தொடுவானம் 174. நான் பார்த்த பருவ மங்கை

This entry is part 2 of 14 in the series 18 ஜூன் 2017
பெண்ணைப் பார்க்க என்னை மலேசியா வரச்சொல்லி ஏர் இந்தியா விமான பிரயானச் சீட்டு அனுப்பியிருந்தார்கள். அதில் தேதி குறிப்பிடப்படவில்லை. எனக்கு விருப்பமான நாளில் பிரயாணம் செய்யலாம்.அதற்கு முன் சென்னை சென்று ஏர் இந்தியா அலுவலகத்தில் தேதியை நிச்சயம் செய்யவேண்டும்.

எனக்கு மலேசியா  சிங்கப்பூர் சென்றுவர ஆசைதான். அங்கு நண்பர்களைக் கண்டு வரலாம். லதாவையும் பார்க்கலாம். அவள் எந்த நிலையில் உள்ளாள் என்பது தெரியவில்லை. அப்பா சொல்வதுபோல் லாபீஸ் சென்று அந்தப்  பெண்ணையும் பார்த்து வரலாம். நான் சரியென்று அப்பாவிடம் கூறினேன்.  கோயம்புத்தூர் சென்று ஒரு மாதம் விடுப்பு எடுத்துக்கொண்டு ஊர் வருவதாக முடிவு செய்தேன். அதன்பின்பு சென்னை செல்லலாம்.

நான் மலேசியா செல்வது ஊரில் தெரிந்துவிட்டது.
” அண்ண. நீ திரும்பி வ்ருவாயா அந்த ஊரில் கல்யாணம் செய்துகொண்டு அங்கேயே இருப்பாயா? ” பால்பிள்ளை சோகத்துடன் கேட்டான்.

” இல்லை பால்பிள்ளை. பெண்ணை பார்க்கத்தான் போறேன். பார்த்துவிட்டு திரும்பிவிடுவேன். எனக்கு திருமணம் இங்குதான் நம் கோவிலில் நடைபெறும். நம் முன்னோர்கள் திருமணம் செய்துகொண்ட நம் அற்புதநாதர் ஆலயத்தில்தான் எனக்கும் திருமணம் நடக்கும். அதுஆசீர்வாதமாக இருக்கும். கவலை வேண்டாம். ”  அவனுக்கு ஆறுதல் சொன்னேன்.

அன்று மாலை தேநீர் கடை சென்றபோது சாமிப்பிள்ளை தாத்தா வீட்டைக் கடந்தபோது அவர் என்னை அழைத்தார். நான் சென்று திண்ணையில் அமர்ந்தேன்.

” தம்பி. நீ பெண் பார்க்க மலாயா செல்கிறாயாமே. அந்த பெண் என் தம்பி மகள்தான். கட்டாயம் அவளையே மணந்துகொள். நம் உறவு விட்டுப்போகக் கூடாது. அவள்தான் உனக்கு ஏற்ற பெண்.”  கெஞ்சாதக் குறையாகக் கூறினார். அவர்தான் பெண்ணின் அப்பா சாமுவேலின் அண்ணன். என் பாட்டியின் தம்பி. ஜெசியின் அப்பா.என் அப்பாவின் தாய் மாமன்.

அப்பா தொடர்புடைய உறவினர் அனைவருக்கும் இந்தப் பெண்தான் எனக்கு மனைவியாகவேண்டும் என்பதில் விருப்பம். ஆனால் அம்மா தொடர்புடையவர்களுக்கு இது பெரிய ஏமாற்றம். செல்லக்கண்ணு மாமாவுக்கு நிச்சயமாக மனதில் சோகம் நிறைந்திருக்கும் – நான் உமாராணியை மணந்துகொள்ள முடியாமல் போனதால்.என்மீது அளவற்ற பாசம் காட்டுபவர் செல்லக்கண்ணு மாமா. உமாராணியை நான் மணக்க சம்மதித்தால் எவ்வளவோ மகிழ்ந்திருப்பார் அவர். ஆனால் அது முடியாமல் போனது. அப்பா அதுபற்றி நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டார்.

நான் கோயம்புத்தூர் சென்று டாக்டர் பிச்சை ராபர்ட்டிடம் ஒரு மாதம் விடுப்பு கேட்டேன். அவர் வேண்டாவெறுப்புடன் சம்மதம் தந்தார்.  நான் அறையைக் காலிசெய்துவிட்டு மீண்டும் ஊர் புறப்பட்டேன். பெட்டி படுக்கையை வீட்டில் வைத்துவிட்டு தொடர் வண்டி ஏறி சென்னை எழும்பூர் சென்றேன். தங்கும் விடுதியில் அறை எடுத்தேன். ஆட்டோ மூலம் ஏர் இந்தியா அலுவலகம் சென்றேன். அதுவும் எழும்பூரில்தான் இருந்தது. பிராயணத் தேதியை நிச்சயம் செய்துவிட்டு ஊர் திரும்பினேன்,

பிரயாண ஏற்பாடுகள் துரிதமாக நடந்தன. நண்பன் ஜெயப்பிரகாசத்துக்கு கடிதம் எழுதினேன். ஒரு பெட்டியில் என் சாமான்களை  அடுக்கினேன்.

ஊரை விட்டு புறப்பட்ட்டபோது அப்பா மலர்ந்த முகத்துடன் வழியனுப்பினார். அம்மா முகம் வாடியிருந்தது.

தாம்பரத்தில் அத்தை வீட்டில் ஒரு நாள் தங்கினேன்.அத்தை வழக்கம்போல் அன்பாக வரவேற்று உபசரித்தார். நேசமணி தன் கணவனுடன் சென்னையில் இருந்தாள் .மறுநாள் அத்தை மகன் பாஸ்கரனுடன் மின்சார இரயில் மூலம் மீனம்பாக்கம் இரயில் நிலையம் சென்றேன். அங்கிருந்து வாடகை ஊர்தியில் விமான நிலையம் அடைந்தோம்.

மிகுந்த உற்சாகத்துடன் விமானத்தில் நுழைந்தேன். எந்த விதமான கவலையும் இல்லாத பிரயாணம்.  சிங்கப்பூரில் முன்புபோல் அப்பாவின் கண்டிப்பும் கண்காணிப்பும் கட்டுப்பாடும் இல்லை. லதாவைக் காணாலாம். நான் மருத்துவனாக பணியில் இருப்பது கேட்டு மகிழ்வாள். அவளுடைய உண்மையான நிலை என்ன என்பதைத் தெரிந்துகொள்ளலாம். ஏன் கடிதம் போடவில்லை என்பதையும் கேட்டு தெரிந்துகொள்ளலாம். நண்பர்கள் ஜெய்பிரகாசம், நா.கோவிந்தசாமி, பன்னீர்செல்வன், ஆனந்தன் ஆகியோரைக் காணலாம். இரவு எவ்வளவு நேரமானாலும் அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கலாம். லாபீஸ் சென்று அந்த பெண்ணையும் பார்க்கலாம். சிங்கப்பூர் மருத்துவக் கழகம் சென்று பதிந்துகொள்ளலாம்.பின்னாளில் சிங்கப்பூரில் மருத்துவராக பணிபுரியலாம். எல்லாமே இன்பமயம்!

பாயலேபர் சர்வதேச விமானநிலையத்தில் கமலா அக்காள், ஜெயப்பிரகாசம், கோவிந்தசாமி வந்திருந்தனர். ஜெயப்பிரகாசம் டெலிகாம் சிங்கப்பூரில் பணி புரிகிறான்.கோவிந்தசாமி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெறுகிறான்.
அக்காள் லாபீசிலிருந்து வாடகை ஊர்தி கொண்டுவந்திருந்தார். நான் மருத்துவனாகத் திரும்பியுள்ளதைக் கண்டு நண்பர்கள் பெருமை பட்டனர்  மனதார வாழ்த்தினர். அவர்களை பின்பு வந்து சந்திப்பதாகக் கூறிவிட்டு அக்காளுடன் லாபீஸ் புறப்பட்டேன்.அங்கு சென்றடைய எப்படியும் நான்கு மணி நேரமாகும்.சிங்கப்பூரிலிருந்து ஜோகூர் செல்ல இணைப்புப் பாலம் மூலம் சென்றபின்பு வடக்கு நோக்கிச் செல்லும் பிரதான வீதியில் ஆயர் ஈத்தம் வரை சென்று அங்கிருந்து யாங் பெங் வழியாக லாபீஸ் செல்லவேண்டும். வீதியின் இரு மருங்கிலும் இரப்பர் மரங்கள் செழிப்புடன் உயரமாக வளர்ந்திருந்தன. லாபீஸ் நெருங்கியபோது செம்பனை மரங்கள் வரிசை வரிசையாக அழகுடன் காட்சி தந்தன.

நாங்கள் வீடு வந்து சேர மாலையாகிவிட்டது. கார் வருவதைக் கண்டதும் சாமுவேல் தாத்தா ஓடிச் சென்று டேப் ரெக்கார்டரில் ”  மருமகளே மருமகளே வா வா.. உன் வலது காலை எடுத்துவைத்து வா .” என்னும் மங்களகரமான பாடலை ஒலிக்கச் செய்தார். நானும் அவ்வாறே மங்களகரமாக வீட்டினுள் நுழைந்தேன்.

கூடத்தில் ஜேசுதுரை , ஜீவானந்தம், எட்வர்ட், அன்புநாதன் இருந்தனர். இவர்கள் அந்த பெண்ணின் சகோதரர்கள். அவளுக்கு இரு அண்ணன்களும் இரு தம்பிகளும் இருந்தனர். நான் அவளைத் தேடினேன். அவளைக் காணவில்லை. நானும் அவள் எங்கே என்று கேட்கவில்லை. நான் சோபாவில் அமர்ந்திருந்தேன். சமையல் கட்டில் இருந்த அக்கா காப்பி கலக்குவது தெரிந்தது. அது தயார் ஆனதும் ஒரு அறையிலிருந்து வெளியில் வந்த அவள் காப்பியுடன் என்னிடம் வந்தாள். நான் அதை வாங்கிக்கொண்டு அவளைப் பார்த்தேன். குள்ளமாக இருந்தாள். குட்டைப் பாவாடை அணிந்திருந்தாள். நல்ல நிறம். அழகான வட்ட வடிவிலான சாந்தமான முகம். பதினாறும் நிறையாத பருவ மங்கையாகத் தோன்றினாள். அவளுக்கு அப்போது வயது பதினாறுதான். எனக்கு பத்து வயது குறைவானவள். அவளை அவ்வாறூ பார்த்த மாத்திரத்தில் எனக்கு பிடித்துவிட்டது. குறை சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அப்பாவின் தேர்வு சரியானதுதான். இந்த இளம் பெண்ணை வாழ்க்கைத் துணைவியாகப் பெறுவது நல்லது என்று தெரிந்தது.

இரவு உணவு தயார் செய்வதில் அக்காள் மும்முரமாக இருந்தார். அவளும் உதவுவது தெரிந்தது. உணவு பரிமாறுவதற்கு முன்பு அனைவரும் கூடத்தில் அமர்ந்து ஜெபம் செய்தோம். ஒரு ஞானப்பாட்டு பாடியபின் வேதாகமத்தில் ஒரு பகுதி வாசித்தோம். அதைத் தொடர்ந்து சாமுவேல் தாத்தா ஜெபம் செய்தார். அவர் என் பாட்டி ஏசடியாளின் உடன் பிறந்த தம்பி. அவரின் நிறமும் சாயலும் பாட்டியையே எனக்கு நினைவூட்டியது.

அவர் ஆழ்ந்த இறைப்பற்றுடைய கிறிஸ்துவர் என்றாலும் என்னைப்போன்ற ஒரு பகுத்தறிவாளர். பெரியார் கொள்கைகளில் ஈடுபாடுடையவர். முன்பு தமிழவேள் கோ.சாரங்கபாணியின் தமிழ் முரசில் தலையங்கம் எழுதும் பணியில் இருந்தவர். கண்டிப்பானவர்.  தொழிற் சங்கத்தில் மும்முரமாக இருந்தவர். கொஞ்சம் முன்கோபக்காரர். தமிழ் முரசிலிருந்து வெளியேறிய பின்பு மூவாரில் அச்சுக்கூடத்தில் பணிபுரிந்து வருபவர். தவறாமல் தினமும் தமிழ் பத்திரிகை வாங்கி படிக்கும் பழக்கம் கொண்டவர்.

அக்காள் கிரேஸ் கமலா லாபீஸ் தமிழ்ப் பாடசாலையில் ஆசிரியை. கமலா டீச்சர் என்று தோட்டத்துத் தமிழர்களால் அழைக்கப்படுபவர். இவரும் கண்டிப்பானவரே.

இவர்கள் லாபீஸ் ஈஸ்ட் ஆசியா கார்டன் பகுதியில் ஒரு மூலை வீட்டை வாங்கி குடியுள்ளனர். ஐந்து அறைகள் கொண்ட பெரிய வீடு. முன்புறம் அகலமான வராந்தாவும் வாசலும் இருந்தது. வீட்டின் வலது பக்கத்தில் பெரிய தோட்டம். அதில் நிறைய காய்கறிகள் விளைந்திருந்தன. புடலை, அவரை  கொடிகள் பந்தலில் படர்ந்திருந்தன. முருங்கை, கொய்யா, பப்பாளி, மா மரங்களும் இருந்தன.

மூலை வீடு என்பதால் கண்ணுக்கு எட்டிய தொலைவிலிருந்த பள்ளத்தாக்கில் செம்பனை மரங்கள் காட்சி தந்தன. மாலையிலும் இரவிலும் குளுகுளுவென தென்றல் வீசும். அமைதியான இடம். படிப்பதற்கும் எழுதுவதற்கும்  ஏற்ற இடம்.

இரவு உணவுக்குப் பின் சிறிது  நேரம் வெளியில் கொஞ்ச தூரம் நடந்து கடைதெருவுக்குச் சென்று வந்தேன். எனக்கு முதல் அறை ஒதுக்கியிருந்தார்கள். பிரயாணக்  களைப்பில் நன்றாக தூங்கினேன்.

காலையில் கமலா அக்காள் பள்ளி சென்றுவிட்டார்கள். அவர் லாபீஸில் மெல்வேல் தோட்ட தமிழ்ப் பள்ளியில் ஆசிரியை. அவர் தமிழகத்தில் தரங்கம்பாடியில் ஆசிரியை பயிற்சி பெற்றவர். திருமணம் ஆனபின்பு மலாயா வந்துவிட்டார்.  சாமுவேல் தாத்தா காலையில் கடைத்தெருவுக்கு சென்றுவிடுவார்.அங்கு சந்தையில் மீன், இறைச்சி, காய்கறிகள் வாங்கிக்கொண்டு ஒரு தமிழ் நேசன் தினசரியும் வாங்கி வருவார். அவர்கள் இருவரும் அவ்வாறு வெளியில் செல்லும்போது அந்த பெண்ணுடன் பேசும் வாய்ப்பு கிட்டும். அனால் யாராவது ஒரு தம்பி அப்போது கட்டாயம் வீட்டில் இருப்பான்.

அவள் பெயர் ஜெயராணி. அது அவளுடைய அப்பாவின் அம்மா பெயர். அன்பாயி என்று பிறந்து வளர்ந்தவர் கிறிஸ்துவரான பின்பு ஜெயராணி ஆனார். என்னுடைய பாட்டி ஏசடியாளின் தாயாரும் அந்த அன்பாயிதான். இந்த பெண் ஜெயராணி வீட்டில் ஒரே பெண் என்ற காரணத்தால் செல்லப்பிள்ளையாக வளர்ந்துவருகிறாள்.இவளை செல்லமாக ” ஆச்சி ” என்று அழைக்கின்றனர்.

இவ்வாறு அங்கிருந்த இரண்டொரு நாட்களில் அவளிடம் கொஞ்சம் கொஞ்சமாகப்  பேசலானேன்.  என்னுடன் சரளமாகப் பேச அவள் நாணம் கொண்டாள்.

நான் சிங்கப்பூர் செல்லவேண்டும் என்று அக்காளிடம் கூறினேன். அவர் செலவுக்கு பணம் தந்தார். நான் பேருந்து மூலம் ஆயர் ஈத்தாம் சென்று அங்கிருந்து ஜோகூர் பாருவுக்கு  பேருந்து ஏறினேன். அங்கு சிங்கப்பூர் விரைவு பேருந்து நின்றது. அதில் ஏறி குயீன்ஸ் ஸ்ட்ரீட் சென்றடைந்தேன். அங்கு எனக்காக கோவிந்தசாமி காத்திருந்தான். நான் வருவதை அவனுக்கு முன்கூட்டியே தொலைபேசியில் தெரிவித்திருந்தேன்.

( தொடுவானம் தொடரும் )

Series Navigationதிருவிழா (ஐக்கூ கவிதைகள்)எதிர்பார்ப்பு
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *