ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
விழியும் செவியும் பழுதாகிவிட்ட வாழ்வில் விதித்ததெல்லாம்
அறையின் ஓர் ஓரமாய்க் கட்டிலில் அமர்ந்திருத்தல்;
அவ்வப்போது சுவரொரு பாதையாக கையைக் காலாக்கி
அடிக்கு அடி விரல்களை அழுந்தப் பதித்து
கழிவறைக்குப் போய்வருதல்;
உணவுநேரத்தில் அவசரமாய் ருசித்துச் சாப்பிட்டுப் பின்
நீட்டிப் படுத்து நித்திரையில் அமிழ்ந்துபோதல்.
மிக அருகே சென்று ஆயிரம் ‘வாட்’ குரலெடுத்துக் கத்தி
என் வரவை உணர்த்தினால்
“அம்மா சௌக்கியமா?” என்பார் அதி சன்னக் குரலில்.
விரல்களில் நகம்வெட்டும்போது ஒருமுறை சதை கிழிபட
“ஸ்ஸ்..” என்று வலிபொறுத்து “பரவாயில்லை” என்று சொன்ன பெருந்தன்மையில் கண் கசிந்து
குற்றவுணர்வு பூதாகாரமாய் பீடித்தது என்னை.
77வது வயதில் அவர் சமீபத்தில் இறந்துபோன
பதிமூன்றாம் நாள்
தங்கையாய் வந்தமர்ந்து விருந்துண்ண அழைத்தார்
அவர் தம்பி.
பார்வையற்ற ஆசிரியர்; பொறுமையில் புத்தர்.
ஒரு பார்வைக்கு
வாழையிலையிலிருந்த சோறும் காய்கறிகளும்
வறுவலும் இனிப்பும்
இருந்தவிடமிருந்தே வாழ்ந்துமறைந்தவரின்
பறவைச் சிறகடிப்புகளாய்
வரிவடிவிற்கப்பாலான கவிதைச்செல்வங்களாய் தெரிய _
எரியத் தொடங்கும் மனதை என்செய்வேன்….
அய்யோ…. அய்யய்யோ….. அய்யய்யோ…..