சீனியர் ரிசோர்ஸ்

This entry is part 15 of 15 in the series 23 ஜூலை 2017

 

குளிர் அறையிலும் லேசாக வியர்ப்பது போல் இருந்தது சபேசனுக்கு. அவ்வறையில் அம்மூவரை தவிர வேறு யாரும் இல்லை.
“என்னங்க இப்படி பண்ணீட்டீங்க! ..நீங்க    சீனியர் ரிசோர்ஸ் ன்னு தானே ஆன்சைட்டுக்கு அனுப்பி வைச்சோம்!” என்று   ஆரம்பித்தார் வட்ட மேசை சுற்றி உட்கார்ந்திருந்த இரண்டு அதிகாரிகளில் ஒருவர்.

சபேசன் இதற்கு இரண்டு வரிகளில் பதில் சொல்ல இயலாது.. ஆன்சைட்டில் நடந்த விவரத்தை சொல்லி புரிய வைக்க வேண்டுமென யத்தனித்து
“அங்கே என்ன நடந்துச்சுன்னா..” என ஆரம்பிக்கும் போதே   முழு கதையும் கேட்கிற ஆர்வமில்லாதவர் போல் தலை அசைத்தார் மூத்த அதிகாரி.அப்போதே தளர்ந்துவிட்ட தன் குரலை ஒருவாறு சரிச் செய்யதபடி, சபேசன்
தன்னை ஒருங்கிணைத்து “பேட்ச் ஜாப்க்கான எல்லா விவரங்களையும் இ-மையிலிலும் போனிலும் தெரியப்படுத்தி விட்டு , தொடர்ந்து மானிடர் செய்ய வேண்டும் ,இந்த் ஜாப் மிக முக்கியமானது என்று சொல்லிவிட்டு தான் தூங்கப் போனேன்.
கடைசியில் ஆப்ஷோரிலே   இவங்க லாக் பையிலை பார்ககாமல்   ஜாப்  நின்று போனது தெரியாமல் ,ஜாப் முடிய வேண்டிய  நேரத்திற்கும் முப்பது நிமிடம் கழித்து என்னை வோர்க் போனில் தொரட்ந்து கால் செய்துவிட்டு  ,
அமெரிக்காவில் அப்போது இரவு நேரம் என்று அப்பறமா தோணி  மொபையிலில் அழைக்கிறார்கள் .இதிலேயே முக்கால் மணி நேரம் போயிடுச்சி ,நான் வந்து கனக்ட் செய்து சரி செய்ய பத்து நிமிஷம்
ஆயிடுச்சு .அவ்வளவு தான், கலைண்ட் எஸ்கலேட் பண்ணிட்டான் !”

“அவங்களையும் விசாரிப்போம். அதெல்லாம் சரி.. ஆனா ஆப்ஷோரிலே புது ரிசோர்ஸ் ,அதுவும் சின்ன பசங்க.. நீங்க தான் இன்னமும் கவனமாக பார்த்து இருந்திருக்கனும்.
இந்த எஸ்கலேசனால பெரிய இம்பேக்ட்,சபேசன் ” என்ற மூத்த அதிகாரி, இளம் அதிகாரியை பார்த்து
“சரி அடுத்தது என்ன ? ஆர்.சி.ஏ கேட்பாங்க..ரெடி பண்ணுங்க.. ” எனச் சொல்லி எழுந்தார்.

ஏதோ சொல்ல வந்த சபேசனை இடைமறித்து ,அது வரை அமைதியாய் இருந்த இளம் அதிகாரி , “ சரி இனிமேல் இப்படி நடந்துக்காம பார்த்துக்குங்க..” என்றார்.
அமைதியாய் இருந்ததனால் இவர் நம்மை புரிந்துக் கொண்டிருப்பார் என நினைத்திருந்த சபேசன் ,இதைக் கேட்டதும் இனி பேச ஒன்றும் இல்லை என்று எண்ணி அவரும் எழுந்து சீட்டில் வந்து அமர்ந்தார்.

சீட்டில் வந்து அமர்ந்தும் சபேசனின் மனசு ஏதோ கணத்தது .மதியம் மூன்று தான் ஆகிறது. வீட்டுக்கு போய் விடலாமாயென யோசித்தார்.
வெளியே வந்ததும் கிளம்பினால்  தனக்கு சகிப்புதன்மையில்லை ஆட்டிடுயூட் பிரப்ளம் என சொல்லி விடுவார்கள் என நினைத்து காபி அருந்தலாம் என காபி அறைக்கு வந்தார்.

அங்கே அபிநந்தனைக் கண்டதும் ”ஹலோ” என்று கைக் குலுக்கிக் கொண்டனர்.
“என்னங்க.. யூ.ஸ்க்கு லாங் டேர்ம் போயிருக்கிறதாச் சொன்னாங்க..அதுக்குள்ளே இரண்டு மாசத்திலே வந்துட்டீங்க..
வந்துட்டீங்களா.. அனுப்பிச்சிடாங்களா ? என  அருகே  சாய்ந்தபடிக் சிரித்துக் கொண்டேக் கேட்டார். சிரிப்பில் எந்த குத்தலும் இல்லை.
உண்மையான வேடிக்கை மட்டும் இருந்தது.

“நானா எங்கேயும் கேட்கிறது இல்லைங்க. அவங்களா அனுப்பி வைச்சா போயிடறது.இங்கேயிருந்து அங்கே போனாலும் சரி, அங்கேயிருந்து இங்கேனாலும் சரி” என்றார் சிரித்திக் கொண்டே சபேசன்.

இருவரும் சிறிது நேரம் வேறு சில விசயங்களை பற்றி பேசி சிரித்ததில் மனம் லேசானது சபேசனுக்கு.

இந்தியா திரும்பியதிலிருந்து இன்னமும் பிராஜக்ட் கிடைக்காததால் ,பெஞ்ச் எனச் சொல்லபடுகிற வர்க்கத்துக்கு தள்ளப்பட்டார் சபேசன்.
முதல் ஒரு மாதம் வரை பிராஜக்ட் இல்லாவிட்டாலும் முழு சம்பளம் கிடைக்கும். இரண்டாவது மாதமும் கிடைக்கா விட்டால் ,அரை சம்பளம் தான், பெஞ்ச் வர்க்கத்தினருக்கு.

ஆகையால் வேலை என்று பெரிதாக ஒன்றும் இல்லை இன்று. ஐந்தரை ஆனதும் வீட்டுக்குப் புறப்பட்டார்.
வீட்டில் குழந்தைகள் டீச்சர் விளையாட்டு விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.  பெஞ்ச் மேல் நிற்கிற தன்னை பார்த்து, இவர்களின் எதிர்காலத்திற்கு பதில் சொல்ல சொல்லி குச்சியை தட்டிக் கேட்பது போல் இருந்தது.

வெளியே வராந்தாவில் நின்று அந்தி சூரியனை ஏந்தும் வானத்தைப் பார்த்தார். இளம் சிவப்பு வானத்தின் பின்னணியில் பறவை ஒன்று படபடக்காது ஒய்யாரமாக சுற்றிக் கொண்டிருந்தது, இருக்கிற
வேகத்திலேயே பெடல் செய்யாமல் சைக்கிளில் சுற்றி மகிழும் சிறுவனைப் போல..

அக்கணத்தில், துரத்தியே பழக்கப்பட்ட காலமும் மௌனமாகி நின்றது மோனத்தில்.

அமைதியை அள்ளி பருகிய நிச்சலனத்தில் கணிணி முன் வந்து அமர்ந்தார். தனக்கு மிக பிடித்தமான ,சுய ஆர்வத்தில் தயார் செய்கிற மானிடர் டூலின் வேலையில் மும்முரமாக இறங்கினார்,
அப்பளிகேஷனில் தற்போது இருக்கிற மானிடர் டூல் ,தேவையான தகவலை தேவையான நேரத்தில் தருவதில்லை . சரி ,இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என தோன்றி ஆரம்பித்தது.
நல்ல பொழுது போக்காக மாறி இருந்தது.

மறுநாள் “களொடு” என்ற புது தொழில்நுட்ப பயிற்சியில் கலந்துக்க சொல்லி இருந்தார்கள். பெஞ்சில் இருப்பவர்கள ,ஒன்று பயிற்சியில் கலந்துக்கனும் ,இல்லை பயிற்சி தரணும் மற்றவர்களுக்கு.
மேகம் என்பதறகான ஆங்கில சொல்லில் இப்போது கணிணி உலகத்தில் பிரபலமாகி வரும் ஒரு தொழில் நுட்பம். விளாவாரியாக  அத்தொழில்நுட்பத்தை பற்றி பேசினார் அதை நடத்துபவர்.
எதற்கு..எதற்காக.. எதற்கெல்லாம் என்று பேசினார் ஆனால்  ஒரு பிராஜகட் என்று போனால் இதையொட்டிய என்ன மாதிரியான வேலை இருக்கும்,அதை எப்படிச் செய்வது என்பதற்கு அவர் வருவதாய் இல்லை.

அருகில் அமர்ந்திருந்த திலீப் “என்னங்க சொல்றாரு?” என கொஞ்சம் நக்கலாக கேட்டார்.

”ஆங்.. களொடில் இறங்கி பிளானை தள்ளலாம்..ங்கிறாரு..”  என்றார் சபேசன்.

திலீப் தலை குனிந்தப்படி பலத்து சிரித்தார்.

தேநீர் இடைவெளியில் , நிதின்,அதூல் தென்பட்டார்கள் . ”ஹலோ அங்கிள் ” என்று ஆரம்பித்தான் அதூல்.
அங்கிளா ! என்று சபேசன் கேட்டடதும் சுதாரித்து ஏதோ சொல்ல வரும் போதே பின்னால் மிருதுளா வருவதை பார்த்து ,வயதானவர்களிடம் பேசிக் கொண்டிருந்தால் , தன் இமேஜ் அவள் முன்னால் பாதிக்கும்
என்பதுப் போல சன்னமாக ஒதுங்கிப் போனான்.

சபேசன் தீலிப்பிடம் ”அவங்களாவது ..  சீனியர் ரிசோர்ஸ் ன்னு சொல்லி சொல்லியே,ஹார்பிக், டேட்டால் எல்லாம் ஊத்திக் கழுவி விட்டு அனுப்புவாங்க..
காலேஜ்லேயிருந்து பிரஷ்ராக வந்த இவனுங்க .. நம்மளை சீனியர் சிடிஷனாகவே ஆக்கிடுவானுங்க போல இருக்கே! அங்கிள்..ங்க்கறான்!”

”சரி விடுங்க ,சபேசன்” என்ற தீலிப்பிடம் பேசிக் கொண்டே மீண்டும் பயிற்சி அறைக்குள் நுழைந்தனர்.

இப்படியாக ஏதோ ஒரு வகையில் இரண்டு வாரம் கழிந்த பின்பு ,டெக் சிம்போசியம் ஒன்று நடப்பதாய் அறிவிப்பு வந்தது, சி,இ.ஓ முதல் முக்கியமானவர்கள் பங்கேற்பார்கள் என்று.
தான் தயார் செய்த மானிடர் டூலை முன் வைக்கலாம் என முடிவுச் செய்து அதற்கான வரைவையையும் அமைத்து , அந்நாளன்று எல்லோர் முன்பு விவரித்தார்

எதிர்பார்த்தற்கு மேல் அளவுக்கு அதிகமான வரவேற்பு பெற்றது. இந்த டூலுக்கு பெடண்ட் எடுக்கலாம் என்கிற அளவுக்கு பேசினார்கள்.
சி,இ.ஓவின் பாராட்டு உரையில், சபேசன் பெயரை குறிப்பிட்டு ,இது தான் வால்யு ஆட் என்கிற , செய்கிற சேவையில் மதிப்பு சேர்ப்பது .
சபேசனை முன்மாதிரியாக கொண்டு மற்றவர்களும் முக்கியமாக ஜுனியர்கள் , கம்பெனியை மேல் எடுத்து செல்ல வேண்டும் என்றுச் சொல்லி பரிசும் அளித்தார்.

அவ்வளவு தான்.. கூட்டம் முடிந்ததும் , அதுவரை பார்த்து பார்க்காமல் ஒதுங்கி போன பலரும் ,சபேசன் அருகில் வந்து ஏதோ ஒரு விதத்தில் ,தனக்கும் சபேசனுக்கும் தொடர்புண்டு எனக் காட்டிக் கொள்வதில் ஒரு சின்ன
பெருமிதம் கொண்டார்கள். ஆரம்பிச்சது எப்போ ,ஏது என பல கேள்விகள் கேட்டார்கள் .. நாம் மறுபடியும் சந்திக்கனும் என்றார்கள் சிலர்.
எல்லாவற்றையும் விட  சபேசனை மிகவும் ஆச்சரியப்படுத்தியது, மிருதுளா முன் சன்னமாக ஒதுக்கிய அதூல் இப்போது தன்னோடு சேர்ந்து நின்று செல்பி எடுப்பதில் தன் இமேஜ் கூடும் என நம்பி அணுகியது.

சற்றும் நெருடல் இல்லாமல் ,சபேசன் அதூலின் தோளில் கை வைத்து செல்பி எடுத்துக் கொண்டார்.
இக்கூட்டத்தின் மத்தியில் ,சபேசனுக்கு தன் செய்கையே, அமைதியான தன் மனப்போக்கே ஆச்சரியத்தை அளித்தது.

மாறுகிற மனிதர்களை ,மாறச் சொல்லும் சூழ்நிலைகள மன்னிக்கிற ,மன்னிக்க முடிவதில் உண்மையிலேயே “நான் ஒரு    சீனியர் ரிசோர்ஸ்” என மனதுக்குள் சொல்லி புன்னகைத்தார்

– பல்லக்கு

******

Series Navigationஇலக்கியச் சிந்தனை 2016 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைகள்
author

சித்ரா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *