆசீர்வாதமாக இருக்காது என்றும் நம்பினேன். ஆதலால் கடவுளுக்கு ஆற்ற வேண்டிய இந்தப் புனிதமான மருத்துவப் பணியை நான்கு வருடங்கள் ஆற்றிவிட்டு சிங்கப்பூர் செல்லலாம் என்று முடிவு செய்தென்.
சிதம்பரம் சென்ற கூண்டு வண்டி வந்துவிட்ட்து. நாங்கள் ஓடி வெளியில் சென்று பார்த்தோம்.அதில் அப்பா இல்லை. அண்ணனையும் காணவில்லை. வண்டி நிறைய பெட்டிகளும் சாமான்களும் இருந்தன. அப்பாவும் அண்ணனும் பேருந்தில் வந்துகொண்டிருப்பதாக மதியழகன் கூறினார்.
பால்பிள்ளை வாடகை சைக்கிள் கொண்டுவந்தான். அதில் ஏறிக்கொண்டு நாங்கள் தாவர்த்தாம்பட்டு சென்றோம். போகும் வழியில் எதிரே தூரத்தில் உயரமான ஒருவர் முழுக்கால் சட்டையுடன் தலையில் ” கவ் பாய் ” தொப்பி அணிந்து நடந்து வருவது தெரிந்தது. அவருக்குப் பின்னால் அண்ணன் வருவதும் தெரிந்தது. ஆம். அவர்தான் அப்பா! பேருந்துலிருந்து இறங்கி நடந்து வருகின்றனர். நாங்கள் திரும்பி வீடு சென்றோம்.
அதற்குள் ஊர் மக்கள் எங்கள் வீட்டு முன் பெருந் திரளாகக் கூடிவிட்டனர். பெரியப்பாவும் மோசஸ் சித்தப்பாவும் வீட்டு திண்ணையில் அமர்ந்திருந்தனர். செல்லக்கண்ணு மாமாவும் பந்தலில் போடப்பட்டிருந்த பெஞ்சில் உட்கார்ந்திருந்தார். வேறு சில உறவினர்களும் வந்திருந்தனர். அப்பாவுக்கு ஊரில் நல்ல வரவேற்புதான்!
அப்பா ஊரை அடைந்ததும் ஊராரும் அவரை வரவேற்று அவரைப் பின்தொடர்ந்தனர். அவர் வீடடை அடையும்போது திரளான கூட்டம் கூடிவிட்ட்து. நான் வாசலில்தான் நின்றுகொண்டிருந்தேன். என்னுடன் அம்மா தங்கைகள் இருவரும் நின்றுகொண்டிருந்தனர். அப்பா எங்களைப் பார்த்துவிட்டு நேராக திண்ணையில் அமர்ந்திருந்த பெரியப்பாவிடம் சென்றார். அவரைக் கட்டிப் பிடித்துக்கொண்டு, ” அண்ணே அம்மா அப்பாவை நான் பார்க்க முடியாமல் போய்விட்டதே! ” என்று கதறி அழுதார்! அது கேட்ட என் கண்கள் கலங்கிவிட்டன. என்னால்தானே அவரால் முன்பே ஊர் திரும்ப முடியவில்லை என்ற குற்ற உணர்வு என்னைத் தாக்கியது. அவர் முன்பே வந்திருந்தால் அவருடைய வயதான பெற்றோரின் இறுதி நாட்களில் உடன் இருந்திருப்பார். அப்பா பாவம். எங்கள் படிப்பிற்காகவே தம்முடைய வாழ்நாளில் முக்கிய பகுதியை சிங்கப்பூரிலேயே கழித்துவிட்டார். அனால் வைராக்கியமாக அப்படி இருந்துவிட்டு தன்னுடைய பிறந்த ஊருக்கு மீத நாட்களைக் கழிக்க வந்துவிட்டார். அந்த வகையில் அப்பா கெட்டிக்காரர்தான்!

( தொடுவானம் தொடரும் )

Series Navigationநாசாவின் விண்ணுளவி பூமியைச் சுற்றி விண்வெளி எங்கும் எதிர்மின்னிகள் நடனம் புரிந்து வருவதை வெளிப்படுத்துகிறதுஅருணா சுப்ரமணியன் கவிதைகள்
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *