ஐங்குறுநூற்றில் திருமண நிகழ்வுகள்

This entry is part 4 of 14 in the series 19 நவம்பர் 2017

 

சங்க நூல்களான எட்டுத்தொகை நூல்களில் ‘ஐங்குறு நூறு’ தனிச் சிறப்பு பெற்றதாகும். மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்னும் ஐவகை நிலங்களைப் பற்றி ஒவ்வொரு நிலத்திற்கும் நூறு பாடல்கள் வீதம் ஐநூறு பாடல்கள் கொண்ட நூல் இதுவாகும்.

இதில் நெய்தல் பற்றிய நூறு பாடல்களை எழுதியவர் அம்மூவனார் என்பவர் ஆவர். நெய்தல் பற்றிய பாடல்கள் பத்துப் பத்தாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் ’ஞாழப்பத்து’ என்பதில் அக்கால மக்களின் திருமண நிகழ்வுகள் சிலவற்றை அறிய முடிகிறது.

ஞாழல் என்பது கொன்றைமர வகைகளில் ஒன்றாகும். இது கடற்கரைப்பகுதியில் அதிகமாகக் காணப்படும். ஒவ்வொரு பாடலும் ஞாழல் தொடர்பைக் கொண்டிருப்பதால் இப்பகுதி ஞாழல் பத்து எனப்பெயர் பெற்றது.

அவனும் அவளும் சந்திக்கின்றனர். ஒருவர் மனத்தில் மற்றவர் நுழைந்து காதல் கொண்டு களவு நடைபெறுகிறது. அவள் அவனைத் திருமணம் செய்து கொள்ள வேண்டினாள். அவனோ சிறிது காலம் கடத்துகிறான். அவள் வேதனைப் படுகிறாள். பின்னர் ஒருநாள் அவன் திருமண எண்ணத்துடன் வருகிறன். அதை அறிந்த அவள் மகிழ்ச்சியுடன் தன் தோழியிடம் சொல்லும் பாடல் இதுவாகும்.

”எக்கர் ஞாழல் அரும்புமுதிர் அவிழினர்

நறிய கமழும் துறைவற்கு

இனிய மன்ற-எம் ,மாமைக்கவினே.”             [ஐங்குறு நூறு—146]

“நீரால் உண்டாக்கப்பட்ட மணல் மேட்டில் ஞாழல் அரும்புகள் முதிர்ந்து மலர்ந்த பூங்கொத்துகள், நறுமணம் வீசுகின்ற துறையைச் சார்ந்தவனுக்கு என் மாந்தளிரைப் போன்ற அழகு இனிமையானதே பார்த்தாயா?” என்பது பாடலின் பொருளாகும்.

ஞாழல் அரும்பு முதிர்ந்து மலராக மணம் வீசுவது போல அவன் கொண்ட அன்பு முதிர்ந்து இப்போது மணமாகவும் உறுதியாகி அனைவர்க்கும் செய்தி பரப்புகிறது  என்பது மறைபொருளாகும்.

அவன் அவளைப் பெண் கேட்கச் சான்றோர் பலரைத் துணையாகக் கொண்டு அவளின் பெற்றோரை அணுகுகிறான். அவள் தாய் தந்தையர் மகிழ்ச்சி அடைகின்றனர். வந்தவரை வரவேற்றுத் தம் மகளை மணக்க வேண்டுமாயின் இன்னின்ன எல்லாம் மணப்பொருளாகத் தரவேண்டும் என்கின்றனர். இது மணமகளை மணப்பதற்காகத் தருகின்ற வரைபொருளாகும். இதை முலைவிலை என்றும் கூறுவர். அவன் அவர்கள் கேட்டவற்றைத் தந்து மேலும் தருகிறான். இதனைக் கண்ட தோழி உள் வீட்டில் இருக்கும் அவளிடம் போய்ச் சொல்லும் பாடல் இதுவாகும்.

”எக்கர் ஞாழல் மலரின் மகளிர்

ஒண்தழை அயரும் துறைவன்

தண்தழை விலையென நல்கினன் நாடே”      [ஐங்குறுநூறு—147]

[அயர்தல்=விளையாடி மகிழ்தல்; தழைவிலை=மணப்பெண்ணுக்குத் தருகின்ற வரைபொருள்; முலைவிலை என்றும் சொல்வதுண்டு]

”மகளிர் மணல்குன்றில் விளையாடச் செல்கின்றனர் அங்கே ஞாழல் மலர்களைக் காணாததால் அதன் தழைகளை ஆடையாக அணிந்து விளையாடும் துறையைச் சேர்ந்தவனான நம் தலைவன் உனக்குரிய குளிர்ச்சியான தழையாடையின் விலையாக தனக்குரிமையான ஒரு நாட்டையே அளித்தானடி”  என்பது பாடலின் பொருளாகும்.

அவன் பெரும் செல்வக்குடியைச் சார்ந்தவன் என்பதும் அவளிடம் மிகுந்த காதல் கொண்டவன் என்பதும் இப்பாடல் மறைமுகமாக உணர்த்துகிறது.

அவனுக்கும் அவளுக்கும் திருமணம் இனிதே நடந்தேறுகிறது. தோழி தன் தலைவியைத் தலைவனுடன் இன்புற்று மகிழுமாறு பள்ளியிடத்தே கொண்டு விடுகிறாள். அப்போது அத்தோழி தலைவியை வாழ்த்திச் சொல்லும் பாடல் இதுவாகும்.

”எக்கர் ஞாழல் இகழ்ந்துபடு பெருஞ்சினை

வீயினிது கமழும் துறைவனை

நீ இனிது முயங்குமதி காத லோயே”             [ஐங்குறுநூறு—148]

[வீ=பூ; இகந்து படல்=வரம்பு கடந்து உயரமாக விளங்கல்; பெருஞ்சினை=பெரிய கிளை; முயங்கல்=தழுவி இன்புறல்]

“அன்புடையவளே! மணல் குன்றிலே எல்லை கடந்து உயர்ந்து வளர்ந்த பெரும் கிளைகளிலே பூத்துள்ள ஞாழல் பூக்கள் நாற்புறமும் மணம் வீசும் துறையைச் சார்ந்த நம் தலைவனை இனி நீ இனிதாகத் தழுவி இன்புறுவாயாக” என்பது பாடலின் பொருளாகும்.”

ஞாழல் பூக்களின் மணம் எல்லா இடங்களிலும் கமழ்தல் போல உன் மண வாழ்வும் இனிதாக யாவரும் போற்ற அமையட்டும் என்பது மறைபொருளாம்.

அடுத்துத் தோழி தலைவனையும் வாழ்த்துகிறாள். அந்தப் பாடல் இதுவாகும்.

”எக்கர் ஞாழல் பூவின் அன்ன

சுணங்கு வளர் இளமுலை மடந்தைக்கு

அணங்கு வளர்த்தகறல் வல்லா தீ மோ”           ஐங்குறுநூறு—149]

[சுணங்கு=அழகுத்தேமல்; அணங்கு வளர்த்தல்=வருத்தம் வளரச்செய்தல்; வல்லாதீயோ=வன்மையுறாதிருப்பீராக]

“ஞாழல் பூவின் இள மஞ்சள் நிறம் போல அழகுத் தேமல் படர்ந்துள்ள இளமையான முலைகளைக் கொண்டுள்ள இவளுக்கு வருத்தத்தை வளரச் செய்து, பிரியும் செயலை ஒருபோதும் மேற்கொள்ளாது இருப்பீராக” என்பது பாடலின் பொருளாகும்.

இவ்வாறு மணம் பேச வருதல், மணமகன் மணமகளுக்கு வரைபொருள் அளித்தல், தோழி மணமகளையும் மணமகனையும் வாழ்த்தல் போன்ற செய்திகளை ஐங்குறு நூற்றில் காணமுடிகிறது.

—–

பேசி : 9367631228

Series Navigationகுடும்பவிளக்குமருத்துவக் கட்டுரை – சிறுநீர் கிருமித் தொற்று
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *