குடும்பவிளக்கு

This entry is part 3 of 14 in the series 19 நவம்பர் 2017

 

என் தொலைபேசி துடித்தது. ஊரிலிருந்து தம்பிதான் பேசுகிறான். வாழ்க்கையின் முடிவுரையை எழுதிக் கொண்டிருக்கும் அக்காவைப் பற்றித்தான் பேசுவான். தெரியும். கிடத்தப்பட்ட மெல்லிய முங்கில் கழிபோல் இருக்கிறது அக்கா. சீரணமும் சுவாசமும் மட்டும் வேலை செய்கிறது. மற்றபடி உடம்பே உறைந்துவிட்டது. மூன்று மாதங்களுக்கு முன்தான் பார்த்துவிட்டு வந்தேன். அக்கா முடிவுரைக்கு முற்றுப்புள்ளி வைத்த பிறகு போகலாம் என்றிருந்தேன். சே! எவ்வளவு குரூரமான மனிதன் நான். ஒவ்வொரு தடவை தம்பி அழைக்கும் போதும் இரவுக்குப் பின் பகல் என்பதுபோல கேட்பதும் மறப்பதுமாகத்தான் இருக்கிறேன். ஆனால் இன்று அவன் சொன்னதை அப்படி  எடுத்துக் கொள்ள முடியவில்லை. எப்போதாவதுதான் நினைவு திரும்புகிறது. பலவீனமான ஒரு மின்னலைப்போல இமைகள் விலகி விழி தெரிகிறது. அன்றும் அப்படித்தானாம் விழியை நன்றாகவே  திறந்து சுற்றுமுற்றும் சுழலவிட்டு ‘தம்பீ’ என்று உச்சரித்ததை தெளிவாகக் கேட்க முடிந்ததாம். என்னை மட்டும்தான் அக்கா ‘தம்பீ’ என்று அழைக்கும். எல்லாரையும் பெயர் சொல்லித்தான் கூப்பிடும். தம்பி சொன்னான். ‘அக்கா உங்களைத்தான் தேடுகிறது.’ இதைக் கேட்ட பிறகும் நான் ஊருக்குப் போகாமல் இருந்தால் நான் என்ன மனிதனா ? மண்ணாங்கட்டியா? உடனே புறப்பட்டேன்.

இதோ சிங்கையிலிருந்து எழும்பி விட்டது என் விமானம். திருச்சியை நோக்கிப் பறக்கிறது. 4 மணி நேரம் ஆகலாம். எத்தனையோ காட்சிகள் கண்முன். அத்தனையும் விழித்திரையை மோதிவிட்டுத் திரும்பிவிட்டது. எதையுமே என்னால் உள்வாங்க முடியவில்லை. அக்கா மட்டுமே எனக்குள் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறது. அக்காவைச் சுற்றியே என் நினைவுகள் சுழல்கின்றன.

கீற்றுப் பந்தல் போட்டு வாழைமரம் கட்டி, சுற்றும் இசைத் தட்டில் ஊசி உட்கார ‘வாராயென் தோழி வாராயோ’ பாசமலர் பாட்டு ஒலிக்க அக்காவுக்கு அன்று திருமணம் நடந்தது. பள்ளிவாசலிலிருந்து வந்தவர்கள் திருமணத்தை முடித்துவிட்டு பதிவுப் புத்தகத்துடன் திரும்பிவிட்டார்கள். மணமேடையில் அக்கா முக்காட்டுடன் உட்கார்ந்திருக்கிறது. அம்மா உட்பட ஏகப்பட்ட பெண்கள் மேடையில். நான் அக்காவைக் கிட்டப்போய் குனிந்து பார்த்தேன். என் கன்னங்களில் கைகளைப் பரப்பி நெற்றியில் முத்தமிட்டபோது, வடித்த கண்ணீர் செவி மடலில் பட்டு கூசியது. அக்கா அழுகிறது. பிறகு ஒரு நாள் தெரிந்து கொண்டேன். பிறந்த வீட்டைப் பிரியும்போது அழுவார்கள் என்று. இனிமேல் என் அக்கா தன் ஊரை அறந்தாங்கி என்று சொல்ல முடியாதோ?. நச்சாந்துபட்டி என்றுதான் சொல்ல வேண்டுமோ?

திருமணம் முடிந்து சில மாதங்கள் கழித்து நான் அம்மாவோடு நற்சாந்துபட்டி சென்றேன். என் மாமு (தாய்மாமன்) வீடுதான் அது. அவர் மகன், என் மச்சான்தான் அக்காவின்  மாப்பிள்ளை. மாமு வீட்டுக்கு பலமுறை போயிருக்கிறேன். ஆனாலும் அக்கா வாழப்போன பிறகு இப்போதுதான் முதல்முறையாகப் போவதுபோல் இருக்கிறது. அது ஒரு நீளமான கூரை வீடு. அந்த வீட்டுச் சுவற்றில் ஒரு கண்ணாடி பதித்திருக்கும். பலகை போட்டு ஏறி அந்தக் கண்ணாடியைப் பார்த்து தலை வாரி யிருக்கிறேன். அழகான அந்திப் பொழுதில் அக்கா ஆங்காங்கே தொங்கிக் கொண்டிருக்கும் ஹரிக்கேன் விளக்கு, முட்டை விளக்குகளை எடுத்துக் கொண்டு கூடத்துக்கு வரும். கூடவே ஒரு மண்ணெண்ணெய் பாட்டிலும் வரும். எல்லா விளக்குகளையும் அக்கா பளிச்சென்று துடைத்தபின் தீப்பெட்டியை என்னிடம் தந்து பற்ற வைக்கச் சொல்லும். அந்தத் திரி தீயைப் பற்றிப் பிரகாசிக்கும் போது மனம் விர்ரென்று வானில் பட்டம்போல் உயரும். அது ஒரு அலாதியான சுகம். அப்போதுதான் ‘மாடுக வருது’ என்று மம்மாணி (மாமு மனைவி) குரல் கொடுப்பார். காளைமாடுகள், பசுமாடுகள், கன்றுக்குட்டிகள் என்று 20 மாடுகள் இருக்கும் மாடுகளை மேயவிட்டு சுப்பன் அந்த அந்திம வேளையில்தான் மாடுகளை வீட்டுக்கு ஓட்டிவருவான். சூரியன் கிட்டத்தட்ட மறையப்போகும் அந்த அழகான வேளையில் அந்த மாடுகள் வீடு வரும். மாமு வீட்டில் ஒரு பழக்கம் இருந்தது. வீட்டின் வால்புறம்தான் மாட்டுக் கொட்டில். அதை நாங்கள் ‘கொல்லை’ என்போம். அந்த மாடுகள் முகப்பு வழியாக வந்து வீட்டுக்குள் நடந்து கொல்லைக்குச் செல்லும். .அந்த வீட்டின் நீளம் 50அடி இருக்கும்.  அவைகள் வீட்டைக் கடக்கும்போது குளம்படிச் சத்தம் கெட்டிமேளம் கொட்டுவது போல் இருக்கும். மாமு அடிக்கடி சொல்வார். வீட்டில் குளம்படி பட்டால் குலம் தழைக்குமாம். அந்த வீட்டைக் கடக்கும்வரை மாடுகள் வீட்டை அசுத்தப்படுத்தாது. மாடுகள் கொல்லை போய்ச் சேரவும் வீளக்குகள் ஏற்றப்பட்டு முடிக்கவும் சரியாக இருக்கும். அந்தக் கிராமம் இளமைக் கால சொர்க்கம். அக்கா 5 காசு கொடுத்து கொத்தனார் கடையில் எள்ளடை வாங்கிச் சாப்பிடச் சொல்லும். கொத்தனாருக்கு கட்டட வேலைதான். கொத்தனார் மனைவி பெட்டிக் கடையையும் சாப்பாட்டுக் கடையையும் நடத்துவார். கொத்தனார் சம்பாதிப்பதைவிட அதிகமாகவே சம்பாதிப்பார். அந்தக் காலங்களிலேயே கிராமங்களில் இரண்டு பேரும் சம்பாதிக்கும் வழக்கம் இருந்திருக்கிறது. காலை நேரத்தில் வீட்டில் பசியாற எப்போதுமே கேப்பைக் கூழ்தான். மம்மாணி ஒரு பெரிய மண் சோற்றுப் பானையில் கூழ் கிண்டுவார்.  அக்கா கூடத்தில் உட்டகார்ந்து மோர் கடையும். ஒரு வேளைக்கு 20 பேர் சாப்பிடும் பெரிய கூட்டுக்குடும்பம் அது. அக்கா அங்கு போனதும் ‘உப்பு ஜாடி எங்கே இருக்கு’ என்று அக்காவைத்தான் கேட்பார்கள். அந்த அளவிற்கு எல்லாமே அந்த வீட்டில் அக்காதான். நாங்கள் எனாமல் தட்டுகளை வைத்துக்கொண்டு மம்மாணியிடம் கூழுக்காக நிற்போம். என் வயதுக் கூட்டாளிகள் எனக்கு 5பேர் இருந்தார்கள். அகப்பையில் கூழ் அள்ளி தட்டில் போடுவார் மம்மாணி. அக்காவிடம் வருவோம். ஒரு அலுமினியக் குவளையில் அக்கா மோர் ஊற்றுவார். பக்கத்திலேயே ஒரு ஓலைக் கூடையில் கருப்பட்டி இருக்கும். ஒரு துண்டு கருப்பட்டியை எடுத்துக் கொண்டு திண்ணைக்கு ஓடிவிடுவோம். அந்தக் கூழ் முடியும்வரை பக்கத்தில் என்ன நடக்கிறது என்பதே எங்களுக்குத் தெரியாது. எனக்கு ஞாபகம் இருக்கிறது நான் மோர் கேட்கும்போது மட்டும் அக்கா சுற்று முற்றும் ஒரு திருட்டுப் பார்வை பார்த்துவிட்டு வெண்ணையோடு ஊற்றும். பட்டுத்துணி போர்த்திய பாசம் அது. சில சமயம் மச்சானிடம் சொல்லி கொத்தனார் கடைக்குக் கூட்டிப்போய் எனக்கு இட்லி வாங்கித் தரச் சொல்லும் அக்கா. இழைக்காத பனங்கை, மற்றும் பலகைகளால் ஆன சாப்பாட்டு மேசையில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு வழிய வழிய சாம்பார் விட்டு இட்லி சாப்பிட்டிருக்கிறேன். அந்த ஒரு இட்லி இப்போதுள்ள 3 இட்லி. நான் முதன்முதலாகக் கடையில் சாப்பிட்டது அன்றுதான். கொத்தனார் கடைக்குப் பின்னால் தெரியும் இடுக்கு மலை, பொதுமரங்களாக ஆங்காங்கே காய்த்துக் கிடக்கும் முழு நெல்லி, அரை நெல்லி மரங்கள், செம்மண்ணைப் பிரதிபலித்து விரிந்து கிடக்கும் நச்சான் குளம், ஆலயம் என்கிற ஆலமரம், குன்றிமணி மரங்கள்,  எங்கு பார்த்தாலும் பரவிக் கிடக்கும் டைமன் வடிவ குன்றி மணிகள். தலை நிமிர்ந்து நிற்கும் நகரத்தார் வீடுகள், புளுதியைக் கிளப்பிக் கொண்டு அவ்வப்போது வரும் பேருந்துகள். புதுக்கோட்டை, பனையப்பட்டி, குழிபிறை, பொன்னமராவதி, திருப்பத்தூர் என்று அந்தப் பேருந்துகள் போய்ச் சேரும் இடங்களையும் ராஜாமணி, சங்கரவிலாஸ், பிகேபி, என்று பேருந்தின் பெயரையும் மனப்பாடமாய்ச் சொல்லும் என் கூட்டாளிகள், அப்போதுதான் உருவாகிக் கொண்டிருந்த உயர்நிலைப் பள்ளிக்கூடம் எல்லாமுமே என் கண்முன்னே இன்றும் நிழலாடும் சுகமான நினைவுகள்.

ஒரு நாள் நற்சாந்துபட்டியில் விவசாயங்களைப் பார்த்துக் கொள்ளும் வேலு அறந்தாங்கி வந்தான். அத்தாவிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தான். உடனே அத்தா என்னையும் அம்மாவையும் அழைத்துக் கொண்டு நற்சாந்துபட்டி புறப்பட்டுவிட்டார். நற்சாந்துபட்டி. மாமு வீடு. ஒரு பெரிய வேன் வீட்டுக்கு முன் ஏற்றப்பட்ட சாமான்களுடன் நின்றுகொண்டிருந்தது. அம்மாவைப் பார்த்த்தும் அக்கா கட்டிப்பிடித்து அழுதது. மாமுவிடம் கைகொடுத்து சலாம் சொல்லி அத்தா பேசிக்கொண்டிருந்தார்.  நாங்கள் ஏன் நற்சாந்துபட்டி வந்தோம் என்று எனக்குப் பிறகு தெரிந்தது. மச்சான் கும்பகோணத்தில் ஒரு கடை பார்த்திருக்கிறார். அந்தக் கூட்டுக் குடும்பத்தில் மாமுவிடம் சொல்லாமல் அப்படிச் செய்யக்கூடாதாம். அது தெரிந்திருந்தும் மச்சான் செய்துவிட்டார். மாமு உடனே அவர்களை வீட்டை விட்டு வெளியேறி கும்பகோணம் போகச் சொல்லிவிட்டார். அக்காவைப் போகச் சொல்ல மம்மாணிக்கோ மற்றவர்களுக்கோ கொஞ்சமும் பிடிக்கவில்லை. ஆனால் மாமு பிடிவாதமாக இருந்ததற்கு வேறு காரணங்களும் இருக்கலாம். அது எனக்குத் தெரியாது. எப்படியோ நற்சாந்துபட்டியைவிட்டு அக்கா கும்பகோணம் சென்றது ஒரு சோகமான நாள். நான் நற்சாந்துபட்டியிலிருந்து திரும்புமுன் அந்தக் கண்ணாடி முன் குனிந்து முகத்தைப் பார்த்துக் கொண்டேன். அட! நான் வளர்ந்திருக்கிறேன்.

அதற்குப் பிறகு அக்கா மாதாமாதம் அறந்தாங்கி வந்தது. வரும்போதெல்லாம் சிங்கப்பூர் 20 காசு அளவில் இருக்கும் பிரிட்டானியா ரொட்டி 1 கிலோ வாங்கி வரும். அதை டவுசர் பாக்கெட்டில் நிரப்பிக் கொண்டு நான் பள்ளிக்கூடம் போயிருக்கிறேன். அக்கா இரண்டு வாரங்கள் கழித்துத்தான் கும்பகோணம் திரும்பும். அக்காவோடு ஒரு டின் அரிசி, அப்பளம், வற்றல்கள், பருப்பு என்று முக்கியமான வீட்டுச் சாமான்களும் போகும். அத்தா அக்காவுக்கு பணம் கொடுப்பார். இவைகளை நம்பித்தான் அக்கா வாழவேண்டிய சூழ்நிலை. வெளியே சொல்ல முடியாத கஷ்டங்கள். கடையில் அவ்வளவாக வியாபாரம் இல்லை. நான் பல தடவை கும்பகோணம் போயிருக்கிறேன். கல்லாவுக்குக் கீழே சில பாட்டில்களுடன் ஒரு பிளாஸ்டிக் கூடை கிடக்கும். வீட்டுச் சாமான் வாங்குவதற்காக எப்போதோ அக்கா கொடுத்தனுப்பியது. அது எத்தனை நாட்களாக அப்படிக் கிடக்கிறதென்று தெரியவில்லை. சுவரின் மேலே ஒரு கொட்டானில் கொஞ்சம் முந்திரி பக்கோடா வைத்திருக்கும். அதை எனக்குத் தந்து வெந்நீரில் ஹார்லிக்ஸ் போட்டு அக்கா  தந்திருக்கிறது.

நான் இப்போது வாலிபன். எனக்குப் பெண் பார்க்கிறார்கள். எங்கள் வீட்டில் எதிர்பாராமல் ஒரு சம்பவம் நடந்துவிட்டது. எனக்கு முன்னாலேயே என் தம்பிக்கு திருமணம் முடிந்துவிட்டது. நான் படிப்பை முடித்துவிட்டு தஞ்சாவூர் மன்னர் சரபோசி கல்லூரியில் பேராசிரியராகிவிட்டேன். நல்ல வேலைதான். ஆனாலும் எனக்குப் பெண் தர பலரும் யோசித்தார்கள். ஏதோ ஊனம் எனக்கிருக்கிறது என்ற சந்தேகம் காரணமாக இருக்கலாம். அக்கா என் புகைப்படத்தையும் என் ஜாதகத்தையும் எடுத்துக் கொண்டு ராஜகிரி, பண்டாரவாடை, வழுத்தூர், ஐயம்பேட்டை, குடவாசல், நன்னிலம், தஞ்சாவூர், கிளியனூர் செம்பனார்கோவில் இன்னும் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை என்றெல்லாம் கேளவிப்படும் இடங்களுக்கெல்லாம் பெண் பார்க்கச் சென்றது. யாரிடமிருந்தும் சாதகமான பதில் இல்லை. அப்போது கும்பகோணம் ராஜா தியேட்டர் எதிரே லண்டன் சுந்தரம் என்று ஒரு ஜோதிடர் இருந்தார். அவர் ஒரு தொழுநோயாளி. ஆனாலும் ஜாதகம் கணிப்பதில், பொண்ணுமாப்பிள்ளை பொருத்தம் சொல்வதில் அவரைவிட யாரும் இல்லை என்று அக்காவிடம் யாரோ சொல்லியிருக்கிறார்கள். எல்லாமும் முடியாமல் போக அந்த லண்டன் சுந்தரத்திடம் அக்கா சென்று என் ஜாதகத்தையும் புகைப்படத்தையும் கொடுத்தது. அதே லண்டன் சுந்தரத்திடம் இப்போதைய என் மாமியாரும் தன் மகளின் ஜாதகத்தைக் கொடுத்து மாப்பிள்ளை பார்க்கச் சொல்லியிருக்கிறார். இரண்டும்  சரியாக ஒத்துப்போக அதை மிகையாகவோ, நிஜமாகவோ  என் மாமியாரிடம் லண்டன் சுந்தரம் சொல்ல என் கல்யாணச் செடி கிளை விட்டு வளர்ந்தது. எனக்கு ஊனமிருக்குமோ என்ற சந்தேகமும் கூடவே வளர்ந்தது. புதிய துளிர்கள் இரண்டு பக்கமும் உள்ள சில உறவினர்களால் அவ்வப்போது நறுக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. ஒவ்வொரு தடவை நறுக்கப்படும்போதும், அக்கா அழுதது.  மண் அணைத்து உரம் வைத்து நீர் ஊற்றி, வேலி கட்டி அந்தச் செடியைக் காப்பாற்றியது அக்காதான். ஒரு வழியாக அந்தச் செடியில் ஓர் அழகான பூப் பூத்தது. என் கல்யாணம் ஒரு வழியாக முடிந்தது. நானும் தஞ்சாவூரிலேயே தனிக்குடித்தனம் வந்துவிட்டேன். அக்கா அறந்தாங்கி போகும் போதெல்லாம் என் வீட்டுக்கு வரும். என் மனைவிக்கு பிரசவம் நெருங்கும் போதெல்லாம் அக்கா மணியடித்ததுபோல் வந்துவிடும். மசக்கைக்கு என்ன செய்ய வேண்டும், பிள்ளை பிறந்ததும் என்ன செய்ய வேண்டும் எல்லாமும் அக்கா பார்த்துக் கொள்ளும். தாயும் பிள்ளையுமாக வீட்டுக்கு வரும்வரை அக்காதான் எங்களுக்குத் துணை.

அட! நான் பறந்துகொண்டிருக்கிறேன். மணியைப் பார்க்கிறேன். இன்னும் அரை மணிநேரம் இருக்கிறது. என் அக்காவைக் காண.

என் அத்தாவின் அந்தக் கடைசி நாட்கள். நான் தஞ்சாவூரில் என் குடும்பத்துக்குள் மட்டுமே என்னைக் குறுக்கிக் கொண்டேன். ஒரு நாள் அறந்தாங்கி வந்தேன். தோல் சீவிய ஆப்பிளை சின்னச்சின்ன துண்டுகளாய் நறுக்கி அத்தாவுக்கு அக்கா ஊட்டிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு துண்டும் மென்று உள்ளிறங்கிய பின் அடுத்த துண்டு. அத்தாவின் இறுதி நாட்களை அக்காதான் எழுதிக் கொண்டிருந்தது. அக்காவின் மடியில்தான் அத்தா முடிந்தார். முடியும்வரை அக்கா அறந்தாங்கியிலேதான் இருந்தது. என் அத்தாவுக்காக என்னால் 3 நாட்களே ஒதுக்கமுடிந்தது. அதையெல்லாம் இப்போது நினைத்தால் அமிலத்தைக் குடிப்பதுபோல் இருக்கிறது. வருகிறவர்களெல்லாம் அக்காவைக் கட்டிப்பிடித்து அழுகிறார்கள். அவர்களையெல்லாம் நாசூக்காக விடுவித்துக் கொண்டு  தன் வேலையை மட்டுமே அக்கா பார்க்கிறது. யாரிடமும் அக்கா அழவில்லை. தனிமையிலேயே அழுதழுது விழுங்கி விடுவதால் உறவினர்களுக்கு முன் அக்காவுக்கு அழுகை வரவில்லை. சரியாக ஓராண்டில் இப்போது அக்கா இருப்பதைவிட அம்மா மோசமாக இருந்தார். அக்காவுக்காவது அவ்வப்போது நினைவு வருகிறது. சீரணம், சுவாசம் வேலை செய்கிறது. ஆனால் அம்மாவுக்கு மூச்சைத் தவிர ஒன்றுமே வேலை செய்யவில்லை. மருத்துவர் சொன்னார் ‘அப்படியே விட்டுவிடுங்கள். முடிந்துவிடும்.’ அம்மாவின் 11 பிள்ளைகள், 4 மருமகள்கள், 19 பேரப்பிள்ளைகள், 4 கொள்ளுப் பேரர்கள் எல்லாருமே வீட்டில். இப்போது அனைவரின் எதிர்பார்ப்பும் எப்போது முடியும் என்பதாகவே இருந்தது. இப்போது நினைத்தாலும்  நெஞ்சில் சம்மட்டி அடி விழுகிறது. ஆனால் அதுதான் உண்மை. அம்மாவைக் குளிப்பாட்டி துணிமாற்றி ஒரு குழந்தையைத் தூக்குவதுபோல் ஒத்தையாக அம்மாவை இரு கரங்களாலும் சுமந்து வந்து கூடத்தில் கிடத்தியதும் அக்காதான். அக்கா தன் வாழ்நாள் முழுதும் அறந்தாங்கியில்தான் அதிகமாக இருந்தது. அக்காவுக்கு அந்தப் பிறந்த வீட்டு உறவு வலுவாகப் பின்னப்பட்டிருந்தது. மச்சானுக்கும் அது தெரியும். அக்காவை அவர் தடுக்கவே இல்லை. அந்தப் பின்னலை அவர் பிரிக்க நினைத்திருந்தால் அக்காவின் உயிர் பிரிந்திருக்கும் என்பதும் மச்சானுக்குத் தெரியும். அக்காவை நினைக்கும்போதெல்லாம் இப்படி எல்லா நினைவுகளும் ஒட்டுமொத்தமாக என் நெஞ்சில் முட்டி மோதின. மச்சானை நினைக்கும்போதெல்லாம்  அவரின் பெருந்தன்மை என்னைப் பல முறை நொறுங்க வைத்திருக்கிறது. எவ்வளவு பெரிய புரிதல் இது.

இன்னும் சில நிமிடங்களில் திருச்சியில் இறங்கிவிடுவேன்.

இதோ அக்காவைப் பார்க்க சென்றுகொண்டிருக்கிறேன். அக்கா படுத்திருந்த தண்ணீர்ப்படுக்கை அசைவற்றிருந்தது. படுக்கையின் மீது ஒரு துணி கிடப்பதுபோல்தான் இருக்கிறது. அக்காவின் முகம்தான் அக்கா படுத்திருப்பதின் அடையாளம். கீரை உருவப்பட்ட முருங்கை இணுக்குபோல் இருந்த அக்காவின் உள்ளங்கையில் என் கையை விரித்துக் கொண்டேன். பனிக்காலக் காலையில் இரும்புக் கம்பியைப் பிடித்ததுபோல் ஜில்லிட்டது அக்காவின் கை. பலரும் அக்காவைச் சுற்றி நிற்கிறார்கள். ‘இந்தப் பாரும்மா, சிங்கப்பூர்லேருந்து உன் தம்பி வந்திருக்கு’ என்று யாராரோ சொல்கிறார்கள். அக்காவுக்கு நினைவில்லை. தம்பி அக்காவின் காதருகே குனிந்து சொன்னான். ‘அக்கா, சிங்கப்பூர்லேருந்து அண்ணே வந்திருக்குக்காங்க. பக்கத்தில உக்காந்திருக்காங்க. பாருக்கா.’ நான் அக்காவின் முகத்தருகே குனிந்து ‘அக்கா’ என்றேன். உதட்டோரம் ஒரு மெல்லிய சிரிப்பு பளிச்சிட்டது. எதை நினைத்து  அக்கா சிரித்திருக்கும்? எனக்குத் தெரியவில்லை. அக்காவின் கண்ணிமைகள் லேசாகப் பிரிந்து ஒரு சொட்டுக் கண்ணீருக்கு வழிவிட்டது. உதடுகள் லேசாக ஒட்டிப் பிரிந்தது. ஆம். அக்கா ‘தம்பீ’ என்று சொல்வதை என்னால் கேட்க முடிகிறது. அக்காவின் உள்ளங்கையில் விரிந்த என் கையை அக்காவின் விரல்கள் லேசாக இறுக்குகிறது. அந்த இறுக்கத்தை முதலில் நான் உணரவில்லை. பிறகு  உணர்வுக்கு வந்தபோது நான் என் கையை விலக்க முயன்றேன். என்னால் முடியவில்லை. என் கையை அக்காவின் விரல்கள் மேலும் இறுக்கிக் கொண்டிருக்கிறது. இப்போது அந்த இறுக்கம் நின்றுவிட்டது. என் காதில் வந்து தம்பி மெதுவாகச் சொன்னான். ‘முடிஞ்சிருச்சு’.

என் இன்றைய வாழ்வுக்கான விதையை விதைத்தது அக்காதான். என் பிள்ளைகள் பூத்துக் குலுங்கி மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். பஞ்சவர்ணக்கிளிகளாக என் பேரப்பிள்ளைகள் என்னைச் சுற்றி வருகிறார்கள். எல்லாவற்றிற்கும் மூலகாரணமாய் எனக்குத் தெரிவது என் அக்காதான். என் அக்காவின் அந்த முயற்சி இல்லாதிருந்தால் எனக்கு திருமணமே கூட ஆகாமல் இருந்திருக்கலாம். யார் கண்டது?

குலவிளக்கை ஏற்றிவிட்டு குடும்பவிளக்கு அணைந்துவிட்டது.

யூசுப் ராவுத்தர் ரஜித்   

Series Navigation” மணிவிழா நாயகர் திருநந்தகுமார் “ஐங்குறுநூற்றில் திருமண நிகழ்வுகள்
author

யூசுப் ராவுத்தர் ரஜித்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *