எனது ஜோசியர் அனுபவங்கள்

This entry is part 2 of 11 in the series 11 ஜூன் 2017

 

ஜோதிடர்களுடான எனது அனுபவங்கள் சுவையானவை!

அப்போது நாங்கள் மாம்பலத்தில் இருந்தோம். எனது தகப்பனார் ஒரு வாழ்க்கையைத் தொலைத்த ஆசாமி. வருடத்தில் எந்த மாதத்தில் வேலையிலிருப்பார். எப்போது வேலையை விட்டு விட்டு வீட்டில் இருப்பார் என்பது எந்த சித்தரும் கணிக்க முடியாத ஒன்று. இதனாலேயே ஒரு வேலை கிடைத்தவுடன் விடாமல் அதைப் பிடித்துக் கொண்டு முன்னேறியவன் நான். ஸ்திரத் தன்மைக்கு ஏங்கும் மனதாக என் மனது ஆனதற்கு அப்பாவும் காரணம். அதற்காகவேனும் அவருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்.

அப்பா கொண்டு வரும் ( எப்போதாவது) சொற்ப வருமானத்தில் மூன்று பிள்ளைகளை படிக்க வைத்து முன்னேற்றியது அம்மையின் பெரும் சாதனை. முதல் பிள்ளையாகிய என்னை வளர்க்கும் பொறுப்பை என் பெரியம்மாவும் பாட்டியும் ஏற்றுக் கொண்டது கொஞ்சம் அம்மைக்கு சுமையைக் குறைத்தது. அதனாலேயே மீதமிருந்த மூன்று தம்பிகளை அவளால் படிக்க வைக்க முடிந்தது. எனக்கும் ஒன்றும் நட்டமில்லை. பாட்டி வீட்டில் வளர்ந்ததால், சென்னையை விட்டு விலகாமல் கான்வென்ட் பள்ளி, லயோலா கல்லூரி என்று மேட்டுக்குடி படிப்பு எனக்குக் கிட்டியது.

அப்பா ;ஒரு சோசியப் பித்து. என்னை பாட்டி வீட்டில் விட்டு, அம்மையை பிரிய வைத்ததும் ஒரு சோசியன் சொன்ன கணிப்பால் தான். பெயர் தெரியாத அந்த சோசியன் என் வாழ்வை வளப்படுத்திய செம்மல். அந்த வகையில் அரை வேக்காட்டு சோசியர்களுக்கு நான் தலை வணங்குகிறேன்.

பத்து விரல்களில் கலர் கல் மோதிரங்களைப் போட்டு வலம் வந்த அப்பாவைப் பார்த்தே, சோதிடர்களைப் பற்றிய என் எண்ணம் ஏளனமாகப் போனது. கோகுலத்து கண்ணனைப் போல யசோதையிடம் வளர்ந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்.

கண்ணம்மாப்பேட்டை மூன்றாவது சந்து முக்கில் இருக்கும் அம்மன் கோவிலில் ( இன்னும் இருக்கிறதோ? இல்லை சாலை விரிவாக்கத்திற்கு இடித்து, அம்மனை அகற்றி விட்டார்களா?) செவ்வாய், வெள்ளியில் பூசாரியே குறி சொல்வார். பூச்சிக்கடி, வயித்துவலி, மாத விடாய், கரு தங்காமை, சுரம், வாந்தி, பேதி என்று சகலத்திற்கும் அவரே மந்திரித்து விடுவார். ஆனால் அவரே இரவு முக்காடு போட்டு அலோபதி டாக்டர் சவுரிராஜன் வீட்டிற்கு போவதை நான் பார்த்திருக்கீறேன்.

கோவிலுக்குப் பக்கத்தில் இருக்கும் வேப்ப மரத்திலோ அரச மரத்திலோ மஞ்சள் முடிச்சுகளாகத் தொங்கும். இப்போது வெளிவரும் செய்திகளைப் போல பிரேமானந்தா, நித்யானந்தா சமாச்சாரமெல்லாம் அப்போது கிடையாது. பூசாரிக்கே முன்று மனைவிகள். நான்காவதைத் தேட ஒன்று அவருக்கு தெம்பு இருந்திருக்காது. அல்லது தைரியம் இருந்திருக்காது. தீர்த்த யாத்திரை போல ரேகை யாத்திரை போன சோசியர்களும் அக்காலத்தில் இல்லை. சுற்றுவட்டார மக்களின் மூட நம்பிக்கையை மூலதனமாக வைத்து பிழைத்தவர்களில் அந்த பூசாரியும் ஒருவர்.

மஞ்சள் காமலைக்கு அவர் மந்திரித்து அதனால் சுத்தமான நீர் ஊசி வழியாக மஞ்சளாக மாறியது கண்டு அதிசயித்திருக்கீறேன். பின்னாளில் தெரிந்தது. அது ஊசியே இல்லை. மெல்லிய உலோகக் குழாய் என்று. அதில் ஏற்கனவே மஞ்சள் கரைசலை நிரப்பி வைத்திருக்கிறார் பூசாரி. ஆனாலும் கரைசராங்கண்ணி, கீழாநெல்லி கஷாயத்தையும் தந்து விடுவார். முன்னதில் இறங்குவதாக பம்மாத்து காட்டி பின்னதால் இறக்குவதில் அவருக்கு காணீக்கை லாபம்.

0

கையாட்டி சோதிடரைப் பற்றிய செய்தி சுவையானது. ஆள் நாகேஷ் போல ஒல்லியாக இருப்பார். எனக்குத் தெரிந்து பல வருடங்கள் அவர் அறுபது வயதுக்காரராகவே இருந்தது ஆச்சர்யம். வெள்ளை முழுக்கை சட்டை அணிந்திருப்பார். வெள்ளை வேட்டி கொஞ்சம் தாறுமாறாகக் கட்டியிருப்பார்.  அவருக்கு ஜாதகமெல்லாம் தேவையில்லை. மக்கள் அவரிடம் கேட்கும் கேள்விகளுக்கு அல்லது சொல்லும் குறைகளுக்கு அவர் சொல்லும் தீர்வு சரியாக இருக்கும்.

“ பொண்ணுக்கு மாப்பிள்ளை பாக்கறோம் அய்யா! சரியா அமைய மாட்டேங்குது”

சோதிடர் பெண்ணின் ஜாதகத்தை கையில் வாங்கி கீழே வைத்து அதன் மேல் தனது இடது கையை விரித்து ஊனிக் கொள்வார். வலது கை ஆட ஆரம்பிக்கும். கண்கள் மூடி இருக்கும். ஒரு வித டிரான்ஸில் பதில்களை உதிர்ப்பார்.

“ செவத்த பையன். ஊருக்குள்ளேயே இருக்கான். பொண்ணுக்கு இஷ்டமான்னு கேளு. ஆடி கழிஞ்சு முடிஞ்சிரும். உன் கையில் ஒண்ணுமில்லே”

மறுநாளிலிருந்து தாய் செவத்தை பயல்களாக தேட ஆரம்பிப்பாள்.

அடகு வைத்த கம்மலை மீட்க போகும்போது சேட்டு கேட்பான்:” பொருளை எடுத்துக்க.. பைசா வேணாம்.. பையன் ஆசைப்படறான். ஒன் பொண்ணைக் கட்டி தரயா?”

கம்மலை மீட்க வைத்திருந்த அடகு பணத்தை காணிக்கையாக கையாட்டி சோதிடரிடம் செலுத்தினால் அவர் சொல்வார்: “ கம்மலுக்குன்னு வச்சது.. எனக்கு வேணாம்.. பேத்திக்கு வாங்கி போடு”

மறு வருடமே சேட்டு சிகப்பாக, அந்த அம்மாவுக்கு பேத்தி பிறப்பாள்.

சோதிடர்களுடனான என் அனுபவங்கள் தொடரும்.

0

எனது ஜோசியர் அனுபவங்கள் – பகுதி 2

சிறகு இரவிச்சந்திரன்

0

எனது பால்ய காலத்தில் எனக்கு தி.நகர் பேருந்து நிலையம் அருகில் இருந்த பாட்டி வீட்டில் தான் வாசம். அப்போதெல்லாம் உஸ்மான் சாலை வெறிச்சோடி இருக்கும். ஒரே ஒரு ஒன்பதாம் நெ பேருந்து அல்லது பத்தாம் நெ பேருந்து மெல்ல கடந்து போகும். ரங்கநாதன் தெரு தாண்டியதும் ஒரு நிறுத்தம் கூட உண்டு.

உஸ்மான் சாலை முழுக்க தூங்குமூஞ்சி மரங்கள் தான். அதென்ன தூங்குமூஞ்சி என்று கேட்கிறீர்களா? காலையில் சூரியன் ஒளி பட்டவுடன் விரியும் அதன் இலைகள், மாலை நெருங்க நெருங்க கூம்ப ஆரம்பித்து விடும். அதனால் தான் அந்தப் பெயர்.

அங்கிருக்கும் ஒரு பெரிய தூ.மூ. மரத்தடியில் பரவலாக நிழல் தரும் கிளைகளுக்கு அடியில் உட்கார்ந்திருப்பர் கிளி சோசியக்காரர்கள், நுங்கு விற்பவர்கள், சேமியா பாயசத்தை பித்தளைத் தூக்கில் சூடாக விற்பவர், கல்லில் தேய்த்து சவரம் செய்யும் நாவிதர். எனக்கு முடி வெட்ட இவர் வீட்டுக்கே வருவார். மாலையில் இவர்தான் சிவா விஷ்ணு கோயிலில் நாதஸ்வரம் வாசிப்பவர். அவரது பிள்ளைகள் இருவர் என்னோடு படித்தவர்கள். ஒருவன் பெயர் புக்கா என்று ஞாபகம் இருக்கிறது.

கிளி சோசியக்காரர் சவலையான ஒரு கிளி வைத்திருப்பார். அதன் இறகுகள் வெட்டப்பட்டு தத்தித் தத்தி தான் நடக்கும். பத்து காசுக்கு சோசியம். சீட்டை எடுக்க வெளியே வரும் கிளி, முடித்தவுடன் சமர்த்தாக சோசியர் கொடுக்கும் நெல்லை வாங்கிக் கொண்டு கூண்டிற்குள் போய்விடும்.

முருகன், காளி, சிவன், கிருஷ்ணன் என அனைத்து கடவுள்களின் படங்களும் அவரது சீட்டில் இருக்கும்.

“ கீழையின் முடிச்சு நீங்கி மேலையில் உயரம் காணும் பொற்காலமிது “ போன்ற வாசகங்கள் அச்சிட்ட வரிகள் ஒவ்வொரு அட்டையிலும் இருக்கும். அதற்கு அவர் தரும் விளக்கம் கொஞ்சம் பாமரத்தனமாக இருக்கும்.

“ முருகன் வந்திருக்கான். கஸ்டமெல்லாம் நீங்கிரும். இனிமே உனக்கு ஒசத்தியான நேரம் தான். மறக்காம காலையிலே முருகன் கோயில் துந்நூறு இட்டுக்க.. அல்லாம் சரியாயிரும்”

காளீ படம் வந்தால் “ கோபத்தை அடக்கு “ என்பார். சிவன் படம் வந்தால் “ சம்சாரம் வீட்டு பக்கம் பிரச்சினை “ என்பார். கிருஷ்ணன் படம் வந்தால் “ பொம்பளை சாவாசம் வேணாம்” என்பார். இதை அவர் சிறுவர்களுக்கும் சொல்வது தான் வேடிக்கை. பத்து பேர் கொடுக்கும் பத்து காசுகளில் அவரும் கிளியும் ஜீவிக்க வேண்டும்.

அவரது கூண்டு வித்தியாசமாக புதுசாக இருக்கும். தேக்கு மரத்தில் செய்யப்பட்டிருக்கும். பாலீஷ் ஏற்றி பளபளவென்று இருக்கும். திறந்து மூடும் கதவில் பித்தளைக் கம்பிகள் சொருகப் பட்டிருக்கும்.

இப்போது கிளி சோசியர்கள் காணாமல் போய் விட்டார்கள். சிலர் கிளிகள் கிடைக்காமல் வெள்ளை எலி சோசியம் பார்க்கீறார்கள்.

பெரும்பாலும் கிளி  சோசியக்காரர்கள் கோயில்கள் அருகிலேயே இருப்பார்கள். மதியம் அந்தந்த கோயில்களில் கிடைக்கும் உண்டைக் கட்டி அவர்களுக்கு தவறாமல் உண்டு. கோயில் பூசாரிகளும் சோசியம் பார்ப்பவர்கள் தானே!

கிளிக் கூண்டின் உள்ளே சவரக் கிண்ணம் போல் இருக்கும் பித்தளைக் கிண்ணத்தில் தண்ணீர் இருக்கும். வெயில் காலங்களில் தாகம் தணிக்க கிளி அதிலிருந்து உறுஞ்சிக் கொள்ளூம். தனக்கில்லாவிட்டாலும் கிளிக்கு உணவும் நீரும் அளிக்க சோசியர்கள் தவறுவதே இல்லை.

கிளி சோசியர்கள் அதை மட்டும் நம்பி பிழைப்பை நடத்த முடியாது. சில சமயம் வீட்டு வேலைகளுக்கு ஆள் தேவைப்பட்டால் உடனே விரித்து வைத்திருந்த சீட்டுக் கட்டுகளை அடுக்கி பத்திரப்படுத்தி, அதன் கீழ் விரிக்கப்பட்டிருக்கும் ரெக்சின் துணியை சுருட்டி கிளிப் பெட்டியின் மேல் செருகி, கூண்டை எடுத்துக் கொண்டு கிளம்பி விடுவார்கள்.

சோசியர்கள் வேலையில் இருக்கும் போது அந்த வீட்டின் குறும்புக்கார சிறுவர்கள் சீட்டுகளின் உள்ளே உள்ள வாசக அட்டைகளை மாற்றி வைத்து விடுவது உண்டு. அதை உடனே வீட்டுக்குப் போன உடன் சரி செய்து விடுவர் சோசியர்கள். ஒவ்வொரு படத்துக்குப் பின்னாலும் அவர்களுக்கு புரியக் கூடிய சங்கேத எழுத்துக்கள் இருக்கும் அதற்கான வரிகள் கொண்ட அட்டையிலும் அதே எழுத்து பொறித்திருக்கும். சோசியர்கள் உஷார் பேர்வழிகள்.

0

எனது ஜோசியர் அனுபவங்கள் – பகுதி 3

சிறகு இரவிச்சந்திரன்.

0

மாம்பலம் பனகல் பார்க் அருகில் இருக்கும் ராமகிருஷ்ணா உயர்நிலைப் பள்ளியின் மதிற் சுவர் ஓரம் இரவு ஏழு மணிக்கு ஒல்லியான தேகத்துடன் ஒரு வயதான பெண்மணி நின்றிருப்பார். மாம்பலம் பேருந்து நிலையத்திலிருந்து பனகல் பார்க் வரை ஒரு கைரேகை சோசியரைப் பார்க்க முடியாது. எல்லாவற்றிற்கும் கிளி சோசியம் தான். சோசியர்கள் தொகுதி பிரித்துக் கொண்டு செயல்பட்ட காலம் அது.

வயதான பெண்மணியின் பெயர் லட்சுமி. கைரேகை சாஸ்திரம் அறிந்தவர். வயது அறுபதுக்கு மேல் இருக்கும். நெற்றி நிறைய சிவப்பு குங்குமப் பொட்டு அணிந்து, கண்ணாடி போட்டிருப்பார். எப்போதும் வெள்ளையில் கட்டம் போட்ட புடவைதான் கட்டுவார். சன்னமான குரலில் பேசுவார். ஒல்லி உடம்புடன் இரவு பத்து மணி வரை நின்று கொண்டே இருப்பார்.

அவர் வெள்ளைப் புடவை கட்டுவதில் ஒரு புத்திசாலித்தனம் தெரிந்தது எனக்கு! மரங்கள் சூழந்த பகுதி அது. தெரு விளக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும். அவைகளின் சொற்ப வெளிச்சத்தையும் மரக்கிளைகள் மறைத்துவிடும். வாகனங்களின் முன் விளக்கு வெளிச்சத்தில் கொஞ்சம் அவ்வப்போது ஒளி கூடும். சொற்ப வெளிச்சத்தில் வெள்ளை உடை கண்ணில் பட வாய்ப்புகள் அதிகம். அதோடு வயதானவள் என்றாலும் வண்ண உடை சிலருக்கு வேகத்தைக் கொடுக்கலாம். வெள்ளை உடை பாதுகாப்புடன் தொழில் தந்திரமும் கூட.

கல்லூரி நாட்களில் நான்கைந்து பேராக அவரைக் கடந்து போகும்போது “ கைரேகை மன்னி” ( மன்னனுக்கு எதிர்பதம்) என்று கூப்பிடுவோம். அவர் திரும்பிப் பார்ப்பதற்குள் கடந்து விடுவோம்.

ஒரு நாள் இரவு ஏழு மணிக்கு அவளருகில் இரண்டு நபர்கள் நின்று கொண்டிருந்தனர். பெரிய பூதக்கண்ணாடியை வைத்துக் கொண்டு ஒருவரது கையை சோதித்துக் கொண்டிருந்தார். ஒட்டுக் கேட்டதில் கிடைத்த விவரம் இது!

“ தோ பாருங்க.. இருக்கறதை இருக்கறபடி சொல்லிடுவேன்.. அதுதான் ஒங்களுக்கும் நல்லது.. ஆக்சுவலி ஒங்க ஃபேட் லைன் கட்டாயிருக்கு.. தொழில்ல கொஞ்சம் இழுபறிதான். வேலைக்கு போறிங்கன்னா அடிக்கடி வேலையை விட வேண்டியிருக்கும்.. லைன்ஸ் ஆர் வெரி கிளியர்!”

ஆங்கிலமும் தமிழுமாக பொளந்து கட்டிக் கொண்டிருந்தார் அவர். எனக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. இப்படி அற்புதமாக மொழியை கட்டியாளும் அவர் ஏன் தெருவில் நிற்க வேண்டும். நாலு பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தால் கூட இதை விட கௌரவமாக பிழைத்துக் கொள்ளலாமே?

ஒரு நாள் யாருமில்லாத பின் மாலைப் பொழுதில் அவரை பேட்டியெடுக்க முடிவு செய்தேன். ரேகை தவிர ஏதும் பேசுவாரா? நான் அவரை ஏளனம் செய்வதாக கோபம் கொள்வாரா? ஏதாவது திட்டிவிட்டால் நாற்சந்தியில் என் மானம் போகுமே! ஏகத்துக்கு தயக்கம்.

எப்படியோ தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவரை நெருங்கினேன்.

“ சின்னப் பையனா இருக்கே? ஒனக்கு எதுக்கு ரேகை பாக்கணும். நாட் நெஸஸ்ஸரி”

“ இல்லே.. ஒங்களைப் பத்தி தெரிஞ்சுக்கணும்”

“ ஒய்! நான் என்ன பிரபலமா.. ஐ வாஸ் நெவர் ஃபேமஸ்.. நாட் ஈவன் பாப்புலர்.. மெபி நொட்டோரியஸ்”

மெல்ல அவரை மசிய வைத்து நான் மீட்டெடுத்த அவரது சரிதை இதுதான்!

அவருடைய கதை சுவாரஸ்யமானது. சோசியர்கள் பேச்சைக் கேட்டு அழிந்த குடும்பத்தில் பிறந்த ஒரே பெண் அவர். வளமாக வாழ்ந்த குடும்பம். பள்ளி இறுதி வகுப்பு முடிக்கும் நேரத்தில் சோசியர்கள் சொன்னதைக் கேட்டு மொத்தத்தையும் தொலைத்த அவரது தாயும் தந்தையும் தற்கொலை செய்து கொண்டார்கள்.

பதினாறு வயதில் பல வீடுகளில் வேலை செய்து பிழைத்த அவர், கிடைத்த நேரங்களில் கைரேகை சாத்திரம் சம்பந்தப்பட்ட புத்தகங்களை படிக்க ஆரம்பித்திருக்கிறார். தந்தையுடன் சிறு வயது முதலே பல சோதிடர்களை சந்தித்த அனுபவம் அவருக்கு துணையாக, கைரேகை சாத்திரம் அவருக்கு அத்துப்படியாகிவிட்டது. சோதிடம் கேட்க வருபவர்கள் இளம் பெண்ணான அவரிடம் வேறு எதையோ எதிர்பார்ப்பது புரிந்த கணத்தில், அவர்  ரேகை பார்ப்பதை நிறுத்திக் கொண்டார்.அப்புறம் அவருக்கும் எல்லோரையும் போல கல்யாணம், பிள்ளைகள் என்றாகிப் போனது. அவர்களையும் நல்ல முறையில் வளர்த்ததில் இப்போது வசதிக்கு ஒரு குறைவும் இல்லை.

ஆனாலும் மண்டைக்குள் இருக்கும் ரேகை சாத்திரம் அவரை விட்டபாடில்லை. எந்தக் கையைப் பார்த்தாலும் அதன் கணிப்புகள் மனதில் ஓடிக் கொண்டே இருந்தன.

இப்போது வயதாகி விட்டது. பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள். தத்தம் கால்களில் நிற்கிறார்கள். இனி பயமில்லை என்றானபின், தனக்குப் பிடித்த ரேகை சாத்திரம் சொல்ல வருவதாகச் சொன்னார் லட்சுமி

“ ஏன் இப்படி இருட்டிலே நிக்கறீங்க? வீட்லயே பாக்கலாமே?”

“ வீட்ல ரேகையை பாத்தாலே எங்கப்பா ஞாபகம் தான் வருது. அவரது அழிவு என்னைக் அலைக்கழிக்குது. ஹி வாஸ் சச் அ கவார்ட். ஆனால் இதுல உண்மை இருக்கு தம்பி. சாஸ்திரம் பொய்யில்லே”

இன்னமும் சோதடத்தையும் சோதிடர்களையும் நம்புபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஒரு வயதுக்கப்புறம் எல்லா தாத்தாக்களும் சோதிடர்களாகி விடுகிறார்கள்.. கவிஞர் விக்கிரமாதித்யன் போல.

நாதமுனி தெருவில் இருக்கும் ஶ்ரீதர் போலியோவால் பாதிக்கப்பட்டு நடமாடும் சக்தி இழந்தவர். இன்னமும் பணம் வாங்காமல் பலருக்கு சோதிடம் பார்த்துக் கொண்டிருக்கீறார். அவரைப் போல பலர் இந்த சாத்திரத்தை ஒரு மனித நேயப்பணியாக செய்து கொண்டிருக்கீறார்கள்.

கோட்டூர்புரத்தில் இருந்த ஆவி உலகம் அமுதா சட்டென்று ஒரு டிரான்ஸில் போய் சுத்த சங்கத் தமிழில் பேச ஆரம்பித்து விடுவார். பாதிரி லாரன்ஸ் என் கல்லூரி நண்பன். நம் சிரசின் மேல் கை வைத்து கிரேக்க பாஷையில் ஏதோ சொல்லி விளக்கமும் சொல்வான். வெள்ளைப் பேப்பரில் எழுத்துக்கள் தோன்ற நாடி சோசியம் பார்க்கும் குமார் குருஜி சில இடர்களை எனக்கு நீக்கி இருக்கிறார்.

எனக்கு சோதிடம் தெரியாது. ஆனாலும் என் சம்பந்தப்பட்ட விசயம் ஒன்று இதில் இருக்கீறது. ப்ளஸ் டூ பரிட்சை விடுமுறையில் என் தந்தையின் பழைய ஸீரோ கைரேகை புத்தகத்தை விழுந்து விழுந்து படித்துக் கொண்டிருந்தான் என் மகன்!

0

Series Navigationதொடுவானம் 173. அப்பாவின் அவசர அழைப்புஒரு தவறான வாயில் வழியாக …
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *