நலவேந்தன் அருச்சுணன் வேலு
– மலேசியா –
“போச்சி…போச்சி…கிடைக்கக்கூ டாதுன்னு நினைச்சேனே…! ”
“ஏன் மனு கவலப்படுரே….? இது ஒரு நல்ல வாய்ப்பு….! இத நீ நல்லா பயன் படுத்திக்கனும்.இதனாலே நாம எந்த ஒரு நஷ்டமும் அடையப்போறதில்ல…”
“நீ கொஞ்ச சும்மா இரு இரேனு…”
“நான் சொல்லறதச் சொல்லிப்புட்டேன்….அதுக்கப்பற ம் உன் இஷ்டம்”
“ம்..ம்…”
கம்பியூட்ரை முடக்கி விட்டு,இருவரும் லேப்பில் இருந்து வெளியே வந்தனர்.மனுஸ்ரீயும் இரேனுகாவும் இடைநிலைப்பள்ளியில் நெருங்கியத் தோழிகள்.இருவரும் வெவ்வேறான பின்புலம் கொண்டவர்கள்.மனுஸ்ரீ ஒரு டாக்டரின் மகள்.இரேனுகா ஓர் ஆசிரியர் மகள்.இருவரும் ஒரே வகுப்பு என்ற வகையில் மட்டுமே ஒற்றுமை.
பள்ளி முடியும் நேரம்.இருவரும் வகுப்பை நோக்கி அவசரமில்லாத நடையில் செல்கின்றனர். மனுஸ்ரீ முகத்தில் கலவரம் மெல்ல தலைக்காட்டத்தொடங்கினாலும் அதனை வெளிக்காட்டாதத் தோரணையில் அவளது முகம்.இரேனுகா இந்த நாடகத்தைப் பார்த்தும் பார்காதவளாக இருந்தாள். சில மணித்துளிகளில் பள்ளி முடிந்து மாணவர்கள் தத்தம் வீடுகளுக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர்.
“சரி…மனு நான் கிளம்பிறேன்,அப்பாகிட்ட சொல்ல மறந்திடாதே,இன்னும் ரெண்டே வாரந்தான் இருக்கு…”
“ம்….ம்…”
மனுஸ்ரீ மனதில் பல கேள்விகள்! மனம் பயப்பிரதேசமாக உருப்பெற்றிருந்தது. மிகப் பெரும் மனத்தேடலின் பின் பிரகாசம் பெற்றிருந்தாள் ஒரு முடிவுடன்.அப்பா எதிர்பார்ப்புடன் காரில் வர,மிடுக்குடன் காரின் கதவைத் திறந்து அமர்ந்தாள் மனுஸ்ரீ.அப்பா தேசிய சேவையைப் பற்றி வினவ,அவள் அதை மறைத்துவிடுகிறாள்.நாட்களும் ஆமையின் சுயர்ஜீதமாகச் சென்று கொண்டிருந்தது.
ஒரு மாலை நேரம்,தேசிய சேவைக்கான அழைப்பினை போஸ்ட்மேன் அம்மாவின் கையில் தந்துவிட்டுச் செல்கிறார்.அப்பா அதனை வாங்கிப் படிக்கிறார். மனுஸ்ரீ மிகவும் வருத்தமடைகிறாள்!
“ஏன் மனுஸ்ரீ பொய் சொன்னே…!”
“எனக்குப் போகப் பிடிக்கலம்மா….! ”
“காரணம்…?”
“பயமா இருக்குமா…”
“பயப்பட ஒன்னும் இல்ல…. நீ தைரியமா போய்டு வா…!”
“முடியாது….”
“நான் அம்மாவா…? நீ அம்மாவா…? நான் சொல்றதே ஒழுங்க கேட்டு நட”
மனுஸ்ரீ அப்பாவைக் கவலையுடன் பார்க்கிறாள்.அவர் மோவாயில் கைவைத்தவாரே சோபாவில் அமர்ந்திருந்தார்.அம்மாவின் வசைபாடல் முடிந்தவுடன் அப்பா தனக்கு ஆதரவாகப் பேசியும் அம்மாவின் கட்டளைகளை மீறமுடியவில்லை.
“இந்த வாரம் நீ பேருந்து ஏறனும் அதற்க்குள்ள பயிற்சிக்குத் தேவையானப் பொருள்களை அப்பாவை அழச்சிட்டுப் போய் வாங்கிடு. எனக்கு நேரமில்லே..”.
நாட்கள் தெளிந்த நீரோடயாய் போனது.
சனிக்கிழமை.
மணி பத்து இருக்கும். கிள்ளானில் கூட்டம் அலை மோதியது. மனுஸ்ரீயும் அவளது அப்பாவும் ஒரு பேரங்காடியில் வேண்டா வெறுப்புடன் பொருட்களை வாங்கினர்.
“கவலப்படாதே அம்மா. நான் அம்மாகிட்ட பேசுறேன்”
“சரி….அப்பா….”
வீடு வந்து சேர்ந்தபோது மணி 11. அம்மா தொலைக்காட்சியில் சமையல் நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார்.அப்பா வாசலில் நுழைந்ததும் வாங்கிய பொருட்களை மனுஸ்ரீயிடம் கொடுத்துவிட்டு சோபாவில் அமைதியாக அமர்ந்தார். மெல்ல மனைவியிடம் பேச ஆரமித்தார்.
“மனு…தேசிய சேவைக்குப் போக வேண்டாம்”
“ஏன்?…மறுபடியுமா,எதாவது புதுநாடகம் ஆடுறாளா…?”
“அவள் ஒன்னும் சொல்லலே. எனக்குதான் மனு அந்தப் பயிற்சிக்குப் போறது பிடிக்கல…அவ்வளவுதான்”
“ஏங்க….. எத்தனை முறைதான் சொல்றது…?”
“போதும் உன் உபதேசம்”
“சரி…மனு அந்தப் பயிற்சிக்குப் போறது உங்களுக்கு ஏன் பிடிக்கலன்னு சொல்லுங்க….?”
“நீ நாளிதழ் வாசிக்கிறதே இல்லயா……?”
“முதல்ல என்ன விஷயம்னு சொல்லுங்க….?”
“போன வருசத்துல இருந்து நம்ம இந்தியப் பிள்ளைங்க பத்து பேருக்கு மேல தேசிய சேவைக்குப் போனவர்கள் இறந்துட்டாங்க….!”
“அதல்லாம் எதிர்பாராமல் நடந்த விபத்து…அவ்வளவுதான்!”
“முடியாது…முடியாது…! நீ சொல்ற மாதிரி நான் என் பிள்ளைய அனுப்பமுடியாது…!மனுவை அனுப்பிட்டு வயித்துல நெருப்பக் கட்டிக்கிட்டு இருக்க முடியாது. என்னாலே மனுவ பிரிஞ்சி மூனு மாசம் இருக்க முடியாது அவ்வளவுதான்…சொல்லிட்டேன்”
இருக்கையில் அமர்ந்து கொண்டே பதிலளித்த அம்மா ஆவேசமாய் எழுந்து கேள்வியை அம்புகளாகத் தொடுக்கிறார்.
“உங்கள ஒன்னு கேட்கிறேன். இத்தனை நாள் படிக்கிறா… நீங்க அவகூட பள்ளிக்குப் போனிங்களா…?”
“என்ன இப்படிப் பேசுற…..?”
“இன்னும் எத்தன நாளுக்குதான் பொம்பளப் பிள்ளைய வீட்டுக்குள்ளேயே பொத்திப் பொத்தி வளர்ப்பீங்க….? இந்த நவீன உலகத்துல பெண்கள இன்னும் இலை மறை காயாக வளர்த்தா பிறகு, நம்மப் பொண்ண கட்டிக்கிறவனும் காலம் பூற கேவலப்படுத்தவா….? என்னாலே அதலாம் பாத்துக்குட்டுச் சும்மா இருக்க முடியாது….!”
“அதற்குதான் அவளுக்குப் பிடிச்சதெல்லாம் செய்றோம்,சுதந்திரமும் கொடுக்குறோமே…?”
“ தயவு செய்து நான் சொல்றதக் கேட்டுப் பேசுங்க……!”
“இன்னும் நீ என்ன சொல்லப் போறே…..?”
“இது நாள் வரை தேசிய சேவைக்குப் போனவங்க எல்லாம் கெட்டாப் போனாங்க….? அவங்கெல்லாம் நல்லாதானே இருக்காங்க….?”
“மற்றப் பிள்ளைங்களப் பற்றி பேச வேண்டாம்….! நம்ம பிள்ளைக்கு அந்தப் பயிற்சி கஷ்டம்…..பேசாமே விட்டிடு..”
“என்னாலே முடியாதுங்க….பெத்தவ நான்….. எனக்கு தெரியும் இந்த சேவையைப் பத்தி….,இந்த காலத்திலே பொண்ணுங்களுக்கும் சம உரிமை வேணும்னுதான் அரசாங்கமே பெண் பிள்ளைகள தேர்ந்தெடுக்கறாங்க….! அதுமட்டு மில்ல நாடு இப்ப இருக்குற நிலைமையிலப் பெண்கள் எல்லா துறையிலும் தைரியமா பங்கு பெற்று வெற்றி பெறுகிறார்கள்…..!”
“ஆனா..அந்த நிலைமையும் மாறிப்போச்சு….! பொண்ணுங்களும் இப்ப சிகரேட், மதுபானம்,சூதாட்டம்னு அவங்களும் கெட்டுப்போய்ட்டாங்களே…,அதுக் கு நீ என்ன சொல்ற ….?”
“அது திசைமாறிப் போனவங்களும் கெட்டுப்போனப் பெண்களும் தான்,எல்லாரும் அந்தமாதிரிக்கிடையாது…”
“ஓ…..ஓ”
“இங்கப் பாருங்க ….நம்ம பிள்ளைய அப்படி வளர்க்கள, புரிஞ்சிக்கிங்க…! ”
“சூழ்நிலை எந்தப் பிள்ளையும் கெடுத்துடும்……! அப்புறம் எதற்கு நம்ம பிள்ளைய அந்தப் பயிற்சிக்கு அனுப்பனும் ?”
“அடக் கடவுளே…! முதல்ல நம்ம பிள்ள மேல நம்பிக்கை வைய்ங்க,அதுக்கப்புறம் இதப் பத்தி பேசுங்க…,இது நல்ல வாய்ப்பு. அங்க நம்ம நினைக்கிற மாதிரி இல்லைங்கே,நாட்டுப்பற்று,பொறுப் புணர்வு, நன்னெறி, ஒரே மலேசியா கோட்பாடு, எல்லா இன மாணவர்களிடையே வேறுபாடுயின்றி ஒற்றுமையை வழிவகுக்கிற மாதிரி நிறைய பயிற்சிகள்,மேலும் மனரீதியிலும் சரி,உளவியல் ரீதிதியுலும் மேம்பட நிறைய நடைமுறைப் பயிற்சிகளும், நல்ல சிந்தனைகளைத் தூண்டும் நடவடிக்கைகளும், இனப்பாகுபாடின் றி அங்குச் சொல்லித்தர்றாங்க….!
இன்னும் சரியா சொன்னா,எஸ்.பி.எம் பரிட்சைக்குப் பிறகு,மாணவர்கள் கண்டிப்பாப் போகவேண்டிய சேவை மையம் இது. காரணம் என்னான்னா பதினேழு வயசு தான் வாழ்க்கையோட அடுத்த வாசலோட முதல் படி. இந்த நேரத்துலே இந்த சேவையை நல்லபடியாகப் பயன்படுத்திக்கனும்.இதனால பிள்ளைகளுக்கு வாழ்க்கையில் வைக்கப் போற ஒவ்வொரு அடியும் மிகவும் கவனமா வைப்பாங்க….இப்படி முற்போக்கு சிந்தனையோட வாழ்ந்தா,நமது அடுத்தத் தலைமுறை எந்த ஒரு கெட்டச்செயலிலும் தன்னை இரையாக்கிக்கொள்ளாது! ”
அங்கு சில நிமிடங்கள் அமைதி நிலவுகிறது!
அப்பா அம்மாவின் சொல்லுக்குள் உறைந்தார்.அம்மா என்னைக் கோபப்பார்வை என் மீது வீசிவிட்டு வேகமாகச் சமையலறைக்குச் சென்றார்.பயமும் தயக்கமும் மனதை கஷ்டப்படுத்தியது.நான் எனது அறைக்கு விரைந்தேன்.மெத்தையில் வெறுமன உடலைக் கிடத்தினேன்.
“என்ன நடந்தாலும் சரி,எப்படியாது தட்டிக்கழிச்சிட வேண்டியதுதான். என்னமோ நாம பெரிய தப்பு செஞ்சமாதிரிதான் அம்மா பேசுகிட்டு இருக்காங்க! ச்சே..,அங்கப் போன நமக்கு தெரிஞ்சவங்க யாருமில்லே…,சாப்பாடும் ரொம்பக் கொடுமையா இருக்குமுன்னு சொல்றாங்க., பத்தாததுக்கு முடியெல்லாம் தோல்பட்டையே தாண்டக்கூடாதாம்! யாராவது நம்மல ஏதாவது செஞ்சிட்டாங்கனா…….? அய்யோ. ..கடவுளே…..!”
“ஹலோ…சொல்லு ? ”
“போறதுக்கு எல்லாம் ரெடிப்பண்ணிட்டியா மனு ?”
“ம்…ம்…!”
“என்ன குரலைக் காணோம்…… பயப்படுரியா மனு…….?”
“சரி…நீ எப்படி சந்தோசமா இருக்க ரேனு ?”
“நான் ஏன் பயப்படுனும்…..? தேசிய சேவைக்குப் போறதுக்கு எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு……!”
“அங்கு உனக்கு அப்படி என்னப் பிடிச்சிருக்கு….?.”
“ஏன்….? என்னா இல்லே..…? புதிய நண்பர்களை எல்லாம் சந்திக்கலாம், பல இனத்துடன் சேர்ந்து பழகலாம். வகை வகையான உணவுகள் உண்டு மகிழலாம். பயிற்சி மையத்தையொட்டி அழகான மலைகள் நிறைந்த காடுகள்,இயற்கையான நீரோடைகள்,தூய்மையானக் காற்று.வனத்தில் பறந்து செல்லும் அதிசயப் பறவைகள். இன்னும் மனதைக் கவரும் வித்தியாசமான எழில்தரும் இயற்கைக் காட்சிகள். இப்படியான இயற்கைச் சூழல் மாணவர்களை உற்சாகப்படுத்தும்.
மனமறிந்து மாணவர்களை வழி நடத்தும் அன்பான ஆசிரியர்கள் மாணவர்களைக் கவரும் விதத்தில் அமைக்கப்பட்டப் பாடத்திட்டங்கள்,அதனை மாணவர்கள் ஆர்வமுடன் பயிலும் விதத்தில் நடக்கும் போதனைகள் இன்னும் நிறைய இருக்கு!
அங்குப் போன நம்மள எல்லாரும் நல்லாப் பாத்துக்குவாங்க…! அங்கு இருக்கிற ஆசிரியர்கள்,இராணுவ வீரர்கள்! அவர்களின் கட்டொழுங்கு. அப்பப்பா…….அதெல்லாம் சும்மா சொல்லக்கூடாது அதை அனுபவிச்சுப் பார்க்கனும். அப்பதான் வாழ்க்கைனா என்னானு விளங்கும்!”
“ஆனா அங்க போனவங்க சிலர் இறந்துப்போய்டாங்களே…?”
“எல்லாருமா இறந்துட்டாங்க…..? நாமெல்லாம் படிச்சவங்க இதுக்கெல்லாம் போய் பயப்படலாமா…..? நல்லா யோசிச்சுப் பேசு…..!.”
ரேனுவின் தொடர்புக்குப் பின் மனம் மெல்ல அமைதியானது.
காலை மணி 7.30.
“அப்பா..கதவைத் திறங்கப்பா…”
“என்னமா…”
“மணி 8.30 பேருந்து ஏறனும்,சீக்கிரம் கிளம்புவோம்…! பெட்டியெல்லாம் சரிப்பார்த்துட்டேன்……அம்மா வே எழுப்புங்க !”
பெருமையாக இருந்தது அப்பாவுக்கு.
முற்றியது
- திருவிழா (ஐக்கூ கவிதைகள்)
- தொடுவானம் 174. நான் பார்த்த பருவ மங்கை
- எதிர்பார்ப்பு
- கவி நுகர் பொழுது-15 – கடங்கநேரியானின்,’யாவும் சமீபத்திருக்கிறது’
- வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! 17
- பெரு வெடிப்புக்குப் பின் உடனே பிரபஞ்சத்தில் நேர்ந்த உள்வீக்கம் [Inflation] மாபெரும் மர்மமா ?
- யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும்–16
- தமிழ்மணவாளன் கவியுலகம்
- பாரதி பள்ளியின் நாடகவிழா
- உமர் கயாம் ஈரடிப் பாக்கள்
- தமிழ்மணவாளனின் ,’உயிர்த்தெழுதலின் கடவுச்சொல்’, கவிதை நூல் குறித்த அறிமுகக்கூட்டம்
- சேவை
- சுப்ரபாரதிமணியனின் “ ஓ.. செகந்திராபாத்.. ” செகந்திராபாத் நினைவுக்குறிப்புகள்
- பிரான்சு நிஜமும் நிழலும் -II (கலை, இலக்கியம்) : 3 பதினேழாம் நூற்றாண்டு (தொடர்ச்சி)