தொடுவானம் 173. அப்பாவின் அவசர அழைப்பு

This entry is part 1 of 11 in the series 11 ஜூன் 2017

போத்தனூரின் புது இல்லம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. தன்னந் தனியாக அமைதியான இயற்கைச் சூழலில் கோயம்புத்தூர் குளிர் தென்றலில் நாட்கள் இனிமையாகக் கழிந்தன. வேலை முடிந்து மீதி நேரத்தில் அந்த புதுக் குடிலில் தஞ்சம் கொண்டேன்.
மேசை மீது நான் படிக்கும் நாவல்களையும் கண் மருத்துவ நூல்களையும் வரிசையாக அடுக்கிவைத்தேன். படிக்கவும் எழுதவும் அதுபோன்ற ஓர் இடம் கிடைப்பது அபூர்வம். மனதில் இனம்காணாத ஒருவகையான நிம்மதி. எழுத அமர்ந்துவிட்டால் கற்பனை சிறகடித்துப் பறக்கும்.

இனி எனக்கு எந்த கவலையும் இல்லை. வாழ்க்கையில் ஒரு முக்கியமான காலகட்டத்தைக்  கடந்து வந்து விட்டேன். அந்த ஆறு வருடங்கள் வேகமாக உருண்டோடிவிட்டன.இப்போது ஒரு கண் மருத்துவராக பணியில் சேர்ந்துவிட்டேன். இனி அடுத்த கட்டம் நோக்கி நிதானமாக பயணிக்கலாம்.

இந்த மருத்துவமனையிலேயே தொடர்ந்து பணி புரிந்தால் திருச்சபையின் உதவியுடன் வியன்னா சென்று கண் மருத்துவ மேல் படிப்பை முடிக்கலாம். அதன்பின்பு நிரந்தரமாக இங்கேயே கண் மருத்துவராக பணியாற்றலாம்.இது நடைபெறவேண்டுமெனில் டாக்டர் பிச்சை ராபர்ட்டின் பரிந்துரை தேவை. நான் இபோதுதான் இங்கே சேர்த்துள்ளேன். இன்னும் இரண்டு வருடங்களாவது இங்கேயே அவரின் கீழ் பணியாற்றினால்தான் அவரிடம் இது பற்றி கேட்க முடியும்.முடியும்.

நான் இங்கே சேர்ந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டன.தினமும் வெளிநோயாளிப் பிரிவில் சிகிச்சை செய்தேன். நூற்றுக்கணக்கில் கண்களை அன்றாடம் பார்ப்பது சலிப்பையே உண்டுபண்ணியது. இது கண் மருத்துவமனை என்பதால் கண்களைத்தானே பார்த்தாகவேண்டும். ஆனால் எனக்கு மனிதர்களின் இதர உறுப்புகளில் தோன்றும் நோய்களைக் குணமாக்கும் பொது மருத்துவம் மேல்தான் நாட்டம் அதிகம். அது மருத்துவம் படிக்கும்போதே நான் விரும்பிய ஒன்றாகும்.

கண் அறுவை மருத்துவம் கற்றுக்கொள்ளலாம் என்ற ஆசையில் அதில் கவனம் செலுத்தினேன். டாக்டர் பிச்சை ராபர்ட் அறுவை சிகிச்சை செய்யும்போது கூர்ந்து கவனிப்பேன். வார்டு ரவுண்ட்ஸ் செல்லும்போது அவர் கட்டுகளை அவிழ்த்து அறுவை செய்த கண்களைப் பரிசோதிப்பார். அப்போது என்னை டார்ச் லைட்டை பிடித்து ஒளியை  அந்தக் கண்ணின் மேல் படும்படி அடிக்கச் சொல்வார். ஒவ்வொரு நோயாளியாக அவர் பார்க்கும்போது என்னுடைய வேலை டார்ச் பிடித்து ஒளி அடிப்பதுதான். அப்போது எனக்கு ஒருவிதமான விரக்தி உண்டாகும். இவ்வளவு படித்தபின்பு இந்த டார்ச் அடிக்கும் வேலைதானா?

அது எனக்குப் பிடிக்கவில்லை என்றாலும் வேறு வழியின்றி அவ்வாறே செய்தேன். அப்படி டார்ச் பிடித்து ஒளி வீசினாலும் அதிலும் அவர் ” இப்படிப்  பிடி ” ,” அப்படிப்  பிடி ” என்று சொல்லித்தருவார். அது எனக்கு அருவருப்பை உண்டுபண்ணியது.டார்ச்சை எப்படிப் பிடிப்பது என்பதைக்கூட எனக்குச் சொல்லுகிறாரே. இப்படி வார்டு ரவுண்ட்ஸ்களின்போது அவருக்கு விளக்கு பிடிக்க மூன்று மாதங்களோ. என் பொறுமைக்கும் ஒரு அளவு இருக்கவே செய்தது. இருந்தாலும் என்னால் என்ன செய்ய முடியும்.  அவர்தானே தலைமை மருத்துவர். அதோடு சர்வ வல்லமையும் படைத்த திருச்சபையின் செயலர்.

நாட்கள் செல்ல செல்ல எனக்கு கண் மருத்துவம் மீது ஆர்வம் இல்லாமல் போனது.என் ஆசையெல்லாம் பொது மருத்துவம் மீதுதான். இங்கு காலியாகக் கிடைக்கும் இந்த போத்தனூர் கட்டிடங்களில் ஒரு பொது மருத்துவமனை துவங்கினால் நான் மன  நிறைவோடு அதில் பணிபுரிவேன். அனால் அது இப்போது நடக்கும்  காரியமா.

           கண் மருத்துவத்தில் கண்களைத்தான் அன்றாடம் பார்க்கவேண்டியுள்ளது. ஆனால் பொது மருத்துவத்தில் ஒரு  நோயாளியை முழுதுமாக பார்க்க முடியும் நோயாளியின் நோய் பற்றி அறிவதோடு அவனுடைய வாழ்க்கையின் பின்னணி பற்றியும், குடும்பத்தின் நிலையும், அவன் வாழும் சமுதாய அமைப்பையும், அவனின் வேலையும், பொருளாதார நிலையும்  பற்றி தெரிந்துகொள்ளலாம். அதன் மூலமாக அவனை நோயாளியாக பார்க்காமல் முழு மனிதனாக பார்த்து குணப்படுத்த முடியும். இத்தனை வருடங்கள் படித்த மருத்துவப் படிப்பு  வெறும் கண்களை மட்டுமே பார்த்துக்கொண்டு டாக்டர் பிச்சை ராபர்ட்டுக்கு விளக்கு அடிக்கத்தானா? இத்தகைய மன சஞ்சலத்துடன் அங்கு பணிபுரிந்து மூன்று மாதங்களும் கழிந்துவிடடன.
          பகல் முழுதும் கோயம்புத்தூரில் இருந்துவிட்டு மாலையில் போத்தனூர் திரும்பிவிடுவேன். சில நாட்களில் கோயம்புத்தூரில்  பிரதான வீதியில்  கடைத்தெருவுக்குச் சென்று  வருவேன். கோவை பொது மருத்துவமனை, கோவை தொடர்வண்டி நிலையம் சென்று  நேரத்தைக் கழிப்பேன். இரவில் நிம்மதியாக தூங்கி காலையில் உற்சாகமாக .எழுவேன்.
          ஒரு நாள் அப்பாவிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் முக்கிய காரியம் பேசவேண்டும் என்பதால் விடுப்பு எடுத்துக்கொண்டு ஊர்  வரச் சொல்லியிருந்தார்.    என்ன முக்கிய காரியம் என்பது தெரியாமல் குழம்பினேன். அந்த வார இறுதியில் நான்கு நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு ஊர் சென்றேன். இரவில் திருவள்ளுவர் துரித பேருந்தில் புறப்பட்டேன். அதிகாலையில் சிதம்பரம் வந்தடைந்தேன்.
          என்னைக் கண்டதும் ஊரில் அனைவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.அப்பாகூட சிரித்தவாறு என்னை வரவேற்றார். பால்பிள்ளையும் வாசலில் நின்றுகொண்டிருந்தான். முன்பே தெரிவித்திருந்தால் அவன் கூண்டு வண்டி. கொண்டு வந்திருப்பான். நான் ஒரு பிராயணப் பை மட்டும் கொண்டுவந்ததால் தவர்த்தாம்பட்டிலிருந்து நடந்து வந்துவிட்டேன். உடைகளை மாற்றிக்கொண்டு அவனுடன் ஆற்றங்கரைக்குச் சென்றுவந்தேன்.
          வீட்டில் அம்மா வழக்கம்போல் சுவையான காலை சிற்றுண்டி செய்திருந்தார். பசியாறிவிட்டு திண்ணையில் அமர்ந்திருந்தேன். அப்போதுதான் அப்பா அந்த முக்கிய செய்தி பற்றி கூறலானார்.
          எனக்கு திருமண வயது நெருங்கிவிட்டதாம். அதனால் எனக்கு திருமண ஏற்பாடு செய்யவேண்டுமாம். அது பற்றி பேச அழைத்துள்ளாராம். பரவாயில்லை. அப்பா நன்றாகத்தான் செயல்படுகிறார் என்று மனதுக்குள் எண்ணிக்கொண்டேன்.
          அவர் சிங்கப்பூரில் இருக்கும் லதா பற்றி ஏதும் கேட்கவில்லை. அதனால் அவளைப் பற்றி பேசுவதில் அர்த்தமில்லை. நான் மௌனம் சாதித்தேன்.
          ” நீ என்ன சொல்கிறாய்? இங்கு மெடிக்கல் காலேஜில் எந்தப் பெண்ணையாவது பார்த்திருக்கிறாயா? ” அப்பா கேட்டார் சிரித்தபடி.
          நான் அதற்கும் ஒன்றும் சொல்லவில்லை.
         ” அப்படி இருந்தால் சொல். போய் பெண் கேட்டு பார்ப்போம். ” அவர் தொடர்ந்து கூறினார்.
          நான் வெரோனிக்க பற்றியும் கூற முடியவில்லை. அவளுடன்தான் தொடர்பு இல்லாமல் போனதே.
          எனக்கு முறைப் பெண்கள் இருவர் இருந்தனர். அத்தை மகள் நேசமணி. இவள் என்னை ” அத்தான்…அத்தான் ” என்று அழைத்து மகிழ்ந்தாள். நான் தாம்பரம் செல்லும்போதெல்லாம் என்னைவிழுந்து விழுந்து உபசரிப்பாள். என்னை மணந்துகொள்ள அவளுக்கு கொள்ளை ஆசை. அத்தைக்கும் அந்த ஆசை இருக்கவே செய்தது. ஆனால் நான் எந்தவிதமான அறிகுறியும் காட்டாத காரணத்தால் அத்தைக்கு என் மீது நம்பிக்கை இல்லாமல் போனது. சென்ற வருடம் நேசமணியை பெண் கேட்டு  வந்துள்ளனர். அத்தை கடைசியாக  ஒருமுறை என்னிடம் கேட்டார். நான் மிகுந்த மன வருத்தத்துடன் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அதன் பின்பு நேசமணிக்கு திருமணம்  நடந்தது. தனியே என்னைக் கண்ட நேசமணி கதறி அழுது விடைபெற்றாள்.
          இரண்டாவது முறைப்  பெண் மாமன் மகள் உமாராணி. இவள் சிதம்பரத்தில் உயர்நிலைப் பள்ளியில் பயில்கிறாள். குறைவான வயதுதான். மா நிறம்.  அழகாக புன்னகைக்கும் முகம். இவளுடன் நான் பழகியதில்லை. எப்போதாவது வீட்டுக்கு வருவாள். ஆனால் என்னை நேராகப் பார்த்து  பேச .கூச்சப்படுவாள். என்னைக் கண்டதும் அறைக்குள் ஓடி ஒளிந்துகொள்வாள். அம்மா அவளை வெளியில் வந்து மாமனுடன் பேசு என்று அதட்டினாலும் வெளியில் வரமாட்டாள். அம்மாவுக்கு நான் அவளை மணந்துகொள்ளவேண்டும் என்பதில் ஆசை இருந்தது. ஆனால் அப்பா என்ன சொல்வாரோ என்ற பயமும் இருந்தது.
          எனக்கு அப்பாவின் குணம் தெரியும். அவரை மீறி எதுவும் செய்தால் அவருக்கு பெருங் கோபம் வரும். தனியாக சிங்கப்பூரில் இருந்துவிட்டு இப்போதுதான் ஊர் திரும்பியுள்ளார். இந்த நேரத்தில் அவருக்கு கோபத்தை உண்டுபண்ணி குழப்பத்தை உண்டுபண்ண விரும்பவில்லை.
           சில மாதங்களுக்கு முன்புதான் கடைசி வீட்டு மோசஸ் சித்தப்பாவுக்கும்  அவருடைய மூத்த மகன் ஜெயபாலனுக்கும் திருமண பேச்சின்போது பெரிய குழப்பம் உண்டானது. அவர்களை சமாதானம் செய்ய நான்தான் சென்றேன். ஜெயபாலன் தன்னுடைய அத்தை மகள் ஜெசியை காதலித்தான். அவன் கோயம்புத்தூரில் பொறியியல் பயின்று தேர்ச்சி பெற்றவன். சிங்கப்பூர் பிரஜை. அங்கு சென்று வேலை செய்யலாம். அப்போது  சென்னையிலிருந்து சுவாமிநாதன் என்பவர் தன்னுடைய மகளுக்கு ஒரு டாக்டர் அல்லது பொறியியலாளர் மாப்பிள்ளை வேண்டும் என்று தெம்மூர் வந்தார். அவர் மோசஸ் சித்தப்பாவைப் பார்த்து ஜெயபாலனை தன்னுடைய மகளுக்கு திருமணம் செய்துவைக்க சம்மதம் பெற்று திரும்பினார். ஆனால் ஜெயபாலனோ அத்தை மகள் ஜெசியைத்தான் கட்டப்போவதாக நியாயமாகவே எடுத்துச் சொன்னான். ஜெசி சித்தப்பாவின் உடன்பிறந்த தங்கை மேரியின் மகள்தான். அதே வேளையில் மேரியின் கணவர் சாமிப்பிள்ளை சித்தப்பாவின் தாய் மாமன்.அவருக்கும் சித்தப்பாவுக்கு அப்போது குடும்ப பிரச்னை இருந்தது. அதனால் சித்தப்பா ஜெசியை ஜெயபாலனுக்கு மணமுடிக்க முடியாது என்றார். அதோடு சென்னையிலிருந்து வந்தவருக்கு வாக்கு கொடுத்துவிட்டதாகவும் கூறினார். ஜெயபாலன் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. அப்போது சின்னம்மா கிரேஸ் என்னை வந்து சமரசம் செய்துவைக்கச் சொன்னார். மோசஸ் சித்தப்பாவும் அப்பா மாதிரியே மிகவும் முன்கோபக்காரர். ஆனால் என்மீது அன்பு கொண்டவர். அதை வைத்து அவரை சமாதானம் செய்யலாம் என்றுதான் அங்கு சென்றேன். ஆனால் அதில் நான் தோற்றுப்போனேன். அவர் கடைசி வரை ஜெசியை மருமகளாக ஏற்க மறுத்துவிட்டார். ஜெயபாலன் எவ்வளவோ கதறி அழுதான். ஆனால் ஏதும் எடுபடவில்லை. கடைசியில் அவர் விருப்பப்படியே ஜெயபாலனுக்கும் சுவாமிநாதன் மகள் ஷீலாவுக்கும் திருமணம் நடந்தேறியது. ஜெசியின் நிலைமை பரிதாபமானது. சொந்த தாய் மாமனே தன்னை வேண்டாம் என்று கூறிவிட்டாரே என்ற அதிர்ச்சி ஒருபுறம். தன்னுடைய மாமன் மகனை தூய உள்ளத்துடன் காதலித்தும் அது தோல்வியில் முடிந்ததே என்ற சோகம் மறுபுறம். வேறு வழி தெரியவில்லை அவளுக்கு. இனி உயிர் வாழ்வதில் அர்த்தமில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டாள். . அரளிக்கொட்டையை அரைத்து விழுங்கிவிட்டு உயிரையே மாய்த்துக்கொண்டாள். நல்ல நிறத்தில் அழகிய சாயலில் அழகானப் பெண்ணான ஜெசியின் உடலை கல்லறைத் தோட்டத்தில் புதைத்துவிட்டனர்!
( தம்பி ஜெயபாலனும் ஷீலாவும் இப்போது சிங்கப்பூரில் வாழ்கின்றனர் )
          நான் லதாவை திருமணம் செய்துகொள்ளலாம் என்றால் அவ்வளவுதான்! ஜெயபாலன் பட்டதைவிட பெரும் பிரச்னை எழும் என்பது எனக்குத் தெரியும். அதனால் நான் ஏதும் பதில் சொல்லாமல் மெளனம் காத்தேன்.
          ” என்ன யோசிக்கிறாய்? யாரையும் இங்கே காதலிக்கலையா? ” மீண்டும் சிரித்துக்கொண்டே கேட்டார். அவர் சிரிப்பதை நம்பமுடியாது. திடீர் என்று கோபம் வந்துவிடும்,. மனதில் எதையாவது வைத்துக்கொண்டு இப்படி சிரித்து ஆழம் பார்ப்பார்!
          ”  இப்போ எதற்கு திருமணம். ” என்று மட்டும் சொன்னேன். அன்றைய சூழலில் அதைத்தவிர வேறு எதையும் சொல்லத் தெரியவில்லை.
          ” உனக்கு நான் ஒரு அழகான பெண் பார்த்துள்ளேன். அவள் என் மாமன் மகள் . பெயர் ஜெயராணி. லாபீசில் இருக்கிறாள். ” என்றார் .அவருடைய மாமன் மகள் என்றால் அவருக்குத்தான் அவள் முறைப் பெண். அனால் பெண்ணின் தாய் கிரேஸ் கமலா எனக்கு அக்காள் முறை. ஆகவே அந்த உறவை வைத்து திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
          பெண்ணின் தந்தை சாமுவேல் என் பாட்டியின் உடன் பிறந்த தம்பி. மிகவும் நெருங்கிய சொந்தம். அவரின் திருமணம் தெம்மூரில்தான் நடந்தது. அப்போது நான் சிறுவன். பின்பு அவர்கள் இருவரும் மலேயா சென்றுவிட்டனர். அந்த பெண் பிறந்தபோது அப்பாவும் நானும் லாபீஸ் சென்று பார்த்துவிட்டு வந்தோம். பிறகு அந்த சின்ன பாப்பாவை  ஆறு வயதில்  ஒருமுறை பார்த்துள்ளேன்.முகம் உருண்டையாகவும் முழிக்கும் கண்களுடன் பார்க்க அழகாக இருப்பாள். இப்போது எப்படி இருப்பாள்  என்பது தெரியாது.
          எப்படியும் எனக்கும் அவளுக்கும் பத்து வயதாவது வித்தியாசம் இருக்கும். சின்ன பெண்ணாக இருப்பாள் என்று எண்ணலானேன்.
          ” நீ மலாயா சென்று அவளைப்  பார். நிச்சயம் உனக்கு பிடித்துவிடும். கல்யாணத்தை இங்கேயே வைத்துக்கொள்ளலாம். ” என்றார்.

பிறகு வீட்டினுள் சென்று ஒரு ஏர் மெயில் கவர் கொண்டுவந்தார். அதை என்னிடம் தந்தார். அதை மலயாவிலிருந்து கமலா அக்காள் அனுப்பியிருந்தார்கள். அதனுள் ஏர் இந்தியா விமான பிரயாணச் சீட்டு இருந்தது கண்டு நான் வியந்துபோனேன். எல்லாம் இவ்வளவு துரிதமாக நடைபெற்றுள்ளது!

          ( தொடுவானம் தொடரும் )
Series Navigationஎனது ஜோசியர் அனுபவங்கள்
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *