மீனாட்சி சுந்தரமூர்த்தி
என் வீட்டுத் தோட்டத்தில்
மணம் தரும் மலர்கள்
மிகவுண்டு
ஆனாலும்
பூ விற்கும்
அம்மாவிற்காகக்
காத்திருப்பதில்
சுகம் எனக்கு.
நெற்றியில் நாமமிருக்கும்
நாவினில்
நாராயணன் இருப்பான்.
வயதோ எழுபதுக்கு
மேலிருக்கும்
நடையோ இருபது
போலிருக்கும்
வெற்றிலை மெல்லும்
வாய், சுண்ணாம்பின்
கறை விரலில்
கருணையில் ஊறிய
கண்கள் கையிருப்பு.
கனிவான
பேச்சு செலவழிப்பு.
அன்றொரு நாள்
விடியலில்
காய்ச்சலில்
தள்ளாடி வாசல்
தெளிக்கக் கண்டவள்
கோபித்து
வாளிநீரை வாங்கி,
தெளித்து,
கூட்டிப் பெருக்கி
மாக்கோலமிட்டாள்.
என் விழிகளில்
கோலமிட்டது நீர்.
வானகம் போன
அன்னையாய்த்
தெரிந்தாள்.
. திங்கள் ஒன்று
கடந்து விட்டது.
அவள் வரவில்லை
எவரும் அறியார்
அவளின்
ஊரும் பேரும், வீடும்
எங்கு சென்றாளோ?
நலமிழந்தாளோ?
சொல்வார் எவருமில்லை.
நித்தம் அவள்
நாவினில் வசிக்கும்
நாராயணா நீ
அறிவாயே பதில் சொல்.
- தமிழ்
- நீடிக்காத காதல் ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
- சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு பின்னரும் பெரும்பாலான பட்டியல் இனத்தவர்கள் நிலமற்ற விவசாயிகளாகவே இருக்கிறார்கள்.
- ’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- மீனாம்பாள் சிவராஜ்
- பிரபஞ்சத்தில் பெரு வெடிப்புக்கு முன்பு என்ன நேர்ந்தது என்பது பற்றிப் புதிய யூகிப்பு
- மனச்சோர்வு( Depression )
- என் வீட்டுத் தோட்டத்தில்
- தொடுவானம் 212. ஆலய சுற்றுலா
- மலேசியா எழுத்தாளர்கள் வருகையும் , 3 நூல்கள் வெளியீடும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். திருப்பூர் மாவட்டம்