இளையராஜாவின் இசை: பிரேம் ரமேஷ் முன்வைத்தவை

author
1
0 minutes, 9 seconds Read
This entry is part 8 of 13 in the series 25 மார்ச் 2018

சுயந்தன்

இளையராஜாவின் இசையின் அழகுணர்வையும், அவரின் இசை பற்றிய நுட்பங்களையும், வகைப்பாடுகளையும் அறிந்து கொள்வதற்கு பிரேம் ரமேஷ் எழுதிய “இளையராஜா: இசையின் தத்துவமும் அழகியலும்” என்ற நூல் பெரிதும் உதவக்கூடிய ஒன்று. மொழிக்கும், மதத்துக்கும் மூலமாக இருப்பது இசை என்று கூறும் அதே நேரம், ‘ஒரு இசை இன்பத்துய்ப்பின் ஒரு வடிவமாக மாறுகிறதோ அப்பொழுதே அது இறைமை நீக்கம் செய்யப்பட்டுப் புலன்தன்மை பெறுகிறது’ என்ற அடிப்படையில் பழைய வரலாறுகளைக்கொண்டு ஆராய்கிறது இந்நூல்.

இளையராஜாவின் இசை பற்றி முதன் முதலில் சரியான முறையில் ஆராய்ந்து ஆழமான கட்டுரைகள் எழுதியவர்கள் இவர்கள்தான். இதன் பின்னர் பலர் முயன்றார்கள். அ.மார்க்ஸ் என்ற கல்வியியலாளர் இளையராஜாவின் இசை இந்து சனாதனத்தை ஆதரிக்கிறது என்று கூறி ஒரு கட்டுரை வெளியிட்டார். ரமேஷ் பிரேம் ஆகிய இருவரும் இதற்கு எதிர்வினை வழங்கி அவரை நிராகரித்தது வேறுகதை. மேலும் அ.மார்க்ஸின் இசை பற்றிய உரையாடல்கள் பொருட்படுத்தப்பட வேண்டிய ஒன்றல்ல. அவசரத்தில் தலித்தியம் பேசி மூக்குடைபடும் முதல் கல்வியியலாளர் இவர்தான். ரமேஷ் பிரேமின் இந்நூலில் சிந்திக்கப்பட்ட அளவுக்கு ஆழமானவையாக பிறர் எழுதிய இசை பற்றிய கட்டுரைகள் இருக்கவில்லை. இன்று கூட இளையராஜாவின் இசை பற்றிய ஆய்வுகள் இந்த அளவுக்கு வந்துள்ளதா என்பது சந்தேகம்தான். பலர் அவரது ஜாதியையோ வேறு எதையோ பேசி அவற்றை அரசியலாக்கும் கேவலம் மிக்கவர்கள். ஆனால் இந்நூல் இளையராஜாவின் ‘ராஜ ராஜ சோழன்’ பாடல் போல காலம் கடந்து பேசப்படக்கூடியது.

இந்நூலில் மிக முக்கியமான அய்ந்து விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன.

முதலாவது, இளையராஜா தன்னிசைக்கான ஊடகங்களாக எவற்றை எடுத்துள்ளார் என்றும், அவ்வாறு எடுக்கப்பட்டவை காட்சியாக்கப்பட்டாலும் அவரது இசையை அக்காட்சிகளால் மிஞ்சமுடியவில்லை என்பதையும் கீழ்வருமாறு கூறப்படுகின்றது. இந்த முக்கியத்துவத்தைத் திரையிசை என்ற ஒன்றைக்கொண்டுதான் மதிப்பிடமுடிகிறது என்பது முரண் கருத்து என்று வலியுறுத்தப்படுகிறது.

1. “இளையராஜாவின் இசையில் நாம் கவனிக்க வேண்டியது; இயற்கைப் படிமங்களுக்குத் தரப்படும் இசைவடிவம், தாவரச் சூழலுக்குத் தரப்படும் இசை வடிவம், நிலத்தோற்றங்கள், மலைத் தோற்றங்கள், நீரின் பலவித பாய்ச்சல்கள், தேக்கங்கள், ஒழுகல்களுக்குத்தரப்படும் இசை வடிவங்கள், காலமாறுபாடுகளுக்கு பொழுதுகளுக்குத் தரப்படும் இசை வடிவங்கள், ஒளியின் பலவித சேர்க்கைகள், ஒளிக்கதிர்கள், நிறக்கதிர்கள், இவற்றின் சலனங்களுக்குத் தரப்படும் இசை வடிவங்கள் திட, திரவ, வாயுப் பொருட்களின் இடம் மற்றும் இட மாற்றங்களுக்கான இசை வடிவங்கள், வாழிடங்கள், சுவர்களுள்ள இடங்கள், வெட்ட வெளிகளுக்குத் தரப்படும் இசை வடிவங்கள், பின் சமூகத்தின் உட்பகுதிகள், வேலையிடங்கள், வீடு மற்றும் அவற்றின் உட்பகுதிகளுக்குத் தரப்படும் இசை வடிவங்கள், கிராமம், நகரம் இவற்றில் மனிதர்கள் புழங்கும் இடங்களுக்குத் தரப்படும் இசை வடிவங்கள், மனித வாழ்வின் பல்வேறு தருணங்களுக்கான இசை வடிவங்கள், சடங்குகள், விழாக்கள், வழிபாடுகள் இவற்றிற்கான இசை வடிவங்கள், இவையின்றி வரலாற்றுக் காலங்கள், புராணக் காலங்களுக்கான இசை வடிவங்கள், மதம் மற்றும் கடவுள்சார்ந்த புனித இடங்களின் உட்பகுதி, வெளிப் பகுதி, இவைசார்ந்த பிற பகுதிகளுக்கான இசை வடிவங்கள், கலை-கலாச்சார நிகழ்வுகளுக்கான இசை வடிவங்கள், மிகவும் முக்கியமாக மனித உருவங்கள், பாவங்கள், அவற்றின் தனியான மற்றும் கூட்டான அசைவுகள், ஆட்டங்கள், முகம்-முகத்தின் மாற்றங்கள் இவற்றிற்கான இசை வடிவங்கள், மனித உடல்களில் ஆண், பெண் என்னும் வடிவங்களானது சூழலில் உள்ள பொருட்களுடன் கொள்ளும் பல்வேறு உறவுகளுக்கான இசை வடிவங்கள், மனித உடல்களின் அலங்காரம், வர்ணமயம், ஒய்யாரம் இவற்றிற்கான இசை வடிவங்கள், ஏக்கம் நிறைந்த உடல்கள், உறுப்புகளின் நெருக்கத்திற்கான, பெருக்கத்திற்கான, இழைவிற்கான இசைவடிவங்கள், உடல்களுக்கிடையிலான அணுக்கம், விலகல், மோதல் இவற்றிற்கான இசை வடிவங்கள், உடல் கொள்ளும் பல்வேறு உணர்வுகளுக்கான இசை வடிவங்கள், அடுத்த கட்டமான கனவுகள், ஏக்கங்கள், ஆழ்ந்த சிந்தனை, நினைவுகூறல் என உள் நிகழும் சலனங்களுக்கான இசை வடிவங்கள், பின் உள்குறிப்பாக-ஆழ்மனம், பிரபஞ்சத்தன்மை, மந்திரம், வினோதம், விபரீதம், மர்மம் இவற்றிற்கான இசை வடிவங்கள்-இவ்வாறாக விரிந்துசெல்லும் ஒவ்வொரு நிலை மற்றும் இயக்கங்கள், சலனங்களுக்கு இவருடைய இசையில் ஒரு வடிவம் தரப்படுகிறது. திரைப் பரப்பில் காட்சிகளின் நழுவல்களில் இந்த இசை வடிவங்கள் ஞாபகம் கொள்ளப்படாமல் மிதந்து கரைந்து விடுகின்றன. இங்கு காட்சிகள் முதன்மையாகவும் அவற்றிற்குள்ளாக ஊடுபாவாக நெய்யப்படும் இசை இரண்டாம் நிலையாகவும் செயல்பட்டாலும்-காட்சிகள் என்பது இருப்பதைப் பதிவு செய்வதாகவும் அவற்றுள் இசை என்பது புதிதாக உருவாக்கப்படுவதாகவும் உள்ளது.

ஆக, விழிப்புள்ள ஒரு சமூகத்தால், ஒவ்வொரு பொருளுக்கும் அவற்றின் இயக்கத்திற்கும் உள்ளாக இசை என்பதை இளையராஜா நான்காவது பரிமாணமாக வைத்திருக்கிறார் என்பதை உணர்ந்து கொள்ள முடியும். ஆக, வெளி முழுவதும் இவரால் நிரப்பப்பட்டிருக்கும் இசை வடிவங்களானது தொகுக்கப்படாமல் அலைந்து கொண்டிருக்கின்றன எனச் சொல்லலாம். ஒவ்வொரு மொழியும் அதன் சங்கேதங்களால் அனைத்தையும் எழுதிச் செல்லவேண்டும் என்ற தன்மையுடன் இவரின் இசை, கலாச்சாரத்தின் உபநினைவுத் தளத்தில்-சில சமயம் உள் நினைவுத் தளத்தில் ஊடுருவி சலனம் கொண்டு பதிவாகி தொடர்ந்து இழைந்து கொண்டிருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.”
00

இரண்டாவது விடயம் இளையராஜா கர்நாடக இசையை எளிமைப்படுத்தியதும் கலப்பிசை வடிவங்களை ஒருமைப்படுத்தியமை பற்றிய விபரங்கள். இந்த விளக்கக் கருத்துக்களை பலர் எழுதிய கட்டுரைகளில் வாசித்துள்ளேன். அவை தமது கர்நாடக அல்லது பிறமரபு தளங்களில் இருந்தே குறித்துக்காட்டப்பட்டிருந்தன. ஆனால் ரமேஷ் பிரேம் அளவுக்கு அவற்றின் நுட்பங்களை வெளிப்படுத்தியவர்கள் இல்லை என்றே கூறவேண்டும்.

2. “கர்நாடக இசை மரபில் அடிப்படை இராகங்கள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் வளர்ந்தும் இராக மாறுபாடுகள் மனம் செல்லும்வரை செல்லக்கூடியதாகவும் அமைகின்றன. சிலவகை உணர்ச்சிகளை, மனநிலைகளைச் சிலவகை இராகங்கள் உருவாக்குவதாக அமைகின்றன. அவற்றை அப்படியே பயன்படுத்துகிறவர்கள் இசை விற்பன்னர்களாக, இசை நிகழ்த்துபவர்களாகப் போற்றப்படுகின்றனர். அதற்குள்ளும் தமது குரல்வளம், கற்பனை இவற்றால் அழகு கூட்டுபவர்கள் மேலும் சிறப்புடையவர்களாகப் புகழப்படுகின்றனர். ஆனால், இந்த இசையின் கூறுகளை வைத்து புதிய வடிவங்களை, வினோதச் சேர்க்கைகளை உருவாக்கிய நிலையில் இளையராஜா இசைப்படைப்பாளியாகத் தன்னை வடிவமைத்துக் கொண்டார்.

இந்த பெருமரபிசையை தமக்கே உரியது என்று கூறிக்கொண்ட எந்தச் சாதிய, சமூகப் பிரிவினரும் கற்பனை செய்ய முடியாததும், சிலசமயம், பின்பற்ற முடியாததுமான இசை வினோதங்களை இந்த இசைக்குள்ளிருந்தே இவரால் உருவாக்க முடிந்தது. குறிப்பாகக் குரல்களை, அவற்றின் பாவங்களை இளையராஜா இசையுடன் கலந்த விதமும், சொற்களைத் தமது இசைக் கோலங்களுக்குப் பயன்படுத்திக்கொண்ட விதமும், கருவிகளுக்கென்றே இவர் உருவாக்கிய இசை வரிகளும் அளவுக்கு மீறிய இசைக் கற்பனை உடைய ஒரு படைப்பாளிக்கே சாத்தியப்படக் கூடியவை. குறிப்பாக, மனிதக் குரல்களைச் சிலசமயம் வாத்தியங்களின் நிலைக்கும் வாத்தியங்களை சிலசமயம் மனிதக் குரலின் நிலைக்கும் பின்னி அமைத்தது, உடலையும், கருவியையும் ஒரு தொடர் இசை அதிர்வுக்கு உட்படுத்திய உத்தியாக அமைந்தது. இவை அதிகமாகக் கேள்விக்கு உகந்த இசைகளாக இருந்தன. பாடல்களின் வடிவத்தில் இவை நினைவாகப் பதிந்தன.

அடுத்த கட்டமாக இவரின் இசை இந்திய, பிறமரபு இசைகளையும் மேற்கு நாடுகளின் இசை வகைகளையும் கருப்பின மக்களின் இசை வகைகளையும் ஒரு பரப்பிற்குள் கொண்டு வந்தது. இந்த வடிவமாற்றமே இளையராஜாவின் இதுவரையிலான சாதனைகளுக்குக் காரணமாக அமைந்ததும், இனி அவர் செய்யப் போகும் வேறு வடிவ சாதனைகளுக்குக் காரணமாக அமையப் போவதுமாகும்.”
00

மூன்றாவது விடயம் தமிழர்களின் உளவியலுடன் தொடர்புடையது. இதனை இந்திய மரபுளவியல் என்றும் கூறலாம். இலக்கியத்தைச் சார்ந்ததாகவே இளையராஜாவின் இசைநுட்பம் அமைந்துள்ளது என்று இயற்கை, இடம், காலம் முதலான கருத்துக்களுடன் ஒப்பிட்டு கருத்துரைக்கப்பட்டுள்ளது. இவற்றில் உள்ளார்ந்த உளவியலின் ஈடுபாடு இருப்பதாகவே இந்தப்பகுதியின் தொனி சுட்டிக்காட்டுகின்றது.

3. “பொருள்கொள்ளுதல் என்னும் தன்மை அதிகமும் இலக்கியத்தைச் சார்ந்ததாக இயங்கும். ஆனால், இசையானது இடம், காலம், வேறு வேறு பொருள்பரப்பு, தோற்றங்களின் பரப்பு, இயற்கைப் பரப்பு என்று நழுவிச் சென்று பொருள்கொள்ளுதலில் அடங்காதவைகளையும் உணர்வறிவின் வாய்பாடுகளுக்குள் முடிந்துபோகாத சமயங்கள், தோற்றச் சேர்க்கைகள், உணர்வுச் சிக்கல்கள் மற்றும் உணர்வு நழுவல் இவற்றை நோக்கிச் செல்லக் கூடியது. மேற்குலகின் சில இசைகளும் சில தொல்குடி இசைகளும் அதிகம் பருண்மையான இடங்கள், வனங்கள், இயற்கை வினோத வெளிகளில் உலவும் கால நழுவல்களை உடையவையாக உள்ளன.

இந்த இரண்டையும் இளையராஜா தமது பாடல் இசைகளில் பயன்படுத்தி ஒரு புதிய சேர்க்கையை உருவாக்கிக் கொண்டார். பாடலின் மொழிப்பகுதியில்நுட்பமான பாவனைகள், தொனிகள் இவற்றிற்குச் சந்தத் தன்மையை ஊட்டி உடல், உணர்வு மற்றும் மனிதச் சூழ்நிலைகளின் நாடகீய மாறுபாடுகளுக்கு ஒரு வெளிப்பாட்டு வடிவத்தை உருவாக்கிய அதேவேளையில்-பின்னணி இசை, இடை இசை இரண்டிலும் வெவ்வேறு இடம், வெளி, பரப்பு மற்றும் காலத்தினூடான பயணம், நழுவல், சிலசமயம் ஒரு முரண் கலப்பான இசை மண்டலத்தை இவர் உருவாக்கினார்.

இதன் மூலம் ஒரே சமயத்தில் மனிதமயமான ஒரு பிரபஞ்சத்தையும், மையமே அற்ற மனிதர் இடம் தரிக்க முடியாத ஒரு பிரபஞ்சத்தையும் திசைமாற்றங்களுடன் அருகருகே கொண்டு வந்த வினோதம் நிகழ முடிந்தது. இந்த இடத்தில் ஒரு கலைஞன் என்ற அளவில் மரபு என்பதன் எல்லையை அங்கீகரித்த அதே சமயம், தனது வெளிப்பாட்டிற்கு-பயணத்திற்கு-வேறு மரபுகள் தேவைப்பட்டால் அவற்றையும் தன்வயப்படுத்திக் கொள்ளும் ஒரு கடினமான பயிற்சியை இளையராஜா மேற்கொண்டார்.

இதன்மூலம் மரபுதந்த ஒடுக்கத்தை நினைவு உறைந்த தன்மையை இவரால் உடைத்துக் கொண்டு வெளியேற முடிந்ததுடன்-வெளி நோக்கிய பயணமும் அப்பயணத் தோற்றங்களை மனிதச் சாயல்களுடன் பொருத்திப்பார்க்கும் சுதந்திரமும் இவருக்குக் கை வந்திருக்கிறது.”

நான்காவதாக இளையராஜாவின் உழைப்புப் பற்றியும் அவருடைய அசாத்தியங்களின் நினைவுகள் பற்றியதுமான விளக்கம். இதனைத் தொடர்ந்து அதனால் பயனடைந்த தமிழர்களின் நிலையும் கூறப்பட்டுள்ளது.
00

4. “இளையராஜாவின் இசை உருவாக்கத்தில் நாம் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான பகுதி அவரின் அசாத்தியமான உழைப்பு, சாதகம், பிரக்ஞைபூர்வமான பகுத்தறிவும் தொகுப்பறிவும். மிகச் சிக்கலான நினைவாற்றல், துரிதமான கணிப்பு, நுட்பம், இவையனைத்தும் வடிவமற்று அரூபமாக மனதில் தோன்றும் இசைக்கு வடிவம் தர அதைக் கருவிகளுடாக, எந்திரங்களுடாக கட்டமைக்க அவசியமானவை. தான் இசையை உருவாக்க ஆரம்பித்த காலத்தில் இசையையோ அதன் தொழில்நுட்பத்தையோ முறையாகக் கற்றதில்லை என்று கூறும் இவர், அதற்குப் பிறகு ஒவ்வொரு நாளும் அறிந்துகொள்வதிலும் புரிந்துகொள்வதிலும் தனது ஆற்றலைச் செலவிட்டிருக்கிறார் என்பது தெரியவரும்.

இளையராஜா மேற்கத்திய இசைக்கருவிகளை, மேற்கத்திய இசை முறைகளைப் பயன்படுத்தியபோதும், அவர் மேற்குலக நுகர்வு கலாச்சார பிரக்ஞையை உருவாக்கும் இசையை உருவாக்கவில்லை என்பது கூர்ந்து கவனிக்கும்போது தெரியவரும். அவருடைய பல இசைப் படைப்புகள்-செய்து பார்த்தல் அல்லது ஒரு வித்தியாசம் புரிதல் என்ற தன்மையை உடையதாகவும், வெளியே இருந்து வேறொரு இனத்தின் சடங்குகளை வித்தைகளைக் கவனித்தல் போலவும் இருக்கின்றன.

எப்படியானாலும் தமிழ்நாட்டின் வீதிகளில் கடந்த இருபது ஆண்டுகளாக ஒவ்வொரு மனிதரும் இறுகிய வடிவமுடைய ஒரு சமூக அரசியல் மனிதராக உலவிய அதே சமயம்-வடிவம் கலைந்த ஒரு இசைரூப எதிர்மனிதராகவும் உலவிக் கொண்டிருப்பதற்கு இளையராஜாவின் இசை ஆக்கங்கள் காரணமாக இருந்திருக்கின்றன.”
00

அய்ந்தாவது இளையராஜாவுடனான நேர்காணல். இதனை அறிவுபூர்வமான ஒரு உரையாடல் என்றுதான் கூறவேண்டும். உணர்வுகளைப் பரிசளிப்பவனிடம் அறிவார்ந்த இருவர் உரையாடிய போதும் தனது அறிவுக்கு எட்டிய மிக உன்னதமான பதில்களையே இளையராஜா வழங்கியிருந்தார். வேறெப்போதும் இந்தளவுக்கு ஆழமான நேர்காணலை இளையராஜாவிடம் யாரும் பெற்றதில்லை என்று நினைக்கிறேன். இது வரையிலும் இசைஞானியிடமிருந்து பெறப்பட்ட உரையாடல்களில் இதற்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு என்றே கூறவேண்டும்.

5. கேள்வி: நீங்கள் ஆரம்பித்தபோது இருந்ததுபோல் இப்போது இல்லை. உலகின் பிற சாஸ்திரிய, புதிய இசை வடிவங்களைப் பற்றியும் போதுமான அறிதல் உங்களுக்கு இப்பொழுது உள்ளது. இந்த நிலையில், நீங்களே தன்னெழுச்சியாக செய்த இசைக்கும், கற்றுணர்ந்தபின் செய்யும் இசைக்கும் என்ன வித்தியாசத்தை நீங்கள் பார்க்கிறீர்கள்? தெரியாத நிலையில் நீங்கள் செய்த படைப்புகளுக்கும் தெரிந்து செய்ததற்கும் உள்ள வேறுபாடு என்று எதை உணர்கிறீர்கள்?

இளையராஜா பதில்:
ஒரு படைப்பு என்பது தானாக நிகழ வேண்டும். அது நிகழும்போது அடுத்தவரின் மனதைத் தொட வேண்டும். அறிவைத் தொட்டால் அது வித்வமாக மட்டுமே இருக்கும். அந்த நிகழ்வு இயல்பாக இருக்க வேண்டும். வலிந்து செய்ததாக இருக்கக்கூடாது. இதை இப்படிச் செய்து இந்த வடிவம் தர வேண்டும் என்ற மாதிரி இருக்கக்கூடாது. அது இயல்பாக இருக்க வேண்டும். ஆனால், ஓர் உயர்ந்த படைப்பு இலக்கணத்திற்குள் தன்னை வகுத்துக் கொள்ளும். எந்த இலக்கணத்தை அதன்மீது திணித்து கேள்வி கேட்டாலும் அதற்குள் நிற்கும். படைப்புக்கும் இலக்கணத்திற்கும் உள்ள உறவு இப்படித்தான் இருக்கிறது. பீத்தோவன் சொன்னான் Rules are my humble servents என்று. ஏனென்றால் He was tharough with the rudiments.

படைப்பு என்று வரும்போது விதிகளை, இலக்கணங்களைக் கையில் எடுத்துக்கொள்ள முடியும். யார் இதைச் செய்ய முடியும்?-அவற்றின்மீது முழுமையான ஆளுகையுடையவன்தான் செய்ய முடியும். அவற்றின்மீது முழுமையான Command இருப்பவன்தான் அவற்றை ஏவலாளர்களாக நடத்த முடியும். அதனால் படைப்புக்கு விதிகளும் இலக்கணங்களும் தடையில்லை. பிரச்சினையுமில்லை. படைப்பில் இவற்றை மீற முழுமையாக இவற்றைத் தெரிந்துதான் செய்ய வேண்டும் என்பதும் இல்லை. மீறிய பிறகுகூட அது எதை எதை மீறியிருக்கிறது என்று பார்த்துக்கொள்ள முடியும். இதை மீறத்தான் இதைச் செய்தோம் என்பதும் இல்லை. மீறல் நடந்தபிறகு இதை ஆராய்வதுகூட நடக்கலாம். வெடிகுண்டு வெடித்த பிறகு அதைப் பற்றி ஆராய்வது போலத்தான் இதுவும் (சிரிக்கிறார்.)

யாருக்காவது இளையராஜாவின் இசையின் மகத்துவம் புரியவேண்டும் என்றால் இந்நூலை ஒன்றுக்கு இரண்டு தடவைகள் வாசித்து அறிந்து கொள்ளலாம். இளையராஜாவின் இசை பற்றி எழுதப்போகிறோம் என்று ஆக்கினை கொண்டவர்கள் இந்நூலைத் தவிர்க்கமுடியாத ஒன்றாக Reference ஆக்கியாகவேண்டும்.

00

Series Navigationமாற்றம் !தொடுவானம் 214. தங்கைகளுக்கு திருமணம்
author

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *