உலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 3 -பேர்வெல் மை கான்குபைன்

author
0 minutes, 4 seconds Read
This entry is part 6 of 14 in the series 29 ஏப்ரல் 2018

அழகர்சாமி சக்திவேல்

பேர்வெல் மை கான்குபைன் (Farewell My Concubine) என்ற இந்தச் சீனத் திரைப் படத்தின் தலைப்பை, கொச்சைத்தமிழில் மொழிபெயர்த்தால், “என் வைப்பாட்டிக்குப் பிரியாவிடை” என்று சொல்லிவிடலாம். இன்றைய நவீன தமிழ்க் கலாச்சாரத்தில், வைப்பாட்டி வைத்துக்கொள்ளும் ஆண்கள் அதிகமாகி விட்டார்கள் என்பதில் உண்மை இருக்கிறது. அப்படி பல வைப்பாட்டிகள் வைத்துக் கொண்டாலும், இன்றைய தமிழ் ஆண்கள், இன்னும் தமிழ்ப் பெண்களுக்கு மட்டுமே, கலாச்சாரம் பண்பாடு என்று போதனைகள் செய்துகொண்டு இருக்கிறார்கள் என்பதிலும் ஒரு நகைச்சுவை கலந்த உண்மை இருக்கிறது. இந்தச் சீனப்படமும் ஒரு வைப்பாட்டியின் வாழ்க்கையையே காட்சிப்படுத்தி இருக்கிறது என்று சொன்னாலும், அந்த வைப்பாட்டியின் வாழ்க்கைக்குள் இருக்கும் வேதனைகளும், சோதனைகளும் நம் கண்களில் நம்மை அறியாமலேயே கண்ணீரை வரவைத்து விடுகிறது என்று உறுதியாய்ச் சொல்லலாம்..

1912-ஆம் ஆண்டுக்கு முன்னர் வரை, சீனா முழுவதுமே, குறுநில மன்னர் ஆட்சியும், நிலப் பிரபுத்துவமும், முதலாளித்துவமுமே மேலோங்கி இருந்தது. சீனாவின் ஒற்றுமையின்மையைப் பயன்படுத்திக்கொண்ட ஜப்பானும், சீனாவின் முக்கியமான பல இடங்களைத் தன்னகப்படுத்தி ஆட்சி செய்துகொண்டு இருந்தது.  1911-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட குவோ மின்டாங் என்ற சீன தேசியக்கட்சி முதலில் மன்னர் ஆட்சியை முடிவுக்குக்கொண்டு வந்தது. இருப்பினும், அப்போதும் ஜப்பானின் ஆதிக்கம் சீனாவின் பல இடங்களில் பரவலாக இருந்துகொண்டுதான் இருந்தது. 1937-இல் தொடங்கிய இரண்டாம் சீன-ஜப்பானியப் போர், நிலைமையை முற்றிலும் மாற்றியது. போரின் ஆரம்பக்கட்டத்தில் ஜப்பான் வெற்றி பெற்றாலும், சீனாவின் பலத்த எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் ஜப்பான் திணற ஆரம்பித்தது. இந்த சூழ்நிலையில் 1945-இல், அமெரிக்கா ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி மீது அணுகுண்டு போட, ஜப்பான் ஆடிப்போனது. தனது தோல்வியை ஒப்புக்கொண்ட ஜப்பான், சீனாவிடம் சரண்டர் ஆனது. சீனாவில் நிம்மதி பிறந்ததா என்றால் அதுதான் இல்லை. ஜப்பான் வெளியேறிய அடுத்த வருடமே, 1946-இல், சீனாவை ஆட்சி செய்துகொண்டிருந்த குவோ மின்டாங் தேசியக் கட்சிக்கும், மாசே துங் தொடங்கிய சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஒரு உள்நாட்டுப்போர் ஆரம்பமானது. போரில், மாசே துங்கின் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்று, குவோ மின்டாங் கட்சியை தைவானுக்குத் துரத்தியது. சீன மக்களுக்கு அப்போதும் நிம்மதி கிடைத்தபாடில்லை. கொஞ்சம் கொஞ்சமாக கம்யூனிஸ சித்தாந்தத்தை, சீன மக்களிடம் புகுத்திய கம்யூனிஸ்ட் கட்சி, மாசே துங்கின் தலைமைத்துவம் பெற்ற பின்னர், இன்னும் தீவிர நிலைக்குச் சென்றது. ‘எங்கும் மாசே துங் எதிலும் மாசே துங்’ என்று மாசே துங் புகழ்பாடிய, கம்யூனிஸ்ட் கட்சியின் சிவப்புப்படைகள்,  நாட்டினுள் உலவிக்கொண்டு இருந்த நிலப்பிரபுக்கள், முதலாளிகள், சமய வாதிகள் என அத்தனை பேரையும் கைது செய்து சிறையில் தள்ளியது. பலர் கொல்லப்பட்டனர். மரபு சார்ந்த, பழமை வாய்ந்த சீனக்கலைகள் பல அழிக்கப்பட்டன. நாடு முழுதும் பஞ்சம் தலை விரித்தாடியது. 1976 வரை தொடர்ந்த இந்த கொடுமைகள்,  மாசேதுங் இறந்ததுமே மாறியது. அதன் பிறகே சீனாவில் ஒரு நிம்மதி பிறந்தது என்பது வரலாற்று உண்மை. சரி, இந்தத் திரைப்படம், மேல்சொன்ன சீனாவின் போர் வரலாற்றைச் சொல்வதற்காக எடுக்கப்பட்ட படமா என்றால் நிச்சயம் இல்லை என்று தான் சொல்லவேண்டும். இருப்பினும், மேற்சொன்ன அனைத்துச் சீனப்போரின் போதும், சீனாவின் தெருக்கூத்துக் கலைஞர்கள் எந்த விதமான வாழ்க்கை வாழ்ந்தார்கள், எப்படிப்பட்ட வேதனைகளை அந்தக் கலைஞர்கள் அனுபவித்தார்கள் என்பதை இந்தப்படம் தெளிவாகச் சொல்கிறது என்பதை படம் பார்க்கும் நம்மால் எளிதில் புரிந்துகொள்ள முடியும். மேற்சொன்ன, அத்தனை சீனப்போர்களையும் நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தி, அதே நேரத்தில் அதே சமகாலத்தில் நடந்த, சீனத் தெருக்கூத்தின் பல வடிவங்களையும் நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் படத்தின் இயக்குனரை நாம் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

ஆண்களின் வைப்பாட்டிகள் எப்போதும் பெண்ணாகவே இருப்பார்கள் என்று இன்று வரை தமிழ் மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் ஆண்களின் வைப்பாட்டியாய் பல ஆண்களும் இருந்து இருக்கிறார்கள் என்பதை தெளிவாகச் சொல்லும் ஒரு படமே. பேர்வெல் மை கான்குபைன் என்ற இந்தத் திரைப்படம் ஆகும். அந்தக் காலங்களில், தமிழக கிராமங்களில் நல்ல தங்காள், அல்லி தர்பார் போன்ற தெருக்கூத்துகள் நடைபெறும். அது போன்ற தெருக்கூத்துக்களிலே கதாநாயகனாய் வருபவர் ராஜபார்ட் என்றும் கதாநாயகியாய் வருபவர் ஸ்திரீபார்ட் என்றும் சொல்லப்படுவர். பெண்கள் நடிக்க வராத அந்தக் காலத்தில் ஸ்திரீபார்ட் வேஷம் கட்டிக்கொள்வதும் ஒரு ஆணாகவே இருக்கும். அப்படிப் பெண்ணாய் நடிக்கும் ஆண், இந்தக் கால நகைச்சுவை பெண் வேடம் போல் அல்லாமல், சீரியஸான ஒரு பெண்ணாய் வந்து தமிழக மக்கள் மனதில் கதாநாயகியாய் இடம் பிடித்தனர் என்று சொன்னால் அது மிகையாகாது. அப்படி பெண்ணாகவே வாழ்ந்த எத்தனையோ ஆண்களின் பெண்மையில் மயங்கிய தமிழக ஆண்கள், அது போன்ற பெண் வடிவ ஆண்களை வைப்பாட்டிகளாய் வைத்து இருந்தனர் என்பது ஒரு கண்கூடான உண்மை. அது போன்ற,  சீனத்தெருக்கூத்தில் பெண்வேடம் இடும் ஒரு சீன ஆணின் முக்கோணக் காதல்தான் இந்தச் சீனத்திரைப்படத்தின் கதை. பேர்வெல் மை கான்குபைன் எனபது படத்தின் பெயராய் இருந்தாலும், உண்மையில் பேர்வெல் மை கான்குபைன் என்பது ஒரு சீனத் தெருக்கூத்தின் கதைப்பெயர் ஆகும் (நம்ம ஊர்த் தெருக்கூத்து பவளக்கொடி, அல்லிதர்பார் போல).. இந்தத் தெருக்கூத்தின் கதைப்படி, சீனாவில் இருக்கும் ஒரு ராஜா, ஒரு அழகிய வைப்பாட்டியை ராணியாய் வைத்துக் கொள்கிறார். எதிரி நாட்டு மன்னன் போருக்கு அழைக்க, ராஜாவும் போருக்கு ஆயத்தம் ஆகிறார். ராணி எவ்வளவோ தடுத்தும், ராஜா போருக்குப் போக பிடிவாதம் பிடிப்பதால், ராணியும் ராஜாவைப் பின் தொடர்கிறாள். ராஜாவோ தோற்றுப்போக, விசுவாசமான வைப்பாட்டி ராணி, ராஜாவின் வாளால் தன்னை மாய்த்துக் கொள்கிறாள். இந்தத் தெருக்கூத்தின் கதையை, மேடையில். வெள்ளை அரிதாரம் பூசி ராஜாவாய் நடிப்பவர் ஜிங் என்று அழைக்கப்படுகிறார். வண்ண அரிதாரம் பூசி ராணியாய் நடிப்பவர் டேன் என்று அழைக்கப்படுகிறார். இந்தத் திரைப்படத்தில் நடிக்கும் இரு கதாநாயகர்களில் ஒருவர் ஜிங் என்ற தெருக்கூத்து ராஜா வேஷம் போடுபவர். இன்னொரு கதாநாயகர் டேன் என்ற ராணி வேஷம் போடுபவர். இவர்கள் காதலுக்கு நடுவில் இன்னொரு பெண் வருகிறாள். மூவருக்குள் நடக்கும் ஒரு முக்கோணக்காதல் போராட்டத்தை பார்ப்பவர் நெஞ்சம் உருகும்படியாக திரைக்கதை அமைத்த திருமதி லிலியன் லீக்கு நம் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

சீனத் தெருக்கூத்தில் நடிப்பது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. சின்ன வயதிலேயே பையன்கள், குருகுலத்தில் நடிக்கச் சேரவேண்டும். தமிழகத்திலும், அந்தக் காலங்களில் பாய்ஸ் கம்பெனிகள் இருந்தபோதும், சீனத் தெருக்கூத்தின் குருகுலப் பள்ளிகளில் நடக்கும் அந்தத் தீவிரமான பயிற்சி கொஞ்சம் அதிகப்படியானது. கூத்தில் நடிப்பவர் யாராக இருந்தாலும், அவருக்கு பாடத்தெரிய வேண்டும். ஆடத் தெரிய வேண்டும். வசனம் சரியாய் உச்சரிக்கத் தெரியவேண்டும். இத்தோடு நின்றால் பரவாயில்லை. கூடவே, அக்ரோபாடிக்ஸ் என்ற சர்க்கஸ் கலையும் தெரிந்து இருக்கவேண்டும். இந்த சர்க்கஸ் கலையைக் கற்றுக்கொள்ள, படத்தில் அந்த சீனச் சிறுவர்கள் படும் பாடு… நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது. பெண்ணாய் நடிப்பவருக்கோ இன்னும் அதிகப்போறுப்பு. நல்ல கீச்சுக்குரலில் பேசி பாடக் கற்றுக்கொள்ள வேண்டும். நளினம் கற்றுக்கொள்ள வேண்டும் என பற்பல பயிற்சிகள் உண்டு. அத்தனை குருகுலக் காட்சிகளையும் ஒன்று விடாமல் நம் கண் முன் நிறுத்த எண்ணிறந்த சிரமங்களை மேற்கொண்டு இருக்கிறார்கள் படத்தின் இயக்குனரும், கலை இயக்குனரும். என்னே ஒரு ஒளிப்பதிவு!. சீனப்போர் வரலாற்றீன் மாற்றங்களுக்கு ஏற்ப திரைப்படத்தின் காட்சிகள் மாறுவதும், காட்சிகளுக்கேற்ப மாறும் ஒளிப்பதிவும் பிரமாதம். இந்தியாவைப் போல் அல்லாது, சீனாவில் எப்போதுமே ஓரினச்சேர்க்கை ஒரு கிரிமினல் குற்றமாக பார்க்கப்படவில்லை என்பது உண்மை. கிண்டலும் கேலியும் இருந்தபோதும், சீன ஆண்கள், ஒரு வெளிப்படையான ஓரினச்சேர்க்கை உறவு வைத்துக் கொள்வது சகஜமாய் இருந்தது என்ற வரலாற்று உண்மையை,  இந்தப்படத்தைப் பார்ப்பவர் புரிந்துகொள்வர்.  படத்தில், டேன் ராணி ஆக நடிக்கும் அந்த ஆணுக்கு சீன சமூகத்தில் கொடுக்கப்படும் மரியாதை, அவர் மீது பல ஆண்களுக்கு ஏற்படும் காதல் என்ற காட்சிகள் மூலம், இயக்குனர் இந்த ஓரினச்சேர்க்கை உண்மையை இன்னும் தெளிவாக்கி இருக்கிறார்.

சரி..இனி படத்தின் கதையையும் படம் பெற்ற விருதுகளையும், படம் பெற்ற எதிர்ப்புகளையும் பார்ப்போம்.

1993-இல் வந்த பேர்வெல் மை கான்குபைன்(Farewell My Concubine) என்ற இந்த திரைப்படம்,  1985-இல், லில்லியன் லீ என்ற பெண் எழுத்தாளரால் எழுதப்பட்ட நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம் ஆகும். எழுத்தாளர் லில்லியன் லீ, இந்தப் படத்தின் திரைக்கதை எழுதியவர்களில் ஒருவரும் ஆக பணிபுரிந்ததும் படத்தின் வெற்றிக்குக் காரணமாக நாம் சொல்லலாம். கிட்டத்தட்ட நான்கு போர்களை உள்ளடக்கியது இந்தப் படத்தின் கதை என்பதால், கதை கொஞ்சம் நீளமாகவே இருக்கிறது. ஏறத்தாழ இரண்டே முக்கால் மணி நேரம் ஓடும் இந்தப்படத்தை, பார்ப்பவர்களுக்கு சலிப்புத் தட்டாமல் கொண்டுபோய் இருப்பது பாராட்டுக்குரியது. படத்தின் திரைக்கதை இதுதான்.

சீனத்தலைநகர் பெய்ஜிங்கில் இருக்கும் ஒரு தெருக்கூத்து நாடகக் கம்பெனி, தனது குருகுலத்தில் பயிலும் மாணவர்களை வைத்து நாடகம் போடுகிறது. செக்ஸ் தொழில் செய்யும் டவுசியின் தாயார்,  தனது மகன் கெட்டு விடக்கூடாது என்பதற்காய்,  நாடகக் கம்பெனியில் சேர்க்க வருகிறாள். ஆறுவிரல் கொண்ட சிறுவன் டவுசியை, நாடகக் கம்பெனி முதலாளி குவான் சேர்க்க மறுக்க,  ஓரத்தில் இருந்த அரிவாளால்,  டவுசியின் ஆறாம் சுண்டு விரலை நறுக்கி எறிகிறாள் டவுசியின் தாயார். அந்த ரத்தத்தையே மையாக்கி, நாடக ஒப்பந்தத்திலும் கைநாட்டு இடுகிறாள். டவுசியின் அலறலுடன்,  அவன் நாடக வாழ்க்கை ஆரம்பிக்கிறது. எப்போதும் நகைச்சுவையாய்ப் பேசும் சிறுவன் சீட்டோ,  சிறுவன் டவுசிக்கு நண்பனாகிறான். டவுசிக்கு,  ‘டேன்’  என்ற பெண் வேடத்துக்கான பயிற்சி கொடுக்கப்படுகிறது. மாணாக்கர்களுக்கு கொடுக்கப்படும் நாடகப் பயிற்சியின் கொடுமை தாளாமல்,  சிறுவன் டவுசி இன்னொரு சிறுவனோடு தப்பித்து ஓடுகிறான். இரு சிறுவர்களும், தெருவில் நடக்கும் இன்னொரு தெருக்கூத்தினை பார்த்து மகிழ்கிறார்கள். கூத்தில் நடிக்க வரும் கதாநாயகனுக்கும், கதாநாயகிக்கும் கிடைக்கும் புகழ், பரிசு இவை இரண்டையும் பார்க்கும் சிறுவர்கள் மனம் மாறுகிறார்கள். ‘நாமும் இது போல் புகழ் பெறுவோம், பணம் சம்பாதிப்போம்’  என்ற உறுதியுடன் மறுபடியும் தங்கள் நாடகக் கம்பெனிக்கே வந்து சேருகிறார்கள். நாடகக்கம்பெனியை விட்டுத் தப்பிப்போனதற்காக அந்த இரண்டு சிறுவர்களுக்கும்,  தப்பித்து ஓட விட்டதற்காக டவுசியின் நண்பன் சீட்டோவிற்கும் கடுமையான தண்டனை கிடைக்கிறது. தண்டனையின் கொடுமை தாளாமல் டவுசியோடு தப்பியோடிய சிறுவன் தூக்கு மாட்டி இறந்து போகிறான்.

டவுசிக்கு பெண் வேடம் போட வசனப்பயிற்சி கொடுக்கப்படுகிறது. ‘நான் இயற்கையில் ஒரு பெண் ஆவேன், நான் பையன் அல்ல’ என்று பேச வேண்டிய வசனத்தை, “நான் இயற்கையில் ஒரு பையன் ஆவேன். நான் பெண் அல்ல” என்று டவுசி மாற்றிப்பேச டவுசி தண்டனைக்குள்ளாகிறான். மேற்சொல்லும் வசனம், அவன் வாய்க்குள் நுழைய மறுக்க, குருவின் சிகரெட் பைப் அவன் வாய்க்குள் சொருகப்படுகிறது. வாயிலிருந்து ரத்தம் சொட்டச் சொட்ட, இந்த முறை வசனத்தை ஒழுங்காகப் பேசுகிறான் டவுசி. கூட்டம் கை தட்டுகிறது. அதன் பிறகு டவுசி பெண் வேடத்திலும், அவன் உயிர் நண்பன் சீட்டோ ஆண் வேடத்திலும் மேடை ஏறி நடிக்க, அவர்கள் இருவர் புகழும் பெருகுகிறது. நாடகத்தைப் பார்க்கும் பணக்கார ஓரினசேர்க்கையாளன் சங்,  சிறுவர்கள் இருவரையும் தனது இடத்துக்கு அழைக்கிறான். செல்லும் சிறுவர்களுக்கு,  சங் வைத்து இருக்கும் வீரவாள் கண்ணில் படுகிறது. வீரவாளை கையில் எடுக்கும் சீட்டோ “நான் ராஜாவானால் டவுசிதான் எனது ராணி” என வசனம் பேசுகிறான். மனம் மகிழும் டவுசி,  ‘என்றாவது ஒரு நாள் இந்த வாளை நான் சீட்டோவிற்கு பரிசாகக் கொடுப்பேன்’  என உறுதி எடுக்கிறான். பணக்காரன் சங் தனிமையில் இருக்கும்போது சிறுவன் டவுசியை பலாத்காரம் செய்து கெடுத்துவிட, கசங்கிய நிலையில் வெளியே வருகிறான் டவுசி. கம்பெனிக்கு திரும்புகிற வழியில் ஒரு அனாதைக் குழந்தையை வீதியில் பார்க்கும் டவுசி, குழந்தையை நாடகக்கம்பெனிக்கு கொண்டு வருகிறான். அந்தக் குழந்தை, பின்னால் டவுசியின் வாழ்க்கைக்கே எதிரியாய் வருவான் என்பதை நாடகக்கம்பெனி குரு உணர்கிறார். ஆனால் டவுசிக்கோ அது புரியவில்லை.

வருடங்கள் நகர்கின்றன. டவுசியும் சீட்டோவும் வாலிபர்கள் ஆகி விடுகிறார்கள். நாடகங்களில் எப்போதும் கதாநாயகன்,  நாயகியாய் நடிக்கும் இருவரின் புகழ் பெய்ஜிங் முழுக்கப் பரவுகிறது. வாலிபன் டவுசிக்கு, சீட்டோ மீதான காதல் முன்னைவிடக் கூடுகிறது. ஆனால் சீட்டோவோ திசை மாறுகிறான். விபசார விடுதியில் பார்க்கும் ஜுசியன் என்பவளை மணந்து கொள்கிறான் சீட்டோ. அதைப் பார்த்து, மனம் வெதும்பும் டவுசிக்கு, யுவான் என்ற பணக்கார ஓரினச்சேர்க்கையாளன் கைகொடுக்கிறான். டவுசியை தன்னோடு வைத்துக்கொள்கிறான். இருப்பினும், டவுசியின் மனது எப்போதும் சீட்டோவோடு வாழவே ஆசைப்படுகிறது. இதற்கிடையில் ஜப்பான் பெய்ஜிங்கை ஆக்கிரமிப்பு செய்கிறது. சீட்டோ ஜப்பான் ராணுவத்திடம் மாட்டிக்கொள்ள,  டவுசி தனது பெண் நாடகத் திறமை மூலம் சீட்டோவைக் காப்பாற்றுகிறான். ஜப்பான் சீனாவிடம் தோற்றுப்போய் சரணாகதி அடைகிறது. ஜப்பானின் வருகையால் நின்றுபோன நாடகக்கம்பெனி மறுபடியும் துளிர்க்கிறது. ஆனால் மறுபடியும் டவுசிக்கு சோதனை. டவுசி சிறுவனாய் இருந்தபோது ஒரு அனாதைக் குழந்தையை நாடகக்கம்பெனிக்குள் எடுத்து வந்தானே.. அந்தக் குழந்தை இப்போது பெரியவனாகி சியோ சி என்ற பெயரில்,  டவுசி போலவே பெண் வேடம் போடுகிறது. டவுசியோடு மனவேறுபாடு கொண்டு வாழும் சீட்டோ,  சியோ சியை தனக்கு நாடக பெண் ஜோடியாக சேர்த்துக்கொள்ள,  அதிக துக்கத்துக்குள்ளாகும் டவுசி கஞ்சாவிற்கு அடிமை ஆகிறான். போதையின் எல்லைக்குச் செல்லும் டவுசியை, சீட்டோவும் அவன் மனைவியும் காப்பாற்றுகிறார்கள்.

இப்போது சீனாவில் உள்நாட்டுப்போர் வருகிறது. கம்யுனிஸ்ட் கட்சி ஆட்சியைப் பிடிக்கிறது. அதன் சிவப்புப்படை, தலைவர் மாசே துங்கின் கொள்கைகளைப் பரப்ப கடுமையான விதிகளை விதிக்கிறது. எல்லாத் தெருக்கூத்துக் கம்பெனிகளும் மூடப்படுகின்றன. சீட்டோவும் அவன் மனைவியும் தங்கள் வசம் இருந்த அத்தனை நாடக உடைகளையும் தீயிலிட்டு எரிக்கிறார்கள். முன்னர் அனாதைக் குழந்தையாய் வந்து, இப்போது சீட்டோவுடன் பெண் வேடம் இட்டு நடிக்கும் சியோ சி,  சீட்டோ மற்றும் டவுசி பற்றி சிவப்புப் படைக்கு தகவல் கொடுக்க,  ராணுவம் சீட்டோவையும், டவுசியையும் பிடித்துக்கொண்டு போகிறது. விசாரணையின் முடிவில், ஒட்டுமொத்த நாடகக்கம்பெனியும், ராணுவத்தால் தெருவுக்கு இழுத்துவரப்படுகிறது. ராணுவக் கொடுமை தாங்கமுடியாத சீட்டோ, முன்னொருநாள்,  டவுசி,  ஜப்பான் ராணுவம் முன்னால் பாடி ஆடியதாக, ராணுவத்திடம் போட்டுக் கொடுக்கிறான். ராணுவம் டவுசியின் மீது கோபம் கொள்கிறது. இதைகண்டு ஆத்திரப்படும் டவுசி, ‘ சீட்டோவின் மனைவி ஒரு விபச்சாரி’ என்றும்,  அவளை சீட்டோ சேர்த்துக்கொண்டான் என்றும் ராணுவத்திடம் பதிலுக்கு போட்டுக் கொடுக்கிறான். உயிருக்கு பயந்துபோகும் சீட்டோ,  தனது மனைவி ஒரு விபச்சாரிதான் என்றும்,  ஆனால் அவளை தான் ஒரு போதும் காதலிக்கவில்லை என்றும்,  இனிமேல் அவளோடு வாழ மாட்டேன் என்றும் சத்தியம் செய்கிறான். சீட்டோ பேசுவதை கூட்டத்தில் நின்று கேட்டுக்கொண்டே இருக்கும் சீட்டோவின் காதலி தற்கொலை செய்து கொள்கிறாள். சீட்டோ கதறுகிறான். இப்போது சீனாவின் நிலைமை மறுபடியும் மாறுகிறது. மாசே துங் இறந்து போகிறார். சிவப்புப்படையின் அட்டகாசம் ஒழிகிறது. மறுபடியும் தெருக்கூத்து நடக்க ஆரம்பிக்கிறது. நாடகத்தில் சீட்டோவும் டவுசியும் நாயகன் நாயகியாய் நடிக்கிறார்கள். மேடையில், எப்போதும் நடிக்கும் ‘பேர்வெல் மை கான்குபைன்’ கூத்தினை நடித்துக் கொண்டிருக்கும் போதே,  டவுசி, சங்கிடம் இருந்து பெற்ற அதே வாளால் தன்னை மாய்த்துக் கொள்கிறான். சீட்டோவின் கதறலோடு படம் முடிகிறது.

இந்தப்படம் உலகின் பிரபல கேன்ஸ் திரைப்பட விழாவின் உயரிய விருதைப் பெற்ற படம். எனினும் சீன அரசாங்கம்,  முதலில் இந்தப்படத்தை தடை செய்து விட்டது. கம்யூனிஸ்ட் தலைவர் மாசே துங் ஆட்சியில் நடந்த கொடுமைகளை படம் தெள்ளத்தெளிவாகக் காட்டியதால் படம் தடை செய்யப்பட்டதாக நாளேடுகள் எழுத,  உலகம் முழுதிலும் இருந்து எதிர்ப்புக்குரல்கள் எழுந்தன. இரண்டாயிரம் ஆண்டுக்கான ஒலிம்பிக்கினை, பெய்ஜிங்கில் நடத்த சீனா ஆசைப்பட்டதால்,  ‘எங்கே அந்த வாய்ப்பு பறிபோய்விடுமோ’ என்ற அச்சத்தில்,  இந்தப் படத்தை வெளியிட சீன அரசாங்கம் கடைசியில் அனுமதி கொடுத்தது.

படம் முழுக்க வியாபித்து இருக்கும் அந்த தெருக்கூத்து இசை, என் மனதை விட்டு அகல நிறைய நேரம் ஆனது. டவுசி என்ற அந்த அழகிய சிறுவனின் முகம்…வாலிபனாய் மாறி அவன் காட்டும் பெண்மையின் வசீகரம்.. தனது உயிர் நண்பன் சீட்டோவின் மனைவியிடம் அவன் கொள்ளும் பொறாமை..அத்தனை காட்சிகளும் பிரமாதம். இந்தப்படத்தில் டவுசியாய் வந்தவர் ஹாங்காங் மைக்கேல் ஜாக்சன் என்று அழைக்கப்படும் பிரபல பாப் பாடகர் லெஸ்லி சாங் ஆவார். இவர் ஒரு ஓரினச்சேர்க்கையாளர். படத்தில் வருவது போலவே, தனது நாற்பத்து ஏழாவது வயதில் தற்கொலை செய்து கொண்டார் என்பது ஒரு மனதை நெகிழ வைக்கும் செய்தியாகும்.

அழகர்சாமி சக்திவேல்

 

 

Series Navigationசாமிக்கண்ணு திரைப்படச் சங்கம் – மே மாத திரையிடல் (திரையிடல் 3)ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூடாது என்பதற்கான பத்து காரணங்கள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *