கவிநுகர் பொழுது-16 கவிஞர் பிருந்தாசாரதியின்,’எண்ணும் எழுத்தும்’, நூலினை முன்வைத்து

This entry is part 12 of 18 in the series 2 ஜூலை 2017

கவிநுகர் பொழுது-16
—————————————————–
தமிழ்மணவாளன்
——————————————————————————————————————————-
( கவிஞர் பிருந்தாசாரதியின்,’எண்ணும் எழுத்தும்’, நூலினை முன்வைத்து)
——————————————————————————————————————————-

’எண்ணும் எழுத்தும் கண்ணெணத் தகும்’, என்பது ஔவை மொழி. ’எண்ணும் எழுத்தும் கவிதையெனத் தகும்’, என்கிறார், தன் புதிய தொகுப்பான, “எண்ணும் எழுத்தும்’, மூலமாக பிருந்தா சாரதி.ஒன்றைச் செய்வது எவ்வளவு சிறப்போ அதனினும் பன்மடங்கு சிறப்பானது அதனைத் தொடங்குவது. பெரிதகன்று வெள்ளப் பெருக்கெடுத்தோடும் நதியின் பிறப்பு சிற்றூற்றாய் இருப்பினும் அதுவே மூலம். அதுவே வணக்கத்திற்குரியது. அத்தகைய தொடக்கம், இந்த எண் வழிக் கவிதைகளுக்கு எவ்வாறு அமைந்தது என்பதை அவர் முன்னுரையில் கூறுவது சுவாரஸ்யமானது.

‘பிரிவுத்துயர் தான் இக்கவிதைகளின் அடிநாதம்.எண்கள் அவருக்கு பிரிவின் வலியை அதிகமாக்குகின்றன.நீ, நான் என்பதெல்லாம் எண்களாக மாறுகின்றன.’, என்கிறார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்.
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதையாகவே அணிந்துரை வழங்கியிருக்கிறார்.அதில்,
பிருந்தா சாரதி எண்களைப் பற்றியே
எண்ணி எழுத்தாக்கியிருக்கிறார்
எண்ணையே எழுத்தாக்கியிருக்கிறார்
அவருக்கு மதிப்பெண்ணாக
பூஜ்ஜியத்தை வழங்குகிறேன்.
கவிக்கோ வழங்கும் மதிப்பெண் பூஜ்ஜியமா? ஆம். பூஜ்ஜியம் தான். ஏனெனில் கவிக்கோ இதே அணிந்துரையில்,
எண்களைவிட மதிப்புடையது
பூஜ்ஜியம் தான்
அதன் இடம் விசாலமானது
எல்லையற்றது
இறைவன் அங்கேதான் இருக்கிறான்.
எல்லையற்ற விசாலமான மதிப்பெண்ணை இவரின் கவிதைகளுக்கு வழங்குகிறார் என்பது எத்துணை மகிழ்ச்சி.இன்னும்சொல்லப்போனால் இறைவன் இருக்குமிடமாக்கக் கருதும் இடம் கவிக்கோவால் இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்பது எவ்வளவு சிறப்பு.
எண் குறித்து எழுதுவது எண் குறித்து எழுதுவதல்ல. எண்களின் வாயிலாக கவிமனத்தின் எண்ணத்தை எழுதுவது தானே. அவ்விதத்தில் எண் வழி, பிருந்தாசாரதி எழுத எடுத்துக்கொண்டிருக்கும் பாடு பொருள்கள் முக்கியமானவை.
இவரின் கவிதைகள் இயல்பு மொழிக் கவிதைகள். எளிய பதங்களின் மூலமாக பல நுட்பமான விஷயங்களைப் பேச முற்படுகிறார்.
ஒன்றை இரண்டாகப் பிரித்ததே
இரண்டும் ஒன்றாவதற்குத்தான்
வாசிப்பில் ஒரு எளிய செய்தியினைச் சொல்வதாகத் தோன்றினாலும் அதற்குள் இருக்கும் பிரிதல்Xஇணைதல் பற்றிய முரண் மற்றும் பயன் கவனத்திற்குரியவை.. ஒற்றையாய் இருப்பதில் சிறப்பென்ன இருக்கிறது. ஒன்றாய் இணைவதில் தானே சிறப்பு இருக்கிறது. இதனை உணருகையில் தான் ஒன்றைப் பிரிப்பது என்பது மீண்டும் இணைவதற்கான செயலின் முற்பகுதி என்பதையும் அதன் அவசியத்தையும் புரிந்துகொள்ளமுடியும்.
எரிந்து கொண்டிருக்கும்
இரண்டு ஊதுபத்திகள்
ஒன்றை ஒன்று ஊடுருவி
ஒன்று கலக்கின்றன
காற்றின் அந்தரத்தில்
புகை ரூபமாக
என்னும் வரிகள் விரிக்கும் தத்துவார்த்தவெளி அபரிமிதமானது.இரண்டின் பொருட்டு இரு ஊதுவத்திகள் எனக் குறிப்பிட்டாலும் எத்தனை ஊதுவத்திகள் எரிந்த போதும் எறிவதற்குமுன் ஸ்தூல வடிவில் தான் எண்ணிக்கையில் இருக்கின்றன. எரிந்து புகையாய் மாறி இவ்வளி மண்டலத்தில் மிதக்கிறபோது, எல்லாமொன்றாய் கலந்தபிறகு எந்தப்புகை எந்த ஊதுவத்தியின் புகையென பிரித்துணர முடியுமா.? பெருவாழ்வின் தத்துவம் இதுதானே. எரிந்த பின் எல்லோரும் சாம்பல் தான். அதற்குள் தான் எத்தனை குளறுபடிகளில் சிக்கிப் பேதலிக்கிறது இந்த மனிதமனம்.வாழ்வது என்பதே பெருங்கலை. கணக்கில் தோய்ந்த வாழ்க்கை வெறும் லாபங்களுக்காக அலையும்; நஷ்டங்களுக்காக துவளும். ஆனால் எவ்விதமாயினும் வாழ்ந்த வாழ்க்கையைக் கணக்கிட்டுப் பார்த்தால் மிஞ்சுவது என்ன?
இத்தகைய வாழ்வின் ஒட்டுமொத்தக் கணக்கே இவ்வளவுதான் என்பதை மிகச் சுருக்கமாக,
கூட்டிக் கழித்து வாழ்
பூஜ்ஜியம் என்று
புரிந்து கொண்டு போ
என்கிறார் பிருந்தாசாரதி.

பிறப்பு இறப்பு இரண்டுமே நம் கையில் இல்லை. காலம் அதைத் தீர்மானிக்கிறது.இரண்டுக்கும் இடைப்பட்ட பொழுதையே நம்மின் வாழும் காலமாய் வரையறுக்கிறோம்.அக்காலத்தில் நாம் ஈட்ட வேண்டியவை ஏராளம். உழைப்பின் வாயிலாக பொருள் ஈட்டிவிட முடியும். ஆனால் உள்ளத்தின் வாயிலாகவே மனிதர்களின் அன்பை ஆதரவை உறவை ஈட்ட முடியும். வாழும் போது புகழப்படுவது மட்டுமல்ல; மரணத்தின் போது என்னவாகப் பேசப்படுகிறோம் என்பது முக்கியம். பேரறிஞர் அண்ணாவின் மரணத்திற்கு வந்த மனிதர்களின் எண்ணிக்கை கின்னஸ் சாதனை படைத்தது எனில் அவர் மனித மனங்களை எவ்விதம் கொள்ளை கொண்டிருந்தார் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். அவ்வாறெல்லாம் கூட வேண்டாம்.
பிருந்தாசாரதி ஒரு கவிதையில்,
வாழ்க்கையில் வேறு எதையும் சம்பாதிக்கா விட்டாலும்
இந்த நாலு பேரையவது எப்பாடு பட்டாவது சம்பாதித்துவிடு
என்கிறார். நாலு பேர் என்று அவர் குறிப்பிடுவது எண்ணிக்கையல்ல. உயிர் பிரிந்த உடலத்தைக் கொண்டு அடக்கம் செய்வதற்குத் தூக்கிச் செல்ல அவசியமான நாலு பேர்.இல்லையென்றால் அனாதைப் பிணமாக மாறிவிடும் அபாயம் உண்டு.
நாலு பேரைக் கூடச் சம்பாதிக்காத வாழ்க்கை வாழ்வது நாலு காலில் வாழும் வாழ்க்கையாம். விலங்கு வாழ்க்கை.
ஐம்பூதங்கள் பற்றிய கவிதையில் ஒன்றோடொன்று உரையாடல் நிகழ்த்துவதாய் அமைத்திருப்பது சிறப்பு. காற்று,நீர்,நிலம்,நெருப்பு,ஆகாயம் ஐந்தும் ஒன்றுக்கொன்று நண்பனா எதிரியாவெனத் தத்தம் செயல் சார்ந்து பேசிக்கொண்டன.
எட்டாத தூரத்தில் ஏனிருக்கிறாய்?
ஆகாயத்திடம் கேட்டது நிலம்.

அருகருகே இருப்பவர்கள் தான்
நண்பர்களா?

ஆகாயம் கேட்ட பதில் கேள்வியில்
அர்த்தம் இருந்ததை
உடனே உணர்ந்தது நிலம்
வானிலிருந்து வந்த
மழை நீரில் குளிர்ந்து.

ஐம்பூதங்களின் இந்த
உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த
இயற்கை அன்னை
உடனே அனைத்தையும்
ஒன்றொடொன்று
இசைந்திடச் செய்தாள்
ஐம்பூதங்களின் இந்த உரையாடல் அவற்றின் பண்புகளின் பாற்பட்டு ஒன்றுக்கொன்று உடன் பட்டு அல்லது முரண்பட்டுப் போகும் தன்மை கொண்டு புனைவான உரையாடலாக அமைத்திருப்பது மட்டுமல்ல, அவ்வுரையாடல் அவற்றின் தனித்த தன்மைகளுக்கப்பால் ஒன்றோடொன்று இசைந்து செயல்பட இயற்கை அன்னைப் பணிப்பதாக நிறைவு பெறுவது தான் சிறப்பு.

எங்கிருந்தோ வந்தவர்கள் ஓரிடத்தில் பணிசெய்கிறோம். ஒருவருக்கொருவர் அறிமுகமாகிறோம்.ஒருவரின் வாழ்விலும் தாழ்விலும் முக்கியப் பங்கு கொள்கிறோம். வாழ்விலும் என்பதை விட தாழ்வினில் தான் ஒருவரின் அனுசரணை இன்னொருவருக்குத் தேவைப்படுகிறது. அதில் தான் ஒருங்கிணைப்பு கட்டாயமாகிறது. இணைய வேண்டியதன் சூழல் உருவாகிறது. பொதுவுடமைச் சிந்தனை முக்கியமாகிறது.
பிருந்தாசாரதி, இரட்டை மாட்டு வண்டி பற்றி ஒரு கவிதை எழுதுகிறார். ஒன்றோடொன்று எவ்வித சம்பந்தமும் இல்லாத இரண்டு மாடுகள் இரட்டை மாட்டு வண்டியில் பூட்டப்படுகின்றன. ஒன்றுக்கொன்று ஜோடி மாடாக மாறிவிடுகின்றன. மூட்டை மூட்டையாக ஏற்றும் சுமைகளை இழுத்துச் செல்லும் அவைகளுக்குக் கிடைப்பதோ சாட்டையடி. ஒரு சேர அனுபவிக்கும் துன்பும் ஒன்றிணைய வேண்டிய மனத்தையும் கட்டாயத்தையும் கொடுக்கின்றன.
தொழிலாளர்களின் மனத்தில் எழும் ஒற்றுமை உணர்வின் அடையாளமாகவும் தேவையாகவும் இந்தக்கவிதை என் கவனத்தைப் பெறுகிறது.
உன் துயரங்களை நானும்
என் வலிகளை நீயும்
வேறு யாரை விடவும் நன்கறிவோம் என்றாலும்
அருகருகே இருக்கிறோம்
என்பது மட்டும் தான்
வாயில்லா ஜீவன்கள் நமக்கிருக்கும் ஆறுதல்
துயருற்றிருக்கும் சமயத்தில் துயருற்றிருக்கும் சக உயிர் அருகில் இருக்கிறது என்பது எத்தனை ஆறுதல் தருவது என்பது துயருற்றிருப்போருக்கே அறிந்திடச் சாத்தியமானது.மானுட வாழ்க்கைக்குமானது.
ஆன்மாவின் சிலிர்ப்பில்
உயிர்த்தெழுகின்றன இறக்கைகள் இரண்டும்
உயரங்களின்
உன்னதம் நோக்கி
என்று எழுத முடிகிறது இவரால். உடல் தூக்கிப் பறப்பதல்ல இறக்கை. உயிர்த்தெழுந்து ஆன்மாவின் சிலிர்ப்போடு பறப்பது. அது வெறும் உயரத்தை நோக்கி என்னும் புறவெளி சார்ந்ததல்ல. உன்னதமான அகவெளி சார்ந்தது.
ககன வெளியின்
காந்தச் சுழலில்
தம்மை மறந்த லயத்தில்
அசைவேதுமன்றி
நீண்ட நேரம்
மிதக்கின்றன
ஆன்மாவின் சிலிர்ப்பில் உயிர்த்தெழுந்து உன்னதத்தை நோக்கிய உயரத்தில் பறப்பதை இப்படியான கவிதை மனத்தால் மட்டுமே தரிசிக்க முடியும் என்பதை நானும் கவிதைக்குள் காலமெல்லாம் லயித்துக் கிடப்பவன் என்ற முறையில் உறுதியாகக் கூறமுடியும்.

’பூஜ்ஜியம் பிறந்த கதை’,என்னும் கவிதையில் இதிகாசத் தொன்மம் சார்ந்த கதையாடலாக அதன் காரணத்தை அணுகுகிறார்.
பூஜ்ஜியத்திற்கு இவர் வரையறையொன்றினை உருவாக்குகிறார். கவிதையில் உருவாக்கும் புனைவு.
ஒன்றுமற்றதற்கு வட்டத்தை
குறியீடாக்கினான்
ஞானியருள் ஞானி
பூரணம் பொலியும் நிறைவும்
தொடங்கிய இடத்திலேயே முடிவதும்
வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும்
அமரத்துவமல்லவா?
ஏதேனும் செய்ய வேண்டுமெனில் அதற்காகவேணும் ஏதேனும் ஒன்று தேவைப்படுகிறது. ஒன்றும் இல்லாததை ஒன்றும் செய்ய முடியாது தானே.என்பதைப் பேசும் ,’ஒன்றும் இல்லாதது’, என்னும் கவிதை.
வரிவரியாய்ப் பின்னிக்கிடந்த
எழுத்துகளின் வலையில்
என்கை விரல் ஒன்று
சிக்கிவிட்டது
போன்ற நுட்பமான படிமங்களும் காணக்கிடைக்கின்றன.

‘வெற்றிடம்’, ‘முடிவிலி’, ‘அகம்’, மற்றும் ‘எண்ணும் எழுத்தும்’, போன்ற கவிதைகளைக் குறிப்பிடவேண்டும். நூலின் உள்ளோவியம் வரைந்த ஓவியர் இராம பழனியப்பனையும் பாராட்ட வேண்டும்

எழுத்தில் லயித்தவனுக்கு எண்கள் உவப்பின்மை யானவையாக இருப்பதே இயல்பு. ஆனால் கவித்துவத்தின் கிளை வழியெங்கும் எண்களைப் பயணிக்க வைக்கவும் இலக்குகள் அடையவுமான சாத்தியத்தை இத்தொகுப்பின் வாயிலாக பிருந்தாசாரதி உருவாக்கியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

Series Navigationநித்ய சைதன்யா கவிதைகள்ஹாங்காங் தமிழ் மலரின் ஜூன் 2017
author

தமிழ்மணவாளன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *