” மணிவிழா நாயகர் திருநந்தகுமார் “

author
0 minutes, 2 seconds Read
This entry is part 2 of 14 in the series 19 நவம்பர் 2017

  திருநந்தகுமார்

அகில இலங்கை கம்பன் கழகத்தின் ஸ்தாபகர்

அவுஸ்திரேலியாவில் தமிழ்க்கல்விப்பணியில் முன்னுதாரணமாகத்திகழும் அயராத செயற்பாட்டாளர்

                                                முருகபூபதி –  அவுஸ்திரேலியா

 

ஒவ்வொருவருக்கும் கனவுகள் வருவது இயல்பானது.   மனதில் தங்கிவிடும் அல்லது நீண்டகாலம் நினைவிலிருந்து மறைந்துவிடும் கனவுகளையும் கடந்து வந்திருப்போம்.

இளைய தலைமுறையினரைப்பார்த்து பாரத ரத்னா அப்துல்காலம், ” கனவு காணுங்கள்” எனச்சொன்னார். அதன் அர்த்தம் தொடர்ந்து உறங்கவும் என்பதல்ல. சிறுபராயத்தில் பாடசாலைகளில் குடும்பத்தில் எதிர்காலத்தின் என்னவாக வரப்போகிறாய்…? என்ற பொதுவான ஒரு கேள்வியைக்கேட்பார்கள்.

ஒவ்வொருவரும் தமது கனவுகளைத்தான் சொல்வார்கள். ஆசிரியரோ தனது அபிமான மாணவர் இப்படித்தான் வரவேண்டும் என்று கனவுகாண்பார். பெற்றவர்கள் தமது பிள்ளை இவ்வாறுதான் எதிர்காலத்தில் இருக்கவேண்டும் என கனவு காண்பர்.

கனவுகளைத்தொலைத்தவர்கள், கனவுகளை விதைத்தவர்கள், கனவுகளிலேயே வாழ்பவர்கள்  என பலதரப்பட்டவர்கள் பற்றியும் எழுதியிருப்போம், பேசியிருப்போம்.

எங்கள் மத்தியில் கலை, இலக்கிய ஆர்வலராகவும், பட்டிமன்ற பேச்சாளராக மேடைகளை கலக்குபவராகவும், புகலிடத்தில் எமது இளம் தலைமுறைக்கு தமிழ்க்கல்வியை போதிப்பதில் அர்ப்பணிப்புள்ள தொண்டராகவும்  விளங்கும் எமது இனிய நண்பர் திருநந்த குமார் அவர்கள் சிறுபராயத்தில் எத்தகைய கனவுகளை கண்டார்..?  என்பது எமக்குத்தெரியாது. அவரது பெற்றோர்களும் ஆசிரியர்களும் அவர் சமுதாயத்தில் எந்த நிலைக்கு வரவேண்டும் என்று எத்தகைய கனவுகளை கண்டனர்…? என்பதும் தெரியாது.

ஆனால், பாடசாலைப்பருவத்தில் திருநந்தகுமார், பெற்றோர், ஆசிரியர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களினால், ” இவர் எதிர்காலத்தில் ஒரு இராணுவ உயர் அதிகாரியாக அல்லது பொலிஸ் துறையில் ஒரு உயர்ந்த பதவியை வகிப்பவராக வரக்கூடும் என்றுதான்  எண்ணியிருப்பார்கள் எனச் சொல்லத்தோன்றுகிறது.

” விளையும் பயிரை முளையிலே தெரியும்” என்று முன்னோர்களும் சொல்லிவிட்டுச்சென்றமையால் இந்தக்கனவுகள் பல்வேறு பரிமாணங்களை பெறுகின்றன.

தற்பொழுது அவுஸ்திரேலியா சிட்னியில் வதியும் எமது நண்பர் திருநந்தகுமார் அவர்களுக்கு தற்பொழுது மணிவிழாக்காலம் என அறிந்தமையால்,  ஆளுமைகள் பற்றிய எனது தொடர்பத்திகளில் அவர் பற்றியும் எனது அவதானங்களையும் பதிவுசெய்யவிரும்பினேன்.  இலங்கையில் அவர்  யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த காலப்பகுதியிலிருந்தே  அவருடனான  எனது நட்புறவு எந்த விக்கினமும் இல்லாமல்  நீடிக்கிறது.

1977 இற்குப்பின்னர் யாழ்ப்பாணத்தில் இவரையும் கம்பவாரிதி ஜெயராஜ், குமாரதாசன் ஆகியோரையும் சந்தித்துவிட்டு வந்து வீரகேசரியில் இலக்கியப்பலகணியில் எழுதியிருக்கின்றேன். நல்லூரில் சங்கீத கலைஞர் சத்தியபாமா ராஜலிங்கம் அவர்களின் இல்லத்தில் இவர்கள் எனக்கும் நண்பர் மல்லிகை ஜீவாவுக்கும் ஒருநாள் இராப்போசன விருந்து வழங்கி உபசரித்தது நினைவில் தங்கியிருக்கிறது. அன்றைய சந்திப்பில் நண்பர் கவிஞர் புதுவை இரத்தினதுரையும் கலந்துகொண்டார்.

அச்சமயம் திருநந்தகுமாரின் கல்விப்பின்னணியோ அவரது எதிர்காலக்கனவுகள் பற்றியோ எதுவும் எனக்குத்தெரியாது.

வடபுலத்தில் இணுவையூரில் திருநாவுக்கரசு – பவளரத்தினம் தம்பதியரின் செல்வப்புதல்வன் திருநந்தகுமார், தனது ஆரம்பக்கல்வியை இணுவில் சைவப்பிரகாச வித்தியாலயத்தில் தொடங்கினார். இன்று இப்பாடசாலை, இணுவில் இந்துக்கல்லூரியாகத்திகழ்கிறது. பின்னர் தமது இடைநிலை – மேல்நிலை கல்வியை யாழ். இந்துக்கல்லூரியில் ஆரம்பித்திருக்கிறார்.

இங்கு பயிலும் காலத்தில் இவரிடத்தில் இளமைக்காலத்திலிருந்த  சுயஆற்றல்கள்தான் இவரது கனவுகள் என்னவாக அப்போதிருந்திருக்கும் என்று எண்ணத்தோன்றுகிறது. இவரது யாழ். இந்துக்கல்லூரி வாழ்க்கைதான் இந்தப்பத்தியின் தொடக்கத்தில் குறிப்பிட்ட, இராணுவ உயர் அதிகாரியாக அல்லது பொலிஸ் துறையில் ஒரு உயர்ந்த பதவியை வகிப்பவராக எதிர்காலத்தில்  வரக்கூடும் என்று எண்ணத்தக்க கனவுகளை  பெற்றவர்கள், உற்றவர்கள், ஆசிரியர்களிடம் இவர் விதைத்திருப்பாரோ என்று யோசிக்கவைக்கிறது.

யாழ். இந்துக்கல்லூரியில், திருநந்தகுமார் பேச்சாற்றல் மிக்க மாணவனாகவும் இருந்திருக்கக்கூடும். அதற்கான சந்தர்ப்பங்களை கல்லூரி மேடைகள்தான் தரும்.

1970 முதல் 1976 வரையில் இவர் அங்கு மற்றும் ஒரு முக்கியமான துறையில் தீவிரமாக இருந்திருக்கிறார் என்பதை அறிந்தபோதுதான் இவர் மேற்சொன்ன கனவுகளை விதைத்திருக்கலாமோ என எண்ணவைக்கிறது.

அனைத்துலக ரீதியாக இளம் தலைமுறையின் மத்தியில் உடல், உள, ஆளுமை மேம்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட சாரணீயம் (Scouting) அமைப்பில் இவரும் இணைந்திருக்கிறார். சாரணர் என்னும் அமைப்பின் தோற்றத்திற்கு வித்திட்டவர் 1906 -1907 காலப்பகுதியில் பிரித்தாணியாவில் இராணுவத்தில் லெப்டினன் ஜெனரல் தரத்தில் பணியாற்றிய பேடன் பவல்.

இவரது சிந்தனையில் தோன்றியதுதான் சாரணர் இயக்கம் என அறிகின்றோம்.  தேசத்தின் பாதுகாப்பு, தனிமனித ஆளுமை வளர்ச்சி, தன்னம்பிக்கை, நெருக்கடியான காலத்தில் மக்களுக்கு பணியாற்றுவது, மருத்துவ சிகிச்சை, முதலுதவி பயிற்சிகள் பற்றிய அறிவூட்டல் முதலான உணர்வுகளையும் அறிவையும் இளம் தலைமுறையினரிடத்தில் வளர்ப்பது முதலான நோக்கங்களை அடிப்படையாகக்கொண்டது சாரணீயம்.

இளைஞர்களுக்கான சாரணீயத்தில் தமது கல்லூரி வாழ்வில் இணைந்திருப்பவர்தான் திருநந்தகுமார். 1970 இல் இந்துக்கல்லூரியின் சாரணர் இயக்கத்திலிருந்து பொலிஸ் கடேற்படைக்கும் வந்தவர், பின்னாளில் சிறந்த பேச்சாளராக தன்னை வளர்த்துக்கொண்ட திருநந்தகுமாரை  ஆசிரியர்கள் சுந்தரதாஸ் ( இன்ஸ்பெக்டர்) , மரியதாஸ் (சப் இன்ஸ்பெக்டர்) ஆகியோர்  இந்தத்துறையில் வழிகாட்டி,  நெறிப்படுத்தியிருக்கிறார்கள்.

கல்லூரியின் மாணவர் முதல்வராகவும் ( Prefect) செயற்பட்டிருக்கும் திருநந்தகுமார், கல்லூரியின் சஞ்சிகையான இந்து இளைஞனில் ஆசிரியராகவும் இயங்கியவர். கல்லூரியின் உயர்தர மாணவர் ஒன்றியத்திலும் இவர் துணைத்தலைவராக வலம்வந்திருப்பவர்.

அதனால் இவருக்கும் எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் உருவாகியிருக்கிறது. கல்லூரி உடற்பயிற்சி, இல்ல விளையாட்டுப்போட்டிகளும் இவருடைய வளர்ச்சிக்கு தூண்டுகோளாகியிருக்கலாம். இங்குதான் இவருடைய உரத்த குரலுக்கும் பயிற்சி வந்திருக்குமோ எனவும் எண்ணத்தோன்றுகிறது.

சிலரது மேடைப்பேச்சுக்கள் மண்டபத்தில் அதிருவதை  அவதானித்திருப்பீர்கள். அத்தகைய அனுபவத்தை நானும் ஒரு தடவை திருநந்தகுமாரின் பேச்சின்போது அவதானித்திருக்கின்றேன்.

சிட்னியில் சில வருடங்களுக்கு  முன்னர் நடந்த கம்பன் விழாவுக்கு சென்றிருந்தபோது  அங்கு நடந்த பட்டிமன்றத்தில் இவரது குரலால் மண்டபத்தின் கூரை அதிர்ந்த உணர்வை நான் பெற்றிருக்கின்றேன். அந்த அனுபவத்தை  இவருடன் பகிர்ந்துகொண்டபோது, மென்மையான புன்னகைதான் அவரது முகத்தில் அரும்பியது.

புன்னகைக்கும் உரத்த பேச்சுக்கும் இடையில்தான் எவ்வளவு வேறுபாடு!!!.

யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்ற ஆசிரியர்களான யாழ்ப்பாணம் தேவன், வித்துவான்கள் சிவராமலிங்கம், ஆறுமுகம் ஆகியோர்களுடனான நெருக்கம் இவரை  மாணவப்பருவத்திலேயே  தமிழ் இலக்கிய ஈடுபாட்டிற்கு வழிவகுத்திருக்கிறது. தமது  தமிழ்ப்பேச்சாற்றல், ஆய்வாற்றல் என்பவற்றிற்கு அவர்கள் நல்ல வழிகாட்டிகளாக திகழ்ந்திருப்பதாக இவர்  சொல்கிறார்.

கம்பன் கழகத்துடனான இவரது தொடர்பு 1976 இற்குப்பின்பே ஏற்பட்டிருக்கிறது. புதுக்குடியிருப்பு கந்தசுவாமி கோயிலின் வருடாந்த உற்சவத்தில் நடந்த பட்டிமன்றமே, இவருக்கு பட்டிமன்றங்களுடனா உறவுக்கு கால்கோள் இட்டிருக்கிறது.

ஜெயராஜுக்கு அக்காலப்பகுதியில் கம்பவாரிதி பட்டம் கிடைத்திருக்கவாய்ப்பில்லை. அன்று புதுக்குடியிருப்பில் தொடங்கிய இவர்கள் இருவருக்கும் இடையிலான நட்புறவு நான்கு தசாப்தங்களையும் கடந்து எந்த விக்கினமுமில்லாமல் தொடர்வதற்கு கம்பரும் காரணமாகியிருக்கலாம்.

பட்டிமன்ற பேச்சாளராக வடபகுதியில் கலக்கிக்கொண்டிருந்தவாறு இணுவில் சைவப்பிரகாச வித்தியாலயத்தில் மாணவர்களுக்கு உடற்பயிற்சி வழங்கும் தொண்டர் ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார்.

இலங்கை நீதிமன்ற சேவையில் எழுதுவினைஞராக இணைந்த 1980 காலப்பகுதியிலேயே கம்பவாரிதி ஜெயராஜ், குமாரதாசன், மருத்துவர் ரட்ணகுமார்  முதலானோருடன் இணைந்து அகில இலங்கை கம்பன் கழகத்தை உருவாக்கியிருக்கிறார். இவர்கள் நால்வரும்தான்  கம்பன் கழகத்தின் ஸ்தாபகர்கள் என்று நான் அறிந்திருந்தாலும்.  வேறும் சிலரும் இருக்கக்கூடும் எனவும் கருதுகின்றேன்.

வடபகுதியில் உயர்தரவகுப்பு மாணவர்களுக்கு கம்பராமாயணம் தொடர்பான  விரிவுரைகளையும் கம்பவாரிதியும் இவரும் நடத்தியிருக்கிறார்கள்.

யாழ். மேல் நீதிமன்றம், முல்லைத்தீவு ஆரம்ப நீதிமன்றம் ஆகியனவற்றில் பதிவாளராகவும் பணியாற்றியவாறு தாம் உயர்கல்வி கற்ற யாழ். இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்திலும் இணைந்து கல்லூரியின் வளர்ச்சிக்கு உழைத்திருக்கிறார். போட்டிப்பரீட்சையின் ஊடாக ஆங்கில ஆசிரியராகியிருககும் இவர், புங்குடுதீவு மகா வித்தியாலயத்திலும் தாம் உயர் கல்வி கற்ற யாழ். இந்துக்கல்லூரியிலும் ஆங்கில ஆசிரியராக பணியாற்றியவர். இவரிடம் கற்ற பலர் பின்னாளில் கலை, இலக்கிய, கல்வி, ஊடகத்துறையிலும் ஈடுபட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தகுந்தது. யாழ்ப்பாணத்தில் ரோட்டறிக்கழகம் உட்பட சில சமூக அமைப்புகளிலும் அங்கம் வகித்திருக்கிறார் என்பதும்  யாழ். ரோட்டரி கழகத்தின் காலாண்டு ஆங்கில இதழ் சக்கரம் இவருடைய மேற்பார்வையில் வெளியாகியிருக்கிறது என்பதும் இச்சங்கத்தின் செயலாளராக பதவி வகித்திருப்பதும் இவர் பற்றிய மேலதிக செய்திகள்.

1996 இல் தாயகம் விட்டு புறப்பட்ட இவர்,  நியூசிலாந்து ஓக்லந்துக்கு  முதலிலும் பின்னர் அவுஸ்திரேலியா குவின்ஸ்லாந்துக்கும் அதன் பிறகு சிட்னிக்கும் வந்தவர்.

உள்ளார்ந்த பேச்சாற்றல், எழுத்தாற்றல் மிக்க இவர்,  இந்த நாடுகளுக்கு வந்த பின்னரும் தமது சமூகப்பணியை  தொடர்ந்திருப்பவர். நியூசிலாந்து தமிழ்ச்சங்கத்தில் முதல் முதலில் பட்டிமன்றத்திற்கு விதையிட்டவரும்  இவர்தான். அங்கு வெளியான வெண்ணிலவு இதழின் வரவுக்கும் காரணமாக இருந்திருக்கிறார்.

புத்தாயிரம் (2000) காலப்பகுதியில் நியூசிலாந்து தமிழர்களின் வாழ்வியலை சித்திரிக்கும்  வீடியோ சஞ்சிகையையும் தொகுத்து வெளியிட்டவர்.

இவ்வாறு தொடர்ச்சியாக  தாம் பிறந்த ஊருக்கும்,  கல்வி பயின்ற பாடசாலைகளுக்கும், தமிழ் மாணவர் சமுதாயத்திற்கும் சேவையாற்றியிருக்கும்  திருநந்தகுமார்,  தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்த பின்னரும் தானுண்டு தன் குடும்பம் உண்டென்று ஒதுங்கியிருக்கவில்லை.

அதனால் இவரும் எம்மத்தியில் முன்னுதாரணமாகத்திகழுகின்றார்.

அவுஸ்திரேலியாவுக்கு நான் 1987 இல் புலம்பெயர்ந்த காலப்பகுதியில் சிட்னி ஹோம் புஷ் பிரதேசத்தை குட்டி யாழ்ப்பாணம் என அழைப்பார்கள். அங்கு தமிழ் மக்கள் செறிந்து வாழ்ந்தமையால் தமிழ்ப்பாடசாலைகளின் உருவாக்கத்திற்கும் சிட்னி ஹோம் புஷ் பிரதேசம் முன்னோடியாகத்திகழ்ந்திருக்கிறது.

சிட்னியில் ( அமரர்கள்  ) வேந்தனார் இளங்கோ, எஸ்.பொ, கவிஞர்கள் அம்பி,  பாஸ்கரன், ஓவியர் ஞானம்,  பேராசிரியர் ஆசி. கந்தராஜா, மாத்தளை சோமு, சுந்தரதாஸ், சவுந்தரி கணேசன், குலசேகரம் சஞ்சயன், தனபாலசிங்கம்    உட்பட பல கலை, இலக்கிய ஊடகத்துறையினருடனான உறவும்,  இங்கிருக்கும் தமிழ் அமைப்புகளுடான நெருக்கமும் இவருக்குள்ளும் பல கனவுகளை விதைத்திருக்கிறது.

எமது அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்திலும் இணைந்திருக்கும் திருநந்தகுமார்,  எமது சங்கம் மெல்பன், சிட்னி, கன்பரா, கோல்ட்கோஸ்ட் முதலான பிரதேசங்களில் நடத்தியிருக்கும் எழுத்தாளர் விழாக்களிலும் பங்கேற்றிருப்பவர். குறிப்பாக தமிழ் மாணவர்களுக்கான அரங்குகளை இவர்தான் நெறிப்படுத்தியிருக்கிறார்.

தம்மிடம் சிட்னியில் உயர்தர வகுப்பில் தமிழ் கற்கும் மாணவர்களின் பேச்சாற்றலையும் எழுத்தாற்றலையும் இனம்கண்டு தெரிவுசெய்து,  அவர்களையும் எமது எழுத்தாளர் விழாக்களுக்கு ஒரு தந்தையின் பரிவோடு அழைத்துவந்திருக்கின்றார்.  பெரும்பாலான சந்தர்ப்பங்களில் புகலிடத்தில் தமிழ்க்கல்வி சார்ந்த உரைகளே இவரது பேசுபொருளாக இருக்கும். சிட்னியில் 2008 இல் நடந்த எமது சங்கத்தின் எட்டாவது எழுத்தாளர் விழாக்குழுவின் ஏற்பாட்டாளர்களில் இவரும் ஒருவர்.

தம்மிடம் கற்கும் மாணவர்களிடம் ஈழத்து, தமிழக மற்றும் புகலிட இலக்கியம் பற்றிய பிரக்ஞையை வளர்த்து எமது இளம் தலைமுறையினரிடத்தில் தமிழ் இலக்கிய அறிவை வளர்த்த அரிய பணிகளிலும் இவர் முன்னோடியாகத்திகழ்ந்திருக்கிறார்.

நியுசவுத்வேல்ஸ் தமிழ்ப்பாடசாலைகளின் கூட்டமைப்பின்  சார்பில் ஆசிரியர்களுக்கு பயிற்சிகளை வழங்கியிருக்கும் இவரை மெல்பன் ஈழத்தமிழ்ச்சங்கம், பிரிஸ்பேர்ண் தாய்த்தமிழ்ப்பள்ளி ஆகியனவும் அழைத்து தமிழ் ஆசிரியர்களுக்கான பயிற்சிகளை வழங்கியிருக்கிறது.

2006 ஆம் ஆண்டு முதல் நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தில் இயங்கும் மொழித்துறைக்கான சமூகப்பாடசாலைகள் ஒன்றியத்தின் துணைத்தவைராகவும் பணியாற்றி வருகிறார்.

தமது வாழ்வின்  பெரும்பாலான நேரத்தை,  தாம் சார்ந்த சமூகத்திற்கும் மொழிக்கும் கலை, இலக்கியத்திற்கும் செலவிட்டுவரும் நண்பர் திருநந்தகுமார் அவர்கள் வாழும் காலத்திலேயே பாராட்டி கௌரவிக்கப்படவேண்டியவர்.

அவருக்கு 60 வயது என்பது மணிவிழாவை நினைவூட்டுவதற்கு மாத்திரமல்ல, அவர் குறித்த பதிவை எழுதுவதற்கும் எனக்கு சந்தர்ப்பத்தை தந்திருப்பதாகவே கருதுகின்றேன்.

சிட்னியில்,    தமிழ் அன்பர்கள் இணைந்து இவருடைய மணிவிழாவை விரைவில் கொண்டாடவிருக்கிறார்கள்.

எமது நீண்ட கால இனிய நண்பருக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

—0—

Series Navigationதிரைவானில் நானோர் தாரகை !குடும்பவிளக்கு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *