மீனாட்சி சுந்தரமூர்த்தி
இதுவரை;
நீலகிரியின் மலையின மக்களில் படகர்களின் வாழ்வியல் மாற்றங்களைச் சொல்லோவியமாக்கிய நூல் இது.
ஜோகி தன் பெரியப்பன் மகன் ரங்கனுடனும் மற்ற சிறுவர்களுடனும் மலைச் சாரலில் விளையாடிக் கொண்டிருக்கிறான்.அப்போது அங்கு வந்த மாமன் மகள் பாருவின் வெள்ளிக் காப்பு கழன்று விழுகிறது.அதனை எடுத்த ரங்கன் மேற்கொண்ட ஒத்தைக்குச் செல்லும் முயற்சி கைகூடாது காவற் பரணில் படுக்கிறான்.அங்கு வந்த அவனின் சிற்றப்பன் பரிவோடு அவனை அழைத்துச் சென்று உணவூட்டி உறங்க வைக்கிறான். காப்பைக் கீழே
கண்டெடுத்ததாக மனைவியிடம் தருகிறான்.எப்படியாவது ரங்கனைத் திருத்த முடிவு செய்து அவனை இரிய உடைய ஈசர் கோவிலின் புனித நெருப்பு காக்கும் பணிக்கு ஏற்பாடு செய்கிறான்.அதற்கு முன்னர் அவனுக்கு பால்மனை புகும் விழாவைக் கோலாகலமாக நடத்துகிறான்.விழா முடிந்து விருந்துண்ணும் வேளையில் ரங்கன் அடித்துப் போட்ட எருமையைப் புலி இழுத்துச் சென்றதைக் கேட்டு எல்லோரும் அருவிக்கரை செல்கின்றனர்.இந்த நேரத்தில் ரங்கன் சிற்றப்பன்(லிங்கையா)பால்மனையில் சேர்த்து வைத்திருந்த வெள்ளிப் பணத்தை எடுத்துக் கொண்டு ஒத்தைக்கு(ஊட்டி) ஓடுகிறான்.
வளர்வது;
தான் பிறந்து வளர்ந்த மரகத மலையை விட்டு கனவு கண்ட ஒத்தைக்கு, எவரும் போகாத ஒற்றையடிப் பாதையில் இறங்கினான்.எந்த காடு,எந்த மலை என்று எதுவும் தெரியாது இளங் கால்கள் கல்லிலும் முள்ளிலும் குத்த ஓடினான்.வழியில் ஹட்டியோ (குடியிருப்பு), குறும்பரோ, கோத்தரோ தென்பட்டால் பதுங்கிப் பின் சென்றான்.மாலை மங்கத் தொடங்கியது,புலி நினைவில் வந்தது, பயம் வந்தது,இரிய உடைய ஈசரை வேண்டிக் கொண்டான்.வழியில் தொதவர் மந்து தென்பட்டது. அவர்களின் பூசாரி அருவிக் கரையில் இவனைப் பார்த்து அவர்கள் மொழியில் ஏதோ கேட்டான்.இவன் பதில் சொல்லவில்லை,கூட்டம் கூடி விட்டது,ஏதேதோ கேட்டார்கள்.ஒரு கிழவன் அருகில் வந்து பரிவுடன் படகர் மொழியில் ஹட்டியிலிருந்து வருகிறாயா? எங்கே வந்தாய்? என்றான்.ரங்கன்,`எனக்கு ஒத்தை,அண்ணனுடன் மணிக்கல்லட்டி வந்தேன், அண்ணன் முன்னே சென்று விட்டான்,வழி தவறி விட்டது எனப் பொய் சொல்லி அழுதும் விட்டான்.கிழவன் போகட்டும், காலையில் ஒத்தை
போகலாம் எனத் தேற்றினான்.அன்றிரவு அவர்களின் விருந்தாளியாக ரங்கன் சாமையும் சோறும் நெய்யும் உண்டு குடிசையில் இதமாக உறங்கினான்.காலையில் தொதவ வாலிபன் துணைவர பிற்பகலுக்குள் ஒத்தையை அடைந்தான்.அவனிடம் இனி எனக்கு போகத் தெரியும் என்றான்.அவன்,` இனி இப்படித் தனியாய் வராதே`எனச் சொல்வது போல் பார்த்து விட்டுச் சென்றான்.
இப்படி வந்த ரங்கன் சந்தையில் கூலியாகப் பழகினான்.
முதல் நாளே இரண்டணாச் சம்பாதித்தான். காசு ஹட்டியில் காசைக் கண்ணால் பார்க்க முடியுமோ?
பன்னிரண்டு ஆண்டுகள்;
ரங்கன் திருட்டுக் கிழங்கு வியாபாரம் செய்து,திருட்டுக் கோழிகள் வளர்த்து,கவர்னர் மாளிகைத் தோட்டத்துத் துரையின் வீட்டில் கோழிகளைப் பராமரிக்கும் பையனாகிப் பின்னர் பால்பண்ணை மேஸ்திரியாகிறான். குதிரைப் பந்தயம் போகவும்,சூதாடவும்,மது அருந்தவும்,மாமிசம் உண்ணவும் பழகிக் கொள்கிறான்.
ஜோகி இரிய உடைய ஈசரின் கோவில் காக்கும் பணியேற்கிறான்.சீலமும் உழைப்பும் மிகுந்தவனாகிறான்.
கரிய மல்லரின் பேரன் கிருஷ்ணன் .
கரிய மல்லரின் பேரன் கிருஷ்ணன் சென்னைக் கல்லூரியில் பி.ஏ., பரீட்சை எழுதித் திரும்புகிறான்.
அவர்கள் இனத்திலேயே அபூர்வமான வட்டமுகம் கொண்ட ஜோகியின் மாமன் மகள் பாரு அழகோடு அத்தனை நற்குணங்களும் நிறைந்து நிற்கிறாள்.அருவிச் சுழலில் அகப்பட்ட பாருவைக் கிருஷ்ணன் காப்பாற்றுகிறான்.இருவரும் ஒருவரையொருவர் நேசிக்கின்றனர்.
இதுவரை ஹட்டியின் நினைவே எழாத ரங்கன் பாருவைக் கரம் பிடிக்க வருகிறான். பாருவின் நினைவோடு ஜோகியும் கோவிற் பணியிலிருந்து மீண்டு வருகிறான்.பாருவின் தாத்தா வைத்த இரிய உடைய ஈசரின் கோவில் வட்டக் கல்லைத் தூக்கும் பலப் போட்டியில் வென்று பாருவை மணக்கிறான் ரங்கன். இதனை நிராகரிக்க முயன்ற பாருவை,`சீர் குலைந்து வரும் ஒரு குடும்பச் செல்வத்தை நீ நிரப்ப வருகிறாயம்மா,
சின்ன எண்ணங்களை விட்டு விடு,பெரிய பொறுப்பு உன்னைத் தேடி வந்து விட்டது.அன்பின்றித் தேய்ந்த ஓர் உள்ளத்துக்கு ஒளி கூட்ட வருகிறாயம்மா` என்ற லிங்கையாவின் வார்த்தைகள் தடுக்கின்றன.இதனால் ரங்கனின் போக்கு மாறவும் இல்லை,அவன் திருந்தவும் இல்லை. ஒரு கட்டத்தில்,`பிளேக்` வந்து பாருவின் இரண்டு குழந்தைகளும் இறக்கின்றனர்.ரங்கன் தன் கணவனிடமிருந்து பிரிந்து வந்து விட்ட கௌரியை மணம் செய்து அழைத்து வருகிறான். ஜோகியின் மனைவியான
பாருவின் தங்கை கிரிஜை நஞ்சனைப் பெற்றதும் இறந்து போகிறாள்.அவனின் வளர்ப்புத் தாயாகிறாள் பாரு. மண்ணில் பாடுபடுவதும் வாழ்வதும் அவனுக்காக,நஞ்சன் கிருஷ்ணனைப் போல் படித்து முன்னேறுவதே அவளின் உயிர் மூச்சாகிறது.லிங்கையாவின் சாவில் பகைமை ஏற்பட்டுப் பிரிந்து போன குடும்பங்களை இணைக்க கிருஷ்ணன் செய்த முயற்சிகள் வீணாகின்றன. தனது சமூகத்தினரின் வளர்ச்சிக்கானப் பல பணிகளைச் செய்கிறான் கிருஷ்ணன்.ரங்கன் கிருஷ்ணனுக்குப் போட்டியாக ஒவ்வொரு செயலிலும் இறங்குகிறான்.இதனால் ஹட்டியில் வாழ்க்கை வசதிகள் பெருகுகின்றன.பணத்தின் ருசி அறிந்திராத ஹட்டி மக்கள் பலரும் உணவுப் பயிர்களை விட்டு விட்டு தேயிலை விளைவிக்க ஆரம்பித்தனர்.
முடிவு;
ஜோகியின் மகன் நஞ்சன் படித்துப் பொறியியல் துறையில் பட்டம் பெறுகிறான்.குமரி அணைக்கட்டில் பணியேற்கிறான்.அவனது படிப்பிற்கு மறைமுகமாக உதவிய கிருஷ்ணன் இரண்டு குடும்பங்களும் பகை மறக்கவும், பாருவின் மனம் குளிர நஞ்சனுக்கு நல்வாழ்வு அமைய தனது பேத்தி விஜயாவை மணம் செய்ய முனைகிறார்.,குமரியாறு அணைக்கட்டிற்காக விளைநிலம் பறிபோகிறது.இதனால் எழும் சிக்கல்கள்.
அணைக்கட்டிற்கு நிலம் தர மறுத்து படகர்கள் ரங்கனின் தலைமையில், அணை கட்டும் தொழிலாளர்கள்
செய்யும் போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர். இறுதியில் கலவரத்தில் காவலர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இறக்கிறான் ரங்கன்..
`கிருஷ்ணன் அன்பின் கரம்கொண்டு இரு குடும்பங்களும் பிரியமுடியாத வகையில் ரங்கனின் மகன்களையும் திருமண பந்தங்களால் இணைத்து விட்டார்.`
பாரு அழகோவியமாகிக் காதலில் கனிந்து,ரங்கனை மணந்து எல்லாம் தேய்ந்து ,குழந்தைகளைப் பறிகொடுத்து நடைப்பிணமாகி நஞ்சனால் புதுமலர்ச்சி பெற்று வான் பொய்த்த கொடுமை, வறுமை,அவமானம் என ஏற்ற இன்னல்கள் எத்தனை எத்தனை! தியாக தீபமாகிறாள்.
சங்க இலக்கியத் தாக்கம்;
இயற்கைப் புனைவுகளில் அதிகம் காணலாம்.
கூதிர் கால வரவு,`கொடுந்தண் கிரணங்கள் கொண்டு கதிரவன் வந்து விட்டான்,ஒரே இரவிலே பசுமை மாயக் கருக்கி விடுவான்,மரங்களெல்லாம்……பரிதவித்து நிற்கும்.`
இது நக்கீரரின்,
`கன்றுகோள் ஒழியக் கடிய வீசிக்
குன்று குளிர்ப்பன்ன கூதிர்ப்பானாள்.(நெடுநல்வாடை)
என்பதை ஒத்திருக்கும்.
இனி இளவேனில் காலமும்,`நீல மேனியாய்,வானவனின் காதலியாய் எழில் நிறைந்து திகழ்ந்தது அந்த மலைப்பிரதேசம்`என்பது
` வெறிக்களம் கடுக்கும் வியலறை தோறும்
மணவில் கமழும் மாமலைச் சாரல்.`(மலைபடுகடாம்)
முதுவேனில்;
` பசிய மேனியுடன் வசந்தனை வரவேற்கும் மலையழகி ஏனோ உருமாறிப் போனாள்.`என்பது
`கல்மிசை வேய்வாடக் கனைகதிர் தெறுதலான்
துன்னறூஉம் தகையவே`(பாலைக்கலி-கலித்தொகை)
இன்னும் குறிஞ்சிக்கான கருப்பொருட்களும்,உவமைகளும்
சங்க இலக்கியத் தாக்கம் அதிகம் பெற்றுள்ளன.இங்கு விரிப்பின் மிகும்.
வாழ்க்கை முறைகளில் சங்க காலம்;
அகம் ,புறம் இங்கும் உளது.அக வாழ்வில்
களவுமணமும் கற்பு மணமும் காட்டப்படுகிறது.அருவிச் சுழலில் பாருவைக் காப்பது,
`காமர்க் கடும் புனல் எம்மோடு ஆடுவாள்
தாமரைக் கண்புதைத்து அஞ்சித் தளர்ந்து அதனோடு ஒழுகலால்
நீள்நாக நறுந்தண்தார் தயங்கப் பாய்ந்து,அருளினால்
பூண்ஆகம் உறத்தழீஇப் போதந்தான்`(கலித்தொகை-குறிஞ்சிக்கலி)என்பதை நினைவூட்டும்.
பாருவை மணந்திட வைக்கும் பலப்போட்டி மங்கையரை மணக்க காளையை அடக்குவதை ,
கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்
புல்லாளே ஆயமகள்`(முல்லைக்கலி-3-கலித்தொகை) என்பது காட்டும்.
படகரின் புறம்;
காடுகளைத் தீயிட்டு எரித்து விளைநிலமாக்கல் சங்கப் பாடல்கள் காட்டும்,
`நேற்று இரவு ரங்கண்ணன் வீடே வரவில்லை
அருவிக்கப்பால் காடு அழித்துப் பற்றி எரிந்தது`
மழையை நம்பி மானாவாரிப் பயிர் செய்வதை சங்க கால மக்களைப் போலவே படகர்களும் மேற்கொண்டிருந்தனர்.
ரங்கன்,
`கிழங்கு போட்டிருக்கிறேன் ஒரு மழை வந்து முளை விட்டாயிற்று`
`ஈரம் பட்ட செவ்விப் பைம்புனத்து
ஓரேர் உழவன் போலப்
பெருவிதுப் புற்றன்றால் நோகோ யானே` (குறுந்தொகை-131)
அருவிகளும் சுனைகளும் பயிர்த் தொழிலுக்குப் படகர்களுக்குப் பயன்பட்டது போல் சங்க காலத்திலும் பயன்பட்டதை,
`மைபடு சிலம்பின் ஐவனம்
வித்தி அருவிமன விளைக்கும் எனக் குறுந்தொகையும்,
எள் தினை போன்றவை அகல்வாய்ப் பைஞ்சுனை நீரினால் பயன் பெற்றதாக நற்றிணையும் காட்டும்.
விளக்கேற்றுதல்,
படகர்கள் வீட்டின் நடுவில் பெரிய தீபம் ஏற்றுவர்.
`………….இரவிற்
பஞ்சி வெண்திரிச் செஞ்சுடர் நல்லில்`(குறுந்தொகை-353)
காவற் பரண் அமைத்தல்,ஆநிரை வளர்த்தல், மேய்த்தல், இறைவழிபாடு,நம்பிக்கை,மாயமந்திரம்,கனவுகள்,விறகு சேகரித்தல்,விருந்தோம்பல்,பெரியோரைப் பேணுதல், உதவும் பண்பு,விழாக்கள்,தானியங்களைச் சேமிப்பது,மூங்கிற் குழாய் பயன்பாடு,நெருப்பு மூட்டி குளிர் காய்வது என அனைத்திலும் சங்க இலக்கியங்களைக் கண்ணாடி போல் காட்டும் குறிஞ்சித்தேன் என் மனம் கவர்ந்த தமிழ்த் தேன்.
- ”பாவண்ணனைப் பாராட்டுவோம்” விழா
- மழைக்கூடு நெய்தல்
- அம்மா இல்லாத நாட்கள் !
- பூதக்கோள் வியாழன், வெள்ளிக்கோள் இடையே உள்ள ஈர்ப்பால், பூமியின் சுற்றுப்பாதை மாறிப் பெருத்த உயிரினப் பாதிப்பு நேர்கிறது
- இராஜம் கிருஷ்ணனின் குறிஞ்சித் தேன்-ஒரு பார்வை – 2
- புலம் பெயர்ந்த வாழ்வில் ஈழத்தமிழர்
- இரக்கம்
- கவிதைகள்
- தொடுவானம் 221. சோதனைமேல் சோதனை
- மருத்துவக் கட்டுரை – தொண்டைப் புண்
- கே. ஜி. அமரதாஸ நினைவுகள்
- உள்ளொளி விளக்கு !
- உலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 5 -ஃபையர் (நெருப்பு)