தொடுவானம் 200. நாடக அரங்கேற்றம்

This entry is part 3 of 20 in the series 17 டிசம்பர் 2017

டாக்டர் ஜி. ஜான்சன்

200. நாடக அரங்கேற்றம்

டாக்டர் பார்த் இன்னும் சில மாதங்களில் ஓய்வு பெற்று சுவீடன் திரும்பிவிடுவார். அதன்பின்பு நான் மட்டுமே மருத்துவ வெளிநோயாளிப் பிரிவையும் வார்டுகளையும் கவனித்துக்கொள்ள வேண்டும். எனக்கு அது சிரமமாகத் தெரியவில்லை. காரணம் அவர் இருக்கும்போதே நான்தான் முழுதுமாக வார்டுகளிலிருந்தவர்களைக் கவனித்துக்கொண்டேன். ஒருவேளை அவர் வேண்டுமென்றே முழுப் பொறுப்பை என்னிடம் விட்டுவிட்டாரோ என்றும் எண்ணத் தோன்றியது. அவர் சென்றபின்பு நான் தனியே சமாளிக்க எனக்கு மன தைரியம் வரவேண்டும் என்றும் அவர் திட்டமிட்டிருக்கலாம். வழக்கம்போல் உயிருக்குப் போராடிட்டுக்கொண்டிருக்கும் நோயாளிகளைப் அவர் பார்க்கும்போது என்னிடம் ” Truly he will die. ” ( இவன் நிச்சயமாக மரிப்பான் ) என்று சொல்வதை அவர் தொடர்ந்தார். அத்தகைய நோயாளிகளுக்கு நான் இறுதி நேர தீவிர சிகிச்சை அளித்ததில் ஒருசிலர் பிழைத்துக்கொண்டதை பார்த்து அவர் ஏதும் சொல்லவில்லை. அதை அவர் தனக்கு தாழ்வாகவும் எண்ணவில்லை. ஒரு வேளை அத்தகைய நோயாளிகள் பட்ட அவஸ்தை போதும் என்று அவர் அவ்வாறு அவர்களை நிம்மதியாக இறக்க விட்டிருக்கலாம். அனால் என்னைப் பொறுத்தவரை எனக்குத் தெரிந்த அனைத்து மருத்துவ முறைகளையும் அவர்களின் மேல் செலுத்தி இரண்டில் ஒன்று பார்த்துவிடலாம். அப்படி நான் முயலும்போது நோயாளிகளின் உறவினர்களிடம் உண்மையைச் சொல்லிவிடுவேன். நிலைமை மிகவும் மோசமாக உள்ளது, கூடுமானவரை முயன்று பார்க்கிறேன் என்று சொல்லி அவர்களைத் தயார்படுத்தி விடுவேன்.அப்போது நோயாளி இறந்துவிட்டால் அவர்களும் அதை எதிர்பார்த்தவர்களாக ஏற்றுக்கொள்வார்கள்.

டாக்டர் பார்த் சுவீடன் திரும்பும் நாட்கள் நெருங்கியபோது அவர் வார்டுக்கு வருவதை நிறுத்திக்கொண்டு வேறொரு பணியில் ஆர்வம் காட்டினார். மருத்துவமனையின் கிராம மருத்துவச் சேவையாக சில சுற்றுவட்டார கிராமங்களுக்கு மகேந்திரா ஊர்தியில் வாரம் ஒரு நாள் சமூக சுகாதார செவிலியர் மேரி குட்டி சென்று வருவார். அவர் அறுவை மருத்துவக் கூடத்தில் பணியாற்றிய ஜான் ரத்தினம் அவர்களின் மனைவி. மலையாளி. சில நாட்களில் நான்கூட அங்கு சென்று வந்தேன். எஸ்.எஸ்.கோட்டை, கீழையூர், திருக்கோஷ்டியூர், கண்டரமாணிக்கம், கீழசிவல்பட்டி, அவற்றில் சில ஊர்கள்.அங்கு சில வாடகை வீடுகளில் அந்த கிராம சுகாதார நிலையங்கள் இயங்கின. பெரும்பாலும் மாலையில்தான் அங்கு செல்வோம்.மருந்துகளை அங்கு வைத்திருப்போம். கிராமவாசிகள் மருந்துக்கு மட்டும் கொஞ்சம் பணம் தருவார்கள். தர முடியாதவர்களுக்கு இலவசமாக மருந்துகள் தரப்படும். சிஸ்டர் மேரி குட்டியுடன் டாக்டர் பார்த் அன்றாடம் சென்று வந்தார். அவர்கள் இருவரும் ஒன்றுசேர்ந்து ஏதோ ஒரு திட்டம் தீட்டுவது எனக்குத் தெரிந்தது. அதில் டாக்டர் பார்த் மிகுந்த ஆர்வம் காட்டியதால் அவர் வார்டு பக்கம் வருவதையே நிறுத்திக்கொண்டார். மருத்துவப் பகுதியை நான் ஒருவன் மட்டும் பார்க்கும் நிலைக்குள்ளானேன். அதுவும் எனக்கு ஒரு வகையில் நல்லதாகவே தோன்றியது. நான் சுதந்திரமாக என் விருப்பப்படி பலதரப்பட்ட மருத்துவ சிகிச்சை முறைகளை நோயாளிக்ளுக்குச் செய்து பார்க்கமுடிந்தது. அது எனக்கு மிகவும் பிடித்தது.
டாக்டர் பார்த் தம்பதியருக்கு பிரியாவிடை தரும் நாள். அன்று மாலை கூகல்பர்க் நினைவு மண்டபத்தில் மருத்துவமனை ஊழியர்கள் அனைவரும் ஒன்றுகூடினோம். அரங்க மேடையில் டாகடர் பார்த், அவரின் மனைவி, டாகடர் செல்லையா அமர்ந்திருந்தனர். பார்த் தம்பதியருக்கு பெரிய மலர் மாலைகள் சூட்டியபோது அதை பெருமையுடன் ஏற்றுக்கொண்டனர். விழா முடியும்வரை அதை கழுத்தில் அணிந்தவண்ணம் இருந்தனர். அவர்களைப் பாராட்டி டாக்டர் செல்லையா புகழாரம் சூட்டினர். அதன்பின்பு டாக்டர் பார்த் ஏற்புரை வழங்கினார். அப்போது அவர் திருப்பத்தூரை அவரால் மறக்க இயலாது என்றார். சுற்று வட்டார கிராம மக்களுக்கு வேறு வகையில் உதவ ஒரு புதுத் திட்டத்துடன் விரைவில் திரும்பப்போவதாகக் கூறினார். அப்போது அனைவரும் கைதட்டி கரகோஷம் சேய்தோம். அனைவருக்கும் மாலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.
தமிழகத்தில் இருந்த காலத்தில் அவர் ஏராளமான கலைப்பொருட்களைச் சேர்த்திருந்தார். அவற்றையெல்லாம் பெரிய பெட்டிகளில் வைத்து அடைத்து கப்பல் மூலம் அனுப்பிவைத்தார். புறப்படும் நாளன்று மதுரையிலிருந்து விமானமூலம் சென்னை புறப்பட்டார். ஊழியர்கள் அவனுடைய பங்களா வாசலில் நின்று வழியனுப்பி வைத்தோம்.
பார்த் சென்ற பின்பு சில மாதங்கள் நான் மட்டுமே மருத்துவப் பகுதியைப் பார்த்துவந்தேன். அப்போது ஓர் இளம் ஜோடி விண்ணப்பம் செய்தனர். அவர்கள் டாக்டர் மூர்த்தியும், டாக்டர் ரோகினியும். அவர் சோழவந்தானைச் சேர்ந்த ஒரு பிராமணர். நல்ல நிறத்தவர். ரோகிணியும் அவருக்கு ஈடுதரும் வகையில் நிறமுடையவர். அவர் எப்போதும் டை அணிந்து வருவார் ஆங்கிலம்தான் அதிகம் பேசுவார். அவரை மருத்துவப் பகுதியில் சேர்த்துக்கொண்டோம். அவர் பெண்கள் மருத்துவ வார்டுக்கு பொறுப்பேற்கச் செய்தொம். நான் ஆண்கள் மருத்துவ வார்டை பார்த்துக்கொண்டேன். வெளிநோயாளிப் பகுதியில் இருவ்ரும் அமர்ந்துகொள்வோம். அவருடைய மனைவி ரோகினி பிரசவ வார்டில் வேலையில் சேர்ந்தார். இருவரும் வேலையில் ஆர்வம் காட்டினர்.பார்மசிக்கு எதிரே இருந்த டாக்டர்களின் வீட்டில் அவர்கள் குடிபுகுந்தனர். அவர்கள் இருவரும் எனக்கு நெருக்கமானார்கள்.நான் அவ்வப்போது அவர்களின் வீடு சென்று வருவேன்.
அவ்வாறு மருத்துவ வார்டுகளுக்குச் செல்வதும் வெளிநோயாளிகளைப் பார்ப்பதும், தொழுநோயாளிகளுக்கு கட்டுகள் போடுவதும், அவர்களைத் தேடி கிராமங்களுக்குச் செல்வதுமாக நாட்கள் கழிந்தன. பகலில் வேலையில் மூழ்கி இருந்தாலும் இரவுகளில் ஏதாவது பயனுள்ள காரியம் செய்ய எண்ணினேன். சில மருத்துவக் கட்டுரைகள் எழுதி ” மனை மலர் ” என்னும் மாத இதழுக்கு அனுப்பி வைத்தேன். அவை மாதந்தோறும் பிரசுரமானது. சில சிறுகதைகளும் எழுதினேன். அப்போது ஒருநாள் என்னைத் தேடிக்கொண்டு ஒருவர் வீட்டுக்கு வந்தார். அவர் நல்ல நிறத்தில், உயரமாகவும், முகத்தில் ஒருவித புன்னகையும் கொண்டிருந்தார். பார்த்த மாத்திரத்தில் அவர் நல்லவர் என்பது தெரிந்தது. தான் ஓர் எழுத்தாளர் என்றும் பெயர் ” அழகாபுரி அழகப்பன் ” என்றார். நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்று உபசரித்தேன்.ஒரு பிரபலமான தமிழக எழுத்தாளரின் அறிமுகம் கிடைத்தது என்னுடைய எழுத்தை செப்பனிட உதவும் என்று எண்ணினேன். அப்போது அவர் குமுதத்தில் ஒரு தொடர் கதை எழுதி வந்தார். அதில் ரமா என்ற பெண் பாத்திரத்தை வைத்து கதையை தொடர்ந்துகொண்டிருந்தார். அந்த ரமா என்பது ஓர் உண்மைப் பாத்திரம் என்றார். நான் என்னுடைய சிறுகதைகள் சேமிப்புகளை அவரிடம் காட்டினேன். அவர் அவற்றைப் படித்துவிட்டு பாராட்டினார். அவர் தேவகோட்டை செல்லும் வழியில் அழகாபுரி என்னும் ஊரில் தமிழ் ஆசிரியராகப் பணிபுரிவதாகச் சொன்னார். வீடு காரைக்குடியில் உள்ளதென்றும் கூறினார். எனக்கு தமிழ் மீதும் எழுதுவதில் ஆர்வம் உள்ளதென்றும் ஒரு நண்பர் சொன்னதாகவும் தெரிவித்தார். அந்த நண்பர் ஒரு வேளை என்னிடம் நோயாளியாக வந்திருக்கலாம் என்றேன். அன்று இரவு உணவை என்னுடன் வீட்டில் முடித்துக்கொண்டு புறப்பட்டார்.அதன்பிறகு சனி ஞாயிறுகளில் வர ஆரம்பித்தார். சில இரவுகள் வீட்டில் தங்கிவிடுவார். கதை எழுத என்னுடைய மாடி வராந்தா சிறந்த இடம் என்றார். எங்களிடையே இலக்கிய நட்பு வளர்ந்தது. நானும் நிறையவே எழுதத் தொடங்கினேன்
மருத்துவமனையில் ஏராளமான ஊழியர்களின் பழக்கம் உண்டானபோது அவர்களின் தனித்தன்மைகளை உணரலானேன். அவர்களில் சிலரை வைத்து ஒரு நாடகம் தயார் செய்து அதில் நானும் நடித்து அரங்கேற்றம் செய்ய முடிவு செய்தேன். இரவு நேரங்களில் மாடியிலுள்ள வராந்தாவில் அமர்ந்து நாடகத்தை எழுதினேன். அது சமூக நாடகம். அப்போது இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தியிருந்தார். அதைப் பின்னணியாக வைத்து நாடகத்தை எழுதினேன். அதன் தலைப்பு ” எமர்ஜன்சி ஆபீசர் ” என்பது. நாட்டில் நடக்கும் ஊழல்களை அம்பலப்படுத்தி கதையை உருவாக்கினேன். அதில் பஞ்சாயத்துத் தலைவர், மாவட்டப் பொறியியலாளர், மாவட்ட மருத்துவ அதிகாரி, மாவட்ட காவல் அதிகாரி,சாலைகள் அமைக்கும் காண்டிராக்டர், சில பொதுமக்கள். இரண்டு நகைச்சுவைப் பாத்திரங்கள் என்று தேர்வு செய்தேன்.நாடகம் சுவையாக இருக்க ஒரு கதாநாயகியையும் சேர்த்துக்கொண்டேன். நாடகத்தை வேகமாக எழுதி முடித்தேன். எமர்ஜன்சி ஆபிசர் வரப்போகிறார் என்பதை அறிந்த அத்தனை ஊழல் பேர்வழிகளும் எப்படி ஊரை மாற்றியமைக்க முயல்கிறார்கள் என்பதே கதையின் கரு. இடையில் ஒரு சிறு காதலும் சேர்த்துக்கொண்டேன்.
பாத்திரங்களைத் தேர்ந்தெடுப்பதில் சிரமம் ஏற்படவில்லை. போட்டிபோட்டுக்கொண்டு நடிக்க பலர் முன்வந்தனர். அவர்களில் ஜெயபாலன், மைக்கல் , மோகனதாஸ். டாக்டர் ராமசாமி, இருதயராஜ், பிச்சை, கருணாகரன், சாமுவேல், ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். நாடக ஒத்திகையை அன்றாடம் இரவில் கூகல்பர்க் நினைவு மணடபத்தில் நடத்தினோம். அனைவரும் வசனங்கள சிறப்பாக மனப்பாடம் செய்தனர். நான் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்தேன்.ஊழல் செய்பவர்களைப் பிடிக்கும் கடமை வீரர் அவர். அந்த ஒரே பெண் பாத்திரம் அவருடைய காதலி. அவள்தான் அந்த பஞ்சாயத்துத் தலைவரின் ஒரே மகள். அவர்தான் அங்கெ பெரிய ஊழல் பேர்வழி! இப்படி ஒரு சமூக நாடகத்தை அரங்கேற்ற தயார் செய்தேன். ஆனால் அப்போது கதாநாயகியாக நடிக்க பெண் கிடைக்கவில்லை. தாதியர் பயிற்சிப்பள்ளியில் அழகான பெண்கள் இருந்தனர். நான் அவர்களை அணுகவில்லை. கருணாகரன் பெண் வேடமிட்டான். ஒப்பனை செய்தவர் அவனை அப்படியே ஒரு பெண்ணாக மாற்றிவிட்டார்.
ஒப்பனைக்கும் நாடக மேடை அமைப்புக்கும் காரைக்குடியில் ஒரு நிறுவனம் இருந்தது. அவர்களை அணுகி முன்பணம் செலுத்தினேன். ஒளி ஒலி அமைப்புக்கும் அவர்கள் மூலமே ஏற்பாடு செய்தொம். அந்த செலவுகளை மனமகிழ் மன்றம் ஏற்றுக்கொண்டது. நாடக நடிகர்களின் பெயர்கள் கொண்ட துண்டறிக்கை அச்சிட்டு ஊழியர்களுக்கு விநியோகித்தோம். சமூக நாடகம் என்பதால் அவரவர் உடைகளை தயார் செய்துகொண்டோம். எனக்கு மட்டும் போலீஸ் இன்ஸ்பெக்டர் உடையை வாடகைக்கு எடுத்துக்கொண்டோம்.
நாடகம் அரங்கேற்றும் நாள். நாங்கள் மும்முரமாக செயல்பட்டோம். மாலையிலேயே ஒவ்வொருவராக ஒப்பனை செய்துகொண்டோம். எனக்கு தலையில் டோப்பா வைத்து ஒப்பனை செய்தார். போலீஸ் உடையில் கம்பீரமாகவே தோன்றினேன்.நானே நாடகத்தை இயக்கினேன். மற்றவர்கள் நடிக்கும்போது நான் திரை மறைவில் நின்றுகொண்டு வசனத்தை சொல்வதில் அவர்கள் தடுமாறினால் நான் சொல்லித்தருவேன். என்னுடைய காதல் காட்சியில் நான் கதாநாயகியுடன் ஒரு பாடலுக்கு ஆடவேண்டும். நாங்கள் ஆடியபோது பலத்த கைத்தட்டல் கிடைத்தது. அந்த இரண்டு மணி நேர நாடகம் சிறப்பாக நடந்து முடிந்து. டாக்டர் செல்லையா எங்களைப் பாராட்டினார்.
( படத்தில் நான் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்த காட்சி )

( தொடுவானம் தொடரும் )

Series Navigationமொழிவது சுகம் டிசம்பர் 16 2017 டாக்டர் ஜேகில் (Dr.Jekyill) முதல் தஷ்வந்த் வரைஅழுத்தியது யார்?
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *