சித்தார்த்தனின் “உயிர்ச்சொல்” – நூல் விமர்சனம்

This entry is part 2 of 18 in the series 2 ஜூலை 2017


குமரி எஸ். நீலகண்டன்.

uyircholஉலகம் மிகவும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறது. அழகான உலகம் ஆபத்தின் விளிம்பில் நிற்கிறது. வானம், பூமி, காற்று, கடல், நெருப்பு, பனி, தாவரங்கள், விலங்குகள்,பறவைகள், நுண்ணுயிரிகள், மனிதர்கள் எல்லாம் உள்ளடக்கிய உலகத்தை ஒருவன் அழித்து கொண்டிருக்கிறான். அவன்தான் மனிதன்.
மனிதனின் ஆசை என்ற புயலில் வானம் கிழிந்து போய் கிடக்கிறது. காற்று விஷத்தில் தோய்ந்து கிடக்கிறது. கடலானது பிளாஸ்டிக், குப்பைகள், வேதிப் பொருட்கள் உட்பட்ட நச்சுக் கழிவுகளால் கருப்புக் கடலாகிக் கொண்டிருக்கிறது. நெருப்பானது காற்றின் இடங்களை கபளீகரம் செய்து கொண்டிருக்கிறது. பனி உருகி உருகி தன் அழுகையால் நிலங்களை கடலுக்குள் இழுத்துச் சென்று கொண்டிருக்கிறது. தாவரங்கள் அழிந்து கொண்டு பிளாஸ்டிக் வடிவங்களில் வீட்டில் சிலைகளாகி வருகின்றன. விலங்குகள் உறைவிடங்களின்றி அழிவின் விளிம்பில் சரணாலயங்களில் சரண்டைந்து விட்டன. கூடுகளில்லா பறவைகள் அலைபேசி கோபுரங்களில் அல்லாடிக் கொண்டிருக்கின்றன. நுண்ணுயிரிகளெல்லாம் நோய் கூறுகளாய் மனிதனை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. இந்தச் சூழலில் எஞ்சி இருக்கும் உலகையும் மனித யுகத்தையும் காப்பாற்றும் உரத்த உள்ளுணர்வோடு வந்திருக்கும் நூல் ‘உயிர்ச் சொல்’. இதன் ஆசிரியர் முனைவர்.த.சித்தார்த்தன் ஊடகப் பணியாளர், அறிவியல், இலக்கியம், கல்வியியல், உளவியல் துறைகளில் பயின்றவர்.
உயிர்ச்சொல் என்னும் இந்நூல் இன்றைய உலகம் எப்படி இருக்கிறது, எத்தகைய ஆபத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதை உரிய உதாரணங்களுடன் விளக்குகிறது. பூமியின் 20 விழுக்காடு மனிதர்கள் 80 விழுக்காடு வளங்களை உறிஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். பாலையாகிக் கொண்டிருக்கும் தமிழகத்தை காப்பாற்ற தென்னக நதிகளை இணைக்க வேண்டியதன் அவசியத்தை அழகாக கூறி இருக்கிறார் சித்தார்த்தன். ஊருக்குள் நிலத்தை உப்பாக்குகிற கடலும், வீணான உணவால் வீணாகும் சூழலும், மலிவான பனை எண்ணெய்க்காய் அழியும் மழைக்காடும், விரயமாகும் மின்சாரத்தால் சுடுகிற மின் பற்றாக்குறையும் நம்மை சிந்திக்க வைக்கிறது. தவித்த வாய்க்கு இனி தண்ணீர் கிடைக்குமா என அறைகூவல் விடுகிறது உயிர்ச்சொல்.
1,64,280 சதுர கி.மீ. பரப்புள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் காப்புக் காடுகளும், பாரம்பரிய பெருமைக்குரிய இடங்களும் வெறும் 16,902ச.கி.மீ பரப்பில் மட்டுமே இருக்கின்றன. யுனெஸ்கோவினால் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப் பட்டிருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையைக் காப்பாற்றப் போவது யார் ? என்று கேட்கிறது இந்நூல். மரங்களுக்கு உயிர் உண்டு. அவைகளுக்கு உணர்ச்சியும் உண்டு என்பதை கண்டு சொன்னவர் விஞ்ஞானி போஸ் என்பவர். மரங்களுக்கு உணர்ச்சி இருக்கிறது. மனிதர்களிடம் அது இருப்பதாக தெரியவில்லையே என உணர்ச்சிபூர்வமாக கேட்கிறார் ஆசிரியர்.
அழகான உலகம் பற்றி அறிவியல் பூர்வமான அற்புத த் தகவல்கள் இந்நூலில் நிரம்பிக் கிடக்கின்றன. பாரம்பரியமாக இயற்கையான முறையில் நமது சுற்றுச்சூழலை பாதுகாத்த முறைகள் இந்நூலில் அழகாக மேற்கோளிடப் பட்டுள்ளன. தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் பெரிய பானைகளில் மழைநீரைப் பிடித்து அதில் தேத்தாங்கொட்டையை அரைத்துக் கலந்து இறுக மூடி வைத்திருந்து பஞ்சம் ஏற்படும் காலங்களில் பயன்படுத்திக் கொள்கின்றனர். இப்படி பாதுகாப்பதால் தண்ணீர் கெட்டுப் போவதில்லை. இப்படி பலரும் அறியாத தகவல்கள் நிரம்ப இருக்கின்றன.
உலக மக்கள் தொகையில் 60 விழுக்காடு வாழக் கூடிய ஆசிய கண்டத்தில் உலகிலுள்ள மொத்த நீரில் 36 விழுக்காடு தான் இருக்கிறதாம். குறைந்த நீரில் கூடுதல் மக்கள்தொகை, அதனைத் தொடர்ந்து நீர் பங்கீட்டு பிரச்சனைகளென எல்லாவற்றையும் சொல்கிறார் சித்தார்த்தன். ஹைட்ரஜன் பேருந்தை பற்றியும் தெரிந்து கொள்ள இயல்கிறது. இந்தியாவின் இயற்கை வளங்களை உலக வளங்களோடு ஒப்பிட்டு சித்தரித்திருக்கிறார்.
குப்பைக் கிடங்கு போல் இருந்த சூரத் நகரம் இரண்டே ஆண்டுகளில் சண்டிகருக்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது தூய்மையான நகரமாக ஆனது என்ற விந்தையைச் சொல்லி நமக்கு ஆறுதலுடன் தன்னம்பிக்கை தருகிறார் சித்தார்த்தன்.
இந்நூலில் பூனையின் வாழ்க்கையும் தெரிகிறது. பூநாரையின் நிலையும் தெரிகிறது. மொத்த த்தில் கேள்விக்குறியாய் இருக்கும் மனித வாழ்க்கை தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கான உயிர்ச்சொல்லாக இந்த நூல் இருக்கிறது. உலக சுற்றுச் சூழலைப் பற்றி பத்தாயிரம் பக்கங்கள் படித்து நாம் உள்ளுணர்ந்ததைவிட அதிகமாய் இந்த 128 பக்கத்தில் முழுமையாய் பெற முடியும். ஒவ்வொரு மனிதனும் இந்த நூலைப் படித்தால் அவனது அடங்காத ஆசைகளெல்லாம் இயற்கையின் அன்பில் அடங்கிப் போகும்.
நூல் – உயிர்ச்சொல் (128 பக்கங்கள்)
விலை – ரூ 100
முகவரி – மேன்மை வெளியீடு, 5/2, பெர்தோ தெரு, ராயப்பேட்டை, வி.எம்.தெரு (கில் ஆதர்ஷ் பள்ளி அருகில்), சென்னை – 600 014, தொலைபேசி – 044 28472058,

குமரி எஸ். நீலகண்டன்
204/432, D7, பார்சன் குரு பிரசாத் ரெசிடென்ஷியல் காம்ப்ளக்ஸ்,
டி.டி.கே சாலை,
ஆழ்வார் பேட்டை,
சென்னை – 600 018
அலைபேசி எண் – 9444628536

Series Navigationயானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும்–17வெய்யில்
author

குமரி எஸ். நீலகண்டன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *