திருகுவளையில் உதித்த சூரியன்

author
0 minutes, 3 seconds Read
This entry is part 10 of 11 in the series 4 ஜூன் 2017

karunanidhi_11

மணிகண்டன் ராஜேந்திரன்

தமிழக அரசியலில் 80 ஆண்டுகளுக்கும் மேலாக மையம்கொண்டிருந்த  கருணாநிதி என்ற புயல் இன்று கோபாலபுரத்தில் கரையை கடந்து அஸ்தமத்திற்காக காத்திருக்கிறது. இந்த புயல் எந்த  நேரத்தில் எந்த திசையை நோக்கி நகரும், யாரை வாரி சுருட்டி ஒன்றுமில்லாமல் செய்யும், யாரை அரவணைத்து கொள்ளும் என்று யாருக்கும் தெரியாது..சிலநேரம் நடிகைகளின் குத்தாட்டத்தை நள்ளிரவுவரை ரசித்துக்கொண்டிருப்பார்.. அடுத்த சில தினங்களில் சேப்பாக்கம் ஸ்டேடியம் நடுவே உட்கார்ந்து கிரிக்கெட் போட்டியையும் கண்டுகளிப்பார்..இது கலைனருக்கே உரித்தான ஸ்டைல்.

நாமெல்லாம் அன்பின் குறியீடாக கொண்டாடும் தாஜ்மகாலை கட்டிய ஷாஜகான் அவரது மகனால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்..சற்றே ஏறத்தாழ கலைஞரின் நிலைமையும் இன்று இப்படிதான் இருக்கிறது .. ஆனால் இந்த வீட்டு சிறையை காலம் அவருக்கு வழங்கி இருக்கிறது ..      80 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுவாழ்க்கையில் ஈடுபட்ட கலைஞரை இன்று காலம் கட்டாயப்படுத்தி சிறை வைத்திருக்கிறது .. இனி கலைஞர் மீண்டுவருவார் என்பதெல்லாம் நமக்கு நாமே சொல்லிக்கொள்ளும் ஆறுதல் வார்த்தைகள் மட்டுமே.. காரணம் வயது 94-யை  நெருங்கிவிட்டது..

அரசியல்வாதி,பத்திரிகையாளர்,கதாசிரியர்,பேச்சாளர், என பலமுகங்கள் கலைனருக்கு இருக்கிறது.. ராஜாஜி, நேரு, காமராஜர், பக்தவத்சலம், இந்திராகாந்தி, ஆகியோரை எதிர்த்து கலைஞர் அரசியல் செய்தாரென்றால் தமிழகத்தில் நேற்று கலைஞரை எதிர்த்து அரசியல் செய்த எம்ஜிஆர், ஜெயலலிதாவாகட்டும், இன்று எதிர்க்கும் வைகோ ,திருமா ,விஜயகாந்த், சீமான், என எல்லோரும் கலைனரிடம் ஆரம்ப அரசியல் பாடம் கற்றவர்களே..நாளைக்கு அரசியலுக்கு வரப்போகிறவர்களும் கலைஞரை எதிர்த்தே அரசியல் செய்வார்கள் என்பதுதான் நிதர்சன உண்மை..ஏனென்றால் தமிழக அரசியலின் முக்காலமும் கலைனர்தான்..

 

1957 ல் குளித்தலையில் சட்டமன்ற இன்னிங்ஸை தொடங்கிய கலைஞர் 2016 -ல் திருவாரூரில் நிதானமாக நின்றுகொண்டிருக்கிறார்.. இந்த 60 ஆண்டில் ஒருமுறைகூட கலைஞரை யாராலும் வீழ்த்தமுடியாவில்ல்லை.. அண்ணாவை வீழ்த்த முடிந்தவர்களால்கூட கலைஞரை வீழ்த்த முடியவில்லை என்பதுதான் ஆச்சரியம்.. இந்திய தேர்தல் வரலாற்றிலேயே கலைஞர் ஒருவருக்குத்தான் இத்தகைய சிறப்பிருக்கிறது..கலைனருக்கு அடுத்தது கேரளாவில் மணி என்பவர்  50 ஆண்டுகளை நிறைவுசெய்திருப்பதாக அறியமுடிகிறது..

12 வயதில் எழுத தொடங்கிய கலைஞர் 93 வயது வரை தொடர்ந்து எழுதிக்கொண்டே இருந்தார்..  பள்ளிநாட்களில் தன்னுடைய கருத்துக்களை பேப்பரில் எழுதி அதை அச்செடுத்து மற்றவர்களிடம் கொடுப்பாராம்..அப்படி கொடுத்தபோது இவரின் எழுத்து பாரதிதாசனின் கண்களில் பட்டு அவரின் பாராட்டையும் பெற்றார்.. தன்னுடைய எழுத்தின் மூலம் சுற்றுவட்டார பகுதி மாணவர்களிடம் கலைஞரின் பெயர் அடிக்கடி முணுமுணுக்க தொடங்கியது..இப்படி  தன்னுடைய எழுத்திற்கு அச்சாரம் போட்டு பொதுவாழ்வில் மெல்ல அடியெடுத்து வைத்தபோது கலைனருக்கு வயது 14.. அதன் பிறகு கலைஞரின் அரசியல் கிராப் எப்போதும் ஏறுமுகம்தான்..

அண்ணா அப்போது பெரியாரின் குடியரசு இதழில் பணியாற்றி கொண்டிருந்தார்…கருணாநிதி இரண்டு மூன்று முறை குடியரசு இதழுக்கு கட்டுரை அனுப்பியிருந்தார்..திருவாரூர் வரும்போது நேரில் சந்திப்பதாக கலைனருக்கு கடிதம் போட்டிருந்தார் அண்ணா..பிறகு நடந்ததை கலைஞரின் 45 -வது பிறந்தநாளில் அண்ணாவே இப்படி சொல்கிறார்.”திருவாரூர் சென்றபோது கருணாநிதி சந்தித்தேன்.. கருணாநிதி பள்ளிப்படிப்பைகூட முடிக்கவில்லை என்பதை அப்போது தெரிந்துகொண்டேன்.. முதலில் படிப்பை முடி  பின்பு எழுதலாம் என்று சொல்லிவிட்டு கிளம்பினேன்.. பிறகுதான் தெரிந்தது கலைஞர் எழுதுவதை நிறுத்தவில்லை என்று அப்போதும் சரி இப்போதும் சரி கருணாநிதி தன்னுடைய பேச்சை கேட்பதே இல்லை என்று முடித்திருப்பார்..ஆம் இதுதான் உண்மையும்கூட கலைஞர் எல்லோருடைய பேச்சையும் காதுகொடுத்து கேட்பார்..ஆனால் முடிவென்பது கலைஞர் தான் எடுப்பார்.. அதுதான் கலைஞரின் அக்மார்க்.

பட்டுக்கோட்டை அழகிரிசாமி இல்லாமல் போயிருந்தால் கலைஞர் என்ற அரசியல் சாணக்கியர் நமக்கு இன்று கிடைக்காமல்கூட போயிருக்கலாம்..இன்று ஒட்டுமொத்த அரசியல்களமே கலைஞரின் பேச்சைக்கேட்க ஆவலாக  காத்திருக்கும்..ஆனால் கலைஞரோ   அழகிரிசாமியின் பேச்சை கேட்பதற்காக காத்துக்கிடப்பார்..அவரின்  பேச்சால் கவரப்பட்டே கலைஞர் திராவிட இயக்கத்திற்குள் உந்தப்பட்டார். பாரதிதாசனுக்கு தமிழகத்தை போல் பாண்டிசேரியிலும் திராவிடர் கழகம் தொடங்கவேண்டும் என்ற ஆசை இருந்தது..இதை பெரியாரிடம் கொண்டுசென்று அதற்கு அனுமதியும் பெற்றுவிட்டனர்..அப்போது கலைஞர் பாண்டிசேரியில் நாடகத்திற்கு கதை எழுதிக்கொண்டிருந்தார்..முன்னரே பாரதிதாசனோடு அறிமுகம் இருந்ததால் இருவரும் சேர்ந்து தொடக்க விழாவிற்கான ஏற்பாடுகளை செய்தனர்..கலைஞர் மிகுந்த உற்சாகமாக இருந்தார் காரணம் அவரின் ஆசை நாயகன் அழகிரிசாமி அன்று மாலை அந்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்ற இருந்தார்..

நிகழ்ச்சி தொடங்குவதற்கு  சிலமணி நேரங்களுக்கு முன்பு திராவிடர் கழக எதிர்ப்பாளர்கள் கூட்டத்திற்குள் புகுந்து கண்ணில் பட்டவர்களை எல்லாம் கடுமையாக தாக்கினார்கள்.. கலைஞரும் பாரதிதாசனும் ஆளுக்கொரு திசையாக ஓடினார்கள்.. கருணாநிதி திறந்திருந்த ஒரு வீட்டினுள் நுழைந்துவிட்டார்..கலைனருக்கு தெரியாது திறந்திருந்த வீடு அந்த கலவரக்காரர்களின் வீடென்று..சிறிது நேரத்திற்கு பிறகு அந்த கலவரக்காரர்கள் கருணாநிதி மறைந்திருந்த அந்த வீட்டிற்குள் நுழைந்தனர்..கருணாநிதி கடுமையாக தாக்கப்படுகிறார்..சுயநினைவை இழந்து கீழே சரிந்தார் கலைஞர்..அதன்பிறகு அவர் அழகிரிசாமியின் பேச்சை கேட்பதற்கு வாய்ப்பே கிடைக்கவில்லை..சில மாதங்களிலே அழகிரிசாமியும் இறந்துவிட்டார். இப்படி பயந்துஓடி அடிவாங்கி சுருண்டு விழுந்த கலைஞர்தான்..பின்னாளில் கள்ளக்குடியில் வேட்டியை மடித்துக்கொண்டு ரயிலுக்கு முன்பு தண்டவாளத்தில் தலைவைத்து படுக்கவும் செய்தார்..

குட்டையான உயரம், ஒல்லியான உடல்,  சுருட்டை முடி,கரகரப்பு குரல் இதுதான் கலைஞரின் புறத்தோற்றம். ஆனால் எல்லோரையும் தன்பக்கம் சுண்டி இழுத்துவிடுவார்.. காரணம் அவரின் பேச்சு..நக்கலும் நய்யாண்டியும் எப்போதும் கலைஞரின் பேச்சில் கலந்தே இருக்கும் ..

அது பொதுக்கூட்ட மேடைகளானாலும் சரி ,சட்டமன்றமானாலும் சரி எப்போதும் இவை கலைஞரை விட்டு பிரியாது.. எதிராளியையும் தன்னுடைய பேச்சால் கரைத்துவிடுவார்.. ஒருபுறம் திரைப்படத்திற்கு கதை வசனம் எழுதுவது, இன்னொருபுறம் முரசொலியில் ஆசிரியர் பணி ,இன்னொருபுறம் கட்சிபணி என கலைஞர் தொடர்ந்து ஓய்வே இல்லாமல் இயங்கி கொண்டிருந்தார்..

திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து திமுக உதயமானபோது கலைஞர் திமுகவில் சொல்லிக்கொள்ளும்படி முக்கியமான தலைவர் கிடையாது.. ஆனால் அவருக்கும் கொள்கைப்பரப்பும் குழுவில் இடம்கிடைத்தது.. அதுதான் கலைஞரின் பேச்சிற்கு கிடைத்த அரசியல் அங்கீகாரம்.. அதன்பிறகு கலைஞரின் பேச்சு கேட்காத இடங்களே தமிழகத்தில் இருந்திருக்க முடியாது..இப்படி வாழ்நாள் முழுவதும் பேசியும் எழுதியும் வாழ்ந்த ஒரே தமிழக அரசியல்கட்சி தலைவர் கலைஞர் ஒருவர் மட்டுமே.. ஒருமுறை கலைஞர் முதல்வராக இருந்தபோது எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு சட்டமன்றத்தில் 2 மணிநேரத்திற்கும் மேலாக தொடர்ச்சியாக பதிலளித்தார்.. இப்படிப்பட்ட கலைனருக்கு தான் இன்று பேச்சு பயிற்சி கொடுக்கப்படுகிறது என்ற செய்தியை கேட்கும்போது உண்மையில் நெஞ்சு கனக்கிறது..

எடுத்த முடிவில் எப்போதும் கலைஞர் உறுதியாக இருப்பார்..திமுக தேர்தலில் போட்டியிடுவதென முடிவுசெய்த பிறகு சென்னை மாகாண தேர்தலின் முழுப்பொறுப்பும் கலைனரிடம் ஒப்படைக்கப்பட்டது..கலைஞர் வேட்பாளர்பட்டியலை தயார்செய்து அண்ணாவிடம் நீட்டியபோது அண்ணா மிரண்டுவிட்டார் காரணம் 100 க்கும் அதிகமான வேட்பாளர்கள் அதில் இருந்தனர்..இவ்வளவு வேண்டாம் குறைத்துக்கொள்ளலாம் என்று எவ்வளவோ சொல்லியும் கலைஞர் கேட்கவில்லை கோபத்தில் அந்த பட்டியலை தூக்கி எறிந்துவிட்டு அண்ணா சென்றுவிட்டார்..ஆனாலும் கலைஞர் மனம்மாறவில்லை கலைஞரின் விருப்பப்படியே திமுக தேர்தலில் களம்கண்டு வெற்றியும்பெற்று முதன்முறையாக சென்னை மாநகரத்தை கைப்பற்றியது..யார் எதிர்த்தாலும் தானெடுத்த முடிவிலிருந்து பின்வாங்கமாட்டார்  அது அண்ணாவாக இருந்தாலும்..

1967 பொதுத்தேர்தலுக்கு திமுக முழுவீச்சில் தன்னை தயார்படுத்த தொடங்கியது.. மூன்று ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அதற்கான பணியை தொடங்கியது.. 200 க்கும் அதிகமான தொகுதியில் நின்றால்தான் ஆட்சிஅமைப்பதற்கான தொகுதிகளை பெறமுடியும் என்று கலைஞர் விடாப்பிடியாக சொல்லிவிட்டார் அண்ணாவும் அதற்கு மறுப்பு சொல்லவில்லை.தேர்தல் செலவுக்காக நிதிதிரட்டும் பொறுப்பு கலைனரிடம் ஒப்படைக்கபட்டது. 10 லட்சம் தான் அண்ணா கலைஞருக்கு  கொடுத்த இலக்கு.. ஆனால் கலைஞர் 11 லட்சம் நிதிதிரட்டி அண்ணாவிடம் ஒப்படைத்தார்…அதனை பாராட்டும் விதமாக அண்ணா அணிவித்த மோதிரம் தான் கலைஞரின் விரல்களை இன்றும் அழகுபடுத்திக்கொண்டிருக்கிறது ..

சமரசம் என்ற சொல்லுக்கு முழுமையான சொந்தக்காரர் கலைஞர் ஒருவர்தான்..எவரோடும் அவரால் இணைந்து செயல்பட முடியும்..80 ஆண்டுகளாக இன்றும் அரசியலில் உயிர்ப்போடு இருப்பதற்கு காரணம் அவரின் சமரசமும் அரவணைப்பும்தான்..அண்ணா இறந்த பிறகு யார் அடுத்த தலைவர் என்ற கேள்வி எழுந்தபோது எம்ஜியாரும் எஸ்எஸ்ஆறும் கலைனருக்கு ஆதரவாக செயல்பட்டு கட்சியையும் ஆட்சியையும் கலைஞரின் கைகளில் ஒப்படைத்தனர்..அப்போது பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய  பேராசிரியர் அன்பழகன் கலைஞரை தலைவராக ஏற்றுக்கொண்டால் என்னுடைய பொண்டாட்டியே என்னை மதிக்கமாட்டார் என்று கூறினார்..அதே பேராசியரோடுத்தான் கலைஞர் இன்றும் சேர்ந்து அரசியல் செய்கிறார்..எந்த தத்துவத்தை எதிர்த்து தன்னுடைய அரசியலை கட்டமைத்து கொண்டாரோ.. அதே கொள்கைகொண்ட பிஜேபியோடு கைகோர்த்து எல்லோரையும் வாய்பிளக்க வைத்தார்..எல்லாவற்றிக்கும் ஒரே நோக்கம் அரசியல் அதிகாரம் மட்டுமே..அதற்காக எல்லா வழிகளையும் எல்லா சமரசங்களையும் செய்வார்..

தனக்கு எதிரான அலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வதில் கலைஞரை எவராலும் விஞ்ச முடியாது..எம்ஜிஆரின் செல்வாக்கு  கலைஞரை தாண்டி திமுகவில் வளர்ந்துகொண்டிருந்தது..ஊரெங்கும் ரசிகர் மன்றங்கள் எம்ஜிஆருக்கு பெருகிக்கொண்டிருந்தது..எம்ஜியாருக்கு மாற்றாக தன்னுடைய மகன் முத்துவை சினிமாவில் ஈடுபடுத்த கலைஞர் முடிவெடுத்திருந்தார்…இந்த விழயம் எம்ஜியாருக்கு தெரிந்து அவரும் கொஞ்சம் வருத்தத்தில்தான் இருந்தார்.. ஆனால் அதே எம்ஜியாரை கொண்டே தன்னுடைய மகன் முத்துவின் முதல் படத்தின் முதல் காட்சியை டேக் அடிக்கவைத்தார்…அதுதான் கலைஞரின் சாமர்த்தியம்..

கலைஞர் அரசின்மீது சபாநாயகரின் உதவியோடு எம்ஜிஆர் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தபோது மாற்று சபாநாயகரை கொண்டுவந்து ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளவும் கலைஞருக்கு தெரியும்..அதேபோல வைகோ கழத்திலிருந்து பிரிந்து கட்சியும் சின்னமும் தன்னுடையது என சொந்தம் கொண்டாடியபோது தனி ஒருவனாக கட்சியின் செயற்குழு பொதுக்குழுவை ஒருங்கிணைத்து மீண்டும் கட்சியை தன்வசப்படுத்தி கொள்ளவும் கலைஞருக்கு  தெரியும்…தமிழக அரசியலில் சாகாவரம் பெற்றவர் கலைஞர்..விழுந்த அதே வேகத்தோடு மீண்டும் எழுந்துவிடுவார்..

எம்ஜிஆர் திமுகவிலிருந்து பிரிந்து தனிக்கட்சி தொடங்கி முதல்வரான பின்பு ஏறத்தாழ 13 ஆண்டுகள் கலைஞர் அரசியல் வனவாசம் இருந்தார்..எவ்வளவோ அரசியல் கட்சிகளை ஒன்றுமில்லாமல் ஆக்கமுடிந்த கலைஞரால் எம்ஜிஆர் இறக்கும்வரை அவரால் அரியணையில் ஏறவே முடியவில்லை..இருந்தும் கட்சியை உயிர்ப்போடு வைத்திருந்தார் காரணம் தொண்டர்களோடு தொடர்ந்து உரையாடினார்..உடன்பிறப்புகளுக்கு தொடர்ந்து கடிதம் எழுதினார்..தொண்டர்களை எப்போதும் தன் அருகிலேயே அரவணைத்து வைத்திருந்தார்..

விடுதலை புலிகளுக்காக தொடர்ந்து பேசியவர் கலைஞர். அதற்காக தனது ஆட்சியையும் பதவியையும் பலிகொடுத்திருக்கிறார்.. ஆனால் இன்றும்கூட புலிகள் என்றால் கலைஞரிடம் எதிப்பை மட்டுமே பெரும்பாலானவர்கள் முன்னிலை படுத்துவார்கள். அதற்கான நியாயங்கள் இருக்கத்தான் செய்கின்றன.. கலைஞர் நினைத்திருந்தால் ஈழத்தில் நடந்த இனஅழிப்பை தடுத்திருக்க முடியும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் கலைஞர் செய்யவில்லை..இந்த மௌனம் தான் எல்லோருடைய கோபங்களையும்  கலைஞரின் பக்கம் திருப்பியது.”மழை விட்டாலும் தூறல் விடுவதில்லை” என்ற வார்த்தைகள் ஒட்டுமொத்த ஈழ ஆதரவாளர்களையும் கோபத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றது.. இன்றுகூட கலைஞர் சந்திக்கும் மிகமுக்கிய முதன்மை எதிர்ப்பு இதுதான்..தமிழின தலைவரை இந்த எதிர்ப்பு கொஞ்சம் ஆட்டம்காண செய்துவிட்டது என்பதுதான் உண்மை.. ஹிந்தி திணிப்பாகட்டும் எமெர்ஜென்சி ஆகட்டும் எப்போதும் கலைஞரின் முதல் எதிர்ப்பு ஓங்கியொலிக்கும்..

 

தன்னுடைய ஆட்சியின்மீது  நம்பையில்லா தீர்மானம் கொண்டுவந்ததால் ஓராண்டுக்கு முன்பே சட்டமன்றத்தை கலைத்துவிட்டு 1971 -ல் மாபெரும் வெற்றிபெற தெரிந்த கலைனருக்கு 2009 -ல் ஒட்டுமொத்த தமிழினமும் மத்திய ஆட்சியிலிருந்து விலகுமாறு ஒப்பாரி வைத்தபோது ஏனோ அந்த ஒப்பாரிகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார் கலைஞர்..அதன்பலனைத்தான் 2011 சட்டமன்ற தேர்தலிலும் 2014 நாடாளுமன்ற தேர்தலிலும்  திமுக  அறுவடை செய்தது..

கலைஞர் அரசியலில் எவ்வளவு அதிஷ்டசாலியோ அதே அளவுக்கு துரதஷ்டசாலியும் ஆவர்…இவர் கொண்டுவரும் மக்கள்நல திட்டங்களை எல்லாம் அவருக்கு பின்னால் ஆட்சிக்கு வருபவர்கள் தனதாக்கி கொள்வார்கள்…69 % இடஒதிக்கீடு கொள்கையில் ஒரேயொரு அரசியல் சட்டத்திருத்தம் கொண்டுவந்து மொத்தப்புகழையும் தனதாக்கி கொண்டார் ஜெயலலிதா.. அதேபோல கோயம்பேடு பேரூந்துநிலைய திட்டம் ,மெட்ரோ ரயில் திட்டம்,மேம்பாலங்கள்,வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீர், என பட்டியல் நீண்டுகொண்டே போகும்..ஆனால் இதைப்பற்றியெல்லாம் கலைஞர் பெரிதாக அலட்டிக்கொள்ளமாட்டார்..எப்போதும்போல கேள்விகளால் ஆட்சியாளர்களை துளைத்துக்கொண்டிருப்பார்..

கலைஞர் தொடர்ந்து பேசப்படுவதற்கு காரணம் அவர் கொண்டுவந்த திட்டங்கள்.. திடிரென்று திருவாரூரில் ஓடாமல் இருந்த தேரை இழுத்து ஓடவைப்பார். அடுத்தநாள் பெரியாருக்கு மலர்வளையம் வைப்பார்..இப்படி சர்ச்சைகள் ஒருபுறமென்றால் பேருந்துகளை பொதுவுடைமை ஆக்கியது, கைரிக்கசாக்களை முற்றிலுமாக ஒழித்தது, சமத்துவ புரங்கங்களை கொண்டுவந்தது, விலையில்லா அரிசி, 7000 கோடி விவசாயக்கடன் தள்ளுபடி, மக்கள்நல பணியாளர்கள், வள்ளுவர்கோட்டம் கட்டியது, பெண்களுக்கு 33 % இடஒதுக்கீடு, உழவர் சந்தை, மருத்துவ காப்பீடு திட்டம் டைடல் பார்க், அருந்ததியர்களுக்கு உள்ஒதுக்கீடு செய்தது, புதிய சட்டமன்றம் கட்டியது, அண்ணா நூற்றாண்டு நூலகம், அணைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என அரசியல் தளத்திலும் சமூக தளத்திலும் கலைஞர் தொடர்ந்து பிரமிப்பை செய்துகாட்டியிருக்கிறார்..

 

அண்ணாவையும் கட்சியையும் தாண்டி கலைனருக்கு பிடித்தது அவரின் குடும்பம்..அது எவ்வளவு பிடிக்குமென்றால் தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழ் அறிஞர்களையெல்லாம் பின்வரிசையில் உட்காரவைத்து தன்மொத்த குடும்பத்தையும் முன் வரிசையில் உட்காரவைத்து அழகுபார்க்கும் அளவிற்கு..சர்க்காரியா கமிஷனையே திகைக்கவைத்த கருணாநிதி, தன் வாரிசுகளை அளவிற்கு அதிகமாக நம்பியதற்கு பலன்தான் 2G ஊழலும்,ஏர்செல் மேக்சிஸ் ஊழல்களும்.. எல்லோரையும் சரியாக கணிக்க தெரிந்த கலைனரால் தன்பிள்ளைகளை சரியாக கணிக்க தவறவிட்டுவிட்டார்..அதற்க்கான மொத்தபலனையும் திமுக என்ற பேரியக்கம் இன்று தன்முதுகில் சுமந்துகொண்டிருக்கிறது..

கலைஞரை போல பத்திரிகையாளனை நேசிக்கவும் விமர்சிக்கவும் எவராலும் முடியாது..ஆட்சியில் இருந்தாலும் இல்லாமல் போனாலும் பத்திரிகையாளர்களை எப்போதும் சந்திக்க மறக்கமாட்டார்..எத்தனை கடுமையான விமர்சங்களை வைத்தாலும் பதில் சொல்லிவிடுவார் அவரது ஸ்டைலில்..பத்திரிகையாளனை யாரவது திட்டினாள் யோவ் ஏன்யா அவன திட்டுற அவன் வேல இதுதான்யா..நாம செய்தி கொடுத்தத்தானே அவனால இந்த வேளையில் தொடர்ந்து இருக்க முடியும் என்று அரவணைத்து பேசவும் தெரியும்.. பலநேரங்களில் அதிரடியாக பேசி பத்திரிகையாளனை ஆட்டம்காணவும் செய்துவிடுவார்.. ஒருசமயம் ஒரு கொலையை பற்றி கலைனரிடம் கேள்வி கேட்டபோது கொலைசெய்தது நீயாக கூட இருக்கலாமென்று அந்த பத்திரிக்கை நண்பரிடமே அந்த கேள்வியை திருப்பிவிட்டுவிட்டார்..பாவம் அந்த பத்திரிகையாளர் முழிபிதுங்கிவிட்டார்..

எவ்வளவுதான் இருந்தாலும் 50 ஆண்டுகளாக கட்சியை  தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவ்வளவு சாதாரணமான விஷயம் இல்லை..அதற்கு காரணம் அவரின்மேல் தொண்டர்களும் தொண்டர்களின் மேல் கலைனருக்கும் இருந்த அன்பும்தான்..ஒருசமயம் கலைஞரை பார்க்க  கோபாலபுரத்திற்கு தொண்டர் ஒருவர் வந்திருந்தார்..கலைஞர் வேறுஏதோ கோபத்தில் இருந்ததால் அந்த தொண்டரை கண்டபடி திட்டிவிட்டார்.. எதுவும் பேசமுடியாமல் தொண்டரும் அங்கிருந்து கிளம்பிவிட்டார்..ஆனால் கலைஞரை அந்த நிகழ்வு சங்கடப்படுத்திவிட்டது ..பக்கத்தில் இருந்த துறைமுருகனிடம் துறை அவன ரொம்ப திட்டிட்டேனோ? ரொம்ப வருத்தப்படுவான்ல என்று சொன்னாராம்..உடனே கலைஞர்  அவனை கூப்பிட்டு வாயா துரை  என்றாராம்..துரைமுருகனும் அந்த தொண்டனை கூப்பிட்டுவந்து நிறுத்தியிருக்கிறார்..கலைஞர் அந்த தொண்டனிடம் ஏதோ கோபத்துல திட்டிட்டேன் மன்னிச்சிடுயா என்றாராம். இந்த மனநிலைதான் கலைஞரை இன்றுவரை கட்சியில் உயிர்ப்போடு வைத்திருக்கிறது..இந்த மனநிலைதான் ஸ்டாலின் அவர்களுக்கும் தேவையான மனநிலை..இல்லையேல் ஸ்டாலினை கலைஞரின் மகனாகவே காலம் வரலாற்றில் பதிவுசெய்துவிடும்..

ஈழத்தில் நடந்த இனஅழிப்பும் ,2G  போன்று இந்தியாவையே வாய்பிளக்க வைத்த ஊழல்களும் நிகழாமல் இருந்திருந்தால்,இன்னும் சில நூற்றாண்டுகளுக்கு ஒட்டுமொத்த தமிழினமும் கலைஞரை கொண்டாடி மகிழ்ந்திருக்கும்..வரலாறு என்பது எல்லாம்சேர்ந்த கலவையென்றல் கலைஞர் தமிழக அரசியலின் தவிர்க்கமுடியாத வரலாறு..மீண்டு வரவேண்டும்..மீண்டும் அந்த கரகரப்பான கலக குரலை ஒட்டுமொத்த தமிழினமும் கேட்கவேண்டும்..

 

 

Series Navigationவேண்டாம் அந்த முரட்டுப் பெண்! – 15மாட்டிறைச்சி அரசியல் ஒரு தேசிய அவமானம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *