வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! 13

This entry is part 15 of 15 in the series 21 மே 2017


ஜோதிர்லதா கிரிஜா
(ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்)

13.
கிஷன் தாசின் பங்களாவில், முன்னடிக் கூடம். அன்று ஞாயிற்றுக்கிழமை. கிஷன் தாசும் பிரகாஷும் பஞ்சணை நாற்காலிகளில்

அமர்ந்து ஆளுக்கு ஒரு நாளிதழைப் படித்துக்கொண்டிருக்கிறார்கள்.
தலை உயர்த்தும் பிரகாஷ், “அப்பா! நாம் காப்பி குடிக்கலாமா?” என்கிறான்.
“இன்று காப்பி கிடையாது, பிரகாஷ்!”
“ஏன், அப்பா?”
“அதிகாலையில் எழுந்து சமையலை முடித்துவிட்டு நகுல் தன் சொந்தக்காரர் ஒருவரின் வீட்டுக்குப் போயிருக்கிறான். மாலையில்தான் திரும்புவான்.”
“அப்படியானால ஃப்ரிட்ஜிலிருந்து நான் குளிர்ப்பானங்களை எடுத்து வரட்டுமா?”
“செய்.”
பிரகாஷ் இரண்டு கண்ணாடிக் கோப்பைகளில் ஆரஞ்சுச் சாறு எடுத்து வருகிறான். ஒன்றைக் கிஷன் தாசிடம் கொடுத்துவிட்டு மற்றதுடன் அமர்கிறான்.
ஆரஞ்சுச் சாற்றை உறிஞ்சியபடி, கிஷன் தாஸ், “நீ ஜிம்முக்குப் போயிருந்த போது சுமதியின் அப்பா தொலைபேசினார்,” என்கிறார்.
“என்னவாம்? முக்கியமான ஏதாவதா?” என்று பிரகாஷ் ஆவலுடன் வினவுகிறான்.
”ஆமாம்-இல்லை!”
“என்ன அர்த்தம் இதற்கு? தெளிவாய்ப் பேசுங்களேன்.”
“உங்கள் கல்யாணத்தை விரைவில் நடத்திவிடவேண்டும் என்றார்.” – இவ்வாறு சொல்லிவிட்டு மேற்கொண்டு எதுவும் பேசாமல் அவர் மவுனமாக இருக்கிறார்.
பிரகாஷ் இதனால் எரிச்சல் அடைகிறான். இருப்பினும் பொறுமையாய் இருக்கிறான்.
“அதற்கு நான் என்ன பதில் சொன்னேன் என்று நீ கேட்கவில்லையே!”
“இது தொலைக்காட்சித் தொடரா என்ன! நீங்களே சொல்லுவீர்கள் என்று காத்திருக்கிறேன்.”
“ … ‘அதற்கு என்ன அவசரம்? மறுபடியும் உங்களுக்கு உடம்பு சரியில்லையா?’ என்று நான் கேட்டேன். அதற்கு அவர், ‘இல்லை, இல்லை. எனக்கு உடம்புக்கு ஒன்றுமில்லை. என் மனைவியின் மனம் மாறுவதற்கு முன்னால் அதை நடத்திவிட வேண்டும் என்று நினைக்கிறேன்’ என்றார். தம் உடம்பு பழைய நிலைக்குத் திரும்பி விட்டால் ஒருவேளை அவள் மறுபடியும் பழைய பல்லவியைப் பாடக்கூடும் என்று அஞ்சுகிறார்…”
“அவரது அச்சம் புரிந்துகொள்ளக்கூடியதுதான்.”
“எதற்கு அவர் அஞ்ச வேண்டும்? அவருக்கு இதய நோய் ஏற்பட்டுவிட்டது. எனவே அந்தப் பெண்மணி விட்டுக்கொடுத்துவிட்டாள். இனித் தன் முடிவை அவள் மாற்றிக்கொள்ள மாட்டாள். மாற்றிக்கொள்ளுவாள் என்று நான் நினைக்கவில்லை!”
பிரகாஷ், நாளிதழை வைத்துவிட்டு, “தம் மனைவியைப் பற்றி நம்மை விடவும் அவருக்குத்தான் அதிகம் தெரியும்!” என்கிறான்.
“மனிதர்களின் மனத்தத்துவம் பற்றி உனக்கு ஒன்றும் தெரியாது!”
எரிச்சல் அடையும் பிரகாஷ், “என்ன பெரிய மனத்தத்துவம்! எனக்கும் கொஞ்சம் சொல்லுங்கள்!” என்கிறான்.
“மோசமான உடல் நிலையில் இருந்துவிட்டு வீடு திரும்பிய கணவனின் விருப்பத்துக்கு மாறாக எந்த மனைவியும் செயல்படமாட்டாள்!”
“இந்தப் பெண்மணி வேறு விதமானவளாக இருக்கக்கூடும்! மிஸ்டர் ஜெயராமனுக்குத்தான் சரியாகத் தெரியும்!”
ஆரஞ்சுச் சாற்றைப் பருகியவாறு, “இருக்கலாம். ஆனால் நான் கொஞ்சம் அவகாசம் கேட்டேன்!” என்று கிஷன் தாஸ் கூறுகிறார்.
இந்த அவரது கோரிக்கை பிரகாஷை வியப்பில் ஆழ்த்துகிறது. அவன் அதிர்ந்தும் போகிறான்.
“என்ன! அவகாசம் கேட்டீர்களா! எதற்காக?… ஒருவேளை சுமதிக்கு மீண்டும் ஏதேனும் பரீட்சை வைப்பதற்காகவா?” என்று கேலியாய்க் கேட்கவும் செய்கிறான்.
பெரிதாய் நகைத்து, “ஒரு வகையில் உனது ஊகம் சரியானதுதான்!’ என்று கிஷன் தாஸ் பதிலளிக்கிறார்.
எரிச்சல் அடைந்தவனாய், “எந்த ஒரு வகையில் சரியானது? என்ன அர்த்தம் அதற்கு?” என்று பிரகாஷ் வினவுகிறான்.
“நீ ஊகிப்பது போல் நான் ஒன்றும் சுமதிக்கு மறுபடியும் பரீட்சை எதுவும் வைக்கப் போவதில்லை. ஆனால் அந்தப் பெண்ணைப் பற்றி நான் விசாரிக்க வேண்டியிருக்கிறது,” என்று அவனை நேரடியாய்ப் பார்ப்பதைத் தவிர்த்தவாறு கிஷன் தாஸ் கூறுகிறார்.
இன்னும் அதிக எரிச்சலுக்கு ஆளானவனாகி, “என்ன விசாரணை செய்யப் போகிறீர்களாம்? யாரிடம்? எதற்காக? அதுதான் ஏற்கெனவே ஒரு பரீட்சை வைத்து அவளிடம் மூக்குடைபட்டீர்களே! அது போதவில்லையா?” என்று பிரகாஷ் கேட்கிறான்.
இப்போதும் அவனைப் பார்ப்பதைத் தவிர்க்கும் கிஷன் தாஸ், “ஏன் சிடுசிடுக்கிறாய்? நீ அனுபவம் இல்லாத இளைஞன். இந்த உலகத்தைப் பற்றிச் சரியாக அறியாதவன். இன்னும் சொல்லப் போனால், நீ இன்னமும் படித்துக்கொண்டிருக்கும் ஒரு மாணவன்! பட்டத்துக்கு மேல் பட்டமாக வாங்கப் படித்துக்கொண்டே இருப்பவன். உன்னுடைய எம்.பி.ஏ. தேர்வுக்கு இன்னும் ஆறு மாதங்களே இருக்கின்றன. இது முதல் காரணம். அடுத்த காரணம் – ஒரு பெண்ணை மனைவியாய்த் தேர்ந்தெடுக்கும் போது – நான் ஏற்கெனவே சொன்னது போல் – நாம் மிக, மிகக் கவனமாய் இருக்க வேண்டும் என்பது. அதனால் தான் இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் என்கிறேன்,” என்கிறார்.
சினத்தை அடக்க முடியாமல், “சுமதியைப் பற்றி இன்னும் என்ன தெரிந்து கொள்ள வேண்டும் உங்களுக்கு?” என்று அவன் வினவுகிறான்.
“அவளுடைய முன்னாள், இந்நாள் நடத்தை பற்றி. அவள் பெற்றோர் பற்றியும்தான்….”
“அப்பா! இது ரொம்பவும் அதிகப்படி! அவள் ஓர் அபூர்வமான பெண். நல்ல இயல்புகள் உள்ள பெண். அது சரி, இதில் அவள் பெற்றோர் எங்கே வருகிறார்கள்? அவர்கள் நடத்தை கெட்டவர்களாக உங்கள் கண்களுக்குத் தெரிகிறார்களா? அப்படியே இருந்தாலும், என்னைப் பொறுத்த வரை, பின்வாங்குதல் என்பதற்கே இடமில்லை! சுமதியைத் தவிர வேறு யாரையும் என்னால் மணந்துகொள்ள முடியாது! இது சத்தியம்! உங்கள் புத்தி ஏன் இப்படியெல்லாம் வேலை செய்கிறது என்றே எனக்குப் புரியவில்லை. உங்களது மறைமுக நோக்கம்தான் என்ன?”
“மறைமுக நோக்கம் எதுவும் இல்லை, பிரகாஷ்! நான் செய்யும் எந்தக் காரியமுமே உனது நலனுக்காகத்தான். என்னை நம்பு. திருமணம் என்பது ஒருவர் வாழ்க்கையில் ஒரு முறைதான் நிகழும். மண விலக்கு ஆனாலோ அல்லது வேறு ஏதேனும் நடநதாலோ மட்டுமே மறு முறை ஒருவர் திருமணம் செய்துகொள்ள நேர்கிறது. என் ஒரே அன்பு மகனின் வாழ்க்கையில் அப்படி யெல்லாம் நேர்வதை நான் விரும்பவில்லை, பிரகாஷ்!”
“மணவிலக்கு என்பது எனக்கு விதிக்கப்பட்டிருந்தால், இந்த உலகில் உள்ள எந்தச் சக்தியாலும் அதைத் தடுக்க முடியாது! ஆனால், இது போல வெல்லாம் நீங்கள் ஏன் கற்பனை செய்ய வேண்டும், அப்பா?”
“நீ தேர்ந்தெடுத்திருக்கும் பெண் அப்படிப்பட்டவள், பிரகாஷ்! உன் உடம்பில் எப்போதும் உறுத்தும் ஒரு முள்ளாகவே அவள் இருக்கப் போகிறாள்!”
“என் வருங்கால மனைவி பற்றி இப்படிப்பட்ட சொற்கள் உங்களிடமிருந்து வருவது எனக்குப் பிடிக்கவில்லை!… அவள் ஒரு கொள்கைவாதி. சுமுதாய நலனில் அக்கறை கொண்டவள்…. அதை நாம் ஏன் ஆட்சேபிக்க வேண்டும்? மேலும், அப்படி ஒரு கேவலமான முறையில் அவளைச் சோதித்ததன் மூலம் அவளால் மூக்குடைபட்டுத் தலைகுனிவுடன் திரும்பி வந்துள்ளீர்கள்! நம் பணத்தின் மீது அவளுக்கு நாட்டமே இல்லை என்பதை அவள் நீருபித்துவிட்டாள். இதற்கும் மேல் அவளைப் பற்றி உங்களுக்கு என்ன தெரிய வேண்டுமாம்?”
“பிரகாஷ்! அவள் மிகுந்த அறிவுக்கூர்மை யுள்ள பெண்! உள்ளுணர்வு எனும் திறன் பெண்களுடன் கூடவே பிறந்த ஒன்று. ஆண்களாகிய நமக்கு அது கிடையாது. அதனால்தான் எனது வருகையின் நோக்கத்தை நான் வாய் திறந்து அதைச் சொல்லுவதற்கும் முன்பாகவே அவள் ஊகித்து விட்டாள்!”
“அதற்கு என்ன? அதனால் நம் பணத்தின் மீது தனக்கு ஆசை இல்லை என்பது போல் அவள் நடித்தாள் என்று சொல்லுகிறீர்களா?” என்று பிரகாஷ் ஆவேசமாய் இடைமறிக்கிறான்,
“எனக்கென்னவோ சந்தேகமாகத்தான் இருக்கிறது, பிரகாஷ்!”
“உங்கள் சந்தேகமும் நீங்களும்! சுமதியின் விஷயத்தில் உங்கள் வணிகத்தனமான மூளையைப் பயன்படுத்தாதீர்கள். அவள் ஒரு மாணிக்கம்! எந்த ஒரு காரணத்துக்காகவும் அவளை இழக்க நான் தயாராக இல்லை. அவளைப் பற்றி நீங்கள் கண்டு பிடிக்கப் போவது என்னவாக இருந்தாலும் சரி!”
“உன் தீர்மானமும் நீயும்! கண்டவுடன் காதல் என்பது அசட்டுத்தனத்தின் உச்சம்!”
“உங்கள் வணிகத்தனமான மனத்தின் மூலம் இது போன்றவற்றை உங்களால் ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது! காதலைப் புரிந்துகொள்ள ஒருவருக்கு அன்பு நிறைந்த இதயமும் உணர்வுகளும் இருக்க வேண்டும்!”
“அன்பு நிறைந்த இதயமும் உணர்வுகளும் என்றா சொன்னாய்! நீ எனக்கு அது பற்றி எடுத்துச் சொல்லுகிறாயா! முப்பத்தெட்டு வயதில் மனைவியை இழந்த நான் அதன் பின் மறுமணம் பற்றி நினைத்தும் பார்க்கவில்லை. யாருக்காக? உனக்காக! எனக்கு அன்பான இதயத்தையும் உணர்வுகளையும் பற்றி நீ போதிக்கிறாயா!” என்று உணர்ச்சியுடன் வினவும் கிஷன் தாசின் குரல் தழுதழுக்கிறது. அவர் விழிகளும் கசிகின்றன.
கிஷன் தாசின் குரல் தடுமாற்றத்தையும் கண்கள் கலங்கியதையும் கவனிக்காதவன் போல் அவரைப் பார்ப்பதைத் தவிர்க்கும் பிரகாஷ், “உங்கள் ஒரே மகன் தான் விரும்பும் பெண்ணை மணப்பதற்கு நீங்கள் அனுமதிக்காவிட்டால் உங்களிடம் இருப்பதாக நீங்கள் சொல்லிக்கொள்ளும் அன்பான இதயத்துக்கு அர்த்தம்தான் என்ன?”
என்று கடுமையாய்க் கேட்பதோடு, “அது வெறும் வேஷம்! நீங்கள் ஒரு வேஷதாரி!” என்றும் கூறுகிறான்.
கண்களைக் கைக்குட்டையால் ஒற்றிக்கொண்டு குரலையும் சரிப்படுத்திக்கொண்ட பின், “அப்படியே இருக்கட்டும். நான் ஒரு வேஷதாரியாகவே இருந்துவிட்டுப் போகிறேன். … ஆனால் ஒன்று மட்டும் கேட்டுக்கொள். நீ அந்தப் பெண்ணை மணந்துகொண்டால், என் சொத்தில் ஒரு காசு கூட உனக்குக் கிடைக்காது! தெரிகிறதா?” என்கிறார்.
கேலிப் புன்சிரிப்புடன் தலையசைத்துக் கைதட்டும் பிரகாஷ், “உங்கள் குட்டு வெளிப்பட்டுவிட்டது! அவளைப் பற்றி விசாரிக்கப் போவதாய் மட்டுமே முதலில் சொன்னீர்கள். இப்போது, உங்கள் சொத்திலிருந்து ஒரு காசு கூட எனக்குக் கிடைக்காது என்று சொல்லுகிறீர்கள்!… இருக்கட்டும். ஆனால் இன்னும் கொஞ்சம் அவகாசம் கேட்டதற்கு சுமதியின் அப்பாவிடம் என்ன காரணம் சொன்னீர்கள்? அதைக் கேட்க மறந்துவிட்டேன்!” என்கிறான்.
“இன்னும் ஆறே மாதங்களில் நீ எம்.பி.ஏ. தேர்வு எழுத இருப்பதால், திருமணம் குறுக்கிட்டால் அதற்கு உன்னால் சரியாகத் தயார் செய்ய முடியாது என்று சொன்னேன். அவரும் அதை ஏற்றுக்கொண்டார்.”
“சரி. இப்போது நம் விஷயத்துக்கு வருகிறேன். நான் ஏதோ பேச்சை மாற்றுவதற்காக அவகாசம் வேண்டியதற்கு அவருக்குச் சொன்ன காரணம் பற்றிக் கேட்டேன் என்று உங்கள் வணிக மூளை கொண்டு ஊகிக்காதீர்கள்!…. என்ன சொன்னீர்கள்? உங்கள் சொத்தில் ஒரு காசு கூட எனக்குக் கிடைக்காது என்றுதானே? யாருக்கு வேண்டும் உங்கள் காசும் பணமும்! நான் வேலை செய்து சம்பாதித்துக்கொள்ளுவேன்!”
பிரகாஷ் செய்தது போன்றே அவரும் கைதட்டுகிறார். இரைந்து சிரிக்கவும் செய்கிறார்: “என்ன சொன்னாய்? வேலை செய்து சம்பாதிப்பாயா? எதன் உதவியால்? என் உதவியால் நீ வாங்கிய கல்லூரிப் பட்டத்தை வைத்துத்தானே? என் பணத்தால் வாங்கிய பட்டம்! இல்லையா? சொல்லு, அப்பா!”
பிரகாஷ் அதிர்ச்சியில் வாயடைத்துப் போய்விடுகிறான். விழிகள் பிதுங்கச் சிலையாய் வீற்றிருக்கும் அவனால் பதில் சொல்ல முடியாமல் போகிறது.
எனினும், அவமானத்திலும், வேதனையிலும் தடுமாறும் குரலில், “ஆக மொத்தம், ஆயுள் முழுவதும் உங்களுக்கு அடிமையாக என்னை இருத்திக்கொள்ளும் நோக்கத்தில்தான் என்னைப் படிக்க வைத்தீர்கள்! என் தனிப்பட்ட விஷயங்களிலும் கூட உங்கள் சொற்படி நான் ஆட வேண்டும் எனும் விருப்பத்தில்! உங்களின் மற்ற சொத்துகளைப் போல நானும் ஒரு சொத்து என்பதுதானே உங்கள் எண்ணம்? எனக்கென்று ஒரு மனமும் அறிவும் கிடையாதா?… சரி. சொல்லுகிறேன். கேட்டுக்கொள்ளுங்கள். உங்கள் பண உதவியால் நான் வாங்கிய கல்லூரிப் பட்டத்தைப் பயன்படுத்தி நான் எந்த வேலைக்கும் போகமாட்டேன். உடல் உழைப்புச் செய்து என்னால் இயன்றதைச் சம்பாதிப்பேன். இந்த எனது தன்மானம் நிறைந்த முடிவை நிச்சயம் சுமதி பாராட்டுவாள்! மேலும்…”
தொடர்ந்து பேச அவனை அனுமதிக்காமல் அவர் குறுக்கிடுகிறார்: “அதுமட்டுமா! தன் கணவனாகிய உனக்கு அவள் இருக்க இடம், உடுக்க உடை, உண்ண உணவு எல்லாமும் தருவாள்! பிரபல தொழிலதிபர் கிஷன் தாசின் ஒரே மகன் தன் மனைவியின் வருவாயில் தண்டச்சோறு தின்பவனாக இருக்கப் போகிறான்! பேஷ், பேஷ்!…. உனது முடிவு அதி புத்திசாலித்தனமானதுதான்!”
தமது நாற்காலியிலிருந்து எழும கிஷன் தாஸ் கூடத்தில் குறுக்கும் நெடுக்குமாய்ச் சுவர்களுக்கு இடையே நடை போடத் தொடங்குகிறார். முதல் நடையின் போதே அவரது பார்வை ஜன்னலின் வழியே தற்செயலாய் வெளியே விழுகிறது. அங்கு அவர் கவனிக்க நேரும் காட்சி அவரது தோற்றம் முழுமையிலும் ஒரு திடீர் மாற்றத்தை விளைவிக்கிறது. அவர் உடனே சட்டென்று விரைவாய்த் திரும்புகிறார்.
இதொன்றையும் கவனிக்காத பிரகாஷ், “நீங்கள் போட்ட சோற்றால்தான் நான் உழைக்கிற அளவுக்கு, இந்த என் உடம்பை வலுவுள்ளதாக வளர்த்துக்கொள்ள முடிந்தது என்று இதற்கும் நீங்கள் பதிலடி கொடுக்கக்கூடும்தான்! எனவே, எனது வளர்ப்புக்கான செலவு முவதையும் நான் தவணை முறையில் உங்களுக்குத் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்!…”
ஜன்னலின் அருகிலிருந்து அறவே நகர்ந்து விடாமல், அதன் பக்கத்திலேயே நின்று கொள்ளும் கிஷன் தாஸ் திடீரென்று தம் இடுப்பின் இரு புறங்களிலும் கைகளைப் பதித்துக்கொண்டு அடக்க மாட்டாதவர் போல் சிரிக்கத் தொடங்குகிறார்.
அவரது இந்த விந்தையான எதிர்வினையால் திகைப்படையும் பிரகாஷ், “உங்களது அந்த ‘டிரேட் மார்க்’ இடிச் சிரிப்பை இப்போது எதற்காகச் சிரிக்கிறீர்கள்? நான் முனைப்பாகப் பேசிக்கொண்டிருக்கும் வேளையில் இதென்ன பயித்தியக்காரச் சிரிப்பு! நிறுத்துங்கள் அதை!” என்று கத்துகிறான்.
சிரிப்பதை நிறுத்திவிட்டாலும், வாயகன்ற புன்னகையுடன், “பிரகாஷ்! நான் நடுநிலை சார்ந்த ஒரு நியாயவாதி! உன் சுமதிக்கு நான் பரீட்சை வைத்தது போலவே உனக்கும் வைக்கவேண்டுமல்லவா! அதனால் உனக்கும் பரீட்சை வைத்தேன். நீ அதில் தேறிவிட்டாய்! மிக நன்றாய்த் தேறிவிட்டாய்! உன்னை மணக்கப் போகும் சுமதி மிகவும் அதிருஷ்டக்காரி! … என்ன அப்படிக் கண்ணிமைக்காமல் என்னைப் பார்க்கிறாய்? நம்புவதற்குக் கஷ்டமாய் இருக்கிறதா? இல்லாவிட்டால் எனகுப் பயித்தியம் பிடித்து விட்டதென்று நினைக்கிறாயா!” என்று கிஷன் தாஸ் வினவுகிறார்.
மிகவும் அதிர்ந்து திகைத்துப் போய்விட்டிருக்கும் பிரகாஷ் பிரமிப்புடன் அவரைப் பார்க்கிறான்.
“அப்பா! என்ன இதெல்லாம்? என்னை எதற்காகச் சோதித்தீர்கள்? உங்களுக்குப் பயித்தியம் கியித்தியம் பிடித்துவிட்டதா?”
“அமைதி! அமைதி, பிரகாஷ்! நான் ஒரு நடுநிலை சார்ந்த நியாயவதி என்று சற்று முன் சொன்னேனல்லவா! சுமதி ஓர் அற்புதமான பெண் என்பதைக் கண்டுபிடித்த நான் நீ அவளுக்கு ஏற்றவன் தானா என்பதையும் கண்டுபிடிக்க வேண்டாமா! அதற்காகத்தான் இந்தச் சோதனை!”
“அப்பா! நீங்கள் ஒரு விந்தையான ஆள். வேடிக்கையானவர்! சில நேரங்களில் ஒரு கோமாளி போல் – பச்சோந்தி நிறம் மாறுவது போல் -நடக்கிறீர்கள்! உங்கள் நடவடிக்கைகள் என்னைக் குழப்பத்தில் ஆழ்த்துகின்றன! …”
“இதில் குழப்பம் அடைய ஒன்றுமில்லை, பிரகாஷ்! நான் உன்னை மிகவும், பாராட்டுகிறேன். உண்மையான காதல் என்னவென்பதை நீ தெளிவாய்ப் புரிந்துகொண்டிருக்கிறாய்! உன் அம்மாவை நானும் அப்படித்தான் என் முழுமையான இதயத்தாலும் ஆத்மாவினாலும் நேசித்தேன். மறு மணத்தை நான் தவிர்த்ததற்கு அதுவும் ஒரு காரணம். அப்பனைப் போலப் பிள்ளை என்பார்கள். நீயும் என்னைப் போலவே உண்மையான அன்பைப் புரிந்துகொண்டவனாய் இருக்கிறாய்! அந்தப் பெண்ணுக்காக என் சொத்து முழுவதையும் துறக்க நீ தயாராக இருக்கிறாய்! அடேயப்பா! அற்புதமானது உன் அன்பு! தன் காதலிக்காக நாடாளும் பதவியையே துறந்த இங்கிலாந்தின் விண்ட்சர் கோமகனின் காதலுக்கு இணையானது உன் காதலும்! ஓ!”
கிஷன் தாஸ் சட்டென்று பாய்ந்து பிரகாஷை நெருங்கி அவனைக் கட்டிப் பிடித்துக்கொண்டு அவனது நெற்றியில் முத்தமழை பொழிகிறார். பிரகாஷ் வியந்து போய் எழுந்து நிற்கிறான். கிஷன் தாஸ் தனது பிடியை மேலும் இறுக்கிக்கொண்டு அவனை மீண்டும் மீண்டும் நெற்றியிலும் உச்சந்தலையிலும் முத்தமிடுகிறார். அதன் பின் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் கண்களின் கசிவுடன் நாற்காலியில் பொத்தென்று அமர்கிறார்.
கிஷன் தாசின் திடீர் நடவடிக்கை விளைந்த திகைப்பிலிருந்து மீளாத நிலையில் இருக்கும் பிரகாஷ், “அப்பா!” என்று அழைத்துவிட்டு அவர் தோள்கள் மீது தன் கைகளைப் பதிக்கிறான்.
தன் ஆழமான பார்வையை அவர் மீது செலுத்தும் பிரகாஷ், “அப்பா! உங்களை என்னால் கணிக்க முடியவில்லை! ஒருவேளை இந்த உங்களது விந்தையான போக்கும் செயலும் உங்களிடம் இருந்துவரும் மனக் கோளாற்றின் விளைவோ என்று தோன்றுகிறது. நாம் ஒரு மனத்தத்துவ வல்லுநரைக் கலந்து ஆலோசிப்பது நல்லது!….” என்கிறான்.
கண்களைத் துடைத்துக்கொள்ளும் கிஷன் தாஸ், “நான் ஒன்றும் விந்தையாக நடந்துகொள்ளவில்லை, பிரகாஷ்! ஒரு தகப்பனின் கவலையும் மகன்பால் உள்ள அன்புமே இப்படியெல்லாம் நடக்க வைக்கின்றன, மகனே!” எனும் கிஷன் தாஸ், குரலை மிகவும் உயர்த்திக்கொண்டு, “ஏற்கெனவே சொன்னது போல் நான் ஒரு நடுநிலையான நியாயவாதி, பிரகாஷ்! அதனால்தான் சுமதிக்கு வைத்தது போலவே உனக்கும் பரீட்சை வைத்தேன்! என்னை மன்னித்துவிடு, பிரகாஷ்! தயவு செய்து மன்னித்து விடு!” என்கிறார்.
“நான் சொன்ன யோசனைக்கு நீங்கள் பதில் சொல்லவில்லை! நாம் ஒரு மனநல மருத்துவரைப் பார்ப்பது நல்லது. மிக நெருக்கமானவர்களை யெல்லாம் கூடச் சந்தேகிப்பதும் ஒரு மனநோய் சார்ந்த பிரச்சினைதான்! … அண்மையில் ஒரு புத்தகத்தில் படித்தேன்!”
தம் தோள் மிது பதிந்திருக்கும் பிரகாஷின் கைகளை விலக்கிவிட்டு, “மீண்டும் மீண்டும் அந்த விஷயம் பற்றிப் பேச வேண்டாம், பிரகாஷ்! எனக்கு மனநோய் எதுவும் கிடையாது!” என்று சட்டென்று கடுமையாகிவிட்ட குரலில் கிஷன் தாஸ் ஆட்சேபிக்கிறார்.
“மனநல மருத்துவரைப் பார்க்கும் பேச்சை எடுத்தாலே உங்களுக்கு எரிந்நல் வந்து விடுகிறது….சரி… வேண்டாம்!”
“ஏனென்றால் உடனே அந்த மருத்துவர்கள் என்னைப் பற்றிய பொய்க் கதைகளையும் வதந்திகளையும் பரப்புவார்கள்! ஒரு மனநல வல்லுநரிடம் ஆலோசனை கேட்டேன் என்பதே என்னைப் போன்ற ஒரு புகழ்பெற்ற தொழிலதிபருக்கு இழிவைத் தேடித்தரும். பிரச்சினை மிக அற்பமான ஒன்றாக இருந்தாலும், எனக்கு மூளைக் கோளாறு என்பதாய் வம்புகள் பரவும். அப்படி ஒரு நிலை எனக்கு ஏற்படுவதை நான் விரும்பவில்லை, பிரகாஷ்! அப்படி ஒரு வதந்தி பரவுமானால், அதனால் உன் வருங்காலமும் கண்டிப்பாகப் பாதிப்பு அடையும். அப்படி ஏற்படுவதையும் என்னால் தாங்க முடியாது. எனவே அதற்கு என்னைக் கட்டாயப் படுத்தாதே.”
பெருமூச்செறியும் பிரகாஷ், “சரி, அப்பா! உங்கள் விருப்பப்படியே ஆகட்டும். … வாருங்கள், நாம் சாப்பிடப் போகலாம்…” என்கிறான்.
பின்னர், பிரகாஷ் எழுந்து செல்லுகிறான். மெல்ல எழும் கிஷன் தாஸ் ஜன்னல் புறமாக நகர்ந்து தான் வெளியே தென்படாத அளவுக்குத் தம்மை மறைத்துக்கொண்டு மிகுந்த எச்சரிக்கையுடன் கண்களைச் சுழற்றிப் பார்க்கிறார். பிறகு பிரகாஷுடன் உணவு அருந்துவதற்காக அவர் சாப்பாட்டு மேஜைக்குச் செல்லுகிறார்.

jothigirija@live.com

Series Navigationமரபிலக்கணங்களில் பெயர்கள்
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *