உலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 2 – தி இமிடேசன் கேம்

author
0 minutes, 12 seconds Read
This entry is part 12 of 22 in the series 22 ஏப்ரல் 2018

அழகர்சாமி சக்திவேல்

திரைப்பட விமர்சனம் –

தி இமிடேசன் கேம் (The Immitation Game) என்ற இந்தத் திரைப்படம், ஒரு உண்மை வரலாற்றுக் கதையை அடிப்படையாய்க் கொண்ட அறிவியல் கதை ஆகும். எனவே என் விமர்சனத்தை தொடங்குவதற்கு முன்னால், அந்த உலக வரலாறு குறித்தும், அந்த கணினி அறிவியல் குறித்தும் நான் இங்கே எழுத வேண்டியதாய் இருக்கிறது.

1939-இல், இரண்டாம் உலகப் போர் தொடங்கிய நேரம் அது. ஹிட்லரின் ஜெர்மன் கப்பல் படைகள், தங்கள் புத்தி கூர்மையான இரண்டு தொழில் நுட்பங்களால், ஆங்கிலேய அரசாங்கத்தை திணற அடித்துக் கொண்டிருந்தது. எனிக்மா(Enigma) என்ற, மின்காந்த அலைகள் மூலம் செய்திகளை பரப்பும் மின்னஞ்சல் கருவி மற்றும் போர்த்திறமை கொண்ட யு போட்(U-Boat) எனப்படும் நீர்மூழ்கிக்கப்பல், இவை இரண்டும்தான் ஹிட்லரின் ஜெர்மன் தொழில்நுட்பங்கள். அந்தக்காலத்தில், இங்கிலாந்துக்குத் தேவையான பல உணவுப்பொருட்கள், பல உபகரணங்கள், இவை அனைத்தும் அதன் நட்பு நாடுகளான அமெரிக்காவில் இருந்தும், கனடாவில் இருந்தும் சரக்குக் கப்பல்கள் மூலம், அட்லாண்டிக் கடல் வழியாக, இங்கிலாந்துக்கு வந்து கொண்டிருந்தன. இந்த சரக்குக் கப்பல்களை அழிப்பதுதான் ஜெர்மன் கப்பற்படைகளின் ஒரு முக்கிய நோக்கமாய் இருந்தது. அப்படி சரக்குக் கப்பல்களை அழிப்பதால், இங்கிலாந்துக்கு வரும் உணவுப்பொருட்கள் நின்று போகும். இங்கிலாந்து பசியில் வாடும். பின் தரைப்படைகள் கொண்டு இங்கிலாந்தை எளிதில் கைப்பற்றி விடலாம் என்பதே ஜெர்மனின் கனவு. அந்தக் கனவை நிறைவேற்ற, எனிக்மா மின்னஞ்சல் கருவியும், யு-போட் நீர்மூழ்கிக் கப்பல்களும் ஜெர்மானியர்களால் பயன்படுத்தப்பட்டன. அட்லாண்டிக் பெருங்கடலில் சரக்குக்கப்பல்கள் பயணம் செய்வதை, ஜெர்மன் ஒற்றர் படைகள் முதலில் அடையாளம் கண்டு, எனிக்மா மின்கருவி மூலம், யாரும் புரிந்துகொள்ள முடியாத, ஆனால் ஜெர்மன் படைகள் மட்டும் புரிந்துகொள்ளும் சங்கேத மொழி மூலம், ஜெர்மன் ராணுவத்துக்கு தகவல் பரிமாற்றம் செய்யப்படும். பதிலுக்கு, ஜெர்மன் அதிகாரிகள், சரக்குக் கப்பலுக்கு அருகில் இருக்கும், தங்கள் யு-போட் என்ற நீர்மூழ்கிக் கப்பலுக்கு, சரக்குக்கப்பலை எந்த குறிப்பிட்ட நேரத்தில் தாக்கவேண்டும் என்று அதே எனிக்மா கருவி கொண்டு தகவல் அனுப்புவர். அந்தக் கட்டளைப்படியே, ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பலும் சரக்குக்கப்பலைத் தாக்கி அழிக்கும். இந்த நவீனப் போர் முறையால் இங்கிலாந்துக்கு பெரிய இழப்பு ஏற்பட்டது.

ஜெர்மனின் எனிக்மா மின்கருவி என்ன தகவல் அனுப்புகிறது என்று தெரிந்து கொண்டால், அதற்கேற்ப இங்கிலாந்து, தனது படைகளைத் தயார் செய்ய முடியும். எனிக்மா மின்கருவியின் சங்கேதக் குறியீடு தெரிந்து கொள்ள, இங்கிலாந்து ஒரு போர்க்குழுவை அமைக்கிறது. அந்தப் போர்க்குழுவில் இருந்த முக்கியமான ஒரு மேதைதான், இந்தப் படத்தின் கதாநாயகன் ஆலன் டுரிங் ஆகும். கணித மேதையான ஆலன் டுரிங், Cryptography என்ற குறியாக்கவியலில் திறமை வாய்ந்தவன். எனிக்மா மின்கருவியின் நுணுக்கம் தெரிந்து கொள்ள, தொடக்கத்தில் போராடும் ஆலன் டுரிங்க்கிற்கு உதவி செய்ய கதாநாயகி ஜோயன் கிளார்க் சேர்ந்துகொள்கிறாள். எனிக்மா மின்கருவி நுணுக்கம் தெரிந்துகொள்ள, ஆலன் டுரிங், ‘கிறிஸ்டோபர்’ என்ற இன்னொரு கருவியை உருவாக்குகிறான். கிறிஸ்டோபர் என்ற அந்தப்பெயர் ஆலன் டுரிங்கின் பால்ய காலத்து நண்பன் பெயர் ஆகும். ஓரினச் சேர்க்கையில் ஆர்வம் உள்ள ஆலன் டுரிங், நண்பன் கிறிஸ்டோபரை காதலிக்கிறான். ஆனால் ஆலன் டுரிங் தனது காதலைச் சொல்லும் முன்னரே கிறிஸ்டோபர் இறந்து போகிறான். கிறிஸ்டோபர் மின்கருவி, ஆரம்பத்தில், எனிக்மா கருவியின் சங்கேதக் குறியீடுகளைப் புரிந்துகொள்ள சிரமப்படுகிறது. ஒருகட்டத்தில் சோர்ந்துபோகும் கதாநாயகி, வீட்டுக்குப் போக ஆசைப்படும் போது, அவளுக்கு தம் மீது உள்ள காதலைப் புரிந்துகொள்ளும் ஆலன் டுரிங், அவளைக் கல்யாணம் செய்து கொள்வதாக, பொய்யான வாக்குக் கொடுத்து, அவளைத் தன்னோடு தக்க வைத்துக் கொள்கிறான், அதற்கான விருந்தில், கதாநாயகி, ஆலன் டுரிங்குடன் நடனமாட ஆசைப்படும் போது, ஆலன் டுரிங் மனம் தடுமாறுகிறான். அவன் தடுமாற்றத்தைப் பார்த்துக்கொண்டே இருந்த சோவியத் ஒற்றனான அவனது சகா, ஆலன் டுரிங் ஒரு ஓரினச் சேர்க்கையாளன் என்பதை கண்டுபிடித்து விடுகிறான். ஆலன் டுரிங்கும் தான் ஒரு ஹோமோசெக்ஸ் ஆண் என்பதை, சோவியத் ஒற்றனிடம் ஒத்துக்கொள்கிறான். விருந்து நடந்து கொண்டு இருக்கும் போதே, பேச்சுவாக்கில், ஆலன் டுரிங்கிற்கு திடீரென்று ஒரு ஐடியா பிறக்கிறது. ஹிட்லர் காலத்தில், எந்தத் தகவல் பரிமாற்றம் நடந்தாலும், அந்தத் தகவலுக்குள் “ஹிட்லர் வாழ்க” என்று முதலில் எழுதப்பட்டு இருக்கும். எனவே எனிக்மா கருவி அனுப்பும் தகவலிலும் நிச்சயம் “ஹிட்லர் வாழ்க” என்ற வார்த்தை சங்கேதக் குறியீடாக மாற்றப்பட்டு இருக்கும். இந்த சின்ன உண்மையை வைத்துக்கொண்டு மறுபடியும் ஆலன் டுரிங் முயற்சி செய்ய, எனிக்மா மின்கருவியின் நுணுக்கம் புரிந்து போகிறது. ஆலன் டுரிங்கும் அவனது சகாக்களும் வெற்றிக்களிப்பில் அளவுகடந்த சந்தோசம் கொள்கிறார்கள். இந்த வெற்றியை, ஜெர்மனுக்குத் தெரியாமல் ரகசியமாய் வைத்துக்கொள்ளும் இங்கிலாந்து இரண்டாம் உலகப்போரில் வெற்றி பெறுகிறது. ஆலன் டுரிங்கின் இந்தப் புதிய கண்டுபிடிப்பால் இங்கிலாந்து அடைந்த பலன்கள் இரண்டு. ஒன்று, கிட்டத்தட்ட பதினான்கு இலட்சம் இங்கிலாந்து மற்றும் அதன் நட்பு நாட்டு போர் வீரரர்கள், மற்றும் கப்பல் பயணிகள் ஆலன் டுரிங் என்ற மனிதரால் காப்பாற்றப்பட்டுள்ளனர். இன்னொன்று, ஆலன் டுரிங், கிறிஸ்டோபர் என்ற அந்த புதிய மின்கருவியை கண்டுபிடிக்காமல் போய் இருந்தால், இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வர இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகி இருக்கும். எண்ணற்ற பொருட்சேதமும் உயிர்சேதமும் ஏற்பட்டு இருக்கும். ஆலன் டுரிங் கதை இத்தோடு முடியவில்லை. ஆலன் டுரிங்கின் வெற்றிக்குப் பிறகு அவன் சகாக்கள் எல்லோரும் பிரிகிறார்கள். ஆலன் டுரிங், கதாநாயகியிடம், தான் ஒரு “ஹோமோசெக்ஸ் விரும்பி:” என்றும் கல்யாணம் செய்து வாழ தகுதி அற்றவன் என்று சொல்லி அவளை விட்டுப் பிரிகிறான்.

1951-இல், லண்டனின் ரீகல் தியேட்டருக்கு அருகில், அர்னோல்ட் முர்ரே என்ற ஆண்மகனைச் சந்திக்கும் ஆலன் டுரிங், அவன் மீது மோகம் கொண்டு, அவனை தனது வீட்டுக்கு அழைக்கிறான். இருவரும் உடல் உறவு கொள்கிறார்கள். ஒரு நாள், ஆலன் டுரிங் வீடு திருடர்களால் களவாடப்படுகிறது. திருடியவன் தனது நண்பனாக இருக்கலாம் என அர்னோல்ட் முர்ரே சொல்ல, போலீசில் புகார் செய்கிறான் ஆலன் டுரிங். விசாரணை செய்யும் இங்கிலாந்து போலிஸ், ஆரம்பத்தில், “ஆலன் டுரிங் ஒரு ரஷ்ய உளவாளியாய் இருப்பானோ” என்று சந்தேகப்பட்டு விசாரணையை இன்னும் தீவிரப்படுத்துகிறது. தீவிர விசாரணையைத் தாக்குப்பிடிக்க முடியாத ஆலன் டுரிங், தனக்கும் அர்னோல்ட் முர்ரேக்கும் இருந்த ஓரின உறவை ஒத்துக்கொள்கிறான். வழக்கு நீதிமன்றம் செல்கிறது. நீதிபதி ஆலன் டுரிங்கிற்கிடம் இரண்டு முடிவுகளை வைக்கிறார். ஒன்று சிறைக்குச் செல்வது அல்லது வேதியியல் விரைநீக்கம் என்ற சிகிச்சைக்கு உடன்பட்டு தன ஆண்மையை போக்கிக்கொள்வது. ஆலன் டுரிங் வேதியியல் விரைநீக்கம் செய்து கொள்ள உடன் படுகிறான். மருந்துகள் சாப்பிட்டு சாப்பிட்டு அவன் உடல்நலம் குன்றுகிறது. இறுதியில் தனது நாற்பத்தியோராவது வயதில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்கிறான். ஆலன் டுரிங் காலத்தில் கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் ஓரினச்சேர்க்கையாளர்கள் கொல்லப்படுகிறார்கள்.

2009 ஆம் ஆண்டு, ஆலன் டுரிங்கிற்கு நடந்த கொடுமை குறித்து இங்கிலாந்து மக்கள் எதிர்க்குரல் எழுப்புகிறார்கள். செவி சாய்க்கும், அப்போதைய இங்கிலாந்துப் பிரதமர், மக்களிடம், அரசாங்கம் சார்பாக மன்னிப்பு கோருகிறார். டிசம்பர் 2014-ஆம் ஆண்டு, இங்கிலாந்து ராணி ஆலன் டுரிங்கிற்கு மன்னிப்பு (posthumous pardon) அருளுகிறார். அதன் பிறகு ஆலன் சட்டம் என்ற புதிய சட்டம் இயற்றப்பட்டு, சம்பந்தப்பட்ட அத்தனை ஓரினச்சேர்க்கை குற்றவாளிகளுக்கும் மன்னிப்பு வழங்கப்படுகிறது.
ஆலன் டுரிங் உண்மைக் கதையையே நிறையச் சொல்லவேண்டி இருந்ததால், படத்தின் விமர்சனம் கீழே தொடர்கிறேன்.

தி இமிடேசன் கேம் (The Imitation Game) என்ற இந்தத் திரைப்படம், 2014-ஆம் ஆண்டு, மார்டன் டில்டம் என்பவரால் இயக்கப்பட்டு பெரும் வணிக வெற்றியைப் பெற்ற படம் ஆகும். அத்தோடு மட்டுமல்லாமல், இந்தப்படம், அகாடமி விருதின் எட்டு பிரிவுகளுக்கும், கோல்டன் க்ளோப் விருதின் ஐந்து பிரிவுகளுக்கும் பரிந்துரைக்கப்பட்ட சிறப்பைப் பெற்றதோடு, சிறந்த திரைக்கதை ஆசிரியர் அகாடமி விருதையும் தட்டி சென்றது. இந்தப் படத்தின் கதை,  திரு ஆண்ட்ரு ஹோட்ஜெஸ் என்பரால் எழுதப்பட்ட “ஆலன் டுரிங் – எனிக்மா”  என்ற புத்தகத்தைத் தழுவி இருந்த போதும், அந்தக் கதையை, படத்திற்கேற்ப திரைக்கதையாய் மாற்றி அமைத்த திரு க்ரஹாம் மூர்  என்பரையே நாம் படத்தின் வெற்றிக்கு காரணமானவராக மனதாரச் சொல்லலாம். படத்தின் காட்சிகளை விமர்சிக்கும் முன்,  படத்தின் தலைப்பை விமர்சிப்போம். படத்தின் உண்மைக் கதாநாயகன் ஆலன் டுரிங்,  1950-இல், மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் வேலை பார்க்கும்போது உருவாக்கிய கணினி அறிவியல் விளையாட்டுத்தான் “டுரிங் டெஸ்ட் (Turing test)”  அல்லது தி இமிடேசன் கேம் (The imitation Game)  என்று அழைக்கபடுகிறது. இந்த விளையாட்டினை விளையாடும் மனிதர்,  ஒரு கணினி மின்திரையின் முன் உட்கார்ந்து,  கேள்விகளை கணினிக் கீ போர்ட்டில் அடிப்பார். அவர் கேட்கும் கேள்விகளுக்கு மறுமுனையில் ஒரு மனிதர் பதில் எழுதுவார். கூடவே மறுமுனையில் இருக்கும் ஒரு கணினி இயந்திரமும் பதில் சொல்லும். விளையாடும் மனிதருக்கு, மறுமுனையில் பதில் சொல்வது இயந்திரமா அல்லது இன்னொரு மனிதரா என்பது சொல்லப்படாது. சொல்லப்பட்டிருக்கும் பதில்களை வைத்து,  பதில் சொல்லியிருப்பது இயந்திரமா அல்லது மனிதனா என்பதை விளையாடுபவர் கண்டுபிடிப்பதே இமிடேசன் கேம் (The imitation Game)  என்ற விளையாட்டின் கோட்பாடு. இந்த விளையாட்டின் மூலம், அந்தக் கணினி இயந்திரத்தின் அறிவுக்கூர்மை மதிப்பிடப்பட்டது. இந்த அறிவியல் விளையாட்டைக் கண்டுபிடித்ததன் மூலம்,  நம் கதாநாயகன் ஆலன் டுரிங், கணினி இயலின் தந்தை மற்றும் செயற்கைப் புலனாய்வு அறிவியலின்(Artificial Intelligence)  தந்தை என்று அழைக்கப்பட்டார். அவரைப் பெருமைப்படுத்தவே, இந்தப் படத்தின் தலைப்பு இமிடேசன் கேம் (The imitation Game) என்று வைக்கப்பட்டது.

படத்தில், திரைக்கதை சொல்லப்பட்டிருக்கும் விதம் நம்மை உண்மையில் ஆச்சரியப்பட வைக்கிறது. இந்தப் படத்தின் கதையை நான்காகப் பிரித்து இருக்கிறார் திரைக்கதாசிரியர். 1) 1927-இல், ஆலன் டுரிங் தனது பள்ளித் தோழன் கிறிஸ்டோபருடன் கொள்ளும் ஓரினக்காதல், மற்றும் அவனிடம் இருந்து பெரும் கணினி அறிவு.  2) 1939-இல் ஆரம்பமாகும் இரண்டாம் உலகப்போர் காட்சிகள், 3) 1941-இல் கதாநாயகன் ஆலன் டுரிங், எனிக்மா கருவியின் சங்கேதக் குறியீடுகளை அடையாளம் காணுதல், 4) 1950-இல், ஆலன் டுரிங் செய்யும் ஓரினச்சேர்க்கையை கண்டுபிடிக்கும், இங்கிலாந்து போலிஸின் புலனாய்வு என நான்கு திரைக்கதை நிகழ்வுகள். ஒரு சாதாரண திரைக்கதை ஆசிரியராக இருந்தால், இந்த நான்கு கதைப்பிரிவுகளையும் ஒன்றாக்கி, சிறுவயது தொடங்கி ஆலன் டுரிங் தற்கொலை செய்யும் வரை கதை சொல்லி இருப்பார். ஆனால், இந்தப் படத்தின் திரைக்கதை ஆசிரியரோ, படத்தின் முதல் காட்சியாய்,  இங்கிலாந்து போலிஸ்,  ஆலன் டுரிங்கை விசாரணை செய்யும் காட்சியை முன் நிறுத்துகிறார். அடுத்த காட்சியாய் ஆலன் டுரிங் இங்கிலாந்து ராணுவ வேலையில் சேரும் காட்சி. அதற்கடுத்த காட்சி,  ஆலன் டுரிங் பள்ளியில் நடக்கிறது. இடையில் உலகப்போர் காட்சி. இப்படிக்காட்சிகளை,  முன்னுக்குப்பின் முரண்படுத்தி,  அதே நேரத்தில் முழுக்கதையையும் பார்ப்பவருக்கு அலுக்காமல் சொல்லியிருக்கும் திறமைக்காய்,  திரைக்கதை ஆசிரியருக்கு இன்னும் பல விருதுகள் கொடுக்கலாம். பட்டுச்சேலையை நெய்பவனின் திறமை,  பட்டு எங்கே கோர்க்கப்பட வேண்டும்..ஜரிகை எங்கே கோர்க்கப்படவேண்டும் என்ற திட்டமிடுதலில் இருக்கிறது. ஒரு படத்தின் திரைக்கதையும் அப்படியே. அப்படித் திறமையாய் நெய்யப்பட்ட ஒரு பட்டுச்சேலையே இமிடேசன் கேம் (The imitation Game) என்ற இந்தப்படம்.

படத்தின் வெற்றிக்கு இன்னொரு காரணகர்த்தாகவாக, படத்தின் இசை அமைப்பாளர் திருஅலெக்சாண்டர் டேச்ப்லாட்டினைச் சொல்லவேண்டும். நாம் சிந்து பைரவிப் படத்திலேயே ஆரோகணம் அவரோகணம் என்றால் என்னவென்று தெரிந்து கொண்டோம். ஒரு சுரத்தில் ஆரம்பித்து, அந்த சுரத்தின் ஏறு வரிசையில் பாடினால் அது ஆரோகணம். இறங்கு வரிசையில் பாடினால் அது அவரோகணம். மேற்கத்திய பியானோ இசையில் இந்த முறை அர்பெக்கியோ (arpeggio) என்று அழைக்கப்படுகிறது. இந்த இசை முறையை, படம் முழுதும் கையாண்டு, ஒரு இசை பிரமிப்பை, இந்தப்படத்தின் இசை அமைப்பாளர் உருவாக்கியிருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது. படத்தின் பின்னணி இசையின் முக்கிய கட்டங்கள் என்றால், ஒன்று சிறு வயது ஆலன் டுரிங், தனது காதலன் இறந்து போய் விட்டான் எனப் பள்ளி தலைமை ஆசிரியர் சொல்லித் தெரிந்து கொள்ளும் கட்டம். பள்ளித் தலைமை ஆசிரியர் “கிறிஸ்டோபர் இறந்து விட்டான்.. அவனை உனக்குத் தெரியுமா என்று கேட்கையில் “தெரியும்.. அவன் என் காதலன்தான்” என்று சொல்லமுடியாமல் தடுமாறும் அந்த சிறு வயது பாலகன் ஆலன் டுரிங்கின் நடிப்பு பிரமாதம். சோகத்தில், வார்த்தைகள் வாயில் இருந்து வராமல் அழுத்திப் பிடிக்கும் அந்த சிறுவனின் துடிக்கும் உதடுகள், அதற்கேற்ப ஒரு சிறு கீற்றுப் போல மெல்ல எழுந்து கொஞ்சம் கொஞ்சமாய் பெரிதாகும் அந்தப் பின்னணி இசை..நம் கண்களில் கண்ணீரை வரவழைத்து விடுகிறது. இன்னொரு இடம், ஆலன் டுரிங் எனிக்மா சங்கேத மொழியை முற்றிலும் புரிந்துகொண்டு வெற்றி பெறும் காட்சி. ஆலன் கண்டுபிடித்த அந்த மின்கருவியின் டிக் டிக் சத்தம், கூடவே பின்னால் ஒரு மயிர்க்கூச்செறியும் அனுபவத்தை நமக்கு உணர்த்தும் பின்னணி மெல்லிசை. பிரமாதம் பிரமாதம்.

படத்தில், நம்மை உணர்சியடையச் செய்யும் காட்சிகள் பல உண்டு. அவற்றில் சிலவற்றை இங்கே நான் குறிப்பிட்டாக வேண்டும். ஆலன் தன்னை மணமுடிப்பான் என்று நினைத்துக் கொண்டு இருக்கும் கதாநாயகியிடம் ‘தான் ஒரு ஹோம்செக்ஸ் செய்பவன்’ என்று ஆலன் டுரிங் சொல்லும் காட்சி. உண்மையைய்த் தெரிந்துகொண்ட கதாநாயகி அதிர்ச்சி அடைந்தாலும், “திருமண வாழ்க்கைக்கு தேவை இருவர் மன சம்மதமே. உடல் சம்மதம் அல்ல”  என்று வாதாடும் காட்சி சிறப்பான காட்சி. இன்னொன்று, ஆலன் டுரிங், ஓரினச்சேர்க்கைக்காக தண்டிக்கப்பட்டு, வீட்டில் மருந்து சாப்பிட்டு உடல் சோர்ந்து போகும் காட்சி. காட்சிக்குள் உள்ளே நுழையும் கதாநாயகியிடம் தனது நிலை குறித்து ஆலன் டுரிங்..கதறி அழுகையில் அவனை சமாதானப்படுத்தும் கதாநாயகியின்..வசனங்கள் அருமை. படத்தின் காட்சிகளாய்,  சில உண்மையான இரண்டாம் உலகப்போர்க் காட்சிகள் பயன்படுத்தப்பட்டு இருப்பது படத்தின் இன்னொரு சிறப்பு. இரண்டாம் உலகப்போரின் போது இருந்த ஒரு பழைய இங்கிலாந்தைக் காட்ட, படத்தின் ஒளிப்பதிவாளர் சிரமப்பட்டு இருக்கிறார். அதில் வெற்றியும் கண்டு இருக்கிறார். படத்தில், ஆலன் டுரிங்காய் நடித்து அசத்தி இருப்பவர் திரு பெனெடிக்ட் கும்பர்பேட்ச் ஆகும். படத்தின் கதாநாயகி திருமதி கெய்ரா நெயட்லி. இந்தப்படம் ஒரு ஓரினக்காதல் சார்ந்த படம் ஆதலால், ஆண்-பெண் சார்ந்த காதல் காட்சிகள் குறைவே.

இன்று நாம் அன்றாடம் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கும் கம்ப்யூட்டர் என்ற கணினி அறிவியலின் முன்னோடியாய், அதன் தந்தையாய், ஒரு ஓரினச்சேர்க்கையாளர் இருந்து இருக்கிறார் என்பது,  உலகில் வாழும் எல்லா ஓரினச்சேர்க்கையாளர்களுக்கும் பெருமைதான். இந்தப்படம் ஆலன் டுரிங் என்ற ஒரு ஓரினச்சேர்க்கையாளனின் பெருமையை உலகம் முழுதும் எடுத்துச் சென்று இருக்கிறது என்பதில் எனக்கு எந்தவித ஐயமும் இல்லை.

அழகர்சாமி சக்திவேல்

Series Navigationவிழிமன்னித்துக்கொள் மானுடமே..
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *