தொடுவானம் 211. புதுக்கோட்டை பயணம்

This entry is part 12 of 12 in the series 3 மார்ச் 2018

டாக்டர் ஜி. ஜான்சன்
211. புதுக்கோட்டை பயணம்

காலையிலேயே புதுக்கோட்டைக்குப் புறப்பட்டோம். அங்கு சென்றடைய ஒரு மணி நேரமாகும். போகும் வழியில் திருமயம் கோட்டை உள்ளது. கற்பாறை மலைமீது கட்டப்பட்ட கோட்டை அது. அதன் சுவர்கள் அப்படியே இருந்தன. தூரத்தில் வரும்போதே தெரியும் கோட்டை அது. கோவிந்தசாமி அதைப் பார்க்க விரும்பினான்.
வோக்ஸ் வேகனை ஓட்டிய கங்காதரன் கோட்டையின் எதிரில் உள்ள ஸ்ரீ பைரவர் ஆலயத்தின் அருகில் நிறுத்தினார். அங்கிருந்து கோட்டை பிரம்மாண்டமாக காட்சி தந்தது.. அந்த வழியாகச் செல்லும் கார்கள் லாரிகள் ஓட்டுனர்கள் கோவில் முன் நிறுத்தி தேங்காய் உடைத்து உண்டியலில் காணிக்கை செலுத்திவிட்டுச் செல்வது வழக்கம். கோட்டைக்குள் செல்ல மலை ஏறவேண்டும். அதனால் நேரமாகும். நாங்கள் செல்வது பெண் பார்க்க. திருமயம் கோட்டையைப் பின்பு பார்த்துக்கொள்ளலாம். கோவிந்தசாயியை அங்கு நிற்க வைத்து சில புகைப்படங்கள் எடுத்தேன். நாங்கள் இருவரும் நின்றும் படம் எடுத்துக்கொண்டோம்.
திருமயம் கோட்டையை 1687ஆம் வருடத்தில் இராமநாதபுரம் மன்னர் விஜய ரகுநாத சேதுபதி காட்டினார். பின்னர் இந்தக் கோட்டையை அவருடைய மைத்துனராகிய இரகுநாத இராய தொண்டைமானுக்கு தரப்பட்டது.கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரை இந்தக் கோட்டையில்தான் ஆங்கிலேயர்களால் பிடிபட்டார். அதனால் இதை ஊமையன் கோட்டை என்றும் அழைக்கின்றனர்.
திருமயம் தாண்டி அரை மணி நேரத்தில் புதுக்கோட்டை வந்துவிட்டோம்.
கோவிந்தசாமியின் அத்தை வீடு புதுக்கோட்டைத் தாண்டி ஒரு கிராமத்தில் இருந்தது. அது ஒட்டு வீடுதான் எங்களைக் அவனின் கண்டதும் அங்குள்ளோர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. சிங்கப்பூரிலிருந்து வந்துள்ளதால் தடபுடலாக வரவேற்புதான். அவனின் அத்தைதான் எங்களை வரவேற்றார். மிகவும் எளிமையாகத்தான் இருந்தார். அத்தை மகள் எங்கே என்று தேடினேன். நாங்கள் வந்துள்ளதைத் தெரிந்துகொண்ட அவள் அறைக்குள் தஞ்சம் கொண்டாள். அவனுடைய அத்தை வெளியே வரச் சொல்லியும் பயனில்லை. கிராமத்து நாணம் அதிகம் போலும். அந்த வீடு சிறியதுதான்.ஒரு கூடமும் இரண்டு அறைகளும் பின்புறம் சமையல்கட்டும் இருந்தன. அந்த இரண்டு அறைகளில் ஒன்றில்தான் பெண் இருந்தாள்.அறைக்குள் விளக்கு இல்லை. இருட்டாகவே இருந்தது. நாங்கள் இருவரும் கூடத்தில்தான் அமர்ந்திருந்தோம். அவனுடைய அத்தை சமையல் கட்டில் காப்பி கலக்கினார்.
நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். சற்று நேரத்தில் பெண் நாணி கோணியபடி ஒரு தாம்பளத்தில் இரண்டு கோப்பைகளில் காப்பி கொண்டுவந்து எங்கள் முன் நின்றாள்.!
நாங்கள் வந்தபின்பு அந்த அறைக்குள் முடிந்தவரை இருட்டிலேயே அலங்காரம் செய்துகொண்டது தெரிந்தது. நான் அவளைப் பார்த்தேன். கரிய நிறத்தில் பருமனான உருவம். முகத்தில் பவுடரை அப்பியிருந்தாள். சடையில் ரிப்பன் கட்டியிருந்தாள். கோவிந்தசாமியும் காப்பிக் கோப்பையை எடுத்துக்கொண்டு அவளைப் பார்த்து சிரித்தான். அவளும் நாணி கோணியபடி அவனைப் பார்த்து சிரித்தாள்.
அவள் அவனுக்கு அத்தை மக்கள். நிறைய உரிமை உள்ளது. வேண்டியமட்டும் இருவரும் பேசிக்கொள்ளலாம். ஒரு வேளை நான் இடையில் இருப்பது அதற்கு தடையாகக்கூட இருக்கலாம். அவனுக்கு அவளை பிடிக்குதா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் அப்பாவின் ஆசையை நிறைவேற்ற வந்துள்ளான். அவரின் தங்கை மகள் அவள்.பூர்வீக உறவை நிலைநாடட ஒருவேளை அவளை மணந்துகொள்ளலாம். ஏழ்மையில் எளிய வாழ்க்கை வாழும் அவளுக்கு சிங்கப்பூரில் சொகுசு வாழ்ககை அமைத்துத் தரலாம்.
அவர்கள் இருவரையும் தனியே விட்டுவிட்டு நான் கங்காதனை அழைத்துக்கொண்டு அந்த ஊரைச் சுற்றிப் பார்க்கலாம் என்று வெளியே வந்தான். வண்டி கிளம்புவதைக் கேட்ட அவனுடைய அத்தை வெளியே ஓடிவந்து, ‘ சாப்பாடு செய்கிறேன். நேரத்தோடு வந்துவிடுங்கள். ” என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் ஓடினார்.
அது சிறு கிராமம்தான். குடிசை வீடுகள் குறைவு. மண் வீதியின் இரு மருங்கிலும் கல் வீடுகள்தான் காணப்பட்டன. அவை சிறிய அளவில் எளிமையாகவே கட்டப்பட்டிருந்தன. கல் சுவர்களும் ஓடுகளாலும் கட்டப்பட்டிருந்தன. குடிநீர் குழாய்கள் வீதியில் காணப்பட்டன. சில வீடுகளின் முன் சைக்கிள்கள் நின்றன. இங்குள்ளவர்கள் புதுக்கோட்டைக்கு வேலைக்குச் செல்பவர்கள் போலிருந்தது. ஊரின் வெளியே ஒரு கண்மாய் இருந்தது. ஆனால் அதில் நீர் இல்லை. பொதுவாகவே புதுக்கோட்டை மாவட்டம் வானம் பார்த்த பூமி என்பார்களா. இங்கு மழையும் குறைவு. ஆறுகளும் கிடையாது. மழை பெய்தால்தான் இதுபோன்ற கண்மாய்களில் நீர் காணலாம்.புல்லும் புதரும் மண்டிக்கிடந்த. அதன் கரையிலொரு பெரிய அரசமரம் நின்றது.அதன் நிழலில் வண்டியை நிறுத்தி கொஞ்ச நேரம் உலாத்தினேன். இந்தப் பகுதியில் வயல் வெளிகள் காணப்படவில்லை. முந்திரி மரங்கள் வெட்ட வெளியில் நின்றன. தஞ்சை செல்லும் வழியில் வீதி ஓரங்களில் முந்திரி பருப்பை உரித்து சுடவைத்துக்கொண்டிருப்பார்கள். அதன் வாசம் கமகமக்கும். ஒரு கிலோ, அரை கிலோ பொட்டலங்களில் அவற்றை அங்கே வாங்கிக்கொள்ளலாம்.
சுமார் ஒரு மணிக்கு திரும்பினோம். கோவிந்தசாமி எங்கே சென்றோம் என்று கேட்டான். அவன் தனியாக உட்கார்ந்திருந்தான். கம்மாக்கரை வரை சென்றதாகச் சொன்னேன். பேசி முடித்துவிட்டாயா என்று கேட்டேன். அவன் ஒரு மாதிரி தலையசைத்தான்.
சமையல் தயாராகிவிட்டது. கோழிக் குழம்பின் மணம் காமகமத்தது. தரையில் பாய் போடடார்கள். தோட்டத்திலிருந்து வாழை இலைகள் கொண்டுவரப்பட்டன. கங்காதரனையும் அழைத்தேன். அத்தையும் மகளும் பரிமாறினார்கள். பெரிய புதிய வாழை இலையில் அந்த உணவு சுவையாக இருந்தது. ருசித்து சாப்பிட்டோம். கோழிக்கறியுடன், ரசமும், தயிரும்கூட இருந்தது.
சுமார் இரண்டு மணிபோல் புறப்பட்டோம். அவனுடைய அத்தை, “ஒன்றும் சொல்லாமல் புறப்படுகிறீர்களே? ” என்றார்.
” நான் சிங்கப்பூர் செல்ல இன்னும் மூன்று நாட்கள்தான் உள்ளன. அங்கு போனபின்பு கடிதம் போடுகிறேன். ” என்றான்.
” சரி. பத்திரமாக போய் வாருங்கள். ” அவர் விடை தந்தார். அந்த பெண் இரு கைகள் கூப்பி வணங்கினால். அவள் முகத்தில் ஒருவித ஏக்கம் பிரதிபலித்தது.
நாங்கள் புதுக்கோடடை தாண்டி நமனசமுத்திரம் வந்துவிட்டோம். அங்கு தொடர்வண்டி வந்துகொண்டிருந்ததால் இரயில்வே கேட் மூடப்பட்டிடுந்தது. . நாங்கள் இருவரும் வெளியேறினோம். இளம் பெண்கள் கைகளில் தட்டிகளை ஏந்திக்கொண்டு வெள்ளரிப் பிஞ்சு விற்றனர். மிகவும் குறைந்த விலை. அனால் அவர்களுக்குள் போட்டி. ஆளாளுக்கு பிஞ்சுக் கட்டுகளை நீட்டினார்கள். எனக்கு இது பழக்கமானது. அனால் அவனுக்கு அது புதுமையாக இருந்தது. நாங்கள் நிறைய வாங்கினோம். இளம் பிஞ்சுகளாக இருந்ததால் சுவையாக இருக்கும். அதிலும் கடுமையான வெயிலில் அவை சாப்பிட இதமாக இருக்கும்.
அந்த கேட் அருகிலேயே சில கூடாரங்கள் போடப்பட்டிருந்தன. அங்கே குறவர்கள் கூடியிருந்தனர். அவர்கள் திறந்த வெளியில் சமைத்துக்கொண்டிருந்தனர். ஆண்கள் கோவணமும், பெண்கள் குட்டைப் பாவாடையும் அணிந்திருந்தது கோவிந்தசாமிக்கு வியப்பையே உண்டுபண்ணியது!
” இவர்கள் ஏன் இன்னும் இப்படியே இருக்கிறார்கள்? அரசாங்கம் இவர்களுக்கு உதவமுடியாதா? ‘ கோவிந்த் விரக்தியுடன் கேட்டான்.
” உதவ முயன்று தோற்றுவிட்டது. . இவர்களுக்குகென்று குடியிருப்புகள் கட்டித் தந்தார்கள். இவர்கள் அவற்றில் இருக்க விரும்பாமல் இந்த நாடோடி வாழ்க்கையிலேயே நாட்டம் கொண்டுள்ளனர்.” நான் விளக்க முயன்றேன்.
” வெறும் வீடு கட்டித்தந்தால் போதுமா? ‘பிழைப்புக்கு வேலை வேண்டாமா? சாப்பிட என்ன செய்வார்கள்? ” அவன் கேட்டான்.
” இவர்களுக்கு என்ன வேலை தருவது? இவர்கள் வேட்டையாடி சாப்பிடுவதையே விரும்புகின்றனர். இப்போது கூட அங்கே எதையோ சுட்டுதான் சாப்பிடுகின்றனர். … ஆனால் திருப்பத்தூரில் எங்கள் மருத்துவமனையில் சில குறவர்களுக்கு வேலை தந்துள்ளோம். அவர்கள் சிறப்பபாக உள்ளார்கள். ” என்றேன்.
” என்ன மாதிரியான வேலை? ‘
” துப்புரவு வேலை செய்கிறார்கள். இப்போது அவர்கள் அனைவரும் கிறிஸ்துவர்கள் ஆகிவிட்டனர். மிஷனரிகளுக்கு இவர்கள் மீது எப்போதுமே கருணை உள்ளம் உள்ளது .” என்றேன்.
” உண்மையில் பாராட்ட வென்றும். ” என்றான்.
” ஓர் உண்மையை நான் உனக்குச் சொல்ல வேண்டும். இந்த நரிக்குறவர்களை நாகரிகமற்றவர்கள் என்கிறோம். ஆனால் அந்த பெண்கள் அணிந்திருக்கும் குட்டைப் பாவாடையைப் பார். இன்று அதை பார்த்துதான் நம்முடைய சினிமா கதாநாயகிகளும் அது மாதிரி அணிந்துகொண்டு ஆடுகிறார்கள்! இதை நான் எண்ணி சிரிப்பதுண்டு! ”
கோவிந்த் வாய்விட்டுச் சிரித்தான்.
சுமார் பதினைந்து நிமிடங்கள் கழித்து புகைவண்டி தாண்டிச் சென்றது. நாங்கள் பிரயாணத்தைத் தொடர்ந்தோம். அரை மணி நேரத்தில் திருப்பத்தூர் வந்துவிட்டோம்.
தங்கமணி திரைப்பட அரங்கம் தாண்டியபோது,கோவிந்த் டவுன் பக்கம் போகச் சொன்னான்.கங்காதரன் வண்டியை நேராகச் செலுத்தி பேருந்து நிலையத்தில் நிறுத்தினார். இருவரும் இறங்கினோம். அவன் நேராக பூக்கடைகள் பக்கம் சென்றான். ஒரு பெரிய மல்லிகைப் பூச் சரம் சுற்றிய பந்தை வாங்கினான். அருகில் இருந்த புழக்கடையில் ஆப்பிள்களும் ஆரஞ்சு பழங்களும் வாங்கிக்கொண்டான்.
வண்டி புறப்பட்டது. இன்னும் ஐந்து நிமிடத்தில் வீடு வந்து விடுவோம்.
” பெண்ணைப் பிடித்துள்ளதா என்று ஒன்றும் நீ சொல்லலையே? ” அவனிடம் கேட்டேன்.
” எனக்கு குழப்பமாக உள்ளது. பெண் குண்டாக இல்லை? ‘என்று கேட்டான்.
” ஆமாம். அதற்கு என்ன? ” நான் கேட்டேன்.
” இல்லை… எனக்கு ஒல்லியான பெண்தான் வேண்டும். ” என்று அவன் சொன்னபோது வீட்டை அடைந்துவிட்டோம்.
கலைமகள் கதவைத் திறந்து புன்னகைத்தாள்.
அவன் வாங்கிவந்த மல்லைகைப் பூப் பணத்தையும் பழங்களையும் அவளிடம் தந்தான். அவள் மகிழ்ச்சியுடன் அவற்றைப் பெற்றுக்கொண்டாள் .
கலைமகள் கூட ஒல்லியானவள்தான்!

( தொடுவானம் தொடரும் )

Series Navigationசாய்வு: அத்துமீறலின் புலப்பதிவு, செயற்கையாக்கத்தின் குழந்தைத்தனம்
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *