தாரமங்கலம் வளவன்
“ நம்ம பொண்ணுக்கு இப்ப பதினைஞ்சு வயசு தானே ஆகுது.. அதுக்குள்ள கல்யாண மேட்டரை பத்தி அவளோட எப்படி பேச முடியும்.. நீ ஜாதகக்காரன் கிட்ட போனதே தப்பு..” என்றார் என் கணவர்.
என் கணவர் இப்படிச் சொன்னவுடன், மகள் கல்பனாவின் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு போய் ஜாதகக்காரரிடம் திருமண தடை ஏதாவது இருக்கிறதா என்று அவசரப் பட்டு கேட்டு விட்டோமோ என்று தோன்றியது எனக்கு.
நான் கேட்டவுடன், “ ஆமாம்.. திருமணத் தடை இருக்கிறது. உன் மகளை தினமும் காலையில் விளக்கை ஏற்றி வைத்து, இந்த சுலோகத்தை சொல்லச் சொல்லுங்கள்.. தடை விலகி விடும்.. ” என்று ஒரு சுலோகத்தை எழுதிக் கொடுத்து விட்டார் ஜாதகக்காரர்.
கல்பனாவுக்கு பதினைந்து வயது தான் ஆகிறது. பத்தாம் வகுப்பு தான் படித்துக் கொண்டிருக்கிறாள். அவளிடம் எப்படி இந்த விஷயத்தை ஆரம்பிப்பது.. இது தான் இப்போதுள்ள எங்களுடைய பிரச்சினை.
மாலையில் ஆபீசிலிருந்து வந்த கணவர் கேட்டார்.
“ கல்பனா படிச்சிகிட்டு இருக்காளா..”
“ படிச்சிகிட்டு தான் இருந்தா.. கொஞ்சம் கூட ரெஸ்ட் எடுக்காமா படிச்சிக்கிட்டே இருக்கா.. நான் தான் சைக்கிள எடுத்துக்கிட்டு போய் ஒரு ரவுண்டு அடிச்சி, சுத்திட்டு வான்னு சொல்லி அனுப்பி இருக்கேன்..” என்றேன்.
“ படிப்பு படிப்புன்னு இருக்கிற நம்ம கல்பனாவை, அந்த திருமண தடை நீங்கற சுலோகத்தை சொல்ல வைச்சிடலாம்.. இதுக்கு ஒரு ஐடியா இருக்கு..” என்றார் என் கணவர் உற்சாகமாய்.
எனக்கு ஆச்சர்யம்…
“ என்னங்க சொல்றீங்க.. காலையில தான் சொன்னீங்க.. இந்த மேட்டரை எப்படி அவ கிட்ட ஆரம்பிக்கிறது. அவளுக்கு பதினைஞ்சு வயசு தானே ஆகுதுன்னு..”
“ அதுக்கு தான் இந்த ஐடியா.. கல்யாணத்துக்குன்னு சொல்றது தானே நமக்கு சங்கடம்.. படிப்புக்காகன்னு சொன்னா நம்ம கல்பனா எதையும் செய்வா.. அதனால உனக்கு படிப்பு நல்லா வரும்.. இந்த சுலோகத்தை சொன்னா, அப்படின்னு சொல்லி இந்த சுலோகத்தை தினமும் சொல்ல வைச்சிடலாம்..”
தினமும், காலையிலும் மாலையிலும், பூஜை அறையில் உட்கார்ந்து கொண்டு, விளக்கை ஏற்றி வைத்து, அந்த திருமண தடை நீங்கும் சுலோகத்தை பய பக்தியுடன் கல்பனா சொல்லும் போது, அவளை ஏமாற்றுகிறோமா என்று எங்களுக்கு தோன்றும்.
எல்லாம் அவள் நன்மைக்கு தானே என்று நாங்கள் சமாதானப் பட்டுக் கொள்வோம்..
- சீமானின் புலம்பல் வினோதங்கள்
- இரவு
- திருமண தடை நீக்கும் சுலோகம்
- செந்நிறக்கோள் செவ்வாயில் எதிர்கால மனிதர் வசிப்புப் போக்குவரத்துக்கு மாபெரும் அண்டவெளித் திட்ட முதற் சோதிப்பு
- தொடுவானம் 203. எனக்கொரு மகன் பிறந்தான் …
- காதலிக்கச்சொல்லும் வள்ளுவர்.வள்ளுவர் சொல்லும் காமசூத்திரம் (1)
- குடல் வால் அழற்சி ( Appendicitis )
- ஓடிப் போய்விடு உயிருடன் ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
- குறிப்புகள் அற்ற குறியீடுகள்!
- சிறுவெண் காக்கைப் பத்து
- மகிழ்ச்சியின் விலை !
- ஆவணப்படம் வெளியீடு /கல்விக்கருத்தரங்கம்