மருத்துவக் கட்டுரை – புற நரம்பு அழற்சி ( Peripheral Neuritis )

This entry is part 10 of 14 in the series 29 ஏப்ரல் 2018
                                                                                                  
          அழற்சி என்பது வீக்கமும் வலியும் உண்டாவது. நரம்புகளுக்கு போதிய இரத்த ஓட்டம் இல்லாத காரணத்தால் அவை வீங்கி செயலிழந்து போகின்றன. இந்த நரம்புகள் மூளையிலிருந்து தகவல்களை முதுகுத்தண்டு வழியாக கைகளுக்கும் கால்களுக்கும் உடலின் இதர பகுதிகளுக்கும் கொண்டு செல்பவை. இவை பாதிக்கப்பட்டால் அப் பகுதியில் பலவீனம், வலி, மதமதப்பு உண்டாகும்.

இவற்றை புற நரம்புகள் எனலாம். இவை இப்படி பாதிப்புக்கு உள்ளானால் அதை புற நரம்பு அழற்சி என்று கூறலாம்.

நீரிழிவு நோய் முக்கிய காரணம் என்றாலும் வேறு சில காரணங்களாலும் இது உண்டாகலாம். அவை வருமாறு:

* விபத்து – இதில் முதுகுத்தண்டில் அடிபட்டால் நரம்புகள் பாதிப்புக்கு உள்ளாகும்.

* கிருமித் தொற்று – நரம்புகளைத் தாக்கும் கிருமிகள்.

* சுரப்பிகள் – சில ஹார்மோன்கள் குறைபாட்டால் நரம்புகள் பாதிக்கப்படலாம்.

          * மரபணு வழி – சில குடும்பங்களில் பரம்பரையாக இது உண்டாவது.
          * இரசாயனம் –  வேலை இடத்தில் இரசாயனம் வெளியாவது. அதைத் தொடர்ந்து சுவாசித்தால்,  இரத்தத்தில் கலந்து நச்சுத்தன்மையை உண்டாக்கி நரம்புகளைப் பாதிக்கும்.
          * வைட்டமின் குறைபாடு – குறிப்பாக பி1, பி 6, பி 12 வைட்டமின்களின் குறைபாடு.
                                                                               நரம்புகளின் வகைகளும் அவற்றின் தன்மைகளும்
          ஒவ்வொரு புற நரம்பும் உடலின் ஒரு பகுதியில் குறிப்பிட்ட ஒரு செயலைச் செய்கிறது. . ஆகவே எந்த பகுதியில் எந்த நரம்பு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது என்பதைப் பொறுத்தே அறிகுறிகள் உண்டாகும்.
          நரம்புகள் பொதுவாக மூன்று வகையானவை.
          1. உணர்ச்சி நரம்புகள் – இவை தொடு உணர்ச்சி , சுடு உணர்ச்சி, குளிர் உணர்ச்சி, வலி உணர்ச்சி போன்றவற்றை தோலிலிருந்து மூளைக்குக் கொண்டுசெல்கிறது.
          2. செயல் நரம்புகள் – இவை தசைகளை இயங்கச் செய்கின்றன.

          3. உறுப்பு \நரம்புகள்  – இவை இரத்த அழுத்தம், ஜீரணம், சிறுநீர் கழித்தல் போன்ற செயல்களைக் கட்டுப்படுத்துகின்றன.

                                                                               புற நரம்பு அழற்சியால் உண்டாகும் அறிகுறிகள்

          * கைகளிலும் கால்களிலும் மதமதப்பு
          * கூரிய ஊசியால் குத்துவது போன்ற வலி அல்லது நெருப்பில் எரிவது போன்ற வலி
          * கூசுவது போன்ற உணர்வு
          * நடையில் தடுமாற்றம் – விழுந்துவிடும் ஆபத்து.
          * தசைகளில் பலவீனம்.

          * உறுப்பு நரம்புகள் பாதிக்கப்பட்டால் ஜீரணக் கோளாறு, சிறுநீர் கழிப்பதில் சிரமம் ,மலம் கழிப்பதில் சிரமம், அதிக வியர்வை, இரத்த அழுத்தத்தில் மாற்றமும்  அதனால் உண்டாகும் தலைச் சுற்றல், மயக்கம் போன்ற பிரச்னைகள் தோன்றலாம்.

                                                                                                     பின்விளைவுகள்

         * நீரிழிவு நோயாளிகளுக்கு கால்களில் மதமதப்பு தோன்றி அதனால் தொடு உணர்ச்சி இல்லாமல் போவதால் அவர்களுக்கு வலியும் தெரியாது. அதனால் காலில் காயம் பட்டால் அவர்களுக்கு வலிக்காது. அதில் கிருமித் தொற்று உண்டாகி சீழ் பிடித்தாலும் வலிக்காது. புண் ஆழமாகி தசைகளையும் எலும்புகளையும்கூட தாக்கி பரவும். இதுபோன்றுதான் தீ காயம் உண்டானால் வலி தெரியாது. ஆணி அல்லது முள் குத்துவதும் வலி தெரியாமல் போகலாம்.

          * உணர்ச்சி இல்லாத தோலில் கிருமிகள் தொற்று உண்டாகி எளிதில் பரவும். வலி தெரியாத காரணத்தால் அது பற்றி நோயாளி கண்டுகொள்ளாமல் இருக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

                                                                                                             பரிசோதனைகள்

          மருத்துவர் முதலில் நோயாளிக்கு  நீரிழிவு நோய் உள்ளதா என்பதை இரத்தப் பரிசோதனை மூலம் நிச்சயம் செய்துகொள்வார். இரத்தத்தில் கிருமித் தொற்று உள்ளதா என்பதையும் பார்ப்பார்.

          மது அருந்தும் பழக்கம், மற்றும் உட்கொள்ளும் மாத்திரைகள் பற்றி வினவுவார் . அதன்பின் தேவைப்பட்டால் சில பரிசோதனைகள் செய்ய உத்தரவிடுவார். அவை வருமாறு:

          * EMG ( Electromyogram  ) பரிசோதனை – இதில் தசைகளின் தன்மை அறியலாம்.

          * NCV ( Nerve Conduction Velocity  ) பரிசோதனை – இதில் நரம்பில் தகவல் செல்லும் வேகம் அறியலாம்.
         (  மேற்கூறிய இரு பரிசோதனைகளும் சிறப்பு மருத்துவமனைகளில்தான் செய்யலாம்.)
          * Muscle  and Nerve Biopsy Test – இது தசை நரம்பு பரிசோதனை. பாதிப்புக்கு உள்ளான பகுதியிலிருந்து சிறு தசை எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்.

                                                                                                    சிகிச்சை முறைகள்

           நரம்பு எதனால் பாதிப்புக்கு உள்ளானது என்பதை அறிந்து அதை சரிசெய்வதே சிகிச்சையின் முக்கிய நோக்கமாகும்.உதாரணமாக வைட்டமின் குறைபாடுதான் காரணமென்றால் அதை மாத்திரைகள், சத்தான உணவுகள் மூலம் சரி செய்யலாம். மது அருந்துவதால் நரம்புகள் பாதிக்கப்பட்டால் மதுவை நிறுத்துவதின் மூலம் சரி செய்யலாம்.சில மருந்துகள் காரணம் எனில் அந்த மருந்துகளை நிறுத்தி மாற்று மருந்துகள் தரலாம். நீரிழிவு நோய்தான் காரணமெனில் இனிப்பின் அளவைக் கட்டுப்படுத்துவதின் மூலம் மேற்கொண்டு நரம்பு பாதிப்புக்கு உள்ளாகாமல் தடுக்கலாம். ஒரு சிலருக்கு பயிற்சி மருத்துவம் ( Physiotherapy ) கொஞ்சம் நிவாரணம் தரலாம்.

          ( முடிந்தது )
Series Navigationபுதிய கோட்பாடு ! பூர்வீகப் பூமியைத் தாக்கிய அதிவேக முரண்கோள்கள் பேரளவு நீர் வெள்ளம் கொட்டின.அறுபது வயது ஆச்சு !
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *