16.
கிஷன் தாசின் பங்களாவில் நடுக்கூடம். பிரகாஷ் தன் எம்.பி.ஏ. தேர்வுக்கான பாடத்தைப் படித்துக்கொண்டிருக்கிறான். படிப்பவன் போல் தென்பட்டாலும், அவனது முகத்தில் சிந்தனை தேங்கியிருக்கிறது. அவனால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. அங்கேயே பக்கத்தில் சோபாவில் அமர்ந்தவாறு கிஷன் தாஸ் நாளிதழ் ஒன்றைப் படித்துக்கொண்டிருக்கிறார்.
திடீரென்று கிஷன் தாஸ், “இப்போதெல்லாம் நாளிதழ்களில், கற்பழிப்பு, கொலை, கொள்ளை பற்றிய செய்திகள் எக்கச்சக்கமாக வருகின்றன. இந்த அரசியல்வாதிகளும், காவல்துறையினரும் என்னதான் செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை. இந்த முழு உலகமுமே பெண்களுக்குப் பாதுகாப்பற்ற இடமாக மாறிகொண்டிருக்கிறது!” என்று புலம்புகிறார்.
“பெண்களுக்கு மட்டும்தானா! கள்ளமற்ற சிறுவர்களுக்கும் தான்! அரசியல்வாதிகளும் காவல்துறையினரும் மட்டுமல்லாமல், அனைத்து அரசு அலுவலர்களும் ஊழலே உருவாக இருக்கிறார்கள்! பிடிபடும் குற்றவாளிகள் ஊழலைத் தடுக்க வேண்டிய அதிகாரிகளுக்குக் கையூட்டுக் கொடுத்துத் தப்பிவிடுகிறார்கள்! நம்மை ஆள்பவர்கள் நமது தரத்தில்தான் இருப்பார்கள்! நமது நடத்தையின் சாரம்தான் அவர்கள்!” என்று பிரகாஷ் இடக்காய்க் குறுக்கிடுகிறான்.
பிரகாஷின் சொற்களைக் கேட்காதவர் போல், “வரும் தேர்தலில் நான் போட்டியிடப் போகிறேன்!” என்று கிஷன் தாஸ் அறிவிக்கிறார்.
சிரிக்கும் பிரகாஷ், “மிகவும் புத்திசாலித்தனமான முடிவுதான். பணபலத்தால் நீங்கள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்! அதன் பின் உங்கள் செல்வாக்கால் அமைச்சராகவும் ஆவீர்கள். பிறகு என்ன! இந்த நாட்டின் எந்தச் சக்தியாலும் உங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவே முடியாது! உங்கள் தொழிற்சாலைகளில் குழந்தைத் தொழிலாளிகளை நீங்கள் நியமிப்பது பற்றிய கட்டுரையைச் சுமதி எந்த நாளிதழில் எழுதினாலும்!” என்கிறான் மீண்டும், இடக்காக.
தம் கையில் பிடித்திருந்த நாளிதழை வீசி எறியும் கிஷன் தாஸ், “காலங்கார்த்தாலையில் அவள் பெயரை ஏன் உச்சரிக்கிறாய்? நேற்றைய வாக்குவாதத்தைத் தொடர்வதற்காகவா?” என்று வெடிக்கிறார்.
”ஒரு வகையில் நீங்கள் நினைப்பது சரிதான். உங்களிடம் ஒரு வேண்டுகோள்! உங்களின் நிழலான தொழில் நடவடிக்கைகளிலிருந்து விலகிக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். உங்களுடைய தொழில்களின் பங்குதாரராக இருப்பது எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது…இது வரையில் நீங்கள் காட்டிய இடங்களில் எல்லாம் பல ஒப்பந்தங்களிலும் நான் கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்துப் போட்டு வந்திருக்கிறேன். இனி எதிலும் நான் கையெழுத்துப் போடுவதாக இல்லை!”
கிஷன் தாசின் விழிகள் விரிகின்றன: “ஏனாம்? உனக்கு அச்சமாய் இருக்கிறதா? இல்லாவிட்டால் திடீரென்று உன் மனச்சாட்சி விழித்துக்கொண்டு விட்டதா!” என்று கிண்டலாக அவர் கேட்கிறார்.
“கடைசியாய் நீங்கள் கேட்டது சரிதான். குழந்தைத் தொழிலாளர்களை உங்கள் தொழிலகங்களில் நீங்கள் அமர்த்துவது பற்றி நான் தொடக்கத்திலேயே சிந்தித்துப் பார்த்திருக்க வேண்டும். ஏனோ எனக்கு அது பற்றிய உணர்வே இல்லை. அதனால் அப்படி ஒரு சிந்தனை தோன்றவில்லை. ஒரு பங்குதாரர் என்கிற முறையில் நான் உங்கள் தொழிற்சாலைகளுக் கெல்லாம் சென்று பார்த்திருக்கவும் வேண்டும். நான் வெறும் ‘உறங்கும்’ பங்குதாரராக – ஆங்கிலத்தில் சொல்லுவது போல் ஒரு ஸ்லீப்பிங் பார்ட்னர் ஆக – இருந்து வந்திருக்கிறேன்!”
“ஓ! இப்போது நீ ‘விழித்துக்கொண்ட’ பங்குதாரர் ஆகிவிட்டாயாக்கும்!” என்று கிஷன் தாஸ் நக்கல் அடிக்கிறார்.
“ஆமாம். நான் இப்போது விழித்துக்கொண்டுவிட்டேன்தான்! அதனால் நான் இனி உங்கள் சட்டவிரோதத் தொழில் நடவடிக்கைகளின் பங்குதாரராக இருக்க வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறேன். அதற்கு நான் விலகல் கடிதம் ஏதேனும் சட்டப்படி கொடுக்க வேண்டும்தானே?” என்று பிரகாஷ் அமைதியான குரலில் வினவுகிறான்.
கிஷன் தாஸ் சினம் பொங்க, “ஆக மொத்தம், என் மீது நீ வைத்துள்ளதாய்ச் சொல்லும் அன்பு முழுக்க முழுக்கப் போலியானது!” என்கிறார்.
“மனச்சாட்சி சம்பந்தப்பட்ட விஷயங்களில் அன்பே யானாலும் அது பின்னுக்குத் தள்ளப்பட வேண்டிய ஒன்றுதான்! இன்னும் சொல்லப் போனால், அது ஒரு பொருட்டாகவே இருக்கக்கூடாது!”
இரைந்து சிரிக்கும் அவர், “ஆமாம், ஆமாம்! ஒரு பெண்ணின் மீது கொள்ளும் உடல்சார்ந்த அன்பு மட்டும் அந்தக் கோட்பாட்டுக்கு விலக்கு! அப்படித்தானே?” என்று குசும்பாய்க் கேட்கிறார்.
சினம் பொங்க, “நாக்கை அடக்கி நாகரிகமாய்ப் பேசுங்கள்! அசிங்கமாய்ப் பேச வேண்டாம்!” என்று உதடுகள் துடிக்கப் பிரகாஷ் பதில் அளிக்கிறான்.
“என்ன! அசிங்கமாய்ப் பேசுகிறேனா! ஒரு பெண்ணின் மீது ஆணுக்கு ஏற்படும் கவர்ச்சி என்பது அசிங்கமானது என்று எப்படி நீ சொல்லலாம்? அப்படிப் பார்த்தால், எனக்கும் உன் அம்மாவுக்குமிடையே இருந்த அசிங்கமான உறவின் விளைவுதானே நீயும்?”
“நீங்கள் சொல்லுவது சரிதான்! அந்த உறவில் அசிங்கம் ஏதும் இல்லைதான்! ஆனால் நீங்கள் சொன்ன “ஒரு பெண்ணின் மீது கொள்ளும் உடல் சார்ந்த அன்பு” என்று குறிப்பிட்டீர்களே அதுதான் அருவருப்பாக ஒலித்தது! அதனால்தான் நானும் அப்படிப் பேசினேன்!”
மேற்கொண்டு உரையாடலை எப்படித் தொடர்வது என்பது புரியாததால் இருவருக்குமிடையே மவுனம் நிலவுகிறது. பிரகாஷே அதை உடைத்துப் பேசுகிறான்.
“அப்பா! உங்கள் தொழில் கூட்டாளியாக நான் தொடர விரும்பவில்லை…. நீங்கள் ஏன் உங்கள் தொழிலகங்களை எல்லாம் மூடக் கூடாது?”
“உனது அந்தப் பெரிய மண்டையில் மூளை இருக்கிறதா, இல்லையா? சிறுவர்கள் மட்டுமல்லாமல், வயதான ஊழியர்களும் வேலை இழப்பார்கள்! பட்டினி கிடப்பார்கள்…. என் தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் பொருள்களின் ஏற்றுமதியால் நம் நாட்டின் அன்னியச் செலாவணி அதிகரித்து வந்துள்ளது. ஏற்கெனவே ஒரு முறை நான் இது பற்றி உன்னிடம் சொல்லியிருக்கிறேன். வயதான ஊழியர்களை விட்டுத்தள்ளு! ஆயிரக்கணக்கான சிறுவர்களை யெல்லாம் நான் என்ன செய்வது?”
“அவர்களை யெல்லாம் அவர்களின் பெற்றோரிடத்துக்குத் திருப்பி அனுப்பிவிடுங்கள். அவர்களைக் கொண்டுவந்து உங்களிடம் விட்ட அந்த முகவரைப் பிடித்து அதைச் செய்யலாமே!”
”அந்தச் சிறுவர்களின் புகைப்படங்களையெல்லாம் அவர்களின் முகவரிகளுடன் நான் பதிவேட்டில் பதிந்து வைத்திருப்பேன் என்று நினைக்கிறாயா! என்ன பிதற்றல் இது?”
“நீங்கள் அதைச் செய்திருந்திருக்க வேண்டும்! விற்கப்பட்ட ஒரு குழந்தையின் இடத்தில் உங்களை நீங்களே கற்பனை செய்து பார்த்திருந்தால் பொறுப்புடன் அப்படிச் செய்திருந்திருப்பீர்கள்! பின்னர் ஒரு நாளில் தெருச் சிறுவனாக ஆகியிருக்கக்கூடிய துரதிருஷ்டச் சூழ்நிலையில் பிறந்து வளர்ந்திருந்த போதிலும், நீங்கள் கோரமான இந்தச் செயலைச் செய்திருக்கிறீர்கள்! அப்படி ஒரு சூழ்நிலையில் நீங்கள் இருந்திராவிட்டால், இதை விட இன்னும் எவ்வளவு அதிக மோசமாக நடந்திருப்பீர்களோ! அதை என்னால் கற்பனையே செய்ய முடியவில்லை!”
“அப்படி ஒரு சூழ்நிலை எனக்கு இருந்ததால்தான் அவர்கள் போதை மருந்து வியாபாரிகளிடமோ, பயங்கரவாதிகளிடமோ சிக்காமலும், திருடர்களாகவும் கொள்ளைக்காரர்களாகவும், விபசாரம் செய்பவர்களாகவும் மாறிச் சீரழியாமலும், சமுதாயவிரோதிகளாக மாறாமலும் காப்பாற்றி யிருக்கிறேன்! “
“அவர்களைக் காப்பாற்றும் வழி இதுவன்று, அப்பா! உங்கள் உண்மையான நோக்கம் அதுவாக இருந்திருந்தால் அவர்களை யெல்லாம் நீங்கள் வளர்த்துப் பள்ளிக்கும் அனுப்பி யிருந்திருப்பீர்கள்!”
“அந்த அளவுக்குச் செய்ய நான் ஒன்றும் மகாராஜா இல்லை! தவிர, அது அரசாங்கத்தின் வேலை! என்னைப் போன்ற தனி மனிதனின் வேலை யன்று.”
“ஓ! நாட்டின் சட்டத்துக்குப் புறம்பாகத் தெருக் குழந்தைகளின் அநாதைத் தனத்தை ஆதாயப்படுத்திக்கொண்டு பெரும் பணம் சேர்ப்பது மட்டும் தனி மனிதனின் வேலையா!” என்று கேட்டுச் சிரிக்கும் பிரகாஷ், “தான் எழுதிப் பரிசு பெற்ற கட்டுரையின் தலைப்பு “குழந்தைத் தொழிலாளிகள்” பற்றியது என்று சுமதி சொன்ன போது எனக்கு எவ்வளவு அவமானமாக இருந்தது, தெரியுமா? நான் பேச்சை மாற்றியது அவளை ஏமாற்றத்திலும் வியப்பிலும் ஆழ்த்தியது. மேற்கொண்டு அது பற்றி அவளுடன் உரையாடுவதை நான் தவிர்த்தேன்! அதனால்தான் நீங்கள் அது பற்றிக் கேட்டபோது அந்தப் பெண்கள் எது பற்றி எழுதினார்கள் என்பதை நான் கேட்கவில்லை என்று உங்களிடம் பொய் சொன்னேன்….” என்று முடிக்கிறான்.
”அவளை நான் நிராகரித்து விடுவேனோ என்கிற அச்சத்தால் நீ அப்படிச் செய்தாய்!”
“இப்போதும் நீங்கள் அவளை நிராகரிக்கலாம்தான்! ஆனால் என்ன நடக்கிறது என்பதைக் காத்திருந்து பாருங்கள்!”
“நீ ஒரு நன்றி கெட்ட மகன் என்பது எனக்குத் தெரியாதா என்ன!”
“சிறு குழந்தைகளைக் குரூரமாய் நடத்துவதையும், அவர்களால் அநியாயமாய் ஆதாயம் அடைவதையும் விட நன்றிகெட்டதனமாய் இருப்பது எவ்வளவோ மேலானது!”
அப்போது தொலைபேசியின் மணி அடிக்கிறது. கிஷன் தாஸ் பிரகாஷுக்குப் பதில் சொல்லாமல் ஒலிவாங்கியை எடுத்துப் பேசுகிறார். பிரகாஷ் எழுந்து தன்னறைக்குப் போகிறான்.
*********
…சுமதியும் சுந்தரியும் ஜெய்ப்பூரில் இருக்கும் ‘மீரா பாய் க்ளாஸ் ஃபேக்டரி’ எனும் பெயர்ப்பலகை தொங்கும் கண்ணாடித் தொழிற்சாலை நுழைவாயிலை அடைந்து நிற்கிறார்கள். சுமதி நீட்டும் பிரகாஷின் முகவரி அட்டையை வாங்கிப் பார்க்கும் காவலாளி உள்ளே இருக்கும் மேலாளருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியபின், அவரது உத்தரவின் பேரில், இருவரையும் தொழிற்சாலைக்குள் செல்ல அனுமதிக்கிறார். இருவரும் உள்ளே போகிறார்கள். மேலாளரின் அறை வாசலில் முக்காலி ஒன்றில் அமர்ந்திருக்கும் பியூனிடம் பிரகாஷின் முகவரி அட்டையைக் காட்டியதும் அவர் இருவரையும் உள்ளே செல்ல அனுமதிக்கிறார்.
இருவரும் உள்ளே வந்ததும் எழுந்து நிற்கும் மேலாளர், “குட் மார்னிங், லேடீஸ்! உட்காருங்கள்… நான் சேகர். எங்கள் எம். டி. மிஸ்டர் கிஷன் தாஸ் அவர்களின் மகன் மிஸ்டர் பிரகாஷ் உங்களை இங்கு அனுப்பியுள்ளதாய்க் காவலாளி தொலைபேசியில் தெரிவித்தார்….” என்கிறார்.
“குட் மார்னிங், மேனேஜர்! நான் சுமதி. இவள் என் தோழி சுந்தரி. இவளும் மிஸ்டர் பிரகாஷுக்கு அறிமுகமானவள்தான். அவர் கொடுத்துள்ள முகவரி அட்டை இதோ. பாருங்கள்…” எனும் சுமதியும் சுந்தரியும் உட்கார்ந்ததும் தாமும் உட்காரும் மேலாளார் அதை வாங்கிப் பார்க்கிறார்.
“தயவு செய்து அதன் பின் புறம் பாருங்கள், மிஸ்டர் சேகர்!”
“சுமதிதான் பிரகாஷின் வருங்கால மனைவி…” என்று சுந்தரி தெரிவித்ததும் மேலாளர் எழுந்து நின்று மீண்டும் வணங்குகிறார். பின்னர் உட்கார்ந்து அட்டையின் பின் பக்கம் பார்க்கிறார். அதில், ‘என் தோழியர் சுமதி, சுந்தரி இருவரையும் நம் தொழிற்சாலைக்குள் சுற்றிப் பார்க்க அனுமதியுங்கள். அவர்கள் வேண்டும் உதவியைச் செய்யுங்கள்’ எனும் தட்டெழுதிய குறிப்புக் காணப்படுகிறது.
“கண்டிப்பாக, மேடம்ஸ்! எங்கள் சின்ன எசமானரின் உத்தரவின்படியே ஆகட்டும்…”
“முதலில் நாங்கள் கண்ணாடியால் ஆன பொருள்கள் எப்படிச் செய்யப்படுகின்றன என்பதைக் காண விரும்புகிறோம்…”
“அப்படியே ஆகட்டும்….கங்கா! கங்கா!…..”
கங்கா எனும் அந்தப் பெண்மணி உள்ளே யிருந்து விரைந்து வந்து மேலாளரை வணங்குகிறாள்.
“கங்கா இங்கே பணி புரியும் இரண்டு எழுத்தர்களில் ஒருவர்….கங்கா! இவர்களை அழைத்துக்கொண்டு போய் நம் தொழிற்சாலை முழுவதும் சுற்றிக் காட்டுங்கள். எல்லா இடங்களையும். முதலில் இருவரையும் காண்டீனுக்கு அழைத்துச் சென்று சாப்பிட வைத்த பிறகு அதைச் செய்யுங்கள் …”
“நன்றி, மிஸ்டர் சேகர். ஆனால் எதுவும் வேண்டாம். வருவதற்கு முன்னால்தான் ஓர் ஓட்டலில் சாப்பிட்டோம்…… அது சரி, என்னென்ன கண்னாடிப் பொருள்கள் தயாரிக்கிறீர்கள்?”
“ஜாடி, தம்ப்ளர், குப்பிகள், முகம் பார்க்கும் கண்ணாடிகள், மேஜைக் கண்ணாடிகள், ஜன்னல் கண்ணாடிச் சட்டங்கள், பூவேலை செய்த கனத் துண்டுகள்….அதாவது பேப்பர் வெய்ட்கள்….”
“பூவேலை செய்த பேப்பர் வெய்ட்கள் செய்வதைப் பார்க்கவேண்டும். அதனுள்ளே எப்படி இப்படி யெல்லாம் பூவேலை செய்கிறார்கள் என்று நான் வியப்பதுண்டு….”
பின்னர் இருவரும் விடைபெற்றுக்கொண்டு எழுகிறார்கள். அப்போது சுவரில் தொங்கும் ஆளுயரப் படத்தைக் கவனிக்கும் சுந்தரி மெல்லச் சுமதியைத் தோளில் தட்டி அதைப் பார்க்குமாறு சைகை செய்கிறாள்.
“சுந்தரி! அந்தப் படத்தில் இருப்பவரைத்தான் நான் கொஞ்ச நாள் முன் ஹைதராபாதில் பார்த்தேன்.”
சுமதி, “அவர்தான் பிரகாஷின் அப்பா, மிஸ்டர் கிஷன் தாஸ்!” என்கிறாள்.
சேகர், “ஆமாம். கொஞ்ச நாளுக்கு முன் ஹைதராபாதில் நாங்கள் ஒரு கைவளையல் செய்யும் தொழிற்சாலையைத் திறந்தோம்…” என்கிறார்.
பொருள் பொதிந்த பார்வைப் பரிமாற்றத்துக்குப் பின் சுமதியும் சுந்தரியும் கங்காவைப் பின் தொடர்ந்து உள்ளே போகிறார்கள்.
jothigirija@live.com
- தொடுவானம் 173. அப்பாவின் அவசர அழைப்பு
- எனது ஜோசியர் அனுபவங்கள்
- ஒரு தவறான வாயில் வழியாக …
- பாட்டியின் சுருக்குப் பையும், பழைய செல்லாக் காசுகளும்…!
- கல்வி நிலையங்களும் விளம்பர (குறும்)படங்களும்
- இந்திய விண்வெளித் தேடல் ஆணையகம் முதன்முதல் மின்னுந்துவிசை விண்சிமிழ் சுமந்த அசுர ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவியுள்ளது
- ஆயா
- கலித்தொகை காட்டும் மகளிர் கற்புக் கோட்பாடு
- உமர் கயாம் ஈரடிப் பாக்கள்
- கவிதைகள்
- வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! – 16