கலாபூஷணம் எம்.எம். மன்ஸுர், மாவனெல்ல
பூங்காவனத்தின் 29 ஆவது இதழ் இம்முறை ஆசிரியையாகவும், பேராதனைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை துணை விரிவுரையாளராகவும் கடமையாற்றும் ஜெஸீமா ஹமீட் அவர்களின் முன்னட்டைப் படத்தோடு வெளிவந்திருக்கின்றது. வழமை போன்று நேர்காணல், கவிதை, சிறுகதை, கட்டுரை, உருவகக் கதை, நூல் மதிப்பீடு, நூலகப் பூங்கா என்ற அம்சங்களைத் தாங்கி இந்த இதழும் வெளிவந்திருக்கின்றது.
ஆசிரியர் இவ்விதழில் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றிய கருத்துக்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். ஏனெனில் ஜூன் மாதம் 12 ஆம் திகதி உலக குழந்தைகள் எதிர்ப்பு தினமாக அனுஷ்டிக்கப்படுகின்றது. தற்காலத்தைப் பொறுத்தவரையில் குழந்தைகள், செல்வம் மிகுந்தவர்களால் தொழிலாளர்களாகவும், அடிமைகளாகவும் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்பதால் ஒவ்வொரு பெற்றோரும் தமது குழந்தைகள் மீது அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். உரிய வயதில் அவர்களுக்கான கல்வியை முறைப்படி வழங்க வேண்டும். அவர்களை நற் பிரஜைகளாக உருவாக்குவதற்கான வழிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்துக்களை ஆசிரியர் தலையங்கத்தில் முன்வைத்துள்ளார்.
பதுளை பாஹிரா, எம்.எஸ்.எம். சப்ரி, நுஸ்கி இக்பால், உதய சகி, குலசிங்கம் பிரதீபா, சிமாரா அலி, எஸ்.ஐ. நுஹா, சந்திரன் விவேகரன், மருதூர் ஜமால்தீன், எம்.எம். அலி அக்பர், இல்யாஸ் இம்ராஸ் என்போர் பல்வேறு தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளனர். அதேபோல சூசை எட்வேட், ஏ.சீ. ஜரீனா முஸ்தபா, எஸ்.ஆர். பாலசந்திரன் ஆகியோர் எழுதிய படப்பிடிப்புக்காக, காத்திருப்பாயா?, உண்மை ஆகிய தலைப்புக்களிலான மூன்று சிறுகதைகள் இதழில் காணப்படுகின்றன.
அட்டைப் படத்தை அலங்கரிக்கும் பேராதனைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை துணை விரிவுரையாளரும், ஆசிரியையுமான திருமதி ஜெஸீமா ஹமீட், மாத்தளை மாவட்ட சின்ன செல்வகந்தை எனும் சிற்றூரில் பிறந்து பிட்டகந்த, கந்தேநுவர தமிழ் வித்தியாலயங்களில் கல்வி கற்று பின்னர் மாத்தளை ஆமினா மகளிர் பாடசாலையில் உயர் தரம் கற்று சித்தி பெற்று பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைத் துறையில் கற்றுள்ளார். 2003 ஆம் ஆண்டு வரலாற்றுத் துறையில் சிறப்புப் பட்டம் பெற்று 2003 – 2005 காலப் பகுதியில் துணை விரிவுரையாளராக இருந்து வரலாற்றுத் துறை முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுக் கொண்டுள்ளார். இவர் பட்டப் பின் கல்வி டிப்ளோமாவையும் பெற்று ஒரு கல்வியாளராகத் திகழ்கின்றார்.
சிறுவயது முதலே வாசிப்பில் ஈடுபாடு காட்டியதோடு பல்கலைக்கழக சஞ்சிகை வெளியீடுகளும், சங்கப் பலகையும் இவரது சிந்தனைக்கு களமமைத்து சமூகத்தின் அவலங்களை எடுத்துக் காட்ட வேண்டும் எனத் துணிந்து எழுத்துலகுக்குள் ஈர்க்கப்பட்டிருக்கிறார். இவரது துறையுடன் இணைந்ததான நான்கு வரலாற்று நூல்களையும் மாணவர் வழிகாட்டி நூல்கள் உட்பட நிழலின் காலடியோசை என்ற ஒரு கவிதைத் தொகுதியையும் எல்லாமாக ஐந்து நூல்களை வெளியீடு செய்துள்ளார். தவிர, கவ்வாத்து மலைக் கனவுகள், கல்யான ஊர்வலம், ஸ்கைப் கல்யாணம் ஆகிய மூன்று நாடகங்களையும் எழுதியிருக்கிறார். இவை யாவும் அகில இலங்கை ரீதியாக முதலிடத்தைப் பெற்றுள்ளன. 2011 இல் மலேசியாவில் இடம்பெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டிலும் இவர் கலந்துகொண்டுள்ளார். அத்தோடு 2016 ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டிலும் பங்குபற்றி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இலக்கிய அனுபவ அலசல் என்ற பகுதியை தொடர்ந்து எழுதி வந்த கவிஞர் ஏ. இக்பால் அண்மையில் காலஞ்சென்றுவிட்டார் என்பது பேரிழப்பாகும். அவர் இந்த இதழிலுள்ள கட்டுரையிலே 1959 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதி இலங்கை வானொலிக்கு அனுப்பிய பேச்சு பற்றிய குறிப்புகளைத் தந்துள்ளார்.
ஏ. வினோதினி மதிப்பீடு செய்துள்ள ”சு. வில்வரத்தினம் கவிதைகள் பற்றிய குறிப்புகள்” பயனுள்ளதாக அமைவதோடு அவரைப் பற்றி அறிந்துகொள்ளவும் வாய்ப்பாக அமைகிறது. வில்வரத்தினம் அவர்கள் ஆரம்பத்தில் சங்கீதம், நாட்டுக் கூத்து, பாடல்களுக்கு இசை அமைப்பது போன்ற பல்வேறு துறைகளில் ஈடுபட்டிருந்தாலும் 1970 களுக்குப் பின்னர் கவிதைத் துறையில் தீவிர ஈடுபாடு காட்டி வந்ததால் 1980 களில் தன்னை ஒரு சிறந்த கவிஞராக இனங்காட்டிக் கொண்டார். இவர் சமகால நடப்புகளை மட்டுமன்றி பாரம்பரியங்களையும் கவிதையூடே மீட்டிப் பார்க்கும் ஒரு கவிஞராகக் காணப்படுகிறார்.
நுணாவிலூர் கா. விசயரத்தினம் அவர்களால் எழுதப்பட்ட ”காலத்தை வென்ற காவிய மகளிர்” என்ற ஆய்வு நூலைப் பற்றிய மதிப்பீடு ஒன்றைத் தந்திருக்கிறார் காவியன். லண்டனில் வசித்து வந்த நுணாவிலூர் கா. விசயரத்தினம் அவர்கள் இலக்கிய ஆய்வு நூலுக்கான ஊக்குவிப்பு மையம் வழங்கிய 2011 ஆம் ஆண்டுக்கான தமிழியல் விருதுகளையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ”ஆடவரின் ஆண்மை” பற்றிய கட்டுரை ஒன்றினையும் இவ்விதழில் தந்திருக்கிறார். பண்டைய இலக்கியங்கள் ஆண்மையைப் பற்றிக் கூறும் விதங்களை பண்டைய நூல்களில் இருந்து எடுத்துக் காட்டி தனது கட்டுரையைச் சிறப்பாக்கியிருக்கிறார். இவரும் அண்மையில் இறந்துவிட்டதாக அறியக் கிடைத்தது வேதனையாக இருக்கிறது.
மேலும் எஸ். முத்துமீரான் எழுதிய மலர்கள் என்ற உருவகக் கதை ஒன்றும், நூல் வெளியீடு சம்பந்தமாக எஸ்.ஆர். பாலசந்திரன் எழுதிய கட்டுரை ஒன்றும் காணப்படுகின்றது.
நூலகப் பூங்காவிலே ஏழு நூல்கள் பற்றிய குறிப்புகளும், எழுத்தாளர் வெலிகம ரிம்ஸா முஹம்மதின் எரிந்த சிறகுகள் நூல் வெளியீட்டின் புகைப்படங்களும் காணப்படுகின்றன.
சஞ்சிகை – பூங்காவனம்
பிரதம ஆசிரியர் – ரிம்ஸா முஹம்மத்
தொலைபேசி – 0775009222
மின்னஞ்சல் – poetrimza@gmail.com
வெளியீடு – பூங்காவனம் இலக்கிய வட்டம்
விலை – 100 ரூபாய்
கலாபூஷணம் எம்.எம். மன்ஸுர், மாவனெல்ல
- இந்திய நியூடிரினோ ஆய்வுக்கூடம் போடி மலைப் பீடத்தில் அமைப்பு பற்றிய விளக்க ஆவணங்கள்
- துபாயில் “ஓரிதழ்ப்பூ” நாவல் வெளியீட்டு விழா
- தஸ்தாவெய்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள்
- ஆப்பிள் தோப்புக்குப் போவோமா ? மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
- தமிழ் ஸ்டுடியோ – பாலுமகேந்திரா விருது 2018 – (குறும்படங்களுக்கு மட்டும்)
- மாரீசன் குரல் கேட்ட வைதேகி
- காலண்டரும் நானும்
- ·மனப்பிறழ்வு
- கேள்வி – பதில்
- நான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்? திரு.மாரிதாஸின் நூல் குறித்த ஒரு சிறு அறிமுகம்
- மருத்துவக் கட்டுரை பக்க வாதம்
- தொடுவானம் 216. துரித பயண ஏற்பாடு
- பூங்காவனம் இதழ் 29 இதழ் பற்றிய கண்ணோட்டம்
- மீண்டும்… மீண்டும்…
- கவிதைப் பிரவேசம் !
- “ஒரு” பிரம்மாண்டம்
- சிறந்த தமிழ் திரைப்படங்கள் 150
- காய்த்த மரம்
- கோகுல மயம்