பாகிஸ்தானின் க்வாதர் துறைமுகமும் ஈரானின் ச்சாபஹார் (Chabahar) துறைமுகமும்

This entry is part 10 of 11 in the series 3 டிசம்பர் 2017

Chabahar-vs-Gwadar-mapஇந்தியாவினால் கட்டி முடிக்கப்பட்டிருக்கும், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இரானின் ச்சாபஹார் (Chabahar) துறைமுகத்தின் முதலாவது பகுதி இன்றைக்கு பயன்பாட்டிற்கு வருகிறது. முன்னாள் பாரதப் பிரதமர் அவர்களால் வழிமொழியப்பட்டு, பின்னால் வந்த காங்கிகிரஸ் அரசினால் மூலையில் தூக்கியடிக்கப்பட்டுக் கிடந்த ச்சாபஹார் துறைமுக புராஜெக்ட் இந்தியாவைப் பொறுத்தவரையில் மிக, மிக முக்கியமான ஒன்று. இதன்மூலம் ஆப்கானிஸ்தானும் பிற முன்னாள் சோவியத் பகுதிகளான உஸ்பெக்கிஸ்தான், தஜாகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் போன்ற மத்திய ஆசிய நாடுகளுடன் இந்தியர்கள் வியாபாரத் தொடர்பு கொள்வது எளிதாக்கப்பட்டிருக்கிறது. மத்திய ஆசிய நாடுகளையும் தாண்டி ஐரோப்பிய நாடுகள் வரைக்கும் இந்தியா வியாபாரம் செய்வதும் இதன் மூலம் சாத்தியமாகியிருக்கிறது என்கிற வகையில் ச்சாபஹார் எதிர்காலத்தில் மிக முக்கியமானதொரு இடத்தினைப் பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஒருவகையில் இது சீன-பாகிஸ்தானின் கூட்டணியில் கட்டப்பட்ட பாகிஸ்தானின் க்வாதர் (Gwadar) துறைமுகத்திற்கு எதிரானது. சீனாவின் கனவுத் திட்டமான CPEC அல்லது One Road, One Belt திட்டத்திற்குத் தலைவலியை உருவாக்கியிருக்கிறது. சீனா ஏறக்குறைய 56 பில்லியன் டாலர்களை CPEC திட்டத்திற்காக பாகிஸ்தானில் செலவழித்துக் கொண்டிருக்கிறது. சீனாவின் மேற்குப் பகுதியிலிருந்து பொருட்களை பாகிஸ்தானின் க்வாதர் துறைமுகத்திற்குக் கொண்டு வந்து பின்னர் அங்கிருந்து ஏற்றுமதி செய்வது, வளைகுடாவில் வாங்கும் எண்ணெயை பைப்லைன்கள் மூலம் சீனாவுக்குக் கொண்டு செல்வது, அங்கிருந்து மத்திய ஆசியாவிற்கும், ஐரோப்பாவிற்கும் ஆப்கானிஸ்தான் வழியாக பொருட்களை ஏற்றுமதி செய்வது….என ஏராளமான சீன-பாகிஸ்தானிய திட்டங்கள் குறைந்தபட்சம் தற்காலிக பின்னடைவை எட்டியிருக்கின்றன.

ஆப்கானிஸ்தானில் புதிய சாலைகள், ரயில் பாதைகள் அமைத்து பாகிஸ்தானின் குவாதரிலிருந்து மத்திய ஆசியாவிற்கு வியாபாரம் செய்ய நினைக்கும் சீனாவின் எண்ணம் அத்தனை எளிதில் நிறைவேறியிருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் அந்தப் பாதை தாலிபான்கள் நிறைந்து கிடக்கும் ஆப்கானிஸ்தானியப் பகுதி வழியே செல்ல வேண்டியிருக்கும். மேலும் பாகிஸ்தானிய, ஆப்கானிஸ்தானிய உறவு சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. இந்தியர்களை விடவும் ஆப்கானிய-பாகிஸ்தானிய உறவு மிகவும் சீர்கெட்டுக் கிடக்கிறது. இருந்தாலும் சீன-பாகிஸ்தானிய நாடுகள் இந்தியாவை ராணுவ ரீதியாக மிரட்டுவதற்கு க்வாதர் துறைமுகத்தை உபயோகித்துக் கொள்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.

இந்திய சுதந்திரத்திற்கு முன்னர் பிளவுபடாத இந்தியா எல்லா மத்திய ஆசிய நாடுகளுடனும் வியாபாரத் தொடர்பு கொண்டிருந்தது. பாகிஸ்தான் உருவாக்கப்பட்ட பிறகு அந்த வழி முற்றிலுமாக அடைபட்டுப் போனது. பலமுறை வேண்டுகோள் விடுத்தும் பாகிஸ்தான் அதன் சாலைகளை உபயோகிக்க இந்தியாவிற்கு அனுமதி மறுத்தே வந்திருக்கிறது. அவ்வாறு அனுமதித்திருந்தால் பொருளாதார ரீதியில் பாகிஸ்தானும், இந்தியாவும் ஏராளமாக பயனடைந்திருக்கும். இந்தப் பிராந்தியத்தில் சீனா தன் மூக்கை நுழைக்காமலிருந்திருக்கும். ஆனால் இந்திய வெறுப்பு என்கிற ஆயுதம் ஒன்றை மட்டுமே தனது கொள்கையாகக் கொண்ட பாகிஸ்தான் அதனைப் பொருட்படுத்தவில்லை. இன்றைக்குக் கிடந்து குதிக்கிறார்கள்.

ச்சாபஹார் துறைமுகத்திலிருந்து ஐரோப்பா வரைக்கும் முன்னாள் சோவியத் யூனியனின் புண்ணியத்தில் ரயில் பாதைகள் இருக்கின்றன. இந்தியா இந்தப்பாதைகளிய உபயோகித்து ஐரோப்பா வரைக்கும் வியாபாரம் செய்ய ஒரு வாய்ப்பு இன்றைக்கு வந்திருக்கிறது. அதனை வெள்ளோட்டம் விட்டுப் பார்த்திருக்கிறார்கள். அதன்படி, ச்சாபஹாரிலிருந்து ரயில் மூலம் கொண்டு செல்லப்படும் பொருட்கள், சூயஸ் கால்வாயின் வழியாக கப்பலில் கொண்டு செல்லும் பொருட்களை விடவும் பதினான்கு நாட்கள் முன்னதாகவே சென்றடைந்திருக்கின்றன. அதையும்விட, கப்பலில் அனுப்பப்பட்ட கண்டெயினர்களை விடவும், ச்சாபஹார் துறைமுகம் வழியாக அனுப்பப்பட்ட ஒவ்வொரு கண்டெயினருக்கும் ஏறக்குறைய 2500 டாலர்கள் குறைவாகவே செலவாகியிருக்கிறது. எனவே வருங்காலத்தில் ச்சாபஹார் முக்கியத்துவம் பெறும் என்பதில் சந்தேகமில்லை.

இருந்தாலும், சிக்கல்கள் இல்லாமல் இல்லை. ஒப்புதல் அளித்து பல ஆண்டுகளான பிறகும், அமெரிக்காவிற்குப் பயந்து எந்த முடிவும் எடுக்காமல் தூங்கிக் கொண்டிருந்த காங்கிரஸ் அரசாங்கத்தின் செயலற்ற தன்மை காரணமாக இரானியர்களுக்கு இந்தியர்களின் மீதான நம்பிக்கை சிறிது தளர்ந்தே இருக்கிறது. அமெரிக்கா சொன்னால் அதற்கேற்றபடி ஆடக்கூடியவர்கள் என்கிற எண்ணமும் அவர்களுக்கு இருப்பதால் இந்தியாவை சிறிது சந்தேகத்துடனேயே நோக்குகிறார்கள். மேலும் ச்சாபஹார் இந்தியாவிற்கு மட்டுமே இல்லை என்கிற அறிவுப்பும் அவர்களிடமிருந்து வந்திருக்கிறது. சீன, பாகிஸ்தானிய, ஐரோப்பிய, ரஷ்ய முதலீடுகளை ச்சாபஹாரில் வரவேற்றிருக்கிறார்கள் (ச்சாபஹாரை இன்னொரு துபாயாக மாற்றும் எண்ணம் இரானியர்களுக்கு இருக்கிறது). அதையும்விட, பாகிஸ்தானின் க்வாதர் துறைமுகத்திற்கும் ச்சாபஹார் துறைமுகத்திற்கும் ரயில்பாதை அமைக்கவும் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. அது நடந்தால் இந்தியாவின் முக்கியத்துவம் பெரிதும் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால் பாகிஸ்தானிய க்வாதரும், இரானிய ச்சாபஹாரும் அருகருகே அமைந்திருக்கின்றன. சீனா, பாகிஸ்தானில் தனது முதலீடு நஷ்டமடைவதைப் பார்த்துக் கொண்டிருக்காது.

Series Navigationஅதிகாரப்பரவல்தேச விரோதத்திற்குப் பயன்படும் கருத்துச் சுதந்திரம்
narendran

பி எஸ் நரேந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *