இரவு

0 minutes, 0 seconds Read
This entry is part 2 of 12 in the series 7 ஜனவரி 2018

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

வலியின் உபாதை யதிகமாக
முனகியபடி புரண்டுகொண்டிருக்கும் நோயாளிக்கு
இரவொரு பெருநரகம்தான்.
மறுநாள் அதிகாலையில் கழுமேடைக்குச் செல்லவுள்ள
கைதிக்கு கனவுகாண முடியுமோ இரவில்….
தெரியவில்லை.
எலும்புருக்கும் இரவி லொரு முக்காலியில் ஒடுங்கியபடி
தொலைவிலுள்ள தன் குடும்பத்தை
இருட்டில் தேடித் துழாவும் கண்களோடு
அமர்ந்திருக்கும் காவலாளிக்கு
இரவென்பதொரு இருமடங்கு பகலாய்….
போரற்ற பாருக்காய் ஏங்கிக்கொண்டே
அவரவர் நாட்டின் எல்லைப்புறஙளில்
ஆயுதந்தாங்கிக் கண்காணித்துக்கொண்டிருக்கும்
படைவீரர்களுக்கு
இரவென்பதும் இன்னொரு கண்ணிவெடியாய்….
ஒருவேளை சோறில்லாமல் தெருவோரம் படுத்துறங்கும்
பிச்சைக்காரருக்கு இரவென்பது
கனரக வாகனத்திற்கு பலியாகிவிடலாகும்
ரணகளமாய்…
பிறரெல்லாம் உறங்கிக்கொண்டிருக்க
சிறுநீர் கழிக்கத் தனியாய் நகரமுடியாமல்
அதை யடக்கப் பிரயத்தனப்பட்டுக்கொண்டிருக்கும்
பெரியவருக்கு இரவொரு
கடக்கவியலா பெருந்துயராய்…
இத்தனையும் தானேயாகிவிடுவதாய் உணரும் மனம்
கையறுநிலையில் கத்தித் தீர்த்த பின்னும்
இரவின் மாயக்கோல் வழி கிளம்பும்
முயலையும் புறாவையும்
கனவும் நனவும் குழம்பி மேலெழும்பும்
வண்ணக்குமிழ்களையும்
எண்ணியும் கண்டும் எண்ணியும் கண்டும்
என்றும் ராப்பித்தாகிவிடுகிறது தினம்!

Series Navigationசீமானின் புலம்பல் வினோதங்கள்திருமண தடை நீக்கும் சுலோகம்
author

ரிஷி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *