‘நீங்காத நினைவுகள்’ சிறுகதைத் தொகுப்பு வெளியீடு

author
0 minutes, 1 second Read
This entry is part 11 of 16 in the series 9 ஜூலை 2017

மணிமாலா
 Sopca-Cday-Vanee-2017
கடந்த வெள்ளிக்கிழமை 30-06-2017, கனடாவில் வசிக்கும் தமிழ் பெண்கள் தமிழில் எழுதிய சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து பீல் குடும்ப மன்றத்தினர் (SOPCA) ஒரு நூலக வெளியிட்டிருந்தனர். கனடாவின் 150 வது பிறந்த நாளைக் கொண்டாடும் இத்தினத்தில் தமிழ் பெண்கள் எழுதிய ‘நீங்காத நினைவுகள்’ என்ற இச் சிறுகதைத் தொகுப்பையும், சொப்கா மஞ்சரியையும் வெளியிடுவதில் பெருமைப்படுவதாக இச் சிறுகதைத் தொகுப்பை மிஸசாகா அடல்ட் சீனிய சென்ரரில் வெளியிட்டு வைத்த பீல் குடும்ப மன்றத்தின் உபதலைவரும், இந்த நூல்களின் தொகுப்பாசிரியருமான எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டார். முதற் பிரதியை பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட வைத்திய கலாநிதி கோபி பிரசாந்தன் அவர்களும் சிறப்புப் பிரதிகளை மன்றத் தலைவர் சட்டத்தரணி வாணி செந்தூரன் அவர்களும், மிஸசாகா நகரமன்ற அங்கத்தவர் சூ மக்பெடன் அவர்களும், மிஸசாகா நகரமன்ற அங்கத்தவர் றொன் ஸ்ராறா அவர்களும், எழுத்தாளர்களின் சார்பில் ஜெயசீலி இன்பநாயகம் அவர்களும் மற்றும் சில பிரமுகர்களும் எழுத்தாளர் குரு அரவிந்தனிடம் இருந்து பெற்றுக் கொண்டனர்.
 Sopca-5-2017DSC_0207
பல்வேறு வயதுடைய பெண்கள் எழுதிய, அவர்களின் எண்ணக் கருக்களைக் கொண்ட, இளமையும், முதுமையும் கலந்த சிறுகதைத் தொகுப்பாக இச் சிறுகதைத் தொகுப்பு அமைந்திருப்பது மட்டுமல்ல, கனடாவில் இருந்து வெளிவரும் தமிழ் பெண்களின் முதலாவது சிறுகதைத் தொகுப்பு என்ற பெருமையையும் பெற்றிருக்கின்றது. புலம் பெயர்ந்து வந்த பெண்கள், கனடாவில் பிறந்த பெண்கள், பல்கலைக்கழக மாணவிகள் என்று பல தரப்பட்ட தமிழ் பெண்களின் ஆக்கங்களும் இச் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றது.
இந்நூலில் இடம் பெற்ற இலக்கிய ஆர்வலர் முனைவர் பார்வதி கந்தசாமி அவர்கள்pன் வாழ்த்துச் செய்தியில், ‘இச் சிறுகதைத் தொகுப்பு கனடாத் தமிழர்களுக்கு, குறிப்பாகத் தமிழ்ப் பெண்களுக்கு மிகுந்த பெருமையைத் தருவதாகும். படைப்பிலக்கியத்திலும் முன்னணியில் திகழ வேண்டும் என்ற எண்ணக் கருவைச் சுமந்து கனடாவின் 150வது வருடக் கொண்டாட்டத்திற்குத் தங்கள் படையல்களைத் தமிழ்ப் பெண்கள் சமர்ப்பித்திருக்கிறார்கள். இளமையும் முதுமையும் தொடுக்கும் மலர்கள் மணம் கமழ்பவையாக உள்ளன. இக்கதைகள் எங்கள் தொப்பூழ்க் கொடிகளைத் தொடுக்கும் செழுமை வாய்ந்தவை. சொப்காவின் இந்த முயற்சி மேலும் மேலும் புதிய ஆக்கங்களைப் பிரசவிக்கவேண்டும் எனவும் பெண்களை ஆக்க இலக்கியத் திறமையுள்ளவர்கள் எனத் தமிழ் உலகம் கூவிப் பெருமைப்பட வேண்டும். படையல் செய்த அனைத்துப் பெண்களையும், இந்த சிறுகதைத் தொகுப்பைத் தொகுத்து வெளியிட்ட எழுத்தாளர் குரு அரவிந்தனையும் பூமழை சொரிந்து வாழ்த்துகிறேன்’ என்று குறிப்பிட்டிருக்கின்றார்.
கனடிய மண்ணில் சுமார் நாற்பது வருட காலச் சரித்திரத்தைக் கொண்ட தமிழ் இனத்தைச் சேர்ந்த பெண்களும், அவர்களின் புதிய தலைமுறையினரும் தங்கள் எண்ணக் கருக்களைக் கதைகளாக்கி இருக்கின்றார்கள். கனடிய தமிழ் இலக்கியத்தில் முக்கிய ஆவணமாக இச் சிறுகதைத் தொகுப்பு நிலைத்து நிற்கும் என்பதில் ஐயமில்லை.
 —–
Series Navigationஉமர் கயாம் ஈரடிப் பாக்கள்மொழிவது சுகம் 8ஜூலை 2017
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *