சீதா கவிதைகள்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 18 of 19 in the series 28 மே 2017

சீதா

முதலிலிருந்து ஆரம்பிப்பவர்கள்
********************************************

மறுபடி முதலிலிருந்து ஆரம்பிப்பவர்கள்
சுனாமிக்கு பிறகான மழை வெள்ளத்திலிருந்தும்
முதலிலிருந்து ஆரம்பித்தவர்கள்தானே

சளைக்காமல் வரிசையில் நிற்பார்கள்
அரசு நியாய விலை கடையில் அரிசி சர்க்கரைக்கும்,
அரசு மருத்துவமனையில் ஓபி சீட்டுக்கும்,
சிகிச்சைக்கு முன்பான பரிசோதனை கூடத்திற்கு வெளியேயும்,
அரசு அலுவலகங்களில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களுக்கும்
சாதி மற்றும் வருமான சான்றிதழ்களுக்கும்
நீண்ட வரிசையில் நின்று பழகியவர்கள்தானே

முதலீட்டை, சேமிப்பை, பொறுமையை
கரைத்த சில வாரத்திற்குப் பிறகாவது
முதலிலிருந்து ஆரம்பிக்க விடலாமே

மாற்றத்திற்காகதானேயென்று பல்லை கடித்துக்
கொண்டு கடப்பவர்களின் கழுத்தையறுக்காமல்
கருப்புப் பணத்தை மீட்டீர்களெனினும்
உழைப்பின்றி ஒரு ரூபாயை கூட இனாமாக
கேட்கமாட்டார்கள் ஏனெனில்
இவர்கள் முதலிலிருந்து ஆரம்பிப்பவர்கள்…

விளையாட்டு
*******************

வாய்க்குள் காற்றை அடக்கி
கன்னத்தை உப்ப வைத்து
என் கைகளை அவளிரு கன்னங்களையும்
தழுவி உடைக்க செய்து எச்சில் தூறல்களிட்டு
கல கலவென சிரிக்கிறாள் மீனு குட்டி
அத்தனை கவலைகளும் அவள் எச்சிலில்
காகித கப்பல்களாய் மிதந்து செல்கிறது
மீனுகுட்டிக்கு உளவியல் விளையாட்டுகளை
கடவுள் சொல்லி கொடுத்திருப்பார் போல…

கடவுள் ஒரு கடை வைத்தார்
****************************************

பழைய இரும்பு காகிதங்கள் நெகிழிகள்
வாங்கி பணம் கொடுக்கும்
ஜெனிஃபர் கடையில் சாய்ந்தாடும்
மர குதிரையொன்று
வெகு காலமாக கிடந்தது
அதை சுட்டிக் கொண்டே கதை பேசி
அடிக்கடி கடையை கடக்கும் குழந்தைகள்
ஜெனிஃபர் பழைய பொருள் வாங்கும் அங்காடியை
அருங்காட்சியகம் ஆக்கி விட்டார்கள்
இப்போதெல்லாம் வித விதமான
மரபொம்மைகளை வாங்கி அடுக்கி
வைத்து கொண்டு காத்திருக்கிறார்
ஜெனிஃபர் கடை முதலாளியின் உருவில் கடவுள் …

ஆறாம் அறிவு
********************

கை முறிந்து சதை வெளியேறிய பின்னும்
கையிருப்பதாய் நினைத்து முகத்தில் வழியும்
இரத்தத்தைத் துடைக்கக் கையைத் தூக்க
முயற்சித்தவனின் இறுதி நொடியில்
முதலறிவு சிலிர்த்தெழுந்தது

இரயில் நிலைய விபத்தொன்றில்
ஆறு வயது குழந்தையின் மண்டையை வழித்தெடுக்கும்
ஒருவனிடம் கேட்டேன்
உன் அனுபவத்தில் மனம் அலறிய நொடி எது ?
இரவுகள் முழுவதும் கனவுகளால் அலறும்
மனம் பகலில் கொட்ட கொட்ட விழித்திருக்குமென்றான்
அவன் கனவிலிருக்கும் கற்பனைகளை
கண்களிலிருந்து உறிஞ்சி கொண்டே
இரண்டாம் அறிவு சிந்தனையில் ஆழ்ந்தது

பிணவறை காவலாளியிடம் ஒரு நூறை
திணித்துவிட்டுக் காத்திருந்தேன்
மதுவாசனையில் பிணநேசம் தெரிந்தது
கண், காது, மூக்கில்லாதது தொடங்கி
மூளை, இதயம், நுரையீரல் நைந்து போனது வரையிலான விபத்துகளை
சுவாரசியத்துடன் விவரித்தான்
சடலங்களைப் பொட்டலங்கள் என்றுதான் வரிசைப்படுத்தினான்
மூன்றாம் அறிவு விவாதிக்கத் தயாரானது

விபத்துகளால் அடிக்கடி இரத்தம் குடிக்கும்
சாலை நிலத்தடி நீருக்குப் பதில் இரத்தத்தைதான்
சேகரித்து வைக்குமாம்
அறிவிப்புப் பலகை, வேகத்தடை, கூடுதல் விளக்குகளென
பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்தாலும்
கொள்ளிவாய் பிசாசு வேலை இதுவென
ஐம்பது வருட விபத்துகளை
வரிசை படுத்தியவரின் அமானுஷ்ய திகில்
நிகழ்வுகளைக் கண்டு நான்காம் அறிவு
தர்க்கம் புரிந்தது

வெளி மாநில இரயில் விபத்தில்
நூற்றி நாற்பத்தியெட்டு பிரேதங்களின்
உறவினர்களின் அலறலையும் கண்டு
ஐந்தாம் அறிவு பேச்சு மூச்சற்று மூர்ச்சையானது

ஐந்து அறிவுகளும்
ஆறாம் அறிவிடம்
அலட்சியத்தையும், கவனக்குறைவையும், அதி வேகத்தையும்
களையெடுக்க வேண்டுமென்றது
அப்போதுதான் ஆறாம் அறிவு ஐந்து அறிவுகளின்
அத்தனை சாட்சியங்களையும் கொன்று குவித்து விதி என்றது
கூடவே
சரியெனக் கண்டறியப்பட்ட ஒவ்வொன்றையும் உடனே
கொன்று விடவேண்டுமென்றது
முடிவாக
சதியினால் தூண்டப்பட்டதும் விதிதான் என்றது
பாருங்கள், ஆறாம் அறிவால் எத்தனை விதமான விதிகள்…

சீதா
seethashamkumar@gmail.com

Series Navigationஎழுந்திருங்க தாத்தா….. ப்ளீஸ்……சிங்கப்பூர் கவிஞர் க.து.மு. இக்பாலின் கவிதை மொழி
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *