ஒரு பச்சை மிளகாய்க்குப் பாடிய புலவன்!

author
0 minutes, 3 seconds Read
This entry is part 3 of 13 in the series 25 மார்ச் 2018

சு. இராமகோபால்

ஔவையார் என்னவோ கூழுக்குப் பாடினார் என்றெல்லாம் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அது அந்தக் காலம். ஆனால் இந்தக் காலத்தில் ஒரு கவிஞன் மிளகாய்க்குப் பாடிய கதை உங்களுக்குத் தெரியுமா? அவன்வேறு யாருமன்று; நான்தான்! சில நாட்களுக்கு முன் எங்கள் ஊரில் நடந்த நிகழ்ச்சி. அதைக் கேட்டால் நீங்கள் “இப்படி நடந்ததா?” என்று ஆச்சரியப் படுவதை விட்டு, “இப்படியும் நடந்ததா!” என்றுதான் வியப்பீர்கள்!

எனக்கு இரண்டு நண்பர்கள். ஒருவர் பெயர் பாலகிருஷ்ணன். இன்னொருவர் பெயர் இராஜகோபால். எங்கள் மூவர் பெயரிலும் ‘பால்’ கலந்திருப்பதால், மற்ற நண்பர்கள் எங்களைச் சந்தித்தால், “அதோ, அங்கே யார் வருகிறார்கள் என்று பாருங்கள்… நம் முப்பாலும் முக்கனியும்…,” என்றுதான் கேலி செய்வார்கள்.

ஒருநாள் நாங்கள் மூவரும் ஒரு பலசரக்குக் கடையில்–கடையின் சொந்தக்காரர் எங்கள் நண்பர்–அமர்ந்து ஜாலியாகப் பேசிக்கொண்டிருந்தோம். அப்போதுதான் விற்பனைக்காக பறித்துவரப்பட்ட அங்கேயிருந்த மிளகாய்க் கூடை எங்கள் கண்ணில் பட்டது. இராஜகோபால் கூடையிலிருந்து ஒரு மிளகாயை எடுத்துக் கையில் வைத்துக்கொண்டு, ” இதை நான் தின்றால் எனக்கு நீங்கள் என்ன தருவீர்கள்?” என்று எங்களைப் பார்த்துக் கேட்டார். “ஏய் புலவா! அவனைப் புகழ்ந்து ஒரு பாட்டு எழுதிக் கொடுப்பதாகச் சொல்!” என்று பாலகிருஷ்ணன் என்னைத் தூண்டினார். அதைக் கேட்டதும், ” ஆகா! அப்படி அவன் என்னை ஒரு வெண்பா எழுதிப் புகழ்ந்துவிடுவான் என்றால், ஒரு மிளகாய் என்ன, இந்தக் கூடையையே கடித்துத் தீர்த்து விடுவேன்!” என்று சொல்லிக்கொண்டு இராஜகோபால் இரண்டு கைகளிலும் கூடையிலிருந்து மிளகாய்களை அள்ளிக்கொண்டார்!

நாங்கள் அப்போதுதான் கல்லூரி தொடங்கியிருந்தோம். விடுதலை கிடைத்ததும் காந்தியின் கொள்கைகளின் அடிப்படையில் கிராம மக்களுக்குச் சேவை செய்யப் புதிதாக அமல்படுத்தப் பட்ட கல்வித் திட்டம். அது. உப ஜனாதிபதி இராதாகிருஷ்ணனால் தீபமேற்றித் திறத்து வைக்கப்பட்ட கல்லூரி. பேராசியர்களே என்ன சொல்லிக்கொடுப்பது என்று தடுமாறிக் கொண்டிருந்தனர். எனக்குப் புலவனென்று அடைமொழி கொடுத்த தமிழாசிரியர் (அவரும் ஒரு ‘பால்’ தான், இன்னொரு இராஜகோபால்) டாக்டர் மு. வ-வின் மாணவர். அவர் முதல் வேலை.

கல்லூரி முடிந்ததும் மாலையில் அரட்டை அடிக்க நாங்கள் மூவரும் கூடுவோம். இராஜகோபால் மூவரில் மிகவும் குள்ளமானவர். இப்படிச் சவால் விடுவதில் அதிக நாட்டமுள்ளவர். நான் மற்ற இருவருக்கும் புதிதாக அறிமுகமானவன்.

“சே, சே! அப்படி ஒன்றும் செய்துவிடாதே! அத்தனையும் நீயே தின்றுவிட்டால் வாடிக்கைக் காரர்களுக்கு கடைக்காரர் என்ன சொல்வார்? இதோ பார், நாங்கள் ஒரு காயைத் தேர்ந்தெடுத்துக் கொடுப்போம். நீ அதைத் தின்று காட்டினால் போதும். சரியா?” என்று கூறி, கூடையிலிருந்தவற்றில் மிகவும் காரமான காயை எடுத்துக் கொடுக்கக் கடைக்கார நண்பரை வேண்டிக்கொண்டோம்.

கடைக்காரர் காரசாரமான ஐந்து அங்குள நீளமுள்ள ஒன்றை எடுத்து இராஜகோபாலிடம் கொடுத்தார். “ஓ! இவ்வளவு தானா?” என்று எள்ளல் நகையோடு, அதிலிருந்த காம்பைக் கிள்ளியெறியப் போனார். அதைப் பார்த்த நான் உடனே, “அப்படியெல்லாம் நீ டபாய்த்து விடுவாய் என்று எங்களுக்குத் தெரியாதா? காயும் காம்பும் எல்லாம் சாப்பிட்டால்தான் உனக்கு ஒரு தனிச்சொல்லோடு நேரிசை வெண்பா பாடுவேன்!” என்றதும் அதற்கும் சம்மதித்துக் கொண்டார்.

கடைக்கார நண்பர், அவர் மிளகாயை வாய்க்குள் வைக்குமுன், “இதையும் கேள்! நான் தண்ணியோ சர்க்கரையோ ஒன்றுமே தரமாட்டேன்! ஆமாம். இப்போதே சொல்லிவிட்டேன்!” என்று அச்சுறுத்தினார். அதைக் கேட்ட சபால்கார நண்பர் ஒரு கணம் திகைத்து விட்டார். ஆனால் மறு வினாடி அவர் வாய்க்குள் மிளகாய்ச் ‘சட்னி’ உருவாகிக் கொண்டிருந்தது! அந்த அசாதரண மனிதரின் பற்கள் காயையும் காம்பையும் சதக் சதக் என்று அதம் செய்துகொண்டிருந்தன. அவர் கண்கள் மூடிக்கொண்டன.

எல்லாச் சட்னியையும் விழுங்கிவிட்டு, வாயைத் திறந்து எங்களுக்குக் காட்டும்போது, பழுத்த மிளகாயைப் போல் செக்கச் செவேலென்று சிவந்திருந்த நண்பரின் கண்களைக் கண்ட எங்கள் கண்களிலும் நீர்த்துளிகள் அரும்பிவிட்டன.

அப்புறம் என்ன? அப்படித்தான் நான் ஒரு பச்சை மிளகாய்க்கு வெண்பா யாத்த முதல் கவிஞனென்று இன்னொரு அடைமொழியை எனக்கு என் நண்பர்கள் சூட்டினார்கள்!

இதோ அந்த வெண்பா:

மன்னாதி மன்னனென்று மார்பு தட்டி
என்னார்ந்த நண்பன் இராஜகோபாலன் — இன்று
கண்மூடித் தின்ற பச்சை மிளகாயாலென்
வெண்பா விற்குமோர் கோவன்

***

Series Navigationசெவ்வாய்க் கோளில் பூர்வீகக் கடல்கள் தோன்ற மூன்று  பூத எரிமலை எழுச்சிகளே காரணம்பந்து
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *