மீட்சி

author
0 minutes, 0 seconds Read
This entry is part 13 of 14 in the series 29 ஏப்ரல் 2018

அரிசங்கர்

அவளுடனான எனது நினைவுகள் சைனைடு குப்பிகளாக என் மூலையின் பல இடங்களில் சொருகப்பட்டிருந்தன. ஏதோ ஒரு சூழ்நிலையில் ஏதோ விசையின் இயக்கத்தினால் அந்தக் குப்பி உடைந்து அந்த நினைவுகள் என் உடல் முழுவதும் பரவி என் இயக்கத்தையே அது நிறுத்திவிடுகிறது. வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு அது தெரியாது. அந்தச் சமயங்களில் நானும் உங்களைப் போன்றே இருப்பேன். பேசினால் பேசுவேன். கேட்டால் பதில் சொல்லுவேன். நகைச்சுவை சொன்னால் சிரிப்பேன். அனைத்துமே செய்வேன். ஆனால் அப்போது நான் நானாக இருக்கமாட்டேன். என் உடல் உறுப்புகள் அப்போது இரண்டு அணியாகப் பிரிந்து செயல்படும். கண், கை, கால், காது, வாய் என வெளியுறுப்புகள் அனைத்தும் மூளையின் காட்டுப்பாட்டில் வந்துவிடும். உள்ளுறுப்புக்கள் அனைத்தும் மனதின் கட்டுப்பாட்டிற்கு வந்துவிடும். பசிக்காது, தாகமெடுக்காது. அத்தியாவசிய செயல்கள் எதையுமே செய்ய தோன்றாது. இதையெல்லாம் செய்ய தூண்ட, பெரிய திட்டமே முன்தயாரிப்போ ஏதுமில்லை. எதோ ஒரு கணத்தில் எதோ ஒரு செயல்பாடு நம்மை இந்த நிலைக்குத் தள்ளிவிடும். அந்தக் கணம் முதல் இதிலிருந்து மீள்வதே வாழ்வின் பெரும் சாகசம்..

சரி இப்போது எனக்கு என்ன ஆயிற்று என்று கேட்கிறீர்களா. விசை இயக்கப்பட்டு விட்டது. காலையில் அலுவலகத்துக்குச் சென்றதுமே ஒரு பழைய காதல் சோகப்பட்டலை ஓடிக்கொண்டிருந்தது. சோகப்பாட்டை கேட்டவுடன் சோகமாகும் காலகட்டத்தை எல்லாம் எப்போதோ தாண்டியாகிவிட்டது. இருந்தாலும் இன்று எதோ ஒரு மாதிரி இருந்தது. எப்போது போல் இரவு ஷிப்ட் முடிந்தவர்கள் சென்று காலை ஷிப்ட் ஆட்கள் அனைவரும் வந்து தங்கள் பணியைத் துவங்கினர். எப்போதுமே கேட்டு கேட்டுப் புளித்துப்போன பாடல்களே போடப்படும். குத்துப்பாட்டு கேட்டால் மனது கூதுகளமாகிவிடும் என்ற முட்டாள்தனமான ஒரு கருத்து எல்லா கார்ப்பரேட் நிறுவனங்களிலும் இருக்கிறது. வழக்கம் போலத்தான் வினோத்தும் பாடல்களைப் போட்டான். நான்கு பாடல்கள் ஓடியிருக்கும். தீடிரென்று என் பின்னால் அமர்ந்திருந்த ஜெகதீஷ் எழுந்து சென்று அவனிடம் ஏதோ பேசினான். உடனே வினோத் எழுந்துவிட அவன் இருக்கையில் ஜெகதீஷ் அமர்ந்து பாடல்களை போடத்துவங்கினான். முதல் பாட்டே ஒரு பிரபலமாக காதல் சோகப்பாடல். அப்போதே முடிவு செய்துவிட்டேன். இன்று இப்படித்தான் போகும் என்று. சரி இன்று வித்தியாசமாகப் போகட்டுமே என்று நினைத்துக்கொண்டேன். மூன்றாவதோ அல்லது நான்காவதோ வந்த பாடல், “நீ பாதி…. நான் பாதி கண்ணே…” அது தான் இன்று நடந்த அனைத்திற்கும் காரணம். அவள் எப்போதும் போல் எளிதாகக் கடந்துவிட்டிருக்கலாம் தான். ஆனால் வேலைக்கு நடுவே ஒரு என்னைத் தடுமாற வைத்துவிட்டது. இன்று அது எப்போதும் போல் கேட்கவில்லை. அவள் குரலில், அவள் எனக்காக மட்டுமே பாடும் அந்த வசீகர தொனியில் கேட்டது. அந்தப் பாடல் எதோ ஒரு வரி என் மூளைக்குள் இருக்கும் சைனைடு குப்பியைத் திறந்துவிட்டது. அவ்வளவு தான். ஒவ்வொரு குப்பியாக உடைய இனிமேல் நினைக்கவே கூடாது என்று நான் மறைத்துவைத்திருந்த என் நினைவுகள் ஒவ்வொன்றாக தன் வேதியியல் பண்புகளை என் பௌதிக உடலில் காண்பிக்க ஆரம்பித்தது.

ஒரு காலத்தில் எதையெல்லாம் நினைத்து நினைத்து நான் மகிழ்ந்தேனோ அதுவெல்லாம் இப்போது என் கண்முன் தோன்றி என் கண்ணீரை கண்டு மகிழ்ந்தது. இரண்டாகப் பிரிந்த என் உடலின் ஒரு பகுதியில் இவையெல்லாம் நடந்துகொண்டு இருக்கும் போதே, மற்றொரு பகுதி தன் வேலையை எந்தத் தடையும் இல்லாமல் செய்துகொண்டு இருந்தது. பாடல்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஓடிக்கொண்டே இருந்தது. ஆனால் நேரம் என்னவோ அதே இடத்தில் இருந்து என்னை வாட்டியது. சீக்கிரம் நேரம் ஓடினால் காலை உணவிற்காவது சென்றுவிடலாம். இதிலிருந்து விடுபட வேண்டும் இப்போது. எப்போதுமே ஒரு இடைவேளை கிடைத்தால் அடுத்து வேறு தினுசாக பாடல்களைப் போடுவார்கள். அதனால் யார் வந்தாலும் நாம் புறப்படுவோம் என்று புறப்பட்டேன். அவர்கள் இன்னும் காதலின் சோகத்திலேயே இருந்தார்கள்.

அரைமணி நேர இடைவேளை போதுமானதாக இல்லை. எனது முழு உடலையும் அவளது நினைவுகளாக இருந்தது. இங்கே இசைத்துக் கொண்டிருக்கும் பாடல்கள் அதற்கு மேலும் எண்ணெய்யை ஊற்றி என்னை எறித்துக்கொண்டிருந்தது. நானும் அவளும் பாடல்களாக தான் காதலித்தோம். அவள் எப்போதும் எதாவது ஒரு பாடல் வரியைச் சொல்லி, “இதைக் கேட்டாள் எனக்கு உன் நினைவுகள் தான் வருகிறது” என்பாள். அவள் ஒன்று என்னிடம் பேசுவாள், அல்லது பாடுவாள். அது எந்த இடமாக இருந்தாலும் சரி. மிக மெலிதாக அது இருக்கும். அவள் தனியாக இருக்கும் போதும் இப்படித்தான் பாடுவாளா என்று எனக்குத் தெரியாது. நான் அவளிடம் கேட்டதில்லை. கேட்டால் அவள் பாடுவதை நான் வெறுப்பதாக நினைப்பாளோ என்று கேட்கவேயில்லை. நாங்கள் இருவரும் நடக்கும் போது, பேருந்தில் செல்லும் போது, உணவகத்தில் சாப்பிடும் போது, கடற்கரையில் அமர்ந்திருக்கும் போது அருகில் ஏதாவது ஒரு பாடல் கேட்டால், அது அவளுக்குப் பிடித்து இருந்தால் உடனே மெல்லிய குரலில் பாடத் துவங்கிவிடுவாள். சில சமயம் பேசிக்கொண்டிருக்கும் போதே பாடத்துவங்கிவிடுவாள். அவள் குரலில் எந்த கரகரப்பும் இருக்காது. அது ஒரு ஊசியின் கூர்மையில் இருக்கும். வாய் அசைவதே தெரியாது. ஆனால் ஏற்ற இறக்கங்கள் சரியாக இருக்கும். பெரும்பாலும் பெண் பாடகிகளைத்தான் பாடுவாள். சில நேரம் ஆண் பாடகர்கள் பாடிய பாடல்களை பாடுவாள் அப்போதும் பெண் பாடினால் எப்படி இருக்குமே அப்படி மாற்றிப்பாடுவாள். வார்த்தைகளையும் மாற்றிக்கொள்வாள். அவள்  பெரும்பாலும் “கற்பூர பொம்மை ஒன்று” ஆகத்தான் இருக்கும். இப்படியே பாடல்களாக அவள் நினைவுகளை என்னுள் அவள் ஏற்றிக்கொண்டே இருந்தாள். ஒரு நாள் அவளிடம் கேட்டேன்,

“உனக்கு ஏன் பாட்டுனா ரொம்ப்புடிக்குது”

“என்னைச் சுத்தி எல்ல இடத்துலயும் பாட்டுதான் இருக்கு” என்றாள்.

“எங்க… இங்கயுமா” என்றேன். அப்போது நாங்கள் கடற்கரையில் இருந்தோம்.

“ஆமாம்” என்று கடலை காண்பித்தாள். அதன் பிறகு நான் எதுவுமே பாடலைப்பற்றிக் கேட்கவில்லை.

காலை உணவு முடிந்து அனைவரும் வந்தார்கள். நான் முன்னமே சென்றுவிட்டு வந்ததால் எனக்குச் சற்று ஓய்வு கிடைத்தது. சரி இதோ இப்போது எல்லாம் முடுந்துவிட்டது என்று தான் நினைத்தேன். ஆனால் அது இன்னும் உக்கிரமாக மாறியது. முழுக்க முழுக்க அவள் தான் அந்தக் கணினியில் இறங்கிவிட்டளே என்று எனக்குத் தோன்றியது. “என் மேல் விழுந்த பனித்துளியே” எனக் கணினி தான் பாடுகிறதா என்று சந்தேகமாகத் திரும்பி ஜெகதீஷிடம் கேட்டேன், “நீ தான் இந்த பாட்டேல்லாம் போட்டியா” என்று, அவன் சிரித்துக்கொண்டே ஆமாம் என்றான். அப்படியே தலையை குனிந்து சற்று அமர்ந்திருந்தேன்.

இதை இப்படியே விட்டாள் நான் ஒரு கட்டத்தில் வெறிபிடித்தவனாக மாறிவிடுவேனோ என்று எனக்குத் தோன்றியது. இதை எதிர்கொள்ள முடிவு செய்தேன். முதலில் எழுந்து கழிவறைக்கு சென்று என்னைப் புதுப்பித்துக்கொண்டேன். மீண்டும் உள்ளே சென்றேன். அதே போன்றே பாடல்கள் ஓடிக்கொண்டிருந்தது. நான் பாடல்களை கேட்கலாம், ரசிக்கலாம் என்று முடிவு செய்தேன். இது மூளைக்குள் இருக்கும் சைனைடுக்கு ஒரு நல்ல மாற்றாக ஒருவேளை இருந்தாலும் இருக்கலாம் என்று நினைத்தேன். பாடல்களைக் கேட்க ஆரம்பித்தேன். ஒவ்வொரு வரியாக, இடையில் வரும் இசையை முதற்கொண்டு ரசித்தேன். அது மெல்ல என்னுள் பாய ஆரம்பித்தது. மெல்ல மெல்ல அது என்னுள் எறிந்துக்கொண்டிந்த நெருப்பை அணைக்கத் துவங்கியது. ஒருக்கட்டத்துல் அந்த அறையில் இருந்த குளுமையை அப்போது தான் நான் உணரவேத் துவங்கினேன். மூன்றாவது பாடலுக்கெல்லாம் என் வாய்த் தானாகவே முணுமுணுக்கத் துவங்கியது. இரண்டாகப் பிரிந்து இருந்த என் உறுப்புக்கள் ஒன்றிணைய ஆரம்பித்தது. என் உடல் மொத்தமும் சிறிது சிறிதாக உறைந்துக் கொண்டிந்தது. அப்படியே ஒரு கண்டத்திலிருந்து மறுகண்டத்துக்கு பாய்ந்தது போல் ஒரு உணர்வு. நெருப்பிலிருந்து குளிர்ச்சிக்கு. நான் குளிர்ந்துகொண்டிருந்தேன்.

அப்போது தான் சுய நினைவுக்கு வந்தவனாய் என் கணினி திரையைக் கவனித்தேன். ஏதோ இன்று இப்படி ஒரு அற்புதமான வடிவமைப்பை நான் உருவாக்கியது போல் எனக்கு தோன்றிது. இத்தனை அழகாக நான் ஒன்றை வடிவமைத்துப் போல் எனக்கு நினைவே இல்லை. சட்டென நான் எடுத்த ஒரு முடிவு, இத்தனை நாள் சிக்கித்தவித்த ஏதோ ஒன்றிலிருந்து மீட்சி அடைந்தது போல் எனக்குத் தோன்றியது. சட்டென நேரம் பணிரெண்டை நெருங்கிவிட்டது. அனைவரும் தேனிர் குடிக்கச் சென்றனர். நான் போகவில்லை. வேலையை நிறுத்துவிட்டு முழுவதுமாக பாடல்களில் திளைத்தேன். துண்டு துண்டாக வந்து என்னைத் துன்புறுத்திய நினைவுகள் மொத்த கோர்வையாக என் முன்னே படமாக ஓடத்துவங்கியது.

அவளைப் பார்த்து, பார்த்துக்கொண்டே இருந்தது, பின்தொடர்ந்தது, பேசியது சண்டையிட்டது, காதலைச் சொல்லாமலே பிரிந்தது, அவள் காணாமலே போனது, பல ஆண்டுகள் கழித்து ஒரு திருமணத்தில் சந்தித்தது, தயங்கியபடியே தொலைப்பேசி எண்ணைப் பகிர்ந்துகொண்டது, கொஞ்சம் கொஞ்சமாக பேசத்துவங்கி ஒரு கட்டத்தில் காதலைச் சொல்லி, அவள் அதைத் தெரியும் என்று சொல்லி, இன்பமாக நாட்களை நகர்த்தி, சட்டென ஒரு நாள் அவள் தொலைந்தே சென்றாள். எல்லாமே ஒரு படமாக ஓடியது. இம்முறை எதுவுமே வேதனையாக இல்லை. நினைவுகள் என்பதே நினைத்துப்பார்த்து மகிழத்தான் எனப் புரிந்தது. எதையும் மறக்கவேண்டிய அவசியம் இல்லை. அவை எப்போதும் நமக்கான சாட்சியாக எப்போதுமே இந்தக் காற்று மண்டலத்தில் சுற்றிக்கொண்டுதான் இருக்கும். தேவையான போது அதை தரவிறக்கி மகிழவே நினைவுகள். அவள் போனாலென்ன, அவள் பாடலாக உள்ளாள். அவள் பாடலாக என்னுள் இறங்கிக்கொண்டிருக்கிறாள். கணினியிலிருந்து இப்போது என்னுள் கூடுப்பாய்ந்துவிட்டாள். இப்போது நான் தான் பாடிக்கொண்டிருக்கிறேன் அவள் குரலில்

Series Navigationகவிதைகள் 4ஹைக்கூ கவிதைகள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *