படித்தோம் சொல்கின்றோம்: ஏ.கே. செட்டியார் (1911 – 1983) எழுதிய உலகம் சுற்றும் தமிழன்

author
1
0 minutes, 3 seconds Read
This entry is part 7 of 15 in the series 27 மே 2018

முருகபூபதி – அவுஸ்திரேலியா

குறைந்த வளங்களுடன் பயணித்து அரிய தகவல்களுடன் திரும்பிய ஊர் சுற்றியின் அனுபவங்கள்

பயண இலக்கியம், அனைத்து மொழிகளிலும் இடம்பெறும் இலக்கியவகைகளில் ஒன்று. சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, விமர்சனம் முதலான துறைகளைப்போன்று பயண இலக்கியமும் வாசகர்களினால் விரும்பிப்படிக்கப்படுகிறது.

சமகாலத்தில் மேலும் சில வகை இலக்கியங்கள் அறிமுகமாகிவிட்டன. அதில் ஒன்று புனைவுசாராத இலக்கியம். அனைத்து இலக்கியவகைகளிலுமே பயணம்தான் பெரிதும் தங்கியிருக்கிறது.

வாழ்க்கைப்பயணத்தில் கற்றதையும் பெற்றதையும் அனுபவித்ததையுமே இலக்கிய வகைகளும் பிரதிபலிக்கின்றன.

பிரத்தியேகமான ஓர் வடிவமாக ” பயண இலக்கியம்” தனது இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்கு முக்கிய காரணங்கள் எவை என்பதை பார்த்தால், வாசகன் தான் என்றைக்குமே பார்த்தறியாத நாடுகள் பற்றியும் அந்நாடுகளின் வரலாறு , மொழி, சமூகம், அரசியல் , பண்பாடு, பொருளாதாரம், அதன் வளங்கள், குறைபாடுகள், முன்னேற்றங்கள் முதலான இன்னபிற விடயங்களையும் அறிந்துகொள்வதற்கு இந்த இலக்கியவடிவம் உகந்தது என்ற முடிவுக்கு நாம் வரலாம்.

வெளிநாடுகளுக்கு சென்று திரும்பித்தான் பயண இலக்கியம் எழுதவேண்டுமென்பதில்லை. உள்ளுருக்குள்ள பயணித்தும், தான் வாழும் நாட்டின் பிரதேசங்களுக்கு சென்றும் பயண இலக்கியம் படைக்கமுடியும். சமகாலத்தில் பலரதும் பத்தி எழுத்துக்களும் இந்தகைய வடிவத்திற்குள்தான் வருகின்றன.

நவீன விஞ்ஞானம் முழு உலகையும் இன்று எங்கள் கைவிரல்களுக்குள் அடக்கிவிட்டிருக்கிறது. இருந்த இடத்திலிருந்து கணினியை தட்டி, அல்லது ஸ்மார்ட் போனைத்தட்டி அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள முடிகிறது.

இந்த வாய்ப்பு வசதியற்றவர்களுக்கு மற்வர்கள் எழுதும் பயண இலக்கியங்கள் துணை புரிகின்றன. இதழ்கள், பத்திரிகைகளும் பயண இலக்கியத்திற்கு களம் தருவதன் காரணத்தையும் இந்தப்பின்னணிகளிலிருந்தும் பார்க்க முடிகிறது.

பல வருடங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் ஆனந்தவிகடன் ஆசிரியராகவிருந்த மணியன் பற்றி அறிவீர்கள். அவர் உலகம் சுற்றிவந்து தொடர்ச்சியாக ஆனந்தவிகடனில் பயண இலக்கியம் படைத்தவர். அதற்கு அவர் சூட்டியபெயர் ” இதயம் பேசுகிறது” அதனால் அவரை இதயம் பேசுகிறது மணியன் என்றும் அழைக்கத்தொடங்கினார்கள்.

அந்தப்பெயர் புகழ்பெற்றதனால், ஆனந்தவிகடனை விட்டு அவர் வெளியேறியதன் பின்னர் தாமாகவே தொடங்கிய வார இதழுக்கு ‘ இதயம் பேசுகிறது என்றும் பெயரிட்டார்.

இவர் எமது இலங்கைக்கும் வந்திருக்கிறார். இலங்கைப்பயணம் பற்றியும் எழுதியவர். யாழ்ப்பாணத்திற்கு இவர் வந்தபோது ஒருவர் இவரிடம் ஆறுமுகநாவலர் பற்றித்தெரியுமா? எனக்கேட்டதற்கு ” தனக்கு நாவலர் நெடுஞ்செழியனைத்தான் தெரியும்” எனச்சொன்னவர்.

அவ்வாறு நல்லை நகர் தந்த நாவலரையும் தெரியாமல்தான் இவர் இலங்கை பயணக்கதை எழுதுகிறார் என்றும்,  இப்படித்தான் இவரது ஏனைய உலக நாடுகள் பற்றிய பயணக்கதைகளும் இருக்கும் என்றும் அக்காலத்தில் எதிர்வினைகள் வந்தன.

மெல்பன் வாசகர் வட்டத்தில்,  ஏ. கே. செட்டியார் எழுதியிருக்கும் உலகம் சுற்றும் தமிழன் என்ற பயண இலக்கியத்தைப்பற்றிய எனது வாசிப்பு அனுபவத்தை பகிரும்போது, மேற்சொன்ன தகவல்களையும் சொல்லநேரிட்டுள்ளது.

தமிழில் பயண இலக்கிய முன்னோடியாக செட்டியார் அவர்களை கொண்டாடுகின்றோம். மகாத்மா காந்தியிடம் பற்றுக்கொண்டிருந்த அவர், காந்தி பற்றி வெளியிட்ட ஆவணப்படம் குறித்தும் இன்றளவும் பேசப்படுகிறது. அதன்பின்னரே காந்தி திரையுலகம் வந்து அதன் இயக்குநருக்கும் அதன் நடிகர்களுக்கும் சர்வதேசப்புகழையும் ஒஸ்கார் விருதுகளையும் பெற்றுக்கொடுத்தார்.

எனவே ஏ.கே. செட்டியார் தமிழில் பயண இலக்கியத்திற்கு மட்டுமன்றி  காந்தி பற்றிய ஆவணப்படங்கள், திரைப்படங்களுக்கும் முன்னோடியாகத்திகழுகின்றார். அவர் ஒரு பத்திரிகையாளர், இதழாசிரியர், ஒளிப்படக்கலைஞர்.  பயணங்களில் விருப்பம்கொண்டவர்.  ஜப்பானிலும் அமெரிக்காவிலும் ஒளிப்படக்கலை தொடர்பாக பயின்று பட்டங்களும் பெற்றவர்.

தமிழ்நாட்டில் திருவண்ணாமலையில் பிறந்திருக்கும் அவரின் இயற்பெயர் கருப்பன்.

1937 இல் தென்னாபிரிக்காவுக்கு எஸ்.எஸ். சமரியா என்ற கப்பலில் பயணித்தவர். அதன்பின்னர், பல நாடுகளுக்கும் சென்று தகவல்களை திரட்டி எழுதியிருப்பவர்.

அவரது இந்தப்பயணங்களின் முக்கிய நோக்கம், பாரதத்தின் தேசபிதா மகாத்மா காந்தி பற்றி அவர் பயணித்த நாடுகளிலிருப்பவர்கள் எத்தகைய பார்வையைக்கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிவதற்காகத்தான்.

அந்த நோக்கத்தை பயண இலக்கியமும் எழுதி, காந்தி பற்றிய ஆவணப்படமும் எடுத்து நிறைவேற்றிக்கொண்டார். அக்காலப்பகுதியில் இது ஒரு மகத்தான சாதனைதான்.

சுமார் மூன்று ஆண்டு காலமாக சேகரித்த தகவல்களை அடிப்படையாக வைத்து 12 ஆயிரம் அடி நீளமான காந்தி பற்றிய ஆவணப்படம் எடுத்திருக்கிறார். அதற்கான பயண அனுபவங்களையும் பதிவுசெய்து, உலகம் சுற்றும் வாலிபன் என்ற தொடரையும் எழுதியிருக்கிறார். அக்காலப்பகுதியில் தமிழ்நாட்டில் வெளியான ஜோதி, ஹனுமான், சக்தி, ஹிந்துஸ்தான் ஆகியனவற்றிலும் இன்றும் வெளியாகும் ஆனந்தவிகடனிலும் தனது பயண அனுபவங்களை பதிவுசெய்துள்ளார்.

அவற்றின் தொகுப்பே இந்த நூல். 1937 முதல் 1940 வரையான காலப்பகுதியில் இக்கட்டுரைகள் வெளியாகியிருக்கின்றன.

இவை தவிர, பிரயாண நினைவுகள், மலேயா முதல் கனடா வரை, கயான முதல் காஸ்பியன் கடல் வரை, அமெரிக்க நாட்டிலே, ஐரோப்பா வழியாக, உட்பட பல நூல்களையும் செட்டியார் எழுதியிருப்பதாக அறிகின்றோம்.

தமிழகத்தில் குமரி மலர் என்ற மாத இதழையும், ரங்கூன் சென்று அங்கிருந்து, தனவணிகன் என்ற பெயரில் ஒரு இதழையும் வெளியிட்டவர். 1926 முதல் வெளியாகும் ஆனந்த விகடன் இதழை தொடக்கத்தில் வெளியிட்ட பூதலூர் வைத்தியநாத அய்யரை ஊக்கப்படுத்தி ஆதரவு வழங்கியவரும் இந்த செட்டியார்தான் என்பதையும் அறிந்துகொள்கின்றோம்.

ஏ.கே. செட்டியாரின் வாழ்வையும் பணிகளையும் நம்வசம் கிடைத்துள்ள தகவல்களிலிருந்து பார்க்கும்போது, அக்காலத்தில் மிகச்சிறந்த சமூகச்செயற்பாட்டாளராகவே அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறார் என்பதும் தெரிகிறது.

ஜப்பானில் ஒரு சிறிய ரயில் நிலையத்தில் செட்டியார் ரயிலுக்கு காத்துக்கொண்டு நிற்கிறார். இரண்டு ஜப்பானிய இளைஞர்கள் இவரைக்கண்டதும், கைபிடித்து குலுக்கிக்கொண்டு,” நீங்கள் காந்தியின் நாட்டிலிருந்து வந்தவர்தானே ” எனக்கேட்கிறார் அதில் ஒருவர்.

இவ்வாறு காந்தியிலிருந்தே இந்த பயண இலக்கியம் தொடங்குகிறது. பாரதம், இந்தியா என்று அழைப்பதற்கு அப்பால் காந்தி தேசம் என்றும் வெளிநாடுகள் வர்ணிக்கும் செய்தியை முதல் பந்தியிலேயே செட்டியார் சொல்லிவிடுகிறார்.

ஜப்பானில் எத்தனையோ வீரர்கள், சக்கரவர்த்திகள் பிறந்திருந்தாலும் காந்தியைப்போன்ற நல்ல மனிதர்கள் பிறக்கவில்லை என்ற ஜப்பானிய பிரஜைகளின் வாய்மொழிக்கூற்றைக்கேட்டு ஆச்சரியப்படுகிறார் செட்டியார்.

டோக்கியோவுக்கு சென்றுவிடத்தில்  அங்கு ஒரு சினிமா கொட்டகையில் சந்திக்கும் ஒரு சீனப்பெண், ” ஹலோ இங்கே உட்காருங்கள், காந்திஜி செளக்கியமா?” எனக்கேட்கிறாள்.

ஷங்காய் நகரம் செல்கிறார். அங்கே காந்தி அடிகளின் பெரிய உருவப்படத்தை பார்க்கிறார். ஒரு சீன ஓவியர் வரைந்த படம். அதனை விலைகொடுத்து வாங்குகிறார். மாணவர்கள் சந்திப்பில் உரையாற்றுகிறார். காந்தி பற்றி அவர் சொன்னதும் ஒரு கொரியா மாணவன் அவரைக்கட்டிப்பிடித்து ஆனந்தக்கூத்தாடுகிறான்.

பசிபிக் சமுத்திரக்கரையில் ஹவாய்த்தீவில் ஹில்லோ என்ற நகரத்திற்குச்செல்கிறார். அங்கு வெளியாகும் ஹில்லோ டிரிபியூன் பத்திரிகையின் முதல் பக்கத்தில், அவரைப்பற்றிய செய்தி இவ்வாறு வெளியாகிறது: “காந்தியடிகளின் நாட்டிலிருந்து ஒரு பத்திரிகைக்காரர் ஹில்லோவுக்கு வந்திருக்கிறார்”

அமெரிக்கா செல்கிறார். அங்கு நியூயோர்க் நகரில் ஒரு வானொலியில் பேசும்போது, Current History என்ற பத்திரிகையின் ஆசிரியர் அவரிடம் கேட்கும் முதலாவது கேள்வி, “காந்தியடிகள் தீண்டாதாருக்குச்செய்த நன்மைகள் என்ன?”

வருடந்தோறும் அமெரிக்காவில் காந்தியின் பிறந்த தினத்தை கொண்டாடுகிறார்கள். காந்தி குல்லா அணிகிறார்கள்.  காந்தி எளிய வாழ்க்கை வாழலாம். “ஆனால், காந்தியின் பிறந்த நாள் விருந்துக்கு அமெரிக்காவில் ஒவ்வொருவரும் இந்திய நாணயத்தில் 21 ரூபா செலவிடவேண்டும்! (அன்றைய நாணயப்பெறுமதியில்) ” என்று நச்சென்று ஒரு குட்டுவைக்கிறார்.

இவ்வாறு இந்தநூலின் முதல் அங்கத்திலிருந்து காந்தியின் கீர்த்தி தான் சென்ற நாடுகளில் எவ்வாறு திகழ்கின்றது என்பதை சுவையாக எளிமையான வார்த்தைகளில் சொல்லிச்செல்கிறார் செட்டியார்.

இந்தியாவுக்கு வருகை தந்த உலகப்புகழ்பெற்ற ஜப்பானியக்கவிஞர் யோனே நோகுச்சி காந்தியடிகளை சந்தித்தவர். அதன்பின்னர் இந்தியாவைப்பற்றி ஒரு புத்தகமும் ஜப்பானிய மொழியில் எழுதியிருப்பவர். இந்தக்கவிஞரையும் செட்டியார் சந்திக்கிறார் என்ற தகவலுடன் இரண்டாம் அங்கம் தொடங்குகிறது. அந்த ஜப்பானிய கவிஞர் பற்றியும் அவரது படைப்புகள் பற்றியும் சுருக்கமான அறிமுகத்தை இந்த அங்கத்தில் தருகிறார்.

ஹவாய்த்தீவைப்பற்றிச்சொல்லும் 3ஆவது அங்கத்தில் இந்தத்தீவின் மக்கள் பேசும் மொழிக்கு 12 எழுத்துக்கள்தான் உள்ளன என்ற அரிய தகவலையும் கெப்டன் குக் போன்ற பல கடலோடிகள் பற்றிய அறிமுகத்தையும் பதிவுசெய்கிறார். கரும்பு, அன்னாசி முதலான தாவர வகைகள் எவ்வாறு இங்கு அறிமுகமாயின என்ற செய்தியும் தருகிறார்.

செவ்விந்தியர்கள் என்ற சமூகம் எவ்வாறு தோன்றியது?  என்பது வெகு சுவாரஸ்யமான கதை.

கிறிஸ்தோபர் கொலம்பஸ் 1492 இல் இந்தியாவைக்கண்டுபிடிக்க புறப்பட்டு வருகையில் வழிதவறி வேறு ஒரு கண்டத்தை கண்டடைந்தவர். அதன் பெயர்தான் அமெரிக்கா. இந்நாட்டின் ஆதிவாசிகளினால் கொலம்பஸ் பல இன்னல்களுக்கு ஆளாகின்றார். அவர்களில் சிலரைக்கைது செய்யும் கொலம்பஸ், ஸ்பானியர்களின் நீதிமன்றத்தில் நிறுத்தும்போது, அவர்களுக்குச்சூட்டிய பெயர்தான் சிவப்பு இந்தியர்கள். அன்று முதல் அவர்கள் அந்தப்பெயரில் அழைக்கப்படலாயினர் என்ற தகவலையும் செட்டியார் தருகிறார். அந்த இனத்தவர்கள் சிவந்த நிறத்தையுடையவர்களும் அல்ல! இந்தியர்களும் அல்ல! ஆனால் சிவப்பு இந்தியர்களானார்கள் அந்த கடலோடி கொலம்பஸ்ஸினால் என்பதை வலிந்து சொல்லாமல் சொல்கிறார் செட்டியார்.  இந்த நூலின் 12 ஆவது அங்கம் படிக்கச்சுவாரஸ்யமானது.

இந்த அங்கத்தில் ரோமாபுரி வருகிறது. ” முசோலினிப்பெருமான் இங்குதான் திருக்கோயில் கொண்டுள்ளார்” என்று இந்த அங்கத்தை தொடங்குகிறார்.

மார்க்கோனியும் மக்கரோனியும் பிறந்தது இந்த நாட்டில்தான் எனச்சொல்கிறார். மார்க்கோனி ஒரு புகழ்பெற்ற விஞ்ஞானி. மக்கரோனி ஒரு புகழ்பெற்ற இத்தாலிய உணவு. அதனை Sphegatti என்பார்கள்.

தென்னாபிரிக்காவிற்கு செல்வதற்காக லண்டனிலிருக்கும் ஒரு கப்பல் கம்பனியிடத்தில் அனுமதிச்சீட்டு ( Ticket) கேட்கிறார். கொடுக்கிறார்கள். ஆனால், கப்பலில் அவரை ஏற்றுவதற்கு அனுமதி மறுக்கிறார்கள்! இது எப்படி இருக்கிறது?

காந்தி அவமதிக்கப்பட்ட நெல்சன் மண்டேலாவை சிறையில் வைத்த, கொடிய நிறபேதத்தை போஷித்து வளர்த்த தென்னாபிரிக்கா பற்றிய பல செய்திகளுடன் இந்தப்பயண இலக்கியம் நிறைவுபெறுகிறது.

இதில் ஒரு பந்தி: ” தென்னாபிரிக்காவில் தங்கிய சுமார் மூன்று வாரங்களில் தமிழர்களிடையேதான் அதிகம் பழகினேன். சில தமிழ்ப்பெண்கள் பாரதி பாடல் சிலவற்றைப்பாடியபொழுது என் உள்ளம் குளிர்ந்தது. தமிழர்கள் தமிழை மறக்கவில்லை. ஆனால், வளர்க்கவுமில்லை. பெரும்பாலான தமிழர்கள் ஆங்கிலத்திலே தான் நினைக்கிறார்கள். பிறகு அதைத்தமிழிலே கூறுகிறார்கள்.

ஜப்பான், அமெரிக்கா, ஹவாய் தீவுகள், அயர்லாந்து, பின்லாந்து, ஜெர்மனி,செக்கோஸ்லவாக்கியா, ஜெனீவா, வெனிஸ், ரோம், தென்னாபிரிக்கா என எங்கும் சென்றிருக்கும் செட்டியார் தனது பயணக்குறிப்புகளை எளிய நடையில் சாதாரண வாசகர்களும் புரிந்துகொள்ளத்தக்கதாக எழுதியிருப்பதும் இந்நூலில் மற்றும் ஒரு சிறப்பு.

பயணஇலக்கியங்கள், வாசகரையும் உடன் அழைத்துவரச்செய்யும் பண்பினைக்கொண்டிருக்கவேண்டும். செட்டியார் இதுவிடயத்திலும் கெட்டிக்காரர்தான்.

நவீன சாதனங்கள் கண்டுபிடிக்கப்படாத அக்காலத்தில் கடல்மார்க்கமாகவே உலகம் சுற்றியிருக்கும் இந்த வாலிபர் தமிழில் பயண இலக்கியத்திற்கும்,  இந்திய மொழிகளில் ஆவணப்படத்திற்கு மாத்திரம் முன்னோடியல்ல. மக்கள் திலகம் எம். ஜி.ஆருக்கும் முன்னோடிதான்.

அதனால்தான் அவரும் 1973 இல் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் எடுத்தாரோ?

( குறிப்பு:  நேற்று  ஞாயிறன்று 27 ஆம் திகதி மெல்பன் வாசகர் வட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரை)

letchumananm@gmail.com

—-0—

Series Navigationதொடுவானம் 223. இதையும் எதிர்கொள்வேன்பீசா நகரில்
author

Similar Posts

Comments

  1. Avatar
    srirham vignesh says:

    செட்டியாரின் பயணக்கட்டுரையில், தென்னாபிரிக்க தமிழரைப்பற்றி குறிப்பிடும்போது, “அவர்கள் தமிழை மறக்கவுமில்லை…. வளர்க்கவுமில்லை…..” என்று எழுதிய வரிகளைப் பார்க்கும்போது, எனக்கு எழுதத் தோன்றுவது, “தற்போது அந்தப்பணியை செவ்வனே நிறைவேற்றிவருபவர்கள், புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களே….! ஈழத்தில் வாழும்போது, காலச் சூழ்நிலை நிமித்தம் “தொழிலாக” நடந்த செயற்பாடுகள்கூட, தற்போது, “தொண்டாக” மிழிர்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *